World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

British minister visits Colombo

A new burst of diplomatic activity to push peace talks in Sri Lanka

பிரித்தானிய அமைச்சர் கொழும்பு விஜயம்

இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்த புதிய இராஜதந்திர நடவடிக்கைகள் ஆரம்பம்

By Wije Dias
28 November 2000

Back to screen version

பிரித்தானியாவின் பிரதி வெளிநாட்டமைச்சர் பீட்டர் ஹெயின் (Peter Hain) கடந்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்தார். இது இந்நாட்டின் நீண்டகால யுத்தத்துக்கு முடிவு கட்டும் வகையில் இலங்கை அரசாங்கத்துக்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வைக்கும் இலக்கிலான புதிய இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு பாகமாக விளங்கியது.

ஹெயின் இலங்கையில் இரு தினங்கள் தங்கி இருந்ததோடு பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு அமைச்சரவை உறுப்பினர்கள், மூன்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் ஒரு தொகை பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.

ஹெயின் நவம்பர் 22ம் திகதி கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) மண்டபத்தில் ஒரு விரிவுரை நிகழ்த்தியதோடு வடஅயர்லாந்து பேச்சுவார்த்தைகளின் உதாரணத்தை பின்பற்றுமாறும் இலங்கை அரசாங்கத்தை வேண்டிக் கொண்டார். 'இது இரு தரப்பில் எவரும் வெற்றிபெற முடியாத ஒரு யுத்தம்' என ஹெயின் குறிப்பிட்டார். "இது தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் காட்டுமிராண்டி கொலைகளுக்கு பொறுப்பானவர்களாக இருந்தாலும் கூட ஒரு நியாயமான அரசியல் வேலைத் திட்டத்தை கொண்டவர்களுடன் உட்கார்ந்து பேசித் தீர்க்கப்பட வேண்டிய ஒதுக்கித் தள்ளிவிட முடியாத ஒரு பிரச்சினையாகும்" என்றார்.

இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஒரு தனியான தமிழ் அரசை அமைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) கோரிக்கையை எந்த ஒரு பெரும் வல்லரசும் ஆதரிக்கவில்லை. ஆனால் ஹெயின், குமாரதுங்க அரசாங்கம் வழங்கத் தயாராக உள்ளதைக் காட்டிலும் பரந்த அளவிலான சுயாட்சி முறைக்கு அனைத்துலக ஆதரவை பெறும் சாத்தியம் இருந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

"தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) ஐ.ஆர்.ஏ.யைப் (Irish Republican Army) போல் அதை அங்கீகரித்தாக வேண்டும். ஒரு தமிழ் இராஜதானி (Tamil kingdom) அரசியலமைப்பு அடிப்படையில் தீவின் ஏனைய பாகத்தில் இருந்து பிளவுபடுத்தப்படும் நிலையில் அது ஐரோப்பா, அமெரிக்கா அல்லது இந்தியாவினது அங்கீகாரத்தைத் தன்னும் பெற்றுவிடாது. சுயநிர்ணய அடிப்படைக் கொள்கையும் அன்றன்றாடைய வாழ்க்கையை பாதிக்கும் அனைத்து முக்கிய கொள்கைகள் இல்லாது போனாலும் மிக முக்கியமானவற்றின் மீதான கட்டுப்பாடும் அனைத்துலக சமூகத்தினால் ஆதரிக்கப்படும்".

பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளச் செய்ய நெருக்கவாரம் கொடுத்துவருவதை ஹெயின் தெளிவுபடுத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகள் அவ்வாறு செய்யாது போனால் பிரித்தானியா அதை (LTTE) அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் தடை செய்வதையிட்டு "மிகவும் பாரதூரமாக" ஆலோசித்து வருவதாக இந்தப் பயணத்தின் போது ஹெயின் ஜாடை காட்டியுள்ளார். லண்டனில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலையத்தை மூடிவிடும்படி இலங்கை அரசாங்கம் கோரி வந்துள்ளது.

இலங்கையில் உள்ள நிலைமையையிட்டு பிரித்தானியா அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் நெருக்கமாக ஆலோசனை செய்து வருவதாக ஹெயின் சுட்டிக் காட்டினார். ஹெயினின் இலங்கை விஜயம் நோர்வேயின் சிறப்பு தூதுவரான எரிக் சொல்ஹெயிமின் விஜயத்தின் மூன்று வாரங்களின் பின்னர் இடம்பெற்றது. இக்காலப்பகுதியில் சொல்ஹெயிம் இலங்கையின் வடபாகத்தில் உள்ள இராணுவ முன்னணி அரங்குகளை தாண்டிச் சென்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தினார். அவர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் இன்னும் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்தார்.

நோர்வேயும் இந்தியாவும் பெரும் வல்லரசுகளின் ஆதரவோடு பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணைகளை செய்து கொடுப்பதில் ஈடுபட்டுள்ளன. ஹெயின் கொழும்பில் இருந்து வந்த வேளையில் சொல்ஹெயிம் மீண்டும் இந்தியா திரும்பினார். அவர் சமீபத்தில் கொழும்பிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் நடாத்திய கலந்துரையாடல்களையிட்டு இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும் இந்திய வெளிநாட்டமைச்சர் ஜஸ்வந் சிங்குக்கும் விளக்கினார்.

இவ்வாரம் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் கார்ள் இன்டர்பேர்த் (Karl Inderfurth) கொழும்புக்கு விஜயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு அமெரிக்க தூதரகப் பேச்சாளர் இந்த விஜயத்தின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு கூறியதாவது: "அவர் இங்கு விஜயம் செய்வது சிறப்பாக இனப் பிரச்சினையைப் பற்றி பேசுவதற்காக அல்ல. ஆனால் அரசாங்கத்தினதும் எதிர்க் கட்சியினதும் உயர் மட்டத் தலைவர்களில் பல தரப்பினரையும் அவர் சந்திப்பார்". எவ்வாறெனினும் இன்டர்பேர்த்தின் விஜயம் -இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரியான தோமஸ் பிக்கரிங்கின் விஜயத்தை தொடர்ந்து அமெரிக்க சமாதான நடவடிக்கைகளில் நேரடியாகத் தலையிட்டுக் கொண்டுள்ளது தெளிவாகின்றது.

கடந்த 17 ஆண்டுகளில் பெரும் பகுதியில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏனைய வல்லரசுகளும் 60000 உயிர்களை பலிகொண்டதும் இன்னும் பலரை அங்கவீனர்களாகவும் அகதிகளாகவும் ஆக்கியதுமான இந்த உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவு கட்டுவதையிட்டு அக்கறை கொள்ளவில்லை. ஆனால் யுத்தம் சிறப்பாகக் கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கணிசமான அளவு இராணுவ வெற்றிகளை ஈட்டிக் கொண்டதன் பின்னர் பிராந்தியத்தில் பயங்கரமான ஆட்டங்கண்ட செல்வாக்காக அதிகரித்த அளவில் நோக்கப்பட்டு வருகின்றது. ஆதலால் இந்தியத் துணைக் கண்டத்தில் அனைத்துலக முதலீட்டுக்கு ஒரு தடைக்கல்லாகி விட்டுள்ளது.

இந்த இறுதிக் கட்ட இராஜதந்திர நடவடிக்கைகள் இலங்கையின் சமீபத்திய பொதுத் தேர்தலுடன் நேரடியாக இணைந்து போகும் விதத்தில் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளும் பொதுஜன முன்னணியும் எதிர்க்கட்சியான யூ.என்.பி.யும் சிங்கள சோவினிசத்தைத் தூண்டிவிடும் பிரச்சார இயக்கத்தை நடாத்தின. அவை எந்த ஒரு சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெறுவதையும் எதிர்த்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரமாக்கும்படியும் கோரின. தேர்தலுக்குச் சற்று முன்னதாக சிங்கள தீவிரவாதிகள் கும்பல்கள் நடாத்திய ஒரு தொகை ஆர்பாட்டங்கள், யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவுகட்டுவதற்கான அடிப்படையை உருவாக்கும் அரசியலமைப்புச் சட்ட மாற்றங்களை குமாரதுங்க இரத்துச் செய்யத் தள்ளியது.

தேர்தலின் பின்னர் பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் யுத்தத்தின் பொருளாதார தாக்கங்களையிட்டு கவலை கொண்ட பெரும் வர்த்தக நிறுவனங்களின் ஒரு பகுதியினரின் நெருக்குவாரத்துக்கு உள்ளாகின. இதன் பெறுபேறாக குமாரதுங்க தனது பாராளுமன்றத் திறப்புவிழா உரையில் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக உள்ளதாகப் பட்டும் படாமலும் தெரிவித்தார். குமாரதுங்கவின் கவலை எல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது யுத்தத்துக்கு ஆதரவான வலதுசாரி குழுக்களின் ஆர்ப்பாட்ட அலையை தோற்றுவிப்பதோடு தனது சொந்தக் கூட்டரசாங்கத்தினுள்ளும் பிளவை ஏற்படுத்தி விடுமோ என்பதுதான்.

பெளத்த பிக்குகளின் உயர்மட்டத்துடனும் சிங்கள சோவினிச கும்பல்களுடனும் நெருக்கமான உறவுகள் கொண்ட பிரதமர் விக்கிரமநாயக்க கடந்த திங்கட்கிழமை ஹெயினின் இலங்கை விஜயத்தை தூக்கி எறிந்து பேசுகையில் ஏனைய நாடுகளின் (வட அயர்லாந்து) அனுபவத்தை இலங்கையில் திணிக்க முடியாது என்றுள்ளார். "நாம் இராணுவப் பதிலீட்டை எதிரி அடியோடு நிர்மூலமாக்கப்படும் வரை தொடருவோம்" என அவர் கூறியுள்ளார்.

சிங்களத் தீவிரவாதிகள், பிரித்தானிய பிரதி அமைச்சரின் விஜயத்தை கண்டனம் செய்வதற்கு ஹெயின் தமிழ் "சுயநிர்ணயம்" பற்றி கூறியவற்றை தூக்கிப் பிடித்துக் கொண்டனர். த சண்டே லீடர் (The Sunday Leader) அதனது வாராந்த அரசியல் விமர்சனத்தில் கூறியதாவது: "உண்மையில் அவர் (ஹெயின்) திடமாக உள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு நியாயமான அரசியல் வேலைத்திட்டத்தை கொண்டுள்ளதாக கூறுவதோடு மட்டுமல்லாது தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள சுயநிர்ணய அடிப்படைக் கொள்கைக்கு அனைத்துலக ஆதரவு இருந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் அரசாங்கத்துக்கு ஒரு வெறும் இராஜதந்திர தோல்வி மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு பெரும் வெற்றியுமாகும்" என்றுள்ளது.

ஹெயின் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது வலதுசாரி சிங்கள உறுமய கட்சி (SUP) பிரிட்டிஷ் கவுன்சில் கட்டிடத்துக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தை நடாத்தியது. இதற்கு முன்னர் சொல்ஹெயின் பிரபாகரனைச் சந்தித்ததைத் தொடர்ந்து சிங்கள உறுமய கட்சி பெளத்த பிக்குகளையும் உள்ளடக்கிய பல நூற்றுக் கணக்கானவர்களோடு நவம்பர் 16ம் திகதி கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்துக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தை நடாத்தியது. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சொல்ஹெயிமின் கொடும்பாவியை எரித்ததோடு "கொலைகார நோர்வேகாரர்களே வெளியேறு!" எனக் கூறும் சுலோக அட்டைகளையும் தாங்கிக் கொண்டிருந்தனர்.

கடந்த வாரம் கொழும்பு ஆங்கில வார இதழான 'த சன்டே டைம்ஸ்' தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கன்னையின் தலைவரான எஸ்.பி. தமிழ்செல்வத்துடன் நடாத்திய ஒரு பேட்டியில் அவர் பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்ள விடுதலைப் புலிகள் கொண்டுள்ள விருப்பை மீண்டும் ஊர்ஜிதம் செய்தார். "இலங்கை ஜனாதிபதியும் தமிழ் தேசிய தலைவரும் (பிரபாகரன்) ஒன்றாக உட்கார்ந்து பேசும் நாள், சிங்கள, தமிழ் தேசிய இனங்கள் இரண்டுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான நாளாக விளங்கும் என நான் நினைக்கின்றேன்" என அவர் கூறியுள்ளார்.

பிரபாகரன் மற்றொரு மண்டேலா அல்லது அரபாத் ஆக வர இடமுண்டா எனக் கேட்டகப்பட்ட போது தமிழ்ச்செல்வன் ஏதும் கூறாத போதிலும் இந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC), பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) தலைவர்களை வியந்து பாராட்டியுள்ளார். "நெல்சன் மண்டேலாவும் யசீர் அரபாத்தும் தமது மக்களின் சுதந்திரத்துக்காக தம்மை அர்ப்பணம் செய்து கொண்டவர்கள். எமது தலைவரும் கூட அரசியல் கொடுங்கோன்மைக்கு இலக்கான தமது மக்களுக்கு தலைமை தாங்குகின்றார். அவரும் மண்டேலா அரபாத்தைப் போல் அதே விதத்தில் அவரது மக்களால் நேசிக்கப்பட்டு, பாராட்டப்பட்டுள்ளார்".

தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்கனவே மத்திய கிழக்கில் பீ.எல்.ஓ.வும் தென் ஆபிரிக்காவில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசும் காலடி வைத்த அதே வழியடியில் நடை போடுகின்றன என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. துப்பாக்கியை தோளில் தொங்கவிடுவதற்குப் பதிலாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு முதலாளித்துவ குட்டியரசிற்கு அல்லது சிலவேளை ஒரு சுயாட்சிப் பிராந்தியத்துக்கு- தீவின் அரைப்பங்கிற்கும் குறைவானது- தலைமை தாங்கலாம் என நம்புகின்றது. இதன் பெறுபேறுகள் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஊர்ஜிதம் செய்யப் போவதும் இல்லை அல்லது சாதாரண உழைக்கும் மக்களின் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உத்தரவாதம் செய்து விடவும் போவதில்லை.

தீவின் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு ஒரு சுயாட்சி அமைப்பை ஏற்படுத்துவதில் பிரித்தானியாவும் நோர்வேயும் ஏனைய நாடுகளும் காட்டும் அக்கறையானது, இப்பெரும் வல்லரசுகள் இலங்கை அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளப்படும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது (ஏகாதிபத்திய) நலன்களை காக்கும் என்பதில் இவை கொண்டுள்ள நம்பிக்கையை ஏற்கனவே இனங்காட்டிக் கொண்டுள்ளன.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved