World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா:இந்தியா

Pressure for Indian government intervention against Left Front in West Bengal

மேற்கு வங்காளத்தில் இடது முன்னணிக்கு எதிராக தலையிட இந்திய அரசாங்கத்துக்கு அழுத்தம்

By Nanda Wickremasinghe
22 February 2001

Back to screen version

மே மாதம் மாநிலத் தேர்தல் வர இருக்கிற நிலையில், கடந்த 24 வருடங்களாக ஆட்சியில் இருந்து வரும் சிபிஐ (எம்) தலைமையிலான இடது முன்னனி மாநில அரசாங்கத்திற்கு எதிராக நேரடியாகத் தலையிடுமாறு, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஜனவரி நடுப்பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தலைவர் மம்தா பானர்ஜி பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயை புதுதில்லியில் சந்தித்து அரசியல் சட்டம் 356வது பிரிவின் கீழ் மேற்கு வங்க மாநில அரசாங்கத்தை நீக்குமாறு வலியுறுத்தினார். அப்பிரிவு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வரும். திரிணாமுல் அல்லது "அடிமூல" காங்கிரஸ் கட்சியானது 1997ல் காங்கிரஸ்(இ) கட்சியிலிருந்து பிராந்திய ரீதியில் உடைந்து உருவானதாகும். பானர்ஜி, வாஜ்பாயியின் பாரதீய ஜனதீக் கட்சியினால் தலைமை தாங்கப்படும் இந்தியாவின் வலதுசாரிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் இரயில்வே அமைச்சராக உள்ளார்.

அச் சந்திப்பின்போது, பானர்ஜி ஜனவரி 4ல் டஜன் கணக்கான டி எம் சி (TMC) ஆதரவாளர்களைக் கொன்றதற்கு சிபிஐ (எம்) குண்டர்களே காரணம் என்பதை நிரூபிக்கும் "ஆதாரத்தை"--- கல்கத்தாவிலிருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள மிட்னாப்பூர் மாவட்டப் பகுதியிலிருந்து கிடைத்த தடய பொருட்களை காட்டினார். அந்தப் பகுதியில் பானர்ஜி தலைமையில் சுமார் 80,000 பேர் பங்கேற்ற கட்சி ஊர்வலத்தினை அடுத்து நடந்த மோதலில் இச்சாவுகள் இடம் பெற்றன. அதன் பின்னரிலிருந்து திரிணாமூல் காங்கிரஸ், வாஜ்பாய் அரசாங்கம் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்தக் கோரி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தங்கள் பலவற்றை நடத்தியது.

இடது முன்னனி அரசாங்கம் முதலில் எந்தச் சாவுகளும் இடம் பெறவில்லை என மறுத்தது ஆனால் பின்னர் சோட்டாங்கார பகுதியில் நடந்த மோதலில் சிலர் இறந்திருக்கலாம் என ஒப்புக்கொண்டு போலீஸ் புலன்விசாரணைக்கு ஏற்பாடு செய்தது. டி.எம்.சி யும் பி.ஜே.பி யும் புலனாய்வு விசாரணையானது மத்திய புலனாய்வுக் கழகத்தால் (CBI) மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தினர். அது மாநில அரசாங்கத்தைவிட தேசிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றது. என்.டி.ஏ வின் மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்ட குழு மோதல் நடந்த உடனே பகுதிக்கு சென்று அப்பகுதியைப் பார்வையிட்டது.

சி பி ஐ (எம்) குண்டரிசம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் புதியன அல்ல. கடந்த செப்டம்பரில், மிட்னாப்பூர் மாவட்டத்தில் சி பி ஐ (எம்) மற்றும் டி எம் சி ஆதரவாளர்கள் சம்பந்தப்படுள்ள தொடர்ச்சியான வன்முறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பானர்ஜியின் வற்புறுத்தலின் பேரில் வாஜ்பாயி அரசாங்கம் மேற்கு வங்காளத்தில் தலையிடப் போவதாய் அச்சுறுத்தியது. மேற்கு வங்காளத்தில் ஜனநாயக அமைப்புக்களின் அழிவைத்தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் தேவையானது எனக் கருதுகிறதோ அதனை எடுக்குமாறு "இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியும் மேற்கு வங்க அரசாங்கத்தைக் கண்டித்தும் என்டிஏ தீர்மானத்தை நிறைவேற்றியது. அது சிபிஐ (எம்) உறுப்பினர்களை பிஜேபி மற்றும் டி எம் சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்புக்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது.

தனது ஆதரவை நேராக டி எம் சி யிடம் இழந்து வரும் சிபிஐ (எம்), காடைத்தனத்தைக் கட்டவிழ்த்து விடுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை ஆனால் வன்முறையானது நிச்சயமாய் ஒருபக்க சார்புடையது அல்ல. மேற்குவங்க அரசாங்கம் இந்திய உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், ஜனவரி 6ம் தேதி மிட்னாப்பூர் மாவட்டத்தில் சிபிஐ(எம்) ஆதரவாளர்களின் 20 வீடுகளை பானர்ஜியின் ஆதரவாளர்கள் தீவைத்துக் கொளுத்தியதாகக் குற்றம் சாட்டியது. ஜனவரி 6ம் தேதி கல்கத்தா அருகிலுள்ள டயமண்ட் ஹார்பர் பகுதியின் சிபிஐ (எம்) கிராமக் கமிட்டி உறுப்பினரை அடையாளம் தெரியாத மூவர் சுட்டுக் கொன்றனர்.

மேற்கு வங்க அரசை பதவியில் இருந்து அகற்றுவதற்கான முயற்சியில் வாஜ்பாய் இதுவரை தயக்கம் காட்டி வருகிறார். என் டி ஏ பெரும்பான்மையைக் கொண்டிராத இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையில், காங்கிரஸ் (இ) எதிர்க்கட்சியின் ஆதரவு இல்லாமல் 356வது சட்டப்பிரிவைக் கொண்டு வரும் எந்த முயற்சியும் தோல்வியை அடையும் என்று அவர் சுட்டிக் காட்டினார். 1999 பிப்ரவரியில் பிகாரில் உள்ள மாநில அரசாங்கத்தை அகற்றும் முயற்சி காங்கிரஸ் (இ) -ன் ஆதரவு இல்லாததால் தோல்வி அடைந்தது தெரிந்ததே.

ஆனால் வாஜ்பாயிக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. தங்களது சொந்த மாநில அரசாங்கங்களுக்கு எதிராக எதிர் காலத்தில் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு முன்னோடியாக அமையும் 356 சட்டப்பிரிவினை, மேற்கு வங்க மாநிலத்திற்கு எதிராகப் பயன்படுத்த NDA ன் ஏனைய பிராந்தியக் கூட்டாளிகள் ஆதரவு தருவார்களா என்பதில் அவருக்கு உறுதி இல்லை.மேலும் டி எம்சி-ன் கரத்தைப் பலப்படுத்த வாஜ்பாய் விரும்பவில்லை.அது அவரது மிக நம்பகமில்லாத கூட்டாளிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது மற்றும் அது பிஜேபியின் செலவில் மேற்கு வங்கத்தில் தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது.பானர்ஜி பிஜேபியிடமிருந்து முறித்துக் கொண்டால் மட்டும் காங்கிரஸ் (இ) பானர்ஜியிடம் கூட்டணியில் நுழைவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்திருப்பதை அவர் நன்கு அறிவார்.

தேசிய மட்டத்தில் உள்ள காங்கிரஸ் (இ) தலைவர்கள், மேற்குவங்காளத்தில் தங்களது கட்சியில் இருந்துவிலகி கீழ்மட்ட அணியினர் டி எம் சிக்கு மேலும் செல்வதை நிறுத்துதற்கு அத்தகைய கூட்டை அமைக்கும்படியான அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் பானர்ஜி இடது எதிர்ப்பு மகாகூட்டணி அல்லது "மகாஜோத்" க்கு அழைப்பு விடுத்துள்ளார். அது இந்து பேரினவாத பிஜேபியையும் உள்ளடக்கும். காங்கிரஸ் (இ) பிஜேபி யுடனும் டி எம் சி யுடனும் கைகோர்த்துக்கொண்டால், அது முஸ்லிம் வாக்காளர்களைத் தனிமைப்படுத்தும். அவர்கள் மேற்கு வங்காளத்தில் 27 சதவீதமும் தேசிய அளவில் 12 சதவீதமும் இருக்கின்றனர். மேலும் காங்கிரஸ்(இ) கட்சியானது, சி பி ஐ (எம்) ,சி பி ஐ யுடன் சேர்ந்து எதிர்காலத்தில் தேசிய ஆரசாங்கம் அமைப்பதற்கான சாத்தியத்தை தற்போது சீர்குலைக்கவும் விரும்பவில்லை.

வாஜ்பாயி அரசாங்கம் மேற்கு வங்காளத்தில் இடதுமுன்னணி அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து நீக்காதிருக்கும் அதேவேளையில், எவ்வாறாயினும் வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் டி எம் சி மற்றும் பி ஜே பி யினது கையைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. நீண்ட சட்ட வாதாட்டங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் தேர்தலில் பக்கசார்பு எடுத்ததாகக் குற்றம் சாட்டப்படும் ஆரசாங்க ஊழியரை பணி இடம் மாற்ற, தற்காலிகமாக நீக்க அல்லது பணிநீக்கம் செய்வதற்கான அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. கள்ளவாக்கு மோசடியில் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் சி பி ஐ (எம்) -ன் வங்க அதிகாரிகளுக்கு எதிராக தடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஜனவரியில் என் டி ஏ குழு தலைமைத் தேர்தல் ஆணையர் எம.எஸ். கில்-ஐச் சந்தித்தது.

சி பி ஐ (எம்) மும் இடது முன்னணியும்

இடது முன்னணி தலைவர்கள், தங்களது அரசாங்கத்தை நீக்கக் கோரும் நகர்வினை பிஜேபி மற்றும் ஏகாதிபத்திய சக்திகள்- குறிப்பாக அமெரிக்கா சம்பந்தப்பட்ட சதி என்று வாயடித்து வருகின்றனர். உண்மையில் அமெரிக்கா அல்லது வேறு எந்த பெரிய அரசுகளுக்கும் மேற்கு வங்க அரசாங்கத்தை ஒழிக்க மிகச்சிறு காரணமே இருக்கும். "சோசலிஸ்ட்" அல்லது "கம்யூனிஸ்ட்" ஆக இருப்பதற்கு அப்பால், அது வட்டார ரீதியாகவும் சர்வதேசிய ரீதியாகவும் கடந்த 24 ஆண்டுகளாக முதலாளித்துவத்தின் கோரிக்கைகளை விசுவாசத்துடன் நிறைவேற்றி வருகிறது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் அண்மையில், பிராந்திய ஸ்திரத்தன்மையின் நலன்களின் பேரில் மேற்கு வங்காளத்தில் சி பி ஐ (எம்) மின் எதிராளிகளால் நடத்தப்படும் எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றை நிறுத்த வாஷிங்டன் விரும்புகிறது என்று சுட்டிக் காட்டினார்.

சி பி ஐ (எம்) பங்காளராக இருந்த மாநில அரசாங்கத்தை நீக்க 1960 களில் தலையீடு செய்த காங்கிரஸ் (இ) அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அலையில், 1978ல் சி பி ஐ( எம்) மும் அதன் இடது கூட்டாளிகளும் ஆட்சிக்கு வந்தனர். இடது முன்னனி அரசாங்கம், இந்திய அல்லது சர்வதேச பெரும் வர்த்தக பங்காளர்களுடன் கூட்டு முதலீட்டுக்காக 1984- ல் அரசின் தேசியமயமாக்கப்பட்ட கழகங்களை திறந்து வைத்தது.

1990 களின் தொடக்கத்தில் தேசிய அரசாங்கம் இந்தியப் பொருளாதாரத்தைத் தளர்த்தத் தொடங்கிய மற்றும் ஊக்குவித்த அதேவேளை, இடது முன்னனி அரசாங்கம் ஏனைய மாநில அரசாங்கங்களுடன் போட்டியிட ஆரம்பித்தது. சர்தேச முதலீட்டிற்கான பகுதியாக மேற்குவங்கம் இருப்பதாக புகழ்பாடுவதற்கு முதலமைச்சர் ஜோதிபாசு ஐரோப்பவிற்கு சென்றார். 1991லிருந்து 1999 வரையிலான காலகட்டத்தில் 60 பில்லியன் ரூபாய் மதிப்பு மிக்க (1300மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அந்நிய நிதியூட்டப்பட்ட தொழில் துறைத் திட்டங்கள் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டன. மற்றொரு 100 பில்லியன் ரூபாய்கள் (2,200 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்புள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டங்கள் இறுதி முடிவுக்காக காத்திருந்தன.

விளைவு தொழிலாளர்களுக்கு அழிவுகரமாக இருந்து வருகிறது. மாநிலம் முழுதும் உள்ள அதிகாரப்பூர்வமான வேலையின்மை இப்பொழுது 50 லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கிறது. பாரம்பரிய தொழில்துறைகளான சணல், தேயிலை, சர்க்கரை, துணி மற்றும் பொறியியல்துறை ஆகியன -பல ஆலைகள் மூடப்படும் நிலையில் ஆழமான நெருக்கடியில் இருக்கின்றன. சணல் தொழில் துறையில் மட்டும் 59 தொழிற்சாலைகளில் 28 திவால் என அறிவிக்கப்பட்டது 2,50,000 தொழிலாளர்களின் வேலைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது, மேற்குவங்கம் தலைவீத மொத்த உற்பத்தியில் (GDP) 1960ல் 2வது இடத்திலிருந்து 2000ல் 5வது ஆக சரிந்துள்ளது.

கடனில் 2வது இடத்தையும் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட தற்கொலை சாவுகளில் நாட்டிலேயே முதலாவதாகவும் இருக்கிறது. 1999ல் மாநிலத்தின் மக்கள் தொகையில் 48சதவீதம் அதிகாரப்பூர்வ வறுமைக்கோட்டிற்குக் கீழே இருந்தனர்.

கிராமப்புறங்களில் சிபிஐ(எம்) ஏழை விவசாயிகளின் ஆதரவில் தங்கி இருந்தது. அதன் நிலச் சீர்திருத்தக் கொள்கைகள் அதற்கு ஆதரவு பெருக உதவியாக இருந்தது. 1962க்கும் 1982க்கும் இடையில் ஒரு ஏக்கருக்கும் குறைவாக வைத்திருந்தவர்கள் எண்ணிக்கை 4.1 லிருந்து 10.9 சதவீதம் ஆக அதிகரித்தது. அதேவேளை ஐந்து ஏக்கர்களுக்கும் அதிகமாக வைத்திருப்போர் எண்ணிக்கை 56.5லிருந்து 39சதவீதமாக குறைந்தது. ஆனால் அதிகரித்து வரும் விவசாய செலவீனங்களைத் தாங்கமுடியாத பல சிறிய நில உடைமையாளர்கள் கடனில் மூழ்கி நிலத்தை விட்டு அகலும்படி நிர்ப்பந்நத்திற்கு ஆளாயினர். விளைவு நிலமற்ற விவசாயிகள் உயிர் வாழவே கடினமான நிலையில் இடது முன்னனிக்கு கிராமப்புறங்கள் அந்நியப்படும் நிலை வளர்ந்து வருகின்றது.

சி பி ஐ(எம்) மிற்கு எதிர்ப்பு அரசு அதிகாரத்தை அதன் சொந்த உறுப்பினர்களின் மற்றும் பல்வேறு முன்னனி அமைப்புக்களின் உறுப்பினர்களின் நலன்களுக்கும் பயன்படுத்துதலால் குவிந்ததாகும். எடுத்துக்காட்டாக நிலம் பெறுவதற்கு கட்சி விசுவாசத்தை ஒரு தகுதியாக சிபிஐ(எம்) வைத்தது. அதேவேளை, இடது முன்னனி அரசாங்கம் தொழில் அதிபர்களின் கோரிக்கைகளைத் தொழிலாளர்கள மீது திணித்தது. அதன் போலீஸ் படை வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைத் தாக்குவதில் திரும்பத்திரும்ப ஈடுபட்டன. 1993ல் இழிபுகழ் பெற்ற கனோரியா சணல் ஆலைத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நசுக்கிய, சுட்டுக் கொன்ற வழக்கு குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த அரசாங்கங்களின் கீழ் போலீஸ் படைக்கான செலவு 13 மடங்கு அதிகரித்துள்ள அதேவேளை, சமூக சேவைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ஸ்தம்பிதம் அடைந்துள்ளது மற்றும் அவற்றில் இப்போது தனியார் குத்தகைக்குவிடல் தொடங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் டிஎம்சியும் அதன் கூட்டாளிகளும் அரசியல் உள்நுழைவு செய்வதற்கான அவற்றின் திறமையானது, சாதாரண உழைக்கும் மக்களின் தேவைகளை சி பி ஐ (எம்) நிறைவேற்றத் தவறியதன் நேரடி விளைவாகும்.முன்னர் காங்கிரஸ் (இ) -ன் உறுப்பினராக இருந்த பானர்ஜி இடது முன்னனி அரசாங்கம் பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்ததற்கு எதிரான எதிர்ப்பின் போது கைது செய்யப்பட்ட பொழுது 1990ல் முக்கியத்துவம் பெற்றார். 1997ல் ஆளும் வங்காளித் தட்டினரின் ஒருபகுதியின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டார்.

பானர்ஜியும் டி எம் சியும், இடது முன்னனி அரசாங்கத்தின் வேலைகளைச் சுட்டிக்காட்டி சிறிய வணிகத்தட்டினர், நடைபாதை வியாபாரிகள் மற்றும் சில பகுதி தொழிலாளர்கள் ஆகியோருக்கு வலதுசாரித்தனமான "சட்டம் ஒழுங்கு" பிரச்சினைகளையும் ஜனரஞ்சக வேண்டுகோள்களையும் விடுப்பதையும் வங்காளி பேரினவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றனர். அதன் 1999 தேர்தல் அறிக்கையில், "கம்யூனிசத்தை" தோற்கடிக்கும் பொருட்டு இந்து இனவாத பிஜேபி உள்ளிட்ட எந்தக்கட்சியுடனும் சேருவதற்கான அதன் விருப்பத்தை டி எம் சி வளிப்படையாக அறிவித்தது. அது தொடக்கத்தில் மேற்கு வங்காளத்தின் நகர்ப்புறப் பகுதியில் பெரும் வெற்றிகளை ஈட்டியது.

மேற்கு வங்காளத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்ததை டிஎம்சி விரைவிலேயே இடம் மாற்றியது.1998ல் நடந்த தேசிய அளவிலான தேர்தலில் அது ஏழு இடங்களை வென்றது.1999 தேசிய அளவிலான தேர்தலில் மேலும் இடங்களைக் கைப்பற்றியது. அதில் பிஜேபி யும் மூன்று இடங்களைக் கைப்பற்றியது. இடது முன்னனிக்கான வாக்குகள் 47 சதவீதம் வீழ்ந்த அதேவேளை, டி எம் சி- பிஜேபி கூட்டணி 37 சதவீதமும் காங்கிரஸ் (இ) 13 சதவீதமும் வென்றன. நகர்ப்புறங்களில் இடது முன்னனியானது வலதுசாரி டி எம் சி-பி ஜே பி கூட்டை விட 12 புள்ளிகள் பின்தங்கி இருந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற வட்டாரத் தேர்தல்கள் சி பி ஐ (எம்) க்கு மேலும் அதிர்ச்சிகளைக் கொடுத்தது. பின்னர் 2000ன் நடுப்பகுதியில் பன்ஸ்குரா தொகுதிக்கான இடைத் தேர்தலில் இடது முன்னனி வேட்பாளர் டி எம் சி யால் எளிதாகத் தோற்கடிக்கப்பட்டார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலப்பகுதியில் இதுதான் முதல் தடவையாக "இடது" கள் இத்தொகுதியை இழந்தனர். இத் தொகுதியில் உள்ள வாக்காளர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் நிலமற்ற விவசாயிகள் அல்லது ஏழைவிவசாயிகள் ஆவர். மற்றொரு தேர்தலில், 78 நகரசபைகளில் 33 நகரசபைகளை மட்டும் இடது முன்னனி வென்றது மற்றும் 15 ஆண்டுகளில் முதற் தடவையாக கல்கத்தா மாநகராட்சியின் மீதான கட்டுப்பாட்டை இழந்தது.

இப்பொழுது சி பி ஐ (எம்), மே மாதம் வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் தோல்விக்கான சாத்தியத்தை எண்ணி அஞ்சிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் (இ)-ன் தேசியத் தலைமை, டி எம் சி அளிக்க முன்வரும் பிஜேபி உள்ளிட்ட மகா கூட்டணியை இதுவரை மறுத்து வருகிற அதேவேளை,மேற்கு வங்காளத்தில் உள்ள அதன் உறுப்பினர்களோ சுயமாக ஆதரவளிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஜனவரி 28 அன்று கட்சியின் முக்கிய தலைவரான கானிகான் செளதுரி, தானும் ஏனைய ஐந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் டி எம் சி மற்றும் பி ஜே பி யுடனான "மகாஜோத்" உடன் அணிசேரப் போவதாகக் குறிப்பிட்டார்.

மாநிலத் தேர்தலின் உடனடி வெளிப்பாடு எதுவாயினும், ஒரு வலதுசாரி ஆட்சி அமைவதற்கான வழியை வகுத்துக் கொடுப்பதற்கு சி பி ஐ (எம்) மும் அதன் கொள்கைகளுமே பொறுப்பாகும். அது தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியை மேலும் கூட்டவே செய்யும்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved