World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

Conditions in Colombo's shanties highlight Sri Lanka's housing crisis

 கொழும்பு சேரிகளின் நிலைமை இலங்கையின் வீடற்றோர் பிரச்சினையை பூதாகாரமாக காட்டுகின்றது

By Priyadarshana Meddawatte,
SEP candidate for the Colombo district
21 September 2000

Back to screen version

தேர்தல் காலங்களில் வழமையாக இடம்பெறுவதைப் போல இம்முறையும் இலங்கையின் தலைநகரான கொழும்பையும் அதனை அண்டிய நகர்ப்புறச் சேரிகளிலும் உள்ள மக்கள் ஆளும் பொதுஜன முன்னணியினதும் எதிர்க்கட்சியான யூ.என்.பி.யினதும் அரசியல் புள்ளிகளை தம்மத்தியில் காண்கின்றனர். பொதுஜன முன்னணியினதும் யூ.என்.பி.யினதும் தேர்தல் வேட்பாளர்கள் தமது ஆதரவாளர்கள் புடைசூழ குறுகிய ஒழுங்கைகளூடாக வலம் வந்து பலத்த அசெளகரியத்தின் மத்தியில் சினேகபூர்வமாக உரையாடி, வாக்கு வேட்டைக்காக வலம்வருவது இப்போது பொதுவான காட்சியாகும்.

தமது ஏனைய தேர்தல் வாக்குறுதிகளுடன் பொதுஜன முன்னணி "எல்லோருக்கும் வாழ்வதற்கு பொருத்தமான வீட்டு வசதியை" வழங்கும் ஒரு வாக்குறுதியையும் முன்வைத்துள்ளது. 1994ல் பொதுஜன முன்னணி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் 17 வருடகாலமாக இலங்கையை ஆண்ட யூ.என்.பி. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பின்வருமாறு கூறுகிறது: "ஒவ்வொரு இலங்கையர்க்கும் ஒரு வீட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை நாம் எடுப்போம். வீட்டு உரிமையை உறுதி செய்வோம். நிலுவையிலுள்ள வீட்டுக் கடன்களை இரத்துச் செய்வோம்".

இத்தகைய வாக்குறுதிகளை நம்புபவர்கள் ஒரு சிலரே. எல்லாவற்றுக்கும் மேல் இவையாவும் இதே வேட்பாளர்களால் அல்லது அவர்களது முன்னோடிகளால் கடந்த தேர்தல்களின் போதும் வழங்கப்பட்டவையாகும். ஆனால் வீட்டுப் பிரச்சினையோ வர வர மோசமாகி வருகின்றது. சேரிகளில் காணப்படும் நிலைமை உண்மையில் சகிக்க முடியாதது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி முறையான சுகாதார வசதிகளற்ற- "வீடுகள்" என்று குறிப்பிடப்பட முடியாத 1506 சேரிகள் 66022 குடும்பங்களுக்கு புகலிடங்களாகியுள்ளன. தலைநகரைச் சூழ உள்ள இடங்களைத் தவிர்ந்த கொழும்பின் மொத்த குடியிருப்பில் இந்த எண்ணிக்கை 51 சதவீதமாகும்.

இச்சேரிகளில் அனேகமானவை எந்த ஒரு வீதி வசதியும் அற்றவை. இரண்டுபேர் கூட கடந்து செல்ல முடியாதளவு குறுகிய பாதைகளையே இந்த நகர்ப்புற சேரிகளுக்குள் காணலாம். குன்றும் குழியுமாக, கழிவுப் பொருட்கள் நிறைந்தும் கடுமையான வெய்யிலிலும் காய்ந்து போகாதளவு சேறு நிறைந்தவையாகவே இவை உள்ளன. மழைக்காலங்களில் இந்த வீடுகள், கழிவு நீர் நிறைந்து வெள்ளக்காடாக காணப்படும். வேறெதுவும் செய்யமுடியாத சிறுவர்கள் இந்த குழிகளில் வெள்ளத்தால் நிறைந்த நீரில் அம்மணமாக விளையாடிக் கொண்டிருப்பதை காணலாம். நீரால் பரவும் காலரா, வயிற்றோட்டம், மலேரியா போன்ற வியாதிகள் மிகச் சர்வ சாதாரணமாக பரவுவதோடு பல்வேறுபட்ட தோல் வியாதிகளும் இப்பகுதிகளில் பொதுவாக காணப்படுகின்றன.

மத்திய கொழும்பில் பபாபுள்ள கொலனியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயாரான 55 வயது பெண் ஒருவர் பின்வருமாறு விளக்கினார். "ஆகாயத்தில் கருமேகங்கள் திரண்டால் பயம் உருவாகும். பலத்த மழை தொடர்ந்து பெய்தால், மூன்று நான்கு மணித்தியாலங்களுக்குள் நீர் மட்டம் முழங்கலுக்கு வந்துவிடும். வீட்டுக்குள்ளேயே அந்தளவு நீர் மட்டம் வந்துவிடும். இந்த காலனிக்குள் உள்ள 350 வீடுகளுக்கு ஒரு பொதுக் கழிவைறை, குடி நீர், பாவனை நீர் போன்றவற்றுக்கான நீர் குழாய்களே கிடையாது. சாக்கடை அமைப்பு என்பது கிடையவே கிடையாது. இது பற்றி நாம் அரசாங்கத்துக்கு அல்லது கவுன்சிலுக்கு புகார் செய்தால் சேரிகளுக்கு பதிலாக உங்களுக்கு வீடுகள் கிடைக்கும் என்று சொல்வார்கள். எங்களில் ஒருவருக்குமே வீடு ஒன்றும் இதுவரை கிடைக்கவில்லை."

ஏனைய சேரிகளது நிலைமையும் இதுவேதான். பாலத்துறை, பலாமரச் சந்தி, ஆமர் வீதி, போதிராஜபுர, சமகிபுர, ஸ்டேஸ்புர போன்ற சேரிகளும் எந்தவிதமான கழிவறை, தண்ணீர்க் குழாய் வசதிகளற்றவை. இருக்கும் கழிவறைகளுக்கும் கதவுகள் கிடையாது.

பழைய "இடதுசாரி" அதிகாரத்துவ தலைமைகளையும் உள்ளடக்கிய பொதுஜன முன்னணி, 'திரசார புரவர' (போதியளவு வீட்டுவசதி) என்ற திட்டத்தை ஆரம்பித்தது. ஸ்ராலினிச கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவரும், வீடமைப்பு அமைச்சருமான இந்திக குணவர்தன, 'திரசாரபுரவர திட்டத்தின் முன்னோடி எனத் தன்னைப் புகழ்ந்துகொள்கின்றார். கொழும்பை அபிவிருத்தி செய்யவும் சேரிவாசிகளுக்கு வீடு வழங்கவும் போதியளவு இடம் ஒதுக்கியதாகவும் வாயடிப்பில் ஈடுபட்டு வருகின்றார். "இத்திட்டத்தின் உண்மையான இலக்கு கொழும்பில் வசிக்கும் வறியவர்களுக்கான நியாயமான வீடுகள் அல்ல. உண்மையில் சேரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை வர்த்தக தேவைகளுக்காக ஒதுக்கிக் கொடுப்பதேயாகும்.

பல்வேறு அரச துறை அதிகார சபைகளால் இத்திட்டத்தை அமுலாக்கவென உருவாக்கப்பட்ட "ரியல் எஸ்டேட் எக்சேன்ஜ் லிமிடட்" (Real Estate exchange limited) என்ற கம்பனியானது தனது அடிப்படை நோக்கத்தை பின்வருமாறு விளக்கியுள்ளது: "இலங்கையின் வர்த்தக மையமான கொழும்புக்கு நேரடியாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டுமாயின், நகர்ப்புறத்துள் இடவசதி, கட்டமைப்பு வசதிகள் அத்துடன் மலிவான கூலியுழைப்பை வழங்குவது அவசியமாகின்றது. கொழும்பின் காணி சம்பந்தப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்த யுகம் முடிவடைந்துள்ளது. வெளிப்படையான பொருளாதாரத்தில் முதலீட்டின் அபிவிருத்திக்காக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்".

