World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Israel steps up military and economic warfare against Palestinians

இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை அடிபணிந்து போகவைக்க இராணுவ, பொருளாதார யுத்தத்தில் குதித்துள்ளது

By Jean Shaoul
23 November 2000

Back to screen version

இருமாதகால மோதுதல்களின் பின்னர் இஸ்ரேல் மீண்டும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இராணுவ எதிர்த் தாக்குதல்களை உக்கிரமாக்கியுள்ளது.

நேற்றைய வன்முறைகளின் தொடர்ச்சி -இஸ்ரேலில் ஒரு கார் குண்டு, பத்தாவின் (FATAH) முன்னணி உருப்பினர் உட்பட நான்கு பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை 250 க்கும் மேலாக அதிகரித்துள்ளது. பாலஸ்தீனிய பாதுகாப்பு நிலைகள் மீது இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலின் பின்னர் சண்டை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நவம்பர் 20ல் காஸாவில் ஒரு யூத குடியிருப்பாளர் பஸ் வண்டி குண்டுவெடிப்புக்கு உள்ளாகியதற்கான பழிவாங்கலாக இது நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசாங்கம் இந்தக் குண்டு வெடிப்புக்கு ஜனாதிபதி யசீர் அரபாத்தின் பத்தா அமைப்பின் 'டன்சிம்' (Tanzim) போராளிகளை குற்றம்சாட்டியது. இந்தக் குண்டு வெடிப்பில் ஒரு இஸ்ரேலிய ஆணும் பெண்ணும், நான்கு சிறுவர்களும் கொல்லப்பட்டனர். ஆனால் பத்தா இதில் தமக்கு சம்பந்தம் கிடையாது என மறுத்துள்ளது. இக்குண்டு வெடிப்பு காஸாவில் உள்ள கடற்படை, சிவில் பாதுகாப்பு, பொலிஸ் நிலையங்கள் மீதும் அத்தோடு பாலஸ்தீனிய பொலிஸ் தலைமை அலுவலகம் மீதும் ஐந்து ஹெலிகொப்டர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடாத்த இஸ்ரேலுக்கு சாட்டாகியது. சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் (European Union) மத்திய கிழக்கு சிறப்பு தூதுவரான மிகுல் ஏஞ்சல் மொராட்டினோஸ் தமது அந்தரங்க அலுவலகத்தில் அரபாத்தை சந்தித்தார். மறுநாள் இஸ்ரேலிய படைகள் சுட்டதில் மூன்று பாலஸ்தீனியர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். ஒருவர் பின்னர் உயிரிழந்தார். எகிப்து இந்த ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் தனது தூதுவரை இஸ்ரேலில் இருந்து திருப்பி அழைத்தது. பாலஸ்தீனிய அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இஸ்ரேலிய படையாட்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய பொலிசுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய குடியிருப்பாளர்களின் தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாக பெரிதும் அதிகரித்துள்ளது. பாலஸ்தீனிய- இஸ்ரேலிய அமைப்பான மாற்றீடு தகவல் நிலையம் (Alternative Information Center) அன்றாடைய நடவடிக்கைகளுக்காக சென்று வந்த பாலஸ்தீனியர்கள் மீது குடியிருப்பாளர்கள் பல தடவை தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது. இந்தக் குடியிருப்பாளர்கள் ஆத்திரமூட்டல்களில் ஈடுபடவும், மக்களுக்கும் சொத்துக்களுக்கும் எதிராக தாக்குதல் நடாத்தவும் மக்களை கொல்லவும் சுதந்திரம் வழங்கப்பட்டனர். இவர்கள் எவரையும் கைது செய்து, விசாரித்து தண்டிக்க இஸ்ரேலிய இராணுவமும் நீதி அமைப்பும் முன்வரப் போவதில்லை என்று அறிந்து கொண்டே அவர்கள் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டனர்.

வன்முறைகள் ஆரம்பமான கிழமைகளில் இருந்து இஸ்ரேல் குடியிருப்பாளர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பாலஸ்தீனிய காணிகளுக்கு தீவைத்தனர். அவர்கள் கிராமங்களுக்கான குழாய் நீர் விநியோகத்தை துண்டித்தனர். அத்தோடு ஒரு மாத காலத்துக்கு மேலாக ஊரடங்குச் சட்டத்தின் கீழுள்ள வதிவிட பகுதிகளில் பாலஸ்தீனியர்களை சுட்டனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் மேரி றொபின்சன் பாலஸ்தீனப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அவர் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடுகளால் கண்கள் சிதறிப்போன சிறுவர்களை மருத்துவமனைகளில் பார்த்தார். 40000 பாலஸ்தீனியர்கள் ஹீப்ரோனில் ஆறுவாரங்களாக ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டனர். இதன் மூலம் யூதர்களைக் கொண்ட சிற்றூர் தலைமுதல் கால்வரை ஆயுதபாணிகளாக்கப்பட்டு தமது கடமைகளில் ஈடுபட முடிந்தது. உண்மையில் அனைத்துலகப் பாதுகாப்பு இந்தளவுக்கு அவசியப்பட்டது அருமை என றொபின்சன் தெரிவித்தார்.

பொருளாதார தடை

உலகிலேயே பெரிதான ஆயுதப் படைகளில் ஒன்றின் பலத்தை இஸ்ரேல் நிராயுதபாணிகளான பாலஸ்தீனர்களுக்கு எதிராக பாவித்ததோடு மட்டுமன்றி அது பாலஸ்தீனிய பிராந்தியங்களை சுமார் இரண்டு மாதங்களாக முற்றுகையிட்டது. இஸ்ரேலில் தொழில்புரியும் 120,000 பாலஸ்தீனிய தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி மறுத்தது. பாலஸ்தீனிய ஏற்றுமதிகளை தடுத்தது. இவை இஸ்ரேல் துறைமுகங்களூடாகவே செல்ல வேண்டும். பாலஸ்தீனிய ஆட்சியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வரிகளை வழங்காது விட்டது.

சண்டை மூண்டதில் இருந்து இஸ்ரேல் மேற்குக்கரை, காஸா பகுதிகளை வெளியுலகத்தில் இருந்து துண்டித்தது. எகிப்துக்கும், ஜோர்டானுக்குமான சகல தரைவழிப் பாதைகளையும் மூடியது. இதனால் வெளிநாட்டு வர்த்தகத்தை ஸ்தம்பிக்கச் செய்தது. ஏற்றுமதி சந்தையை மூடியமையானது பண்டங்களை தேங்கச் செய்தது. உள்ளூர் சந்தையில் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கக் கூடிய விலையை வீழ்ச்சி காண வைத்தது. உள்ளூர் களஞ்சிய வசதிகளற்ற காஸா கரைப் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் தமது விவசாயப் பண்டங்கள் அழுகிப் போவதை காண நேரிட்டது.

இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் அஸ்டொட், ஹைபா துறைமுகங்கள் ஊடாக பாலஸ்தீனிய ஏற்றுமதிகள் செல்ல இடமளிக்க மறுத்தனர். பாலஸ்தீனிய தகவல் அமைச்சின் தகவல்களின்படி கடந்த மாத இறுதியில் 800 கொள்கலன்கள்- கருவிகள், கட்டிடப் பொருட்கள், மருந்து வகைகள், சுமார் 1000 கார்கள்- அஸ்டொட்டில் அடைந்து போய்க் கிடந்தன. இஸ்ரேலிய சோதனைச் சாவடிகள் ஊடாக செல்ல வேண்டிய பாலஸ்தீனிய ஏற்றுமதிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

எல்லைகள் இழுத்து மூடப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகள் பற்றிப் பேசிய தனியார்துறை பாலஸ்தீனிய அபிவிருத்திக்கும் மறுநிர்மாணத்துக்குமான பொருளாதார சபையின் முகாமைப் பணிப்பாளர் முகம்மது சட்டாயி, "அவர்கள் பாலஸ்தீனிய பொருளாதாரத்தை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தும் ஒரு மூலோபாயத்தை கடைப்பிடிப்பது பெரிதும் ஆபத்தானது. இது வன்முறை மோதுதல் சுற்றுவட்டத்தை மட்டுமே பலப்படுத்த உதவும்" என்றார். இன்னும் பெரிதும் மோசமான விளைவுகளை 120,000 பாலஸ்தீனிய தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு பயணம் செய்யாது தடுக்கப்பட்டமை உருவாக்கும். இது சம்பளம் பெறும் 600,000 தொழிலாளர்களில் கால் பங்கை பிரதிநிதித்துவம் செய்கின்றது. 40 சதவீதத்தினர் வேலையற்றவர்களாக உள்ள நிலையில் முக்கியமான வாழ்க்கைப் பிழைப்பு இவர்களிலேயே தங்கியுள்ளது. இப்போது அந்த வாழ்க்கைக் கோடு கூட போய்விட்டது.

இஸ்ரேலில் தொழில் புரிபவர்களிடம் இருந்து தினமும் கிடைத்து வந்த 3.4 மில்லியன் டாலர்கள் இல்லாமல் போய்விட்டது. இஸ்ரேலில் சம்பளம் உயர்வானதால் பாலஸ்தீனிய பொருளாதார வருமானத்தில் 30 சதவீத இழப்பு ஏற்படுவதானது வறுமையையும் பதட்ட நிலைமையையும் அதிகரிக்க வைக்கும்.

இஸ்ரேலிய இராணுவ சோதனைச் சாவடிகள், கொன்கிரீட் தடைமதில்கள், புல்டோசர்களால் உடைக்கப்பட்ட வீதிகள் பாலஸ்தீனிய நகரங்கள், பட்டினங்கள், கிராமங்களுக்கு இடையே சகல தொடர்புகளையும் துண்டித்துள்ளது. இதே சமயம் ஜெருசலம் மேற்குக்கரை வாசிகளுக்கும் கண்டிப்பாக தடை செய்யப்பட்ட பிராந்தியமாகியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் உள்ள வேலைத்தலங்களுக்கு பாலஸ்தீனிய அரசாங்க அதிகாரிகள், முகாமையாளர்கள், வர்த்தகர்கள், பக்டரி தொழிலாளர்கள் செல்ல முடியாது. பாலஸ்தீனியர்கள் வேலை செய்ய முடியாமலும் உற்பத்தி பண்டங்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாமலும் அல்லது குடும்பங்களை பார்க்க முடியாமலும் தமது தமது சமூகங்களுக்குள்ளேயே அடைப்பட்டுப் போயுள்ளார்கள். சிறுவர்கள் பாடசாலை செல்ல முடியாது போயுள்ளது.

இதன் பெறுபேறாக உற்பத்தியில் 80 சதவீத வெட்டும் சேவை துறையில் 70 சதவீத வெட்டும் ஏற்பட்டுள்ளது. மக்கள் வேலைக்கு செல்லமுடியாது போயுள்ளதாலும் கொடுப்பனவுகள் முடங்கிப் போயுள்ளதாலும் வங்கிகள் காசோலைகளுக்கு பணம் வழங்க முடியாது போயுள்ளது. இது மக்களின் துயரங்களை அதிகரித்துள்ளது. உல்லாசப் பயணம் அடியோடு ஸ்தம்பித்துப் போயுள்ளது. பெத்லேஹேமில் மிலேனியம் கொண்டாட்டங்களுக்கான ஆயத்தங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பாலஸ்தீனிய பொருளாதார, வர்த்தக அமைச்சின்படி இந்த முற்றுகை முதல் மாதத்தில் குறைந்தபட்சம் 345 மில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஜ.நா. நிவாரண பணிகள் ஏஜன்சியின் ஒரு அறிக்கையின்படி தினசரி இழப்பு 4 மில்லியன் டாலர்களாகும். இஸ்ரேலிய வர்த்தகத் தடைகள் காரணமாக மேலும் 229 மில்லியன் டாலர்கள் இழக்கப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டுக்கான மொத்த தேசிய உற்பத்தி வீழ்ச்சி 630 மில்லியன் டாலர்களை எட்டும் எனவும் தலா வருமானம் 11 வீதத்தினால் வீழ்ச்சி காணும் எனவும் உலக வங்கி கூறியுள்ளது.

"பாதுகாப்புக் காரணங்களுக்காக" எனக் கூறி படைகள் ஓலிவ்(olive) செடிகளையும் வாழை மரங்களையும் ஜெரிச்சோ நகருக்கு வெளியே அடித்து சரித்து விடுவதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன.

பாலஸ்தீனிய ஆட்சியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வரி மாற்றங்களை (Tax Transfers) சட்டரீதியாக குறைக்க எடுத்த பலவார முயற்சிகளின் பின்னர் இஸ்ரேல் இப்போது அவற்றை அடியோடு நிறுத்திவிட்டது. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் இகுட் பராக் தமது முன்னோடியான பென்ஜமின் நெத்தன்யாகுவின் கொள்கைகளை புத்துயிர் பெறச் செய்துள்ளார். இவர் 1997ல் இந்த வரி மாற்றங்களை நிறுத்தி இருந்தார். பராக் தாம் மாதாந்த கொடுப்பனவான 60 மில்லியன் டாலர் கொடுப்பனவை நிறுத்துவதாக கூறினார். "உடன்படிக்கையை மறுதரப்பும் கெளரவிக்க வேண்டும் என்ற எமது கோரிக்கையின் ஒரு பாகமாக" இதைச் செய்வதாக பராக் கூறியுள்ளார்.

1994ம் ஆண்டின் பாரிஸ் பொருளாதார பத்திரத்தின்படி இஸ்ரேல் மாதாந்தம் பாலஸ்தீனிய ஆட்சியாளர்களுக்குரிய பெற்றோலியம், கொள்வனவு வட் (VAT) வரிகளை மாற்ற வேண்டும். சராசரியாக இருதரப்பும் இறக்குமதி விலைப்பட்டியல்களை சமர்ப்பித்ததன் பின்னர் இஸ்ரேல் பாலஸ்தீனிய ஆட்சியாளர்களுக்கு 160 மில்லியன் ILS (Israeli New Shekels -39 மில்லியன் டாலர்கள்) செலுத்துகின்றது. எவ்வாறெனினும் இஸ்ரேல் அதனது ஏகபோக கம்பனிகள் வழங்கும் மின்சாரம், தொலைத்தொடர்புகளின் பேரில் ஒரு தொகையை கழித்துக் கொள்கின்றது. கடந்த மாதம் இஸ்ரேல் 30 மில்லியன் ILSகளை மட்டுமே மாற்றியது. இப்போது இக்கொடுப்பனவுகள் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டன.

மேற்குகரை காஸா பகுதிகளில் உள்ள ஐரோப்பிய சமூகத்தின் பிரதிநிதியான ஜீன் பிரேக்ட் கூறியதாவது: "இஸ்ரேல் பாரீஸ் பொருளாதார பத்திரத்தை மீறிவிட்டது". ஐரோப்பிய யூனியனின் வர்த்தக விதிகளையும் சட்டங்களையும் இஸ்ரேல் மீறி நடந்த ஏனையவற்றுள் இது முதலிடத்தில் இருந்த போதிலும் ஐரோப்பிய யூனியன் இஸ்ரேலுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டது. அது எடுத்த ஒரு நடவடிக்கை தனது "விசேட பண வசதிகளில்" (Special cash facility) இருந்து 27 மில்லியன் ஈரோக்களை (23 மில்லியன் டாலர்கள்) பயன்படுத்த அங்கீகாரம் வழங்கியதேயாகும். இதன் மூலம் பாலஸ்தீனிய தலைவர் யசீர் அரபாத் தனது பெருமளவிலான பொலிஸ், பாதுகாப்பு படைகளுக்கு பிரமாண்டமான சம்பளத்தை வழங்குவது சாத்தியமாகியது. பாலஸ்தீனிய மக்களின் சமூக, அரசியல் அதிருப்தியை காவல் செய்யும் சாத்தியத்தை அரபாத்துக்கு வழங்குவதை மறுப்பதையே ஏகாதிபத்திய வல்லரசுகள் இறுதியாக செய்ய விரும்புகின்றன.

ஒஸ்லோ உடன்படிக்கையின் பாரம்பரியம்

இவை எல்லாமே 1993ல் ஒஸ்லோ உடன்படிக்கை கைச்சாத்தானதில் இருந்து வாழ்க்கைத் தரம் பயங்கரமாக வீழ்ச்சி கண்டதன் முன்னணியில் நின்று கொண்டுள்ளன. பாலஸ்தீனியர்களுக்கென ஒரு தனியான பொருளாதார அபிவிருத்தி என்ற புனைகதை, பெரும்பான்மையினரை முன்னர் ஒரு போதும் இல்லாத விதத்தில் மோசமான வறுமைக்குள் தள்ளியுள்ளது. 1996ன் பின்னர் இது பெருமளவு மோசமடைந்தது. இஸ்ரேலின் கதவடைப்புக் கொள்கை பாலஸ்தீனிய பொருளாதாரத்தை சிதறடித்தது. உற்பத்தி வீழ்ச்சி கண்டது. சந்தை சுருங்கியது. இஸ்ரேல் மீது தங்கியிருப்பது அதிகரித்தது. வாழ்க்கைத் தரம் ஏறக்குறைய அரைவாசியாக வீழ்ச்சி கண்டது.

வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியோடு ஊழல், மோசடி, நிர்வாகச் சீர்கேடும், அரபாத்தின் பாலஸ்தீனிய ஆட்சியின் பிரமாண்டமான அளவிலான ஊழலும் சேர்ந்து கொண்டது. வெளிநாட்டு உதவிகளில் எதுவும் எதிர்பார்த்த இலக்குகளை சென்றடைவது கிடையாது. பெரும்பகுதி அரபாத்தின் நெருக்கமான நண்பர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளை சென்றடைகின்றன. பெரும்பான்மை மக்களது மோசமான வீடமைப்பு பிரச்சினைகளுக்கிடையேயும்- பெரும்பாலானோர் அகதிகள் முகாம்களிலேயே வாழ்கின்றனர். காஸாவில் இடம்பெற்ற கட்டிட நிர்மாணங்கள் அரபாத்துக்கும் அவரது கையாட்களுக்கும் ஆடம்பரமான கடற்கரை மாட மாளிகைகளை உருவாக்கியது. அரசாங்கத்துறை வரவு செலவுத் திட்டத்தில் பெரும் பகுதியை அவரது 14 பாதுகாப்பு படைகள் கறந்து கொள்கின்றன.

அத்தகைய ஒரு நிலைமையின் கீழ் ஜனநாயகம், சமத்துவம், அரசியல் உரிமைகளுக்கு வாய்ப்பே இல்லாது போயிற்று. கருத்து முரண்பாடுகள் நடுச்சாம கைதுகள், தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள், திடீர் மரண தண்டனைகள் மூலம் நசுக்கப்பட்டன.

