World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா: இந்தியா 

BJP-led government censors painting at India's National Gallery of Modern Art

நவீன கலைக்கான இந்திய தேசிய கலைக்கூடத்தில் பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கம் வண்ண ஓவியத்தை தணிக்கை செய்துள்ளது!

By our correspondents
9 October 2000

Back to screen version

இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி (பி.ஜே.பி) தலைமையிலான அரசாங்கம் கலைத்துறையில் தனது வகுப்புவாத பட்டியலைத் திணிப்பதற்கு மீண்டும் தலையீடு செய்துள்ளது. ஆகஸ்டு மாதத்தில், நாட்டின் முதன்மையான தற்கால கலையின் கலைக்கூடமான புதுதில்லியில் உள்ள நவீன கலையின் தேசிய கலைக்கூடத்தில் (NGMA) இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியில், ஒரு வண்ண ஓவியத்தை அப்புறப்படுத்துமாறு கலாச்சார அமைச்சகத்தின் அதிகாரிகள் கோரினர்.

இந்தப்படம் சுரேந்திரன் நாயர் என்பவரால் வண்ணம் தீட்டப்பட்டது. அது (Icarus) இகாரசின் தனிமொழியை ஒத்திகை பார்க்கும் ஒரு நடிகன் எனத் தலைப்பிடப்பட்டிருந்தது. கிரேக்க புராணக்கதையின் பாத்திரமான இகாரஸ், நிர்வாணமாக அசோகர் தூணின் மேல் நிற்பதாக வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. அது இளம் இந்திய ஓவியர்கள் 25 பேர் பங்கேற்ற ஓவியக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அது ``புதிய நூற்றாண்டிற்கான ஒருமித்த குரல்`` என்று தலைப்பிடப் பட்டிருந்ததுடன் செப்டம்பர் தொடக்கத்தில் திறப்பதற்காக திட்டமிடப் பட்டிருந்தது.

அசோகர் தூண், கி.மு 273 முதல் கி.மு. 232 வரை இந்தியாவை ஆட்சி செய்த அசோகப் பேரரசனின் ஆட்சிக் காலத்தை நினைவூட்டுவதாகும். அது நடுவில் சக்கரத்தைக் கொண்ட வட்ட வடிவமான மணிச்சட்டத்தின் மீது நான்கு சிங்கங்கள் நிற்பது போல் வரையப்பட்டிருந்தது. 1947 பிரிட்டீஷ் ஆட்சியின் முடிவினைத் தொடர்ந்து அது இந்தியாவின் தேசிய சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கண்காட்சி திறப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த இரு நாட்களுக்கு முன்னர், ``மதிப்பை குறைக்கும் வகையான முறையில்`` தேசியச் சின்னம் வரையப்பட்டிருப்பது தேசிய சக்திகளிடமிருந்து ஆட்சேபனைகளைத் தூண்டும் எனக் கோரி கலாச்சார அமைச்சக செயலாளர் பி.வி. வைத்தியநாத அய்யர் கண்காட்சியிலிருந்து அந்த ஓவியத்தை உடனடியாக அகற்றுமாறு என்.ஜி.எம்.ஏ இயக்குநர் முக்தா நித்தி சாம்நோத்ராவுக்கு ஆணையிட்டார்

சாம்நோத்ரா எந்தவிதமான கலைப் பின்புலமும் இல்லாத பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்டவர். அவர் உடனடியாக இதற்கு ஒப்புக் கொண்டார். அந்தப் பெண்மணி, நாயருடைய சக ஓவியரான ரேகா ரோத்வித்தியாவினால் தீட்டப்பட்ட இழைகளாலான ஓவியமான நிர்வாணப் பெண்ணையும் சிற்பி ராஜேந்தர் திக்குவின் வேலைப்பாட்டையும் அகற்றப் போவதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தால் முக்கிய நிலைகளில் திணிக்கப்பட்ட ஏராளமான அதிகாரிகளுள் என்.ஜி.எம்.ஏ இயக்குநரும் ஒருவர். ஏனெனில் அவர்கள் பி.ஜே.பி.யின் வகுப்புவாத வேலைத்திட்டத்துடன் ஒத்துப் போகவும் அல்லது அதற்கு வெளிப்படையாக வக்காலத்து வாங்கவும் தயார்நிலையில் உள்ளவர்கள். கடந்த ஆண்டு அரசாங்கம் இந்திய வரலாற்று ஆய்வு அவையில் (ICHR) இருந்து பல முன்னணி மதச்சார்பாற்ற வரலாற்று ஆசிரியர்களை பணி ஓய்வு கொடுத்ததுடன், அவர்களுக்குப் பதிலாக பி.ஜே.பி கூட்டாளிகளை அதில் அமர்த்தியது. ஐ.சி.ஹெச்.ஆர் தலைவர் பி.ஆர். குரோவர் தீவிரவாத விஷ்வ இந்து பரிஷத்தின் (உலக இந்து அவை) ஆதரவாளராவார். ஐ.சி.ஹெச்.ஆரின் மூவர் கொண்ட ஆளுமை அங்கத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்ட வரலாற்றாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்காட்சியின் மேற்பாவையாளர் பிரிமாகுரியன் மற்றும் ஏற்பாட்டாளர் அமித்குப்தா ஓவியத் தணிக்கையை ஆட்சேபித்து சாம் நோத்ராவை அவரது முடிவை மறுபரிசீலனை செய்யக் கேட்ட போது, என்.ஜி.எம்.ஏ இயக்குநர் தாமே கலைப்படைப்புக்களை அப்புறப்படுத்தப் போவதாக அச்சுறுத்தினார். கண்காட்சியில் சம்பந்தப்பட்ட அனைத்துக் கலைஞர்களும் கலைச் சுதந்திரத்தின் மீதான பாரதூரமான தாக்குதலால் அதிர்ச்சியடைந்து எதிர்ப்பைக்காட்டும் பொருட்டு தங்களது படைப்புக்களை விலக்கிக் கொண்டார்கள்.

சர்வதேசரீதியாக பிரபலமான நாயர், பாரம்பரிய மற்றும் தற்கால வடிவங்கள், திரைப்பட சுவரொட்டிகள் மற்றும் சுவரில் எழதப்படும் அரசியல் வரி ஓவியம் உட்பட்ட ஒரு கலவையை அவர் தனது படைப்புகளில் பயன்படுத்துகிறார். தனது வண்ண ஓவியம் ``நமது பிணைப்புக்களின் மீது பிரதிபலிப்பதற்கான தேவையை கருத்துரைப்பதற்கான உருவகக்கதை வடிவிலான வழிமுறை`` என்று இந்திய பத்திரிகைகளிடம் கூறினார். அத்துடன் அவர் குறிப்பிட்டார். ``எனது பூச்சு ஓவியம் அசோகர் தூணுடன் கிரேக்க புராணக்கதைப் பாத்திரம் இகாரஸ் அதன்மீது உச்சியில் நிற்பது எப்படி தேசிய சின்னத்தை அவமதிப்பதாக இருக்க முடியும் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.``

மற்ற கலைஞர்கள் அரசாங்கத்தின் தணிக்கையைக் கண்டனம் செய்தனர். உத்திரப்பிரதேசத்தில், திரைப்பட இயக்குநர் தீபாமேத்தாவின் (Water) தண்ணீர் படத் தயாரிப்பினை இந்து அடிப்படை வாதிகள் பலவந்தமாக நிறுத்த நிர்பந்தித்த பிறகு ஒன்பது மாதங்களுக்கும் குறைவான காலத்தில் இது நிகழ்ந்துள்ளது.

புகழ்பெற்ற கலைஞரும் என்.ஜி.எம்.ஏ வின் ஆலோசனைக்குழு உறுப்பினருமான குலாம் ஷேக் இதற்கு எதிர்ப்பாக செப்டம்பர் 6 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

என்.ஜி.எம்.ஏ. இயக்குநருக்கு ஷேக் எழுதியதில் ``போலியான சட்டம், ஒழுக்கம் அல்லது அழகியலின் பேரில், அங்கீகரிக்கப்பட்ட சட்ட பூர்வமான காட்சியிலிருந்து பூச்சு ஓவியத்தை அகற்றுவதற்கான தன்னிச்சையான முடிவானது கலைச் சொல்லகராதிக்கு உணர்ச்சிமயமான தன்மையின்மையின் துரதிர்ஷ்டவசத்தை வெளிக்காட்டுகிறது`` என பிரகடனம் செய்தார். இது விஷயத்தில் என்.ஜி.எம்.ஏ பொறுப்பாளர்கள் தமது சொந்த ஆலோசனைக்குழு அங்கத்தையே புறக்கணித்விட்டனர் என்று அவர் கூறினார்.

சப்தர்ஹஷ்மி நினைவுக் குழு (Sahmat) இந்து அடிப்படைவாதம் மற்றும் கலாச்சார தேசியவாதத்தினை எதிர்ப்பதற்கான கலைஞர்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் கூட்டணி, தங்களது படைப்புகளை விலக்கிக் கொண்ட கலைஞர்களுடன் தமது ஐக்கியத்தை வெளிப்படுத்தி, பத்திரிகைச் செய்தியை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது: ``தற்போதைய வகைமையின் கீழ், தாராள சூழல் அரசியல் தலைமை மட்டுமல்லாமல் அதிகாரத்துவ வாதிகளும் எது தேசியச் சார்பு அல்லது தேசவிரோதத்தை கொண்டிருக்கிறது என முடிவெடுத்து ரத்துச் செய்வதற்கான உரிமையை தாங்கள் கொண்டுள்ள அளவுக்கு சூழல் மாசு படிந்துள்ளது.``

கலைஞர்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் படைப்புகள் மீதான அரசுத் தணிக்கை ஒரு தனித்த நிகழ்ச்சி அல்ல மாறாக இந்தியா முழுவதும் கலைத்துவ மற்றும் அறிவு ஜீவி வெளிப்பாட்டின் மீதான மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அடிப்படை வாதிகளின் தாக்குதலின் வளர்ந்துவரும் போக்கின் ஒரு பகுதியாகும்.

இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவரான எம்.எப்.ஹீசைன் ``வகுப்பு ஒற்றுமையை சீர்குலைத்த`` குற்றம் சாட்டப் பட்டு இந்த ஆண்டு வழக்கை எதிர்கொண்டிருக்கிறார். 1996ல் அவர் இந்து பெண்கடவுளை நிர்வாணமாக உருத்தீட்டியதன் பின்னர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

கடந்த ஆண்டு அக்டோபரில் பிரச்சார் பாரதி (அரசாங்கத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனம்) யிலிருந்து இரண்டு வரலாற்று ஆசிரியர்கள் நீக்கப்பட்டார்கள் ஏனெனில் அவர்கள், இந்து கடவுளர்கள் பற்றிய ஏராளமான தொலைக்காட்சித் தொடர்கள் வழியாக இந்துத்துவ கொள்கைப் பிரச்சாரம் அதிகரித்து வருவதை எதிர்த்தனர். இந்துத்துவ என்பது, இந்தியா அரசுக் கட்டமைப்புடன் ஒரு இந்து தேசம் என்பதுடன் அனைத்துவகை வாழ்க்கை முறைகளும் அதன்படியே அமைக்கப்படவேண்டும் என்று கோரும் தீவிர மதச்சார்பு கொள்கையாகும்.

இந்த ஆண்டு பிப்ரவரியில், இந்து இனவாத குண்டர்கள் தீபாமேத்தாவின் தண்ணீர் (வாட்டர்) படப்பிடிப்பு அரங்கை உடைத்து நொறுக்கிய பின்னர், உத்திரப்பிரதேச அரசாங்கம் திரைப்படத் தயாரிப்பைத் தடைசெய்தது, பி.ஜே.பி. தலைமையிலான அரசாங்கம் பிரபல வரலாற்று ஆசிரியர்களான கே.என். பணிக்கர் மற்றும் அமித்சர்க்கார் ஆகியோரால் தொகுக்கப்பட்ட பத்திரங்களின் தொகுதியான சுதந்திரத்தை நோக்கி என்ற இரண்டு தொகுதிகளின் வெளியீட்டை நிறுத்தியது. இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தால் பணிக்கப்பட்டிருந்த இந்த தொகுதிகள் தடுக்கப்பட்டன ஏனெனில் அவை 1940களில் இந்தியாவின் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தின் பொழுது, இந்து மகாசபா மற்றும் ராஷ்ட்ரிய சுயசேவக் சங்கம் ஆகியவற்றின் பிற்போக்குப் பாத்திரங்களை அம்பலப்படுத்தின.

மிக அண்மையில், ஆகஸ்டில், கனடாவில் டொரோண்டோவில் இடம் பெற்ற தற்கால இந்தியக்கலை பற்றிய ``பாதையில் தூசு`` என்ற கண்காட்சியை நிறுத்த அரசாங்கம் முயற்சித்தது. (Shastri Indo-Canadian Institute) சாஸ்திரி இந்தோ-கனடிய நிறுவனத்தால் நிதி ஆதரவளிக்கப்பட்ட இக்கண்காட்சியில் ``சதுரங்கக் கட்டத்தில் சாதியும்,சம்பிரதாயங்களும் பகடக்காய்களாய்``, ``தீவிர தேசிய வாதத்துக்காக ஆர்.எஸ்.எஸ்`` மற்றும் ``காந்தியைக் கொன்ற சித்தாந்தம் பி.ஜே.பியைக் கட்டுப்படுத்துகிறது`` போன்ற தலைப்புகள் கொண்ட சுவரொட்டிகள் உட்பட பல இடம் பெற்றிருந்தன. கனடாவில் உள்ள இந்தியாவின் ஹைகமிஷனர் ரஜினிகாந்த் வர்மா, இந்தக் கண்காட்சியை ``மஞ்சள் காமாளைக் காரனின் கற்பனையில் வேரூன்றிய கற்பனைப் படைப்பு`` என்று பகிரங்கமாகக் கண்டித்ததுடன், சாஸ்திரி இந்தோ-கனடிய நிறுவனம் அதனுடன் இருந்து தொடர்பறுத்துக் கொள்ளுமாறு ஆணையிட்டார். கண்காட்சியை ஏற்பாடு செய்த மேற்கு ஒன்டோரியோ பல்கலைக் கழகத்தில் இந்திய ஆய்வுக்கான நிதி உதவியையும் கூட இந்திய அரசாங்கம் நிறுத்திவிட்டது.

என்.ஜி.எம்.ஏவில் நாயரின் வண்ணப் பூச்சு ஓவியத்திற்கும் மற்றும் ஏனைய கலைப்படைப்புகளுக்குமான தணிக்கையானது திட்டவட்டமான அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் இணைந்துள்ளது. வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் அதிகரித்து வரும் வறுமை மட்டத்தின் சூழல்களுக்குக் கீழே, சாதி மத வேறுபாடுகள் வழியாக இந்திய உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதன் மூலம் தனது கொள்கைகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தோன்றுவதைத் தடுப்பதற்காக இந்திய அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. அரசாங்கத்தின் அடிப்படைவாத வேலைத்திட்டத்தை சவால் செய்யக்கூடிய எந்தவிதமான ஆக்கப்பூர்வமான வேலையையும் கலைஞர்கள், படத்தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஏனைய அறிவு ஜீவிகள் சவால் செய்யமுடியாத சமூக சூழலை உருவாக்குவதில் இது சம்பந்தப் பட்டுள்ளது.


Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved