ஒரு மத்திய வங்கியாளரின் முக்கியத்துவமான உரை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இத்தாலிய மத்திய வங்கியின் ஆளுநர் ஃபேபியோ பனெட்டா (Fabio Panetta) கடந்த வாரம் ஒரு முக்கிய உரையை நிகழ்த்தினார். அதில் அவர் 1930 களில் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த மோதல்களின் காரணங்களுக்கு திரும்புவதற்கான நிலைமைகளை உருவாக்கியிருந்த பொருளாதார சக்திகள் மற்றும் புவிசார்-அரசியல் பதட்டங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்

இத்தாலிய மத்திய வங்கியின் ஆளுநர் ஃபேபியோ பனெட்டா (Fabio Panetta) [Photo: X/Twitter @ecb]

அவருக்கு ரோமா ட்ரே (Roma Tre) பல்கலைக்கழகம் கெளரவப் பட்டம் வழங்கும் விழாவில் பனெட்டா இந்த உரையை நிகழ்த்தினார். தற்போதைய நிலைமை குறித்து ஒரு பரந்த பரிசீலனையை நடத்துவதற்கு மத்திய வங்கியாளர்கள் கையாண்ட சில உடனடிப் பிரச்சினைகளில் இருந்து விலகிச் செல்ல அவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் பெரும் வல்லரசுகளுக்கு இடையே மேலும் மோதலைத் தடுக்கும் நோக்கில் நிறுவப்பட்ட நிறுவனங்களும் பொருளாதார உறவுகளும் உடைந்து வருகின்றன என்பது உலகத்தைப் பற்றிய சித்திரமாக இருந்தது.

தெளிவாக கவலை கொண்ட அதேவேளையில் அவர், ஐரோப்பிய ஒன்றியமானது “போட்டித்தன்மை, மூலோபாய சுயாட்சி மற்றும் அதன் பொருளாதாரத்தின் சர்வதேச அந்தஸ்தை” வலுப்படுத்த நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தார், இது சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார பதட்டங்கள் மற்றும் மோதல்களின் மட்டத்தை அதிகரிக்க மட்டுமே செய்யுமே தவிர குறைக்காது.

கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா வரை உலகின் பல பகுதிகளில் நடக்கும் மோதல்களால் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் விதிகள் “கடுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன” என்று குறிப்பிட்டு அவர் உரையைத் தொடங்கினார்.

“2023 ஆம் ஆண்டில் வன்முறையிலான மோதல்களின் எண்ணிக்கையானது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக அதிகமாக நடந்துள்ளது” இந்த மோதல்கள் பொருளாதார அபாயங்களை உருவாக்கியிருக்கிறது மற்றும் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டைத் தடுக்கிறது “உலகப் பொருளாதாரத்தை எதிரெதிர் குழுக்களாகப் பிளவுபடுத்துகிறது. வர்த்தகம் மற்றும் நிதிக் கொள்கைகளின் ஆயுதமயமாக்கல் இந்த அபாயங்களை மேலும் அதிகப்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.

இராஜதந்திர உணர்வுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த பனெட்டா, அமெரிக்காவை அதன் உலகளாவிய பொருளாதார மற்றும் இராணுவ வெறித்தனத்தின் ஒரு பகுதியாக இந்தக் கொள்கைகளின் தலைமை இயக்கி என்பதைக் குறிப்பிடவில்லை. இருப்பினும், அவரது பார்வையாளர்களில் மிகக் குறைந்த அரசியல் கல்வியறிவு பெற்ற உறுப்பினர் கூட அவர் சுட்டிக்காட்டியதிலிருந்து அதனைப் புரிந்துகொண்டிருப்பார்.

ஐரோப்பியப் பொருளாதாரம் குறிப்பாக உலகின் பிற பகுதிகளுடன் நெருங்கிய பொருளாதார ஒருங்கிணைப்பின் காரணமாக உலக வர்த்தகத்திலிருந்து துண்டாடப்படும் அபாயத்தில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அதன் வளர்ச்சி மாதிரியானது “மூலப்பொருட்களின் இறக்குமதி மற்றும் இறுதி பொருட்கள் மற்றும் சேவைகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதை பெரிதும் நம்பியுள்ளது.”

அந்தக் குணாம்சப்படுத்தலானது ஐரோப்பாவிற்கு மட்டுமல்ல, கடந்த நான்கு தசாப்தங்களாக உற்பத்தியின் பூகோளமயமாக்கல் மற்றும் உலகளாவிய நிதி அமைப்பின் வளர்ச்சியின் அளவு போன்ற ஒவ்வொரு முக்கியப் பொருளாதாரத்திற்கும் பொருந்தும்.

இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு வழிவகுத்த அரசியல், பொருளாதார மற்றும் சமூக பதட்டங்களுக்கு 1930களின் பெரும் மந்தநிலை எவ்வாறு பங்களித்தது என்பதைக் குறிப்பிட்ட பின்னர், பேரழிவிற்குப் பிறகு, “மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் ஒரு முன்னுதாரணமானது... அதன் மூலம் நெருக்கமான சர்வதேச பொருளாதார ஒருங்கிணைப்பு மட்டுமே நீடித்த அமைதியை உறுதிப்படுத்த முடியும்” என்று அவர் கூறினார்.

பொருளாதார ஒருங்கிணைப்பு போரை “வெறுமனே நினைத்துப் பார்க்க முடியாதது மட்டுமல்ல, என்று ராபர்ட் ஷூமனின் (Robert Schuman) அறிக்கையை அவர் மேற்கோள் காட்டினார். 1951 இல் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு நிறுவனங்களின் குழுவை நிறுவியவர்களில் ஒருவராக ஷூமன் இருந்தார். 1957 இல் ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை உருவாக்குவதற்கும் பின்னர் அதுவே இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது.

குறிப்பாக, சீனாவானது 2001 இல் உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organisation) இணைந்தபோது சர்வதேச வர்த்தகத்தில் புதிய நாடுகளின் பங்கேற்புடன் பொருளாதார ஒருங்கிணைப்பு தொடர்ந்தது, ஆனால் இப்போது, அவர் மேலும் தொடர்ந்தார்: “இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பலதரப்பு ஒழுங்கின் மூன்று தூண்கள் - வெளிப்படைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் புவிசார் -அரசியல் நிலையற்றதன்மை - அனைத்தும் இன்று சோதனைக்கு உள்ளாகப்பட்டிருக்கின்றன.”

பூகோளமயமாக்கல் ஒரு பூஜ்ஜியத் தொகை விளையாட்டு என்ற தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டாம் நிலை காரணிகளை மட்டுமே மேற்கோள் காட்டினார், அவரால் வேறு எந்த உண்மையான விளக்கத்தையும் கொடுக்க முடியவில்லை, இது புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பூகோளமயமாக்கல் எதிர்ப்பு உணர்வுகளுக்கு வழிவகுக்கும் சமூகப் பிளவுகளைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

வலதுசாரி ஜனரஞ்சக அரசியல்வாதிகள் மற்றும் வெளிப்படையான பாசிஸ்டுகளால் கைப்பற்றப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட இந்தக் காரணிகள் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு அவை அடிப்படைக் காரணம் அல்ல.

லெனின் 1915 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஏகாதிபத்தியம் என்ற தனது படைப்பில் அடிப்படைக் காரணத்தை அடையாளம் காட்டியுள்ளார், முதலாம் உலகப் போர் வெடித்ததற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்துள்ளார். போரின் விளைவு எதுவாக இருந்தாலும் முதலாளித்துவத்தின் கீழ் நிரந்தர அமைதி இருக்காது என்று அவர் விளக்கினார்.

இது ஏனென்றால், ஒரு கட்டத்தில் அமைதியை வழங்குவது போல் தோன்றும் எந்தவொரு அரசியல் சமநிலையும், இறுதிப் பகுப்பாய்வில், அந்த நேரத்தில் நிலவிய பொருளாதார உறவுகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். மேலதிக பொருளாதார அபிவிருத்தி தவிர்க்க முடியாமல் பிரதான சக்திகளின் ஒப்புமை வலிமையை மாற்றி சமநிலையை சீர்குலைத்து, தவிர்க்க முடியாமல் மற்றொரு மோதலுக்கு வழிவகுக்கும்.

லெனினின் பகுப்பாய்வு, போருக்குப் பிந்தைய பொருளாதார ஒழுங்கின் சிதைவைப் புரிந்துகொள்வதற்கான கட்டமைப்பை வழங்குகிறது, இதை அவர் அதிகம் கூறவில்லை என்றாலும், உலகம் போரின் திசையில் செல்வதை பனெட்டா தெளிவாக ஏற்றுக்கொள்கிறார்.

போருக்குப் பிந்தைய ஒழுங்கு அமெரிக்காவின் பொருளாதார வலிமையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அது தோற்றுவித்த ஒப்பீட்டளவிலான பொருளாதார ஸ்திரத்தன்மை, அதன் படிப்படியான பலவீனத்திற்கு வழிவகுத்தது. அந்த நிகழ்ச்சிப்போக்கின் ஆரம்ப வெளிப்பாடு 1971 இல், அமெரிக்க ஜனாதிபதி நிக்சன், போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பின் தூண்களில் ஒன்றான பிரெட்டன் வூட்ஸ் நாணய அமைப்புமுறையை தகர்த்தபோது காணப்பட்டது, இதன் கீழ் அமெரிக்க டாலர்கள் தங்கத்தால் ஆதரிக்கப்பட்ட உலக நாணயச் செலாவணியாக இருந்தது.

ஐரோப்பியப் பொருளாதாரங்களின் விரிவாக்கம் மற்றும் அவற்றின் அதிகரித்த போட்டித்திறன் ஆகியவற்றால் அமெரிக்கா முன்பு அனுபவித்து வந்த வர்த்தக உபரி சமநிலை பற்றாக்குறையாக மாறியது. ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு $35 டாலர்கள் என்ற விகிதத்தில் தங்கத்திற்கான டாலர்களை மீட்டெடுப்பதற்கான உறுதிமொழியை அமெரிக்கா இனியும் நிறைவேற்ற முடியாமல் போனது.

அப்போதிருந்து, அமெரிக்க டாலர் தங்கத்தை சாராமல், மாறாக அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார சக்தியை சார்ந்துள்ள ஒரு உலக நாணயமாக செயல்பட்டுவருகிறது. இருப்பினும், பிரெட்டன் வூட்ஸ் நாணயத் திட்டத்தை நீக்கிவிட்ட காலக்கட்டத்தில் இந்த வலிமை மேலும் சிதைந்து விட்டது. இந்த சரிவை எதிர்கொள்ள அமெரிக்கா முயற்சித்தாலும் அவை பலனளிக்கவில்லை.

1990களில், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, முன்னாள் சோவியத்தில் சேர்ந்திருந்த நாடுகள் மற்றும் சீனா முழுவதும் ஸ்ராலினிச ஆட்சிகளால் முதலாளித்துவத்தை மீட்டெடுத்த பிறகு, உற்பத்தியின் பூகோளமயமாக்கலில் இருந்து வெற்றி பெற்று அதன் வளர்ச்சியடைந்து வரும் பலவீனங்களை சமாளிக்க முடியும் என்று அமெரிக்கா கருதியது.

இந்த நிகழ்ச்சி திட்டமானது இரண்டு முனைகளில் முன்னெடுக்கப்பட்டது. 1990 முதல் வளைகுடாப் போரில் இருந்து, அமெரிக்கா தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது, குறிப்பாக யூகோஸ்லாவியாவை இராணுவ மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டதாக இருந்தது.

1999 இல் செர்பியாவிற்கு எதிரான மூன்று மாத குண்டுத் தாக்குதல் நடவடிக்கையின் தொடக்கத்தில் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர் தாமஸ் ப்ரைட்மேன் இரண்டுக்குமிடையிலான தொடர்பை முன்வைத்தார்.

“சந்தையின் மறைவான கை, மறைந்திருக்கும் முஷ்டியின்றி ஒருபோதும் இயங்காது- F-15 போர் விமானத்தை உருவாக்கிய மெக்டொனல் டக்ளஸ் இல்லாமல் மெக்டொனால்டு வளர முடியாது. சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில்நுட்பங்களுக்காக, உலகை பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய மறைந்திருக்கும் முஷ்டியே, அமெரிக்க இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் படையெடுப்பு சிறப்புப் படைகள் (Marine Corps) என்று அழைக்கப்படுகிறது... ”என்று அவர் எழுதினார்.

அதன் இராணுவ நடவடிக்கைகளில் இறங்கியதும், அமெரிக்கா சீனாவை சர்வதேச வர்த்தக அமைப்பில் ஒருங்கிணைப்பதற்கான பிரதான ஆதரவாளராக இருந்தது, அதன் குறைந்த மலிவு செலவு உற்பத்தியில் இருந்து அது பயனடையும் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சீன தொழிலாள வர்க்கத்தின் உழைப்பில் இருந்து எடுக்கப்பட்ட உபரி மதிப்பானது அமெரிக்க முதலாளித்துவத்தின் இறுகிப்போன இரத்தக் குழாய்களுக்குள் பாய்ந்தபோது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நம்பிக்கை மெய்ப்பிக்கப்பட்டது.

இருப்பினும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது, அது உலகின் மலிவுத்-தொழிலாளர் உற்பத்தி மையமாகவும், பூகோளரீதியான நிறுவனங்களின் பெரிய முதலீடுகளுக்கான தளமாகவும் மாறியது, இது முந்தைய பொருளாதார சமநிலையை சீர்குலைத்தது.

சீனாவின் பொருளாதார எழுச்சியானது அமெரிக்காவின் நிலையை மேலும் பலவீனப்படுத்தியது. இப்பொழுது அது அமெரிக்க பூகோள பொருளாதார மேலாதிக்கத்திற்கு முக்கிய அச்சுறுத்தலாக கருதப்படும் கட்டத்தை அடைந்துள்ளது. சீனா ஒரு “மூலோபாய பங்காளியாக” இருப்பதில் இருந்து என்ன விலை கொடுத்தாவது ஒடுக்கப்பட வேண்டிய ஒரு “மூலோபாய போட்டியாளராக” மாறியுள்ளது.

அதுதான் அமெரிக்காவில் பொருளாதார தேசியவாதத்தின் மீள் எழுச்சிக்கான ஆதாரமாக இருக்கிறது - பொருளாதாரப் போர்முறையானது இராணுவவாதம் மற்றும் போருடன் கைகோர்த்து முன்னேறிச் செல்கிறது, அமெரிக்கா மேலாதிக்கத்தை அனுபவிக்கும் கடைசி மீதமுள்ள பகுதியாக இருக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், லெனின் மிகவும் தெளிவாக விளக்கியது போல், ஒரு கட்டத்தில் அமைதிக்கு வழிவகுத்த பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள், அந்த ஏற்பாடுகளைச் சிதைத்து, பலதரப்பு ஒத்துழைப்பின் சிதைவுகளால், பொருளாதார தேசியவாதத்திற்கு திரும்பி ஒரு தீவிரமான போர் மீண்டும் வெளிப்படுகிற கொள்கையாக உருவாகியிருக்கிறது.

பனெட்டா அவரது உரையில், இந்த முரண்பாடுகளைப் பற்றி உண்மையான புரிதல் இல்லாத நிலையில், குறைந்தபட்சம் அவற்றைத் தொட்டுக் காட்டியிருக்கிறார்.

ஒரு சிறந்த உலகில், வர்த்தக ஒருங்கிணைப்பு சந்தேகத்திற்கு இடமில்லாத பலன்களைக் கொண்டுவந்தது, உற்பத்தியாளர்கள் மிகவும் திறமையான விநியோகம் செய்பவர்களை நம்புவதற்கு அனுமதிக்கிறது, ஆனால் உண்மையான, புவிசார் அரசியல் நிலையற்ற உலகில் “ஒன்றுடன் இணைந்திருப்பது விரைவில் பாதிப்பாக மாறுகிறது” என்று அவர் கூறினார்.

அரசாங்கங்கள் இப்போது குறைந்த ஸ்திரத்தன்மை உறவுகளைக் கொண்ட நாடுகளின் இறக்குமதியை நம்புவதற்குத் தயாராக இல்லை மேலும், “அவைகளில் சில, வெளிநாட்டில் முதலிட்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை தங்கள் சொந்த நாட்டிற்கு (மீண்டும் உற்பத்தியை சொந்த நாட்டிக்கு மாற்றுதல் - reshoring) மீண்டும் கொண்டு வரவும் அல்லது ‘நட்பு’ நாடுகளுக்கு உற்பத்தியை மாற்றுவதற்கு (நட்பு நாட்டில் உற்பத்தி - friend-shoring) ஊக்குவிப்புகளை வழங்குகின்றனர். இது சில சமயங்களில் அரசியல் கூட்டாளிகளுக்கு பாதகமாக அமைந்து விடுகிறது.

மீண்டும் ஒருமுறை பனெட்டா அமெரிக்கா என்று பெயரிட்டு கூறும் அளவுக்கு அநாகரிகமாக நடந்துகொள்ளவில்லை. ஆனால் அவரது உரையின் அச்சுப் பதிப்பின் அடிக்குறிப்பில் பாதுகாப்புவாத நடவடிக்கையாக ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க எதிர்ப்பைத் தூண்டிவிடுவதற்கு காரணமாக பைடென் நிர்வாகத்தின் பணவீக்கக் குறைப்புச் சட்டத்தை (Inflation Reduction Act) அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

உலகப் பொருளாதாரத்தில் ஆழமடைந்து வரும் மோதலை மதிப்பாய்வு செய்வதில், பன்முகத்தன்மையை மீட்டெடுக்கக்கூடிய எந்தவொரு திட்டத்தையும் அல்லது கொள்கையையும் பனெட்டாவால் முன்னெடுக்க முடியவில்லை.

மாறாக, அதன் அழிவிலிருந்து உருவான உலகளாவிய போராட்டத்தில் ஐரோப்பா சிறப்பாக ஈடுபடக்கூடிய கொள்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதே அவரது கவலையாக இருந்தது. இதில் பொருளாதாரம் மற்றும் இராணுவம் ஆகிய இரு துறைகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் அடங்கும்.

ஐரோப்பிய வளர்ச்சி மாதிரியை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. அது வெளிப்புறத் தேவையைச் சார்ந்திருப்பதில் இருந்து விலகி, ஒற்றைச் சந்தையை அதிகமாகச் செய்ய வேண்டியிருந்தது - அது ஐரோப்பிய அடிப்படையிலான தேசியவாதத்திற்குத் திரும்புவதற்கானதாக இருக்கிறது.

ஒரு ஐக்கியப்பட்ட ஐரோப்பிய முன்னணியை ஊக்குவிக்க முனையும் அவர் அதைக் குறித்து மறைமுகமாக குறிப்பிடவில்லை என்றாலும், ஐரோப்பிய “பங்காளிகளுக்கு” இடையே குறிப்பிடத்தக்க மற்றும் ஆழமடைந்து வரும் பொருளாதார, அரசியல் மற்றும் நிதியியல் பதட்டங்கள் இருப்பதால் அந்தப் பாதை முரண்பாடுகள் நிறைந்தது.

இப்போது அனைத்துப் பொருளாதார வளர்ச்சிக்கும் தொழில்நுட்பம் முன்னணியிலும் மற்றும் மையமாக இருக்கும்போது, ஐரோப்பா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்றும் மற்றும் அது “இந்தத் துறையில் போட்டித்தன்மை வலுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் அதன் வெளிநாட்டு சார்பு நிலைமைக் குறைக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இத்தாலி மற்றும் ஏனையவற்றின் பலவீனமான பொருளாதார நிலைமையையும், அது எழுச்சி கண்டுள்ள மோதல்களையும் பிரதிபலிக்கும் விதத்தில், ஐரோப்பிய ஆணையத்தின் பசுமை ஒப்பந்த தொழில்துறை திட்டம் “அதிக நிதி இடைவெளி [அதாவது, ஜேர்மனி] கொண்ட நாடுகளுக்கு சாதகமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இது “அடிமட்டத்தை நோக்கிய ஒரு பந்தயத்தைத் தூண்டுவதன் மூலமாக ஒற்றை சந்தையை அடிமட்டத்தை நோக்கிய ஒரு போட்டியில் பிளவுபடுத்தும் அபாயம் உள்ளது, இதில் அங்கத்துவ நாடுகள் மற்றவற்றை விட அதிக ஊக்கத்தொகைகளை வழங்க முனைகின்றன.”

ஐரோப்பா அதன் ஆயுதங்களை தயாரிக்க வேண்டும்.

“தற்போதைய சர்வதேச சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் அதன் சொந்த சர்வதேச பாதுகாப்பைப் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது” என்று அவர் கூறினார்.

முடிவில், புவிசார் அரசியல் மோதல்கள் சர்வதேச வர்த்தகத்தையும் உலகப் பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையையும் அச்சுறுத்துகின்றன மற்றும் “பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ முகாம்களாகப் பிரிக்கப்பட்ட உலகின் பழைய அச்சங்கள் மீண்டும் தோன்றியுள்ளன” என்ற தனது உரையின் நிறைவுக் பகுதியில் முக்கிய கருப்பொருளுக்கு அவர் திரும்பினார்.

“இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து பெரும் வல்லரசுகளிடையே நீடித்த அமைதியை” உறுதிப்படுத்திய பலதரப்புப் பொருளாதார ஒழுங்கைக் குழிதோண்டும் அளவுக்கு புவிசார் அரசியல் மோதல்கள் அச்சுறுத்தி வருவதால், உலகளாவிய வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஐரோப்பியர்கள் பாதுகாப்பது அவசியம்.

இருப்பினும், இந்த முன்னோக்கு அவர் கூறிய அடுத்த வாக்கியத்தில் முரண்பட்டது: அதாவது “அதே நேரத்தில் புவிசார் அரசியல் ஆபத்து மற்றும் விளைவுகளை நாம் புறக்கணிக்க முடியாது. குறைந்தபடசம் நிலையான மற்றும் சிறிதாக திறந்திருக்கும் உலகில் திறம்பட செயல்படுவதற்கான வழிகளை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும்.”

போருக்குப் பிந்தைய காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்கள் மற்றும் ஏற்பாடுகள் மூலம் ஒரு உடைந்த பந்து போல் நகர்ந்து கொண்டிருக்கும் நெருக்கடிக்கு முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களிடம் தீர்வு இல்லை என்ற உண்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மற்றொரு உலகப் போர், அதன் முதல் கட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது, உலகப் பொருளாதாரம் மற்றும் திவாலான தேசிய-அரசு அமைப்புக்கு இடையே உள்ள முரண்பாட்டிலிருந்து எழுகிறது.
முந்தைய காலகட்டத்தில் அமைதியையும் செழிப்பையும் கொண்டு வந்ததாகத் தோன்றிய பொருளாதார முன்னேற்றங்களால் ஏற்பட்ட முரண்பாடு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

முதலாளித்துவமும் அதன் பாதுகாவலர்களும் எப்பொழுதும் முதலாளித்துவத்தின் நெருக்கடிகளை வெளிப்புற அல்லது தற்செயலான காரணிகளால் ஏற்பட்டதாகக் காரணம் கூறுகின்றனர், ஆனால் அவை முதலாளித்துவ அமைப்பிலேயே வேரூன்றியுள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த முரண்பாடுகளை போர் மூலம் தீர்க்க முயல்கிறது, அதில் அது ஒரு மேலாதிக்க சக்தியாக தனது நிலையை தக்க வைத்துக் கொள்கிறது, இது ஒரு உலகளாவிய வெடிப்புக்கு அச்சுறுத்துகிறது.

தொழிலாள வர்க்கம் உலக சோசலிசப் புரட்சியின் மூலம் அவற்றைத் தீர்க்க வேண்டும், இந்த முன்னோக்கானது மே 4 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் நடத்தப்படும் இணையவழி மே தினப் பேரணியின் கருப்பொருளாக இருக்கும்.

Loading