லெபனான் மற்றும் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் போருக்கு தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸாவில், கடந்த வியாழன் பிற்பகல் 3 மணி வரையிலான 24 மணி நேரத்தில், இஸ்ரேலியப் படைகளால் மேலும் 210 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு, 360 பேர்கள் காயமடைந்துள்ளனர் என்று காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 21,300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 55,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், காணாமல் போயுள்ள சுமார் 7,000 பேர்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவின் மக்கள் தொகையில் 85 வீதமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 40 வீதமானோர் பஞ்சத்தை எதிர்கொள்வதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அத்தோடு, ஐ.நா சபையின் தங்குமிடங்கள் நான்கு மடங்குகள் அதிகமானவர்களை கொண்டுள்ளன.

தெற்கு இஸ்ரேலில் இருந்து பார்த்தால், காஸா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சைத் தொடர்ந்து புகை எழுகிறது, December 26, 2023 [AP Photo/Leo Correa]

காஸாவில் இனப்படுகொலை தொடரும் அதே வேளையில், இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் போரின் நோக்கத்தை விரிவுபடுத்த விரும்புகின்றன. இந்த வார தொடக்கத்தில், இஸ்ரேல் பல முன்னரங்குகளில் போரில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறினார். “நாங்கள் பல முன்னரங்குகளில் போரில் இருக்கிறோம். காஸா, லெபனான், சிரியா, யூதேயா மற்றும் சமாரியா (மேற்குக் கரை), ஈராக், ஏமன் மற்றும் ஈரான் ஆகிய ஏழு முனைகளில் இருந்து நாங்கள் தாக்கப்படுகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

“இது வரையறுக்கப்பட்ட மோதல்களின் சகாப்தத்தின் முடிவு, வரையறுக்கப்பட்ட மோதலை நிர்வகிக்க முடியும் என்ற அனுமானத்தின் கீழ் நாங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டோம், ஆனால் அது மறைந்து வரும் ஒரு நிகழ்வு. இன்று நாம் போர்க்களங்களில் ஒன்றிணைந்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வைக் காண்கிறோம்” என்று அவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதே வழிகளில், “நாங்கள் நிறுத்தப் போவதில்லை, யுத்தம் இறுதி வரை தொடரும், நாம் அதை முடிக்கும் வரை விடப்போவதில்லை” என்ற கருத்தை வெளியிட்டார். ஏற்கனவே பாழடைந்து போயுள்ள கஸா பகுதியைக் காட்டிலும் பரந்த மத்திய கிழக்கைப்பற்றியே அவர் குறிப்பிடுகிறார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் மீது இஸ்ரேல் தனது இராணுவ சர்வாதிகாரத்தை வலுப்படுத்துவதால், மேற்குக் கரை ஏற்கனவே பரவலான மோதலின் மைய இடங்களில் ஒன்றாகி உள்ளது.

புதன்கிழமை இரவு, இஸ்ரேல் இப்பிராந்தியத்தில் இதுவரை நடந்த போரில் இல்லாத வகையில் மிகத் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டது. அதிக எண்ணிக்கையிலான துருப்புக்கள் மற்றும் வாகனங்களை பத்து நகரங்களுக்கு அனுப்பிய இஸ்ரேல், குறைந்தது ஒருவரைக் கொன்றதுடன், 15 பேரைக் காயப்படுத்தியது. அதே நேரத்தில், குறைந்தது இரண்டு டசின் பேர் தடுத்து வைக்கப்பட்டனர், மேலும் பணப் பரிமாற்றங்களிலிருந்த 2.5 மில்லியன் டொலர்களை கைப்பற்றினர்.

அக்டோபர் 7 முதல், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) அல்லது மேற்குக் கரையில் குடியேறியவர்களால் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட 4,700 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கை சேர்ந்த ஊடகவியலாளர் மொயின் ரப்பானி அல் ஜசீராவிடம், “அவர்கள் வேண்டுமென்றே பாலஸ்தீனியர்களைத் தூண்டிவிட்டு, முடிந்தவரை மோதலை உருவாக்க முற்படுகின்றனர், இது மேற்குக் கரையில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டை நிரந்தரமாக உறுதிப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்”  என்று கூறினார்.

நவம்பர் 20 வரை, கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் “மனித உரிமைகள் தொடர்பான நிலவரம் குறித்த 22 பக்க வெள்ளை அறிக்கையை” ஐ.நா வியாழக்கிழமை வெளியிட்டது.

