World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை

Campaign to release Sri Lankan detainees: Hatton Six face another year's jail without trial

இலங்கைக் கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரச்சாரம்: அட்டன் அறுவரும் விசாரணையின்றி மேலும் ஒரு வருடம் சிறையில்

By Vilani Peiris
6 March 2001

Back to screen version

குண்டுத் தாக்குதல் தொடர்பான போலிக் குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடரப்பட்டுள்ள, இலங்கையின் பெருந்தோட்டப் பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் பெப்பிரவரி 15ம் திகதி நீதிமன்றம் சென்ற போது, அவர்களின் வழக்கு மேலும் 11 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விசாரணைகளின்றி மூன்றரை வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள இந்த ஆறு இளைஞர்களின் வழக்கு அடுத்த (2002) ஜனவரி 16ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1999 மே மாதம் கைதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டது தொடக்கம் அதிகாரிகள் பல்வேறு சாட்டுப் போக்குகளை கூறி வழக்கை ஒத்திவைத்தது இது ஆறாவது தடவையாகும். இதற்கு முன்னரும், இந்த அட்டன் அறுவரும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதி மன்றத்துக்கு கூட கொண்டு செல்லப்படாமல் 13 மாதங்கள் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

வழக்கு இந்த வருடம், ஜனவரி 2ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட இருந்த போதும், நீதிபதி தவிர்க்க முடியாத "கடமை விடுமுறையில்" இருந்த அதே வேளை, விசாரணைக்கான முக்கிய சாட்சியும் இந்த ஆறுபேரால் வழங்கப்பட்ட "ஒப்புதல் வாக்குமூலங்களை" குற்றச்சாட்டுக்களாக பதிவு செய்த ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகரும் சமூகமளித்திருக்கவில்லை. ஒரு புதிய நீதிபதி நியமிக்கப்பட்டு பின்னர் ஒரு திகதியைக் குறிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. பெப்பிரவரி 15ம் திகதி நியமிக்கப்பட்ட நீதிபதி அடுத்த ஜனவரி 16ம் திகதி வரை விசாரணையை ஒத்தி வைத்தார்.

ஆனாலும் அவர்களின் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்படாது என்பதற்கான உத்தரவாதம் எதுவும் கைதிகளுக்கு கிடையாது. இலங்கை பூராவுமுள்ள சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும், ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பெரும்பாலும் விசாரணைகளின்றி வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஒடுக்குமுறை, கடந்த ஆறு வருட காலமாக பொதுஜன முன்னணி அரசாங்கத்தால் உக்கிரமாக்கப்பட்டுள்ள பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 18 வருடகால யுத்தத்தின் ஒரு பாகமாகும்.

உத்தியோகபூர்வமான அறிக்கைகளின்படி, 2000ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை மாத்திரம், அவசரகாலச் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும், 13,514 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சில மனித உரிமை குழுக்கள் இது 18,000 என குறிப்பிட்டுள்ளன. பெரும்பாலானவர்கள் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும் சிலர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அரச சார்பற்ற அமைப்பான மனித உரிமைகள் நிலையம் பல தடுப்பு முகாம்களில் கிட்டத்தட்ட 2,500 தமிழர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக கணக்கிட்டுள்ளது. வட மாகாணத்தில் யாழ்ப்பாணமும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை உட்பட்ட பிரதேசங்களும், கொழும்பு, களுத்துறை, பூசா, நுவரெலியா, பதுளை, கண்டி, சிறைச்சாலைகளும் இவ்விடங்களில் அடங்கும்.

1998 மே 31ம் திகதி மத்திய மலையகப் பிரதேசமான அட்டனுக்கு அருகில் உள்ள ஷெனன் தேயிலைப் பக்டரியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து இந்த அட்டன் ஆறுபேரும் முதலில் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஆறு மாத காலங்களாக இடம்பெற்ற 6 வெவ்வேறு குண்டு வெடிப்புகளுக்கு இந்தக் கைதிகள் பொறுப்பானவர்கள் என -ஐந்து மின்மாற்றிகள் மற்றும் ஒரு எண்ணெய்த் தாங்கி- அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இந்தக் குற்றச் சாட்டுகள், கைதிகளால் எழுதவோ வாசிக்கவோ முடியாத சிங்கள மொழியில் எழுதப்பட்டு, சித்திரவதைகளின் பின்னர் கையொப்பம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். முதலில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு வருடத்தின் பின்னர் எந்த விளக்கமும் இன்றி விலக்கிக் கொள்ளப்பட்டது.

