World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Lessons from history: the 2000 elections and the new "irrepressible conflict"

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருக்கடியின் அரசியல் சிறப்பு முக்கியத்துவமும் வரலாற்று தாக்கங்களும்

By David North
11 December 2000

Back to screen version

இந்த விரிவுரை, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த்தினால் டிசம்பர் 3ல் அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்க கூட்டத்தில் நிகழ்த்தப்பட்டதாகும். இந்த விரிவுரை தமிழில் மூன்று பகுதிகளாக பிரசுரிக்கப்படும். முதலாம் பகுதி ஜனவரி 3ல் பிரசுரிக்கப்பட்டது. 2ம் பகுதி ஜனவரி 5ல் பிரசுரிக்கப்பட்டது. இந்த விரிவுரையின் மூன்றாவதும் இறுதிப் பாகத்தையும் கீழே காணலாம்.

பகுதி-3

அமெரிக்காவில் இரு கட்சி முறை

அமெரிக்க அரசியல் வாழ்க்கையில் ஒருவினோதமான பண்பு, ஏறக்குறைய 135 ஆண்டுகளுக்கு நின்றுபிடித்துவிட்ட இருகட்சி அமைப்பு முறையாகும். அமெரிக்கன் தொழிலாளர் இயக்கத்தின் மாபெரும்பலவீனம், வரலாற்று ரீதியில் ஒரு சுயாதீனமான அரசியல் கட்சியை ஸ்தாபிக்க முடியாது போய்விட்டதேயாகும். அரசியல் வாழ்க்கை இவ்விரண்டு முதலாளி வர்க்கக் கட்சிகளதும் மேலாதிக்கத்தின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தது. இதன் மூலம் ஜனநாயகக்கட்சியும் குடியரசுக் கட்சியும் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாக முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் நலன்களை கட்டுப்படுத்தி வந்தன.

இந்த நீண்ட வரலாற்றுக் காலப்பகுதியில் இக்கட்சிகள் கணிசமான அளவு மாற்றம்கண்டுள்ளன என்பது உண்மை. இன்றுள்ள குடியரசுக் கட்சி, 1950பதுகளில் ஐசன்ஹோவர் (Eisenhower) காலத்தில் இருந்த கட்சியில் இருந்து பெரிதும் மாறுபடுகின்றது. அத்தோடு ஆப்பிரகாம் லிங்கனின் காலத்தில் இருந்த கட்சியில் இருந்து இன்னும் வேறுபடுகின்றது. அவ்வாறே ஜனநாயகக் கட்சி பல மாற்றங்களைக் கண்டுள்ளது. சிறப்பாக புதிதாக அமைக்கப்பட்ட கைத்தொழில் அமைப்புக்களின் காங்கிரசுகளின் (Congress of Industrial organizations-CIO) தொழிலாளர் அதிகாரத்துவங்களுடன் பிராங்கிளின் டெலனோ ரூஷ்வெல்ட் (Franklin Delano Roosevelt) காலத்தில் இக்கட்சி பல கூட்டுக்களை ஏற்படுத்தியதோடு குறைந்த பட்சம் வடக்கில் தன்னும் பெருமளவுக்கு சமூக தாராண்மை வாதப் பண்பை கடைப்பிடித்தது.

இவ்விரு கட்சிகளதும் வரலாற்றுப் பரிமாணத்தை ஆய்வு செய்வது இந்த அறிக்கையின் உள்ளடக்கத்துக் அப்பாற்பட்டது. அமெரிக்க அரசியலின் ஈர்ப்பு மையம் பெருமளவுக்கு வலதுபுறமாக இழுபட்டுப் போய்விட்டது எனக் கூறியாகவேண்டும். அமெரிக்க முதலாளி வர்க்க அரசியலில் ஆதிக்கம் கொண்ட போக்காக விளங்கிய சமூக தாராண்மை வாதம் (Social Liberalism) ஒரு அரை நூற்றாண்டுக்கு மேலாக அடியோடு இல்லாமல் போய்விட்டது. இதனை புறநிலை காரணங்களின் அடிப்படையில் நின்று இறுதியாக விளக்கவேண்டும். அமெரிக்க முதலாளித்துவத்தின் பலம் பற்றிய சகல பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் இது தொழிலாளர் வர்க்கத்தின் சமூக சீர்திருத்தங்களை வழங்க நீண்ட காலத்துக்கு முன்னரே இலாயக்கற்றுப் போய்விட்டது. இறுதியான முக்கியமான சமூக சட்டவிதிகள் அமுல் செய்யப்பட்டது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னராகும்.

மேலும் கணிசமான எந்த ஒரு சமூக சீர்திருத்தங்களையும் வழங்காமலே தற்போது ஜனநாயகக் கட்சி அமெரிக்க தொழிலாளர்களின் நலன்களின் காவலனாக தன்னைக் காட்டிக் கொள்கின்றது. மறுபுறத்தில் குடியரசுக் கட்சி முன்னொருபோதும் இல்லாத விதத்தில் தீவிர வலதுசாரிகளின் ஒரு அப்பட்டமான அமைப்பாக வந்துவிட்டது. 1980,1990 களின் சந்தைச் செழிப்பின் விளைவாக ஏற்பட்ட செல்வங்களை பெற்றுக்கொண்ட ஆளும் தட்டினரின் ஈவிரக்கமற்ற பகுதியினரின் ஈடுசெய்ய முடியாத பேராசை குடியரசுக் கட்சியிலேயே நேரடியாகப் பிரதிபலிக்கின்றது.

குடியரசுக் கட்சியின் வேலைத் திட்டத்தை ஒருவர் ஒரு வசனத்தில் தொகுத்துக்கூற முயற்சித்தால் அது பின்வருமாறு அமையும்: குடிரசுக் கட்சிக்காரர்கள் உழைப்புச் சுரண்டல், கம்பனி இலாபங்கள், தனிப்பட்ட செல்வதிரட்சி என்பவற்றின் மீதான சகல பொருளாதார, அரசியல், சமூக கட்டுப்பாடுகளான நீக்க கோருகின்றனர்".

இதுவே அவர்களின் வேலைத்திட்டம். தேர்தல்பிரச்சாரம் பூராவும் இவை அப்பட்டமாக முன்வைக்கப்பட்டன. "இரக்கம் நிறைந்த பழமைவாதத்தை" பல்வேறு வகையிலும் பிரகடனம் செய்வதற்கிடையேயும் புஷ் டெக்சாஸ் மாநிலத்தில் 135 மரண தண்டனைகளை நிறைவேற்ற தலைமை தாங்கியுள்ளார். மரண தண்டனை தொடர்பாக முடிவெடுப்பது தமக்கு சமர்பிக்கப்பட்ட மிகவும் முக்கியமான பிரச்சினை என அவர் ஒரு தடவை கூறினார். இது ஒன்றுக்காக அவர் 15 நிமிடங்களுக்கு மேலாக செலவிடுவது கிடையாது என்பது நிரூபிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் எழுப்பப்பட்ட சகல பிரச்சினைகளதும் அடிப்படைப் பிரச்சினையாக சமூக செல்வத்தின் பங்கீடு விளங்கியது. அமெரிக்காவில் தொழிலாள வர்க்க வெகுஜன கட்சி கிடையாது. சகல அரசியல் விவாதங்களும் இரண்டு முதலாளித்துவ, பிற்போக்கு கட்சிகளதும் புகைபோக்கிகள் ஊடாக வெளியேற்றப்படுகின்றன. இருப்பினும் இந்த அந்தஸ்தை வகிக்கும் இவ்விரண்டு கட்சிகளும் அமெரிக்காவில் உள்ள சகல சமூகப் பிரச்சினைகளும் வெளிப்படுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

சோசலிஸ்டுகள் என்ற முறையில் நாம் எந்த ஒரு முதலாளி வர்க்க கட்சிக்கும் வாக்களிக்கும்படி வக்காலத்து வாங்கவில்லை. நாம் "குறைந்த கெடுதிவாத" அரசியலில் ஈடுபடுவது கிடையாது. அத்தோடு நாம் ஜனநாயகக் கட்சிக்கு எதிரான எமது எதிர்ப்பை இது குடியரசுக் கட்சியின் மீதான எதிர்ப்பின் வெறும் பிரதிவிம்பம் எனக்கூறி நியாயப்படுத்தியது கிடையாது. ஆளும் கும்பல்களுக்கு இடையேயான மூலோபாய, வேலைத்திட்ட மோதுதல் போராட்டங்கள் இக்கட்சிகளின் ஊடாக இடம்பெறுகின்றன.

2000 தேர்தல் பிரச்சாரத்தில் ஜனநாயகக் கட்சி தன்னை ஒரு மக்கள் கட்சியாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றது. "நான் அதிகாரம் படைத்தவர்களுக்காக அல்லாது மக்களுக்காக போராடுகின்றேன்" என கோர் கூறிக் கொள்ளலாம். எவ்வளவுதான் ஈடாட்டம் கண்டவராயும், நேர்மையற்றவராயும் கோர் விளங்கிய போதிலும் அவர் தொழிலாளர்களின் சார்பில் பேசுவதாக கூறிக் கொள்கின்றார். அவர் முன்வைத்த விவகாரங்கள்- வரிகள், சமூகபாதுகாப்பு, வைத்திய உதவி, கல்வி- அவர்களின் நலன்களில் இருந்தே பொறுக்கி எடுக்கப்பட்டன. இந்தப் பிரச்சினைகளில் சமூக செல்வத்தை பங்கீடு செய்து வழங்கும் மைய பிரச்சினைகள் தொக்கி நிற்கின்றன.

புஷ்சின் பிரச்சாரமும் தனிப்பட்ட வருமானவரியைக் குறைத்தல், பரம்பரைச் சொத்துவரியை ஒழித்தலாகிய இரண்டு கோரிக்கைகளை மையமாகக்கொண்டிருந்தன. புஷ் இதையிட்டு மானங்கெட்டவராக விளங்கினார். ஒரு விவாதத்தில் அவர் தனது வரி அமெரிக்க சமுதாயத்தின் ஒரு வீதத்தினரான செல்வந்தர்களுக்கு நன்மை பயக்கும் எனத் திரும்பத்திரும்ப குறிப்பிட்டார். "இது ஏன் அப்படி இருக்கக் கூடாது"? எனவும் அவர் வாதிட்டார். "அவர்கள் வரியில் பெரும் பகுதியை செலுத்துகிறார்கள்" என அவர் கூறிக்கொண்டார். புஷ்சின் கொள்கை, சமுதாயத்தின் செல்வந்தர்களான பகுதியினருக்கு செல்வத்தை பெருமளவில் மாற்ற இன்று இடம்பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்தப்படுவதை மையமாகக்கொண்டுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தின் கணிசமான பகுதியினர் கோரின் வேலைத்திட்டத்தில் சாதகமான எந்த ஒரு அம்சத்தையும் காணவில்லை. ஆனால் அவர்கள் புஷ் தமது சமூக, ஜனநாயக உரிமைகளுக்கு ஒரு மிரட்டலாக விளங்குவதை இனங்கண்டு கொண்டுள்ளனர். புளோரிடாவிலும் கைத்தொழில் மாநிலங்களிலும் கறுப்பின தொழிலாளர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக திரண்டுள்ளனர்.

தேர்தல் வரைபடம் ஐக்கிய அமெரிக்காவின் சமூகப் பிளவுகளை தெளிவாகக் காட்டிக் கொண்டுள்ளது. ஜனநாயகக் கட்சிக்கான வாக்குகள் பெரும் கைத்தொழில் நகரங்களிலும், பெரும் நகரங்களிலும் கிட்டின. அமெரிக்க பொருளாதார வாழ்வில் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கும் சகல மாநிலங்களும் -கலிபோர்ணியா, நியூயோர்க், பென்சில்வேனியா, மிச்சிக்கன்- ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்தன. குடியரசுக் கட்சிக்கான வாக்குகள் பெருமளவில் தென் மாநிலங்களிலேயே கிட்டியது. இவை அடிமை முறையியினதும் உயர் மிட்வெஸ்டினதும் (Midwest) முன்னைய கோட்டைகளாக விளங்கியவை. பொதுவாகச் சொன்னால் இவை அமெரிக்காவின் பெரிதும் பின்தங்கிய பகுதிகளாகும்.

தேர்தலுக்கும் அதைத் தொடர்ந்து வந்த மோசடிகளுக்கும் குடியரசுக்கட்சி காட்டிக் கொண்ட அக்கறை பலவிமர்சகர்களால் விளக்கமுடியாது போன அசாதாரணமான முரட்டுத் தன்மையையும் காட்டுமிராண்டித் தனத்தையும் எடுத்துக் காட்டியுள்ளது. இந்த முதலாளி வர்க்கப் பகுதியினரின் நோக்கையிட்டு இங்கு மீண்டும் கவனம் செலுத்துவது பெறுமதி வாய்ந்தது.

1980ல் றீகன் நிர்வாகத்தில் பதவி வகித்த போல் கிறேக் றொபேட்ஸ் (Paul Craig Roberts) என்ற ஒரு வலதுசாரி விமர்சகர் எழுதிய கட்டுரையை பற்றி கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன். இந்த தேர்தல் தொட்ர்பாக இடம்பெற்று வரும் தகராறையிட்டு அவர் மனமுடைந்து போயுள்ளார்.

அவர் கூறுவது இதுதான்: "எமது நாடு கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. புவியியல் ரீதியில் பேசும் போது கோர் நாட்டின் ஆறில் ஒரு பங்கை பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஆறில் ஐந்து பகுதி அவரையும் அவரது ஊழல் நிறைந்த கட்சியையும் நிராகரித்து விட்டது. நகர்ப்புற பகுதியின் சனத்தொகை நெரிசல் காரணமாக மாநில ரீதியில் தேர்தல் பெறுபேறுகளை காட்டும் வரைபடம் கோரின் புவியியல் ரீதியான ஆதரவை பெரிது படுத்திக் காட்டுகின்றது.

"மாகாண ரீதியான வாக்களிப்பு வரைபடம் கோருக்கு சிறிய அளவிலேயே ஆதரவைக் காட்டுகின்றது. கோரின் வாக்குகள் ஹஸ்பானிக் மாகாணம், கலிபோர்ணியாவின் கரையோர மாகாணம், வாஷிங்டனின் கரையோர (Puget Sound) மாகாணம், மினெஸ்டா கிறேட்லேக்ஸ் மாநிலங்களின் நகர்ப்புற பகுதிகள், புளோரிடாவின் யூதர் மாகாணங்கள், தென்கிழக்கின் கறுப்பு இன மக்கள் நெருக்கமாக வாழும் மாகாணங்கள், வடகிழக்கின் பெரிதும் நகரமயமான மாகாணங்கள் (பிலடெல்பியா, நியூயோர்க் நகரம், கொனெக்டிகட், மசாசூசெட்ஸ், றேட் தீவு) வேர்மண்ட், மெயினியின் பகுதிகளில் உறுதிப்படுத்தப்பட்டது.

"பூகோள ரீதியில் இந்த வரைபடம் புதிதாகப் புலம்பெயர்ந்தது வந்தவர்கள், வேறுஇனச் சிறுபான்மையினரை சனத்தொகையில் பெருமளவில் கொண்ட ஒரு சில சனநெருக்கடி மிக்க நகர்ப்புற மாகாணங்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு நாட்டைக் காட்டுகின்றது... ஜனநாயக் கட்சி செல்வாக்கு மிக்க வெள்ளை இன லிபரல்கள், பல்கலைக் கழக துறைகள், வெகுஜனத் தொடர்பு சாதனங்கள், இனவாரி சிறுபான்மையினரைக் கொண்ட ஒரு காட்சியாகும். இது பாரம்பரியமான அமெரிக்க அறநெறி, அடிப்படைக் கொள்கைகள், அமைப்புக்கள், மக்களின் "மேலாதிக்கசக்தியை" தூக்கி வீசுவதற்குதன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒரு புரட்சிக் கட்சியாகும்".