அந்த அறிக்கையின் பட்டியல்கள் பின்வருமாறு:

“இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ISF) தேவையற்ற அல்லது விகிதாசார சக்தியைப் பயன்படுத்துவதில் அதிகரிப்பு, மற்றும் இதன் விளைவாக சட்டவிரோதக் கொலைகள்,” “பாரியளவில் தன்னிச்சையான கைதுகள், தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தின் பிற மோசமான நடத்தைகள் மற்றும் கூட்டு தண்டனை பற்றிய கவலைகளை எழுப்புகிறது,” மற்றும் “ஆயுதமேந்திய குடியேற்றக்காரர்களின் தாக்குதல்களின் அதிவேக அதிகரிப்பு என்பன, பாலஸ்தீனிய மேய்ச்சல் சமூகங்களை இடம்பெயர்வதற்கு வழிவகுத்துள்ளது”. அத்துடன், “தற்போதைய பாரபட்சமான நடைமுறையில், நடமாடுவதற்கான கட்டுப்பாடுகள் அன்றாட வாழ்க்கையை பாதிப்பதுடன், உள்ளூர் பொருளாதாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

“அரச படையினரின் பாகுபாடான செயற்பாடுகள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குடியேற்றவாசிகளின் வன்முறை ஆகியவற்றால், பாலஸ்தீனியர்கள் தொடர்ந்தும் பயத்துடன் வாழத்தள்ளப்பட்டுள்ளனர். மேலும், நிலைமை ஏற்கனவே மோசமாக இருக்கும்போது, ​​​​அது மேலும் மோசமடையக்கூடும் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன”  என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஒரு பரந்த போரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு, லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லாவுடன் ஒரு முழு அளவிலான மோதல் வெடிக்க உள்ளது. மிக “உயர்ந்த ஆயத்த நிலையில் உள்ள” இஸ்ரேலியப் படைகள், தெற்கு லெபனான் பிரதேசத்தில் ஹெஸ்பொல்லா படைகளுடன் துப்பாக்கிச் சண்டையில் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

அக்டோபர் 7 முதல், லெபனான் எல்லையில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு டசின் பொதுமக்கள் உட்பட, அவர்களில் மூன்று பேர்கள் பத்திரிகையாளர்கள் ஆவர். பின்ட் ஜபீல் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் மூவர் செவ்வாயன்று கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒன்பது இஸ்ரேலிய படையினர்களும் 4 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

பின்ட் ஜபீலில் இருந்து அல் ஜசீரா பத்திரிக்கையாளர் அலி ஹாஷெம், விளங்கப்படுத்துகையில், “இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் தற்போது லெபனான் எல்லையில் இருந்து வெகு தொலைவில் உள்ள அதன் நகரங்களை குறிவைத்து வருகின்றன. உண்மை என்னவென்றால், இந்தப் பகுதி இப்போது ஒரு உண்மையான போர் மண்டலமாக மாறி வருகிறது. இது மிகவும் பயங்கரமானதானதாக இருப்பதோடு, இப்பகுதிகளை சுற்றி வருவது மிகவும் ஆபத்தானது, உண்மையில், நீங்கள் எப்போதும் இஸ்ரேலிய ட்ரோனை எதிர்பார்த்திருக்க வேண்டியதாகி உள்ளது” என்று குறிப்பிட்டார்.

லெபனான் எல்லைக்கு சென்ற இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் எலி கோஹன், ஹெஸ்பொல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாவை அச்சுறுத்துவதற்கு தனது இந்த விஜயத்தை பயன்படுத்திக் கொண்டார். “அவர் அடுத்ததாக உள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர் வரிசையில் அடுத்ததாக இருக்க விரும்பவில்லை என்றால், அவர் உடனடியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை (1701) செயல்படுத்த வேண்டும் மற்றும் வடக்கு லிட்டானியில் இருந்து ஹிஸ்புல்லாவை ஒதுக்கி வைக்க வேண்டும்” என்று கோஹன் குறிப்பிட்டார்.

“அரசியல் ரீதியில் தீர்த்து வைப்பதற்கு நாங்கள் பணியாற்றுவோம். அது வேலை செய்யவில்லை என்றால், இஸ்ரேல் அரசின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“நாங்கள் இப்போது ஒரு சிக்கலான வழியில் இருக்கிறோம். ஒன்று UN தீர்மானம் 1701 இன் படி, இஸ்ரேலிய எல்லையில் இருந்து ஹிஸ்புல்லா வெளியேறுகிறது, அல்லது நாமே அதை பின்னுக்குத் தள்ளுவோம்” என்று நெதன்யாகு செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவி அதே நாளில் தெரிவித்தார்.

போர் அமைச்சரவையின் முப்பெரும் குழுவின் உறுப்பினரான பென்னி காண்ட்ஸ் கடந்த புதனன்று மிகவும் வெளிப்படையாக, “வடக்கு எல்லையில் உள்ள சூழ்நிலையில் மாற்றம் தேவை. இராஜதந்திர தீர்வுக்கான நேரம் முடிந்துவிட்டது. உலகமும் லெபனான் அரசாங்கமும் வடக்கு சமூகங்களுக்கு எதிரான ஆயுதத் தாக்குதலை நிறுத்தவும், ஹிஸ்புல்லாஹ்வை எல்லையில் இருந்து விலக்கவும் நடவடிக்கை எடுக்காவிட்டால், இஸ்ரேலிய இராணுவம் அதைச் செய்யும்” என்று குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் எஜமான் அமெரிக்காவின் பரந்த ஏகாதிபத்திய போர் நோக்கங்களின் இறுதி இலக்கு ஈரான் ஆகும். இஸ்ரேலிய இராணுவம், தனது போரை நடத்தும் ஏழு போர்க்களங்களைப்பற்றி குறிப்பிட்ட, கேலன்ட், “போர்க்களங்களின் ஒருங்கிணைப்பில் ஈரான் உந்து சக்தியாக உள்ளது. இது வளங்கள், சித்தாந்தம், அறிவு மற்றும் பயிற்சி ஆகியவற்றை அதன் பினாமிகளுக்கு வழங்குகிறது” என்று அறிவித்தார்.

கடந்த திங்களன்று, இஸ்ரேல் இந்த மோதலை, சிரியாவில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உயர்மட்ட தளபதியான பிரிகேடியர் ஜெனரல் செயிட் ராஸி மௌசவியை படுகொலை செய்ததன் மூலம் தீவிரப்படுத்தியது. மத்திய கிழக்கு உலக விவகார கவுன்சில் உறுப்பினர் உமர் ரஹ்மான் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிடம், “டமாஸ்கஸில் ஈரான் இராணுவத்தின் உயர் பதவியில் இருந்த ஒருவரை படுகொலை செய்ய இஸ்ரேலின் முடிவு மிகப்பெரிய ஆத்திரமூட்டல்” என்று கூறினார்.

ஈரான் இதுவரை எந்த நேரடித் தலையீடுகளிலிருந்தும் விலகியே உள்ளது. ஆனால் அதன் தளபதிகள் குறிவைக்கப்பட்டால், கட்டுப்பாட்டின் பாதையில் அது தொடர்வது கடினமாக இருக்கும்.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உட்பட ஈரானிய மூத்த அதிகாரிகள் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். ஜெனரல் காசிம் சுலைமானி, அமெரிக்காவினால் படுகொலை செய்யப்பட்டதன் நான்காவது ஆண்டு நிறைவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. பழிவாங்கப் போவதாக ஈரான் பலமுறை மிரட்டிய உச்ச தலைவர் அயதுல்லா கொமேனிக்கு அடுத்தபடியாக சுலைமானி கருதப்படுகிறார்.

எந்தவொரு பதிலடியும் ஒரு போரை நாடுகின்ற இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு ஒரு சாக்குப்போக்காக இருக்கும். அது அமெரிக்க ஆதரவை முன்கூட்டியே உறுதி செய்திருப்பதால், இதனை வேறுவிதமாகத் தீவிரமாகப் பரிசீலிக்க முடியாது.

வாஷிங்டன் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் அணிகளை கிழக்கு மத்தியதரைக் கடலில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஏற்கனவே மத்திய கிழக்கு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினர்களுடன் இணைந்துள்ளது. அக்டோபர் 7 முதல், அமெரிக்காவின் எர்பில் விமானத் தளத்தின் மீது கட்டாய்ப் ஹிஸ்புல்லாவின் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானுடன் இணைந்த போராளிகளுக்கு எதிராக சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில், “இலக்கு வைக்கப்பட்ட தளங்களை அழித்ததாகவும், பல கட்டாய்ப் ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதாகவும்” அமெரிக்க இராணுவ கட்டளை மையம் கருத்து தெரிவித்துள்ளது.

பாக்தாத்தில் உள்ள அரசாங்கம் இது “விரோதமான செயல்” என்றும், அதன் இறையாண்மையை மீறுவதாகவும் கண்டித்துள்ளது.

காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்திய ஈரானுடன்-இணைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் அதன் ஆதரவு நாட்டுப் படைகள் பெரிதும் ஈடுபட்டுள்ளன. வாஷிங்டன், கடற்பகுதியை கண்காணிக்க ஒரு கூட்டணி கடற்படையை உருவாக்க முயற்சித்து வருவதுடன், யேமனில் உள்ள ஹவுதி தளங்கள் மீதான தாக்குதலின் மூலம், ஈரானை நேரடியாக, குறுக்கு வழியில் தாக்குதல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.

“செங்கடலில் வர்த்தகக் கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் ஈரான் ஆழமாக ஈடுபட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்” என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Loading