ஆனால் இவை எல்லாமே சியோனிச அரசினால் உருவாக்கப்பட்ட பொருளாதார பேரழிவின் ஒரு பகுதி மட்டுமே. 3.4 மில்லியன் பாலஸ்தீனிய அகதிகளின் அவஸ்த்தை நிறைந்த வாழ்க்கை அடியோடு புறக்கணிக்கப்பட்டது. 1948ல் மத்திய கிழக்கு பூராவும் நாடுகடத்தப்பட்டும் சிதறுண்டும் போன 50 ஆண்டுகளின் பின்னர் பாலஸ்தீனியர்கள் வீடற்றவர்களாகவும் நாடற்றவர்களாகவும் நஷ்டஈடு கிட்டாதவர்களாகவும் உள்ளனர். 32 வருட கால இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பாலஸ்தீனியர்களுக்கு சொல்லில் வடிக்க முடியாத துயரங்களை கொணர்ந்தது. கூட்டுத் தண்டனை வடிவமாக வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. மேற்கு கரையினதும் காஸாவினதும் பொருளாதாரங்கள் சிதறடிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒஸ்லோவில் ஸ்தாபிதம் செய்யப்பட்ட பாலஸ்தீனிய உடன்படிக்கை சியோனிச குடியேற்றங்களுக்கான நிலங்களை பறிமுதல் செய்வதற்கு -எப்போதும் இஸ்ரேலின் முக்கிய இலக்காக விளங்கியது- மேலும் வாய்ப்பாகியது. சர்வதேச உடன்படிக்கைகளையும் எண்ணற்ற ஐ.நா. பிரேரணைகளையும் மீறி இஸ்ரேல் நிலங்களை பறிமுதல் செய்தது. இஸ்ரேலின் மாஜி பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாகு சி.என்.என்.க்கு கூறியது போல்: "எனது முன்னோடியும் ஒஸ்லோ உடன்படிக்கையில் கைச்சாத்திட்டவருமான (தொழிற் கட்சி பிரதமர் யிட்ஷாக்) றபின் இந்த உடன்படிக்கையின் கீழ் குடியேற்றங்களை அமைப்பேன் என வாயடித்தார். உண்மையில் அவர் குடியேற்ற சனத்தொகையை 50 சதவீதத்தினால் விஸ்தரித்தார். நாம் (லீக்குட் கட்சி) அதை நெருங்கவும் முடியாது." அத்தோடு பராக்கின் கீழ் குடியேற்றங்களை விஸ்தரிப்பது அதிகரித்துள்ளது. குடியேறியோர் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்டு, பாலஸ்தீனிய வாசிகளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைக் கொண்ட மேலதிக பிராந்திய வசதிவாய்ப்புகள் கொண்டவர்களாக வாழ்கின்றனர். அதே வேளை இஸ்ரேல் நீர்வளங்களையும் நுழைவாயில்களையும், வெளியேறும் வழிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளது.

இந்த பொருளாதார பேரழிவு மூலம் வஞ்சம் தீர்க்கும் இஸ்ரேலின் வல்லமையானது ஒஸ்லோ உடன்படிக்கையினதும் பாலஸ்தீனிய "சுயாட்சி"யினதும் அடியோடு மோசடியான தன்மையை சுட்டிக்காட்டுகின்றது. சமாதானத்தினதும் சுபீட்சத்தினதும் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைப்பதற்கு மாறாக 1993க்குப் பின்னைய ஏற்பாடுகள் பாலஸ்தீனியர்களை பல தனிமைப்படுத்தப்பட்ட கூடுகளில் தள்ளி பூட்டியது; சியோனிச குடியேற்றங்களை பலப்படுத்தியது; ஒரு புதிய வடிவிலான இஸ்ரேலிய மேலாதிக்கத்தை பாலஸ்தீனியர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்யும் விதத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் பொருளாதார அபிவிருத்தியை பிணைந்தும் போட்டது.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved