முன்னோக்கு

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பொலிஸ் அரச அடக்குமுறையை பைடென் தொடங்கியுள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்காவில் கடந்த வார அபிவிருத்திகள் ஒரு அரசியல் திருப்புமுனையைக் குறிக்கின்றன. பைடென் நிர்வாகமானது, பாசிஸ்டுக்கள் தலைமையிலான குடியரசுக் கட்சியுடன் இணைந்து, தற்போது வளாகங்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும், காஸா இனப்படுகொலைக்கான அரசியல் எதிர்ப்பை, ஒரு பாரிய பொலிஸ் அரச அணிதிரட்டலின் மூலம் குற்றமாக்குவதற்கு நகர்ந்துள்ளது.

நியூயோர்க்கின் புரூக்ளினில் அமைதிக்கான யூத குரல் என்ற அமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியான போராட்டக்காரர்களை கலகத் தடுப்பு போலீசார் கைது செய்கின்றனர்.

பைடென் நிர்வாகத்தால் நிதியுதவி, ஆயுதம் மற்றும் அரசியல் ரீதியாக செயல்படுத்தப்பட்டு, அதிகரித்து வரும் காஸா மீதான இனப்படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரி வளாகங்களில் போராட்டங்கள் தொடர்ந்து பரவி வருகின்றன.

கடந்த திங்களன்று ஒரு நிருபர், ஜனாதிபதி ஜோ பைடெனிடம் “எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு நீங்கள் என்ன செய்தி சொல்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “நான் இந்த யூத எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கிறேன்” என்று பதிலளித்தார்.

“யூத எதிர்ப்பு” என்ற குற்றச்சாட்டு பைடெனின் “பெரிய பொய்” ஆகும். இதற்கு உண்மையில் எந்த அடிப்படையும் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையைத் தொடர்ந்து, திங்களன்று வெளியான அவரது கருத்தில், “கண்டிக்கத்தக்க மற்றும் ஆபத்தான” யூத-விரோதத்தை கண்டித்ததோடு, “கல்லூரி வளாகத்திலோ அல்லது நம் நாட்டில் எங்கும் அதற்கு முற்றிலும் இடமில்லை” என்று குறிப்பிட்டார்.

முழு அரசியல் ஸ்தாபனமும் மற்றும் செய்தி ஊடகத்துடன் சேர்ந்து பைடென் நிர்வாகம், காஸா இனப்படுகொலை மீதான எதிர்ப்பு போராட்டங்கள், யூத விரோதத்தால் உந்தப்பட்டவை என்பதை மீண்டும் மீண்டும் கூறி ஏற்றுக்கொள்ள வைப்பதன் மூலம் மக்களைத் ஏமாற்றலாம் என்று நம்புகிறது.

இந்த அவதூறு இன்னும் அபத்தமானது, ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களில் பலர், கைது செய்யப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் யூதர்கள் ஆவர். மற்றும் அமைதிக்கான யூத குரல் (ஜேவிபி) போன்ற அமைப்புகள் இந்தப் போராட்டங்களில் முன்னணிப் பாத்திரத்தை வகிக்கின்றன.

செவ்வாய்கிழமை மாலை, புரூக்ளினில் உள்ள செனட்டர் சக் ஷூமரின் வீட்டிற்கு அருகில் யூதர்களின் பாஸ்கா பண்டிகையில் பங்கேற்ற அமைதிக்கான யூத குரலின் 300 உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். யூத விடுமுறையானது எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து எபிரேயர்களை விடுவித்ததை நினைவுபடுத்துகிறது. “எங்கள் பெயரில் இல்லை,” “இப்போதே போர் நிறுத்தம் என்று யூதர்கள் கூறுகிறார்கள்”என்று எதிர்ப்பு போராட்டக்காரர்கள் தாம் அணிந்திருந்த சட்டைகளில் எழுதி பிரகடனம் செய்தனர்.

நாடு முழுவதும், போலீசார் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்தனர். திங்கள்கிழமை இரவு, நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டும், மிளகுத்தூளை வீசியும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கலவரத்தை அடக்கும் பொலிசார் கைது செய்தனர். யேல் பல்கலைக்கழகத்தில், 47 மாணவர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். Cal Poly Humboldt இல், கலகத் தடுப்புப் பொலிஸார் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் புகுந்து மாணவர்களைக் கைது செய்தனர். மினசோட்டா பல்கலைக்கழகத்தில் ஒன்பது மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய் இரவு, கொலம்பியாவில் உள்ள மாணவர் தலைவர்கள், போராட்டத்தை ஒடுக்க தேசிய காவலர்களை அழைப்பதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் அச்சுறுத்தியதாகவும், இது மே 4, 1970ல் நடந்த கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசு மேற்கொண்ட படுகொலை, மீண்டும் நிகழும் வாய்ப்பை உயர்த்தியதாகவும் கூறினர். அந்த சம்பவத்தில், வியட்நாம் போருக்கு எதிரான போராட்டத்தின் போது நான்கு ஓஹியோ கல்லூரி மாணவர்கள் ஓஹியோ தேசிய காவலரால் கொல்லப்பட்டனர்.

பைடென் அமெரிக்காவின் முன்னணி பாசிஸ்டுகள் மற்றும் யூத-விரோதவாதிகளான காங்கிரஸ் பெண்மணி மார்ஜோரி டெய்லர் கிரீன் மற்றும் செனட்டர்களான ரொம் காட்டன் மற்றும் ஜோஷ் ஹாவ்லி ஆகியோருடன் கூட்டு சேர்ந்து தனது ஒடுக்குமுறையை மேற்கொண்டு வருகிறார்.

செவ்வாய் கிழமை, ஹவ்லி மற்றும் காட்டன் ஆகியோர் மற்ற முன்னணி செனட் குடியரசுக் கட்சியினருடன் இணைந்தனர், இதில் லிண்ட்சே கிரஹாம் மற்றும் சார்லஸ் கிராஸ்லி ஆகியோர் பைடென் இதற்கு மேலும் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். செனட்டர்களின் கடிதம் “யூத-விரோதத்தை” கண்டிக்கும் பைடெனின் அறிக்கையை வரவேற்கிறது, ஆனால் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் மற்றும் நாடு கடத்தல்களை நடத்த நிர்வாகத்திற்கு அழைப்பு விடுக்கிறது.

“ஹமாஸ் சார்பு கலகக்காரர்கள்” தலைமையில் “கல்லூரி வளாகங்களில் யூத எதிர்ப்பு, பயங்கரவாத ஆதரவு கும்பலின் நடவடிக்கைகள் வெடித்துள்ளது” என்று அந்தக் கடிதம் அறிவிக்கிறது. “முக்கிய இடதுசாரிகளால் தூண்டப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான போராட்டக்காரர்கள், சமீபத்திய நாட்களில் கல்லூரி வளாகங்களில் கூடி வருவதாக” அக்கடிதம் குற்றம் சாட்டுகிறது.

அந்த கடிதத்தில், “கூட்டாட்சி சட்ட அமலாக்கத்துறை உடனடியாக ஒழுங்கை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், யூத மாணவர்களுக்கு எதிராக வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களை நடத்திய கும்பல் மீது வழக்குத் தொடர வேண்டும், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் பங்கேற்ற அனைத்து வெளிநாட்டினரின் (பரிமாற்ற மாணவர்கள் போன்றவை) விசாக்களை ரத்து செய்ய வேண்டும் மற்றும் பள்ளி நிர்வாகிகளை இதற்கு பொறுப்பாக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் பல்கலைக்கழக வளாகங்களுக்கு எதிரான அடக்குமுறையின் அடிப்படை அரசியல் உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகிறது. இது, யூத-விரோத வன்முறை சம்பவங்களுக்கு மட்டுமே விடையிறுப்பதாக இல்லாமல், இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளுக்கு அனைத்து வகையான இடதுசாரி எதிர்ப்பையும் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2017 இல் வேர்ஜீனியாவின் சார்லட்டஸ்வில்லில் நடந்த பேரணியில் ஒன்றுகூடியவர்கள் போன்ற சக்திகளுக்கு முறையீடு செய்யும் இந்த மொழியே வன்முறையைத் தூண்டுகிறது. இந்த வன்முறையின் விளைவாக எதிர் ஆர்ப்பாட்டக்காரர் ஹீதர் ஹேயரின் கொலையில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

பல்கலைக்கழக வளாகங்களில் போலீஸ் தாக்குதல் என்பது பேச்சு சுதந்திரத்தின் மிக அடிப்படையான கொள்கைகளை வெளிப்படையாக நிராகரிப்பதாகும். இதில் வெளிப்படையான விவாதம் ஊக்குவிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்ற பல்கலைக்கழக “தன்னாட்சி” என்ற கருத்தாக்கம் முற்றிலுமாக தலைகீழாக புரட்டி போடப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் ஏகாதிபத்திய போர்க் கொள்கையை ஊக்குவிக்கும் நிறுவனங்களாக மாற்றப்பட்டு, போலீஸ் தடியடிகள், கைதுகள், வெளியேற்றங்கள் மற்றும் நாடுகடத்தல்கள் மூலம் அவை திணிக்கப்படுகின்றன.

2019 ஆம் ஆண்டு அறிக்கையில், “உயர்கல்வி நிறுவனங்களும், அதன் ஊழியர்களும், மாணவர்களும் கல்விச் சுதந்திரம் மற்றும் நிறுவன சுயாட்சியை அனுபவிக்கவில்லை என்றால், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை யதார்த்தமாக மாற முடியாது. மாறாக, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகம் சுதந்திரமாக கேள்வி கேட்க முடிந்தால் மட்டுமே உண்மையான ஜனநாயகத்தை நாம் பெற முடியும்” என்று ஐரோப்பிய கவுன்சில் அறிவித்துள்ளது.

கல்லூரி வளாகங்களில் அரசியல் எதிர்ப்பின் மீதான ஒடுக்குமுறையானது, அமெரிக்காவில் பேச்சு சுதந்திரத்தை அகற்றுவதற்கான ஒரு முறையான முயற்சியின் முன்னணி நடவடிக்கையாகும். இந்த பிரச்சாரம் ஏற்கனவே தொழிலாளர்கள் பணிபுரியும் பணியிடங்களுக்கு விரிவடைந்து வருகிறது. கூகுள் நிறுவனமானது, இஸ்ரேலிய அரசாங்கத்துடனான அதன் உறவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

இப்போது கல்லூரி வளாகங்களில் விரிவடைந்து வரும் பாரிய ஒடுக்குமுறையானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வெடிப்புடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், “21 ஆம் நூற்றாண்டிற்கான போட்டியில் அமெரிக்கா வெற்றிபெறும் தீர்க்கமான தசாப்தத்தை” பைடென் அறிவித்தார். அவர், ரஷ்யா, சீனா மற்றும் ஈரானை அடிபணியச் செய்யும் நோக்கில், இராணுவ வன்முறை மூலம் அமெரிக்க மேலாதிக்கம் கொண்ட “புதிய உலக ஒழுங்கை” கட்டமைக்கப் புறப்பட்டுள்ளார்.

“பிரதான சக்திகளுக்கு இடையிலான பூகோள அரசியல் போட்டியில்” வெற்றி பெறுவதற்கு சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் தடையின்றி ஒருங்கிணைத்தல் தேவைப்படுகிறது என்றும், “பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு இடையிலான பிளவுக் கோட்டை உடைத்துவிட்டது” என்றும் பைடென் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள கல்லூரி வளாகங்கள் மீதான அடக்குமுறையில், சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்க் கொள்கைகளுக்கு அடிபணியச் செய்யும் இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதை உலகமே கண்டு வருகிறது.

காஸா மீதான இனப்படுகொலையை ஆதரிப்பதிலும் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை அடக்குவதிலும் பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் மையப் பாத்திரம், “குறைந்த தீமை” என்று அழைக்கப்படுவதை ஆதரிக்கும் கொள்கையின் முழுமையான திவால்நிலையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. போர்க் கொள்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் முழு அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் முழு ஆதரவைக் கொண்டுள்ளன. ஏனெனில், அவை முதலாளித்துவ அமைப்பின் மையத் தேவைகளைப் பிரதிபலிக்கின்றன.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

பல்கலைக்கழக வளாகங்களிலும் அதற்கு அப்பாலும் வளர்ந்து வரும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு பதிலளித்து, 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் செவ்வாயன்று X/Twitter இல் பின்வருமாறு கூறினார்:

இந்தப் போராட்டத்தை... பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் நடத்த முடியாது. அது ஏகாதிபத்தியத்தை எதிர்க்க கூடிய மற்றும் அதன் சமூக நலன்கள் முழு முதலாளித்துவ அமைப்புடனும் முரண்படுகின்ற சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் ஒவ்வொரு வளாகத்திலும் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களுக்குச் செல்லுமாறு அழைப்பு விடுக்கிறது. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கவும், அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

Loading