இந்த கம்பனி, சேரிவாசிகளின் எதிர்காலம் பற்றிய தனது முரண்பட்ட அபிப்பிராயத்தை பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது. இந்தச் சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள், நில ஆக்கிரமிப்பாளர்கள் இந்த காணிகளில் வசிக்க இவர்கள் உடல், சமூக, பொருளாதார ரீதியாக எந்த ஒரு சட்டரீதியான உரிமையையும் கொண்டவர்கள் அல்லர்." புதிய அதிவேகப் பாதைக் கட்டமைப்புக்கு அண்மையில் உள்ள, இந்த நகரின் பழையதும் பெரியதுமான, 3500 பேர்களுக்கு மேல் வசிக்கும் 200 ஏக்கர் சேரிப் பிரதேசமான வனாத்தமுல்லை எனும் கொலனியில், "உறுதியான குடியிருப்புத் திட்டம்" என்ற ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 'சஹாஸ்ர புரய' (மிலேனிய நகரம்) என்ற பெயரைக் கொண்ட இந்தக் குடியிருப்புத் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதோடு டிசம்பரில் கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டது. 14 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தின் முதலாவது மாடி கடந்த ஜூனில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அது இடிந்து விழத் தொடங்கியது. சேரிவாசிகள் இதைப் பற்றி முறையிட்ட போது, கட்டிட வேலை பூர்த்தியானதும் இந்த மாடி மீளக் கட்டப்படும் என்று உத்தியோகஸ்தர்கள் உத்தரவாதம் வழங்கினர்.

ஒரு தொழிலாளி இதுபற்றி விமர்சிக்கையில் "பல ஆண்டுகளாக நாம் ஒர் ஓட்டை வளையில் வாழ்ந்தோம். எமது வீட்டை அடுக்குமாடிக்கு மாற்றுவது என்பது சிறந்ததல்ல என்பதை நாம் உணரத் தலைப்பட்டுள்ளோம்." அந்த மாடி இடிந்து விழுந்ததை கண்டது பெரிதும் அதிர்ச்சி தருகிறது. இந்த மாடிகள் நாம் குடிபுகுந்த பின் விழுந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?" எனக் கேட்டார்.

இப்பிரதேச வாசிகளுக்கு "உரிமையாளர் அட்டை" ஒன்று உள்ளது. அதாவது தற்போது வாழும் இருப்பிடத்திலுள்ள காணியை கைமாற்றும் வாக்குறுதிக்காக வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள் இந்த அட்டைகள் தற்போதைய சந்தைவிலை மதிப்பை கொண்டதென்றும், அதற்காக ஒரு தொடர்மாடி வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

அரசாங்கம் மொத்த செலவை பற்றி எதுவும் அறிவிக்கவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தருவதாக கூறப்பட்ட மாடி வீட்டின் சாவியை பெற ரூபா 25000 கட்டவேண்டும். மொத்தப் பெறுமதியிலிருந்து இந்தத் தொகை கழிக்கப்படமாட்டாது. இவற்றுக்கும் மேலாக, குடியிருப்பாளர் பராமரிப்பு செலவு, மின்சார, நீர் கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.

எவ்வாறெனினும் இந்த சேரிவாசிகளுக்கு மாடிக் கட்டிடம் ஒன்று கிடைக்காது என்பது தெளிவு. தற்போது அவர்கள் வசித்துவரும் விலை மதிப்பற்ற நிலத்தில் வாழும் உரிமையை அவர்கள் இழக்க நேரிடுவதோடு யாரோ ஒருவர் கொழுத்த இலாபத்தை ஈட்டிக் கொள்ளப் போகின்றார். இக்கட்டிடத்தின் சில பகுதிகள் சுப்பர்மார்கெட், கடைத் தொகுதி என்பவற்றுக்குப் பயன்படுத்தும் முகமாக விற்பனை செய்யப்படும்.