அவர் தொடர்ந்து கூறுவதாவது: "குடிரசுக் கட்சிக்காரர்கள் இந்த கடும்போக்கான ஆதரவு வாக்குகளை ஒருபோதும் பெறமாட்டார்கள். கறுப்பு இனத்தவர்கள் 90-93 சதவீதம் கோருக்கு வாக்களித்தனர். ஹிஸ்பானிக்குகள் தமது வாக்குகளில் 2/3-3/4 க்கும் இடைப்பட்டதை கோருக்கு வழங்கினர். எவ்வளவுக்கு எல்லைகள் தொடர்ந்து திறந்து இருக்குமோ அவ்வளவுக்கு நாடு இழக்கப்பட்டுவிடும்."

குடியரசுக் கட்சிக்காரர்கள் குடிசன ரீதியிலும் சமூக ரீதியிலும் புறநிலை ரீதியில் தமக்கும் எதிராகச் சென்று கொண்டுள்ள ஒரு நாட்டை காண்கிறார்கள். இந்தச் சக்திகள் அதிகரித்த அளவில் அவஸ்தை நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகையை தமது கைக்குள் போட்டுக்கொள்ள எந்த வழியையும் கையாள திடசங்கற்பம் பூண்டுள்ளனர். வெகுஜனங்களுக்கு அச்சுறுத்தலாக வளர்ச்சி பெறும் நீதித்துறையையும் காங்கிரசையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர இவர்கள் முயற்சிக்கின்றனர்.

உலக அபிவிருத்திகளும் அமெரிக்க நெருக்கடியும்

இந்நிலைமையின் சிறப்பு முக்கியத்துவத்தை கணக்கில்கொள்ளும் போதும், ஒரு பெரும் அரசியலமைப்பு நெருக்கடிக்கான சமூக அல்லது பொருளாதார அடிப்படையே கிடையாது எனக் கூறிக் கொள்பவர்களுக்கு பதிலாகவும் உள்நாட்டுப் போருக்கு (Civil War) முன்னைய தசாப்தத்துக்கும் இன்றைய நிலைமைக்கும் இடையேயான மற்றொரு ஒற்றுமையை இங்கே குறிப்பிட என்னை அனுமதியுங்கள்.

அந்த சகாப்தத்ததின் அரசியல் முரண்பாடுகளின் பின்னால், மிகப் பிரமாண்டமான தன்மையிலான பொருளாதார மாற்றங்கள் விளங்கின. இது அமெரிக்காவில் அசாதாரணமான பொருளாதார மாற்றங்கள் இடம்பெற்ற ஒரு காலப்பகுதியாகும். கைத்தொழில்கள், புகையிரத பாதைகள், தொலைத் தொடர்புகள் உருவாகின. இவை ஒரு நவீன கைத்தொழில் மயமான அமெரிக்காவின் முதல் அடையாளங்களாக விளங்கின.

ஒரு புகழ் பெற்ற வரலாற்றாசிரியரான புரூஷ் கட்டனில் (Bruce Catton) இருந்து இங்கு மேற்கோள்காட்ட எனக்கு இடமளியுங்கள்: "பொருளாதாரப் போக்கு தவறற்றதாக விளங்கியது:

அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்களும் புகையிரத பாதைகளும் நீராவிக் கப்பல்களும், தொலைபேசியும், பண்ணை, பக்டரிகளுக்கான புதிய இயந்திரங்களும் ஒரேயொரு பாதையைக்காட்டி நின்றன. அதாவது தேசிய ஐக்கியத்தையும் சிக்கலான கைத்தொழில் சமுதாயத்தையும் உலகப் பொருளாதாரத்துடனான நெருக்கமான இணைப்பையும் காட்டியது துண்டிக்கப்பட்ட சிறுதுண்ட கிராமப்புற சுயபூர்த்தி, தனிமைப்பட்டவையும் சில சந்தர்ப்பங்களை தவிர தேசிய அனைத்துலக சந்தைகளுக்கான வாணிப ரீதியிலான உற்பத்திகளுக்கு வழிவிட்டுக்கொடுத்தன. கிறிமியாவில் (Crimea) ஒரு யுத்தம் அல்லது பாரிஸ் பங்குசந்தையில் ஒரு பதட்டம் அல்லது பாங்க் ஒப் இங்கிலாந்தின் வட்டி வீதத்தின் வீழ்ச்சி மொனங்காகலை (Monongahela) ஆடைத் தொழிற்சாலைகளையும் பிற்ஸ்பேர்க் (Pittsburgh) இரும்பு ஆலையினையும் அதிரவைக்கும் பூகம்பமாக வெடித்துள்ளது".

1850, 1980, 1990 களும் அமெரிக்காவின் அசாதாரணமான மாற்றங்களை கண்டுள்ளது போல் புதிய தொழில்நுட்பங்களின் புரட்சிகரத் தாக்கங்கள் பூகோளமயமாக்கத்தின் போக்கினை விரைவுபடுத்தியுள்ளது. சமூககட்டமைப்பில் மாற்றங்களும், பாரம்பரியமான மத்தியதர வர்க்கத்தின் அந்தஸ்தின் வீழ்ச்சியும், அமெரிக்க சமுதாயத்தின் பரந்த அளவிலான பாட்டாளி மயமாக்கமும் சமுதாயத்தின் பொருளாதார அடித்தளத்திலான அடிப்படை மாற்றங்களுடன் இணைந்து கொண்டுள்ளன. இந்தப் போக்குகளே அமெரிக்காவில் இன்று வளர்ச்சி கண்டு வரும் நெருக்கடிக்கு மிகவும் சக்திவாய்ந்த ஊக்கத்தை வழங்குகின்றது.

1990களின் ஆரம்ப காலத்தில் சோவியத் யூனியனில் நெருக்கடி விரிசல் கண்ட சமயத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினிச ஆட்சியாளர்களின் வீழ்ச்சி அது சோசலிசத்தின் வீழ்ச்சியும் அல்ல, அந்நாடுகளில் சோசலிசம் என்றுமே இருக்கவில்லை எனக் கூறியது. இந்த தேசியப் பொருளாதாரங்கள் உலகிலேயே பலவீனமான தேசிய பொருளாதாரங்களாக விளங்கின. இவை பூகோளரீதியான பொருளாதார சக்திகளின் நெருக்குவாரங்களின் கீழ் வீழ்ச்சி கண்டன. உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் புதியதொரு கட்டத்தை பிரதிநிதித்துவம் செய்ததை விட சோவியத் யூனியனினதும் கிழக்கு ஐரோப்பாவின் ஏனைய ஸ்ராலினிச ஆட்சிகளதும் வீழ்ச்சி பொருளாதார அபிவிருத்தியின் பூகோளரீதியான போக்குக்களின் பெறுபேறாக விளங்கியது. அத்தோடு அந்நெருக்கடி இறுதியாக உலக ஏகாதிபத்தியத்தின் முன்னேறிய மையங்களின் அத்திவாரங்களையும் ஆட்டிப்படைக்கும்.

இது சிலகாலம் எடுத்தது. உலக முதலாளித்துவத்தின் வெற்றியை பிரகடனம் செய்யும் ஒரு தவிர்க்க முடியாத வெற்றிகரமான காலப்பகுதி இருந்தது. அத்தோடு அந்த வார்த்தைக்கு இணங்க வரலாற்றின் சக்கரங்கள் மெதுவாக அரைக்கின்றன. ஆனால் அவை பெரிதும் நன்றாக அரைகின்றன. பூகோளமய மாக்கத்தின் பொருளாதார போக்கானது சோவியத் யூனியனூடாக சென்றதோடு மாற்றியமைக்க முடியாததாக தெரிந்த ஸ்ராலினிச ஆட்சியின் அமைப்புக்களை ஒரேநாளில் தவிடு பொடியாக்கியது. இன்று அதன் பிரசன்னம் உலக முதலாளித்துவத்தின் முன்னேறிய பகுதியான அமெரிக்காவிலும் கூட உணரச்செய்கின்றது.

எனவேதான் இறுதி ஆய்வுகளில் அமெரிக்க நெருக்கடி ஒரு உலக நெருக்கடியாகும். அமெரிக்க முதலாளித்துவத்தின் அரசியல் ஸ்திரப்பாடின்மை கூடவே தீவிரமான பொருளாதார குழப்ப நிலையையும் சேர்த்துக் கொண்டுள்ளது. அரசியல் சம்பவங்கள் ஒரு பாரதூரமான பொருளாதார வீழ்ச்சி போக்கையும் உக்கிரம் அடையச் செய்துள்ளன. இந்தச் சம்பவங்கள் அனைத்துலக அடிப்படையில் எதிரொலிக்காது என்பதை எவர்தான் சந்தேகிக்கமுடியும்?

நான் எனதுபேச்சின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டியஒரு அம்சத்தை மீளவும் குறிப்பிட எனக்கு அனுமதிவேண்டும். மார்க்சிசத்தை சந்தேகித்தவர்கள் அல்லது மார்க்சிசத்தின் உறுதியான தன்மையை மறுத்தவர்களும், சோசலிசப் புரட்சிக்கான சகல நம்பிக்கைகளும் இல்லாது போய்விட்டது என பாரிய மக்களுக்கு கூறப்பட்டதும் அமெரிக்காவில் தான்.

இறுதியில் முதலாளித்துவம் உலகில் எங்குதான் பிரச்சினைக்குள் மாட்டிக் கொண்டாலும் அதனை பிணை எடுப்பதற்கு எப்போதும் Uncle Sam (அமெரிக்காவிற்கான இடுகுறிப் பெயர்) இருந்து வந்தார். பெடரல்றிசேவ் வங்கி ஆப்பை இழுத்ததுதான் தாமதம் நிதிஅலை புரண்டு பாயும். மெக்சிக்கோ வங்குரோத்து கண்டதும் நிதி அங்கு அனுப்பிவைக்கப்படும். ஆசியா தலைமூழ்கிப் போனால் அதை ஈடுசெய்ய ஏதோ ஒன்று செய்யப்படும்.

ஆனால் Uncle Sam வலி வந்தால் என்ன நடக்கும்? அவரை பிணை எடுப்பது யார்? அவரைக் காப்பது யார்? இந்த இருபதாம் நூற்றாண்டினுள் இக் கேள்விகளுக்கு பதிலளிக்க எவரும் அக்கறை காட்டியது கிடையாது. இப்போது நாம் 21ம் நூற்றாண்டினுள் காலடி வைக்கும்போது இது ஒரு பாரதூரமான பிரச்சினையாகும்.

இது அவுஸ்திரேலியாவின் ஹொவாட் ஆக இருக்கலாம் அல்லது இங்கிலாந்தின் பிளேயர் ஆக இருக்கலாம் இது உலக முதலாளித்துவத்திற்கு இது நல்லது அல்ல என்பதை இவர்கள் சகலரும் அறிவர். Uncle Sam இடம் பணம் கேட்பதற்கு இது நல்ல நேரமல்ல. அரசியல் அறிவுரைகளை கூட கேட்கமுடியாது. புளோரிடா இழுபறிகளின் பின்னர் ஜிம்மி கார்ட்டரிடம் எவர்தான் ஒரு ஜனநாயக தேர்தலை எப்படி நடாத்துவது எனக் கேட்பர்?

இந்த சம்பவங்கள் பரந்த அளவிலான பொருளாதார விளைவுகளை மட்டும்கொண்டிருக்கவில்லை. ஒரு புரட்சிகர நிலைமையின் அபிவிருத்திக்கான சமூக உளவியலை மாற்றுவதில் ஒரு முக்கியமான பாத்திரம் வகிக்கும். இறுதியில் ஒரு புரட்சியின் அபிவிருத்தியில் ஒரு பிரமாண்டமான பாத்திரம் வகிக்கும் நனவான காரணி முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

ட்ரொட்ஸ்கி இதனை சிறப்பாக விளக்கியுள்ளார். ஒரு புரட்சிகர நெருக்கடியில் ஒரு புறநிலை சேர்க்கை இருக்கின்றது. இன்றுள்ள சமூக உறவுகளுடன் உற்பத்தி வடிவங்கள் மோதிக்கொள்ளும் போது ஒரு புரட்சிகர சகாப்தம் தோன்றுகின்றது. ஆனால் இந்த புறநிலை முரண்பாடுகள் வெகுஜனங்களின் நனவில் தமக்கான பாதையை கண்டுகொள்ள வேண்டும். மக்கள் புரட்சியைப் பற்றிச் சிந்திக்க தொடங்கவேண்டும். அவர்கள் ஒரு புரட்சியை தேடிநிற்க வேண்டும். புரட்சி நின்று பிடிக்கக் கூடிய பதிலீடு என அவர்கள் நம்ப வேண்டும். அவர்கள் இதன் தேவையை மட்டும் நம்பாது அடிப்படையான சமூக மாற்றங்களின் சாத்தியத்திலும் நம்பிக்கைவைக்க வேண்டும். இறுதி ஆய்வுகளில் முதலாளித்துவ அரசின் சக்தி மட்டும் புரட்சியை தடுப்பது அல்ல. பெரிதும் ஆழமானதும் வரலாற்று ரீதியில் அத்தியாவசியமான மட்டத்துக்கும் பரந்த மக்களிடையே அரசியல் நம்பிக்கையும் உணர்வும் இல்லாததுடன் தாம் தலையீடு செய்யாது சமுதாயத்தில் அடி முதல் தலைவரை அதை மீளமைக்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லாதிருப்பதுமாகும். இன்றைய நெருக்கடி சமுதாய நனவில் கணிசமானதும் முன்னேற்றமானதுமான மாற்றங்களுக்கான ஊக்கிகளை வழங்கும்.

இன்று அமெரிக்காவில் இடம்பெறும் சம்பவங்கள் உலக முதலாளித்துவத்தின் விவகாரங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் நின்று கொண்டிருந்த ஒரு நீண்ட காலப்பகுதியின் முடிவைக் குறிக்கிறது. அமெரிக்கா தொடர்ந்தும் அந்தப் பாத்திரத்தை வகிக்க முடியாது. அமெரிக்க நெருக்கடி முதலாளித்துவ அமைப்பின் உறுதிப்பாட்டுத் தன்மையை கேள்விக்கிடமாக்கியுள்ளது. இது தொழிலாளர் வர்க்கம் ஒரு தீர்க்கமான வரலாற்று சக்தியாக தலையீடு செய்வதற்கான வாய்ப்பை உண்மையில் திறந்து வைக்கிறது. அடுத்துவருவது இதுவே. இது இன்னமும் அந்தப் புள்ளிக்கு வெளிப்படையாக அபிவிருத்தியடையவில்லை. ஆனால் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம்தனது இருப்பை உணர்ந்து கொள்ளும். இப்போது மக்கள் இந்தப் பிரச்சினை எப்படித் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஏதேனும் கூறவிரும்புகிறார்கள். அடுத்த வாரம் இல்லாதுபோனாலும் அடுத்தமாதம் அல்லது ஆறு மாதங்களின் பின்னர் அல்லது ஒரு வருடத்தின்ங பின்னர் காலம் பெரிதும் நீண்டு சென்றுவிடாது. நாம் அந்த பிரமாண்டமான சமூக சக்தியான அமெரிக்கப் பாட்டாளி வர்க்கத்தின் இயக்கத்தை காணத் தொடங்குவோம்.

நாம் இதன் மூலம் உணர்வது என்ன? நாம் உலகசோசலிச வலைத் தளத்தின் (WSWS) வாசகர் எண்ணிக்கையை விஸ்தரிக்க வேண்டும். நாம் அதிகரித்த அளவில் பெருகி வரும் விசாரணைகளுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். எமது ஆய்வுகளின் பேரில் அக்கறை காட்டுவோரை ஒன்றிணைக்கும் சாதனங்களை அபிவிருத்திசெய்ய வேண்டும். புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் ஒரு பரந்ததும் சக்தி வாய்ந்ததுமான அனைத்துலக இயக்கத்தை கட்டி எழுப்ப அக்கறைகாட்ட வேண்டும். இந்த வளர்ச்சிகண்டுவரும் இயக்கத்தின் மூலம் நாம் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியை (Socialist Equality Party) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாகக் கட்டியெழுப்ப வேண்டும். இதுதான் எமது முன்நோக்கு. நாம் அனைத்துலக மார்க்சிச சக்திகளில் பிரமாண்டமான அபிவிருத்தியாக வரையறுக்கப்படும் ஒரு புதிய வரலாற்றுக் காலப் பகுதியினுள் நுழைந்து கொண்டுள்ளோம்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved