இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர்களின் முழு ஆதரவுடன் லெபனான் மற்றும் காசாவை நெதன்யாகு தாக்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனிய காஸா பகுதியைக் கட்டுப்படுத்தும் போராளி மதக்குழுவான ஹமாஸ், ராக்கெட் தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் அதன்மீது குற்றம் சுமத்தியது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய போர் விமானங்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை தெற்கு லெபனான் மற்றும் காசாவில் உள்ள இலக்குகளைத் தாக்கின.  

ஏப்ரல் 7, 2023, வெள்ளிக்கிழமை அன்று, தெற்கு லெபனானில் உள்ள மாலியா கிராமத்தில், இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஒரு சிறிய பாலத்தை லெபனானியர்கள் திருத்துகின்றனர். இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகாலை தெற்கு லெபனானில் தாக்குதலைத் தொடங்கி, காசா பகுதியில் குண்டுவீச்சு மூலம் அழுத்தம் கொடுத்ததானது, பிராந்தியத்தில் பரவலாக மோதல் வெடிப்பதைக் குறிக்கிறது [AP Photo/Mohammed Zaatari]

இஸ்ரேலின் Iron Dome பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தப்பட்ட ராக்கெட்டுகள், சிறிய சேதங்கள் மற்றும் காயங்களை ஏற்படுத்தின.

இந்த வாரம் கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய வழிபாட்டாளர்கள் மீது பொலிசார் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இஸ்ரேலின் ஆவேசமான குண்டுவீச்சுத் தாக்குதல் நடைபெறுகிறது. 

இஸ்ரேலின் எதிரிகளான பாலஸ்தீனியர்கள், ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகள், லெபனானின் ஹெஸ்பொல்லா, ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் ஆகியோரைத் தாக்குவதன் மூலம், சர்வாதிகார அதிகாரங்களைப் பெறுவதற்கான அவரது அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்ப்பவர்களை அடக்குவதற்கான வழிமுறையாக, போர் வெறியைத் தூண்டுவதற்கான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீர்மானத்துடன் இது பிணைந்துள்ளது. தற்போது நான்காவது மாதத்திற்குள் நுழையும் இந்த எதிர்ப்பு இயக்கமானது, இஸ்ரேலின் 75 ஆண்டுகால வரலாற்றில் மிகப் பெரியது என்பதுடன் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாட்டின் தீவிர சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை வெளிப்புறமாகத் திசைதிருப்ப இராணுவவாதத்தின் அடிப்படையில் ஒருவித தேசிய “ஒற்றுமையை” உருவாக்குவதே அவரது நோக்கமாகும். 

இந்த நோக்கத்திற்காக, காசா மற்றும் லெபனானில் இருந்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்களுக்கு ஹமாஸ் மீது நெதன்யாகு விரைவாக குற்றம் சாட்டினார். ஒருவேளை, இஸ்ரேல் 2006 இல் ஈரானால் ஆதரிக்கப்பட்ட ஒரு முடிவில்லாத போரை நடத்திய லெபனானுடன் ஒரு போரைத் தூண்டுவதைத் தவிர்ப்பதற்காக இதைச் செய்திருக்கலாம்.  இருப்பினும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்களை நடத்துவது உட்பட, இஸ்ரேல் எல்லையில் நடக்கும் அனைத்திற்கும் லெபனான் அரசு தான் பொறுப்பாகக் கருதப்படுகிறது. லெபனானில் இருந்து ஹமாஸ் செயல்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அறிவித்தார்.

வியாழன் காலை, நெதன்யாகு தனது பாசிசப் பங்காளிகளைக் கொண்ட பாதுகாப்பு அமைச்சரவையைக் கூட்டி, “இன்று இரவும் அதற்கு அப்பாலும் இஸ்ரேலின் பதில், நமது எதிரிகளுக்கு பெரும் விலையை கொடுக்கவைக்கும்” என்று கூறும் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டார்.

வெள்ளியன்று, இஸ்ரேல் பாதுகாப்புப் படை தலைமைப் பணியாளர் ஹெர்சி ஹலேவி, வான்வழி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவம் அதன் தயார்நிலையை மேம்படுத்தும் என்று கூறி, ரிசேவ் படைகளை அழைக்க உத்தரவிட்டார். இந்த அழைப்பு வான் பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் “வான் தாக்குதல் படைப் பிரிவுகள்” மீது கவனம் செலுத்தும். அதாவது இது போர் விமான விமானிகள்,  ஆளில்லா விமான தாக்குதல் இயக்குநர்கள் மற்றும் பிற விமானக் குழுவினருக்கு விடுக்கப்படும் ஒரு குறிப்பாகும். வெள்ளிக்கிழமை ஜோர்டான் பள்ளத்தாக்கில் எப்ராட் குடியேற்றத்திற்கு அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரண்டு சகோதரிகள் கொல்லப்பட்டு அவர்களின் தாயார் படுகாயமடைந்ததை அடுத்து, மேற்குக் கரையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதன் படைகளை வலுப்படுத்துமாறு ஹலேவி அறிவுறுத்தினார். 

இஸ்ரேலின் காவல்துறை ஆணையர் கோபி ஷப்தாய், அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு பாலஸ்தீனியர்களைக் குற்றம் சாட்டியும், உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் ஆயுதங்களை கையில் ஏந்துமாறு அழைப்பு விடுத்தும் பிரச்சினைக்கு மேலும் எரியூட்டினார். “அமைதியை சீர்குலைப்பதற்கான இந்த உந்துதல் சமீபத்திய நாட்களில் அதிகரித்துள்ளதுடன், இது இடைவிடாத தூண்டுதலின் விளைவாக உள்ளது.”

கிழக்கு ஜெருசலேமில், மதிய நேர தொழுகைக்கு முன்னதாக, பழைய நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 2,300 அதிகாரிகளை பொலிசார் நிலைநிறுத்தி, அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் “பயங்கரவாதக் கொடிகள்” மற்றும் ஒரு “தூண்டுதல்” என்று முத்திரைகுத்தப்பட்ட பாலஸ்தீனியக் கொடிகளை அசைத்ததற்காக 15 வழிபாட்டாளர்களை கைது செய்தனர். அதாவது இது, மசூதியின் நுழைவாயிலுக்கு அருகே ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி விடியும் முன் கலைந்து போனதைத் தொடர்ந்து நடந்தது.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான நெதன்யாகுவின் ஆத்திரமூட்டல்களுக்கு பைடென் நிர்வாகத்தின் முழு ஆதரவும் உள்ளது. அதேவேளை, அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளரான வேதாந்த் படேல், ரமழானின் போது அல்-அக்ஸா மசூதியை இஸ்ரேல் தாக்கியது குறித்து தனது “கவலையை” வெளிப்படுத்திய போதிலும், இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்க அவர் மறுத்துவிட்டார். எவ்வாறாயினும், லெபனானில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதையும் காசாவில் இருந்து நடத்தப்பட்ட முந்தைய தாக்குதல்களையும் அவர் கண்டனம் செய்ததோடு, “இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் அர்ப்பணிப்பு மிக உறுதியானது. மேலும் அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு நியாயமான உரிமை உள்ளது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்” என்று கூறி இஸ்ரேலின் குற்றம் குறித்த வாஷிங்டனின் நீண்டகால நியாயப்படுத்தலை அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஒரு இஸ்ரேலிய அதிகாரியின் கூற்றுப்படி, பைடென் நிர்வாகமானது, இஸ்ரேலின் தேடுதல்களை விமர்சிக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட விடாமலும் தடுத்தது.

