Home

Print Version

 

The world capitalist crisis and the tasks of the 4th international.
நான்காம் அகிலத்தின் ஐம்பது ஆண்டுகள்

சர்வதேசியமும்,பாட்டாளிவர்க்கமும்

முதலாளித்துவ நெருக்கடியும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையும்

நான்காம் அகிலமும் சந்தர்ப்பவாதமும்

சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று கணக்கெடுப்பு

ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றி பப்லோவாதம்

சோவியத் யூனியன் இன்று

நிரந்தரப்புரட்சித் தத்துவம் ஊர்ஜிதம்

ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஜப்பான்,ஐரோப்பாவும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சியும்

ஏகாதிபத்தியமும் ஆசிய பசுபிக்கரையும்

பின்தங்கிய நாடுகளின் வறுமை

உலகக் கடனின் பெருக்கம்

ஏகாதிபத்திய யுத்தத்திற்கெதிரான போராட்டம்

அனைத்துலகக்குழுவும் மார்க்சிசத்துக்கான போராட்டமும்

 

 

The Struggle against Imperialist War.

ஏகாதிபத்திய யுத்தத்திற்கெதிரான போராட்டம்

155. தேசிய அரசு அமைப்பு முறையின் வரையறைகளுக்கு எதிரான உலகப் பொருளாதாரத்தின் உற்பத்தி சக்திகளின் முரண்பாடானது, ஓர் மூன்றாவது ஏகாதிபத்திய உலக யுத்த அச்சுறுத்தலை முன்வைப்பதுடன், இதற்கான பதிலீடு சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற கேள்வியை மனித சமுதாயத்தின் முன்வைக்கின்றது. இந்நூற்றாண்டில் இரு தடவைகள் 1914 - 1918 லும் மீண்டும் 1939-1945 லும் கோடானுகோடி மனிதர்களை நாசமாக்கிய இராணுவப் பேரழிவுகளுக்குள் ஏகாதிபத்தியம் மனித இனத்தை மூழ்கடித்தது. அத்தோடு கடந்த நான்கு தசாப்தகால ''சமாதானத்தின்'' போது ஏகாதிபத்தியம் பூகோளத்தின் மீது கொண்டிருந்த பேராதிக்கம் எண்ணற்ற ''சிறிய யுத்தங்களுக்கு'' காரணமாகியது. இவற்றில் மேலும் பல லட்சம் பேர் அழிந்தனர். இன்று அணு ஆயுதங்களின் இருப்புடன், உலகச் சந்தையை மறுபங்கீடு செய்வதற்கான மற்றொரு யுத்தம் எனும்போது அது மனித இனத்தின் நாகரீகத்தின் மரணத்தையே குறிக்கின்றது. உலக வளங்களின் பெரும்பாகம் அழிவுச் சாதனங்களை உற்பத்தி செய்வதற்கே வீணடிக்கப்படுகின்றது. 1972 ல் 30,000 கோடி டாலர்களாக இருந்த அனைத்துலக ஆயுத செவீனங்கள் இன்று 1,00,000 கோடி டாலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.

156. ஒன்றில் தொழிலாளர் வர்க்கம் உலகப் பொருளாதாரத்துக்கும் தேசிய அரசுக்கும் இடையேயான இந்த முரண்பாட்டினை, முதலாளித்துவ வர்க்கத்தினைத் தூக்கிவீசி சமூக உடமையின் அடிப்படையில் முழு பூகோளத்தினதும் உற்பத்தி சக்திகளை மறுசீரமைப்புச் செய்வதன் மூலம் ஒரு முற்போக்கான முறையில் தீர்த்து வைக்கலாம். அல்லது முதலாளித்துவம் தனது சொந்தத் தீர்வுகள் மூலம்; உற்பத்தி சக்திகளை பேரழிவுக்கு உள்ளாக்குவதன் மூலமும் மனித இனத்தை அழிப்பதன் மூலமும் தீர்வுகாண முயலும். முதலாம் உலக யுத்தத்துக்கான அடிப்படைக் காரணமாக ட்ரொட்ஸ்கி குறிப்பிட்ட பின்வரும் விளக்கம் எந்தவொரு எதிர்கால யுத்தத்துக்கும் பொருத்தமான மூலவிளக்கமாக உள்ளது: "இன்றைய இரத்தம் தோய்ந்த மோதுதல், தேசிய பாதுகாப்புக்கான ஒரு நடவடிக்கை என்ற சகல பேச்சுக்களும் ஒன்றில் பாசாங்கானது அல்லது கண்மூடித்தனமானது. மாறாக யுத்தத்தின் நிச புறநிலை முக்கியத்துவமானது இன்றைய தேசியப் பொருளாதார மத்திய நிலையங்களின் வீழ்ச்சியும், அதற்குப் பிரதியீடாக ஒரு உலகப் பொருளாதாரத்தை பதிலீடு செய்வதுமேயாகும். ஆனால் ஏகாதிபத்தியத்தின் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கங்கள் பிரேரிக்கும் வழிகள் சகல மனித இன உற்பத்தியாளர்களதும் புத்திசாதுரியமான ஒழுங்கமைக்கப்பட்ட வழிகளூடாக அல்லாமல், வெற்றியீட்டிய நாட்டின் முதலாளித்துவ வர்க்கம் உலகப் பொருளாதார முறையைத் தாம் சுரண்டுவதன் மூலமாகவே, அந்நாடு இந்த யுத்தத்தினால் ஒரு பெரும் சக்தி என்ற நிலையில் இருந்து ஒரு உலக சக்தியாக மாற்றம் செய்யப்படும்." (யுத்தமும் அனைத்துலகமும்.)

157. தனது பொருளாதார மேலாதிக்க இழப்புக்கள் இருந்த போதிலும் அமெரிக்கா தொடர்ந்து இராணுவரீதியாக மிகச் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய நாடாக இருப்பதோடு, உலக பொலீஸ்காரன் பாத்திரத்தையும் தனக்கு ஒதுக்கிக்கொண்டுள்ளது. ஆனால் 1945 ல் 'அமெரிக்க நூற்றாண்டு' எனப்பட்டதன் தொடக்கத்தில் நிலவிய நிலைமைகள் பெருமளவில் மாற்றப்பட்டுள்ளது. பெரும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையே ஒரு சமயம் தனது வார்த்தையையே ''சட்டம்'' ஆக்கிய பொருளாதார முதன்மையை அது இழந்துவிட்டது என்ற உண்மையானது, அமெரிக்காவை முன்பைவிட தனது இராணுவ பலத்தின் காட்டுமிராண்டித்தனமான சக்தியில் தங்கியிருக்கும்படி நிர்ப்பந்தித்துள்ளது. ட்ரொட்ஸ்கியினது மற்றுமோர் முன்னறிவிப்பு ஊர்ஜிதமாகப் போகின்றது. ''உலகம் பிளவுபட்டுள்ளது? இது கட்டாயம் மீளவும் பிளவுபடுத்தப்படும், ஜேர்மனியைப் பொறுத்தமட்டில் இது 'ஐரோப்பாவை அணிதிரட்டும்' பிரச்சினையாக விளங்கியது. அமெரிக்கா உலகினைக் கட்டாயம் 'அணிதிரட்ட' வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்திய எரிமலையின் வெடிப்பில் நேருக்குநேர் சந்திக்கும்படி வரலாறு மனித இனத்தைக் கொண்டு வந்துள்ளது.'' (யுத்தமும் நான்காம் அகிலமும் 1934)

158. யுத்தத்துக்கான அமெரிக்காவின் உந்துதல் அதன் ஏகாதிபத்திய போட்டியாளர்களுக்கு எதிராகக் கிளப்பப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவினதும், உலகினதும் ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகர எழுச்சிக்கு எதிராகவும் அது திருப்பப்பட்டுள்ளது. மற்றும் ஏகாதிபத்தியத்தின் நேரடிச்சுரண்டலில் இருந்து 1\6 பங்கு பூமிப்பரப்பை 1917 ல் நீக்கிய சோவியத் யூனியனின் உருவாக்கத்திற்கு எதிராகவும் கிளப்பப்பட்டுள்ளது.

