World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆபிரிக்கா

War creates a humanitarian disaster in the Congo

கொங்கோவில் யுத்தம் மனிதப்பேரழிவுகளை உருவாக்கியுள்ளது.

By Ann Talbot
11 August 2001

Back to screen version

புதிய அறிக்கைகளின்படி கொங்கோ ஜனநாயகக் குடியரசில் யுத்தத்தின் விளைவாக 2.5 மில்லியன் மக்கள் பலியாகியுள்ளனர். இதில் அதிகமானோர் போஷாக்கின்மையாலும் நோயினாலும் இறந்த பெண்களும் சிறுவர்களுமேயாவர்.

இதை வெளிக்கொணர்ந்த லெஸ் ரொபேட்ஸ் (Les Roberts) என்ற தொற்றுநோய்களுக்கான டாக்டரின் கணக்கின்படி ''சில சுகாதார வலயங்களில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பஞ்சத்துடன் இருப்பதை கண்டுபிடித்தோம்'' என்றார். கொங்கோவின் கிழக்குப் பகுதியின் சில பிராந்தியத்தில் மூன்றுவருட யுத்தகாலப் பகுதியில் பிறந்து குழந்தைகளில் 75%மான குழந்தைகள் இறந்துபோயுள்ளன.

புள்ளிவிபரங்கள் கவனமாக மையத்தில் உள்ளடக்கிய சர்வதேச உதவி நிறுவனக் குழுவின் அறிக்கையின்படி ''புள்ளிவிபரங்கள் குறிப்பிடும் எல்லாக் குழந்தைகளின் இறப்பும் அசாதாரண மானது.'' மதிப்பீடுகளின்படி 60% மான குழந்தைகள் தமது ஐந்தாவது பிறந்தநாளை அடையமுன்னரே இறந்துவிடுகின்றன. மேலும் இந்தக் குழந்தைகளின் இறப்புவீதமும் சாதாரணமானதோ அல்லது காரணமற்றதோ இல்லை, மாறாக அது சுகாதார நெருக்கடியை சுட்டிக்காட்டுகின்றன'' என அறிக்கையின் முடிவிற்கு வருகின்றது.

கிறிஸ்தவ குழந்தைகள் உதவி காப்பு oxfam னால் தயாரிக்கப்பட்ட மற்றொரு அறிக்கை இதற்கு இணைந்தவிதத்தில் இப்பேரழிவுபற்றிய போக்கையும் நிலைமையும் எடுத்துக்காட்டுகின்றது. உலகிலேயே அதிகளவு மோசமான மனித நெருக்கடி கொங்கோவில்தான் என்பதை இவை விபரிக்கின்றன.

2 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறியுள்ளதுடன் இவர்களில் அரைவாசிப்பேர்கள் சில வெளியுதவிகளைப் பெற்றுள்ளார்கள். அதிகமானோர் அடுத்த குடும்பத்தவர்களுடன் சேர்ந்து வாழ்கின்றனர் அல்லது காட்டினுள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

யுத்தத்திற்கு முன்பிருந்த மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகளும் துடைத்தொழிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் கிளினிக்குகள் நொருக்கப்பட்டுள்ளன. மருந்துகள் கிடையாதுள்ளதுடன் தடுப்பூசி திட்டமும் துடைத்துக்கட்டப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் சாதாரணமாக தடுக்ககூடிய நோய்களால் இறக்கவிடப்பட்டுள்ளனர். கணிப்பீட்டின்படி 18.5 மில்லியன் மக்களின் மருத்துவ வசதிகளுக்கு எதுவித வழியும் கிடையாது.

யுத்தத்தால் பாதிக்கப்படாத பகுதிகளிலும் கூட மருத்துவசேவை குறைவாகவே காணப்படுகின்றது. அரசாங்கம் தனது மொத்த வரவுசெலவுத்திட்டத்தில் 1 வீதத்திற்கும் குறைவானதையே இதற்கு ஒதுக்கியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தும் பகுதிகளில் மருத்துவ சேவைக்கு ஒரு வரவுசெலவுத்திட்டமும் கிடையாது. யுத்தத்திற்கு முன்பு 50 மில்லியன் மக்களுக்கு 2.056 மருத்துவர்கள் இருந்தார்கள். மருத்துவர்களுக்கு உத்தியோகபூர்வ அரச சம்பளம் மாதம் 4,700 கொங்கோ பிராங்குகள் ஆகும். இது அமெரிக்க டொலரில் 14$ ஆக இருப்பதுடன் தற்போது அதுவும் வழங்கப்படுவது கிடையாது.

யுத்தத்தினுள் தப்பிப்பிழைத்த அந்த மருத்துவ வசதிகள்கூட பாழான நிலைமைகளுக்குள்தான் இருக்கின்றன. சில மருத்துவமனைகளில்தான் சுத்தமான நீர் கிடைக்கின்றன. ஆகவே அடிப்படை மருத்துவ வசதிகளைப் பேணுவதென்பது முடியாதுள்ளது. கர்ப்பிணிப்பெண்களின் இறப்பு வீதம் உலகிலேயே இங்குதான் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு 100,000 குழைந்தைகள் பிறக்கும்போது அதில் மூவாயிரம் தாய்மார்கள் மரணமடைகின்றார்கள். தலைநகர் கின்சாசவில் (Kinshasa) இறப்புவீதம் 100,000 பிறப்பிற்கு 1,393 ஆக இருக்கின்றது.

சின்னம்மை கடும் இருமல் போன்ற தொற்று வியாதிகள் தடையின்றி சனத்தொகையை துடைத்துக்கட்டுவதுடன், ஆயிரக்கணக்கான குழந்தைகள் இதற்குப் பலியாகியுள்ளனர். மலேரியாநோய் அதிகரித்துள்ளது. இது விசேடமாக மக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற பலவந்தப்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மலேரியா நோயினால் அரைவாசி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பதியப்பட்டுள்ளன. யுத்தத்திற்கு முன்பே காசநோய் தொற்று வியாதிக்கு நாடு முகம் கொடுத்தது. நவீன வசதிகள் கிடையாதிருப்பதுடன், அகதிகளாக வெளியேறிய மக்களால் நகரங்கள் மாநகரங்கள் நிரம்பிவழிய உணவுப்பற்றாக்குறையும் சேர்ந்து நிலமையை மோசமாக்கியுள்ளது.

எய்ட்ஸ் உடன் இருக்கும் மக்களின் தொகை அறியப்படாது இருப்பதுடன், ஆனால் மதிப்பீடுகளின்படி ஒரு மில்லியன் குழந்தைகள் இவ்வியாதியால் அநாதைகளாக தள்ளப்பட்டுள்ளனர். யுத்தத்தின் பதிலானது எய்ட்ஸ் மற்றும் பாலியலினால் கடத்தும் வியாதிகளை அதிகரிக்கச் செய்துள்ளதுடன், உயிர் வாழ்வுக்காக பெண்கள் விபச்சாரம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அசுத்தமான நீரைப் பருகுவதால் தண்ணீர் மார்க்கமாக நோய்கள் பரவுகின்றன. அரைவாசிக்கும் குறைவான ஜனத்தொகைக்கே சுத்தமான நீர் வினியோகம் இருக்கின்றது. கிராமப்புறங்களில் இதைவிடக் குறைவாக மூன்று வீதமே ஆகும். எரிபொருள், இரசாயனப்பொருட்கள், உதிரிப்பாகங்கள் இல்லாமையால் தண்ணீர் வினியோக நிலையங்கள் இயக்கமற்றுப்போயுள்ளன. கின்சாசவின் பரவும் நோய்க்களில் முப்பது வீதமானவை தண்ணீரால் பரவுபவையாகும் .

உணவுக்கு செலவிடுவதால் அதிகமான குடும்பங்களில் சுகாதாரம் இரண்டாம் பட்சத்துக்கு வந்துள்ளன. செழிப்பான இந்தாட்டின் வினியோகவழிகள் யாவும் வீழ்ச்சியடைந்து நொறுக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் 16 மில்லியன் மக்கள் போதிய உணவை பெறுவதில்லை. அடிப்படையான உணவு உற்பத்தியும், பயிர்களைத் தாக்கும் நோயினால் நாசமாகி விளைச்சல் மேலும் குறைந்ததினால் அதிகமான விவசாயிகள் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல சுரங்கத் தொழிலுக்கு திரும்பியுள்ளார்கள். மற்றைய ஆபிரிக்க நாடுகளிலும் பார்க்க அடிப்படைப் பண்டங்களின் விலையானது 50-150 வீதமாக உயர்ந்துள்ளது. உள்ளூர் கடைகளில் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ அரிசியின் விலையும் ஒரு கிலோ மரவள்ளியின் விலையும் தற்போது கிட்டத்தட்ட சமனாகவுள்ளது.

ஊட்டச்சத்து பற்றாக்குறை அபாயத்தால் வெளியேறிய அநேக குடும்பங்கள் மட்டுமன்றி முழு நாடும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு மில்லியன் தொன் உணவுப்பற்றாக்குறை கின்சாசாவில் நிலவுகின்றது. பெரு எண்ணிக்கையான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை உட்கொள்வதுடன் பல பிரதேசங்களில் இரண்டு மூன்று நாளைக்கு ஒரு தடவையே குறைந்தபட்ச உணவை உட்கொள்கின்றார்கள். Kwashiokor ல் புரதச்சத்து இன்மையால் நோய்கள் உண்டாவதுடன் இது கிழக்குப் பிராந்தியத்துக்கும் பரவிச் செல்கின்றது. உட்கொள்ளும் உணவில் அயடீன் இன்மையால் அதிகளவான குழந்தைகளுக்கு தைரோய்டு நோய்கள் அதிகரிக்கின்றன.

யுத்ததிற்கு முன்பு 40 வீதமான குழைந்தைகளுக்கு கல்வி கிடையாது. தற்போதைய நிலைமை நம்ப முடியாதளவில் உள்ளது. ஆனால் அதிகளவு பாடசாலைக் கட்டடங்கள் யுத்தத்தினால் அழிக்கப்பட்டோ அல்லது பாழாக்கப்பட்டோ உள்ளன. வசதி வாய்ப்புள்ள குறைந்த எண்ணிக்கையான குடும்பங்கள் தமது பிள்ளைகளை இருக்கின்ற பாடசாலைக்கு அனுப்புகின்றார்கள். ஒரு தவணைக் கட்டணம் அமெரிக்க டொலரில் 3$ ஆகும். ஆனால் இக்கட்டணத்தை வழங்க முடிந்தவர்களுக்கு கூட கல்விக்கான புத்தகங்கள் உபகரணங்கள் மட்டுப்படுத்தப்பட்டும் குறைந்தளவிலுமே கிடைக்கின்றன.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து ஐக்கிய நாடுகள் மனித அபிவிருத்தி சுட்டெண்ணின்படி 12 வது இடத்திலிருந்து 152 வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இப்பிராந்தியத்தில் ஏழ்மையான நாடாக இது வந்துள்ளதுடன், அது 1998 ஆம் ஆண்டில் மொத்த உள்ளூர் உற்பத்தி தலைக்கு 110$ டொலராகவும் இருந்தது. கின்சாசாவில் வாழும் 5 மில்லியனில் மக்களில் அரைவாசிப் பேருக்குமேல் ஒரு நாளைக்கு 1$ இற்கும் குறைவானதையே உயிர்வாழ்விற்காக கொண்டிருக்கின்றார்கள்.

கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆபிரிக்காவில் இன்னமும் கனிப்பொருட்களின் வளங்களைக் கொண்ட வழமான நாடாகவிருக்கின்றது. அது உலகில் எங்குமில்லாதளவில் அதிக கையிருப்பில் இவையிருப்பதை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இதனுடன் சேர்த்து தெற்கு ஆபிரிக்கா முழுவதும் நீர் மின்சார சக்தியை வழங்குவதற்கான தகுதியை கொங்கோ ஆறு கொண்டிருக்கின்றது. அடிப்படையான உணவு உற்பத்தியை செய்யக் கூடிய தரமான நீருடன் மண்வளத்தைக் கொண்டதுமான நாடு கொங்கோ ஜனநாயகக் குடியரசாகும்.

கொங்கோ நாட்டவர்கள் ஒருபோதும் அவர்களுடைய நாட்டு வளங்களை அனுபவித்ததில்லை. பெல்ஜியக் காலனித்துவ வாதிகளினால் காட்டுமிரான்டித்தனமான முறையில் இப்பிராந்தியம் சுரண்டலுக்குள்ளாகியது. 1960 ன் சுதந்திரத்துக்குப் பின்பு, மேற்குலகின் குளிர்யுத்தகால மூலோபாயத்தின் பாகமாக அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி மொபுட்டு சேஸ் சேக்கோ (Mobutu Sese Seco) நாட்டின் பொருளாதாரத்தை கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டார். சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் அமெரிக்க ஆதரவு லோரன்ஸ் கபிலாவின் (Laurent Kabila) கிளர்ச்சிப்படைகளால் மதிப்பிழந்துபோன மொபுட்டு பதவியிலிருந்து விலக்கப்பட்டதோடு இவரால் நாடும் யுத்தத்துக்குள் மூழ்கடிக்கப்பட்டது.

லோரன்ஸ் கபிலாவின் படுகொலையைத் தொடர்ந்து அவரது மகனான ஜோசப் கபிலா (Joseph Kabila), தனது தந்தையுடன் பொறுமையிழந்துபோன மேற்குலகின் நலன்களை சாந்தப்படுத்த வந்துள்ளார். சர்வதேச வைரத் தொழிற்சாலையில் இஸ்ரேல் கம்பனிக்கு தனது தந்தையார் வழங்கிய வைர ஏகபோகத்தை அவர் உடைத்ததுடன், கொங்கோவின் பிராங்கை கைகளுவிவிட்டு பொருளாதாரத்தை டொலர் மயமாக்கினார்.

இதற்கு பிரதியுபகாரமாக சர்வதேச நன்கொடையாளர்கள் நிதிஉதவிக்கு உடன்பட்டுள்ளார்கள். ஐரோப்பிய யூனியன் 28 மில்லியன் யூரோவை (US$ 23.1 மில்லியன்) நீதி அமைப்பை மறுசீரமைக்கவும், மேலும் 120 மில்லியன் ஈரோவை (US$ 101.6) கபிலா கிளர்ச்சிப்படைகளுடனும் எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையை மேற்கொண்டால் வழங்குவதற்கும் பிரேரித்ததுள்ளது. முன்னாள் காலனியாதிக்க ஆட்சியாளர்களான பெல்ஜியம், கனடாவுடன் இனைந்து மீண்டும் உதவிகளை வழங்க உடன்பட்டதுடன் உலக வங்கியின் தலைமையுடனும் கூட்டம் கூட்டியுள்ளார்கள். இந்த உதவிகளின் நோக்கம் கொங்கோ ஜனநாயகக் குடியரசு மக்களது துயரைப் போக்குவதற்காகவல்ல. இந்தச் சிறு தொகை பண உதவியின் திட்டமானது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர செய்யப்பட்ட லுசாக்கா (Lusaka) உடன்படிக்கையிலிருந்து யோசேப் கபிலாவை விலகாமல் வைத்திருப்பதற்காகும். உகண்டாவும் ரூவாண்டாவும் இந்த உடன்படிக்கையின்கீழ் தமது துருப்புக்களை பின்வாங்குவதுடன், கிளர்ச்சிப்படைகளும் பின்வாங்கி கின்சாசாவிலுள்ள மத்திய அரசாங்கத்துடன் அரசியல் கலந்துரையாடல்களைச்செய்து தற்போது மூன்று துண்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் நாட்டை மீண்டும் முழு அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பபணத்தொகையானது அரசாங்க செலவீனத்தினதும் அரைவாசிக்கு சமமானதான 14% பொருளாதார வீழ்ச்சியையும் அல்லது US$38,9 மில்லியன் பட்ஜெட் பற்றாக்குறையை தீர்க்கமட்டுமே போதுமானது. ஆனால் கபிலா, பாதுகாப்பற்ற அரசியல் அடித்தளத்தைக் கொண்டிருப்பவர், அற்பமான பணத்தொகைக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கனிப்பொருள்வளங்களை நாடுகடந்த கூட்டுத்தாபனங்களுக்கு திறந்துவிடுவார். சிம்பாவே, அங்கோலாவிலிருந்து பெற்றுக்கொண்ட இராணுவ ஆதரவும் வெளிநாட்டு உதவிகளும் அவருக்கு இல்லாமல் அவரால் ஆட்சியில் உயிர்வாழ முடியாது.

அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பின்புல பொருளாதாரத்தாக்கமும் சேர்ந்து சாதாரண மக்களின் வாழ்க்கைகளை மேலும் அவலத்துக்குள்ளாக்கியுள்ளது. ஒரு லீட்டர் எரிபொருளின் விலை 70 லிருந்து 280 பிராங்கிற்கு உயர்ந்துள்ளது. மேலும் புதிய திட்டங்கள் தயார் நிலையில் உள்ளது. அவர்கள் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறைக்கான வெட்டுக்களையும் உள்ளடக்கி, புதிய சுரங்கத்தொழில் சட்டங்களையும் உருவாக்கி வட்டிவீதம் மீதான கட்டுப்பாட்டை நீக்கியுள்ளார்கள். இது வேலையில்லாத்திண்டாட்ட நிலைமையை அதிகரிக்கச்செய்யும்.

கொங்கோவுக்கு பிரித்தானிய கடல்கடந்த அபிவிருத்தியமைச்சரான Claire Short விஜயம் செய்த நேரத்தில் Oxfam ம் மற்றைய தொண்டு நிறுவனங்களும் தமது அறிக்கையை வெளியிட்டார்கள். ஆனால் அதிகமனிதாபிமான உதவியைக் காட்டிலும், Claire Short னுடைய விஜயத்தின் நோக்கமானது கொங்கோவினது கனி வளங்களின் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கி சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளை இன்னும் அதிகரிப்பதாகவே இருக்கும். அவரது விஜயம் லுசாக்கா (Lusaka) உடன்படிக்கை பிரித்தானியாவிலும் பார்க்க அமெரிக்காவிடமிருந்தும், பிரான்சிடமிருந்தும் வந்தது என்பதை தெளிவாக்கியுள்ளது. ஜோசப் கபிலா பதவிக்கு வந்தபோது அவர் அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும், பெல்ஜியத்திற்குமான தனது விஜயம் தொடர்பாக குறிப்பிட்டிருந்தாரே தவிர பிரித்தானியாவிற்கானது தொடர்பாக குறிப்பிடவில்லை. இவ்வுடன்படிக்கைக்கு ஆதரவளித்த உகண்டாவினதும், ருவண்டாவினதும் மற்றும் போராளிக் குழுக்களுக்கும் உள்ள அதிருப்தியை பயன்படுத்திக்கொள்ளலாம் என Claire Short நம்புகின்றார். ருவண்டாப் படைகள் கட்டுப்படுத்தும் பகுதி கைத்தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பெறுமதியான Tantatum உள்ளடங்கலான முக்கிய கனிப்பொருள் வளங்களை கொண்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved