முன்னுரை

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஹீலியின் ஆரம்ப வருடங்கள்

பப்லோவாத திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஹீலியின் பங்கு

ஹீலி நான்காம் அகிலத்தை பாதுகாத்தல்

தேசியவாதம் எதிர் சர்வதேசியவாதம்: சோசலிச தொழிலாளர் கழகம் முட்டுச்சந்தியில்
சோசலிச தொழிலாளர் கழகத்தில் இருந்து தொழிலாளர் புரட்சி கட்சியை நோக்கி: நெருக்கடி ஆழமடைகின்றது
ட்ரொட்ஸ்கிசம் காட்டிக்கொடுக்கப்பட்டது.
மார்க்கிசத்தை கேலிக்கூத்தாக்குதல்
சந்தர்ப்பவாதத்தின் இயங்கியல்
கடைசி வருடங்கள்
முடிவுரை

ட்ரொட்ஸ்கிசம் காட்டிக்கொடுக்கப்பட்டது

Use this version to print | Send this link by email | Email the author

ஷீலா டோரென்ஸால் எழுதப்பட்ட ஹீலி பற்றிய இரங்கற்குறிப்பின்படி 1985ம் ஆண்டு கோடை மற்றும் இலையுதிர்காலங்களில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) சரிவு ஓர் எதிர்பார்த்திருக்க முடியாத நிகழ்ச்சியாக இருந்தது. ஆனால், தொழிலாளர் புரட்சிக் கட்சி பற்றி அவர் எழுதியுள்ள வரலாற்று விபரம் நம்பகூடியதானால், ஹீலியின் தவறற்ற தலைமையின் கீழ் இயங்கி வந்த கட்சி அதிகாரத்தை நோக்கி வெற்றிநடை போட்டு வந்துகொண்டிருந்தபொழுது, எல்லாமே திடீரென்று வெடித்துச் சிதறியது! "முன்கூட்டியே எதிர்பார்த்திருந்திருக்க முடியாததாக இருந்தது என்னவெனில், 1985ல் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பிய பின்னர், கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் நிலவிய முழு குழப்ப நிலையில், கட்டாயப்படுத்தி நடக்கவைப்பது போதுமென்று தீர்மானித்திருந்தபொழுது, கட்சியை உடைக்கப் போவதாக முடிவெடுத்தபொழுது, கட்சியின் "பழைய" தலைவர்கள் பெரும்பாலோரால் நடத்தப்பட்ட எதிர்ப்புரட்சிகர எழுச்சி ஆகும்" என்று அவர் எழுதுகிறார்.

இவருடைய கூற்றின்படி, வேறுவிதமாக கூறினால், அழிவு தாக்கும் நேரம் வரை எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. இந்த அறிவுக்குறைவான விபரிப்பு, சந்தர்ப்பவாதத்தின் பார்வையை முற்றிலும் சரியாகவே உறுதிப்படுத்துகின்றது. ஆனால், அது எதையும் விளக்கவில்லை; அதிலும் குறிப்பாக, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமையில் இருந்த டோரென்ஸ் உட்பட ஹீலியின் மிக நெருங்கிய நண்பர்கள் அனைவருமே, "எதிர்ப்புரட்சி எழுச்சியில்" எவ்வாறு தொடர்பு கொண்டிருந்தனர் என்பதைக் கூறவில்லை. டோரென்ஸின் கருத்தைப் படிக்கும்போது, பழைய போல்ஷிவிக்குகள் பாசிஸ்டுகளாக மாறிவிட்டதாக, "சோசலிசத்தை நோக்கி சோவியத் ஒன்றியம் நெருங்கிக் கொண்டிருக்கும்பொழுது, முதலாளித்துவத்தின் எதிர்ப்பு மிகவும் ஆபத்தானதாக வளர்ந்தது". என ஸ்ராலின் விளக்கிய அவநம்பிக்கை கருத்துத்தான் நினைவிற்கு வருகிறது. அதேபோல், ஹீலியின் வெற்றிகள் உயர உயர, அதன் கட்சித்தலைவர்களுக்கு அதை உடைக்க வேண்டுமென்ற உறுதியும் மேலும் மேலும் வளர்ந்து, "தங்கள் பழியைத் தீர்த்துக்கொள்ள, சீற்றத்தின் உருவை எடுத்து உயர்ந்தனர்" என்று டோரென்சும் தன்னுடைய எழுத்தைப் படிப்பவர்கள் எளிதில் நம்பிவிட வேண்டும் என்று நினைக்கிறார்.

1985ல் வஞ்சம் தீர்த்துக்கொள்ள நினைத்த ஒரே சீற்றம் அவருடைய செயலினால் விளைந்தவைதாம். தொழிலாளர் புரட்சிக் கட்சியுடைய சரிவு, சந்தர்ப்பவாத சீரழிவின் நீடித்த செயற்பாட்டின் தவிர்க்கமுடியாத விளைவுதான்; ஹீலிக்கும், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமைக்கும் மோசமான நெருக்கடி வரவுள்ளது என்ற எச்சரிக்கை பலமுறை வழங்கப்பட்டது. 1984 ஜனவரி மாதம், இக்கட்டுரை ஆசிரியரே, ஹீலிக்கும் பண்டாவிற்கும், இயக்கத்திற்குள் வளர்ந்துள்ள சந்தர்ப்பவாதம் பற்றி விமர்சனரீதியான ஆய்வு நடத்தாவிடின், "நாம் மிக அதிக அளவில் பெருங்குழப்பத்தில் ஆழ்ந்து விடுவோம். இதைச் சரிசெய்யாவிட்டால் எமது பிரிவுகளுக்குள் தவிர்க்கமுடியாத அரசியல் பேரழிவுகளை ஏற்படுத்திவிடும்" என்று தெரிவித்து ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்.

நாம் ஏற்கனவே பார்த்துள்ளபடி, தொழிலாளர் புரட்சிக் கட்சி 1973-ல் நிறுவப்படுவதற்குச் சில ஆண்டுகள் முன்பே சந்தர்ப்பவாத சரிவினுள் சென்றிருந்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சி நிறுவப்பட்டதானது, இந்த அரசியல் சீரழிவை விரைவுபடுத்தியது. ஆரம்பத்திலிருந்தே, தொழிலாளர் புரட்சிக் கட்சி உள்நெருக்கடிகளினால் பிளவுபட்டிருந்தது. நிறுவக மாநாடு தொடங்கப்பட இருந்த காலகட்டத்தில், டோரிகளைப் பதவியிலிருந்து அகற்றி தொழிற்கட்சியை மீண்டும் பதவியில் இருத்துவதற்கான சாதாரண போராட்டத்தின் அடித்தளத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் சேர்க்கப்பட்டிருந்தனர். சோசலிச வேலைதிட்டம் தேவையென்ற வேலைதிட்டத்திற்கு உதட்டளவில் மரியாதை கொடுக்கப்பட்டதே அன்றி, சமூக ஜனநாயகவாதிகள் புதிதாக அரசாங்கத்தை அமைத்தால், தொழிலாள வர்க்கமும், தொழிலாளர் புரட்சிக் கட்சியையும் எதிர்கொள்ள இருக்கும் போராட்டத்தின் தன்மைபற்றி எதுவும் பேசப்படவில்லை. இப்பிரச்சினை பற்றி சிந்தித்த அளவில் தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்கள், அதிலும் குறிப்பாக ஹீலி, டோரி எதிர்ப்பு இயக்கத்தின் மிகப்பெரிய மக்கள் அலையின் விளைவாக அதிகாரத்தில் இருத்தப்படும் தொழிற்கட்சி அரசாங்கத்தை சேர்ந்த சீர்திருத்தவாத தலைவர்கள் விரைவில் ஒதுக்கித் தள்ளப்பட்டுவிடுவர் என்று வலியுறுத்தி வந்தனர். "தொழிலாள வர்க்கம் டோரி எஜமானர்களை சமாளித்துவிட முடியம் என்றால், அது அதன் சீர்திருத்த வேலையாட்களையும் எளிதில் தூக்கி எறிந்து விடமுடியும்." என்று கூட்டங்களில் ஹீலி இடிமுழக்கம் போல் கூறுவதுண்டு.2 கைதட்டி ஆரவாரம் பெறுவதற்கு இந்தச் சொற்றொடர் மிகவும் திறமையுடையதாக இருந்தது; ஆனால், இது தொழிலாள வர்க்க இயக்கத்தினுள் சீர்திருத்தவாதம் பற்றிய பிரச்சனையை வெறுமே எளிதாக்கியது. முதலாளித்துவம் 20 ம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் உயிர் பிழைத்திருப்பதன் காரணம், தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்திற்குள் அது சோசலிச புரட்சி அபாயத்திற்கு எதிராக அதனால் சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசம் போன்ற தேவையான அரசியல் பாதுகாப்பு அரண்களை தோற்றுவிக்க முடிந்ததாலாகும். உண்மையில் தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ எஜமானர்களின் மிகத்திறமைவாய்ந்த, காட்டிக்கொடுக்கும் அதன் ஊழியர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதை கற்றுக்கொண்டால்தான் அதனால் முதலாளித்துவத்துடனான வரலாற்று கணக்குகள் தீர்க்கப்பட முடியும்.

தொழிற்கட்சியின் எதிர்கால வெற்றியின் தாக்கங்கள் குறித்து தொழிலாள வர்க்கத்திற்கு தெளிவாக எச்சரிக்கை விடுக்காததின் பின்னணியில் இருப்பது, தொழிலாள வர்க்கத்தின் அப்போதுள்ள உணர்மையின் மட்டத்திற்கேற்ப சந்தர்ப்பவாத அடிபணிவாகும். தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) டோரிக்களை வீழ்த்தி, தொழிற்கட்சியை ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கும் குறிப்பான பணியைச் செய்வதற்காக அமைக்கப்படுவதாக சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) அறிவித்திருந்தது. இந்த "டோரி-எதிர்ப்பு" என்ற குறுகிய வரம்பின் அடிப்படையில்தான், 1973ம் ஆண்டு நவம்பர் மாதம் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஆரம்ப மாநாட்டின் தயாரிப்பிற்காக "பரந்தமக்களை திரட்டுதல்" பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இத்திட்டம் 1974ம் ஆண்டு, நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த வேலைநிறுத்தத்தை ஒட்டி, அவசரமாக நடத்தப்பட்ட தேர்தலில் ஹீத் அரசாங்கம் தோல்வியுற்றதில் யதார்த்தமானது. தொழிலாளர் புரட்சிக் கட்சியில் புதிய தொழிலாளர்கள் பலர், சமூக ஜனநாயக சீர்திருத்தத்திற்கெதிராக மார்க்சிசத்தின் ஒத்துப்போகமுடியாத எதிர்ப்பை நிலைநாட்டாத ஒரு முன்னோக்கின் அடிப்படையில் சேர்க்கப்பட்டிருந்தால், தொழிற்கட்சியின் வெற்றி தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள்ளேயே அரசியல் நெருக்கடியை தோற்றுவித்தது தவிர்க்க முடியாததாகியது.

தொர்னெட்டுடனான மோதல்

ஒரு கார் தொழிலாளியும், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான அலன் தொர்னெட் (Alan Thornett) முன்வைத்த அரசியல் கருத்து வேறுபாடுகள், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளும் அனுபவமற்ற புதிய உறுப்பனர்களும் புதிய தொழிற்கட்சி அரசாங்கத்தின் மீது கொண்டிருந்த நப்பாசைகளின் பிரதிபலிப்பாக இருந்தது. கருத்துவேறுபாடுகளின் அரசியல் மூலத்தை கட்சிக்குள் எதிர் கொள்ளாமல், பிரச்சினைகளைப்பற்றி விவாதிக்காமல், கட்சி உறுப்பினர்களுக்கு இதுபற்றி கற்பிக்காமல் ஹீலி எதிர்ப்பிற்கு விடையாக நன்கு ஆராயப்படாத அமைப்பு ரீதியான நடவடிக்கைகளில் நம்பிக்கையற்ற முறையில் ஈடுபடலானார். தொர்னெட்டின், இரகசிய, கொள்கையற்ற பிரெஞ்சு OCI உடன் தொடர்புடைய மத்தியவாதிகளான பிளிக்-ஜென்கின்ஸ் (Blick-jenkins) குழுவுடனான கூட்டு ஜனநாயக மத்தியவாதத்தையும் கட்சியின் விதிமுறைகளையும் நிச்சயமாக மீறியது ஆகும்.3 ஆனால் தொர்னெட்டின் கருத்துக்களும், வழிவகைகளும் ஒருபுறம் இருக்க, இவருடைய போக்கு தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் பரந்த ஆதரவைக் கொண்டிருந்தது என்ற உண்மை, அதிலும் சமீபத்தில் கட்சியில் சேர்ந்திருந்த தொழிற்சங்க வாதிகளிடத்தில் இருந்தது என்பது தீவிர அரசியல் பிரச்சினைகளின் வெளிப்பாடு ஆகும்.

ஆனால் ஹீலியைப் பொறுத்தவரையில், அரசியல் முரண்பாடுகளை ஒடுக்குவது என்பது ஒரு வாழ்க்கை நெறியாகவே அமைந்துவிட்டது. பப்லோவாத நிலைப்பாடுகள் சோசலிச தொழிலாளர் கழகம், தொழிலாளர் புரட்சிக் கட்சி இவற்றின் மத்திய தலைமைக்குள்ளே தவறுக்கிடமில்லாதவகையில், செல்வாக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றன என்பதின் அடையளங்களை அவர் அசட்டை செய்ய பழகியிருந்தார். உண்மையில் ஹீலிக்கு, தொர்னெட்டை விட அதிக கவலையை கொடுத்தது, பண்டா, சுலோட்டர் இருவருடைய நிலைப்பாடுகளாகும். 1960களின் இடைப் பகுதியிலிருந்தே, பண்டாவின் அரசியல் கருத்துக்கள் மிகக்கூடுதலான மாவோயிச, குட்டி முதலாளித்துவ தேசியவாத போக்கை வெளிப்படுத்தி வந்தன என்பதை நாம் முன்னரே குறித்திருக்கிறோம். சுலோட்டரை பொறுத்தவரையில், 1966ல் அனைத்துலகக் குழுவின் மூன்றாம் காங்கிரஸ் கூடிய நேரத்தில், அவர் OCI இன் மத்தியவாத கருத்துக்களான நான்காம் அகிலம் "மறுசீரமைக்கப்பட வேண்டும்" என்பது பற்றி தீவிர ஆர்வம் காட்டியிருந்தார். மேல்மட்டத்திற்கு கீழிருந்த முரண்பாடுகளின் தன்மையையும் அளவினையும் ஆழ்ந்து ஆராயாமல் பிரிட்டிஷ் பிரிவின் தலைமையிடத்திற்குள் வெறும் மேம்போக்கான ஒற்றுமையை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற அக்கறையை மனத்தில் கொண்டு அரசியல் முரண்பாடுகளை வெறுமனே கூட்டி கம்பளத்தின் அடியில் தள்ளிவைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைத்தான் ஹீலி கொண்டிருந்தார்.

1950களில் கனனுடைய சோசலிச தொழிலாளர் கட்சியில் நிலவியிருந்த சூழ்நிலைகளை ஒத்துத்தான், தொழிலாளர் புரட்சிக் கட்சியில் காணப்பட்ட நிலைமையும் இருந்தது. சோசலிச தொழிலாளர் கட்சியின் சீரழிவின் தன்மையை ஆராயும் காலத்தில், பப்லோ, மண்டேல் இவர்களுக்கெதிரான போராட்டத்தை 1953 பிளவிற்கு பின்னர் கனன் நிறுத்திவிட்டதற்கு, அவர் கட்சித்தலைமையில் தனக்கு மிகுந்த நம்பிக்கையுடைய ஆதரவாளர்கள் என்று தோன்றியவர்களான Farrel Dobbs, George Novack, Joseph Hansen போன்றோரே உண்மையில் சந்தர்ப்பவாதிகளுடன் உடன்பாட்டுக் கருத்துக்களைக் கொண்டிருந்ததாக சந்தேகத்துடன் கருதினார், என்று ஹீலி அடிக்கடி வர்ணிப்பது உண்டு. இதேபோல்தான், எதிர்ப்புக்களை தெரிவித்த தொர்னெட்டையும் அவருக்கு ஆதரவு கொடுத்தவர்களையும் கட்சியைவிட்டு வெளியேற்ற அவர் எடுத்த முடிவு, கட்சியின் "பழைய காவலர்கள்" காட்டிவருவதாக தோன்றிய ஒற்றுமை கலைந்துவிடுமோ என்றும், வேலைத் திட்டத்தையும் முன்னோக்கையும் பற்றிய நீடித்த விவாதம் அவரால் அனுமதிக்கப்பட்டால், தொழிலாளர் புரட்சிக் கட்சி உடைந்துவிடுமோ என்ற அவருடைய அச்சத்தில் விளைந்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியில் நிலவிய உறுதியற்ற அரசியல் நிலைமையை, அமைப்புரீதியான நடவடிக்கைகள் மூலம் உறுதிப்படுத்திவிடலாம் என்று அவர் நம்பியிருந்தாலும்கூட, அரசியல் தெளிவு பற்றி விவாதம் இல்லாமல் போவதற்கு தொர்னெட்டையும் அவரைடைய ஆதரவாளர்களையும் கட்சியைவிட்டு வெளியேற்ற ஹீலி எடுத்த முடிவு, பிளிக்-ஜென்கின்ஸ் குழுவின் கட்டுக்கடங்கா கனவுகளுக்கும் அப்பால் கட்சியை நாசப்படுத்திவிட்டது.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாத சீரழிவு பற்றி மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்த அனைத்துலக்குழு, தொர்னெட்டிற்கு எதிரான மோதலில் ஹீலி பயன்படுத்திய முறைகளையும், பிளவின் விளைவுகளையும் ஆய்விற்குட்படுத்தியது:

மத்தியதர வர்க்க கல்வியாளர்களையும், வாழ்க்கைப் பணியாளர்களையும் பெருமளவில் நம்பி, கட்சிக் கருவியை அணிதிரட்டி தொர்னெட்டிற்கு எதிராகப் பயன்படுத்தி, சிறுபான்மையினரை அச்சுறுத்தவும், அமைப்புரீதியாக அவர்களை வெளியே தள்ளவும் ஹீலி முயற்சி செய்தார். தொர்னெட் குழுவிற்கு எதிராக சரீர ரீதியாக வன்முறைத் தாக்குதலும் பயன்படுத்தப்பட்டது; மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக் குழுவை வசப்படுத்திக்கொள்ள ஹீலிக்கு உதவும் பொருட்டு லண்டன் அடுக்ககத்திலிருந்த சிரில் ஸ்மித் போன்றோர் தோண்டி எடுக்கப்பட்டு, தொர்னெட்டின் மரணதண்டனையில் பாதிரியார் பங்கேற்பதற்காக பல ஆண்டுகள் லீட்ஸில் தொய்ந்திருந்த சுலோட்டரும் வரவழைக்கப்பட்டு, ஹீலி வெட்டும் கோடரியை தாழ்த்தியபோது அவர் தக்க போலியான மார்க்சிச அருளாசியை வழங்கினார். கட்சிக் கொள்கைகளிலிருந்து பிறழ்பவர்களை ட்ரொட்ஸ்கியைப் போல் கையாளாமல், எட்டாம் ஹென்றி போல்தான் ஹீலி கையாண்டார்; மொத்தத்தில் இப்படிச்செய்ததின் மூலம் தொர்னெட்டின் தலைக்குப் பின்னால் தியாகியின் ஒளிவட்டம் இடம்பெறச்செய்வதில்தான் அவர் வெற்றி பெற்றார்.

"தொர்னெட்டை வெளியேற்றியது கட்சிக்குப் பல நூறு உறுப்பினர்களை இழக்கச் செய்ததுடன், அடிப்படை தொழிற்துறையில் மிக முக்கியமான பிரிவின் ஆதரவையும் இல்லாதொழித்துவிட்டது. இந்த அரசியல் ரீதியாக பொறுப்பற்ற உட்கட்சி பிரிவு நடவடிக்கைகளின் நேரடி விளைவு, கட்சியின் சமூக தளத்தின் அடிப்படையை மத்தியதர வர்க்கத்தை நோக்கி சாயவைத்தது ஆகும். ரெட்கிரேவ், மிச்செல் போன்றோர் ஹீலியைப்போல் முதன்மையிடத்திற்கு உயர்ந்ததும், தன்னுடன் வெகுநெருக்கத்துடன் ஒத்துழைத்திருந்த தொழிலாளர் தன்னைக் கைவிட்டதால் தாக்கப்பட்டு அதனை தனிப்பட்ட காட்டிக்கொடுப்பாக மதிப்பிட்டு மிகவும் கசப்புணர்வுடன் இதற்கு தனது பிரதிபலிப்பை ஹீலி காட்டினார்.

"OCI  உடன் தெளிவுபடுத்தப்படாத பிளவையடுத்து, தொர்னெட்டை அதிகாரத்துவ ரீதியில் வெளியே அனுப்பியமை தொழிலாளர் புரட்சி கட்சிக்கு ஒரு அரசியல் பேரழிவு ஆகும். முதலில், சர்வதேசப் பிரச்சினைகள் ஒதுக்கப்பட்டன. இப்பொழுது, பிரிட்டனில் இயக்கத்திற்குள்ளேயே அரசியல் முறையில் கையாளப்பட வேண்டிய பிரச்சினைகளும் விடைகாணப்படாமல் விடப்பட்டன. தொர்னெட்டின் நோக்கங்கள், விருப்பங்கள், சார்புகள் ஒருபுறமிருக்க, அவருக்கு ஆதரவான பிரிவின் எழுச்சி தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்றும் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்திடம் அபிவிருத்தியடைந்துவரும் நெருக்கடியான பிரச்சினைகளுடன் பிணைந்திருந்தது. மார்ச் 1974ம் ஆண்டு, தொழிற்கட்சி பதவிக்கு வந்ததும், அக்டோபர் மாதம் அது மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும் மார்க்சிச முன்னணியிற்கு மாபெரும் அரசியல் அழுத்தங்களை கொடுத்ததோடு, உரிய தத்துவார்த்த தெளிவும் தந்திரபாய மூலவளங்களும் இல்லாதது வெறும் சந்தர்ப்பவாத போக்குடனான தவிர்க்கமுடியாத சீரழிவிற்கு இட்டுச்சென்றது ....

"டோரிகளின் வீழ்ச்சியும், தொழிற்கட்சி ஆட்சிக்கு மீண்டதும், சமூக ஜனநாயகம் நிலைத்திருப்பது பற்றிய புதிய சுற்று நப்பாசைகளை தோற்றுவித்தன. இது முதலில் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் பிரதிபலித்தது. தொர்னெட்டின் எதிர்ப்பின் விளைவினால் தோன்றிய எழுச்சிக்கு எதிராக ஒரு பொறுமையான தத்துவார்த்த போராட்டத்தை ஹீலியின் தலைமை நடத்தமுடியாமல் போனது, பிரிட்டனுடைய வர்க்கப் போராட்டத்தின் பின்னணியில், சமூக ஜனநாயகம், தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு எதிராக ஒரு முக்கியமான வெற்றியை அடைந்தது என்றுதான் பொருள்படும். OCI இன் முகவர்களிடமிருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சியைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு, ஹீலி தொழிலாளர் புரட்சிக் கட்சியை ஒரு அரசியல் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்க செய்ததுடன், அமைப்பினையே பாரியளவில் வலுவிழக்கச் செய்தது. கட்சியின் உட்பூசலின் விளைவினால் அரசியல் தெளிவை அடைவதற்குப் பதிலாக, பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் முந்தைய 21 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போராட்டத்தினால் குழப்பமிக்க நிலையை அடைந்தது.

"தொர்னெட் வெளியேற்றப்படுவதற்கு முன், பிரிட்டிஷ் பிரிவின் உட்போராட்டம் அனைத்துலகக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயமாகும். தொழிலாளர் புரட்சிக் கட்சியை பொறுத்தவரை, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிற்கு (ICFI) எவ்விதமான சுயாதீனமான பங்கும் இல்லை என்ற நம்பிக்கை ஹீலியிடம் வெளிப்படையாகவே காணப்பட்டதுடன், அப்பிரச்சனையை பிரிட்டிஷ் இயக்கத்துடன் இணைந்த ஒரு வெறும் பின்சேர்க்கைதான் என்ற கருத்து அவரிடம் இருந்தது. இந்த விஷயத்தில், தொர்னெட்டின் கருத்துக்கள் ஹீலியை விட மாறுபட்டிருந்தன எனக்கூறுவதற்கு எந்தச் சான்றும் இல்லை." ("How the Workers Revolutionary Party Betrayed Trotskyism: 1973-1985, Fourth International, Summer 1986, pp.25-26) .

தொழிலாளர் புரட்சிக் கட்சியும் தொழிற் கட்சி அரசாங்கமும்

இந்தப் பிளவிலிருந்து ஒரு நோய்வாய்ப்பட்ட நிறுவனம்தான் வெளிப்பட்டது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமையிடம், மற்றும் உறுப்பினர்களிடம் பெரும் ஆதிக்கத்தைக் கொண்டிருந்த உறுதியற்ற குட்டி முதலாளித்துவ பிரிவுகள் அதிதீவிர இடதுவாதத்திற்கு தாவிச்செல்வதில் தங்கள் வெளிப்பாட்டை கொண்டன. தொழிற் கட்சிக்கு எதிரான போராட்டத்தின் அரசியலில் கொள்ளவேண்டிய பொறுமையின் தேவையைப் பற்றி ஹீலி பல பத்தாண்டுகள் கற்றிருந்தும் மற்றும் பிறருக்கு எடுத்துரைத்திருந்தும்கூட தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நரம்புத்தளர்ச்சியுற்றிருந்த குட்டி முதலாளித்துவ சக்திகளுடைய கருத்தை ஏற்கும் வகையில், இவர் கட்சி அரசியல் முறையை மாற்றிக் கொண்டு தொழிற்கட்சி ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று குரல்கொடுக்கத் தொடங்கி விட்டார். அனைத்துலகக் குழு விளக்கி கூறியவாறு, தொழிற் கட்சிக்கு எதிரான போராட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பெற்ற படிப்பினைகளை முற்றிலும் அசட்டை செய்த, கட்சிக்கொள்கையில் ஏற்பட்ட இந்த மாற்றம் (இதைப்பற்றி ட்ரொட்ஸ்கியே எழுதியுள்ளார்) "தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் தலைமையிடத்தில் ஏற்பட்ட வர்க்க மாற்றம் கவலைப்படக் கூடிய விதத்தில் ஆழ்ந்து வெளிப்பட்டு, முந்தைய இலையுதிர்கால பிளவோடும் பிரிக்கமுடியாதபடி தொடர்பு கொண்டிருந்தது. இப்பொழுது ஹீலி பெரிதும் நம்பியுள்ள குட்டிமுதலாளித்துவ சார்புடையோரின் பெரும் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த தலைமைப்பீடம் தொழிற் கட்சியின் அரசாங்கச் செயல்களில் விரைவிலேயே நம்பிக்கையிழந்து, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவின் வளர்ச்சியின் வேகம் குறித்து பொறுமை இழக்கலாயிற்று. வனேசா, கோரின் ரெட்கிரேவும் தொழிற் கட்சியுடன் முறித்துக் கொள்வது, ஒரு சுரங்கத் தொழிலாளியும், கப்பல்கட்டும் தொழிலாளியும் அதனுடன் முறித்துக் கொள்வதைவிடவும் மிக எளிதாதானதாகும்." ("How the WRP betrayed Trotskyism," p.26).

1975ல் தொழிற்கட்சி அரசாங்கத்தை வீழ்த்தவேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டது, மத்தியதர வர்க்கத்தின் பொறுமையின்மையைத்தான் பிரதிபலித்தது என்று கூறுவது சற்று ஒருதலைப்பட்சமான கூற்றாகும். இந்த அரசியல்நிலைப்பாடு, தொழிற்கட்சியினரை வெறுத்த மற்றும், 1964-70களில் தொழிற்கட்சி அரசாங்கம் செய்த நம்பிக்கைத் துரோகத்தை நினைவிற் கொண்ட, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தொழிலாளர்கள் பகுதிகளில், வில்சன், கலகன் (Wilson, Callaghan) மீது நேரடித்தாக்குதல் நடத்துவது பற்றி மனத்தில் எந்தச் சங்கடத்தையும் கொள்ளா விளைவைக் கண்டது. ஆனால் கட்சியின் பல தட்டுக்களில் அதற்கு ஆதரவு இருந்தபோதிலும்கூட அத்தகைய பக்குவப்படாத இடதுசாரி வாதத்திற்கு எதிராக உறுதியாக நின்றிருக்க வேண்டிய பொறுப்பைத்தான் ஹீலி கொண்டிருக்கவேண்டும். அவ்வாறு அவர் செய்யத்தவறியது, தொழிலாளர் புரட்சிக் கட்சியிலிருந்த தொழிலாளர்களுக்கு வர்க்கப் போராட்டத்தில் திறமையுடன் குறுக்கீடு செய்வதற்கு உண்டான திறமையை இல்லாதொழித்ததுடன், நீண்டகாலப்போக்கில் இது குட்டி முதலாளித்துவ போக்குகளின் செல்வாக்கைத்தான் கட்சியில் பெருக்கியது.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அதிகரித்துவந்த தேசியவாத முன்னோக்குடன்தான், இந்த முக்கிய பிழையான கட்சியின் தந்திரோபாயம் பிணைந்திருந்தது. பிரிட்டனின் அரசியல் நிலைமையை பற்றிய ஹீலியின் மதிப்பீடு சர்வதேச சூழ்நிலைகளைவிட தேசிய சூழ்நிலையை கணக்கில் கொண்டு நடத்தப்பட்டதால், அவர் உள்நாட்டு வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு, உலக நிலைமையில் ஏற்பட்ட மாறுதல்களின் தாக்கம் கொடுக்கக் கூடிய உந்துதலை உணர்ந்து கொள்வதில் தவறி விட்டார். 1975 நடுப்பகுதியில், உலக மூலதனத்தின் உறுதிப்பாட்டை கலக்கிய உலக மந்த நிலை, அதன் முடிவிற்கு வந்துவிட்டிருந்தது. மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் தளர்ந்துவிட்டது, மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக பிரிட்டனில், வர்க்கப் போராட்டம் சற்று அடங்கிய கட்டத்தில்தான் இருக்கும் என்ற குறிப்பை காட்டியது. அவருடைய முன்னோக்கு பற்றிய பேருரைகளிலும், கட்டுரைகளிலும், கம்யூனிச அகிலத்தின் தேசியப் பகுதிகளின் அரசியல் தந்திரங்களுக்காக, சர்வதேச நிலைமையில் ஏற்படும் இத்தகைய நிகழ்வுகளின் இணைவிலான ஏற்ற இறக்கங்களின் முக்கியத்துவத்தை எப்போழுதுமே வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால், பிரிட்டனில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை சுயகட்டுப்பாட்டிலுள்ள முழுமையாக ஏற்றுக்கொண்ட ஹீலியோ, தீர்க்ககரமான சர்வதேச காரணிகளை கருத்திற்கொள்ள தவறிவிட்டார். தொழிலாளர் புரட்சிக் கட்சி அவ்வாறு செய்திருந்தால், அக்டோபர் 1974ல் தொழிற்கட்சி இரண்டாம் தடவை வெற்றியடைந்ததற்கு பின்பு, அரசியல், பொருளாதார ரீதியில் ஏற்பட்ட தற்காலிக மறுஉறுதிப்பாட்டினால் வழங்கப்பட்ட இடைவெளியை பெரிதும் பயன்படுத்தி இருக்க முடியும். சமீபத்திய எழுச்சிகளின் மூலோபாய பாடங்களை உள்ளீர்த்துகொள்வதனூடாக தொழிலாள வர்க்கத்தின் அடுத்த கட்ட தாக்குதலுக்கு நன்கு காரியாளர்களை தயார் செய்திருக்கமுடியும்.

இதற்குமாறாக, தொழிலாளர் புரட்சிக் கட்சி பிடிவாதத்துடன் கைப்பிடித்திருந்த அதிதீவிர இடது கொள்கைக்கு அடிபணிந்து தொழிலாள வர்க்கத்திலிருந்து எதிர்ப்புறம் திருப்பி, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மத்தியவாத சீரழிவை விரைவுபடுத்தியது. அதிகரித்துவரும் பிரச்சனைகள், தவறான முன்னோக்கினதும் பிழையான அரசியல் வழியினதும் விளைவு என்பதை உணர்ந்து கொள்ள விரும்பாதாலும், இயலாததாலும், ஹீலியும் தொழிலாளர் புரட்சிக் கட்சியும், கட்சி நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு சந்தர்ப்பவாத தீர்வுகளை நாடினர்.

நியூஸ்லைன் தோற்றுவிக்கப்படல்

1976ம் ஆண்டு முற்பகுதியில், வேர்க்கர்ஸ் பிரஸ்ஸை மூடிவிட்டு, அதற்குப்பதிலாக மிகவும் "பிரபலமான" செய்திப் பத்திரிகை ஒன்றை நியூஸ்லைன் என்ற பெயரில் ஆரம்பிக்கவேண்டும் என்று ஹீலி முடிவெடுத்தார். இந்த மாற்றத்திற்கான அரசியல் காரணங்கள் கட்சிக்குள் வெளிப்படையாக விவாதிக்கப்படவே இல்லை. மாறாக, பெப்ரவரி 1976ல் வேர்க்கர்ஸ் பிரஸ் மூடப்பட்டபொழுது, கட்சி, நாளிதழ் ஒன்றை நடத்த இயலாத நிலையில்தான் இருக்கிறது என்ற காரணத்தை கட்சி உறுப்பினர்களுக்கு, நம்பும்படியாகத்தான் கூறப்பட்டிருந்தது. கட்சித் தலைமையிடத்திற்குள்ளேயே வேர்க்கர்ஸ் பிரஸ் மூடப்படுவதற்கு விரிவான போலிக்காரணமாக, கட்சியின் அச்சகத்தில் பல ஆண்டுகளாக ஸ்ராலினிச தொழிற்சங்கத் தலைவர்கள் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருப்பது கூறப்பட்டது. ஸ்ராலினிஸ்டுகள், கட்சி நாளேட்டிலும் மற்ற வெளியீடுகளிலும் இனித் தலையிடமுடியாதபடி, வேர்க்கர்ஸ் பிரஸ் மூடப்படுவதற்கும், கட்சி அச்சக இயந்திரங்கள், லண்டனுக்கு வெளியே புதிய இடத்தில் அமைக்கப்படுவதற்கும், கட்சி உறுப்பினர்களை மட்டும் கொண்ட ஒரு புதிய அச்சு அலுவலக சங்கம் உருவாக்கப்படுவதற்கும் ஹீலி முன்மொழிந்தார்.

செய்தித்தாளின் பெயர் மாற்றமும், கட்சியின் அச்சகம் இடம் மாறுதலும் மட்டும்தான் இதில் தொடர்பு கொண்டவை என்று இருந்திருந்தால், இந்த பாசாங்கு தகுதியற்ற வெற்றியாகியிருக்கலாம். ஆனால், SOGAT இன் ஸ்ராலினிச அதிகாரிகளினது செலவிலும் அச்சுத் தொழிற்சங்கத்தை இழப்பிற்குட்படுத்துவதற்கு மட்டும் காரணமாய் இல்லாமல், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் மார்க்சிச போராட்டத்தின் இழப்பிலும் இந்த பாசாங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. வேர்க்கர்ஸ் பிரஸ் என்பதிலிருந்து நியூஸ்லைன் ஆக மாறியதானது தொழிலாளர் புரட்சிக் கட்சியை ஒரு மத்தியவாத கட்சியாக மாற்றியதில் மைல் கல்லாகிற்று. உடனடியாக இல்லாவிட்டலும்கூட, நியூஸ்லைனுக்கு மாற்றம் செய்யப்பட்டது கட்சி அச்சகத்தின் தேவையிலும் ஓர் அடிப்படை மாறுதலைக் கொண்டு வந்தது. வேர்க்கர்ஸ் பிரஸ் கட்சிக் காரியாளர்களின், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகளுடைய அரசியல் கல்விக்குமாக செயல்பட்டிருந்தபோது, நியூஸ்லைன் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் செல்வாக்கை தொழிற்கட்சி, தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகியவற்றில் வளர்த்துக்கொள்ள வெளிப்படையான முறைகளை கூடுதலாக கையாளத் தலைப்பட்டது.

"பிரச்சாரவாதம்" என்ற அரக்கன் மீதான மற்றொரு தாக்குதல் என்ற பெயரில் ஹீலி, நியூஸ்லைனை பெருமளவு விற்பனையாகும், மக்களிடையே பிரபலமான நாளேடாக மாற்றவேண்டும் என்ற கருத்தைக் கொண்டார். நியூஸ்லைனின் பக்கங்களில் பாதிக்குமேல், விளையாட்டுக்கள், தொலைக் காட்சிகள் பற்றிய செய்திகளை நிரப்புவதற்கு உபயோகப்பட்டன. பெரும்பாலான செய்தி வெளியீடுகள், முதலாளித்துவ செய்திச் சேவையாளரிடமிருந்து பெற்ற தகவல்களை அவசரமாக திருத்தி எழுதிய கட்டுரைகளாக இருந்தன. தத்துவார்த்த அளவிலும், அரசியல் ஆய்வியிலும் சர்வதேச நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டிருந்ததனாலும், பெருமையடைந்திருந்த வேர்க்கர்ஸ் பிரஸ் இன் சிறப்புக் காலத்திற்கு அப்பாலும், குறைந்தும் போய்விட்டது. அனைத்துலகக் குழுவின் பல பிரிவுகளின் செயல்கள் அநேகமாக வெளியிடப்படுவதே இல்லை. பப்லோவாதிகளுடைய அரசியலை விமர்சனத்துடன் ஆராயும் முயற்சியும் மறைந்து, மார்க்சிசத்திற்கும், மத்தியவாதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றியும் பேச்சு இல்லாமல் போய்விட்டது.

நியூஸ்லைனுடைய அரசியல் ஒலிமுழக்கம் ஆரம்பத்திலிருந்தே, வேர்க்கர்ஸ் பிரஸ்ஸிலிருந்து வேறுபட்ட தன்மையைத்தான் கொண்டிருந்தது. நியூஸ்லைனின் ஆசிரியப்பணி அலுவலகத்தினுள் அலெக்ஸ் மிச்செல் (Alex Mitchell), அவர் ஆஸ்திரேலியாவில் இருந்தபொழுது மர்டொக்கின் ஊடகத்திலும், பிரிட்டனில் இருந்தபோது பிளீட் தெருவிலும் கற்றிருந்த பழக்கவழக்கங்கள், அறநெறிப் போக்குகளையும் இறக்குமதி செய்தார். சன்டே டைம்ஸில் இவருடைய ஆய்வுச் செய்தி சேகரித்தல் முறையின் சாகசங்கள் நிரூபிக்கப்பட்டதுபோல், மிச்செல் திறமை மிகுந்த ஆய்வுச் செய்தியாளர் ஆவார். ஆனால் அவருக்கு மார்க்சிசத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்பதோடு, அதில் தன்னை பயிற்றுவிப்பதற்கும் ஆர்வத்தை காட்டவில்லை. கட்சிச் செய்தியாளர்கள் பலர் இருந்ததுடன், அவர்களில் மிகத்திறைமையான யிணீநீளீ நிணீறீமீ, ஒரு மார்க்சிச செய்திப்பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிவதற்கு மிகச்சிறப்பான தகுதியை பெற்றிருந்தார். ஆனால், மிச்செல் போன்ற அறியாமையும், மேம்போக்குத்தன்மையும் கொண்டிருந்தவரிடம் ஆசிரியர் பதவியை ஒப்படைத்தமை, வேர்க்கர்ஸ் பிரஸ்ஸிலிருந்து நியூஸ்லைனுக்கான மாற்றத்தில் இருந்த அரசியல் சீரழிவின் தன்மையின் மிகச்சிறந்த வெளிப்பாடாயிற்று.

"வெகுஜன பத்திரிகை" என்ற ஹீலியின் கருத்தும், அவர் கருதியது போல் முற்றிலும் புதிதான எண்ணமல்ல. 40 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரான்சில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் இதேபோன்ற பரிசோதனையை மேற்கொண்டது; Raymond Molinier என்ற சந்தர்ப்பவாத சாகசக்காரரால் அது ஆரம்பிக்கப்பட்டது. ஹீலியால் பற்றிப்பிடிக்கப்பட முன்னரே மோலினியேரின் ஏடான La Commune இல் காணப்பட்ட அரசியல் சாராம்சம், ட்ரொட்ஸ்கியால் கனல்கக்க விமர்சிக்கப்பட்டு அம்பலத்திற்குள்ளாயிற்று.

"வெகுஜன பத்திரிகை" என்றால் என்ன? இக்கேள்வி புதிதானதொன்றல்ல. புரட்சிகர இயக்கத்தின் வரலாறு முழுவதுமே "வெகுஜன பத்திரிகை" பற்றிய விவாதத்தால் நிறைந்துள்ளது என்று கூறமுடியும். ஒரு புரட்சிகர இயக்கத்தின் ஆரம்பநிலை கடமை, அதன் அரசியல் செய்தித்தாளை முடிந்த அளவிற்கு எளிதில் பரந்த மக்களுக்கு கிடைக்குமாறு செய்தல் ஆகும். இந்தக் கடமையை திறம்பட செய்வதற்கு அமைப்பினதும், பரந்த மக்களுக்கு செய்தித்தாள் கிடைப்பதற்கு கட்டாயமாக வழியமைக்கும் அதனது காரியாளர்களினதும் வளர்ச்சியினைத்தவிர வேறு எந்தவிதத்திலும் தீர்க்கப்படமுடியாது. இருந்தபோதும் இதுமட்டுமே, ஒரு வெளியீட்டை "வெகுஜன பத்திரிகை" என்று அதை மக்கள் ஏற்பதற்காக கூறுவதற்கு போதாது. ஆனால், வெளிப்படையாகவே பலமுறையும் புரட்சிகர பொறுமையின்மை, (இது எளிதில் சந்தர்ப்பவாதியின் பொறுமையின்மையாகவும் மாறிவிடக்கூடும்) பின்வரும் முடிவிற்கு வருவதற்குக் காரணமாகிவிடும்: நம்முடைய கருத்துக்கள் சிக்கலாகவும், நம்முடைய கோஷங்கள் முன்னேறிய அளவில் இருப்பதாலும் பரந்தமக்கள் நம்மை நாடி வருவதில்லை. எனவே எமது வேலைத்திட்டத்தை எளிதாக்கிக் கொள்வது இன்றியமையாததாகும், நம்முடைய கோஷங்களை இலகுவாக்குவதுடன் --சுருக்கமாகச் சொன்னால் கனமான பொருளுரையை வெளியே தள்ள வேண்டும். அடிப்படையில் இதன் பொருளாவது: நம்முடைய கோஷங்கள் புறநிலையை ஒட்டி இராமல், வர்க்க உறவுகளுடன் தொடர்பு கொள்ளாமல், மார்க்சிசமுறையில் பகுப்பாய்வு செய்யாமல், அகநிலைச் சார்புடையதான மதிப்பீடுகளாக (மிகவும் மேம்போக்கானதாகவும், போதாத் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும்), மக்கள் எதை எளிதில் ஏற்பார்கள், எதை எளிதில் ஏற்கமாட்டார்கள் என்பதைக் கருத்திற்கொண்டு இருக்கவேண்டும்." என்ற முடிவிற்கே இது வரவைக்கும். (The Crisis of the French Section [1935-36], Pathfuinder, p.97).

முதலாளித்துவ தேசியவாத பக்கம் திரும்புதல்

பண்புரீதியான அரசியல் சீரழிவின் இரண்டாவது வெளிப்பாடு, மத்திய கிழக்கிலிருந்த முதலாளித்துவ ஆட்சிகளோடும், தேசிய இயக்கங்களோடும் ஹீலி தொடர்பை ஆரம்பிக்க முயன்றதாகும். மே 1, 1976ல் நியூஸ்லைன் வெளியீடு வருவதற்கான தயாரிப்புக்கள் இறுதிக் கட்டத்தை அடைந்தபோது, ஏப்ரல் மாதக் கடைசியில் நிதி ஆதரவிற்காக ஓர் இரகசியக் குழுவை லிபியா நாட்டிற்கு ஹீலி அனுப்பினார். இந்த வெகு முக்கியத்துவம் வாய்ந்த முடிவு, தொழிலாளர் புரட்சி கட்சியின்பால் பின்னர் பேரழிவுத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்ததுடன், அதாவது எப்பாடுபட்டாவது நியூஸ்லைனை நடத்துவதற்கு தேவையான பண உதவிகளை பெறுவதற்காக கொள்ளப்பட்ட வெறும் "பண சம்பந்தப்பட்ட" முயற்சி என்று விளக்கிவிட முடியாததாகும்.4 1969லிருந்தே, சோசலிச தொழிலாளர் கழகம், தொழிலாளர் புரட்சி கட்சி இரண்டுமே பிரிட்டனில் இதனுடைய உறுப்பினர்களின் கஷ்டங்களிலிருந்தும், அனைத்துலக் குழுவின் பணிகளிலிருந்தும் ஒரு தினசரி ஏட்டை நடத்துவதற்கு தேவையான இருப்புக்களை பெற உழன்று கொண்டிருந்தது.5 பிரிட்டனில் அதன் உறுப்பினர்கள், மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பல பிரிவுகளுக்கு அப்பால் ஹீலிக்கு வேறுபுறத்தில் இருப்பு ஆதார உதவிகளுக்காக நாடிச் செல்லவேண்டும் என்ற நம்பிக்கை வந்ததற்கான காரணம், இவருடைய வர்க்க முன்னோக்கில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்பதையே வெளிப்படுத்துகின்றது என்றே விளங்கப்படுத்தமுடியும்.

மார்க்சிச முன்னோக்கிற்கு தொழிலாள வர்க்கத்தை வென்றுகொள்ளவேண்டும் என்னும் அரசியல் நம்பிக்கை இல்லாமல் போவதே சகலவிதமான சந்தர்ப்பவாதபோக்கினது எடுத்துக்காட்டாகும். இறுதி ஆய்வில், இது முதலாளித்துவத்தோடு சாவுக்குழிதோண்டும் பணியும், புதிய சோசலிச சமுதாயம் அமைப்பதில் தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகரமான பங்கு உண்டு என்பதை நிராகரிக்கும் தன்மையைத்தான் பிரதிபலிக்கிறது. தொழிற்கட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும், "வெகுஜன செய்திப் பத்திரிக்கை" வெளியிடுவதற்கும் பக்குவமடைவதற்கு முன்பும், அதிதீவிர இடதுபுறத்திற்கான அழைப்புக்களும் விடுத்தது, வேறு வேறு வகைகளில் ஹீலியின் தொழிலாள வர்க்கம் தொடர்பாக அதிகரித்திருந்த அவநம்பிக்கையைத்தான் பிரதிபலிக்கின்றன. இரண்டிலுமே, பொறுமையான போராட்டத்தினால் தொழிலாளர்களை நான்காம் அகிலத்தின் வேலைதிட்டத்திற்கு (உலக சோசலிச புரட்சி வேலைதிட்டத்திற்கு) வென்று மார்க்சிஸ்டுகளாக பயிற்றுவிப்பதற்கு பதிலாக ஹீலி சோசலிசப் புரட்சிக்கு ஒரு குறுக்கு வழியைக் காணும் முயற்சியை கொண்டிருந்தைத்தான் காண்கிறோம்.

பிரிட்டீஷ் மற்றும் உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை தொழிலாளர் இயக்கத்தில் மார்க்சிசத்திற்கான போராட்டத்தின் மீது தளமாகக் கொள்ளும் சாத்தியத்தில் ஹீலி குறைவாக நம்ப நம்ப, தொழிலாளர் புரட்சி கட்சியின் வேலைக்கு வேறு வர்க்க சக்திகளில் ஆதரவு தளத்தை தேடுவதற்கு அவர் மேலும் மேலும் சாய ஆரம்பித்தார். எனவேதான், அரபாத், கடாபி, சதாம் ஹுசைன் ஆகியோருடன் கொண்டிருந்த தொடர்புகளை தக்கவைத்துக்கொள்ளுவதில், அனைத்துலகக் குழுவினுள்ளே இருக்கும் சகசிந்தனையாளர்களின் தொடர்பைவிட முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கருத தலைப்பட்டார். பிரிட்டனுக்கு வெளியே உள்ள அனைத்துலக் குழுவின் பிரிவுகளுக்கு இவர் மேற்கொள்ளும் பயணங்கள் அநேகமாக நின்றே போயின என்றாலும், மத்திய கிழக்கு முழுவதும் மிகப் பரந்தமுறையில் இவர் பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

ஹீலியும் தொழிலாளர் புரட்சி கட்சி தலைமையோ லிபியா, வளைகுடா நாடுகள், ஈராக், பாலஸ்தீன விடுதலை இயக்கம் போன்றவற்றுடன் கொண்டிருந்த பணத்திற்கான உறவுகள் பற்றி அனைத்துலக் குழுவிடம் ஒருபோதும் விவாதித்ததில்லை. உண்மையில், 1976 ஜூன் மாதக் கடைசிவரை, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பிரதிநிதிகளிடம் பாலஸ்தீனிய விடுதலை அமைப்புடன் பொதுவான தொடர்பு கொள்வதைப் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. கொரின் ரெட்கிரேவ் உட்பட தொழிலாளர் புரட்சி கட்சியின் பிரதிநிதிகளில் சிலர், லிபிய ஆட்சியுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றில் ஏற்கனவே கையெழுத்திட்ட பின்னர்தான் இது கூட நடந்தது. இந்த அரசியல் ஏமாற்றுவித்தை, தொழிலாளர் புரட்சி கட்சி ஒரு தேசியக் கட்சியாக செயல்பட்டு வந்தது என்பதை நிரூபிப்பதோடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவை பிரிட்டிஷ் பகுதியின் சர்வதேச நலன்களுக்கு பயன்படுத்தும் ஒரு கருவியாகத்தான் நோக்கியது என்பதையும் எடுத்துக்காட்டியது.

பப்லோவாதிகள், முதலாளித்துவ தேசியவாதிகளுக்கு சரணடைந்ததை எதிர்த்துப் போராடிய, பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் அடிப்படைப் படிப்பினைகள் அனைத்தும் ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டன. பின்தங்கிய நாடுகளில் தேசிய முதலாளித்துவத்திலிருந்து முற்றிலும் சுயாதீனமான மார்க்சிச கட்சிகளை தொழிலாள வர்க்கம் கட்டுவதற்கான போராட்டத்தை பப்லோவாதிகள் காட்டிக்கொடுத்ததை 1963ல் அனைத்துலக் குழு நிராகரித்தது. சுலோட்டரே அப்பொழுது இதைப் பற்றி பின்வருமாறு எழுதியுள்ளார்:

"வெகுஜன இயக்கத்தின்பாலான மார்க்சிச கட்சியின் நோக்குநிலைக்கு தீர்க்கமான சோதனை சந்தர்ப்பவாதிகளுக்கும் அதிகாரத்துவத்திற்கும் எதிரான போராட்டத்தில் உருக்கி வார்க்கப்பட்ட தொழிலாள வர்க்கத்துடன் தொடர்புடைய ஒரு புரட்சிகர காரியாளரை கட்டியமைப்பதிலுள்ள வெற்றியின் அளவிலேயே இருக்கிறது. கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில், 'யதார்த்த நிலைக்கு அருகில் செல்லவேண்டும்' என்ற அக்கறையில் திரித்தல்வாதிகள் ஒரு 'தலைவர்கள் வட்டத்தையும்' செயல்முறையையும், இந்தப் புரட்சிகரத்தயாரிப்பிற்கு முற்றிலும் எதிரான வகையில் தோற்றுவித்துள்ளனர். காலனித்துவ, அரைக்காலனித்துவ நாடுகளைப் பொறுத்தவரையில், பப்லோவை பின்பற்றும் நான்காம் அகிலத்தின் பிரிவுகளென்று கூறிக்கொள்பவை, தேசியவாத தலைமைக்கு பணிந்துதான் நிற்கின்றன. தொழிலாள வர்க்கத்தினை நோக்கிய சுயாதீனமான அணிதிரளலை அவர்கள் துறந்துவிட்டனர் என்பது வெளிப்படை. அத்தகைய வழிமுறை, நாம் அல்ஜீரியாவில் காண்பதுபோல், சிறு அதிகாரிகளாக ஆவதற்கு விரோதமாக இராத, பலமற்ற தொழில்முறை ஆலோசகர்களைத்தான் உற்பத்தி செய்யும். இந்தச் 'செல்வாக்கான' பதவிகளிலிருந்து அவர்கள் 'புறநிலை' போக்கு வழியே குட்டி-முதலாளித்துவ தலைவர்களை மார்க்சிசத்தின்பால் தள்ளுவதற்கு அவர்கள் உதவுகின்றனர்." (Trotskyism Versus Revisionism, vol.4, p.127).

அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி, காஸ்ட்ரோ மற்றும் பென் பெல்லாவை புகழ்ந்து எழுதியதை எதிர்த்து சோசலிச தொழிலாளர் கழகம் எழுதிய இந்தச் சொற்களும், மற்றைய எழுத்துக்களும் இப்பொழுது மறந்துவிட்டன. நியூஸ்லைன் முழுவதும் கடாபி, அரபாத், சதாம் ஹுசைன் பற்றிய முகஸ்துதி புகழுரைகளால் நிரப்பப்படுகின்றன. ஹீலியே, இந்த "உயர்ந்த மனிதர்களுடன்" சொந்த நட்பு கொண்டாடுவதற்காக தீவிரமாக இறங்கி, இதற்காக சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட நடிகரை சந்திக்க ஆர்வம் காட்டிய மத்தியகிழக்கு தலைவர்களுக்கு, வனசா ரெட்கிரேவைப் பயன்படுத்திக்கொள்ளவும் தயங்கவில்லை.

பல அரேபிய ஆட்சியாளர்களுடன் ஹீலி கொண்டிருந்த கடிதப்போக்குவரத்து அவருடைய அரசியல், சொந்த சீரழிவிற்கான பரிதாபகரமான சான்றுகளாகும். எத்தனையோ ஆண்டுகள், ஒரு புரட்சிகரக் கட்சியின் அரசியல் நேர்மையை ஹீலி பெருமிதத்துடன் காத்து வந்திருந்தார். ஹீலியின் முன்பு கட்சியின் கௌரவத்தை குறைக்கும் வகையில் சொற்களை உதிர்த்தவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத ஓர் இகழுரையைப் பெறுவார்கள். ஆனால் நான்காம் அகிலத்தின் வரலாற்றுப் பணியில் அவர் கொண்டிருந்த பெருமிதம் சந்தர்ப்பவாதத்தினால் முற்றிலும் அரித்துப் போயின; தொழிலாளர் புரட்சி கட்சியின் மத்தியகிழக்கு புரவவலர்களுக்கு அவர் எழுதிய கடிதங்கள், ஒரு அடிமை தன்னுடைய நிலப்பிரபுவிற்கு எழுதிய முறையீடுகள் போல் உள்ளன.

உதாரணமாக, 1981, மே 17ம் தேதி லிபியாவிற்குச் சென்று வந்தபின் அவர் கடாபிக்கு எழுதிய கடிதத்தில், ஹீலி "எங்களுக்கு பேட்டி அளித்த நல்லதன்மைக்கும், பிரிட்டனின் அரசியல் நிலைபற்றிய என்னுடைய அறிக்கையை பொறுமையுடன் கேட்டதற்கும்" பெரும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அதன்பின் "மிகுந்த மரியாதையுடன்", "உங்களுக்கு பல முக்கியமான வேலைகள் இருக்கும்போது, நாங்கள் உங்களை இத்தகைய விஷயங்களுக்கு அணுகுவதற்குப் பெரிதும் வருந்துகிறோம்." என நிதி ஆதரவு கோரி ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

கடாபிக்கு எழுதப்பட்ட, மற்றும் ஒரு "அந்தரங்க மற்றும் இரகசிய" கடிதத்தில், லிபியாவின் வலுவான மனிதருக்கு, இவர், "Socialist People's Libyan Jamahiriya  (லிபிய சோசலிச கட்சி)க்கும் தொழிலாளர் புரட்சி கட்சிக்கும் உள்ள கூட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை; எங்கள் கட்சி உங்களுக்கு பிரிட்டனில் தளமாகச் செயல்பட்டு சர்வதேச ஏகாதிபத்திய சதிக்கு எதிராகப் போரிடும் என்பதை பெருமிதத்துடன் மீண்டும் கூறுகிறோம். எங்களுடைய கட்சியையும் அதன் சடத்துவ வளங்கள் அனைத்தையும் ஜமாஹிரியா இன் முழு அரேபிய புரட்சிப்பணியை பாதுகாக்கவும், ஆபிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா இவற்றிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கும் வழங்க உறுதிசெய்கிறோம்" என குறிப்பிட்டிருந்தார்.

மிகத்தாழ்மையுடன் அவருடைய கட்சியை ஒரு முதலாளித்துவ அரசுக்கு அர்ப்பணித்தது மட்டுமின்றி, பின்னர் மிகுந்த கசப்புடன், சிறிய வணிகர் பணத்தொல்லைக்குட்பட்டு புலம்புவதுபோல், ஜமாஹிரியா பண ஆதரவு கொடுப்பதாகக் கூறியிருந்தும் அதை நிறைவேற்றாததற்காக குறை கூறுகிறார். தன்னுடைய பெரும் ஏமாற்றத்தை ஒரு கடிதத்தின் மூலம் வேறு ஒரு மத்திய கிழக்கு தொடர்பிற்கு 1981 ஆகஸ்டில் அவர் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:

"1981 மார்ச் மாதம், நான் எட்டு நாட்கள் டிரிபோலியில் கழித்தேன்; அங்கு சகோதரர் கடாபியுடன் என்னுடைய மூன்றாவது வெற்றிகரமான பேச்சு வார்த்தைகளை நடாத்தினேன். நாங்கள் ஒரு கையெழுத்திட்ட உடன்பாட்டிற்கு வந்தோம், அதில் இருபக்கத்தினரும் எங்கள் உடன்படிக்கையை வலுப்படுத்துவதற்கான முடிவுகளை எடுத்தனர். ஆனால் எதுவும் நிகழவில்லை....

"இதன் விளைவாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட மட்டுமல்லாது அதற்கு நன்கு தயாரிப்பு செய்யவும் கிடைத்த வாய்ப்புக்களை இழந்து விட்டோம்; நாங்கள் ஒரு அடி பின்வாங்க நேரிட்டதோடு, எங்கள் தினசரி நியூஸ்லைன் இன் விலையை உயர்த்தவும் வேண்டியதாயிற்று. சகோதரி வனெசா, சகோதரர் அலெக்ஸ் இருவரும் இதைப்பற்றி உங்களிடம் விளக்கிக் கூறுவர்...

"லண்டனில் உள்ள லிபிய அமைப்பு, சிறு விஷயங்களில் பணத்தை தண்ணீர் போலச் செலவழிக்கிறது; ஆனால் அவர்கள் றீகனுக்கு எதிராக போராடக்கூடிய சக்தியாகிய எங்களை அநேகமாக பொருட்படுத்துவதே இல்லை. நாங்கள் மார்ச் மாதம் கையெழுத்து இட்டது போன்ற உடன்படிக்கைகள் உடனேயே முறிக்கப்பட்டுவிடுகின்றன.

"இதைப்பற்றி கடாபிக்கு தெரியாது என்றுதான் உறுதியாக நம்புகிறேன்; அதிகாரபூர்வமாக அவரை நேரடியாக நாங்கள் தொடர்பு கொள்ளுவதற்கும் வழியில்லை. உங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, எங்கள் பிரச்சினைகளை அவரிடம் எடுத்துக் கூறவும், வனசா அவரைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யவும் உங்களால் முடியுமா? " என எழுதியிருந்தார்.

இந்தக் கடிதங்கள், மார்க்சிசத்திலிருந்து ஹீலி முழுமையாக முறித்துக் கொண்டதற்கு சான்றுகளாக விளங்குகின்றன. ஆனால் ஹீலியோ, "கட்சியை அமைக்கும் பணியில்" தான் ஈடுபட்டுவிட்டதாக தன்னையே நம்பவைத்துக் கொண்டுவிட்டார்; அதாவது, இந்தப் பணியை அவர் சடத்துவ இருப்புக்கள் சேகரித்தல், அமைப்பின் அளவினை பெருக்கிக் கொள்ளுதல் என்பவைதான் கட்சியை வளர்ப்பதற்கு சமம் என்று அவர் முடிவு செய்துவிட்டார். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் வேலைதிட்ட அஸ்திவாரங்களுக்கும், தொழிலாளர் புரட்சி கட்சியுடைய நடைமுறைக்கும் இடையே எப்பொழுதும் அதிகரித்துவந்த இடைவெளியானது, "சிறிய பிரச்சாரவாதக் குழுவிற்கு" எதிரான போராட்டம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டது.

தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடிக்கு தீர்வு காணுதல், என்ற அடிப்படை பணியில் இருந்து ஹீலி மறுபுறம் செல்லவும், கட்சிக்கு உள்ளேயாயினும், வெளியேயாயினும் தொழிலாள வர்க்கமற்ற சக்திகளோடு உடன்பாடு கொள்வதில் கூடுதலான நம்பிக்கை கொண்டிருந்ததும், கூடுதலான அளவில் சடத்துவ வளங்களை சேகரிப்பதில், அச்சகங்கள், மோட்டார் சைக்கிள்கள், காலிக் கட்டிடங்கள், விலையுயர்ந்த மின்னணுப் பொருட்கள், பாதுகாப்பிற்காக பெருகிய பணியாளர்கள், என்று கணக்கெடுப்பதில்தான் அவர் அதிகமாக ஆழ்ந்து போனார். கட்சிக்குள் இருக்கும் அனைத்து முரண்பாடுகளும், தொழிலாள வர்க்கத்தின் பரந்தமக்கள் நிறைந்த கட்சியமைப்பை உருவாக்குவதில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் எவ்வாறு அடையப்பெற்றன என்று நினைத்துப் பார்க்காமல், கட்சிச் சொத்துக்கள் பெருகுவதன் மூலம் தீர்ந்துவிடும் என்று தனக்கே நம்பிக்கை ஊட்டிக்கொண்டுவிட்டார். உண்மையில், புரட்சிகர கட்சியின் வளர்ச்சிக்கும், தொழிலாள வர்க்கத்தினரிடையே மார்க்சிச நனவின் வளர்ச்சிக்கும் இடையே உள்ள அடிப்படை வரலாற்றுத் தொடர்பு பற்றி ஹீலி இனியும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, ஓயாது அதிகமான வளங்களைத் திரட்டல் என்பது தொழிலாள வர்க்க காரியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஒரு பதிலீடாகப் பார்க்கப்பட்டது.

சோசலிசப் புரட்சியைப் பற்றிய இத்தகைய கருத்துரு, ஒரு சந்தர்ப்பவாத, அதிகாரத்துவ, இன்னும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றால், போல்ஷிவிசத்தின் தவிர்க்கவியலாத நிலையான கேலிச்சித்திரம் போலவும்தான் ஆயிற்று. முற்றிலும் பொருளாதார முரண்பாடுகளிலிருந்து எழும் முதலாளித்துவ அமைப்பின் உடைவு தன்னியல்பாகவே ஒரு பெரிய மக்கள் இயக்கமாக மலரும் என்று ஹீலி நம்புவதாகக் காணப்பட்டார். இதன்பின்னர், தொழிலாள வர்க்கம் தன்னையே கட்சி சாதனத்துக்கு முன்வந்து நிறுத்திக்கொண்டு அதனிடம் உத்தரவுகளை எதிர்பார்த்து நிற்கும். வரலாற்று அளவில் உறுதி செய்யப்பட்ட உண்மையான, ட்ரொட்ஸ்கி மாபெரும் நம்பிக்கை வைத்திருந்த வலியுறுத்தலான, உண்மையில் புரட்சிகரமான மக்கள் இயக்கம் எவ்வாறு "தன்னியல்பாக" அது தோற்றமளித்தாலும், தொழிலாள வர்க்கத்திற்குள்ளே பல பத்தாண்டுகள் நீடித்த மார்க்சிசத்திற்கான போராட்டத்தின் விளைவாகத்தான் அமையும் என்பதை ஹீலி மறந்தே விட்டிருந்தார். அப்பட்டமாகக் கூறினால், கட்சியினால் கல்வியூட்டப்பட்டிருக்கும் புரட்சிகர தொழிலாளர்களின் தோள்களின் மீது (போல்ஷிவிக்குகளால் ரஷ்ய தொழிலாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டதுபோல்) அடித்தளத்தை கொண்ட, ஒரு பரந்துபட்ட மார்க்சிச கலாச்சாரம் தொழிலாள வர்க்கத்திற்குள் அபிவிருத்தியடையாமல் சோசலிசம் வெற்றி பெறமுடியாது.


1. 1985 வசந்த காலத்தில் ஹீலிக்கும் டோரன்ஸூக்கும் இடையில் நடைபெற்ற கடுமையான கன்னைப் போராட்டம் தொழிலாளர் புரட்சிக் கட்சியை துண்டாக்கிய அரசியல் வெடிப்புக்கான அரங்கைத் தொடங்கி வைத்தது. ஹீலியால் வெளியேற்றப்படுவதற்கான அச்சுறுத்தலை, அப்பொழுது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த டோரன்ஸ், ஹீலியை அச்சுறுத்தி மிரட்டுவதன் (பிளாக் மெயில்) மூலம் திருப்பித்தாக்க முடிவு செய்தார். அவ்வம்மையார் அவரது தனிச்செயலர், Aileen Jennings- , ஹீலியின் பாலியல் தவறான நடத்தை பற்றிக் குறிப்பிடும் பழியார்ந்த கடிதத்தை ஜூன் 30ம் தேதி அரசியல் குழுவிற்கு எழுதும்படி வற்புறுத்தி இணங்க வைத்தார். டோரன்ஸ் ஹீலியை அச்சுறுத்துவதற்கு மட்டும் மற்றும் தலைமையில் தனது பதவியைப் பாதுகாத்துக்கொள்ளவும் நோக்கங்கொண்டிருந்தார்.

2 . ஏன் தொழிற்கட்சி அரசாங்கம் தனது சிறுவெளியீட்டில், கிளிப் சுலோட்டரும் கூட இந்த சூத்திரப்படுத்தலைப் பயன்படுத்துகிறார்: " சோசலிசத் தொழிலாளர் கழகம் பல முறை கூறியவாறு: எஜமானர்களிடமிருந்து(டோரிகள்) விடுபடுவதற்கு போதுமான பலமுள்ள ஒரு தொழிலாள வர்க்கம் நிச்சயமாக சேவகர்களை (தொழிற்கட்சித் தலைவர்கள்) கவனிக்ககூடியதாக திறம்பெற்று இருக்கும்" (Socialist Labour League Pocket Library, no. 4, 1972).

3. தொழிலாளர் புரட்சிக் கட்சியால் பின்னால் கண்டெடுக்கப்பட்ட பத்திரங்கள் திட்டவட்டமாக அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தியது, தொர்னெட் தனது பத்திரமாக முன்வைத்தது உண்மையில், 1971ல் சோசலிசத் தொழிலாளர் கழகத்தை விட்டுச்சென்ற, ரொபின் பிளிக் என்பவரால் அவர் பெயரில் கூலிக்கு எழுதப்பட்டது. மேலும், அது "கட்சியின் தவறான நிலைப்பாட்டை திருத்த" முயன்றது என்று கூறிக் கொண்ட அதேவேளை, கட்சி உறுப்பினர்கள் அல்லாத தனிநபர்களுடன் இரகசியமாய் வேலை செய்து வந்த, அக்கன்னையின் உண்மையான நோக்கம் ஹீலியை நீக்குவதாக இருந்தது.

4. ஹீலியை வெளியேற்றப்பட்ட பின்னர் அனைத்துலகக் குழுவால் நடத்தப்பட்ட விசாரணை நிலைநாட்டியபடி, 1979 வரைக்கும் மத்திய கிழக்கு வளங்களிலிருந்து குறிப்பிடத்தக்க தொகைகளை தொழிலாளர் புரட்சிக் கட்சி வாங்கத் தொடங்கவில்லை.

5. தொழிலாளர் புரட்சிக் கட்சியிலிருந்து உதவிக்கான ஒரு வேண்டுகோளுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகள் செவிமடுக்கத் தவறிய ஒரு சம்பவம் ஒரு போதும் இல்லை. அனைத்துலகக் குழுவின் விசாரணை தொழிலாளர் புரட்சிக் கட்சி 1978க்கும் 1985க்கும் இடையில் அதன் சர்வதேச ஆதரவாளர்களிடம் இருந்து கடன்களாகவும் நன்கொடைகளாகவும் பத்துலட்சம் டாலர்களுக்குமேல் பெற்றது என்று நிலைநாட்டியது.