WSWS : Tamil : õóô£Á

முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
 

முன்னுரை

Use this version to print | Send this link by email | Email the author

இப்புத்தகமானது 1940ம் ஆண்டு லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையின் பின்னர் நான்காம் அகிலத்தின் வரலாறு தொடர்பான ஒரு விமர்சனரீதியான மார்க்சிச ஆய்வாகும். இது நான்காம் அகிலம் உருவாக்கப்பட்ட பின்னரான முதல் ஐந்து தசாப்தங்களில் அது எதிர்நோக்கிய முக்கிய அரசியல், தத்துவார்த்த விடயங்களை உள்ளடக்கியுள்ளதுடன், ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஸ்ராலினிசத்துக்கும், முதலாளித்துவ தேசியவாதம், பல்வேறுவகைப்பட்ட குட்டிமுதலாளித்துவ தீவிரவாதத்துக்கும் எதிராக செய்த போராட்டங்களின் முக்கியத்துவத்தையும் ஆய்வு செய்கின்றது.

இந் நூலின் ஆசிரியரான டேவிட். நோர்த் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் அமெரிக்க பிரிவான சோசலிச சமத்துவக்கட்சியின் செயலாளரும், உலக சோசலிச வலைத்தளத்தின் பிரதம ஆசிரியரும் ஆவர்.

இந்நூலின் மூலகாரணம், ட்ரொட்ஸ்கிசத்தை பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) நிராகரிப்பதற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடாத்திய போராட்டத்தில் இருந்து கொண்டுள்ளது. 1985 அக்டோபரில் தொழிலாளர் புரட்சிக் கட்சி பிளவுபட்டதன் பின்னர், அனைத்துலகக் குழுவை மதிப்பிழக்கச் செய்ய மிகைஉணர்ச்சி வசப்பட்ட பிரச்சார இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமையை நிராகரிப்பதன் மூலம் பண்டாவும் சுலோட்டரும் சோசலிச புரட்சியின் உலகக் கட்சியை கட்டியெழுப்பும் லியோன் ட்ரொட்ஸ்கியின் வரலாற்றுத் தொடர்ச்சியை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறுவதற்கு எதுவித ஆதாரமும் கிடையாது எனக் காட்ட இவர்கள் முயற்சித்தனர்.

இந்தப் பிரச்சாரத்தின் உச்சக் கட்டம், பிப்ரவரி 8, 1986 இல் ஏற்பட்டது. அப்பொழுது தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் உள்ள அனைத்துலகக்குழு ஆதரவாளர்களை, பண்டா சுலோட்டர் கன்னை தான் வரவழைத்திருந்த லண்டன் போலீசின் உதவியுடன் நடக்க இருந்த கட்சியின் எட்டாவது அகல் பேரவையில் (Plenum) பங்கு கொள்ள முடியாது தடுத்தது.

வழக்கத்திற்கு மாறான இந்த நடவடிக்கை, நேரடியாக இந்த நூலின் பொருளாக உள்ள பண்டாவின் "அனைத்துலகக் குழு உடனடியாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, நான்காம் அகிலம் அமைக்கப்பட வேண்டியது ஏன் என்பதற்கான 27 காரணங்கள்", என்ற பத்திரத்தால் உள்ளூக்கம் பெற்றதாகும். அது முதல் முறையாக தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வாரச் செய்திப் பத்திரிகையான வேர்க்கஸ் பிரஸ்சில், பிப்ரவரி 7, 1986 இல் நான்கு பக்கப் பிற்சேர்க்கையாக வெளியிடப்பட்டது.

இந்தக் கடை கெட்ட கட்டுரை வெளியிட்டு ஏறக்குறைய இரு வருடங்களுக்குப் பின், உலகம் எங்கும் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று கூறப்படுகின்றவர்களால் ஏறக்குறைய எல்லோராலும் நான்காம் அகிலத்தின் வரலாற்றைப் பற்றி மறு ஆய்விற்கு அளிக்கப்பட்ட நீண்டகாலமாக காத்திருந்த, நினைவில் என்றென்றும் நிற்கக்கூடிய பங்களிப்பு என்று புகழ்ந்து வரவேற்கப்பட்டது. பண்டாவால் கையாளப்பட்ட வடிவமைப்பு முறைபற்றி என்னதான் அற்ப சொற்ப கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், சுலோட்டர் பிரகடனப்படுத்தியது போல அனைத்துலகக் குழுவின் மேல் இருந்த வரலாற்று நம்பிக்கையை பண்டா தகர்த்து விட்டார் என்பதில் அவர்களுக்கு எந்தவித ஐயமும் இருக்கவில்லை.

பண்டாவின் பத்திரத்தை அனைத்துலகக் குழு ஒரு தடவை படித்ததன் அடிப்படையில், இது மார்க்சிசத்துடனான தொடர்புகளைத் துண்டித்துள்ள மனிதர் ஒருவரால் எழுதப்பட்டது என்றும், இவர் தன்னை வெளிப்படையாகவே உலக ஏகாதிபத்தியத்தின் மற்றும் அதன் ஸ்ராலினிச குற்றேவலர்களினதும் அரசியல் முகவராக உருமாற்றம் செய்யும் மாற்றுப் போக்கில் உள்ளார் என்றும், பிரகடனப்படுத்தத் தயாராக இருந்தது. இந்த மதிப்பீடு விரைவில் மெய்ப்பித்துக் காட்டப்பட்டது. ஒரு சில மாதங்களுள், பண்டா தொழிலாளர் புரட்சிக் கட்சியைத் துறந்தார், ட்ரொட்ஸ்கிசத்தைப் பகிரங்கமாக பழித்துரைத்தார். ஜோசப் ஸ்ராலினைப் பாராட்டிப் பின்பற்றுபவராகவும் மற்றும் சோவியத் அதிகாரத்துவத்தின் ஆதரவாளராகவும் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டார்.

முதலில் பண்டாவின் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டு நான் அதை ஏற்று, அப்பணியை ஆரம்பித்த பொழுது, இப்பணி இந்த நூலின் அளவிற்கு எவ்வகையிலும் கிட்டுமானதாக வளரும் என்று எதிர்பாக்கவில்லை. இருந்த பொழுதும் பண்டாவின் பொய்களின், மற்றும் திரிபுகளின் தொகுப்பினை தவறாது என்றும் நிலைநாட்டும் பணியின் வளர்ச்சிப் போக்கு, 1940ல் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதில் இருந்து நான்காம் அகிலத்தின் வரலாற்றை புறமெய்மை ரீதியாக விரித்துரைத்தலை குறிப்பிட்டளவு அவசியமாக்கி விட்டுள்ளது. இது மைக்கல் பப்லோ என்ற பெயருடன் தொடர்புபட்ட பல்வேறு குட்டி முதலாளித்துவ ட்ரொட்ஸ்கிச திரிப்புக்களுக்கு எதிரான அனைத்துலகக் குழுவின் நீண்டதும் சிரமமானதுமான போராட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு முக்கியத்துவத்தை மீளாய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்தின் அபிவிருத்தியின் நிலைப்பாட்டில் இருந்து அனைத்துலகக் குழுவின் வரலாற்றை அத்தகைய விதத்தில் மீளாய்வு செய்வதன் முக்கியத்துவம், பண்டாவின் பத்திரத்தை அந்த விதத்தில் ஒரு சாதகமான முறையில் அணுகுவதை பெரிதும் நியாயமாக்கியுள்ளது.

அதற்கும் மேலாக பண்டா தனது வெஞ்சினத்தை, சோசலிசத் தொழிலாளர் கட்சியின் (ஷிகீறி) அமைப்பாளரான ஜேம்ஸ் பி. கனனுக்கு எதிராக எவ்வளவுக்கு எவ்வளவு திருப்பி விடுகின்றாரோ அவ்வளவிற்கு ட்ரொட்ஸ்கிசத்தின் இந்த முன்னோடி, அகிலத்தின் வளர்ச்சியில் ஆற்றிய பிரமாண்டமான பங்கை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துவதற்கு அவருக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை ஆசிரியர் வரவேற்கின்றார். இந்நூலின் ஆசிரியர், ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள ஒரு அரசியல் போக்கினை, 1950ம் ஆண்டுகளிலும் 1960 ஆண்டுகளின் ஆரம்பப்பகுதியிலும் அதாவது கனனும் சோசலிசத் தொழிலாளர் கட்சியும் பப்லேவாதத்திற்குச் சரணாகதியடைந்ததற்கு எதிரான போராட்டத்திலிருந்து எழுந்த தொழிலாளர் கழகத்தை (வேர்க்கர்ஸ் லீக்கினை) சேந்தவர். ஜேம்ஸ் பி. கனன் ட்ரொட்ஸ்கிசத்திற்கு அளித்த மதிப்பிடமுடியாத பங்களிப்பு அனைத்துலகக்குழு தற்காக்கும் மரபின் முழுமையின் பகுதியாகும் என்பதில் சந்தேகமே கிடையாது.

தொழிலாளர் கழகத்தின் அரசியல் சாதனமான புலட்டீன் (Bulletin) பத்திரிகையில் பண்டாவிற்கான பதில் ஆரம்பத்தில் 35 தொடர் தொகுதிகளாக ஏப்பிரல் 1986 இல் இருந்து பிப்ரவரி 1987 வரை வெளியிடப்பட்டது. இந்தத் தொடர் முடிவுறும் பொழுது கட்டுரையில் ஆசிரியர் பண்டாவின் எதிர்காலப் படிமுறைவளர்ச்சியை பற்றிய கட்டத்தை நெருங்கிய முன்கூறல் முற்று முழுதாக மெய்யாகுவதைக் காணக் கூடியதாய் இருந்தது. இத்தொடர் கட்டுரைகள் பண்டாவின் இரண்டாவது பத்திரம் பற்றிய ஒரு ஆய்வுடன் முற்றுப் பெற்றது. அதில் ஆசிரியர், பண்டா, ட்ரொட்ஸ்கிசத்தை முற்றிலும் துறந்தமையையும் அவர் ஸ்ராலினிசத்துக்கு மாறிக் கொண்டதையும் ஆராய்கின்றார்.

பண்டாவுக்கான பதிலை ஒரு நூல் வடிவில் தயார் செய்யும்போது அவசியமான திருத்தங்களை தவிர புலட்டீனுக்கு (Bulletin) எழுதிய விதத்தில் மூலக் கட்டுரைகளாகவே அவற்றை விட்டு வைப்பதே சிறந்தது என ஆசிரியர் தீர்மானித்தார். நாம் பேணும் மரபுரிமைகள் (The Heritage we Defend) ஒரு அரசியல் விவாதத்தில் எழுதப்பட்டது. அதை ஆரம்பத்தில் இருந்து மீண்டும் இறுதிவரை பண்டாவின் பிந்திய வளர்ச்சியின் வெளிச்சத்தில் எழுவதென்றால் ஒன்றில் பிரமாண்டமான முறையில் நூலை மாற்றியமைக்க அல்லது வேறெரு நூலை எழுத வேண்டியிருந்திருக்கும். பண்டாவின் படிமுறை வளர்ச்சி சரியாக முன்கூட்டியே எதிர் பார்க்கப்பட்டிருந்த நிலையில் அப்படியான முயற்சி ஒன்று உண்மையில் தேவைப்படவில்லை.

எப்படியிருந்த பொழுதும் இந்நுலாசிரியர் இந்த முன்னுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பொழுது புதிய பத்திரம் ஒன்று அவரது கைவசம் வந்தது. இது பண்டாவின் அரசியல் அபிவிருத்தி திட்டவட்டமாக ஒரு நோயின் தன்மையை அடைந்துள்ளது. தனது வாழ்வில் ஏறக்குறைய 40 வருடங்களை நான்காம் அகிலத்தினுள் சோவியத் அதிகாரத்துவத்தின் எதிரியாகச் செலவிட்ட ஒரு மனிதர், இப்பொழுது "ஸ்ராலினின் எளிதில் மன்னிக்கும் தன்மையற்ற மனஉறுதி மற்றும் அஞ்சிப் பின்வாங்காத் தலைமை" பற்றி மெச்சி எழுதுகின்றார். அவர் ட்ரொட்ஸ்கிசமானது, "வரலாற்றின் இயங்கியலால் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்திற்கு எதிராக உலக ஏகாதிபத்தியத்தின் சித்தாந்த ரீதியான ஆயுதமாக மாற்றப்பட்டு விட்டது", என்று பிரகடனப் படுத்துகின்றார்.

ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான பண்டாவின் மிக அண்மித்த குற்றச்சாட்டு, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கை நிராகரிப்பதோடும் அரைக்காலனித்துவ மற்றும் பின்தங்கிய நாடுகளிலும் தேசிய முதலாளித்துவ வர்க்கங்களுக்கு எதிரான புரட்சிக்கரப் போராட்டங்களை தெட்டத் தெளிவாக நிராகரிப்பதோடும் இணைந்து கொண்டுள்ளது. இது மட்டுமல்லாது அவர் தொடர்ந்து தேசிய முதலாளித்துவத்தை தற்காத்து வருவதற்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான தமிழர்கள் கோராமாகக் கொலை செய்யப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு தனது ஆதரவைப் பிரகடனப் படுத்துகின்றார். வேறு எதுவும் இல்லாவிட்டாலும் பண்டாவின் படிநிலை வளர்ச்சி எதை நிலை நாட்டுகின்றது என்றால் ட்ரொட்ஸ்கிச விரோதத்திற்கும் உலக ஏகாதியபத்தியத்தின் மிக ஆழமான தேவைகளுக்கும் இடையில் உள்ள உள்ளார்ந்த இணைப்பையேயாகும்.

இந்த நூலிற்கான தயாரிப்பிலும், அதை எழுதுவதிலும், இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்திய காலப்பகுதியின் மிகவும் கூரறிவு படைத்த, சற்றும் விட்டுக் கொடுக்காத ட்ரொட்ஸ்கிஸ்டுகளில் ஒருவரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைவர்களுள் ஒருவரும், இலங்கையில் உள்ள புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளருமான கீர்த்தி பாலசூரியாவுடன் நூலாசிரியர் நடத்திய எண்ணற்ற கலந்துலையாடல்களில் இருந்து அவர் அளப்பரிய ரீதியில் பலன் அடைந்துள்ளார். 1971ம் ஆண்டளவு காலத் தொலைவில், பண்டா, தான் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தைத் தொடர்ந்து தற்காத்து வருவதாகக் கூறிய காலத்தில் தோழர் பாலசூரியா, பண்டாவின் அரசியல் ஸ்திரமின்மையைக் கண்டறிந்து, ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளில் இருந்து அவரின் விலகலைக் கூர்மையான அதேபோல தீர்க்கதரிசனமுள்ள விமர்சனத்திற்கு உள்ளாக்கினார்.

சந்தர்ப்பவாதத்தின் அஞ்சா எதிர்ப்பாளியான தோழர், பாலசூரியா தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தாக்குதல்களில் இருந்து அனைத்துலகக் குழுவைப் பாதுகாக்கத் தொடுத்த போராட்டத்தில் தீர்க்கமான பங்கை வகித்தார். நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றிய அவரது பரந்தகன்ற மற்றும் ஊடுருவும் அறிவுடன் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராகப் பல தசாப்தங்களாகத் தொடுக்கப்பட்ட போராட்டம் பற்றிய ஒரு உன்னிப்பான புரிதலையும் அவர் இப்போராட்டத்திற்குள் கொண்டு வந்தார். தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவின் பின் தோழர் பாலசூரிய அதன் தலைவர்களை அம்பலப்படுத்திப் பல தீர்க்கமான பத்திரங்களை எழுதியுள்ளார்.

1987 டிசம்பர் 18, வெள்ளிக் கிழமை காலை, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கொழும்பில் உள்ள அலுவலகத்தில் தனது மேசையில் இருந்து எழுதிக் கொண்டிருக்கும் பொழுது தோழர் கீர்த்தி, அவரது நெஞ்சுப் பையில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரும் ரத்த அடைப்பிற்கு ஒரு சில நிமிடங்களில் பலியானார். அப்பொழுது அவர் தனது முப்பத்தியொன்பதாவது பிறந்த நாளைத் தாண்டி ஆக ஆறு வாரங்களே சென்றிருந்தன. இந்த மிகப் பெரும் புரட்சித் தத்துவவாதி மற்றும் பட்டாளி வர்க்க சர்வதேசவாதிக்கு இந்நூலை ஆழமான மரியாதையுடன் நான் அர்ப்பணம் செய்கின்றேன்.

டேவிட் நோத்,
டிட்ரோயிற், மிச்சிக்கன்
ஜனவரி
5, 1988,

Copyright 1998-2003
World Socialist Web Site
All rights reserved