159. கிளோஸ்விட்ஸ் குறிப்பிட்டதுபோல் யுத்தம் என்பது வேறுவழிகளில் அரசியலைத் தொடர்வதாகும். இவ்வாறாக யுத்தம் சம்பந்தமான எமது நிலைப்பாடு அதைத் தொடுத்து வரும் அரச சக்திகளின் வர்க்கப் பண்பினால் நிர்ணயம் செய்யப்படுகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் நடத்தப்படும் எந்தவொரு யுத்தத்திலும் ''முதல் வேட்டினை'' யார் சுடுகிறார்கள் என்பதைப்பற்றி சட்டை செய்யாமல் வேர்க்கஸ் லீக்கின் நிலைப்பாடு 'ஒரு புரட்சிகர தோற்கடிப்புவாதமேயாகும்' ஏகாதிபத்திய நாடுகளில் தொழிற்படும் அனைத்துலகக்குழுவின் பகுதிகள் தமது நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் யுத்த தந்திரம் தொடர்பாக இதே போக்கையே கடைப்பிடிக்கும். ஜப்பான், ஜேர்மனி, அமெரிக்கா இவற்றுக்கிடையேயான புதிய யுத்தம் உலக மேலாதிக்கத்தின் பொருட்டு வேறுபட்ட ஏகாதிபத்திய மாஃபிய தேசிய குழுக்களுக்கு இடையே நடைபெறும் ஒரு போரினையே குறிக்கும். பாட்டாளி வர்க்கத்தின் சுதந்திரமான நலன்களை அடிப்படையாகக் கொண்டு அனைத்துலகக் குழு அத்தகைய ஒரு யுத்தத்தின் தன்மையை சளைக்காது அம்பலப்படுத்தி ''தேசிய பாதுகாப்புக் கொள்கை'' என்பது தொழிலாளர் வர்க்கத்தை ஏமாற்றும் மோசடியென அது எதிர்க்கும். புரட்சிகர தொழிலாளர்கள் யுத்தத்திற்கு எதிராக தமது வர்க்கத்தை அணிதிரட்டப் போராடியாக வேண்டும். இம் முயற்சிகளுக்கு இடையேயும் யுத்தம் வெடிக்குமானால் வர்க்க நனவுள்ள முன்னணிப்படை தமது சொந்த முதலாளித்துவ வர்க்கத்தைத் தோற்கடிக்க கட்டாயம் செயற்பட வேண்டும். அத்தோடு யுத்தவெறியர்களைத் தூக்கிவீசும் பொருட்டு போர்க்காலத்தின் உக்கிரம் கண்ட அரசியல் முரண்பாடுகளைப் பயன்படுத்தவேண்டும்.

160. முழு பூகோளத்தின் மீது ஏகாதிபத்தியம் கொண்டுள்ள மேலாதிக்கம் பின்தங்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் பண்பாட்டு அபிவிருத்தியில் பெரும் தடைக்கல்லாக அமைந்துள்ளது. அரச எல்லைகளை உடைத்தெறிவதும் ஆபிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்காவை பலம்வாய்ந்த இணைப்புக்களுள் கொண்டுவருவதன் மூலம், ஒடுக்கப்படும் மக்களை ஐக்கியப்படுத்துவதும் உண்மையான முன்னேற்றத்துக்கான இன்றியமையாத முன்நிபந்தனைகளாகும். ஆனால் இந்த மிகப் பிரமாண்டமான வரலாற்றுப் பணியினை பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் வெகுஜனங்களை அணிதிரட்டுவதன் ஊடாக மட்டுமே யதார்த்தமாக்க முடியும். இதேசமயம் பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவக் கும்பல்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தைச் சீர்குலைக்கவும், பிராந்தியத்தினை ஐக்கியமற்ற குழப்ப நிலையில் வைத்திருக்கவும் தமது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்கின்றனர். இதற்கான அவர்களது முக்கிய கருவிகளில் ஒன்று தேசியவாதமாகும். இது ஒடுக்கப்படும் மக்களின் நியாயமான ஏகாதிபத்திய எதிர்ப்பின் விரக்தியில் உருவாகிய ஒரு நச்சுத்தன்மையான விளைபொருளாகும். ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையேயான ரத்தம் தோய்ந்த மோதுதல் போன்ற இரண்டு ஒடுக்கப்படும் நாடுகளுக்கு இடையேயான ரத்தம் தோய்ந்த மோதுதல் போன்ற இரண்டு ஒடுக்கப்படும் நாடுகளுக்கு இடையேயான சகோதரரைக் கொல்லும் யுத்தங்கள், அரசியல், பொருளாதார ஐக்கியத்துக்கான வரலாற்று முயற்சிகளின் உருக்குலைக்கப்பட்ட வெளிப்பாடுகள் ஆகும். மேலும் இந்த யுத்தம் கடந்தகாலத்தில் இந்தியா, பாகிஸ்தானுக்கிடையேயான யுத்தத்தைப் போன்று வெகுஜனங்களை அரச இயந்திரத்துடன் கட்டிப்போடும் முதலாளித்துவ வர்க்கத்தின் தேவைக்கு சேவை செய்கின்றது. இவ்வாறான யுத்தங்களில் தமது சொந்த முதலாளித்துவத்தின் கொள்கைகளுக்கு பூரணமாக எதிர்ப்பு தெரிவிப்பதே தொழிலாளர் வர்க்கத்தின் கடமையாகும்.

161. சோவியத் யூனியன் உருக்குலைந்த ஒன்றாக இருந்தபோதிலும் நாம் ஒரு தொழிலாளர் அரசாகக் கணிக்கும் வரையில் அமெரிக்காவாலோ அல்லது வேறு எந்த ஏகாதிபத்திய சக்திகளாலோ அதற்கு எதிராகத் தாக்குதல் இடம்பெறும் சமயத்தில், சோவியத் யூனியனைக் காக்குமாறு அனைத்துலகக்குழு தொழிலாளர் வர்க்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றது. வெடிப்புக்கு இட்டுச் செல்லும் உடனடி சூழ்நிலைகளைக் கருதாது, அத்தகைய ஒரு யுத்தத்தில் பிரச்சினைக்கு உரிய விடயம் 1917 அக்டோபர் புரட்சி மூலம் உருவாக்கப்பட்ட தொழிலாளர் அரசின் நீடிப்பும் அதன் நீடித்து நிற்கும் சமூகத் தேட்டங்களான தேசியமயமாக்கப்பட்ட சொத்துறவுகளேயாகும். சீனா, வியட்னாம், கிழக்கைரோப்பிய நாடுகள் தொடர்பாகவும் நாம் இதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளோம். இவற்றினை ட்ரொட்ஸ்கிச இயக்கம் உருக்குலைந்த தொழிலாளர் அரசுகளாக இனம் காண்கின்றது. எவ்வாறெனினும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரூஷ்யாவையும், சீனாவையும் பாதுகாப்பதானது, அதன் ஸ்ராலினிச தலைமைகளுக்கு எந்தவொரு அரசியல் ஆதரவை வழங்குவதையோ அல்லது இந்த உருக்குலைந்த அல்லது சீரழிந்த தொழிலாளர்அரசு எடுக்கும் எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் அனைத்துலகக் குழு ஆதரவளிக்கும் என்பதையோ குறிக்காது. உதாரணமாக அனைத்துலகக்குழு சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்தது. இது ஒரு சிறிய தேசத்தின் மீதான கர்வம் நிறைந்த பிற்போக்குத் தாக்குதலாகும்.

162. வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடுகள்மீது, அதாவது மத்திய அமெரிக்கா, தென்அமெரிக்கா, கரீபியன் நாடுகள் ஏனைய சகல அரைக்காலனித்துவ நாடுகள் ஆகியவற்றின் மீதான அமெரிக்காவினதோ, அல்லது வேறு ஏகாதிபத்திய நாட்டினதோ தாக்குதல், அனைத்துலகக்குழுவினதும், வேர்க்கஸ் லீக்கினதும் அதே இணக்கமற்ற எதிர்ப்பினை உடன் வேண்டிநிற்கும். அத்தகைய யுத்தத்தில் நாம் அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் நலனின் பேரில் ஒடுக்கப்படும் நாட்டின் வெற்றியையே வேண்டுவோம். ஒடுக்கப்படும் தேசங்களின் போராட்டங்களைப் பொறுத்தமட்டில் யுத்தம் தொடர்பான மார்க்சிஸ்டுகளின் அணுகுமுறை, முதலாளித்துவ ஒடுக்குதலையும் தொழிலாளர் வர்க்கத்தினதும், தேசியவிடுதலை இயக்கங்களினதும் உக்கிரமான எதிர்த்தாக்குதலையும் ஒரேவிதத்தில் கண்டனம் செய்கின்ற, நடுத்தரவர்க்க சமூகக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகின்ற அமைதிவாதத்தினை இணக்கமற்று எதிர்ப்பதனைக் குறிக்கின்றதைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். அனைத்துலகக்குழு எல்லா யுத்தங்களையும் எதிர்க்கவில்லை. இது ஏகாதிபத்திய, முதலாளித்துவ வர்க்கத்தால் தொடுக்கப்படும் யுத்தங்களை ஏகாதிபத்திய யுத்தங்களை எதிர்க்கின்றது. ஆனால் நாம் ஏகாதிபத்தியத்தினால் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தேசிய விடுதலை யுத்தங்களைத் தொடுப்பதற்குள்ள உரிமையை ஆதரிக்கின்றோம். அத்தோடு நாம் சோவியத் யூனியனையும், உருக்குலைந்த தொழிலாளர் அரசுகளையும் ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு எதிராக நிபந்தனையின்றி பாதுகாக்கின்றோம்.

163. அணு ஆயுத ஒழிப்பு, 'சமாதான சகவாழ்வுக்கு' சாதகமாக தொழிலாளர் வர்க்கத்தை அமைதிவாத மோசடி மூலம் ஏமாற்றும் படுபிற்போக்கு வடிவமே ஸ்ராலினிச பிரச்சாரமாகும். ஏகாதிபத்தியத்திற்கும், சோவியத் அதிகாரத்துவத்துக்கும் இடையேயான அணு ஆயுத ஒப்பந்தங்கள் மூலம் சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆனால் முழு உலகிலும் யுத்தத்திற்கு காரணமாக உள்ள முதலாளித்துவத்தை புரட்சிகரமான முறையில் தூக்கி வீசுவதன்மூலம் மட்டுமே சமாதானத்தை ஏற்படுத்த முடியும். லெனின் சுட்டிக்காட்டியது போன்று தொழிலாளர் வர்க்கம் ஆதரவளிக்கக்கூடிய ஆயுத ஒழிப்பின் ஒரே வடிவம், ஆயுதம் தாங்கிய பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தை நிராயுதபாணி ஆக்குவதே ஆகும்.

164. நான்காம் அகிலத்தில் அனைத்துலகக் குழு பல வர்க்கங்களின் கூட்டுக்களான ''யுத்த எதிர்ப்பு'' மக்கள் முன்னணிகளை மூர்க்கமாக எதிர்க்கின்றது. அவை 'சமாதானம் விரும்பும்' குட்டி முதலாளித்துவ, முதலாளித்துவப் பிரிவினருக்கு தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் ரீதியில் கீழ்ப்படுத்த முயல்கின்றன. யுத்தத்திற்கு எதிரான போராட்டம் எப்போதும் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று அரசியல் தர்க்கத்தினை அடிப்படையாகக் கொண்டது. அதன் முதல்விதி பாட்டாளி வர்க்கத்தின் நிபந்தனையற்ற சுதந்திரமாகும். தொடர்ச்சியான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைக்கு அது அத்தியாவசியமான ஒரு முன்நிபந்தனையாகும்.

165. ஏகாதிபத்திய யுத்தத்துக்கு எதிரான போராட்டம், பாட்டாளி வர்க்க மக்களின் அணிதிரளலை வேண்டி நிற்கின்றது. நாசகார நடவடிக்கைகளை அமுல் செய்வதற்கான தனிமைப்படுத்தப்பட்ட தனிமனிதநடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தின் நனவினை வளர்க்க உதவாது. ஆதலால் அவற்றை எதிர்க்க வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளே சிறப்பாக பாட்டாளி வர்க்க இளைஞர்களிடையே ஒழுங்கு முறையான பிரச்சாரத்தை முன்னெடுப்பது அவசியம். அப்போதுதான் அவர்கள் ஏகாதிபத்தியத்தின் தன்மையை விளங்கிக்கொள்ள கல்வியூட்டப்படுவார்கள். சகல இரகசிய இராஜதந்திரங்களுக்கும் அத்தோடு சகல பகிரங்கமானதும், இரகசியமானதுமான இராணுவ உடன்படிக்கைகளுக்கும் எதிராக ஒரு ஒழுங்குமுறையான பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டாக வேண்டும்.

166. அனைத்துலகக் குழுவின் பிரிவுகள், முதலாளித்துவ வர்க்கத்தின் சோவினிசத்திற்கு (Chauvinism) எதிராகப் பாட்டாளி வர்க்க அனைத்துலகவாத கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். அமெரிக்க ஐக்கிய சோசலிச அரசுகள், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள், உலக ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற சுலோகத்தினை பிரசித்திபெறச் செய்யவேண்டும். உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பொதுப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் சகல பகுதியினரையும் ஐக்கியப்படுத்த அது சகல குடிவரவு எதிர்ப்பு பாரபட்சம், இனவாதம் ஆகியவற்றுக்கெதிராகப் பிரச்சாரம் (Campaign) செய்யவேண்டும்.

167. இங்கு ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளைத் திரும்பக் கூறுவது மட்டும் அவசியமானது; ''எமது சகாப்தத்தில் அனைத்துலகக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் உலகக் கட்சியின் அணியில் சேரும் இயக்கம் மட்டுமே தேசிய மண்ணில் வேரோட முடியும் என்பதில் எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமில்லை. யுத்தத்துக்கு எதிரான போராட்டம் என்பது இன்று நான்காம் அகிலத்துக்கான போராட்டம் என அர்த்தப்படுகின்றது.'' (யுத்தமும் அனைத்துலகமும்)