ரஷ்ய புரட்சியும் |
WSWS : Tamil : நூலகம் |
Reform and Revolution in the Epoch of Imperialism1 ஏகாதிபத்திய சகாப்தத்தில் சீர்திருத்தமும், புரட்சியும்1 Use this version to print| Send feedback இருபதாம் நூற்றாண்டு ஓர் அதிர்ச்சியூட்டும் முரண்கூற்றை நமக்கு காட்டுகிறது, அதுவாவது: அன்றாட வாழ்வின் அடிப்படை வடிவங்கள் மற்றும் ஒழுங்கமைப்புகளில் இந்தளவுக்கு ஆழமான மாற்றத்தைக் கண்ட சகாப்தம், மனித வரலாற்றிலேயே வேறெதுவும் இருந்திருக்காது. விஞ்ஞான முன்னேற்றத்தின் பரப்பெல்லையும் வேகமும், ஏறத்தாழ தொடர்ச்சியாக, இந்த பிரபஞ்சம் மற்றும் அதில் நமது பூமி வகிக்கும் இடத்தைப் பற்றிய நமது கருத்துருவில், நம்மிடமிருந்து ஒரு புரட்சியைக் கோருகின்றன. இப்போதும் கூட, செவ்வாய் கிரகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் நமது தொழில்நுட்ப உபகரணத்திலிருந்து வரும் ஆச்சரியமூட்டும் தகவல்பரிமாற்றங்களை பார்த்த பின்னர், நமக்கு மூச்சடைத்துபோகின்றது. விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கேற்ப, மனிதயினம் காலம், வெளி, மற்றும் உயிர்வாழ்வு குறித்த அதன் கருத்துருக்களை மாற்றியமைத்துக் கொள்வதற்கும் மற்றும் விரிவுபடுத்திக் கொள்வதற்கும் நிர்பந்திக்கப்படுகிறது. இத்தகைய விஞ்ஞான வளர்ச்சிகள், இந்நூற்றாண்டின் சமூக பேரழிவுகள் மற்றும் பிரளயங்களின் பின்னணியில்தான் சாதிக்கப்பட்டுள்ளன. உலக வரைபடம் மீண்டும் மீண்டும் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது; மேலும் எண்ணிலடங்கா எழுச்சிகளும் மற்றும் அவற்றின் விளைவுகளும் நூறு மில்லியன் கணக்கான மக்களை வேரோடு பெயர்த்தெடுத்து, உலகெங்கிலும் அவர்களைச் சிதறடித்துள்ளன. ஆனால், வாழ்க்கை நிலைமைகளில் எழுச்சிகளும் மாற்றங்களும் இருந்தபோதினும், அரசியல் கருத்துக்களத்தில் விஞ்ஞானபூர்வ சிந்தனையின் வளர்ச்சிகளோடு ஒப்பிடுவதற்கு அங்கே ஒன்றுமே இருக்கவில்லை. 1900இல் இருந்து, பிரபஞ்சத்தைக் குறித்த மனிதனின் அறிவு அதிவேகமாக விரிவடைந்தது; ஆனால் அவனது சொந்த சமூகபொருளாதார இருப்பை ஆளுகின்ற விதிகள் குறித்த அவனது புரிதல்திறன், நவீன சோசலிசத்தின் ஸ்தாபகர்களான கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸால் எட்டப்பட்ட மட்டத்தையும் விட மிகமிக குறைவாகவே உள்ளது. இன்றையகால முதலாளித்துவ அரசியலின் நிலையை நாம் கருத்தில் கொள்வோமாயின், அங்கே ஒரு குறிப்பிடத்தக்க சிந்தனையாளர் அல்லது மூலோபாயவாதி என ஒரேயொருவரைக் கூட ஒருவரால் சுட்டிக்காட்ட முடியாது. இருந்தும்கூட, முதலாளித்துவமோ அளவிடவியலாத பொருளாதார வலிமை மற்றும் செல்வவளத்தை உடைமையாக்கும் அனுகூலத்தைப் பெற்றுள்ளது. குறைந்தபட்சம், தென்கிழக்காசிய பொருளாதார கொந்தளிப்பு வரையில், அதிகரித்துவந்த பங்குச்சந்தை மற்றும் சாதனையளவிலான இலாபங்கள் முற்றிலும் அவசியமான ஒரு பரந்த மூலோபாய தொலைநோக்கு பார்வையைக் காணவேண்டியதன் தேவையை ஏற்படுத்தவில்லை. அனைத்திற்கும் மேலாக, முதலாளித்துவ வர்க்க மேலாளுமைக்கு நீண்டகாலமாக எவ்வித வெளிப்படையான அரசியல் சவாலும் இல்லாதிருந்ததால், அது சமூக புரட்சியின் அச்சுறுத்தலுக்கு எதிராக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பெரிய சிக்கலான பிரச்சினை எதுவுமின்றி, செல்வவள திரட்சியின் மீது அதன் கவனத்தைக் குவித்து வைக்க அதை அனுமதித்தது. முதலாளித்துவ அரசியலின் நிலையைப் போலவே அதேயளவுக்கு மோசமாக, “தொழிலாளர் இயக்கம்" என்று நாசூக்காக அழைக்கப்படுவதும் நிரந்தரமாகவே மோசமடைந்துள்ளது. தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்டே அந்நலன்களில் ஆர்வமின்றியும், மற்றும் அதற்கு விரோதமாகவும் இருக்கும் அதிகாரத்துவவாதிகளின் தலைமையில், உத்தியோகபூர்வ தொழிலாளர் இயக்கங்களோ மரணிக்கும் தறுவாயில் உள்ளன. தொழிலாளர் இயக்கத்தின் நெருக்கடியானது, வெறுமனே தொழிலாளர் அதிகாரத்துவத்தினது நேர்மையின்மை, ஊழல், அலட்சியம் மற்றும் இயலாமையின் விளைவல்ல. மாறாக, அத்தகைய ஊழல்மிக்க தகமைகள், ஒரு ஒட்டுமொத்த வரலாற்று காலக்கட்டம் முழுவதும், தொழிலாளர் இயக்கத்தின் இணக்கவாத (accommodationist) மற்றும் சோசலிச-விரோத குணாம்சத்தைத் தீர்மானித்த சமூக நிகழ்வுபோக்கில், அவற்றின் தோற்றுவாயைக் கொண்டுள்ளன. யுத்தத்திற்குப்-பிந்தைய ஏகாதிபத்திய ஒழுங்குமுறைக்கு தொழிலாள வர்க்கத்தை திட்டமிட்டு அடிபணிய செய்ததன் அடிப்படையில், சந்தர்ப்பவாத கொள்கைகளின் ஒரு அரை-நூற்றாண்டுக்கு மேலான காலகட்டமே, தொழிலாளர் இயக்கத்தின் சமூக, அரசியல், புத்திஜீவித மற்றும் அறநெறிசார் இலக்கணத்தை வடிவமைத்தது. பல தசாப்தங்களாக, யுத்தத்திற்குப்-பிந்தைய செழிப்பு மற்றும் அதன் அடிப்படையில் தேசிய நலன்புரி அரசுகள் (welfare states) செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில், தொழிலாளர்களது இயக்கத்தின் தத்துவார்த்த அறிவீனமோ மற்றும் அரசியல் ஊழல்களின் நீண்டகால விளைவுகளோ வெளிப்படையாக தெரியவில்லை. வர்க்கங்களுக்கு இடையிலான சமூக உறவுகள், குறைந்தபட்சம் பிரதான முதலாளித்துவ நாடுகளிலேனும், நலன்புரி அரசின் கட்டமைப்புக்குள் இணக்கமாக செல்ல முடிந்திருந்ததால், அங்கே வர்க்க போரின் தலைச்சிறந்த மூலோபாயவாதிகளுக்கு இடமிருக்கவில்லை. அந்த வரலாற்று காலகட்டம், நடைமுறைவாத அனுபவ அடிப்படையில் பிரச்சினைகளைக் கையாளுகின்ற (philistines) விட மேலதிகமாக எவரையும் கோரவில்லை, மேலும் அதுபோன்றவர்கள் அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் காளான்களைப் போல ஏராளமாக முளைத்திருந்தார்கள். சமரச மற்றும் இணக்க உறவுகள் தகர்ந்து போன பின்னர் தான் — அதாவது, சர்வதேச முதலாளித்துவம் பழைய மற்றும் பழக்கமான விதிகளுக்கிணங்க இனியும் செயல்பட விரும்பாமல் போனதும் அல்லது செயல்படவியலாமல் போனதும் தான் — யுத்தத்திற்குப்-பிந்தைய தொழிலாளர் இயக்க உள்நாற்றத்தின் பரிமாணம் வெளிப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி, திட்டவட்டமாக சீர்திருத்தவாதத்தின் தோல்விக்கு எடுத்துக்காட்டாக ஏறத்தாழ தானேவிளங்குவது போலிருக்கும். ஆனால் சமூக-ஜனநாயக சீர்திருத்தவாதத்தின் வீழ்ச்சியானது, சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினிச ஆட்சிகளின் ஆச்சரியம்மிக்க பொறிவால் திரைமறைப்பிற்குள்ளாகிய உண்மையால், இந்நிலைமை சிக்கலுக்கு உள்ளாகிறது. மக்கள் இயல்பாகவே, அவர்கள் எதிர்கொண்டிருக்கும் அரசியல் சூழல்களின் தோற்றுவாய்களை ஆராய நாட்டங்கொள்ள மாட்டார்கள். அந்த ஆட்சிகளின் தலைவர்களாலும் சரி மற்றும் அவற்றின் முதலாளித்துவ எதிராளிகளாலும் சரி இருதரப்பினராலும், அவற்றிற்கு பிரயோகிக்கப்பட்ட அடைமொழிப்பெயரினால், பெருந்திரளான தொழிலாளர்கள் அவற்றை "கம்யூனிஸ்ட்" என்றும், “சோசலிஸ்ட்" என்றும் கருதினர். 1989 மற்றும் 1991க்கு இடையே, ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சி முதலாளித்துவ பிரச்சாரவாதிகளால் (மேலும் ஸ்ராலினிஸ்டுகளின் ஒரு கணிசமான பிரிவுகளாலும் கூட) மார்க்சிசத்தின் மற்றும் சோசலிசத்தின் தோல்வியாக காட்டப்பட்டது. இந்த விளக்கத்தை தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்ட அதேயளவுக்கு, அவர்கள் முதலாளித்துவ சந்தை மற்றும் அதன் கட்டளைகளுக்கு வேறெந்த மாற்றீடையும் காணவில்லை. நிச்சயமாக, முதலாளித்துவ சந்தையின் கட்டளைகளுக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை புறக்கணிப்பது சாத்தியமில்லை தான். அதிகரித்துவரும் சமூக துருவமுனைப்படுத்தலின் அறிகுறிகளால் கவலைக்குள்ளான தொழில்ரீதியிலான மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளின் மத்தியில், மக்களின் அமைதியின்மை ஒரு எதிர்பார்க்கப்பட்ட பிரதிபலிப்பைக் காண்கிறது. முதலாளித்துவ சந்தையின் கட்டுப்பாடில்லாத நடவடிக்கைகளை விமர்சித்து, மிக சமீபத்திய காலங்களில், பல நூல்கள் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தொழிலாள வர்க்க நிலைமைகள் மீதான பூகோளமயமாக்கலின் தாக்கம் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதிகரித்துவரும் சமூக துருவமுனைப்படுத்தல் குறித்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எட்வார்ட் பேர்ன்ஸ்டைனும் மார்க்சிசத்தை திரித்தலும் பெருகிவந்த கவலைகளின் இந்த சூழலில், ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தினது ஆரம்பகால வரலாற்றின் மிகமுக்கிய பிரபல்யங்களில் ஒருவரான மார்க்சிச-விரோத திருத்தல்வாதத்தின் "தந்தை", எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் மீது புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் எழுந்துள்ளது. கடந்த தசாப்தத்தில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பிரசுரம் பேர்ன்ஸ்டைனின் பிரதான படைப்பான சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள் நூலின் புதிய பதிப்பை பிரசுரித்துள்ளது, இது பேர்ன்ஸ்டைனின் கண்ணோட்டங்கள் மீதான தத்துவார்த்த விவாதங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் தொகுப்பாகும், மேலும், மிக சமீபத்தில், 1997இல், சோசலிச பரிணாமத்திற்கான தேடல்: எட்வார்ட் பேர்ன்ஸ்டைனும் சமூக ஜனநாயகமும் என்ற தலைப்பில் வரலாற்றாளர் மான்ஃப்ரெட் ஸ்டெகர் எழுதிய எட்வார்ட் பேர்ன்ஸ்டைனின் புதிய சுயசரிதமும் பிரசுரிக்கப்பட்டது. ஸ்டேகரால் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்ட பேர்ன்ஸ்டைன் எழுத்துக்களின் ஒரு துணை தொகுப்பும் சமீபத்தில் Humanities Press ஆல் பிரசுரிக்கப்பட்டது, அது குட்டி-முதலாளித்துவ இடது பிரிவுகளின் அரசியல் முயற்சிகளுடன் தொடர்புபட்டதாகும். ஸ்டேகர் எழுதிய சுயசரிதம் முக்கியமானது, அதன் புலமைத்துவத்தின் தரத்திற்காக அல்ல —அதன் உயிரூக்கமற்ற தன்மையைத் தவிர அங்கே மேலதிகமாக அதில் வேறொன்றுமில்லை— மாறாக அது கொண்டிருக்கும் அரசியல் பார்வைக்காக முக்கியத்துவம் பெறுகிறது. மார்க்சிசம் மீதான பேர்ன்ஸ்டைனின் தாக்குதல்; தொழிலாள வர்க்க புரட்சியிலிருந்து சோசலிசத்தை பிரிப்பதற்கான அவரது முயற்சி; நல்ல நோக்கம்கொண்ட மற்றும் அறவழியில் —உந்தப்பட்ட தாராளவாதம் என்பதற்கு மேலதிகமாக சோசலிசம் வேறொன்றுமில்லை என மறுவரையறை செய்யும் அவரது முன்மொழிவு— இவை அனைத்தும் நம்முடைய காலத்திற்கான வழிகாட்டும் கலங்கரை விளக்காக ஸ்டெகரால் பார்க்கப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக, ஸ்டேகரை பொறுத்த வரையில், பேர்ன்ஸ்டைனின் முக்கியத்துவம், முதலாளித்துவத்திற்கு ஒரு புரட்சிகர மாற்றீடு சாத்தியமில்லை என்பதை அவர் அங்கீகரிக்கிறார் என்பதன் அடிப்படையில் உள்ளது. சீர்திருத்தவாதத்தின் முதலாவது முக்கிய மார்க்சிச தத்துவவாதியாக பேர்ன்ஸ்டைன், நவீன சமூகத்தில் அதிகரித்துவரும் சிக்கல் பண்டைய நாட்களின் பரந்துபட்ட புரட்சிகளை அர்த்தமற்றவையாக ஆக்குவதாக கருதினார். ... "சோசலிசத்தின் முடிவு" என்று பாவிக்கப்பட்டதற்குப் பின், "தாராளவாத சோசலிசத்தின்" பேர்ன்ஸ்டைன் கருப்பொருள் முன்மாதிரியே, நமது சோவியத்திற்குப் பிந்தைய மற்றும் (அனேகமாக) கீன்சியத்திற்குப்-பிந்தைய சகாப்தத்தில் இருக்கும் ஒரே சாத்தியமான முற்போக்குத் திட்டத்திற்கு, தர்க்கரீதியிலான தொடக்கப்புள்ளியை பிரதிநிதித்துவம் செய்கிறது: இது பொது சமூகம் வகிக்கும் பாத்திரத்தின் மீது ஒரு புதிய கவனத்தை செலுத்துவதோடு, சொத்துரிமைகள் மீதான தனிநபரின் உரிமைகளை நீட்டிப்பதற்கு சாதகமான ஒரு ஜனநாயக கருத்துருவையும் பிரதிநிதித்துவம் செய்கிறது.2 பேர்ன்ஸ்டைனை நம்முடைய காலத்திற்கான ஒரு கதாநாயகனாக அறிவிக்கின்ற அதேவேளையில், ஸ்டேகர் முற்றிலுமாக மெய்யியல்ரீதியான தரங்களை பொருத்திப் பார்த்தே பேர்ன்ஸ்டைனின் அரசியல் சிந்தனையை அவர் மதிப்பிட அணுகியதாக — எச்சரிக்கையும், எரிச்சலும் கலந்து— எழுதுகிறார். பேர்ன்ஸ்டைனினது புத்திஜீவித வேட்கையை கல்வித்துறை விசாரணைக்கு மதிப்புடைய ஒரு பொருளாக மாற்றுவது, அதிலிருக்கும் மெய்யியல் சொற்புரட்டின் அளவோ அல்லது அதன் தரமற்ற ஆராய்ச்சிமுறையோ அல்ல. மாறாக, தனிநபரின் சுய-உணர்மை மற்றும் சமூகத்தின் பங்கீட்டு நீதி ஆகிய இரண்டு மகத்தான அரசியல் பாரம்பரியங்களின், ஓர் ஒத்திசைந்த கூட்டுச்சேர்க்கையை நெறிப்படுத்துவதற்கான பேர்ன்ஸ்டைனின் உண்மையான மிகப்பெரிய முயற்சியே ஆகும்.3 மார்க்சிசத்தின் புரட்சிகர கருத்துருக்களுக்கு பேர்ன்ஸ்டைன் ஒரு அதிர்ச்சிகரமான தத்துவார்த்த அடியைக் கொடுத்ததாக கூறப்படுவதை, நினைவுகூர வேண்டும். பேர்ன்ஸ்டைனின் எழுத்துக்களை மதிப்பீடு செய்கையில், ஸ்டேகர் "மெய்யியல் பண்புகளைத்" தவிர்க்க விரும்பியதாக ஒப்புதல் அளிப்பது, விஞ்ஞானம் மற்றும் தத்துவத்தின் பரப்பெல்லையில் பேர்ன்ஸ்டைன் மற்றும் மார்க்ஸ்க்கு இடையிலான ஒரு நேரடி மோதலை, ஏதோவொரு புத்திஜீவித பொருத்தமின்மையாக இருந்திருக்குமென மௌனமாக அங்கீகரிப்பதற்கு ஒப்பானதாகும். ஆனால் பேர்ன்ஸ்டைனின் தத்துவார்த்த குறைபாடுகள், அவரை நோக்கி நாம் திரும்ப வேண்டும் என்பதற்காக அவரையொரு தீர்க்கதரிசியாக தழுவிக் கொள்வதிலிருந்து ஸ்டேகரை தடுத்துவிடவில்லை. 100 ஆண்டுகளுக்கு குறையாத காலக்கட்டம் கடந்து போன பின்னர், இன்று, பேர்ன்ஸ்டைனின் முறையிடல் அவரது வாதங்களின் புத்திஜீவித பலத்திலிருந்து பெறப்படவில்லை, மாறாக அதன் அடியிலிருக்கும் தத்துவார்த்த பலவீனங்களை பொருட்படுத்தாமல், தங்களின் சமூக நலன்கள் மற்றும் தங்களின் அரசியல் மனோபாவத்திற்குரிய விடையிறுப்பு இரண்டுக்கும் அவரது வேலைத்திட்டத்தில் ஒரு வெளிப்பாட்டைக் கண்ட மத்தியதர வர்க்கத்தின் குறிப்பிட்ட பிரிவுகளின் எதிர்பார்ப்புகளில் இருந்து பெறப்பட்டது. ஓர் ஆரம்பகாலத்திய மற்றும் மிகவும் அறிவார்ந்த சுயசரித எழுத்தாளர், பீட்டர் கே, சுமார் நாற்பதைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு எழுதினார், “அங்கே பேர்ன்ஸ்டைன் இல்லாது இருந்திருந்தாலும் கூட, அவரை உருவாக்க வேண்டிய அவசியமிருந்திருக்கும். ஜேர்மனியின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் அந்த நூற்றாண்டின் திருப்பத்தின் போது ஒரு சீர்திருத்த கோட்பாட்டைக் கோரின."4 பேர்ன்ஸ்டைன் வாதத்தை உயிர்த்தெழச்செய்தல் என்பது இன்று மிக அரிதாகவே சாத்தியப்படும். உண்மையில், அது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்படையாக இருக்கவில்லை என்றபோதினும், அது அதன் பிறந்த தருணத்திலிருந்து "இருந்து வருகிறது". இருப்பினும், பேர்ன்ஸ்டைனின் வாழ்க்கை மீது புதுப்பிக்கப்பட்ட ஆர்வம், மற்றும் அவரது படைப்புகளைச் சுற்றிய சர்ச்சைகள், ஒரு மிக முக்கியமான புள்ளியை சித்தரிக்கின்றன: அதுவாவது, 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக இறுதியில் போராடப்பட்ட அரசியல் பிரச்சினைகள், நாம் இருபதாம் நூற்றாண்டின் இறுதியை நெருங்கி வருகின்றபோதும் அசாதாரணமான விதத்தில் பொருந்தி இருக்கின்றன என்பதாகும். வரலாறு தானே அதுவே மீண்டும் திரும்புவதில்லை என்றாலும், அது ஒத்தவிதத்தில் இருக்கக்கூடும், இதை மார்க் டுவைன், அவர் தான் தெரிவித்தார் என நம்புகிறேன். மேலும், உண்மையில், அனைத்து கருத்து வேறுபாடுகள் இருந்தபோதினும், எந்தவிதமான அரசியல் நிலைமைகள் மற்றும் புத்திஜீவித சூழலில் பேர்ன்ஸ்டைன் எழுச்சிபெற்றாரோ "அதேபோன்ற ஒத்த" நிலைமைகளை இன்று நாம் முகங்கொடுப்பதிலிருந்து தப்பமுடியாதபடிக்கு சிக்கியுள்ளோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் மத்தியதர-வர்க்க புத்திஜீவிகளுக்கு பேர்ன்ஸ்டைனினது "மார்க்சிசத்தின் மரண" பிரகடனம் எந்தளவுக்கு பொருந்தி இருந்ததோ இப்போதும் அந்தளவுக்குப் பொருந்தியிருக்கிறதென முற்றிலுமாக ஒப்புக்கொள்ள முடியாது. முன்னொருபோதும் இல்லாதளவுக்கு முதலாளித்து செல்வசெழிப்பு மற்றும் அதன் உலகந்தழுவிய ஆதாரவளங்கள் மற்றும் மேலாளுமையில் ஏற்பட்டிருக்கும் பாரியளவிலான விஸ்தீரணத்திற்கு இடையே, ஒரு முதலாளித்துவ அமைப்புமுறை அதன் உள்முரண்பாடுகளின் அபிவிருத்தியினூடாக பேரழிவுக்கு உந்தப்படுகிறது என்ற மார்க்சிச கருத்துரு, அவதானிக்கூடிய யதார்த்தத்துடன், பல சிறந்த அறிவார்ந்த மக்களால் முற்றிலும் கருத்துவேறுபாடின்றி பார்க்கப்படுகிறது. ஆனால் 1898இன் சூழ்நிலைக்கும் 1998இல் நிலவும் சூழ்நிலைக்கும் இடையே அங்கே ஒரு மலைப்பூட்டும் அளவில் வேறுபாடுகள் உள்ளன: அதுவாவது, பேர்ன்ஸ்டைன் அவரது மார்க்சிச விமர்சனத்தை முன்வைத்த காலக்கட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் கண்கூடாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. சீர்திருத்தவாதம், தத்துவார்த்தரீதியில் அது தன்னைத்தானே நியாயப்படுத்திக் கொள்ள முயன்றபோது எவ்வளவு தான் பலவீனமாக தெரிந்த போதினும், நடைமுறையில் முற்றிலும் தீவிரத்தன்மையோடு தெரிந்தது. பேர்ன்ஸ்டைனினது சேதிக்கு முறையிடலை உணர்ந்தறிவதற்கு, இந்த உண்மையை கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். முதலாளித்துவத்தை படிப்படியாக மற்றும் முற்போக்காக சீர்திருத்தும் சாத்தியக்கூறில் இருந்த நம்பிக்கை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பேர்ன்ஸ்டைனின் வாதம் உளவியல் ஆக்கக்கூறாக இருந்தது. பேர்ன்ஸ்டைனுக்கு திரும்புவது அவசியமென அதை இன்று பரிந்துரைப்பவர்களின் முன்னோக்கு, அம்மாதிரியான எந்த நன்னம்பிக்கைவாதத்திற்கும் உயிரூட்டவில்லை. அதற்கு மாறாக, மூளைகுழம்பிய அவநம்பிக்கைவாதமே சமகாலத்திய மத்தியதர வர்க்க இடது கூட்டத்தின் மீது மேலாளுமை கொண்டுள்ளது. சமூக மாற்றத்தின் ஒரு முகவராக, தொழிலாள வர்க்கத்தின் பாத்திரம் என்னவாக இருந்தாலும் சரி, இத்தட்டினருக்கு அதன்மீது நம்பிக்கை கிடையாது. சமூகநலன்புரி அரசில் என்ன கொஞ்சநஞ்சம் மிஞ்சி இருக்கிறதோ அதை அழிப்பதைத் தவிர்க்குமாறு நிதியியல் மேற்தட்டுக்கு ஒரு வெற்றுத்தனமான மற்றும் கோழைத்தனமாக முறையீடு செய்வதற்கு, சற்று மேலதிகமாக ஆக்குவதுதான், முதலாளித்துவத்தின் "சீர்திருத்தவாதம்" என்பது. மறுபுறம், பேர்ன்ஸ்டைனோ, அவரது அனைத்து பலவீனங்களோடு, சோசலிஸ்டுகளின் அழுத்தம் மற்றும் செல்வாக்கின் கீழ், முதலாளித்துவம் ஒரு அருமையான மனிதநேய சமூகமாக அமைதியாக பரிணமிக்குமென்ற அவரது பிரமையில் குறைந்தபட்சம் நேர்மையோடு இருந்தார். ஆனால் இந்த அடிப்படை வித்தியாசத்திற்கு இடையே, அங்கே இன்றைய அறநெறிபிறழ்ந்த சீர்திருத்தவாதிகளின் முன்னோக்குகளை 1890களின் இறுதியில் பேர்ன்ஸ்டைனால் விவரிக்கப்பட்ட முன்னோக்குகளுடன் இணைக்கும் ஒரு கருத்தியல் அம்சமும் இருக்கிறது: அதுவாவது, மார்க்சிசத்தின் ஆராய்ச்சிமுறைக்கு அடித்தளமான சடவாத இயங்கியல் மீது ஆணவத்துடன் கூடிய அலட்சியம். நிகழ்வுகளை இயங்கியல்ரீதியாக —அதாவது, எதிரெதிர் தீர்மானித்தல்களின் ஒரு கூட்டாக— சிந்திக்க மற்றும் பகுத்தாராய இயலாத இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால சீர்திருத்தவாதிகளது இயலாமை, 1914இல் முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்புடன் ஒட்டுமொத்த உலகையும் துண்டுதுண்டாக தகர்க்க இருந்த உள்முரண்பாடுகளையோ மற்றும் அதனோடு சேர்ந்து அவற்றின் சுயதிருப்திகரமான கருத்துருக்களையோ புரிந்துகொள்ள தகைமையின்றி செய்திருந்தது. SPD: முதலாவது வெகுஜன தொழிலாள வர்க்க கட்சி 1890இல் சோசலிச-விரோத சட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதில் இருந்து 1914இல் முதலாம் உலக போர் வெடிப்பு வரையில் ஒரு கால் நூற்றாண்டுகால போக்கில் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஜேர்மனியில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்திருந்தது. ஆனால் வெறுமனே வாக்குகளின் ஒப்பீடு மட்டுமே, தொழிலாள வர்க்கத்திற்குள் சமூக ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு மற்றும் ஆழத்தின் அளவை எடுத்துக்காட்டிவிடாது. SPD, அதன் காலத்தில், ஒரு ஈடிணையற்ற வரலாற்று நிகழ்வுபோக்காக இருந்தது: அது உண்மையிலேயே முதலாவது வெகுஜன தொழிலாள வர்க்க கட்சியாகும். SPD இனுள் புறவடிவம் எடுத்த இயக்கம், அதன் இறுதி இலக்கையும் விட மிகவும் முக்கியமானதென அறிவித்து, 1898இல், SPDஇன் தலைவர்களை பேர்ன்ஸ்டைன் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆனால் SPD தலைமை வகித்த இயக்கத்தின் பரப்பெல்லையை சிறிதேனும் புரிந்துகொள்ளாமல் அவரது வாதத்தில் உள்ளடங்கியிருந்த அரசியல் நிலைதவறலை மட்டுமல்லாது அதன் இயல்பான பலத்தையும் மதிப்பிடமுடியாது. நடைமுறையில் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு அம்சத்துடனும் தொடர்புபட்ட புத்தகங்கள், செய்தியிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளை பிரசுரித்து வந்த ஒரு பாரிய பிரசுர சாம்ராஜ்ஜியத்தை, SPD தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தது. ஏங்கெல்ஸ் மரணித்த ஆண்டான, 1895வாக்கில், SPD எழுபத்தி-ஐந்து செய்தியிதழ்களை பிரசுரித்தது, அவற்றில் முப்பத்தி ஒன்பது வாரத்திற்கு ஆறு முறை வெளி வந்தவை. 1906 வாக்கில், அங்கே ஐம்பத்தி-எட்டு சோசலிச நாளிதழ்கள் இருந்தன. 1909இல், சமூக ஜனநாயக செய்தியிதழ்களின் விற்பனை ஒரு மில்லியனை எட்டியதுடன், யுத்தத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் ஒன்றரை மில்லியனாக இருந்தது. உத்தியோகபூர்வ விற்பனை, சோசலிச பத்திரிகையை படித்து வந்தவர்களின் நிஜமான எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது, இது ஏனென்றால் பல நகல்கள் தொழிற்சாலைகள், உணவுவிடுதிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அண்டை அயலவர்களிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டன. மிகவும் பிரபலமான ஒரு இதழான Der Wahre Jakob, 380,000 பிரதிகள் விற்பனையை எட்டியது, ஆனால் அதன் உண்மையான வாசகர்வட்டம் ஒன்றரை மில்லியனை எட்டியிருந்தது. 1914 வாக்கில் சமூக ஜனநாயக வாசகர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஆறு மில்லியனாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. SPD இன் கோட்பாட்டுரீதியிலான அரசியல் பத்திரிகை Vorwärts இன் விற்பனை 165,000ஐ எட்டியது. கார்ல் காவுட்ஸ்கியின் மேற்பார்வையில் இருந்த பிரபல தத்துவார்த்த இதழ் Neue Zeit இன் விற்பனை 10,500ஆக இருந்தது. பெண் தொழிலாளர்களுக்காக கட்சியால் உருவாக்கப்பட்டு, கிளாரா ஜெட்கின் மேற்பார்வையின்கீழ், ஓர் ஆக்ரோஷமான இராணுவவாத-எதிர்ப்பு போக்கை பின்பற்றிய ஒரு பத்திரிகை Die Gleichheit, 1914 வாக்கில் 125,000 என்ற விற்பனையை எட்டியது. அந்த கட்சியால் பிரசுரிக்கப்பட்ட துணை பத்திரிகைகள் எதிலெல்லாம் ஆர்வம் காட்டியதென்பதை அவற்றின் பின்வரும் தலைப்புகளைக் கொண்டே மதிப்பிடலாம்: The Worker-Cyclist (விற்பனை 168,000), The Singing German Workers Newspaper (விற்பனை 112,000), The Workers Exercise Newspaper (விற்பனை 119,000), The Free Innkeeper (விற்பனை 11,000), The Abstinent Worker (விற்பனை 5,100), மற்றும் The Worker Stenographer (விற்பனை 3,000). இத்தகைய வழக்கமான பிரசுரங்களுக்கும் கூடுதலாக, SPD ஒரு பாரிய அரசியல் இலக்கியத்தையும் உருவாக்கியது, அவை தேர்தல் பிரச்சாரங்களின் போது பிரமாண்டமான பங்களிப்பைச் செய்தன: துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், சிறப்பிதழ்கள் மற்றும் சிறு வெளியீடுகள் மில்லியன் கணக்கில் அச்சிடப்பட்டன. அக்கட்சி வரலாறு, அரசியல் மற்றும் கலாச்சாரம் பற்றிய நூல்களை பிரசுரித்த பல மிகப்பெரிய பத்திரிகை பிரசுரங்களையும் நடத்தி வந்தது, அவை பத்து ஏன் நூறு ஆயிரக் கணக்கில் கூட நூல்களை வெளியிட்டன. சமூக நடவடிக்கைகளின் ஒரு பாரிய வலையமைப்பை SPD ஒழுங்கமைத்து, ஒருங்கிணைத்தது, அதில் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு வயதுடைய குழுவும் மற்றும் பிரிவும் ஈடுபட்டன. Arbeiter (தொழிலாளி) என்ற வார்த்தையே ஒரு அரசியல் தாத்பரியத்தை கொண்டிருந்த அளவுக்கு தொழிலாள வர்க்கத்துடன் SPD ஆழமாக அடையாளங்காணப்பட்டது. அந்த நூற்றாண்டின் திருப்பத்தில், பரந்த சமூக மற்றும் கல்விசார் பிரிவுகளை உள்ளடக்கி இருந்த, குறைந்தபட்சம் இருபது குறிப்பிட்ட விதமான சமூக நடவடிக்கைகளில் SPD ஈடுபட்டிருந்தது. அது எண்ணிலடங்கா உடற்பயிற்சி கூடங்களையும், இசைக்குழு சமூகங்களையும் நடத்தி வந்தது. செம்னிட்ஸ் (Chemnitz) என்ற ஒரு நகரில் மட்டும், 142க்கு குறைவில்லாத தொழிலாளர்களின் இசைக்குழு சமூகங்களை அது ஒழுங்கமைத்திருந்தது, அவை மொத்தம் 123 இசைநிகழ்ச்சிகளை வழங்கி இருந்தன. துரின்ங்யா பகுதியில், 191 வெவ்வேறு உடற்பயிற்சி கூடங்களை அமைக்க உதவியது. நூறு ஆயிரக் கணக்கான ஜேர்மன் தொழிலாளர்களை பொறுத்த வரையில், SPD என்பது வெறுமனே ஒரு அரசியல் அமைப்பாக இருக்கவில்லை: அவர்களுக்கு அவர்களது வாழ்வின் பெரும்பகுதியைத் திட்டமிடுவதற்கு அது மையஅச்சாக விளங்கியது. ஒரு தொழிலாளியின் ஆர்வம் — நீச்சல், எடை தூக்குதல், குத்துச்சண்டை, நடைபயணம், படகோட்டுதல் மற்றும் கப்பல் பயணம், கால்பந்து, சதுரங்கம், பறவைகளைக் காண்பது, நாடகங்கள், ஆரோக்கியம் மற்றும் இசைத்துறை, மதுவிலக்கு என — என்னவாக இருந்தாலும், SPD அதற்கான ஒரு அமைப்பைக் கொண்டிருந்தது, அதில் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ பதிவு செய்து கொள்ளலாம். உத்தியோகபூர்வ அரசியல் கல்விக்குமே கூட, SPD, கணிசமான ஆதாரவளங்களை அர்பணித்தது. 1890களில் இருந்து, அது வரலாறு, சட்டம், அரசியல், பொருளாதாரம், இயற்கை விஞ்ஞானம் மற்றும் பிரசங்க கலை ஆகியவற்றில் பயிற்சி அளித்தது. பெபெல், லீப்னெக்ட், ஜெட்கின் மற்றும் லுக்சம்பேர்க் ஆகியோர் இத்தகைய தலைப்புகளில் உரை நிகழ்த்தியவர்களில் அடங்குவர். மூன்று மாதகால பயிற்சிகள் ஆண்டுக்கு மூன்றுமுறை அளிக்கப்பட்டன. 1898இல் 540ஆக இருந்த பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1907இல் 1,700ஆக உயர்ந்தது. 1906இல் கட்சியின் ஓர் உத்தியோகபூர்வ பள்ளி ஸ்தாபிக்கப்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் கலாச்சார முன்னேற்றத்தை ஊக்குவித்ததில் கட்சி வகித்த பாத்திரம், தொழிலாளர்களின் நூலகங்களின் வளர்ச்சியால் எடுத்துக்காட்டப்படுகிறது. 1900 மற்றும் 1914க்கு இடையே, கட்சியும் மற்றும் SPD கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சங்கங்களும், 750 வெவ்வேறு இடங்களில் 1,100 நூலகங்களை ஸ்தாபிக்க உதவின. இந்த நூலகங்கள் 800,000கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்டிருந்ததோடு, 1914 வாக்கில் SPDஇன் ஊதியத்தின்கீழ் அங்கே 365க்கும் மேற்பட்ட நூலகபணியாளர்கள் இருந்தனர். ஒரு இறுதிப் புள்ளிவிபரம் முக்கியமாக குறிப்பிட தகுதியுடையதாகிறது. அந்நூற்றாண்டின் முதல் ஆண்டுகளில், கட்சிக்குள் பெண் தொழிலாளர்களை நியமிக்க SPD ஓர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது, அதன் முயற்சிகள் பலமான பிரதிபலிப்பை பெற்றன. 1905 இல் 30,000ஆக இருந்த கட்சியின் பெண் உறுப்பினர்களது எண்ணிக்கை 1914 இல் 175,000 ஆக உயர்ந்தது. மிகவும் பிரபலமாக இருந்த கட்சி பிரசுரங்களில் ஒகுஸ்ட் பெபெலின் சோசலிசத்தில் பெண்கள் -Woman under Socialism- ஒன்றாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். பேர்ன்ஸ்டைனின் நிலைப்பாட்டை ஆராய தொடங்குவதற்கு முன்னதாக, சர்வதேச மற்றும் தேசிய பொருளாதார சூழலில் கவனம் செலுத்தியாக வேண்டும், அதற்குள் இருந்துதான் அவரது கருத்துருக்கள் அபிவிருத்தி அடைந்தன. பேர்ன்ஸ்டைன் வரலாற்று சடவாத இயங்கியலின் மதிப்பை ஏற்க மறுத்தார், ஆனால் அவரது சொந்த புத்திஜீவித மற்றும் அரசியல் பரிணாமமோ அதே விதிகளுக்குப் பொருந்திய விதத்தில் தான் நடந்துவந்தன. 1873 மற்றும் 1893க்கு இடையே உலக பொருளாதாரம் ஒரு சிக்கலான மற்றும் பெரிதும் முரண்பாடான சித்திரத்தை எடுத்துக்காட்டியது. விலைகள் மற்றும் இலாபங்கள் இரண்டுமே நீண்டகால மந்தநிலைமையில் அமிழ்ந்து போயிருந்தன. அத்தகைய இருபது ஆண்டுகளின் போது, பிரிட்டனில் விலைகளின் அளவு 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இரும்பின் விலை 50 சதவீதம் வீழ்ந்தது. ஆனால் விலை மற்றும் இலாப பணச்சுருக்கத்தின் இந்த காலகட்டம் தொழில்துறை உற்பத்தியின் செழிப்பு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் ஒரு காலகட்டமாக இருந்தது. உண்மையில், உலக பொருளாதார நிலைமைகளின் இத்தகைய இரண்டு அம்சங்களுமே இயங்கியல்ரீதியாக ஒன்றையொன்று சார்ந்திருந்தன. இலாப விகிதத்தின் மீதிருந்த அழுத்தம், புதிய உற்பத்தி வளர்ச்சி மற்றும் நிர்வாக நுட்பங்களுக்கு தூண்டுதலை வழங்கியது, அவை தொழில்துறை உற்பத்தியின் ஒரு பரந்த விரிவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. இவ்விதத்தில், உலகப் பொருளாதாரம் விலை மற்றும் இலாபத்தின் மந்தநிலையிலும், தொழில்துறையின் வளர்ச்சியிலும் அமிழ்ந்திருந்த போதினும் கூட, அதுவும் குறிப்பாக ஜேர்மனி மற்றும் அமெரிக்காவில், ஒரு வெடிப்பார்ந்த வளர்ச்சியினூடாக சென்று கொண்டிருந்தது. மூலதனம் இலத்தீன் அமெரிக்கா போன்ற முற்றிலும் புதிய பகுதிகளுக்குள் பரவியது, இலாபகர முதலீடுகளுக்கான தேடல் ஏகாதிபத்திய-பாணியிலான காலனித்துவம் எழுச்சி பெறுவதற்கு இட்டுச் சென்றது. இந்த நீடித்த விலை மற்றும் இலாபத்தின் பின்னடைவு 1894 இன் இறுதியில் அதிரடியாக முடிவுக்கு வந்ததுடன், முதலாளித்துவம், பூர்சுவாக்களின் நிலைப்பாட்டிலிருந்து, மிகவும் மகத்தான ஒரு காலகட்டத்திற்குள் நுழைந்தது, அது இன்று வரையில் நினைவுகூரப்படும் La Belle Époque! (அழகிய சகாப்தம்!) என்ற பெயரைப் பெற்றது. இந்த பொருளாதார அபிவிருத்தியின் முக்கிய இயக்கவியல் மையங்களில் ஒன்றாக ஜேர்மன் இருந்ததால், அது மார்க்சிச இயக்கத்தில் ஆழமான மற்றும் முரண்பாடான தாக்கங்களை பெற்றது. சமூக ஜனநாயகக் கட்சி (SPD) விரிவடைந்ததற்கு ஓர் இன்றியமையாத நிலைமை, முற்றிலும் வெளிப்படையாக, தொழிலாள வர்க்கத்தின் வேகமான வளர்ச்சியாகும். ஆனால் இதுவே கூட ஜேர்மன் தொழில்துறை அபிவிருத்தியால் நிபந்தனைக்குட்பட்டு இருந்தது. பிஸ்மார்க்கின் கீழ் எட்டப்பட்ட பிற்போக்குத்தனமான அரசியல் வடிவங்கள் இருந்தபோதினும், ஜேர்மனி ஐக்கியமாக்கப்பட்டமை மிகப்பரந்த தொழில்துறையின் வேகமான வளர்ச்சிக்கு அடித்தளத்தை அமைத்தது. 1880 இல் 2.7 மில்லியன் டன்னாக இருந்த இரும்பு உற்பத்தி 1900 இல் 8.5 மில்லியன் டன்னாக உயர்ந்தது. அதே காலக்கட்டத்தில் எஃகு உற்பத்தி 625,000 இல் இருந்து 6.6 மில்லியன் டன்னாக உயர்ந்தது. 1873 மற்றும் 1900க்கு இடையே, ஜேர்மன் துறைமுகங்களுக்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது. தொழில்துறையின் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டமைப்புமயமாக்கல் (cartelization) ஆகியவையே ஜேர்மன் பொருளாதார வளர்ச்சியின் மைய அம்சமாக இருந்தது. 1882 மற்றும் 1907க்கு இடையே, சிறுதொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 8 சதவீத அளவுக்கு அதிகரித்தது, அதேவேளையில் மிகப்பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கையோ 231 சதவீத அளவுக்கு அதிகரித்தது. 1907 வாக்கில், 548 தொழிலக நிறுவனங்களில் 13 மில்லியனுக்கு அண்மித்தளவில் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். SPD இன் உத்தியோகபூர்வ கோட்பாடு வர்க்க போராக தான் இருந்தது, ஆனால் பின்புலத்தில் மட்டுமே இருந்திருந்தாலும் கூட, அதன் சொந்த வளர்ச்சியே ஜேர்மன் தேசிய தொழில்துறை விரிவாக்கத்துடன் பிணைந்திருந்தது. தேசிய தொழில்துறை மற்றும் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்கு இடையிலான தொடர்பு இன்னும் மேலதிகமாக நேரடியாக இருந்தது. 1890களின் மத்தியகாலப்பகுதி வரையில், அவற்றின் வளர்ச்சி கட்சியை பின்தொடர்ந்து போய் கொண்டிருந்தது, அவை அரசியல் வழிகாட்டுதல் மற்றும் நேரடியான சடத்துவரீதியிலான-நிதி ஆதரவு இரண்டிற்கும் கட்சியைச் சார்ந்திருந்தன. ஆனால் 1895 இல் தொடங்கிய மாபெரும் பொருளாதார செழிப்பு, ஏறத்தாழ உலக யுத்தம் வெடித்த போது வரையில் நீடித்திருந்தது, இது தொழிற்சங்கங்களின் ஒரு பாரிய விரிவாக்கத்திற்கு எண்ணெய் வார்த்ததோடு, தொழிற்சங்கங்கள் மற்றும் SPD க்கு இடையிலான உறவுகளை துரிதமாக மாற்றியது—தொழிற்சங்கங்களின் தலைவர்கள், மார்க்சிச தத்துவம் மற்றும் சோசலிச கோட்பாடுகள் குறித்த கேள்விகளில் மிகக் குறைந்த ஆர்வமே கொண்டவர்களாக இருந்தனர். தொழிற்சங்கங்களின் அளவும் மற்றும் பொருளாதார ஆதாரவளங்களும் அதிகமாக விரிவடைய விரிவடைய, அவற்றின் தலைவர்கள் சோசலிச கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய பரந்த பிரச்சினைகளுக்கு அவர்களின் நடைமுறை பிரச்சனைகள் கீழ்படியச்செய்யப்படுவதை ஏற்க விரும்பவில்லை. சோசலிச இயக்கத்தில் பேர்ன்ஸ்டைனின் ஆரம்ப ஆண்டுகள் பேர்ன்ஸ்டைன், பதினைந்து குழந்தைகளில் ஏழாவது குழந்தையாக ஒரு கீழ் மத்தியதர வர்க்க யூத குடும்பத்தில் பிறந்தார். அவர் 1872இல் சோசலிச இயக்கத்தில் அரசியல்ரீதியாக செயலூக்கத்துடன் இறங்கினார். பிரான்கோ-பிரஷ்யா யுத்தத்தின் போது, சோசலிச, சர்வதேசியவாத கோட்பாடுகளை பெபெல் தைரியமாக பாதுகாத்ததால் ஈர்க்கப்பட்டார். 1875இல் கோத்தாவில் நடந்த ஐஸ்னாக்கர்கள் [ஜேர்மன் ஐஸ்னாக் நகரவாசிகள்] மற்றும் லஸ்ஸாலியர்களின் [மெய்யியலாளர் லஸ்ஸால்லை பின்பற்றியவர்கள்] ஐக்கிய மாநாட்டில் அவரும் ஒரு பிரதிநிதியாக கலந்து கொண்டார். பேர்ன்ஸ்டைன், அவரது ஆரம்பகால அரசியல் வாழ்வில், பல்வேறு குட்டி-முதலாளித்துவ ஜனநாயக அரசியலின் வடிவங்களை நோக்கி சாய்வதில் அக்கறைக் காட்டியிருந்தார். அவர் SPD க்கு நிதியியல் பங்களிப்பு அளித்துவந்த ஒரு இடது ஜனநாயகவாதியான ஒய்கன் டூரிங்கினது மேலாளுமையின் கீழ் வந்த சிலகாலத்திற்கு பின்னர், அதேவேளையில் கார்ல் ஹோக்பேர்கின் செயலாளராக வேலை செய்து கொண்டே, ஓர் ஆவணத்தை வரைவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார், அந்த ஆவணம், கட்சி தொழிலாள வர்க்கத்தை நோக்கிய அதன் பிரத்யேக நிலைநோக்கை கைவிட்டு, முதலாளித்துவத்தை நோக்கி இன்னும் மேலதிகமாக ஒரு இணக்கமான மனோபாவத்தை ஏற்க வேண்டுமென வாதிட்டது. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் அந்த ஆவணத்தால் சீற்றம் அடைந்தனர், பின்னர் பேர்ன்ஸ்டைன் அரசியல் கோட்பாடுகளை மீறியதற்காக அந்த பழைய புரட்சியாளர்களிடம் தனிப்பட்டரீதியில் மன்னிப்புக்கோர, பெபெலுடனே கூட சேர்ந்து, இலண்டனுக்கு பயணித்ததன் மூலமாக மட்டுமே அவர்களின் நன்மதிப்பை மீட்டெடுத்தார். 1878இல் சோசலிச-எதிர்ப்பு சட்டங்களால் பேர்ன்ஸ்டைன் ஜேர்மனியை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதுடன், 23 ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியே வாழ்ந்தார். அவர் சுவிட்சர்லாந்தில் பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னர், 1880களின் இறுதிப்பகுதியில் இங்கிலாந்துக்கு நகர்ந்தார். இங்கிலாந்தில் அவரது சொற்பவாசகாலம் நீடித்திருந்த போதுதான், அவர் சீர்திருத்தவாத ஃபாபியன் சொசைட்டி என்ற அமைப்புடன் தொடர்புக்குள் வந்தார், அதன் முன்னணி பிரமுகர்களுடன் நெருக்கமான நட்புறவுகளையும் ஸ்தாபித்தார். அவர் பெயாட்ரிஸ், சிட்னி வெப் மற்றும் ஜோர்ஜ் பேர்னாட் ஷா போன்றவர்களுடன் பலமுறை இரவு உணவு விருந்திலும் கலந்து கொண்டார். ஸ்டேகர் கருத்துப்படி, இங்கிலாந்து தொழிலாளர்களின் நடைமுறைரீதியிலான மற்றும் பயன்பாட்டுரீதியிலான (utilitarian) கண்ணோட்டத்தால் எட்டப்பட்ட சமூக வெற்றிகளால் பேர்ன்ஸ்டைன் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் பிரிட்டிஷ் தொழிற் கட்சி தலைவர்கள் மற்றும் தாராளவாத முதலாளித்துவ பிரதிநிதிகளுக்கு இடையிலான நல்லுறவுக்கு பிரகாசமான வார்த்தைகளோடு விவாதித்தார், அத்துடன் "அதுபோன்ற சௌகரியமான நல்லுறவே" பிரித்தானியர்களின் அவ்வப்போதைய சீர்திருத்தவாதத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ததாக வாதிட்டார். பரிணமித்துவந்த பிரிட்டிஷ் உருவடிவம், முதலாளிகளுக்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் இடையே பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்க உடன்படிக்கைகளின் சாத்தியக்கூறை பேர்ன்ஸ்டைனுக்கு எடுத்துக்காட்டியது, அவரது புரிதல்களை அவரது ஜேர்மன் கட்சி தோழர்களுடன் பகிர்ந்து கொள்ள அவருக்கு தூண்டுதல் அளித்தது.5 பேர்ன்ஸ்டைன் மீது ஆதிக்கம்செலுத்தி வந்த பரந்த புத்திஜீவித மற்றும் அரசியல் சூழலின் ஒரு அம்சம் மட்டுமே, ஃபாபியன்கள் (Fabians) ஆவர். ஜேர்மனி மற்றும் மேற்கு ஐரோப்பா முழுவதிலும் சோசலிசத்தின் வேகமான வளர்ச்சி, அதன் மேலாளுமையை வெறுமனே அரச ஒடுக்குமுறை பிரயோகத்தினால் மட்டுமே தடுத்துவிட முடியாது என்பதை முதலாளித்துவத்திற்கு தெளிவுபடுத்தியது. மார்க்சிசத்தால் முன்வைக்கப்பட்ட புத்திஜீவித சவாலுக்கு விடையிறுப்புக் காட்டுவது அவசியமாக இருந்தது. இதனால், 1890களில், பல்கலைக்கழகங்கள் மார்க்சிசத்திற்கு எதிரான சித்தாந்த பாதுகாப்பு அரண்களாக ஒரு புதிய மற்றும் இன்றியமையாத பாத்திரத்தை ஏற்றன — அவை இன்றைய நாள் வரையில் அதை விட்டுவிடவில்லை. சோசலிச இயக்கத்தின் உரிமைகோரல்களை பொய்மைப்படுத்த மேற்கோளிடும் வகையில், பொருத்தமின்மைகள் மற்றும் பலவீனங்களுடன் மார்க்சின் எழுத்துக்கள் புனையப்பட்டன. புதிய கல்வித்துறைசார் "மார்க்சிச கொலையாளர்கள்" செல்வாக்கான அதிகார பிரமுகர்களாக மாறினர், அவர்களின் எழுத்துக்கள் பரந்தளவில் பாராட்டப்பட்டு, பிரசுரிக்கப்பட்டன. இதில் போஹ்ம்-பாவெர்க், துகான்-பாரானோவ்ஸ்கி, பெனெடெட்டோ கிரோசி, வெர்னர் சோம்பார்ட் மற்றும் மக்ஸ் வேபர் போன்ற பிரபலங்கள் இருந்தனர், குறைந்தளவே அறியப்பட்ட மற்றும் பெரும் செல்வாக்கு பெற்றிராத டஜன்கணக்கான எழுத்தாளர்களைக் குறித்து கூற வேண்டியதே இல்லை, இவர்கள் அனைவரும் தோற்றப்பாட்டளவில் மார்க்சிச தத்துவத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கு எதிராகவும் ஒரு பலமான தடுப்பணையை அமைத்து வைத்திருந்தனர். "சடத்துவரீதியிலான வாழ்வின் மீதான உற்பத்திமுறையானது சமூக, அரசியல் மற்றும் புத்திஜீவித வாழ்வின் பொதுவான நிகழ்வுபோக்கிற்கு நிபந்தனை விதிக்கிறது" மற்றும் சமூக முரண்பாடுகள் திட்டவட்டமான சித்தாந்த வடிவங்களால் பிரதிபலிக்கப்படுகிறது, போராடப்படுகிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்பை, இத்தகைய சிந்தனையாளர்களின் படைப்புகள், அவர்களின் சொந்த வழியில், உறுதிப்படுத்திக் காட்டின.6 மார்க்சை குறித்த இத்தகைய குட்டி-முதலாளித்துவ கல்வித்துறைசார் விமர்சகர்களின் எழுத்துக்கள் பேர்ன்ஸ்டைனின் எழுத்துக்களிலும் பிரதிபலித்தது. உண்மையில், அப்போதைய நாட்களில் பல்கலைக்கழகங்களில் சுழன்றுவந்த மார்க்சிச-விரோத வாதங்களோடு, பேர்ன்ஸ்டைன் அவரது சொந்த அரசியல் கௌரவம் தவிர்த்து, அவரும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டார் என்று கூறினாலும் மிகையாகாது. பேர்ன்ஸ்டைனின் கண்ணோட்டத்தில் இருந்த மாற்றத்தை ஏங்கெல்ஸ் உணரத் தொடங்கியதோடு, அவர் தன்னைக்குறித்து மிகை மகிழ்ச்சி அடைகின்ற ஒரு அற்பத்தனமான ஆங்கிலேய கடைக்காரரைப் போல மேலும் மேலும் கூச்சலிட்டு வருவதாக கண்டித்தார். ஏங்கெல்ஸ் வாழ்ந்திருந்த வரையில், அவர் பேர்ன்ஸ்டைனை தடுத்து வைத்திருந்தார். ஆனால் ஆகஸ்ட் 1895இல் அவர் மரணத்திற்குப் பின்னர், பேர்ன்ஸ்டைன் மார்க்சிசத்திலிருந்து தூர விலகும் நகர்வு மிகவும் வேகமாக இருந்தது. சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள் 1898இல் பேர்ன்ஸ்டைன் எழுதிய பல கட்டுரைகளில், அவர் SPD இன் தத்துவார்த்த மரபு மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தை மறுதலித்தார். இத்தகைய கண்ணோட்டங்களை அவர், சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள் என்ற அவரது நூலில் மிக விரிவாக விரித்திருந்தார். உள்முரண்பாடுகளால் கிழிபடும் ஓர் அமைப்புமுறையாக முதலாளித்துவம் குறித்த மார்க்சின் பகுப்பாய்வு, அவரது ஹெகலிய பயிற்சியின் ஒரு விளைபொருள் என்பதோடு, அனுபவரீதியில் காணக்கூடிய யதார்த்தத்துடன் அதற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அங்கீகரிக்கும் காலம் வந்துவிட்டது எனக் குறிப்பிடுகின்றார். முதலாளித்துவ அமைப்பு முறையின் ஒரு மிகப்பெரிய நெருக்கடி குறித்த சாத்தியக்கூறின் மீது தங்களின் தந்திரோபாயங்களை அமைப்பது சோசலிஸ்டுகளுக்கு அபாயகரமான தவறாகும். மாறாக, நிலவும் அனைத்து ஆதாரங்களும், முதலாளித்துவம் நடைமுறையில் முற்போக்கான அபிவிருத்திக்கான அனைத்து சாத்தியக்கூறையும் கொண்டிருப்பதையும்; மற்றும் இது முற்றிலும் இயல்பாகவும், ஜனநாயகரீதியிலும் மற்றும் அமைதியாகவும் சோசலிசத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பதையும் காட்டுகின்றன. முதலாளித்துவத்தின் உள்முரண்பாடுகளால் உருவாக்கப்படும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து சோசலிசம் எழுச்சிபெறும் என்று தொடர்ந்து வாதிடும் துரதிருஷ்டவசமான மார்க்சிஸ்டுகளுக்கு, அவர்களை சமகாலத்திய வாழ்வின் உண்மைகளை முகங்கொடுக்க இலாயகற்று செய்யும் ஒரு நோய், பாதித்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார். முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்கு இட்டுச் செல்கிறது என்ற மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் தவறான நம்பிக்கை, இல்லாத பொருளாதார முரண்பாடுகளைக் குறித்த அவர்களின் தவறான நிர்ணயத்திலிருந்து ஊற்றெடுப்பதாக அவர் வாதிட்டார். தேசிய வருவாயில் தொழிலாளர்களின் பங்கை சீராக அதிகரிப்பதில் தொழிற்சங்கங்கள் தகைமை பெற்றிருந்ததை அவையே நிரூபித்திருந்ததாக பேர்ன்ஸ்டைன் வாதிட்டார். உழைப்பின் மதிப்பு குறித்த தத்துவமும் மற்றும் அதன்படி தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டலை அது விஞ்ஞானபூர்வமாக எடுத்துக்காட்டுகிறது என்ற மார்க்ஸின் வலியுறுத்தலையும் பொறுத்த வரையில், அதுவும் குப்பையில் போட வேண்டிய மற்றொரு பழைய தத்துவார்த்த மூட்டையாக இருந்ததென பேர்ன்ஸ்டைன் வாதிட்டார். முதலாளித்துவ உற்பத்திமுறையில் உபரிமதிப்பு உற்பத்தியின் இயற்கூறான சுரண்டும் பண்பை எடுத்துக்காட்டுவதற்கு அங்கே என்ன தேவை இருந்தது? என்று பேர்ன்ஸ்டைன் வினவினார். மதிப்பின் உருவாக்கம் தொடர்பான பிரச்சினையில் இருந்த இந்த கருத்துவெறி, தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் தேசிய சட்டவாக்கங்கள் மூலமாக தேசிய வருமானத்தில் இன்னும் நியாயமான பங்கீட்டை அடைவதற்குரிய கோரிக்கைகளை நெறிப்படுத்துவதற்கு மாறாக, சோசலிச இயக்கம் அதன் கோபத்தை முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு எதிராக ஒன்றுதிரட்ட இட்டுச் செல்கிறது என்றார். தொழிலாள வர்க்கத்தின் நீண்டகால நலன்களை புரட்சியின் மூலம் பெற முடியாது, மாறாக தொழிற்சங்கங்கள் மூலமாக ஆதாயங்களை ஒரேசீராக மற்றும் படிப்படியாக அதிகரிப்பதன் மூலமாகவே பாதுகாக்க முடியுமென்பதை பேர்ன்ஸ்டைன் பேணி வந்தார். “புரட்சிகர அரசியலை தவிர வேறெந்த நடவடிக்கையும் உபயோகமற்றதென்பதை நடைமுறையில் எடுத்துக்காட்டுவதற்குரிய ஒரு புறரீதியிலான-பாடம் என்பதை தவிர, தொழிற்சங்கங்கள் வேறொன்றுமில்லை" எனக் கருதிய, "சில சோசலிஸ்டுகளை" அவர் கடிந்துரைத்தார்.7 பேர்ன்ஸ்டைனை பொறுத்த வரையில், முதலாளித்துவத்தின் வேண்டாத கூறுபாடுகளை இல்லாதொழிப்பதற்கு தொழிற்சங்கங்களே கருவிகளாக இருந்தன: “சமூகபொருளாதாரத்தில் அவை கொண்டிருக்கும் நற்பேறின் காரணமாக, தொழிற்சங்கங்கள் தொழில்துறையில் ஜனநாயக உட்கூறுகளாக உள்ளன. மூலதனம் முற்றுமுதலான சக்தியைப் பெறவியலாமல் செய்து, தொழில்துறை நிர்வாகத்தில் நேரடியாக தொழிலாளருக்கு செல்வாக்கை அளிப்பதே அவற்றின் தன்மையாகும்.”2 அதேவேளையில் தொழிற்சங்கங்கள் நிறைய அதிகாரத்தைக் கோரக்கூடாது, மூலதனத்துடன் பங்காளியாவதல்ல, தொழில்துறை மீது கட்டுப்பாட்டை வைத்திருப்பதே அவற்றின் நோக்கமாகும் என்றளவுக்கு, தொழிற்சங்கங்களின் பாத்திரம் குறித்து பேர்ன்ஸ்டைன் தவறான புரிதலைக் கொண்டிருந்தார். பேர்ன்ஸ்டைனை பொறுத்த வரையில், அரசு என்பது வர்க்க ஆட்சியின் ஒரு கருவி என்ற மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் கருத்துரு, அவர்களின் மற்றொரு பிழையாக இருந்தது. அவர் இவ்வாறு வாதிட்டார்: ஒரு ஜனநாயக அமைப்புமுறையில் அரசு என்பது பொது நலனுக்கு சீராக வேலை செய்து, ஒட்டுமொத்த குடிவாசிகளின் பிரதிநிதியாக செயல்பட முடியுமென்பதை இங்கிலாந்து முன்னுதாரணமாக நிரூபிக்கிறது. தற்போது நிலவும் அரசு முறையை, நிர்மூலமாக்குவது ஒருபுறம் இருக்கட்டும், பிரதியீடு செய்வது கூட தொழிலாள வர்க்கத்தின் நோக்கமாக இருக்கக்கூடாது, மாறாக ஓர் அதிஉயர்ந்த-வர்க்க ஜனநாயகத்தின் இன்னும் அதிக துல்லியமான கருவியாக அதை மாற்றுவதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும். உண்மையில் தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த வர்க்க ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டிய அவசியமே இல்லை, அதை பின்தொடரவும் கூடாது. நாகரீகமான அரசியல் சம்பாஷணையில் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற வார்த்தைக்கே இடமில்லை: விவகாரத்தின் குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பொருத்தமுடைய ஆனால் நேர்மை உணர்வையோ ஒழுக்க நெறியையோ சார்ந்திராத தன்மை மற்றும் நடைமுறைத் தன்மையின் கேள்விக்கு அப்பாற்பட்டு, பிரச்சாரம் செய்யும் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தற்போதைய வழிமுறைகள் பற்றி கருத்துக்கள் எதுவுமற்ற அல்லது ஒரு பொருத்தமற்ற கருத்தை கொண்டிருக்கும் மற்றும் அந்த நோக்கத்திற்கு அமைப்புரீதியில் தகுதி இராத ஒரு காலகட்டத்தில், ஏற்புடையதாகக் கருதப்படும் நடத்தைமுறையில் முதலாளித்துவத்திலிருந்து சோசலிச சமூகத்திற்கு இடைமருவுவது கட்டாயம் தேவையான வகையில் நிறைவேற்றப்படமுடியும் என்ற கருத்தை அது ஊக்கப்படுத்தினால், அரசியல் முதுமரபு மீட்சி என்றவகையில் அது பினோக்கிய அடிவைப்பாக மட்டுமே கருதப்பட முடியும். ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களின் உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கும் ஓர் அரசியல் வடிவமாகும், மனித விவகாரங்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நவநாகரீகத்தின் மீதான எல்லையில்லா ஆச்சரியத்தோடு அவர் பேசினார்: நமது காலகட்டத்தில், தனிநபர் சுதந்திரத்திற்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும் எந்த சட்டத்தையும் ஒரு ஜனநாயக சமூகத்தின் பெரும்பான்மை உருவாக்காது என்பதற்கு அங்கே ஏறத்தாழ நிபந்தனையற்ற உத்தரவாதம் உள்ளது. ... உண்மையில், ஒரு நவீன அரசில் எந்தளவுக்கு நீண்டகாலத்திற்குரிய ஜனநாயக தகவமைப்புகள் நிலவுகிறதோ, அந்தளவுக்கு சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான மதிப்பும், கவனிப்பும் அதிகரிக்கிறது என்பதோடு, நிறைய கட்சி மோதல்கள் அவற்றின் பகைமையை இழந்து விடுகின்றன என்பதை அனுபவம் காட்டியுள்ளது. வன்முறையின்றி சோசலிசத்தை எட்டுவதைக் குறித்து கற்பனையும் செய்யவியலாமல் இருப்பவர்கள், இதை ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு வாதமாக பார்ப்பார்கள்...10 ... ஒரு ஜனநாயகத்தில், கட்சிகளும் அவற்றை ஆதரிக்கும் வர்க்கங்களும் விரைவிலேயே அவற்றின் அதிகார வரம்புகளை உணரத் தெரிந்து கொள்கின்றன, மேலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அந்தந்த சூழ்நிலைகளின் கீழ் அவை எந்தளவுக்கு சாதிக்க முடியுமென நம்புகின்றனவோ அந்தளவுக்கே அவற்றைக் கையிலெடுக்கவும் தெரிந்து கொள்கின்றன. தவிர்க்கவியலாத சமரசங்களில் —ஜனநாயகம் என்பதே சமரசம் எனும் பாடசாலை தானே— விட்டுக்கொடுப்புகளை வழங்குவதற்காக, அவர்களின் அத்தியாவசிய தேவைப்பாடுகளையும் விட அதிகமாக அவை கோருகின்றன என்றாலும் கூட, அது மிதமான நிதானத்தோடு செய்யப்படுகிறது.11 இங்கிலாந்து ஒரு விதிவிலக்கான விடயமென்பதையோ; ஜனநாயக மந்திரமெல்லாம் ஜேர்மனியில் செயற்படுவதற்கான சாத்தியம் குறைவு என்பதையோ பேர்ன்ஸ்டைன் நம்பவில்லை. ஜேர்மன் முதலாளித்துவத்தின் மாற்றமுடியாத பிற்போக்கு குணாம்சத்தை குறித்த SPDஇன் வலியுறுத்தல் தவறென அவர் வாதிட்டார். “இது இந்த தருணத்தில் வேண்டுமானால் அனேகமாக நிஜமாக இருக்கலாம், இருப்பினும் அதற்கு முரணாக அங்கே நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறிருந்தாலும், அதனால் நீண்டகாலம் அங்கே நீடிக்க முடியாது."12 SPD சமூக புரட்சியைக் கொண்டு அச்சுறுத்துவதை நிறுத்தினால் மட்டுந்தான், ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயக சீர்திருத்த கோரிக்கைகளுக்கு மேலதிகமாக இயைந்து கொடுக்கும் என்பதை நிரூபிக்கும். “பாட்டாளி வர்க்கம்-அல்லாத ஒட்டுமொத்த உலகிற்கும் எதிராக ஒரு வன்முறை புரட்சியை அது உத்வேகப்படுத்தாது" என்பதை முதலாளித்துவத்திற்கு மறுஉத்தரவாதம் அளிப்பதே அக்கட்சியின் பணியாகும்.13 இதை செய்து முடித்தால், உடனே, SPDஐ குறித்த முதலாளித்துவத்தின் அச்சம் "முறிந்து போகும்", அத்துடன் அது பிரஷ்ய வரம்பிலா ஆட்சியில் உள்ள நிறைய பிற்போக்குத்தன உட்கூறுகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்துடன் "பொதுவான பாதையை" ஏற்படுத்திக் கொள்ள தயாராகிவிடும். இவ்விதத்தில், அதன் புரட்சிகர புனைவுகளை ஒதுக்கி வைக்குமாறும், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸை நிலைநோக்கு பிறழ செய்த ஹெகலிய நியதிவாதத்திலிருந்து விடுவித்துக் கொண்டு, சோசலிசம் என்பதே உண்மையில் முரண்பாடற்ற தாராளவாதமே என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுமாறும் பேர்ன்ஸ்டைன் SPDஐ வலியுறுத்தினார்: உண்மையில், சோசலிச புத்திஜீவித சாதனத்தின் பாகமாக இல்லாத, தாராளவாத சிந்தனையே கிடையாது. தனிநபர்களுக்கான அவரவரது பொருளாதார கடமைப்பாடு கோட்பாடே கூட, இது முற்றிலுமாக மான்செஸ்டரியமாக (Manchesterish) தெரிந்தாலும், என்னுடைய தீர்மானத்தின்படி, அது சோசலிச தத்துவத்தில் மறுக்கப்படுவதில்லை, அல்லது அதை தற்காலிகமாக ஒதுக்கித்தள்ளும் எந்தவொரு கருதத்தக்க சூழ்நிலைகளே கூட இல்லை. கடமைப்பாடு இல்லாமல் அங்கே சுதந்திரம் என்பது இல்லை.14 பேர்ன்ஸ்டைன் முதலாளித்துவ இராணுவவாதத்திற்கு எதிரான சோசலிச எதிர்ப்பை வெறுப்போடு புறக்கணிக்கும் அளவுக்குச் சென்றார். அவர் காலனித்துவத்தையும் கோட்பாட்டுரீதியில் எதிர்க்கவில்லை. அவர் எழுதினார், ஐரோப்பிய ஆட்சியின் கீழ் "காட்டுமிராண்டித்தனங்கள் எவ்வித விதிவிலக்குமில்லாமல், அவை அதற்கு முன்னர் இருந்ததையும்விட எவ்வளவோ மேலானவை..."15 இந்த விதி அமெரிக்க இந்தியர்களுக்குமே கூட பொருந்தும்: “இந்தியர்கள் மீது முன்னர் என்னதான் தவறுகள் நடத்தப்பட்டிருந்தாலும், இன்றைய நாட்களில் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன, மேலும் அந்த உரிமைகளது எண்ணிக்கை குறையவில்லை, மாறாக மீண்டுமொருமுறை அதிகரித்தே வருகிறது என்பது நன்கறிந்த உண்மையாகும்."16 ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பேராசைக்கு எதிரான உறுதியான சோசலிச எதிர்ப்பைப் பொறுத்த வரையில், பேர்ன்ஸ்டைன், “உண்மையில் அது அதற்காகவே பிறந்திருப்பதுடன், மற்றும் தேசங்களின் நாகரீகமாக்கும் பணியில் அதன் நியாயமான பங்கை இன்னமும் தாங்கி நிற்பதால்" தேசங்களின் சங்கங்களில் (council of nations) ஜேர்மன் தேசம் விலகி நிற்கவேண்டுமா என்பது சமூக ஜனநாயகத்திற்கு உதாசீனமான விடயமாக இருக்ககூடாது" என்று வாதிட்டார்.17 கெய்சரின் நிரந்தரப்படையை, மக்கள் படைப்பிரிவைக் கொண்டு பிரதியீடு செய்ய வலியுறுத்துவதிலும் SPD சரியென்று ஆகாது, இராணுவம் என்றென்றைக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு வன்முறை அச்சுறுத்தலே என்ற அதன் எச்சரிக்கைகள் நிஜமாகவே வழக்கொழிந்து போனவையாகும்: பேர்ன்ஸ்டைன் எழுதினார், “அதிருஷ்டவசமாக, அரசியல் கருத்துவேறுபாடுகளை தீர்ப்பதில் ஆயுத தளவாடங்களை பிரயோகிப்பதை விட ஏனைய வழிகள் நமக்கு பெரிதும் பழக்கமாகி வருகின்றன."18 ஓர் அரசியல் தத்துவவாதியாக மற்றும் மூலோபாயவாதியாக பேர்ன்ஸ்டைனின் நன்மதிப்பை அவர் எழுதிய எழுத்துக்களை விட வேறெதுவும் இந்தளவுக்கு சேதப்படுத்தாது. அவருடைய எழுத்துக்களிலிருந்து ஸ்டேகரால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து முன்வைக்கப்பட்டவை கூட பேர்ன்ஸ்டைனின் புத்திஜீவித அந்தஸ்தை உயர்த்தவில்லை (மேலும் நான் மேற்கோளிட்டுள்ள பத்திகள் ஸ்டேகரின் சுயசரிதையில் தென்படவில்லை). சமகாலத்திய மார்க்சிஸ்டுகளுக்கு ஏதேனும் ஒரு ஆச்சரியம் இருக்கிறதென்றால், அது பேர்ன்ஸ்டைனின் வாதங்களில் இருக்கும் உயிரூட்டமற்ற தன்மை ஆகும். “உண்மையில் இந்த வெதுவெதுப்பான நீராகாரம் தான், மார்க்சிசத்தின் ஒரு மறுப்புரையாக காட்டப்பட்டதா?" என்று ஒருவர் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது நாட்களினது தீவிரமான மற்றும் குழப்பமான போக்குகளின் மீது பேர்ன்ஸ்டைனின் கூர்ந்தறியும் திறமையின்மைக் குறித்து ஒருவர் ஆச்சரியப்படுவதை தவிர வேறுவழியில்லை. பேர்ன்ஸ்டைனுக்கு இசையின் மீது ஆர்வம் இருந்ததா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவரது சமகாலத்தியவர்களில் ஒருவரான குஸ்தாவ் மாஹ்லெரின் சிம்பொனிகளைக் கேட்டு அவர் பயனடைந்திருக்ககூடும். பேர்ன்ஸ்டைனினது சொந்த படைப்புகளில் முற்றிலும் இல்லாதிருந்த ஏதோவொன்றை மாஹ்லெரின் படைப்பில் கண்டுபிடித்திருக்கக்கூடும்: அதாவது, முதலாளித்துவ நாகரீகத்தையும் விஞ்சி சென்று கொண்டிருந்த அவலங்களின் ஒரு முன்னுணர்தலை அவரிடம் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் மீண்டும் இவர், லியோனார்ட் பேர்ன்ஸ்டைன் அல்ல, பேர்ன்ஸ்டைன் எட்வார்ட் ஆவார், மனக்கவலைகளால் பாதிக்கப்பட்ட அந்த ஆஸ்திரிய இசையமைப்பாளரின் படைப்பிலிருந்து அவர் நிறைய விஷயங்களை எடுத்துக் கொண்டிருப்பார் என நான் ஐயுறுகிறேன். நான் மேற்கோளிட்டுள்ள பத்திகள் எழுதப்பட்டபோது, எட்வார்ட் பேர்ன்ஸ்டைனால் நினைத்தும் பார்க்க முடியாததாக கருதிய அதே பேரழிவு வெடிப்பதற்கு, வெறும் பதினைந்து ஆண்டுகள் மட்டுமே இருந்தன — காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு சகாப்தத்தை தொடங்கி வைத்த அந்த பேரழிவின் பயங்கரங்கள் வரலாற்றில் ஈடிணையின்றி இருக்கின்றன. முதலாளித்துவ அபிவிருத்தி போக்கு, மேலதிகமாக ஜனநாயகத்தின் திசையிலோ, வர்க்க விரோதங்களை சீர்ப்படுத்தும் திசையிலோ செல்லவில்லை, மாறாக பாரிய ஒடுக்குமுறை மற்றும் உள்நாட்டு யுத்தத்திற்கு இட்டுச் சென்றது. எதிர்காலத்தை நோக்குகையில், குறுகிய பார்வையுள்ள எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் ஜனநாயகத்தின் வானவில்லை மட்டுமே பார்த்தார், முள்கம்பியிட்ட பதுங்குகுழிகள் மற்றும் சித்திரவதை கூடங்களை முற்றிலுமாக தவறவிட்டிருந்தார். பேர்ன்ஸ்டைனின் மற்றும் அவரது சமகாலத்தியவர்களின் எழுத்துக்களில் சந்தர்ப்பவாதம் அதன் மிக உயர்ந்த வெளிப்பாட்டைக் கண்டது. அதற்குப் பிந்தைய தசாப்தங்களில், அடுத்தடுத்து வந்த சந்தர்ப்பவாத பேரலைகள் ஏற்கனவே பேர்ன்ஸ்டைனியர்களால் என்ன கூறப்பட்டிருந்ததோ, அதில் வேறெந்த நிஜமான முக்கியத்துவத்தையும் சேர்க்கவில்லை. மிகமிகக் குறைந்த மட்டத்திலான தத்துவார்த்த சுய-நனவைக் கொண்டிருக்கும் நம்முடைய சொந்த காலகட்டத்தில், மார்க்சிசத்திற்கு எதிரான வாதங்கள் வெறுமனே பேர்ன்ஸ்டைனால் வளர்த்தெடுக்கப்பட்ட வாதங்களேயே, பெரிதும் அவை அவற்றின் தரத்தில் சுருங்கி போயிருந்தாலும் கூட, அவற்றையே மீள்உற்பத்தி செய்கின்றன. இதனால், ஒரு நூற்றாண்டு கடந்த பின்னரும் கூட, பேர்ன்ஸ்டைனின் தத்துவார்த்த கருத்துருக்களை ஆராய்கையில், ஒருவர் ஒட்டுமொத்த சமகாலத்திய மார்க்சிச-விரோத தொகுப்புகளை கையாள வேண்டியவராகிறார். மனிதன் என்பவன் ஒரு உருவாக்கமே |