இப்போது அரசாங்கத்தின் ஒரு முக்கிய சாட்சி தனது பொறுப்பை கவனத்தில் கொள்ளாமல் எங்கிருக்கிறார் என்பதை தன்னும் அறிவிக்காமல் பொலிஸ் சேவையை நிராகரித்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச தரப்பு வழக்கறிஞர் எதிரி தரப்பு வழக்கறிஞருக்கு அறிவித்துள்ளார். சாட்சியான முகாடிஸ் எனும் உதவிப் பொலிஸ் அதிகாரியே இந்த ஒப்புதல் வாக்குமூலங்களை தமிழாக்கம் செய்து, கைதிகளுக்கு விளங்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட உத்தியோகத்தராவார். இந்த பொலிஸ் அதிகாரி இல்லையென்றால், இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயாதீனமானவை எனவும் கைதிகள் கையொப்பமிட சொல்லப்பட்டிருப்பது என்ன என்பதை புரிந்து கொண்டிருந்தார்கள் எனவும் கூட ஒப்புவிக்க முடியாமல், அரச தரப்பினர் நெருக்கடிக்குள் தள்ளப்படுவர்.

ஆனாலும் அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் ஒரு பாகமாக இந்தக் கைதிகளை சிறையில் வைத்திருக்கவே உத்தேசித்துள்ளது. இந்த ஆறு கைதிகளும் குண்டுத் தாக்குதலின் குற்றவாளிகளாகக் காணப்பட்டால், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) உறுப்பினர்கள் என குற்றம் சாட்டப்பட்டு 20 வருட சிறைத்தண்டனைக்கு முகம் கொடுக்க நேரும்.

கைதிகளும்- சுப்பு உதயகுமார், பிச்சமுத்து சந்திரன், அருணாசலம் யோகேஸ்வரன், சோலமலை லோகநாதன், பொன்னையா சரவணகுமார், சாமிமுத்து பெனடிக்ட்- அட்டனுக்கு அருகில் உள்ள தோட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். சுப்பு உதயகுமார் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர். 1997 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளராகவும் போட்டியிட்டார்.

அரசாங்கம் பிரச்சாரத்தை தட்டிக் கழிக்க முயற்சிக்கின்றது

சோசலிச சமத்துவக் கட்சி அட்டன் அறுவரையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்வதற்கான தனது பிரச்சாரத்தை மீண்டும் தொடருவதற்காக ஜனவரியில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இலங்கையிலும் அனைத்துலகிலும் உள்ள பிரச்சாரத்தின் ஆதரவாளர்கள், இந்தக் கைதுகளின் தன்மையையும் நீண்டகாலத் தடுத்துவைப்பையும் பலாத்காரமான ஒப்புதல் வாக்குமூலங்களையும் கண்டனம் செய்து சட்ட மா அதிபருக்கு ஏற்கனவே பல கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தப் பிரச்சாரத்தில் இருந்து தப்பிக்கொள்ளும் முயற்சியாக, இந்தக் கடிதங்களுக்கு எந்தவித பதிலும் வழங்காத சட்டமா அதிபர் அதற்கு பதிலாக எழுதிய, ஒரே ஒரு வரியில் : "மேற்சொன்ன சந்தேக நபர்களின் பேரிலான குற்றப்பத்திரிகைகள் 28/4/99ல் அவர்களது EER/42/99/ABCD கோவைகளுக்கு ஊடாக கண்டி உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பதை தங்களுக்கு அறியத் தருகின்றோம்." என குறிப்பிட்டிருந்தார்.

சோ.ச.க. தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் புத்திஜீவிகளுக்கு மத்தியில் அறிக்கையின் பிரதிகளை பரவலாக விநியோகித்துள்ளதோடு, சில தமிழ் தொடர்புசாதனங்களின் பதிவுகளையும் பெற்றுக் கொண்டது. பெப்பிரவரி 14ம் திகதி, தமிழ் மொழி தனியார் வானொலி சேவையான சூரியன் FM, உலக சோசலிச வலைத் தளம் ஆறு இளைஞர்களையும் விடுதலை செய்வதற்காக பிரச்சாரம் செய்வதாக அறிவித்தது.

மனித உரிமை அமைப்பு ஒன்றினால் வார இதழாக வெளியிடப்படும் தமிழ் பத்திரிகையான சரிநிகர் குறிப்பிட்டதாவது: "பெருந்தோட்டங்களில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியோ, தொழிற் சங்கமோ, அரச சார்பற்ற நிறுவனமோ அல்லது மனித உரிமை குழுவும் சரி இந்த இளைஞர்களின் விடுதலைக்காக குரல் எழுப்பியதில்லை. இந்த இளைஞர்களின் விடுதலைக்காக சோசலிச சமத்துவக் கட்சியால் புதிய அனைத்துலகப் பிரச்சாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு WSWS உடன் தொடர்பு கொள்க" என்றது.

இலங்கையின் பிரபல நாடக, மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான, தர்மசிரி பண்டாரநாயக்க, சட்ட மா அதிபருக்கு எழுதுகையில் : "ஒரு கலைஞன் என்ற வகையில், அட்டன் தோட்டப்புற இளைஞர்களின் விடுதலைக்கான பிரச்சாரத்துடன் இணைந்து கொள்வது எனது கடமையாகும். அவர்கள் இரண்டரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களை குற்றவாளிகள் ஆக்குவதற்காக சொல்லொணா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒப்புதல் வாக்குமூலங்களை பெறுவதும் சித்திரவதைகளைப் பயன்படுத்துவதும் மனித உரிமைகள் மீதான வன்முறைகளாகும். சமாதானத்தையும் மனித சுதந்திரத்தையும மதிக்கும் நாம் இந்த ஒடுக்குமுறைகளுக்கு இணங்க முடியாத அதே வேளை இந்த ஆறு தோட்டப்புற இளைஞர்களையும் விடுதலை செய்வதில் கவனமெடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்'' என குறிப்பிட்டிருந்தார்.

அட்டன் கிறீஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவத்தின் உறுப்பினர் எம்.நேசமணி "இலங்கையின் பல பிராந்தியங்களிலும் இளைஞர்களை எந்தக் குற்றச்சாட்டுமின்றி பல வருடங்களுக்கு சிறையில் தள்ளுவது, இப்போது வழமையான ஒன்றாகிவிட்டது. அந்த இளைஞர்களின் குடும்ப அங்கத்தவர்கள் விபரிக்க முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். அவர்களின் விடுதலைக்காக சோசலிச சமத்துக் கட்சியின் முயற்சிக்கு ஆதரவளிப்பதோடு, அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறும் வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் எச்.எம்.பி.ஹேரத், அட்டன் அறுவரையும் விடுதலை செய்யக் கோரி சட்டமா அதிபருக்கு எழுதிய தனது கடிதத்தில் "மத்திய வங்கி ஊழியர் சங்கம் இந்த இளைஞர்களின் நீண்டகால தடுத்து வைப்பை, தொழிலாளர் வர்க்கத்தினதும் பொது மக்களினதும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான பாரியத் தாக்குதலாகக்" கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தபால், தொலைத் தொடர்பு ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் எம்.தர்மசேன குற்றச்சாட்டுகளை உடனடியாக விலக்கிக் கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு உணர்த்தி குறிப்பிடுகையில்: "தொழிலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாகும்". இலங்கை தரநிர்ணய நிலையத்தின் ஒரு ஊழியரான ஏ.டபிள்யூ.ஜே.சந்திரசேன குறிப்பிட்டுள்ளதாவது: "ஒரு வருடம் அவர்களைத் தடுத்து வத்திருந்த பின்னர், தேயிலைப் பக்டரி மீதான குண்டுத்தாக்குதல் குற்றச்சாட்டு இல்லாமல் போய், ஒப்புதல் வாக்குமூலங்கள் அடங்கிய சாட்சி மட்டுமே பொலிசாரால் எடுத்துக் காட்டப்படுகிறது." என்றார்.

இலங்கையின் ஒரு கவிஞரும் விமர்சகருமான தர்ஷன மெதிஸ் குறிப்பிட்டுள்ளதாவது: "இந்த இளைஞர்கள் மீது இதுவரை கையாளப்பட்டுள்ள முறை, ஜனநாயக விரோதமானது மட்டமல்ல மன்னிக்க முடியாதது."

நியூயோர்க் நகரவாசியான ஐக்கிய ஆசிரியர் சம்மேளனத்தின் உறுப்பினர் ஹரி எஸ். லிச்மன் எழுதியதாவது: "ஆறு தமிழ் தோட்டப்புற இளைஞர்களையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களை வேண்டுகிறேன். அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள நிலைமை மனித ஜனநாயக உரிமைகளுக்கு கொடுமையானதாகும். அவர்களுக்கு எதிரான முதல் குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டதோடு குற்றச்சாட்டுகள் மாற்றப்பட்டுள்ளன. அவர்களால் எழுதவோ வாசிக்கவோ முடியாத, சிங்களத்தில் எழுதப்பட்டு கையொப்பமிடப்பட்டுள்ள, பலாத்காரமாக பெற்ற "ஒப்புதல் வாக்குமூலம்" மாத்திரமே இந்த இளம் தொழிலாளர்களுக்கு எதிரான ஒரே சாட்சியமாக உள்ளது. பலாத்காரமான ஒப்புதல் வாக்கு மூலங்களும் தெளிவில்லாத குற்றச்சாட்டுகளும் ஏனைய சாட்சிகளின் பற்றாக்குறையும் அங்கு வழக்கு ஒன்றில்லை என்பதை அர்த்தப்படுத்துகிறது."

"பொதுவாக உள்நாட்டு யுத்தத்தின் தன்மையும், குறிப்பாக இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் இனவாத தன்மையும், முக்கியமாக தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஏழைகளுக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரான கடுமையான வன்முறைகளை தூண்டுகிறது. இலங்கையின் தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல், உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளையும் நிலைமைகளையும் வெட்டித் தள்ள உதவுகிறது. இந்த ஆறுபேரின் கைதும், தொடர்ச்சியான சிறைவைப்பும் உலகு எங்குமுள்ள தொழிலாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இனவாத யுத்தத்துக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கும் முடிவு கட்ட இந்தப் பிரச்சாரத்தோடு நானும் இணைந்து கொள்கின்றேன். இந்த ஆறு அப்பாவித் தொழிலாளர்களையும் விடுதலை செய்வதற்கான உடனடி சரியான எதையும் தகமைகளின்றி மேற்கொள்ளவும்." என்றார்.

அட்டன் அறுவருக்கு எதிரான வழக்கு கடைசியாக ஒத்திவைக்கப்பட்டமை பிரச்சாரத்துக்கு ஏனைய வாசகர்களின் குரலும் ஒலிப்பது உடனடி அவசியம் என்பதைக் காட்டுகிறது.

ஆட்சேப கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
சட்ட மா அதிபர்,
சட்ட மா அதிபர் திணைக்களம்,
கொழும்பு-12

பக்ஸ்: 0094-1-436421

உங்கள் ஆட்சேப கடிதங்களில் பின்வரும் வழக்கு இலக்கங்களையும் குறிப்பிடவும்.
கண்டி உயர் நீதிமன்றம்: NJ -1290/99, NJ-1291/99, 1292/99 and NJ 1295/99
பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பி வைக்கவும்:

சோசலிச சமத்துவக் கட்சி,
இல. 90
1வது மாளிகாகந்த ஒழுங்கை கொழும்பு 10
இலங்கை

பக்ஸ்:0094-75-354832

உலக சோசலிச வலைத் தளம்
மின்னஞ்சல்: editor@wsws.org

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved