World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா:பிரித்தானியா

Britain: New anti-terror law threatens basic democratic rights

பிரித்தானியா: புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தல்

By Julie Hyland
22 February 2001

Back to screen version

தொழிற்கட்சி அரசாங்கத்தின் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பெப்பிரவரி 19ம் திகதி திங்கட்கிழமை நடைமுறைக்கு வந்துள்ளது. அது உள்ளடக்கிக் கொண்டுள்ள பிரமாண்டமான அதிகாரங்கள் பிரித்தானிய சிவில் உரிமைகளை பெரிதும் பாதிப்பதாக அமைந்துள்ளதோடு உலகளாவிய ரீதியிலான தாக்கங்களையும் கொண்டுள்ளது.

புதிய பயங்கரவாதச் சட்டம் ஆட்களை நிறுத்தவும் தேடவும் பயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்து தடுத்து வைக்கவும் பொலிசாருக்கு விசேட அதிகாரங்களை வழங்கிய 1973ம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) பதிலீடு செய்கின்றது. ஆரம்பத்தில் அயர்லாந்தின் குடியரசு இயக்கத்துக்கு எதிராக திருப்பப்பட்டு இருந்த பயங்கரவாத தடைச் சட்டம் ஒரு தொகை கடைகெட்ட பொய்க் குற்றச்சாட்டு வழக்குகளுக்கு பொறுப்பாகும். இதில் பிரித்தானியாவில் பயங்கரவாதக் குண்டு வெடிப்பின் பேரில் தவறாக சிறை வைக்கப்பட்ட கில்போட் நால்வரும் பேர்மிங்காம் அறுவரும் (Guidford four and Birmingham six) அடங்குவர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதன மூலம் அரசாங்கம் "பயங்கரவாதிகளுக்கு எதிரான முக்கிய அதிகாரங்களைப் பலப்படுத்துவதோடு" சிவில் உரிமைகளையும் மீளுறுதி செய்வதாக பிரித்தானிய உள்நாட்டுச் செயலாளர் (Home Secretary) ஜக் ஸ்ரோவ் தெரிவித்துள்ளார்.

யதார்த்தத்தில் புதிய சட்டம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் (PTA) காட்டிலும் பெரிதும் பயங்கரமானது. பிரித்தானிய அரசின் அதிகாரங்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விஸ்தரிக்கின்றது. புதிய சட்டம் ஐக்கிய இராச்சியத்துக்கு (UK) வெளியே எடுக்கப்பட்ட அல்லது "தூண்டிவிடப்பட்ட" நடவடிக்கைகளையும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளாக குறிப்பிடுகின்றது. இதற்கு முன்னர் வெளிநாட்டவர்கள் தமது நாட்டில் "பயங்கரவாதி" யாக குறிப்பிடப்பட்டாலும் அவர்கள் பிரித்தானியாவில் அகதிகளாக தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் கொடுமைப் படுத்தப்படுவர் என நீதிமன்றத்தை திருப்திப்படுத்த வேண்டியிருந்தது. இது ஆளும் வட்டாரங்களில் ஒரு கெளரவ இலட்சனையாக- ஜனநாயகத்தின் பேரிலான பிரித்தானிய அர்ப்பணத்தின் சாதகமான நிரூபணமாக கருதப்பட்டது. கடந்த சில வருடங்களாக குடிவரவு, அடைக்கலம் கோரும் உரிமைளுள் இடம்பெற்ற பாரதூரமான ஊடுருவல்களுக்கிடையேயும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் வழங்கப்பட்டது. இல்லாது போனால் அவர்கள் தமது நாடுகளில் சித்திரவதை செய்யப்பட்டிருப்பர். இலங்கைத் தமிழர்கள், துருக்கியர்கள், ஈராக்கிய குர்திஷ்டுகள் பெரிய சமூகத்தினராவர். இச்சிறுபான்மையினர்கள் தமது நாடுகளில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு, காட்டுமிராண்டித்தனமான இராணுவ அடக்குமுறைகளுக்கு ஆளாகினர்.

பிளேயர் (Blair) அரசாங்கம் அடைக்கலம் வழங்கும் சரத்துக்களை (Asylum provisions) ஒழித்துக் கட்டிவிட தீர்மானித்துள்ளது மட்டுமன்றி பயங்கரவாத நடவடிக்கை என்பது என்ன என்பதை தீர்மானம் செய்யும் உரிமையையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. புதிய சட்டத்தில் பயங்கரவாதம் பற்றிய விளக்கம் அந்தளவுக்கு பரந்ததாக இருப்பதால் பிரித்தானியாவில் அல்லது வெளிநாட்டில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட எவரும் கைது செய்யப்பட முடியும்.

பயங்கரவாதம் பற்றிய வரைவிலக்கணம் முதற்தடவையாக சொத்துக்கு எதிரான அச்சுறுத்தலையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. கடந்த காலத்தில் இவை "குற்றவியல் சேதம்" ஆகக் கணிக்கப்பட்டது. சட்டத்தின் முதலாவது சரத்து பயங்கரவாதத்தை "ஒரு அரசியல், சமய, அல்லது சித்தாந்தத்தை முன்வைக்க பயன்படுத்தும் அல்லது அச்சுறுத்தும்" நடவடிக்கையாக வரைவிலக்கனம் செய்கின்றது. இது எந்த ஒரு ஆளுக்கு அல்லது சொத்துக்கு எதிரான பாரதூரமான வன்முறை; எந்த ஒரு ஆளினதும் உயிருக்கு அச்சுறுத்தல் அல்லது பொதுமக்களின் அல்லது பொதுமக்களின் ஒரு பகுதியினரின் சுகாதாரத்துக்கு அல்லது பாதுகாப்புக்கு பாரதூரமான ஆபத்தை சிருஷ்டிப்பது என்பவற்றை உள்ளடக்குகின்றது."

இந்த மதிப்பிடலின் அடிப்படையில் அரசாங்கம் புதிய சட்டத்தின் கீழ் அது பயங்கரவாதிகளாக கருதக்கூடிய குழுக்களின் ஒரு பட்டியலை தயாரித்து வருகின்றது. இவை தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஒரு பட்டியலுடன் சேர்த்துக் கொள்ளப்படும். இந்த தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் தற்சமயம் ஐ.ஆர்.ஏ. (IRA) அல்ஸ்டர் சுயேச்சைப் படை (Ulster Volurteer Force) என்பன அடங்கியுள்ளன. ஒரு அமைப்பு இப்பட்டியலில் சேர்க்கப்பட்டதும் அதில் ஒரு அங்கத்தவராக இருப்பதும் அதற்கு நிதி உதவி அளிப்பதும் அதனது இலட்சனைகளை காட்சிக்கு வைப்பதும் அதன் அங்கத்தவரோடு மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களோடு ஒரு மேடையில் தோன்றுவதும் சட்டவிரோதமானது.

அரசாங்கத்தின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கை நலன்களே "பயங்கரவாத" நடவடிக்கை என்பது என்ன என்பதன் வரைவிலக்கணத்தை அரசியல் ரீதியில் நிர்ணயம் செய்கிறது. உதாரணமாக 1980 பதுகளின் ஆரம்ப காலங்களில் இப்புதிய சட்டம் அமுலில் இருந்திருக்குமானால் தென்னாபிரிக்க இன ஒதுக்கல் ஆட்சியாளர்களை பிரித்தானிய அரசாங்கம் ஆதரித்து வந்த வேளையில் நெல்சன் மண்டேலாவினதும் ஆபிரிக்க தேசிய காங்கிரசினதும் (ANC) ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு "பயங்கரவாத" குற்றச்சாட்டின் பேரில் சிறையில் தள்ளப்பட்டிருக்க முடியும்.

மிகச் சமீபத்தில் பிளேயர் அரசாங்கம் ஈராக்கிலும், முன்னைய யுகோசலாவியாவிலும் ஆட்சியாளர்களை இராணுவ நடவடிக்கை மூலம் தூக்கி வீசுவதிலும் எதிர்க்கட்சி குழுக்களுக்கு நிதி உதவி செய்வதிலும் நேரடியாக ஈடுபட்டுள்ளது. இது இயற்கையாக "சுதந்திர போராளிகள்" என அழைக்கப்பட்டதே அல்லாது பயங்கரவாதிகளாக அழைக்கப்படவில்லை. இந்த 'லேபல்' பிரித்தானியா நட்புறவு கொண்டுள்ள நாடுகளை எதிர்க்கும் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்டது. அவற்றினது ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத தன்மையை கணக்கில் கொள்ளாமலேயே அப்படிச் செய்யப்பட்டது.

தடை செய்யப்படவுள்ள அமைப்புகளில் பலவும் இஸ்லாமிய அமைப்புக்கள். அவற்றின் இலக்குகள் மத்திய கிழக்கிலான பிரித்தானிய நலன்களுக்கு நேர் எதிராக நின்று கொண்டுள்ளன. அத்தோடு பிளேயர் அரசாங்கம் தீவில் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டதும் பிரித்தானிய ஆதரவுடன் கூடியதுமான ஒரு தீர்வை திணிக்க சைகை காட்டாது போனால் இலங்கையில் தனித்தமிழ் நாட்டுக்காகப் போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் (LTTE) ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யும் என சைகை காட்டிக் கொண்டுள்ளது. தடை செய்வது என்பது லண்டனில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய தலைமையகத்தை மூடிவிடுவதாகும். இந்நடவடிக்கை அதனது அங்கத்தவர்களையும் ஆதரவாளர்களையும் தலைமறைவாகச் செய்வதோடு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு எதிரான அதனது போராட்டத்தை நிதியீட்டம் செய்வதை சாத்தியமாக்கியுள்ள அமைப்பின் பலத்தில் ஒரு பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

புதிய சட்டம் பிரித்தானியாவில் சிவில் உரிமைகள் சம்பந்தமாக ஏற்படுத்தும் தாக்கங்களும் அதேயளவில் பாரதூரமானவை. நேரடி நடவடிக்கைக்காக வக்காலத்து வாங்குவோர்- சுற்றாடல் காப்போர், மிருக உரிமை பிரச்சாரகர்கள், சீடிங்கிலும் வேறு இடங்களிலும் இன்டர்நெற் மூலம் பூகோளமயமாக்கல் எதிர்ப்புகளில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் -இச்சட்டத்தின் கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

அத்தியாவசிய சேவைகளில் தலையிடும் எந்த ஒரு தொழிலாளர் வேலைநிறுத்த நடவடிக்கையும் இந்த சட்டத்தின் ஒரு பாகமாகின்றது. கடந்த ஆண்டு இடம்பெற்ற எரி பொருள் வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது இது அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஒரு நடவடிக்கை ஆகும்.

இந்தச் சட்டம் ஒவ்வொரு பிரஜையையும் அரசுக்கு தகவல் வழங்குபவராக மாறும்படி தூண்டுகின்றது. தமது தொழிற்பாட்டின் போது ஒருவர் ஒரு பயங்கரவாத நோக்கத்துக்காக பணம் அல்லது சொத்து பங்களிப்பு செய்யப்படுவது பற்றி அல்லது பங்களிப்பு செய்பவர் பற்றி தகவல் தெரிந்தவராயின் அதைப்பற்றி பொலிசுக்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுமிடத்து அது ஐந்து வருட கால சிறைத் தண்டனையை கொணரும். இது பத்திரிகைத் துறை ஆய்வுகளுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பிரித்தானியாவில் உள்ள சிவில் உரிமை இயக்கமான 'லிபேர்டி' (Liberty-சுதந்திரம்) பயங்கரவாத குற்றங்களை கையாள்வதற்கு ஏற்கனவே சட்டங்கள் இருந்து கொண்டுள்ளதால் புதிய நடவடிக்கைகள் அவசியமற்றவை என முறைப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியல் தயாரிப்பு, உளவு சேவை நடவடிக்கைகளில் கணிசமான அளவு விஸ்தரிப்பு செய்யப்படுவதை உள்ளடக்குவதாக விளங்கும். MI5 போன்ற அமைப்புகள் பயங்கரவாத நோக்கத்தை நிரூபிப்பதாகச் சொல்லப்படும் சாட்சியங்களைத் திரட்டுவதற்குப் பொறுப்பாக இருக்கும். இது தொலைபேசி ஒற்றுக் கேட்டல் உட்பட அதிகரித்தளவிலான அரசின் கண்காணிப்பைக் குறிக்கின்றது.

அத்தோடு இச்சட்டம் "இரட்டை வழி நீதி முறையை" சிருஷ்டிப்பதாக மனித உரிமைக் குழுக்கள் முறைப்பட்டுக் கொண்டுள்ளன. பொலிசார் ஒரு பிடி விறாந்து இல்லாமல் ஒருவரைக் கைது செய்வதற்கு வேண்டியது, பயங்கரவாத "நோக்கம்" கொண்டிருந்தார் என்ற சந்தேகமே. அவர் எந்த ஒரு குற்றத்தையும் இழைத்திருக்க வேண்டியது இல்லை. நீதிமன்றத்தில் இச்சட்டம் "பின்னடிப்பு கடமை"க்கு (reverse onus) இடமளிக்கிறது. இது பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட சரத்தாகும். லிபேர்ட்டி இதை விளக்குகையில்: "இதன் தாக்கம் இதுதான்: உதாரணமாக எவரேனும் ஒருவர் தம்மோடு அமைச்சர்களின் முகவரிகளின் பட்டியலை கொண்டிருந்தால் (அவர் ஒரு பயங்கரவாத இலக்காக கருதப்படுவார்) அவர்கள் நீதிமன்றத்தில் இந்தப் பட்டியலை கொண்டிருந்தது குற்றமற்றது என நிரூபிக்க வேண்டியிருக்கும். குற்றவாளி என நிரூபிப்பது வழக்காளி தரப்பு வேலையல்லாது குற்றவாளியே தமது அப்பாவித்தனத்தை நிரூபிக்க வேண்டும்."

கடந்த ஆண்டு பிரித்தானிய சட்டத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீதான ஐரோப்பிய உடன்படிக்கையின் பல சரத்துக்களையும் இது மீறியுள்ளதாக கூறி வழக்கறிஞர்களும் புதிய சட்டத்தினை கண்டனம் செய்துள்ளனர்.

ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பிளயர் அரசாங்கத்தின் தாக்குதல் அதனது வர்த்தக சார்பு நிகழ்ச்சி நிரலினால் அவசியமாக்கப்பட்டுள்ளது. 18 வருடகால கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியினால் ஏற்படுத்தப்பட்ட சமூகப் பேரழிவுகளை ஈடு செய்வதாக வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த போதும் தொழிற்கட்சி கண்ணியமான சம்பளம், வாழ்க்கைத் தரங்களுக்கான உழைக்கும் மக்களின் அபிலாசைகளை திருப்தி செய்ய முடியாதுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பூகோள ரீதியான கூட்டுத்தாபனங்களின் கொள்ளையை திணிக்கும் பொருட்டு பிளேயர் அரசாங்கம் சமூக ஒழுங்கை காப்பதற்கான ஒரே சாதனமாக அரச அடக்குமுறையில் அதிகரித்த அளவில் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. அது உலக சனத் தொகையின் பரந்தளவிலான பெரும்பான்மையினரின் அடிப்படை நலன்களுக்கு எதிராகச் சென்று கொண்டுள்ளது.

சிவில் உரிமைகள் மீறப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் பிரஜைகளால் ஹேக்கில் (Hague) உள்ள ஐரோப்பிய நீதிமன்றத்தின் முன்னால் கொணரப்பட்ட அதிகரித்தளவிலான வழக்குகளுக்கு முகம் கொடுத்த நிலையில் அரசாங்கம் மனித உரிமைகள் மீதான ஐரோப்பிய உடன்படிக்கையின் ஒரு திருத்திய சரத்தை அறிமுகம் செய்தது. ஆனால் தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரு இரு முனை மூலோபாயத்தைக் கடைப்பிடித்தது.

ஒரு புறத்தில் இது புதிய காலனித்துவ தலையீடுகளை நியாயப்படுத்தும் பொருட்டு மனித உரிமைகளுக்கான அதனது பொறுப்புக்களின் தாற்பரியம் பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டது. அமெரிக்கா தலைமையில் ஈராக் மீதும் முன்னாள் யூகோசலாவியா மீதும் நடாத்தப்பட்ட தாக்குதல்களில் பிரித்தானியா பங்கு கொண்டமையும் கடந்த ஆண்டில் ஆபிரிக்காவில் தலையிட்டமையும் "மனிதாபிமான" பயணங்களாக வருணிக்கப்பட்டன.

எவ்வாறெனினும் மறுபுறத்தில் பிளேயர் அரசாங்கம் நீண்டகாலமாக இருந்துவந்த ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் வகையில் மிதமிஞ்சிய சட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. உண்மையில் மனித உரிமை உடன்படிக்கைகளில் பொதுவாக உள்ளடக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மனித உரிமையையும் இரத்துச் செய்யும் ஏனைய சட்டங்கள் அங்கு உள்ளன. தொழிற் கட்சி அரசாங்கம் இன்டர்நெற், தகவல் சுதந்திரம், நீதித்துறை, அடைக்கலம் புகும் உரிமைகளை ஆளுகின்ற சட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அடிப்படை சிவில் உரிமைகளுக்கு மேலாக அரச அதிகாரங்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. சீன ஜனாதிபதி ஜியாங் செமின் 1999ல் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த போது தீபத்தின் தீவிரவாதிகளின் ஆர்ப்பாட்டங்கள் போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை சந்தித்தது. அத்தோடு கடந்த ஆண்டின் எரிபொருள் வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அடக்கு முறைகளுக்கும் பிரமாண்டமான பொலிஸ் தலையீடுகளுக்கும் முகம் கொடுக்கும் ஆபத்து ஏற்பட்டது.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved