காஸாவின் நாசர் மருத்துவமனையில் 300 உடல்கள் பாரிய புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்டன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிறு மற்றும் திங்களன்று தெற்கு காஸாவில் நாசர் மருத்துவமனைக்கு அருகே தொடர் பாரிய புதைகுழிகளில் கிட்டத்தட்ட 300 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும், அத்துடன் மருத்துவ நோயாளிகள் என்பதற்கான தெளிவான அடையாளங்களைக் கொண்டவர்களும் இதில் அடங்குகின்றனர். சிலர் கைவிலங்கிடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இது கொல்லப்பட்டவர்கள் கூட்டு மரணதண்டனைகளில் கொல்லப்பட்டனர் என்பதையே காட்டுகிறது.

நாசர் மருத்துவமனையில் ஒரு பாரிய புதைகுழி [Photo: Bisan Owda]

கடந்த மாதம் காஸாவின் ஷிபா மருத்துவமனையில் இதேபோன்ற பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாசர் மருத்துவமனையில் உள்ள பாரிய புதைகுழியானது, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) குறுகிய பகுதியிலுள்ள பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தி வரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியாக, காஸாவின் மருத்துவமனைகளை கொலைக்களங்களாக மாற்றியுள்ளது என்பதற்கு கூடுதல் சான்றுகளை இது அளிக்கிறது.

திங்களன்று, இந்த பாரிய புதைகுழிகளை பார்வையிட்ட பாலஸ்தீனிய பத்திரிகையாளர் பிசான் ஔடா, “சில உடல்கள்” “உறுப்புகள் அல்லது தோல் அல்லது தலைகள் இல்லாமல்” கண்டுபிடிக்கப்பட்டதாக ஆவணப்படுத்தினார்.

அவர் நின்று கொண்டிருந்த வயல் முழுவதும் சிதறிக் கிடந்த நூற்றுக்கணக்கான அழுகிய உடல்களில் ஒன்றை பிசான் கேமராவில் காட்டினார். சடலத்தின் கால்கள் கட்டப்பட்டிருந்ததால், பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையிருந்த ஒரு நோயாளி என்பதை உணர்த்தியது. “அவர் அல்லது அவள் காயமடைந்துள்ளார். இஸ்ரேலிய இராணுவம் அவரைக் கொன்று ஒரு பாரிய புதைகுழியில் புதைத்துள்ளது,” என்று அவர் கூறினார்.

திங்களன்று “73 உடல்கள் மீட்கப்பட்டதாகவும்,” மொத்த எண்ணிக்கையை 283 ஆகக் கொண்டு வந்ததாகவும் கான் யூனிஸில் உள்ள சிவில் பாதுகாப்பு இயக்குநர் கர்னல் யாமென் அபு சுலைமான் CNN இடம் தெரிவித்தார்.

சுலைமான் CNN இடம் சில உடல்கள் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன, இது விசாரணையற்ற மரணதண்டனைகள் என்பதனை சுட்டிக்காட்டுகிறது. “அவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்களா அல்லது சுட்டுக்கொல்லப்பட்டார்களா என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார்.

ஷிஃபா வைத்தியசாலையில் பணியாற்றிய நோர்வே மருத்துவரான டாக்டர் மேட்ஸ் கில்பர்ட், இந்த படுகொலை ஒரு “தார்மீக வீழ்ச்சி” என்று தி யங் துர்க்ஸ் (The Young Turks) பத்திரிகையிடம் கூறினார்.

டாக்டர் கில்பர்ட், “மருத்துவமனைகளில் நிராயுதபாணியான பொதுமக்களை இரக்கமின்றி படுகொலைகளை செய்துவரும்” இஸ்ரேலைக் கண்டித்தார். இவை “உயிர்களைப் பாதுகாப்பதற்கும், காயம் அல்லது நோய்வாய்ப்பட்டால் மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும் சரணாலயமாக இருந்தன. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பாலஸ்தீனிய மக்கள் மீதான மிகவும் கொடூரமான, கொலை செய்வதில் திருப்தியடையும் படுகொலைகளை நிகழ்த்த இந்த இடங்களைப் பயன்படுத்தியது” என்று அவர் கூறினார்.

இஸ்ரேல் “கொடூரமான படுகொலைகளை” செய்திருப்பதாக அறிவித்து, ஒரு போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organization of Islamic Cooperation) இந்த கண்டுபிடிப்புக்கு விடையிறுத்தது. “நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்த, காயமடைந்த, நோய்வாய்ப்பட்ட மக்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் சுட்டுகொல்லப்பட்டு கூட்டாக புதைக்கப்படுவதற்கு முன்னர் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” என்று அது மேலும் கூறியது.

சிஎன்என் இதுபற்றி செய்தி வெளியிட்டிருந்த போதிலும், நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகிய மூன்று முன்னணி அமெரிக்க செய்தித்தாள்கள், அந்தச் செய்தியை வெளியிடாத நிலையில், அமெரிக்க ஊடகங்கள் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதை குறைத்துக் காட்டவும் மூடிமறைக்கவும் ஒரு நனவான மற்றும் திட்டமிட்ட முடிவை எடுத்துள்ளன.

ஏனெனில், இஸ்ரேலிய போர்க்குற்றங்கள் பற்றிய இன்னும் கூடுதலான அம்பலப்படுத்தல்கள், காஸா மீதான இனப்படுகொலையை எதிர்ப்பவர்களை யூத-விரோதிகள் என்று கொச்சைப்படுத்தும் முழு அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் பிரச்சாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், இது அமெரிக்கா முழுவதும் மாணவர் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய அறிக்கைகள், இந்த குற்றங்களில் அவர்கள் உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தும் — உக்ரேனுக்கு 61 பில்லியன் டாலர்கள் மற்றும் தாய்வானுக்கு 8 பில்லியன் டாலர்கள் ஆகியவற்றுடன் சேர்த்து இஸ்ரேலுக்கு 26 பில்லியன் டாலர்கள் புதிய இராணுவ உதவி வழங்க சனிக்கிழமையன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை பெரும்பான்மையுடன் வாக்களித்தது.

இஸ்ரேலிய முற்றுகை மற்றும் காஸாவில் பாரிய பட்டினி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. திங்களன்று, சுகாதாரத்திற்கான உரிமை தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் Tlaleng Mofokeng, “இஸ்ரேல் அதன் குண்டுவீச்சுக்களால் பாலஸ்தீனிய குடிமக்களை கொல்கிறது, மற்றும் அவர்களுக்கு எதிராக ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது மட்டுமல்ல, அதுவும் அதன் கூட்டாளிகளும் தெரிந்தும் வேண்டுமென்றும் பட்டனி, நீடித்த ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு ஆகியவற்றை மக்களுக்குத் திணித்து வருகின்றன” என்றும் குறிப்பிட்டார்.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்தது.

ஆனால் 1.5 மில்லியனுக்கும் மேலான இடம்பெயர்ந்த காஸா மக்கள் தஞ்சம் புகுந்துள்ள ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்த தயாரிப்பு செய்து வருகையில், இந்த பேரழிவு தீவிரமடைய உள்ளது.

திங்களன்று ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “கூடுதல் மற்றும் வலிமிகுந்த அடிகளை வழங்குவதாக” உறுதியளித்தார்.

“வரவிருக்கும் நாட்களில், நாங்கள் ஹமாஸ் மீது இராணுவ மற்றும் இராஜதந்திர அழுத்தத்தை அதிகரிப்போம், ஏனெனில் எங்கள் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கும் எங்கள் வெற்றியை அடைவதற்கும் ஒரே வழி இதுதான்” என்று நெத்தன்யாகு ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

கடந்த வார இறுதியில், ரஃபாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் டசின் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இது காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையில் இறந்தவர்களின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை 34,000 க்கும் அதிகமாக்கியது, மேலும் பல பத்தாயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

வியாழனன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் தெற்கு காஸாவில் அமெரிக்க நடவடிக்கைகளைத் திட்டமிடும் உயர்மட்ட விவாதங்களை நடத்தின, அதில் ரஃபாவில் ஹமாஸை “தோற்கடிப்பதற்கு” இஸ்ரேலின் திட்டங்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுத்தது.

இந்த கூட்டம் குறித்த அதன் அறிக்கையில், வெள்ளை மாளிகை “ரஃபாவில் ஹமாஸ் தோற்கடிக்கப்படுவதைப் பார்க்கும் பொதுவான இலக்கை இரு தரப்பும் ஒப்புக்கொண்டன” என்று அறிவித்தது.

கடந்த வாரம், இஸ்ரேலிய மற்றும் அரபு மொழி வெளியீடுகள், ரஃபா மீது தாக்குதல் நடத்த பைடென் நிர்வாகம் இஸ்ரேலுக்கு பச்சை விளக்கு காட்டியதாக செய்தி வெளியிட்டன.

திங்களன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆனது, இஸ்ரேலானது ரஃபா நகரத்திற்கு எதிரான ஒரு வார கால தாக்குதலுக்கான தயாரிப்பில் உடனடியாக ரஃபா மக்களை இடம்பெயரச் செய்யத் தொடங்கும் என்று தகவல் கொடுத்தது.

மேலும், ஜேர்னல் கீழ்கண்டவாறு குறிப்பிட்டது, “இஸ்ரேலிய திட்டங்கள் குறித்து விவரித்த எகிப்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேல் ரஃபாவிலிருந்து அப்பாவி மக்களை அருகிலுள்ள கான் யூனிஸ் மற்றும் பிற பகுதிகளுக்கு நகர்த்த தயாரிப்பு செய்து வருகிறது, அங்கு கூடாரங்கள், உணவு விநியோக மையங்கள் மற்றும் கள மருத்துவமனைகள் போன்ற மருத்துவ வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களை அமைக்க அது திட்டமிட்டுள்ளது.”

“அந்த வெளியேற்ற நடவடிக்கை இரண்டு முதல் மூன்று வாரங்கள் நீடிக்கும் மற்றும் அமெரிக்கா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பிற அரபு நாடுகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்” என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஹமாஸ் தலைவர்கள் மற்றும் போராளிகள் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் நம்பும் பகுதிகளை குறிவைத்து படிப்படியாக ரஃபாவுக்குள் துருப்புக்களை நகர்த்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். இந்த சண்டை குறைந்தது ஆறு வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் அவர்கள் கூறினர்.

Loading