World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

World Socialist Web Site issues appeal: Oppose Hindu extremist attacks on Indian filmmaker Deepa Mehta

 

இந்தியத் திரைப்பட இயக்குனர் தீபா மேத்தாவிற்கு எதிரான இந்து தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்ப்போம்!

 

By the Editorial Board
28 February 2000

 

தீபா மேத்தாவின் சமீபத்திய 'வோட்டர்' [தண்ணீர்] திரைப்படத்துக்கான தயாரிப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்படி இந்து அடிப்படைவாதிகள் இந்தியாவில் நடாத்திவரும் பிரச்சார இயக்கத்தை உலக சோசலிச வெப் தளம் கண்டனம் செய்வதோடு இந்த ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலுக்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை வகிக்கும்படி திரைப்பட இயக்குனர்களையும் கலைஞர்களையும், புத்திஜீவிகளையும் தொழிலாளர்களையும் அனைத்துலக ரீதியில் வேண்டுகின்றது.

பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு இந்து தீவிரவாதக் கும்பல் இந்தப் படத் தயாரிப்புக்கு எதிராக நடாத்திவரும் வன்முறைத் தாக்குதல்கள், அதிகாரத்துவ ஆத்திரமூட்டல்கள், உடல் ரீதியான பயமுறுத்தல்கள் காரணமாக மேத்தா 'வோட்டர்' (WATER) திரைப்படத் தயாரிப்பை இடைநிறுத்தத் தள்ளப்பட்டுள்ளார். பாரதீய ஜனதா கட்சி இந்திய கூட்டரசாங்கத்தில் முக்கிய கட்சியாக இருப்பதோடு பல இந்திய மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது.

இந்த 'வோட்டர்' திரைப்படம் 1930களில் ஒரு இந்துக் கோவிலின் அயலில் வறுமையால் பீடிக்கப்பட்ட விதவைகளின் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரிப்பதாக அமைந்துள்ளது. கடந்த ஜனவரி 30ம் திகதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள வர்ணாசியில் இத்திரைப்படத்துக்கான படப்பிடிப்பு ஆரம்பமாக இருந்தது. அன்று உள்ளூர் பா.ஜ.க. அரசியல் வாதிகளின் தலைமையில் இந்து தீவிரவாதிகள் நடாத்திய கலகத்தினால் திரைப்பட 'செட்' தவிடு பொடியாக்கப்பட்டது. 650,000 டாலர்களுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது. அவர்களின் வாதத்தின்படி இத்திரைப்படம் இந்து விதவைகளை தரம் குறைப்பதாகவும் இது இந்து மதத்துக்கு எதிரான கிறீஸ்தவ சதியின் ஒரு பாகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் சிவில் ஒழுங்கீனங்களை தூண்டிவிடுவதாகக் கூறி பாரதீய ஜனதா கட்சியின் மாநில அரசாங்கம் ஏழு நாட்களில் இரண்டு தடவைகள் இப்படப்பிடிப்பை தடை செய்தது. இதைத் தொடர்ந்து மேத்தா பெப்பிரவரி 6ம் திகதி உத்தரப் பிரதேசத்தில்இருந்து வெளியேறினார். இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இப்படப்பிடிப்பில் ஈடுபடுவதற்கு மேத்தாவிற்கு உள்ள உரிமைக்கு ஆதரவளிப்பதாகக் கூறிக் கொண்ட போதிலும் இந்தத் தாக்குதல்களை நிறுத்த எதுவும் செய்யவில்லை. மாநில அரசாங்கம் இனவாத சக்திகளுடன் ஒன்றிணைந்து இத்தாக்குதலை முன்னெடுக்கத் தொழிற்பட்டு வருகின்றது.

வாஜ்பாயும் உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானியும் ஒரு தீவிர வலதுசாரி இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.சின் (RSS) ஆயுட்கால அங்கத்தவர்கள். இந்த அமைப்பு 1948ல் மகாத்மா காந்தியின் படு கொலையுடன் தொடர்புபட்டது. கனரக கைத்தொழில்அமைச்சர் மனோகர் ஜோசி சிவசேனைத் தலைவர்களில் ஒருவர். இது ஒரு பாசிச அமைப்பு. இது பாரதீய ஜனதா கட்சியின் கூட்டரசாங்க பங்காளியாகவும் சகாவாகவும் இருந்து கொண்டுள்ளது. 1992ல் அத்வானி தலைமையில் இடம் பெற்ற பிரச்சார இயக்கம் காரணமாக அயோத்தி பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டது. 1947ல் இந்தியப் பிரிவினையின் பின்னர் படுமோசமான இனவாதக் கலவரங்களை இது உருவாக்கியது. இந்த மசூதி விவகாரத்தை மீண்டும் கிளறிவிட்டு 1993 ஜனவரியில் மும்பையில் ஒரு இனக்கலவரத்தைத் தூண்டிவிட ஆர்.எஸ்.எஸ். முயன்றது என ஒரு நீதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது. இதன் விளைவாக பல நூற்றுக்கணக்கான முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர். சிவசேனையும், விஸ்வ ஹிந்து பர்ஷித்தும் (World Hindu Forum) மேத்தாவை இந்தியாவில் இருந்து வெளியேற்ற அடம்பிடித்ததோடு, மேத்தாவின் 'வோட்டர்' படப்பிடிப்பு இடம் பெறுவதைத் தடுக்க அவரைக் கொல்வதாக அல்லது கொலை செய்விப்பதாக சில இனவாதக் குழுக்கள் அச்சுறுத்தியுள்ளன.

மேத்தாவின் முன்னைய திரைப்படங்களான 'பயர்' (Fire-1996) 'ஏர்த்' (Earth- 1998) தும் அவரை இந்தியத் தீவிரவாதிகளுடன் மோதிக் கொள்ளச் செய்தன. எனினும் "இந்தப் பயமுறுத்தல்களால் தான் அடிபணிந்து போய்விடப் போவதில்லை" எனத் தெரிவித்த அவர் இந்தப் பிரச்சார இயக்கத்தை "குண்டர்களால் திணிக்கப்பட்ட தயாரிப்புக்கு முந்திய தணிக்கை "என வருணித்துள்ளார். இந்தப் படம் தடுக்கப்படுமேயானால் அது "இந்தியாவில் ஜனநாயகத்தின் முடிவை" பிரதிநிதித்துவம் செய்யும் என ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மேத்தா தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கைகளை பாரதூரமான ஒன்றாகக் கொள்ள வேண்டும். மேத்தாவின் படத்துக்கான படப்பிடிப்பு இடம் பெறாதிருக்க இந்து தீவிரவாதிகள் நடாத்திவரும் இயக்கம் ஒரு அன்நியப்பட்ட ஒன்றல்ல. ஆனால் இந்து மத நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வலதுசாரி தேசியவாத அரச சித்தாந்தத்தை இந்தியாவில் திணிக்கச் செய்யப்படும் முயற்சிகளின் ஒரு பாகமாகும். பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை நிலைமைகள் சீரழிந்தும் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான ஆதாளபாதாளம் மேலும் ஆழமாகிக் கொண்டிருக்கும் ஒரு நிலையிலும் இந்திய வெகுஜனங்களை சாதி, மத ரீதியில் பிளவுபடுத்த இனவாத உணர்வுகளைத் தூண்டி விடுவதில் பாரதீய ஜனதா கட்சி முன்னணியில் நின்று கொண்டுள்ளது. இந்தியாவில் சினிமா ஒரு பிரமாண்டமான பாத்திரத்தை வகிக்கின்றது. இந்திய சமூகத்தின் நிலைமைகளை ஒரு விமர்சன நோக்கில் அணுகும் படத் தயாரிப்பாளர்கள் பாரதீய ஜனதா கட்சியினதும் இந்து தீவிரவாதிகளதும் இலக்காகியுள்ளனர்.

இந்தியாவில் அமுலில் உள்ள சட்ட விதிகளின்படி வெளிநாட்டு நிதியீட்டம் செய்யப்படும் படத் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் படம் தயாரிக்க வேண்டின் இந்திய மத்திய அரசாங்கத்தின் அங்கீகாரத்துக்காக திரைக்கதை பிரதியை சமர்ப்பிக்க வேண்டும். அந்தப்படம் அனுமதிக்கப்படுமிடத்து ஒரு விசேட தொடர்பு அதிகாரியை அரசு நியமனம் செய்யும். இவருக்கு இந்தப் படத் தயாரிப்பின் பல்வேறு அம்சங்களையும் இடைமறிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட திரைக் கதையில் இருந்து இயக்குனர் விலகிச் செல்லுமிடத்து அதிகாரி படத் தயாரிப்பை நிறுத்திவிட உத்தரவிட முடியும்.

கலைத்துறை வெளிப்பாடுகள் மீதான இந்த அடாவடித்தனங்கள் வெளிநாட்டு பட இயக்குனர்களுக்கு மட்டும் உரிய ஒன்றல்ல. மணிரத்னம், மீரா நாயர், ஷேகர் கபூர் ஆகியோரும் கூட அரசாங்கத்தின் தணிக்க்ைகளுக்கு இலக்கானதோடு படத் தயாரிப்பின் போதோ அல்லது படம் திரையிடப்படும் போதோ தீவிரவாதிகளின் கலவரங்களுக்கு இலக்காக நேரிட்டது. இந்த தாக்குதல்கள் திரைப்பட இயக்குனர்களுடன் மட்டும் நின்று விடவில்லை. மேத்தாவிற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் கடந்த தசாப்தத்தில் பாரதீய ஜனதா கட்சியின் எழுச்சியோடு உக்கிரம் கண்ட படைப்பாளிகளதும், புத்திஜீவிகளதும் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களில் ஒன்றாகும்.

இந்தியாவின் முன்னணி ஓவியரான எம்.எப்.ஹுசேனுக்கு எதிராக சமீப காலத்தில் இடம் பெற்றவை கலைஞர்களுக்கு எதிரான மிகவும் படுமோசமான வன்முறை நடவடிக்கை வகையறாவை சேர்ந்ததாகும். ஹுசேன் இந்து தெய்வங்களான சரஸ்வதியையும் திரெளபதையையும் நிர்வாணச் சித்திரங்களாக வரைந்ததாக கூறித் தண்டிக்கப்பட்டார். அதே சமயம் மாநில அரசாங்கங்களிலும் மத்திய அரசாங்கத்திலும் உள்ள பா.ஜ.க. சக்திகள் கல்வி முறை "இந்துமயமாக்கப்பட" வேண்டும் எனவும் பாடசாலை பாடவிதானத்திலும் பாடப் புத்தகங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் கோரி நெருக்கி வந்தன.

பெப்பிரவரி நடுப்பகுதியில் இனவாதிகள் மேத்தாவை உத்தரப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றிய ஒரு சில நாட்களுக்குள் இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்தில் மேலாதிக்கம் கொண்டுள்ள பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். சக்திகள் இந்தியாவை பற்றிய வரலாற்றுப் பத்திரங்களின் தொகுதிகளின் ஒரு பாகமாக 'சுதந்திரத்தை நோக்கி' என்ற நூலின் இரண்டு தொகுப்புகளின் வெளியீடு நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இந்தப் பிரச்சினைக்குரிய தொகுதிகளும் முறையே இந்தியாவின் முன்னணி வரலாற்று நிபுணர்களான பேராசிரியர் சுமித் சர்க்காராலும் பேராசிரியர் கே.என். பனிக்காராலும் எழுதப்பட்டவையாகும்.

'நவீன இந்தியா' (Modern India) வினதும் இன்னும் பல வரலாற்று ஆய்வுகளதும், கட்டுரைகளதும் ஆசிரியரான சர்க்கார் இந்தியாவின் முன்னணி ஆசிரியரும் அனைத்துலக அந்தஸ்தும் புகழும் பெற்ற ஒரு புத்திஜீவியும் ஆவார். வெகுஜனத் தொடர்புச் சாதனங்களுக்கு வழங்கிய பேட்டியில் சர்க்கார் பா.ஜ.க. கடந்த காலத்தை "தனது பாசிச நிகழ்ச்சி நிரலுக்கு பொருத்தமான முறையில்" மாற்றியமைக்க முயற்சிப்பதாகவும் இது "இந்தியாவில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டும் இலக்கிலான நடவடிக்கை" ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வரலாற்றுச் சுவடிகள் காப்பகத்தின் தலைவரான பனிக்கார், பா.ஜ.க. இந்தியாவின் கல்வி முறையை அடியோடு மாற்றி அமைக்கவும் அவற்றின் பாடவிதானத்தை கட்டுப்படுத்தவும் முயற்சிப்பதாக எச்சரிக்கை செய்துள்ளார்.

கலைஞர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் எதிரான அரசாங்கங்களதும் தீவிரவாத சக்திகளதும் அரசியல் பயமுறுத்தல்கள் இந்தியாவிற்கு மட்டும் உரிய ஒன்றல்ல. அரசியல் எதிர்ப்பாளர்களின் வாய்களை மூடச் செய்ய இனவாதச் சக்திகளைத் தூண்டிவிடுவது இந்தியத் துணைக் கண்டம் பூராவும் வெளிப்பாடாகியுள்ளதைக் காணக் கூடியதாகியுள்ளது.

பங்களாதேஷ் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், அந்நாட்டில் ஒரு "இஸ்லாமிய எதிரியாக" பேர் சூட்டப்பட்டுள்ளார். அங்கு அவரின் நூல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இருந்து வெளியேறிய இந்தப் படைப்பாளி, ஒரு மத நிந்தனை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளதோடு இஸ்லாமிய சோவினிஸ்டுகள் அவரை படுகொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். கடந்த ஆண்டில் இஸ்லாமிய தீவிரவாதிகள் பங்களாதேஷின் முன்னணிக் கவிஞரான ஷம்சூர் ரஹுமானை படுகொலை செய்வதில் பெரிதும் வெற்றி கண்டனர். ரஹுமான் கோடரியால் தாக்கப்பட்டார்.

இந்தியாவில் பிறந்தவரும் அனைத்துலகப் புகழ் பெற்றவருமான சல்மான் ருஷ்டி, அவரின் படைப்பான 'சாத்தானிக் வேர்சஸ்' (Satanic Verses) என்ற நூலின் பேரில் 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானின் மதத் தலைவரான அயதுல்லா கொமெய்னி அவரை கொலை செய்யும்படி முஸ்லீம்களை வேண்டினார். ஒரு ஈரானிய அடிப்படைவாதக் குழு -கொர்டாட்-15- ருஷ்டியை படு கொலை செய்பவருக்கு 2.5 மில்லியன் டாலர்களை சன்மானமாக வழங்க முன்வந்தது.

இலங்கையில் அரசாங்கம் எந்த ஒரு விமர்சனத்தையும் சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாகிப் போயுள்ளது. ஆளும் பொதுஜன முன்னணி அரசாங்கத்தை எதிர்க்கும், பாடகர்கள், நடிகர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள் ஆகியோருக்கு எதிராக கொலை பயமுறுத்தல்களையும் வீடுகள் மீதான குண்டு வீச்சுக்களையும் நடாத்திக் கொண்டுள்ளது.

கலை, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மீதான தாக்குதல்கள் முன்னேறிய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அந்நாடுகளில் கிறீஸ்தவ அடிப்படைவாதிகளும் மற்றும் பழமைவாத ஆதரவு குழுக்களும் தமது செல்வாக்கை செலுத்தி வருகின்றன. அமெரிக்காவில் கடந்த செப்டம்பரில் புரூக்ளின் மியூசியத்தில் பிரித்தானிய கலைஞர்களின் ஒரு கண்காட்சி -Sensation- இடம் பெற்றது. நியூயோர்க் நகர மேயர் கியூலியனி, Sensation- கண்காட்சியை இழுத்து மூட முயன்றார். கண்காட்சி "கத்தோலிக்கருக்கு ஓங்கி அடிப்பதாகவும்" மத எதிர்ப்பானது எனவும் அவர் தெரிவித்தார். ஒரு சில வாரங்களின் பின்னர் மிச்சிக்கனில் அதிகாரிகள் டெட்ரொயிட் கலை நிறுவனத்தில் இடம் பெற்ற சமகால கலைக் கண்காட்சியை நடாத்தவிடாது தடுத்தனர்.

நவம்பர் கடைப்பகுதியில் அவுஸ்திரேலிய தேசியக் கலையரங்கு அங்கு இடம்பெற இருந்த Sensation கண்காட்சியை இரத்துச் செய்தது. இந்தக் கலையரங்கின் பணிப்பாளருக்கு ஒரு சில ஆட்சேபக் கடிதங்கள் கிடைத்து இருந்தன. அவர் இந்தக் கண்காட்சியைப் பற்றி பழமைவாத ஹொவாட் அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளார். அவுஸ்திரேலியாவில் சினிமாப் படத் தயாரிப்பாளர்கள் அரசாங்கம் திணிக்கவுள்ள கண்டிப்பான திரைப்படத் தணிக்கை விதிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பேர்ளின் பொலிசார் ஒரு வீடியோ பட வாடகை கம்பனியை முற்றுகையிட்டு படங்களை பறிமுதல் செய்தனர். இக்கம்பனி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த சினிமாக்களின் கலையகமாக விளங்கியது. கலைஞர்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் இந்தளவு பாரதூரமான தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது ஏன்? இது உலகளாவிய ரீதியில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான அசமத்துவத்தின் வளர்ச்சி காரணமாக அதிகரித்து வரும் சமூகப் பதட்ட நிலைமையுடன் தொடர்புபட்டது.

இந்த யதார்த்தத்தை அம்பலப்படுத்துபவர்களின் வாய்களை மூட வைப்பது ஆளும் கும்பலுக்கு அவசியமாகியுள்ளது. மிகவும் முக்கியமான படத் தயாரிப்பாளர்களும் கலைஞர்களும் தம்மைச் சுற்றியுள்ள உலகினை ஆழமாக ஆராய்ந்து கொண்டுள்ளனர். இந்தச் சிருஷ்டிகரமான போக்குகள் ஆட்சியாளர்களுக்கு ஒரு ஆபத்தை தோற்றுவித்துள்ளது. ஏனெனில் அனைத்து நேர்மையான கலைப் படைப்பாளிகளையும் அதன் ரசிகர்களை சமூக யதார்த்தத்தையும் அனைத்து முரண்பாடுகளையும் கவனமாக ஆய்வு செய்யத் தள்ளுகின்றது. ஆக்க இலக்கியத்துக்கான சுதந்திரமானது, எந்த ஒரு தோற்றப்பாட்டையும் கலை வளம் மிக்கதாக ஆய்வு செய்யும் ஒரு அடிப்படை ஜனநாயக உரிமையாகும். இது தமது சொந்த சீரழிந்து போன அரசியல், சமூகப் பொருளாதார நிகழ்ச்சி நிரலைத் திணிக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக விளங்குகின்றது. தமது சொந்த வரலாற்றையும் சமூக உரிமைகளையும் அறிந்து கொண்டுள்ள ஒரு நனவான சனத்தொகையானது, ஒரு குழம்பித் தடுமாறும் ஒன்றைவிட ஒரு பலமான அரசியல் எதிர்ப்பாளனாகும்.

இந்தியாவில் தீப்பா மேத்தாவுக்கு எதிரான அடிப்படைவாதிகளின் இன்றைய பிரச்சாரமானது 1930 களில் ஹிட்லரின் நாஸிகள் கையாண்ட விதிமுறையை நினைவுக்கு கொணர்கின்றது. பாசிசக் குண்டர்கள் ஆயிரக் கணக்கான நூல்களைத் தீயிட்டுக் கொழுத்தியதை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 19ம் நூற்றாண்டின் ஜேர்மன் கவிஞரான ஹைன்றிச் ஹைன் (Heinrich Heine) தீர்க்க தரிசனமாக கூறியது போல்: "எங்கெல்லாம் அவர்கள் நூல்களைத் தீயிட்டுக் கொழுத்தினார்களோ அங்கெல்லாம் அவர்கள் மனித உயிர்களுக்கு தீ வைப்பதுடனேயே நிறைவு பெறுவர்". மேத்தாவுக்கு எதிரான அடிப்படைவாதிகளின் அணிதிரள்வானது அதே ஆபத்தைத் தோற்றுவித்துள்ளதோடு ஒரு தீர்க்கமான அக்கறையையும் வேண்டி நிற்கின்றது.

உலக சோசலிச வலை தளம் சினிமா கைத்தொழில் துறையில் உள்ளவர்களையும் அனைத்து கலைஞர்கள், எழுத்தாளர்களையும் அனைத்து உழைக்கும் மக்களையும் தீபா மேத்தாவை பாதுகாப்பதில் ஒரு நிலைப்பாட்டை வகிக்க வேண்டும் எனக் கோருகின்றது. ஜனநாயக கலைத்துறை உரிமைகள் மீதான மோசமடைந்து வரும் தாக்குதல்களை எதிர்க்க வேண்டும். இந்து அடிப்படைவாதிகளின் பிரச்சாரம் சவால் செய்யப்படாது போகுமானல் இது வேறு இடங்களில் தீவிரவாத மூலகங்களை ஊக்குவிக்கும். எங்ஙனம் விஞ்ஞான ஆராய்ச்சி வேலைகள் அரசியல் தலையீடுகளால் வரையறுக்கப்பட்டு, அரசாங்க கொள்கைகளால் நிர்ணயம் செய்யப்படுமேயானால் அது முன்னேற்றம் காணமுடியாதோ. அங்ஙனமே நிஜ கலைப்படைப்பு பங்களிப்புகளும் பூரண கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமும் ஆய்வுகளும் இல்லாமல் அபிவிருத்தி காணமுடியாது.

உங்களின் ஆட்சேபனைக் கடிதங்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Atal Bihari Vajpayee
Prime Minister of India
South Block, Raisina Hill
New Delhi, India-110 011
Fax: 91-11-3019545 / 91-11-3016857

Shri Ram Prakash Gupta,
Chief Minister,
Uttar Pradesh 5,
Kalidas Marg Lucknow, India
Fax: 91-522-239234 / 91-522-214876
Email: cmup@upindia.org & cmup@up.nic.in

உங்களது ஆட்சேபனை கடிதங்களின் பிரதிகளை உலக சோசலிச வெப் தளத்துக்கும் (WSWS) அனுப்பிவைக்கவும்

editor@wsws.org