எதிர்க்கட்சி இயக்கத்தின் தலைவர்களாக தம்மை தாமே அறிவித்துக்கொண்ட, தேசிய ஒற்றுமைக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான பென்னி கண்ட்ஸ் மற்றும் யெஷ் அடிட் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான யாய்ர் லாபிட் ஆகியோரின் முழு ஆதரவை நெதன்யாகு நம்பலாம். லெபனானில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டதற்கு அரசாங்கத்தின் பிரதிபலிப்புடன் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டிருப்பதாக வியாழன் மாலை கண்ட்ஸ் அறிவித்தார். மேலும், ‘எங்கள் குடிமக்களை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை எதிர்கொள்கையில், எங்கள் குடிமக்களின் வீடுகள் மீதான துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை எதிர்கொள்கையில், கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி என்று எதுவும் கிடையாது. நாங்கள் அனைவரும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளையும், அனைத்து பாதுகாப்பு அமைப்புகளைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளோம்’ என்று கூறினார்.

இஸ்ரேலின் நெகிழ்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாட்டிற்கு அரசாங்கம் சேதம் விளைவிப்பதாகவும், உள்நாட்டு பிளவைக் கொண்டு நாட்டை அச்சுறுத்துவதாகவும் கண்ட்ஸ் குற்றம் சாட்டினார்.  நீதித்துறை மறுசீரமைப்பை நிறுத்தியதற்காக பதவி நீக்கத்தை எதிர்கொண்ட நெதன்யாகுவின் லிகுட் கட்சியின் முன்னணி உறுப்பினரான பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டிற்கு அவர் தனது ஆதரவை அறிவித்ததோடு, கேலண்டை மீண்டும் பணியில் அமர்த்துமாறு நெதன்யாகுவிடம் அழைப்பு விடுத்தார். ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு அரசாங்கத்தின் கீழ் பணியாற்ற விரும்பாததால், தங்களது வழமையான அழைப்பை மறுப்பதாகக் கூறும் ஆயிரக்கணக்கான இடஒதுக்கீட்டாளர்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டிய கேலண்ட், இப்போது விமானப் படையின் ரிசேவ் படையினருக்கு அழைப்பு விடுப்பது உட்பட போர் உந்துதலுக்கு தலைமை தாங்குகிறார். 

இரண்டு தொடர்ச்சியான இரவுகளில் அல்-அக்ஸா மசூதி வளாகத்தின் மீது பொலிசார் மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதை கண்ட்ஸூம் ஆதரித்தார். மாறாக அனைத்து ஆதாரங்களுக்கும் முற்றிலும் முரண்படும் வகையில், ‘இஸ்ரேல் வழிபாட்டு சுதந்திரத்தை பராமரித்தது, மேலும் தொடர்ந்து பராமரிக்கிறது என்பதுடன், சமீபத்தில் கூட வழிபாட்டாளர்கள் அத்தளத்திற்குள் நுழைவதை அதிகரித்துள்ளது. ஆனால் அதேவேளை மசூதிகள் பயங்கரவாதத்தின் கூடுகளாக மாறுவதை அது அனுமதிக்காது’ என்று அவர் அறிவித்துள்ளார். 

லாபிட், ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து, அனைத்துக்கட்சி ஆதரவை அரசாங்கம் நம்பலாம் என்று உறுதியளித்து, ‘இஸ்ரேல் இன்று, அதன் வடக்கு எல்லை, காசா எல்லைப் பகுதி, யூதேயா மற்றும் சமாரியா [ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை] மற்றும் {ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு} ஜெருசலேம் என நான்கு முனைகளில் மோதலில் உள்ளது” என்று கூறுகிறார். மேலும், “பாதுகாப்பு என்று வரும்போது, இஸ்ரேலில் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி என எந்தப் பிரிவும் இருக்காது. அதாவது எந்த எதிரிக்கும் எதிராக நாங்கள் ஒன்றுபட்டு நிற்போம். இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் கடுமையான எதிர்த்தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகளும் கூட அரசாங்கத்திற்கு முழு ஆதரவை வழங்கும்” என்றும் அவர் கூறினார்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான நெதன்யாகுவின் பாசிசத் தாக்குதலுக்கும், மற்றும் ஹெஸ்பொல்லா, சிரியா மற்றும் ஈரானுக்கு எதிரான அவரது போர்வெறிக்கும் கண்ட்ஸும் லாபிட்டும் வழங்கும் ஆதரவானது, உத்தியோகபூர்வ எதிர்ப்பு இயக்கம் என்பது பாலஸ்தீனியர்கள், ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான போருக்கான எதிராகவோ அல்லது சர்வாதிகாரம் மற்றும் எதேச்சதிகாரத்திற்கு ஒரு முற்போக்கான மாற்றீட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. சியோனிச அரசின் உறுதியான பாதுகாவலர்களாக, நெதன்யாகுவும் அவரது பாசிசக் கூட்டணிப் பங்காளிகளும் இஸ்ரேலின் பலமற்ற ஜனநாயகப் மூடுதிரையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள் என்பதோடு, ஏற்கனவே தீவிரமாக துருவப்படுத்தப்பட்ட சமூகத்தை உள்நாட்டுப் போரைத் தூண்டும் அளவிற்கு பிளவுபடுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றனர் என்ற அவர்களின் அச்சத்தில் இருந்து அவர்களின் எதிர்ப்பு உருவாகிறது.

அவர்களின் தலைமையின் கீழ், பாரிய எதிர்ப்பு இயக்கமானது பாலஸ்தீனிய மக்களின் போராட்டங்களை ஆதரிப்பதிலோ அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு, இஸ்ரேலிய அரேபியர்களிடமிருந்து ஆதரவைத் திரட்டுவதிலோ பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளது.

இந்த இயக்கம் தற்போது ஒரு திருப்புமுனையில் உள்ளது. அது வெற்றியடைய வேண்டுமானால், பாலஸ்தீனிய மக்களை வெளியேற்றி அவர்களின் உடமைகளை பறித்துக் கொள்வதை அடிப்படையாகக் கொண்ட ஒரு முதலாளித்துவ அரசானது, யூத மக்களுக்கு சமத்துவம், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை வழங்க முடியும் என்ற சியோனிச கட்டுக்கதையை யூத தொழிலாளர்களும் இளைஞர்களும் நிராகரிக்க வேண்டும். மேலும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் யூத மற்றும் அரேபிய தொழிலாளர்களின் புரட்சிகர ஐக்கியத்தின் அடிப்படையிலான ஒரு சோசலிச மூலோபாயத்தை அவர்கள் பின்பற்ற வேண்டும். 

இத்தகைய இயக்கத்தின் அபிவிருத்திக்கான சக்திவாய்ந்த புறநிலை அடித்தளமானது, பல மாதங்களாக நெதன்யாகு அரசாங்கத்திற்கு எதிராக போராடி வரும் இஸ்ரேலின் நகர்ப்பகுதிகள் மற்றும் நகரங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இருந்து மட்டும் அல்லாது ஊதிய உயர்வு வழங்கப்படாமை மற்றும் சுதந்திர தொழிற்சங்கத்திற்கான தேர்தல்கள் குறித்து கடந்த இரண்டு மாதங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய ஆசிரியர்கள், லெபனானில் தொலைத்தொடர்பு மற்றும் பிற தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் தங்கள் ஊதியங்களும் ஓய்வூதியங்களும் சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராடி வரும் லெபனான் தொழிலாளர்கள், மற்றும் பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் தங்கள் அரசாங்கங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சக்திவாய்ந்த தொழிலாளர் திரளினர் ஆகியவற்றுக்கு மத்தியில் இருந்தும் எழும் எதிர்ப்பு இயக்கத்திற்கான புறநிலை அடித்தளத்தில் இருந்தும் கண்டறியப்பட வேண்டும்.

ஆனால் அந்த சக்திவாய்ந்த இயக்கம் நடைமுறைக்கு வருவதற்கு, தொழிலாள வர்க்கமானது உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பெறப்பட்ட வரலாற்றுரீதியாக அபிவிருத்திசெய்யப்பட்ட மூலோபாய படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தெளிவான வேலைத்திட்டத்துடன் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும். இன்று ஒரு நூற்றாண்டு கால அயராத அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) மட்டுமே இது பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. 

Loading