இலங்கை மாணவர்களும் மற்றும் விரிவுரையாளர்களும் சீரழிந்து வரும் நிலைமைகளைப் பற்றி பேசுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர், இலங்கையில், கண்டியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடுகின்றார்.

நாட்டின் ஏற்பட்டுள்ள ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு, சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட அரசாங்கத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளால், இலங்கையில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கை நிலைமைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சீரழிந்துள்ளன. உணவு, புத்தகங்கள் மற்றும் கற்கை உபகரணங்களுக்கான செலவீன அதிகரிப்பு, அதேபோல், போக்குவரத்து மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் வாழ்வதற்கு போதிய உதவித்தொகை கிடைக்காமை போன்ற நிலைமைகளை மாணவர்கள் எதிர்கொள்கின்றனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பல மாணவர்கள்,  தங்களின் கடினமான சூழ்நிலை மற்றும் முறையான கல்வி வசதிகள் இல்லாமை பற்றி சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்களுடன் பேசினர். மோசமான நிலைமைகள் குறித்து மாணவர்களிடையே கோபம் கொதிக்கின்றது.

கலைப் பீட மாணவரான பிம்சர, வளாக விடுதிகளில் வசிப்பவர்களுக்கு கூட அவர்களின் மாதாந்த செலவுகளுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் ($US66) தேவைப்படுகிறது, என்று கூறினார். அவர் விளக்கியதாவது: “சமீபகாலமாக, விடுதி உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் விலை 30 ரூபாய் உயர்த்தப்பட்டு, 90 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு துண்டு கோழி இறைச்சியைச் சேர்த்தால், அதன் மொத்தத் தொகை 200 ரூபாயாகும். பல மாணவர்கள் 90 ரூபாய்க்கு வெறும் மரக்கறிகளுடன் மட்டுமே சாப்பிடுகிறார்கள், அவர்கள் கோழி இறைச்சியையோ அல்லது மீன் சாப்பாட்டையோ சாப்பிடுவதில்லை .”

பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டினார். “வெவ்வேறு நோய்க்கு ஒரே மருந்துதான் கொடுக்கப்படுகிறது. மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி, தனியார் மருத்துவ நிலையங்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.”

விடுதியில் தங்கியிருக்காத இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் ஒருவர், உணவுடன் தங்கும் அறைக்கு 35,000 ரூபாய் செலவிடுவதாக கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதிகள் செய்து தரப்படவில்லை.  விடுதிகளில் தங்குவதற்கு போதிய அறைகள் இல்லை என நிர்வாகம் கூறுகிறது. சில விடுதிகளில், முறையான இணைய வசதி இல்லை. கல்விக் குறிப்புகள் இணையத்தில் வெளியிடப்படுகின்றன. அச்சடிக்கும் விலை அதிகரித்த்தில் இருந்து,  நாங்கள் கம்ப்யூட்டர்களில்தான் கல்வி குறிப்புக்களை படிக்கிறோம்.”

ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றொரு பிரச்னையாகும். “இரசாயனப் பொறியியல் துறையிலும் இதே போன்ற பிரச்சினைகள் உள்ளன. ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால், கற்கைக்கான பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் சிந்திக்க வேண்டும், என எமக்கு முதற் பிரிவில் கற்கும் ஒரு சக மாணவன்,  எங்களுக்கு கூறினார். ” என்று அவர் கூறினார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் மத்தியில், பற்றாக்குறையாக உள்ள, மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபா உதவித்தொகை அல்லது மஹாபொல கூடகிடைப்பல்லை . நிரம்பி வழியும் விடுதிகளில் முறையான குடிநீர் வசதி, மின்சாரம், சுகாதார சேவைகள், வாசிப்பு அறைகள் இல்லை. தனியார் தங்கும் அறையின் மாத வாடகை 7,000 ரூபாயை தாண்டியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மார்ஸ் ஆண்கள் விடுதி

முதலாம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களான கிஹான் மற்றும் அகேஷ் ஆகிய இருவரும் பல்கலைக்கழகத்தில் நுழைந்து ஏழு மாதங்கள் ஆகியும் அவர்களுக்கான உதவித்தொகை கிடைக்கவில்லை. அவர்கள், சிறப்பங்காடிகளில் வர்த்தக ஊக்குவிப்பு வேலைகளைச் பகுதி நேரமாக செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு வெறும் 1,500 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அவர்களது பெற்றோரும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால், தங்கள் கஷ்டங்களை பெற்றோரிடம் கூறுவதில்லை என்று இருவரும் கூறினர்.

கலை பீடத்தின் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளரான சுமுது வலகுலுகே பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிலைமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

“பொருளாதார நெருக்கடியானது விரிவுரையாளர்களை பகுதி நேர வேலைகளை மேற்கொள்வதற்கு அல்லது அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நிர்பந்தித்துள்ளது. பலர் தனியார் துறை, அரசு சாரா நிறுவனங்களில் வேலைசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் அல்லது சொந்த தொழில்களை நிறுவுகின்றனர்.

“இதன் விளைவாக, அவர்களின் வகிபாகத்தின் அடிப்படை அம்சமான ஆய்வுகளில்  ஈடுபட அவர்களுக்கு போதுமான நேரம் இல்லை. விரிவுரையாளர்கள் ஆண்டுதோறும் ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பெரும்பான்மையானவர்கள் தங்கள் ஆய்வுத் திட்டங்களை முடிக்கத் தவறிவிடுகிறார்கள்.

“ஒரு சில விரிவுரையாளர்கள்தான் அடிக்கடி ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள், அவர்களில் சிலர், வருமானம் ஈட்டுவதற்காக கல்வித் தேவைகளை விட பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகளில் கவனம் செலுத்துகிறார்கள். சிலர் தங்கள் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை இளங்கலை மாணவர்களுக்கு வழங்குவதற்கு பதிலாக, [தங்கள் சொந்த] பொருளாதார நலனுக்காக பதிப்புரிமைகளைத் தாங்கள் வைத்துக்கொள்ளும் நிலமை உள்ளது.

சில விரிவுரையாளர்கள் பொருளாதார நிலைமை காரணமாக அவர்களது பிள்ளைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் அவலநிலையை வலாகுலுகே எடுத்துரைத்தார். பற்றாக்குறையான வசதிகள், குறிப்பாக தங்குமிட விடுதி வசதியின்மையை அவர் சுட்டிக் காட்டினார்.

சமீபத்திய ஆண்டுகளில் எந்தப் புனரமைப்பும் இல்லாமல், விடுதி நிலைமைகள் மிகவும் மோசமானதாகவும், அபாயகரமானதாகவும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அரச பல்கலைக்கழகங்களில் வசதிகள் குறைக்கப்படுகின்றமை, மாணவர்களை தனியார் பல்கலைக்கழகங்களை நோக்கித் தள்ளுகிறது. மறைமுகமாக தனியார் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது.

விடுதியில் ஒரு கழிவறை

தொலைதூரத்தில் உள்ள மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த நுவந்தி, தற்போது இளங்கலைமானிப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

“எனது தந்தை இலங்கை இராணுவத்தில் பணிபுரிகிறார். எனக்கு இன்னும் நான்கு குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். என் தந்தையின் 45,000 ரூபாய் மாதச் சம்பளம் எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை,” என்று அவர் கூறினார்.

அவளது தந்தை அரசு ஊழியராக இருப்பதினால், உதவித் தொகை கிடைப்பதில்லை, அத்தோடு, அவள் தனியார் விடுதியில் தங்குகிறாள். இதன் விளைவாக, அவள் தங்கும் அறைக்கு 6,000 ரூபாய் செலவழிக்கிறாள். வாடகை, உணவு, புத்தகங்கள் மற்றும் இதர பொருட்கள் உட்பட அவளது செலவுகளுக்கு மாதம் 20,000 ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது.

“ ஒரு சிறிய அச்சகத்தில் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 15,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் தட்டச்சாளராகப் பணிபுரிந்தேன். எனக்கு ஒரு நாளைக்கு 5 மணி நேரம் தூங்குவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை, சரியான உணவும் கிடைப்பதில்லை. இதனால் எனது கல்வி மட்டுமின்றி எனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

மொனராகலை போன்ற பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட, அது நீண்ட காலம் நீடிக்காது என, அவர் சுட்டிக்காட்டினார். “எங்கள் பகுதியில் உள்ள கடினமான சூழ்நிலைகள் காரணமாக ஆசிரியர்கள் வேறு பகுதிகளுக்கு சென்றுவிடுவார்கள். எங்கள் பாடசாலை நாட்களில் ஆங்கில ஆசிரியர் இருந்ததில்லை. எங்கள் பாடசாலை 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. எனினும், அந்தப் பாடசாலையில் இதுவரை பல்கலைக்கழக அனுமதியைப் பெற்ற ஒரே மாணவி நான்தான்.”

மொனராகலை பிரதேசத்தில் நிலவும் கடினமான பொருளாதார நிலைமைகள் காரணமாக பல இளைஞர்கள் கட்டுநாயக்க மற்றும் பியகம போன்ற ஏற்றுமதி வர்த்தக வலயங்களில் பணிபுரிவதாக அவர் கூறினார். “எங்கள் பிரதேசத்தில் பல இளைஞர்கள் இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களில் உயிரிழந்தவர்கள் ஏராளம். பொருளாதாரச் சிக்கல்களாலும், வேறு வேலை வாய்ப்புகள் இல்லாததாலும் உயிர் பற்றி சிந்திக்காமல் இராணுவத்தில் சேருகிறார்கள்.

“அநேக மாணவர்கள் மொழிகள், வரலாறு மற்றும் பிற பாடங்களைப் கற்கிறார்கள், ஆனால் கலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை தேடுவது மிகவும் கடினம் என்பதை நான் அறிவேன்.”

கலைப் பீடத்தைச் சேர்ந்த இமான், வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர். வாரத்தில் சில நாட்கள் வெளியில் வேலை செய்து தனது அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கிறார். “விடுதியில்  பல இளைஞர்கள் இரவு உணவு தயாரிக்க ஒன்று கூடுகிறார்கள். பெரும்பாலான சமயங்களில் பருப்பும், சோறும் மட்டுமே சாப்பிடுவோம். என் தந்தை ராணுவத்தில் இருப்பதால் நான் உதவித்தொகை பெற தகுதியற்றவன்.

“நான் விரிவுரைகளில் கொடுக்கப்பட்ட குறிப்புகளை மட்டுமே படிப்பேன். நூலகத்தில், பாடங்களின் சான்றாதாரங்கள் சம்பந்தமாக கற்பதற்கும் மற்றும் இணையத்தில் தகவல்களைத் தேடவும் எனக்கு நேரமில்லை. பஸ் கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் வாரந்தோறும் வீட்டுக்குச் செல்ல முடியாது. அனுராதபுரத்திலிருந்து பேராதனைக்கு 150 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் உள்ளது. ஒவ்வொரு முறையும் சென்று திரும்ப 2,000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது,” என அவர் தெரிவித்தார்.

பெப்ரவரி 27, 2024 கொழும்பில் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் [Photo: IUSF]

போலி இடது முன்னிலை சோசலிச கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.) மற்றும் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள மாணவர்  சங்கங்கள் மாணவர்களின் பல போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

அரசாங்கம் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மாணவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று இருகட்சிகளும் பொய்யாகக் கூறுகின்றன, ஆனால் மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலைமை தொடர்ந்தும் மோசமாகி வருகிறது. அ.ப.மா.ஒ. மற்றும் ஜே.வி.பி.யின் மாணவர் சங்கங்கள் இந்த தாங்க முடியாத சூழ்நிலையை உருவாக்கிய முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் மாணவர்களை அரசியல் ரீதியாக சிக்க வைக்கின்றன.

அடுத்தடுத்த அரசாங்கங்களால் செலவினங்களைக் குறைத்து இலாபம் ஈட்டும் தனியார் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் ஊக்குவிக்கப்பட்டதன் விளைவே இன்றைய பல்கலைக்கழகங்களின் நிலைமை என்று சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) வலியுறுத்துகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் பரந்த சிக்கன வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியாக, எஞ்சியிருக்கும் இலவசக் கல்வியை இல்லாதொழிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி, கல்வியைப் பாதுகாப்பதற்கும் இந்த சிக்கன நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கும் சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராட வேண்டும்.

Loading