ஒரு பெண் இப்படிக் குறிப்பிட்டார்: " 25000 ரூபா செலுத்தாவிடில் எமக்கு மாடி வீடு கிடையாது. நாம் கடன் பட்டாவது கட்டுமாறு கேட்கப்பட்டுள்ளோம். ஒரு சில மாதங்களுக்கு வாடகை வழங்காவிடில் "வீடு" பறிமுதலாகும். மின்சார, நீர் கட்டணங்கள் கட்டாவிடில் விநியோக தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும். இப்ணத்தை சம்பாதிக்க ஏதாவது ஒரு மாயாஜாலம் உண்டா?" எனக்கேட்டார்.

வானாத்தமுல்லையில் வசிப்பவர்களில் கால்வாசிப்பேர் சிறு வியாபாரிகள். சிலர் சிறு வருமானம் ஒன்றை தேடிக்கொள்வதற்காக கோழி, பன்றி, மாடு வளர்ப்பவர்கள். அவர்கள் தொடர்மாடியில் குடியேற வேண்டுமாயின் இந்த வருமானத்தை இழக்க நேரிடும். வேலையற்றவர்கள் இந்தத் தொடர் மாடியில் வசிக்க நிதியுதவியற்றவர்கள் ஆவர். அநேகமானவர்கள் நகரை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுவதுடன் இந்த காணிகள் வர்த்தகர்களுக்கு விற்கப்படும்.

இச்சேரிகள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது உருவானவை. 1977ல் யூ.என்.பி. அரசாங்கம் அறிமுகப்படுத்திய திறந்த சந்தை கொள்கையினால் விரிவாக்கம் செய்யப்பட்டவை. நகரை அண்டிய கிராமப்புற ஏழைகள் துறைமுகத்தில் வேலை செய்வோர், பெரும் நிறுவனங்களில் கூலித் தொழில் செய்து பிழைக்க நகருக்குள் திரண்டனர். இவர்கள் மாநகரசபையில் சுகாதார ஊழியர்களாகவும், ரிக்ஷா ஓட்டுனர்களாகவும் உழைத்தனர். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களிலும் பார்க்க வேலையற்றோரின் தொகை இச்சேரியில் உண்மையில் மிகவும் உயர்ந்ததாகும். 1997ல் வெளிவந்த ஓர் ஆய்வின்படி, வனாத்தமுல்லை வாசிகளில் 50 வீதமான தொழிலாளர்கள் வேலையற்றவர்களாக இருப்பதுடன் 90 வீதமானவர்கள் சேவையில் நிரந்தரம் செய்யப்படாதவர்கள்.

கொழும்பு முழுவதிலும் காணப்படும் வீடில்லாப் பிரச்சினையின் கூர்மையான வெளிப்பாடே இச்சேரிகளாகும். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வந்த பல குடும்பங்கள் தமது அற்ப சம்பளத்தில் பெரும் பகுதியை வாடகையாக செலுத்துகின்றார்கள். அரசாங்க ஊழியர் ஒருவர் மாதம் 5000 ரூபாவையும் தொழிலாளி ஒருவர் மாதம் 3000 ரூபாவையும் உழைக்கிறார். ஆனால் இரண்டு அறைகளைக் கொண்ட மின்சார, குழாய்நீர் வசதியுள்ள ஒரு வீட்டின் வாடகை 8000 ரூபாயாகும் (அமெரிக்க டொலர் 102). அநேக தொழிலாளர் நீர், மின்சார வசதிகளற்ற ஒரு வீட்டை அல்லது ஓரளவு இரண்டு அறைகள் மட்டும் உள்ள மாடி அல்லது வீட்டில் வாடகைக்கு இருக்க வேண்டும்.

செல்வந்தர் ஒருவர் மாத்திரமே வீடு ஒன்றை வாங்கக் கூடியவர். மத்தியதர வர்க்க பகுதியினரில் வங்கிக் கடனின் உதவியுடன் வீடு வாங்கியோர் கூட தவணைக் கட்டணத்தையும் வட்டியையும் செலுத்த முடியாமல் தத்தளிக்கின்றனர். கொழும்பு நகருக்குள் ஒரு பேர்ச் நிலம் ரூபா 1 இலட்சம்- 10 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இது ஒரு சில குடும்பங்களால் எட்டியும் பார்க்க முடியாத தொகையாகும். 1997ல் வர்த்தக வங்கிகள் 597 மில்லியன் ரூபாய்களை வீடமைப்பு கடன்களாக- முக்கியமாக 90 வீதம் கொழும்பு மாவட்டத்துக்குள் வாழும் மக்களுக்கு வழங்கியது.

நாட்டின் ஏனையப் பகுதிகளிலும் மக்கள் முண்டியடித்து நெருக்கமான, சுகாதாரமற்ற நிலையில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். 1997 மத்திய வங்கி ஆண்டறிக்கையின் பிரகாரம் 24.6 வீத மக்களின் வீடுகள் மண் சுவர் கொண்டவை. 27 வீதமானவை மண் தரை வீடுகள் கரையோரப் பகுதியில் 11 வீதமான குடியிருப்பாளர்கள் ஓலையால் வேய்ந்த வீடுகளிலும் பலகை வீடுகளிலும் வாழ்கின்றனர்.

மீனவ சமூகத்தில் அனேகமானவர்கள் சுகாதார, குடிநீர் வசதியற்ற வீடுகளில் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் 10:12 அடி கொண்ட' "லயன்" அறைகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றார்கள். 60 சதவீதத்துக்கு மேலான வீடுகள் தகுந்த பாதுகாப்பற்றவை -கட்டி முடிக்கப்படாதவை. நவீன கட்டிடப் பொருட்களற்றவை.

அதே சமயம் நவீன அலுவலகங்கள், கடைத் தொகுதிகள் என்பவற்றுக்கு கொழும்பு நகரில் எந்தப் பஞ்சமும் இல்லை. செல்வந்தர்கள் விசாலமான அறைகள், சிறந்த தோட்டங்கள் கொண்ட, அளவுக்கதிகமான அலங்கார அறைகள் கொண்ட மாளிகைகளில் வாழ்கின்றனர். ஆடம்பர வீடு கொழும்பு நகரில் ரூபா 100 இலட்சத்துக்கு மேல் விற்பனைக்குண்டு. நீச்சல் தடாகம், விளையாட்டுத் திடல், கடைத் தொகுதிகளைக் கொண்ட ஆடம்பர மாடி வீடு, 80,000 ரூபா மாத வாடகைக்கு விடப்படும் என விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இது சாதாரண தொழிலாளியின் 2 வருட சம்பள பணத்துக்கு சமமானது.

சாதாரண உழைப்பாளிக்கு நியாயமான ஒரு குடியிருப்பு வசதிகளை உருவாக்கவும், பாடசாலை, ஆஸ்பத்திரி, கலை கலாச்சார, விளையாட்டு வசதிக்கான கட்டிடங்களை அமைக்கவும் அவசியமான வளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் தற்போதைய சமூக, பொருளாதார கட்டமைப்பின் கீழ் பெரும்பான்மையினரது சமூக தேவையை பூர்த்தி செய்ய அன்றி இலாபமீட்டலை அடிப்படையாகக் கொண்டுள்ள நிலைமை காணப்படுகின்றது. சோசலிச சமத்துவக் கட்சி, தரமான பொதுஜன வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அவசியமான கோடானு கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் எனவும் வீடமைக்க விரும்புவோருக்கு குறைந்த வட்டி கடன்களை வழங்க வேண்டும் எனவும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் சுத்தமான தண்ணீரும் மீன்சாரமும் மற்றும் அடிப்படை வசதிகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் கோருகின்றது. காலியான வீடுகள் அரசினால் சுவீகரிக்கப்பட்டு, வீடற்றவர்களுக்கு நியாயமான வாடகையில் வழங்கப்படவும் வேண்டும்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved