முன்னோக்கு

இந்தியாவின் அதிவலது பிரமத மந்திரி மோடியை வரவேற்பதில் பைடென் வாஷிங்டனை வழி நடத்துகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்.

இந்தியாவின் அதிவலது இந்து மேலாதிக்கவாத பிரதம மந்திரி மோடியின் நான்கு நாள் அமெரிக்க பயணம் வெள்ளிக்கிழமை நிறைவடைகின்ற நிலையில், அதிபர் ஜோ பைடெனும் ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் இந்தப் பயணத்தின் போது அவருக்கு அனைத்து மரியாதையும் கவனப்பும் அளித்து அவரைக் கௌரவித்துள்ளது.

வாஷிங்டனில் ஜூன் 22, 2023, வியாழக்கிழமை, வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளி பகுதியில், அரசு வரவேற்பு முடிந்து அதிபர் ஜோ பைடெனும், முதல் பெண்மணி ஜில் பைடெனும், இந்தியப் பிரதம மந்திரி நரேந்திர மோடியும் வெள்ளை மாளிகையை நோக்கி நடந்து செல்கிறார்கள். [AP Photo/Andrew Harnik]

பகட்டாராவாரமும் கொண்டாட்டமும் நிறைந்த இந்த அரசுப் பயணத்திற்குக் கூடுதலாக, வியாழக்கிழமை பிற்பகல் அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஒரு கூட்டு அமர்வில் உரையாற்ற மோடி அழைக்கப்பட்டிருந்தார். அவ்விதத்தில், இரண்டு முறை இவ்வாறு உரையாற்ற அழைக்கப்பட்ட ஒரு சில வெளிநாட்டு அரசியல் தலைவர்களில் ஒருவராக, வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருடன் மோடியும் இணைகிறார்.

அனைத்து செய்திகளின்படி, பைடென்-மோடி சந்திப்பானது சீனாவை இலக்கில் வைத்து, இந்தோ-அமெரிக்க “உலகளாவிய மூலோபாய பங்காண்மையை” அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உத்தேசிக்கிறது.

பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஆயுதக் கொள்முதல்கள், கூட்டு இராணுவ உற்பத்தி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், மற்றும் சீனாவுக்குப் போட்டியாக ஒரு உற்பத்தி சங்கிலி மையமாக இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளே, இந்த முக்கிய சந்திப்பு “வழங்கக்கூடியதாக” உள்ளது.

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் பராக் ஒபாமாவில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இப்போது பைடென் வரையில், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் அடுத்தடுத்து வந்த அமெரிக்க அதிபர்கள், ஒருபோல, இந்தோ-அமெரிக்க பங்காண்மையை, “பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்புகள்” அடிப்படையில் அமைக்கப்பட்ட, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட “ஜனநாயகங்களின்” ஒரு கூட்டணியாகக் காட்டியுள்ளன.

இன்று இந்தப் பொய் முன்னெப்போதையும் விட வெளிப்படையாக அப்பட்டமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. அவர்களின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், மோடியும் அவரது இந்து மேலாதிக்கவாத பிஜேபி உம் முஸ்லிம்-விரோத மற்றும் சிறுபான்மையினர்-விரோத வெறியையும் வன்முறையையும் தூண்டிவிட்ட அதேவேளையில், ஜனநாயக உரிமைகள் மீது பாரிய தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில், பாரபட்சமான பசு வதைத் தடைச் சட்டமும், அதைத் தான்தோன்றித்தனமான நீதிமுறை மூலமாக அமுலாக்கியமையும், அரசாங்கத்தை எதிர்க்கும் முஸ்லீம்களின் வீடுகளை இடித்தமை, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மீது பரவலான தணிக்கை, கடுமையான பயங்கரவாத-தடுப்பு சட்டங்களின் கீழ் பத்திரிகையாளர்களுக்கு வழக்கு விசாரணையின்றி காலவரையற்ற சிறைத் தண்டனை, வேலைநிறுத்தங்களைக் குற்றகரமாக்கும் தொழிலாளர் “சீர்திருத்த” நெறிமுறைகளை நிறைவேற்றியமை ஆகியவையும் உள்ளடங்கும்.

பிஜேபி உம் மற்றும் மோடி வாழ்நாள் உறுப்பினராக உள்ள இந்து மேலாதிக்கவாத ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைமையில் அதன் பாசிசவாத கூட்டாளிகளும் அரசியல் அதிகாரத்தை ஏகபோகமாக்க முனைந்துள்ள நிலையில், வலதுசாரி முதலாளித்துவ எதிர்க்கட்சி தலைவர்களும் கூட வேட்டையாடப்படுகிறார்கள். முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இட்டுக்கட்டப்பட்ட மோசடி குற்றச்சாட்டுக்களின் பேரில் சமீபத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அடுத்தாண்டு தேசிய தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது, அவரது மேல்முறையீடு தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில், அவரே கூட விரைவில் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்படலாம்.

அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் ஊடகங்களும், வரலாற்றுரீதியில் சீனாவின் முஸ்லீம் வீகர் இன சிறுபான்மையினருக்கு எதிராக சீன அரசின் “இனப்படுகொலை” என்று வெளிப்படையாகவே ஜோடிக்கப்பட்ட அபத்தமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. ஆனால் இந்தியாவின் முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட சர்ச்சைக்குரிய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கண்கூடான பொலிஸ் ஆட்சி குறித்து அவை வாய்திறப்பதில்லை.

பட்டவர்த்தனமாக, மோடியும் மற்றும் அவரது பிஜேபி கட்சியும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய தாக்குதலில் அதன் முன்னணி அரசாக சேவையாற்றும் நோக்கத்தைப் பின்தொடர்ந்து வரும் அதேவேளையில், வேகமாக விரிவாகி அதிகரித்தளவில் கிளர்ச்சிகரமாக உள்ள இந்திய தொழிலாள வர்க்கத்தைக் கொடூரமாக சுரண்டும் ஓர் எதேச்சதிகார ஆட்சிக்கு, அரசியல் மற்றும் போலி-சட்ட அடித்தளங்களை அமைத்து வருகின்றனர்.

மோடியின் இந்த குற்றகரமான முன்வரலாறு மற்றும் அவரது எதேச்சதிகார நடவடிக்கைகளும் வேட்கைகளும் பைடென் நிர்வாகத்திற்கும் வாஷிங்டன் அரசியல் உயரடுக்கிற்கும் நன்கு பரிச்சயமானவை தான். மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது, 2,000 பேர் கொல்லப்பட்டு நூறாயிரக் கணக்கானவர்களை வீடற்றவர்களாக ஆக்கிய 2002 முஸ்லீம்-விரோத படுகொலையைத் தூண்டியதிலும் ஒத்துழைத்ததிலும் அவர் வகித்த பாத்திரத்திற்காக, ஒரு தசாப்தத்திற்கு நெருக்கமாக, அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மோடிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இது 2014 இல் மோடி இந்திய பிரதம மந்திரியாக ஆனப் பின்னர் தான் நீக்கப்பட்டது.

பெயர் வெளியிட விரும்பாத 'மூத்த' பைடென் நிர்வாக அதிகாரி ஒருவர் சமீபத்தில் அல்-ஜசீராவிடம் கூறுகையில், “முஸ்லீம்களுக்கு எதிராக பகிரங்கமான இனப்படுகொலைகளுக்கு அழைப்பு விடுப்பது, குண்டர்களைக் கொண்டு கொலை செய்தல் மற்றும் வெறுப்பால் எரியூட்டப்பட்ட பிற வன்முறை, ஆலயங்கள் மீதான தாக்குதல்கள், வீடுகள் இடிப்பு, மற்றும் மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களில் ஈடுபட்ட சிலர் விஷயத்தில் தண்டனையில் இருந்து விதிவிலக்கு மற்றும் கருணை” உட்பட ஒரு நாசகரமான வகுப்புவாத சூழலை மோடி அரசாங்கம் உருவாக்கி இருப்பதை ஒப்புக் கொண்டார். 

செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் உட்பட காங்கிரஸ் சபையின் எழுபத்தைந்து உறுப்பினர்கள், மோடி உடனான இந்த சந்திப்பின் போது மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை எழுப்ப வேண்டுமென வலியுறுத்திய ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு பைடெனுக்கு அனுப்பி இருந்தனர். இது ஒரு துளி ஜனநாயக நம்பகத்தன்மையைக் காப்பாற்றுவதற்கான முயற்சி என்பதை விட, ரஷ்யாவுக்கு எதிரான போர் உட்பட அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையை அவர்கள் இன்னும் சிறப்பாக ஊக்குவிக்கலாம் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிதாபகரமான உறுமல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

இந்தோ-பசிபிக் பகுதியில் 'ஸ்திரத்தன்மையை', அதாவது ஏகாதிபத்திய நலன்களை, நிலைநிறுத்துவதில் இந்திய-அமெரிக்க பங்காண்மையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு தொடங்கி, அதிலேயே நிறைவு செய்திருந்த அந்தக் கடிதம், 'மனித உரிமைகளை' மீண்டும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மையக் கோட்பாடாக மாற்றியதற்காக பைடெனைப் பாராட்டியது. மோடி ஆட்சி என்று வரும் போது, 'அரசியல் களத்தைச் சுருக்குவது, மத சகிப்புத்தன்மையின்மையின் அதிகரிப்பு, சமூக மக்கள் அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்களை இலக்கில் வைத்தல், பத்திரிகை சுதந்திரம் மற்றும் இணைய அணுகுதல் மீது அதிகரிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகள்” ஆகியவற்றை பைடென் குறிப்பிட வேண்டும் என்று கூறுவதற்கு மட்டுமே அவர்களால் முன்வர முடிந்தது.

கடல் போல் வறுமை மற்றும் அவலநிலைக்கு மத்தியில் இந்தியாவின் செல்வ வளத்தில் 45 சதவீதத்தை விழுங்கி உள்ள உயர்மட்ட 1 சதவீதத்தினரான, இந்தியாவின் முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் பிரதிநிதியாக மோடி பொருத்தமாக இருக்கிறார் என்றால், அமெரிக்காவின் பைடெனும் ட்ரம்பும் கூட அவ்வாறே உள்ளனர். ஓர் அரை நூற்றாண்டு காலம் செனட்டராக, துணை அதிபராக மற்றும் இப்போது அதிபராகவும் இருந்துள்ள முந்தையவர் (அதாவது, பைடென்) ஏகாதிபத்திய சூழ்ச்சிகளில் மூழ்கிக் களித்துள்ளார். அணுஆயுதப் போரைக் கட்டவிழ்ப்பது உட்பட, ரஷ்யாவுடன் போரைத் தூண்டிவிட்டு “என்ன விலை கொடுத்தாவது, எவ்வளவு காலத்திற்கும்” அதை தொடர, அமெரிக்க மக்கள் முதுகுக்குப் பின்னால் அவர் சூழ்ச்சிகள் செய்துள்ளார். இதற்கிடையே, ஜனவரி 6, 2021 இல் தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலமாக ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க முயன்ற பாசிச பில்லியனர் ட்ரம்ப், சோசலிசத்தை ஒழிப்பதற்குச் சபதம் ஏற்று ஆளும் வர்க்கத்தின் ஆதரவை அணித்திரட்ட முயல்கிறார். 

வெளிநாடுகளில் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதிலும் மற்றும் உள்நாட்டில் அதிகரித்தளவில் அமைதியிழந்துள்ள தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதிலும் அமெரிக்க ஆளும் வர்க்கம் முகங்கொடுக்கும் சமாளிக்க முடியாத பிரச்சனைகளில் இருந்து வெளியே வர, ஆக்கிரமிப்பும் போரும் மட்டுமே ஒரே வழி என்ற காய்ச்சல் அமெரிக்க ஆளும் வர்க்கத்தைப் பீடித்துள்ளது என்பதையே, இந்த பாசிச குண்டர் மோடியை உத்தியோகபூர்வமாக வாஷிங்டன் அரவணைப்பதன் ஒருமித்தத்தன்மையும் ஆர்வமும் ஊர்ஜிதப்படுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் உக்ரேனுடன் போரைத் தொடர்கின்ற போதும் கூட, அதன் முக்கிய மூலோபாய போட்டியாளராக அது அடையாளம் கண்டுள்ள சீனாவுடன் தன்னை ஒரு வன்முறையான மோதலில் பிணைத்து வருகிறது.

பைடென் நிர்வாகம் இந்த இரட்டை நோக்கங்களைத் தொடர்ந்தாலும் கூட, ஊசலாடும் ஒரு திட்டவட்டமான அம்சமும் உள்ளது. சீனாவுடனான பதட்டங்களைக் குறைப்பதே, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் பிளிங்கெனின் ஜூன் 18-19 சீனப் பயணத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கமாக இருந்தது, இதில் ஜின்பிங் உடனான ஓர் சந்திப்பும் உள்ளடக்கி இருந்தது. இது ரஷ்யா உடனான போரைத் தொடர வாஷிங்டன் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளுக்குச் சிறந்த நிலைமைகளை உருவாக்குவதுடன் பிணைந்த ஒரு தந்திரோபாய மாற்றமாக இருக்கலாம். ஏனென்றால் பெரிதும் பெருமையாக பேசப்பட்ட உக்ரேனிய எதிர்தாக்குதல் தோல்வி அடைந்துள்ள நிலையில், இந்தப் போரில் நேட்டோவின் நேரடி தலையீட்டுக்கான கூச்சலும் அதிகரித்து வரும் நிலைமைகளின் கீழ் நடக்கிறது.

இருப்பினும் அவருடைய சீன-விரோத கூட்டாளி மோடியை வரவேற்க தயாரான பைடென், ஜி யை ஒரு சர்வாதிகாரியாக கண்டித்து, ஜி இக்கு எதிராக விளாசியதன் மூலம் இன்னும் சீண்டிவிட்டார்.

எடுத்துச் சொன்னால், வாஷிங்டனின் மூலோபாய அபிலாஷைகளுக்குள் இந்தியாவை இணைப்பது, நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த ஒரு மூலோபாயமாகும். நேட்டோவை விரிவாக்குவதன் மூலமாக ரஷ்யாவை மூலோபாயரீதியில் சுற்றி வளைப்பதற்கும் மற்றும் உக்ரேனை நேட்டோ-ஐரோப்பிய ஒன்றிய பினாமியாக மாற்றுவதற்குமான அமெரிக்காவின் முனைவும் கூட அதே போன்றது தான்.

அதைப் போலவே, இந்தோ-பசிபிக் இராணுவப் பாதுகாப்பு “பங்காண்மை” முற்றிலும் பொறுப்பற்ற முறையில் தொடரப்பட்டு வருகிறது.

அமெரிக்கா-சீன மோதலுடன் சேர்ந்து, இந்திய-சீன எல்லைப் பிரச்சினை மற்றும் மூன்று கால் நூற்றாண்டு பழமையான இந்தோ-பாகிஸ்தான் மூலோபாய போட்டி ஆகியவை கலந்து, இதில் உள்ள ஓர் ஆபத்தான கூறுபாடு ஒவ்வொன்றுக்கும் பாரியளவில் புதிய வெடிப்பார்ந்த ஆற்றலைக் கொடுக்கிறது.

அமெரிக்கா, முதலில் ட்ரம்பின் கீழ் இப்போது பைடெனின் கீழ், இந்திய-சீன எல்லை மோதலில் எந்த நடுநிலை நிலைப்பாட்டையும் கைவிட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை வாஷிங்டன் இப்போது, சீனாவுக்கும் தென் சீனக் கடல் பகுதியில் உள்ள அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா தூண்டிவிட்ட எல்லை பிரச்சினைகளைச் சீன “ஆக்கிரமிப்புக்கு” உதாரணங்களாகச் சமப்படுத்தி காட்டுகிறது. சீனாவும் இந்தியாவும் போட்டி போடும் இமாலய எல்லையை ஒட்டி, ஒன்றுக்கு எதிராக ஒன்று பத்தாயிரக் கணக்கான துருப்புகள், டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை நிறுத்தி உள்ள நிலைமைகளின் கீழ், சீன ஊடருவல் என்று கூறப்படுவதை வெற்றிகரமாக எதிர்கொள்ள “உடனுக்கு உடனான” அமெரிக்க உளவுத் தகவல்கள் அவர்களுக்கு உதவியதாக இந்திய அதிகாரிகள் பெருமைபீற்றி வருகிறார்கள்.

பைடென்-மோடி சந்திப்பின் போது மோடியின் எதேச்சதிகார ஆட்சியையும் மோசமான இந்து மேலாதிக்கவாதத்தையும் பைடென் பணிவுடன் புறக்கணிப்பார் என்றாலும், ரஷ்யாவுடனான இந்தியாவின் மூலோபாய உறவுகள் மீதான கேள்வி மீது அவர் அழுத்தமளிப்பார். புது டெல்லி, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சொந்த சூறையாடும் திட்டநிரலைப் பின்தொடர்வதற்காக, உக்ரேன் போரில் ரஷ்யாவை “ஆக்கிரமிப்பாளராக” முத்திரை குத்தி, தண்டிக்கும் விதமான தடையாணைகளை அது விதிக்க வேண்டுமென்ற அமெரிக்க அழுத்தத்தைப் புறக்கணித்துள்ளது.

இதற்கு பதிலாக, மோடி, சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ மூலோபாய தாக்குதலில் இந்தியாவை இன்னும் முழுமையாக ஒருங்கிணைத்ததன் மூலம், வாஷிங்டனைச் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இந்த ஒருங்கிணைப்பு ஏற்கனவே பரந்தளவில் உள்ளது என்றாலும், இந்த வார சந்திப்பில் இன்னும் கூடுதலாக உயர்த்தப்பட்டன. எப்போதும் அதிகரிக்கப்பட்டு வரும் கூட்டு பயிற்சிகளும் மற்றும் இணக்கமான உடன்படிக்கைகளும் இதில் உள்ளடங்கும். பெருந்தொற்று தூண்டிவிட்ட பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிக்கு அதிக விடையிறுப்பாக கடந்த மூன்றாண்டுகளில், இந்தியா அமெரிக்காவுடனும் அதன் முக்கிய ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனும் அதன் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர உறவுகளைப் பரந்தளவில் அதிகரித்துள்ளது. அமெரிக்கா தலைமையில் அவர்களின் பகுதியளவிலான இராணுவப் பாதுகாப்பு கூட்டணியான Quad (நாற்கர கூட்டு) என்பது இந்த வலையமைப்பின் மையத்தில் உள்ளது. 

அமெரிக்க ஏகாதிபத்தியம் ரஷ்யாவுக்கு எதிரான போரை நடத்தி வருகின்ற அதேவேளையில், சீனாவுடனான போருக்கும் முறையாக தயாராகி வருகிறது என்பது, உக்ரேன் போர் ஓர் அத்தியாயம் இல்லை, மாறாக உலகை ஒரு புதிய ஏகாதிபத்திய மறுபிரிவினை செய்வதற்கான ஆரம்ப கட்டங்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் ஏகாதிபத்திய போரை வெடிப்பார்ந்து உருவாக்கி வரும் அதே முதலாளித்துவ முரண்பாடுகள் உலகளவில் ஒரு பரந்த வர்க்க போராட்ட எழுச்சிக்கும் எரியூட்டி, சோசலிச புரட்சிக்கான புறநிலைமைகளை உருவாக்கி வருகின்றன.

Loading