முன்னோக்கு

குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் டிரம்ப் வெற்றி: அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியில் ஒரு புதிய கட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கொலம்பியாவில் உள்ள தென் கரோலினா மாநில கண்காட்சி மைதானத்தில் நடைபெற்ற முதன்மை தேர்தல் இரவு விருந்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகிறார்.S.C., Feb. 24, 2024. [AP Photo/Andrew Harnik]

“சூப்பர் செவ்வாய்” முதன்மை வேட்பாளர் தேர்தல்களில் வெற்றி பெற்ற அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், புதன்கிழமை காலை போட்டியில் இருந்து நிக்கி ஹேலி வெளியேறியதைத் தொடர்ந்து குடியரசுக் கட்சிக்கான வேட்புமனுவை உறுதி செய்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளர் தேர்தல்களின் முடிவு, முழு அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் அதிர்ச்சியூட்டும் நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. ஜனவரி 6, 2021 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி இடம்பெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அன்று ஜனாதிபதியாக இருந்த டிரம்ப்பால் அணிதிரட்டப்பட்ட ஒரு பாசிச கும்பல், கணிசமான வித்தியாசத்தில் மக்கள் வாக்குகள் மற்றும் தேர்தல் கல்லூரியில் (Electoral College) வாக்குகளைப் பெற்ற பைடெனுக்கு, தேர்தல் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்காவின் கபிட்டோல் (US Capitol என்பது அமெரிக்க காங்கிரஸ் செயல்படும் கட்டிடமாகும்) கட்டிடத்தை முற்றுகையிட்டது.

தேர்தல் நெருங்கிவரும்போது, ​​ட்ரம்ப் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக பெருகிய முறையில் வெளிப்படையாக வன்முறையான வாய்வீச்சுக்களை பயன்படுத்துகிறார். அதே நேரத்தில், தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் முதல் நாளிலிருந்தே ஒரு “சர்வாதிகாரியாக” செயல்பட விரும்புவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள இரண்டு பெரிய முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றில் அவர் முற்றிலும் மேலாதிக்க நபராக இருப்பது மட்டுமல்லாமல், அவர் மில்லியன் கணக்கான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

முதலாளித்துவ ஊடகங்களும் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த பத்திரிகைகளும் இது எப்படி நடந்தது என்பதற்கு ஒரு ஒத்திசைவான விளக்கத்தை கொடுக்க முடியாமல் திணறி வருகின்றன. வாஷிங்டன் போஸ்ட்டின் வார்த்தைகளில், ஒரு வருடத்திற்கும் மேலாக “ராக்கெட்டில் இருக்கும் பொருளாதாரம்”  பற்றி பல கருத்துக்களை பேசுகின்றன, இது பைடெனுக்கு பயனளிக்கவில்லை என்று திகைப்புடன் வெளிப்படுத்துகிறது.

உண்மையில், பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மீதான பரவலான வெறுப்பில் மர்மம் இல்லை. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர் மூன்று ஆண்டுகளில், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்புக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில் மட்டுமல்லாமல், பெரும்பான்மையான மக்களை உள்ளடக்கிய உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அல்லது ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்தும் கொள்கைகளை இயற்றுவதிலும் இலாயக்கற்றவர்களாக இருந்தனர்.

இன்றிரவு அவரது அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வு உரையில், பைடென் கடந்த மூன்று ஆண்டுகளின் பொருளாதார வெற்றிகளைப் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், பெருவாரியான மக்கள்தொகை பெருகிவரும் சமூக துயரத்தை எதிர்கொள்கின்றனர். இது பணவீக்கம் மற்றும் தேக்கநிலை அல்லது வீழ்ச்சியடைந்த ஊதியங்களால் உந்தப்படுகிறது. வீட்டுக் கடன் $17.5 டிரில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இதில் $1.13 டிரில்லியன் டொலர்கள் கிரெடிட் கார்டு கடன் உள்ளது. சமூக சமத்துவமின்மை சாதனை அளவை எட்டியுள்ளது. அதேநேரம், அமெரிக்காவில் உள்ள பில்லியனர்களின் ஒட்டுமொத்தமான சொத்து கடந்த ஆண்டு 5.2 டிரில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து பைடென் நிர்வாகத்தின் மைய முன்னுரிமை, உக்ரேனில் ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போரை தீவிரப்படுத்துவது மற்றும் அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்தை இரக்கமற்ற முறையில் பின்பற்றுவதாக இருந்தது. உலகப் போர்க் கொள்கையைத் தொடர, குடியரசுக் கட்சிக்கு புத்துயிர் அளிக்கவும், ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பின் முக்கியத்துவத்தை மறைக்கவும், பைடென் முயன்றார். ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பான வரையறுக்கப்பட்ட விசாரணைகள், குடியரசுக் கட்சி மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தில் உள்ள ட்ரம்பின் சக-சதிகாரர்களை பாதுகாப்பதையும் மூடிமறைப்பதையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன.

பைடென் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது ஜனாதிபதி பதவியை இருகட்சி (ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக்கட்சி) ஒற்றுமைக்கான அழைப்போடு தொடங்கினார். எல்லாவற்றிற்கும் மேலாக, வெளிநாடுகளில் ஏகாதிபத்தியப் போரை நடத்துவதற்கு “வலிமையான”  குடியரசுக் கட்சியின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஜனநாயகக் கட்சியினர் வெள்ளை மாளிகையை குடியரசுக் கட்சியினருக்கும், ட்ரம்ப்புக்கும் கூட, உக்ரேன் மீதான உறுதிப்பாட்டை உறுதி செய்ய முடிந்தால் மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுப்பார்கள்.

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு பைடெனின் முழு ஆதரவின் அரசியல் விளைவுகளை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட ஊடகங்கள் கூட, இனப்படுகொலையை ஆதரிப்பவர் என்று அவரை எக்காலத்திலும் கண்டித்துள்ளன.

ட்ரம்பிற்கு எதிரான “ஜனநாயகத்திற்கான” கடைசி நம்பிக்கை என பைடென் அவ்வப்போது பிரகடனம் செய்வதைப் பொறுத்தவரை, அது வெறும் கற்பனையே. இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் புலம்பெயர்ந்தோர் மீது வரலாற்றில் மிகவும் அடக்குமுறையான ஒடுக்குமுறையை அங்கீகரிக்கும் சட்டத்தை ஆதரிப்பதில் “தன்னுடன் இணைந்துகொள்ளுமாறு” டிரம்பை நேரடியாக பைடென் அழைத்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக உளவுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள ஐக்கிய இராச்சியத்தில் இருந்து அவரை நாடு கடத்துவதற்கு பைடென் நிர்வாகம் ஜூலியன் அசான்ஞ்ச் மீதான துன்புறுத்தலை தீவிரமாகத் தொடர்கிறது. மேலும், முழு அரசியல் ஸ்தாபனமும் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பிற்கு எதிராக ஒரு தீய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன.

நீண்ட காலமாக சமூக சீர்திருத்தத்துடனான எந்தவொரு தொடர்பையும் நிராகரித்து வருகின்ற ஜனநாயகக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்கு வேண்டுகோள் விடுப்பதற்கு திறனற்றுப்போயுள்ளது. இது சிஐஏ மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் கட்சியாக உள்ளது. இந்த கட்சியின் அரசியல் தளம், “அடையாளப்” பிரச்சினைகளின் அடிப்படையில் உயர்-நடுத்தர வர்க்கத்தினரிடையே ஒரு தொகுதியைக் கட்டியெழுப்புவதை மையமாகக் கொண்டுள்ளது. இதில் வெள்ளைத் தொழிலாளர்கள் இனவெறி மற்றும் “சலுகையின்” உருவகமாக முன்வைக்கப்படுகிறார்கள்.

இதையெல்லாம் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் சுரண்டிக் கொள்கின்றனர். ட்ரம்ப் ஒரு பாசிஸ்டாக இருந்தாலும், அமெரிக்காவில் வெகுஜன பாசிச இயக்கம் இல்லை. அவருக்கு வாக்களிக்கும் மில்லியன் கணக்கான மக்கள், தொழிலாள வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதியினர் உட்பட, அவர்கள் ஒரு சர்வாதிகாரத்தை விரும்புவதால் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, ட்ரம்புக்கு எதிரான பெயரளவிலான எதிர்ப்பு முற்றிலும் வலதுசாரி மற்றும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது, நியாயமாக இகழ்ந்து வெறுக்கப்படுகிறது என்ற உண்மையிலிருந்து ட்ரம்ப் பயனடைகிறார். எந்தவொரு வலதுசாரி வாய்வீச்சுவாதிகளைப் போலவே, முற்போக்கான வழியைக் காணாத குழப்பத்தையும் கோபத்தையும் அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.

அமெரிக்க ஜனநாயகத்தின் தீவிர நெருக்கடி, டொனால்ட் ட்ரம்பின் மனதிலிருந்து வெளிவரவில்லை. பில் கிளிண்டனின் பதவி நீக்கம் முதல் 2000ம் ஆண்டு தேர்தல் திருட்டு மற்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்”, முதலில் புஷ் மற்றும் பின்னர் ஒபாமாவின் கீழ் கடந்த கால் நூற்றாண்டில் இது கண்டறியப்பட்டது.

இந்தக் காலகட்டம் முழுவதும், சமூக சமத்துவமின்மை வரலாற்று ரீதியாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ந்துள்ளது. அதே நேரத்தில் முடிவில்லாத போர், அழிவுகரமான அணு ஆயுத அபாயத்தை முன்வைக்கும் உலகளாவிய மோதலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலைமைகள்தான் ஆளும் உயரடுக்குகளை சர்வாதிகாரத்தை நோக்கித் தள்ளுகின்றன.

ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது, அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கும். வாக்குச்சீட்டில் ட்ரம்பின் இடத்தை உறுதி செய்வதற்கான ஒருமித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, முதலாளித்துவ அரசின் கட்சிகள் மற்றும் நிறுவனங்களை நம்புவதன் மூலம் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படலாம் மற்றும் பாசிசத்தின் ஆபத்தைத் தவிர்க்கலாம் என்ற பொய்யை அம்பலப்படுத்துகிறது. அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிரான எதிர்ப்பு, ஜனநாயகக் கட்சியின் அரசியல் பிணத்துடன் எவ்வளவு காலம் பிணைக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு பாசிச சர்வாதிகாரத்தின் ஆபத்தும் அதிகரிக்கும்.

ஒரு புரட்சிகர சோசலிச அரசியலுக்கு தொழிலாள வர்க்கம் திரும்புவதுதான் முக்கியமான கேள்வியாகும். சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையிடுகிறது. ஜோசப் கிஷோர் அதன் ஜனாதிபதியாக வேட்பாளராகவும், ஜெர்ரி வைட் துணை ஜனாதிபதி வேட்பாளராகவும், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சோசலிச மாற்றீட்டை முன்வைத்து தலையீடு செய்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தை அறிவித்த சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவர் டேவிட் நோர்த், அதன் நோக்கத்தை பின்வருமாறு விளக்கினார். “சோசலிச சமத்துவக் கட்சியானது இந்தத் தேர்தலில் தலையீடு செய்வது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை உயர்த்துவதற்காகும். உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதை சோசலிசத்தால் பதிலீடு செய்வதன் மூலமே தவிர வேறு எந்தப் வழியிலும் தீர்வு காண முடியாது என்ற அதன் புரிதலை அபிவிருத்தி செய்வதற்காகும். இந்த மாபெரும் வரலாற்றுப் பணியானது உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்தியை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டதாகும். இது ஒரு உலகளாவிய மூலோபாயத்தை பின்பற்றுவதன் மூலமேதான் அடையப்பட முடியும்”.

இந்த புரிதலின் வளர்ச்சி தானாகவே உருவாகுவதில்லை. முதலாளித்துவக் கட்சிகளின் பொய்கள் மற்றும் பிரச்சாரங்களை தகர்த்தெறிய ஒரு நிலையான மற்றும் உறுதியான போராட்டம் தேவைப்படுகிறது. எவ்வாறாயினும், அதே நேரத்தில், சோசலிசம் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை நலன்களுக்கு ஒத்துப்போகிறது. ஒரு மகத்தான சர்வதேச சமூக சக்தி, பெரும்பான்மையான மக்கள்தொகை, அவர்களின் நலன்கள் திவாலான அமெரிக்க அரசியல் அமைப்பில் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடனும், தலைமைத்துவத்துடனும் ஆயுதபாணியாகி, அதிகரித்துவரும் உலகப் போரை நிறுத்துவதற்கும், பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்திற்குள் ஆளும் வர்க்கம் இறங்குவதை எதிர்ப்பதற்கும், முதலாளித்துவ சுரண்டலுக்கு முடிவுகட்டுவதற்கும், சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையை மறுசீரமைப்பதற்கும், சமத்துவம் மற்றும் சோசலிசத்தின் அடிப்படையில் - மனித முன்னேற்றத்தினை நோக்கி நகர்வதை மீண்டும் தொடங்குவதற்கும் தொழிலாள வர்க்கம் தனது திறனை நிரூபிக்கும்.

Loading