World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: கலை விமர்சனம்

Iranian director protests harassment by US immigration officials

அமெரிக்க குடிவரவு அதிகாரிகளின் தொல்லைப் படுத்தலுக்கு ஈரானிய இயக்குநர் எதிர்ப்பு

4 May 2001

Back to screen version

பின்வருவது புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹியிடமிருந்து (Jafar Panahi) திரைப்பட மறு ஆய்வு தேசிய வாரியத்திற்கும் சர்வதேச பத்திரிகைக்கும் விடுக்கப்பட்ட பகிரங்க கடிதம் ஆகும். கடிதமானது அவர் ஹாங்காங்கிலிருந்து தென் அமெரிக்க திரைப்பட விழாவுக்கு நியூயார்க் வழியாக செல்லும் பொழுது அமெரிக்க குடிவரவு அதிகாரிகளின் கைகளில் பட்ட அவரது கொடுமையான அனுபவங்களை எடுத்துக் கூறுகிறது. பனாஹி வெள்ளை பலூன் (1995), கண்ணாடி (1997) மற்றும் வட்டம் (2000) ஆகியவற்றின் இயக்குனர் ஆவார்.

தேசிய திரைப்பட ஆய்வு வாரியம் தனது ''கருத்து சுதந்திரம்" விருதை 2000 டிசம்பரில் வட்டம் படத்திற்காக பனாஹிக்கு அளித்து கெளரவப் படுத்தியது. வாரியமானது நியூயோர்க்கை அடிப்படையாகக் கொண்ட, கெளரவமிக்க திரைப்படம் பாராட்டும் கழகம் (உண்மையில் இது 1909 ல் திரைப்படத் தணிக்கை அமைப்பாக நிறுவப்பட்டது) ஆகும்.

April 30, 2001

இயங்கும் படங்களின் தேசிய ஆய்வு வாரியத்திற்கு

அன்புள்ள சீமாட்டிகளே மற்றும் சீமான்களே,

உங்களது கருத்து சுதந்திரம் விருதை, எனது திரைப்படமான வட்டத்திற்கு (The Circle) வென்றவன் என்ற வகையில், அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் சம்பவம், உங்களது நாட்டில் (US) எனக்கு நேர்ந்தது பற்றி உங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த மனிதத் தன்மை அற்ற நடவடிக்கைகளுக்கு தங்களின் எதிர்வினையைப் பார்த்துக் காத்திருக்கிறேன். தாங்கள் கருத்து சுதந்திரத்தினைக் கெளரவப்படுத்த பொருத்தமானவர்கள் என்பதால், இது நீங்கள் தெளிவாக மதிப்பிட வேண்டிய விஷயம், ஆகையால் அதனைப் பாதுகாக்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் எனது திரைப்படத்தை பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள், அமெரிக்க செய்தி ஊடகத்துறையில் இருக்கும் நீங்களும் உங்களது சக நண்பர்களும் அமெரிக்க குடி வரவு அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டனம் செய்ய துணிவு கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அத்தகைய கண்டனம் உங்களது கருத்து சுதந்திர விருதின் மதிப்புக்களை உயர்த்திப் பிடிக்கும் என நான் உணர்கிறேன். இல்லையெனில், அத்தகைய விருதினை வென்றதற்கு அர்த்தம்தான் என்ன? அதனை வைத்திருக்க எனக்கு என்ன தகுதி இருக்ககிறது? ஒருவேளை எனக்கு கருத்து சுதந்திரம் இல்லை எனில், அதற்கு மிகவும் பொருத்தமான இன்னொரு நபரை தாங்கள் காண்பதற்கு ஏதுவாக இவ்விருதினை தங்களிடமே திருப்பித் தந்து விடுகிறேன்.

விருதுடன் சேர்த்து நீங்கள் அன்புடன் அனுப்பிய சிறு நூல் வெளியீட்டில், புகழ்பெற்ற திரைப்படப் பிரமுகர், ஒர்சன் வேல்ஸ் இந்த விருதினை ஏற்கனவே பெற்றிருப்பதாக நான் வாசித்து அறிந்தேன். உங்களது நாட்டுக்குள் நுழையும் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஏனையோரையும் அமெரிக்கப் பொலீசார் எப்படி நடத்துகின்றனர் என்பதைக் கேட்பதற்கு இந்த புகழ்பெற்ற மனிதர் நம்மிடையே இல்லை என்பதையிட்டு நான் சந்தோஷப்படுவதா? சமூகப்பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் திரைப்படத் தயாரிப்பாளர் என்ற வகையில், எனது திரைப்படங்கள் சமூகப் பிரச்சினைகளையும் அதன் வரையறைகளையும் அலசுகிறது. இயற்கையிலேயே நான் உலகில் எந்த இடத்திலும் உள்ள இனவெறி, வன்முறை, இழிவுபடுத்தும் மற்றும் மனிதத்தன்மை அற்ற நடவடிக்கைகளைக் கண்டு நடுநிலையாளனாக இருக்க முடியாது. இருப்பினும் நிச்சயமாக நான் அமெரிக்க பொலீசின் நடவடிக்கைகளையும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளையும், கலாச்சார நிறுவனங்களிலிருந்தும் பண்பாடு மிக்க நபர்களிடமிருந்தும் அதேபோல மாபெரும் அமெரிக்க மக்களிடமிருந்தும் வேறுபடுத்திப் பார்க்கிறேன். உங்களது நாட்டில் உள்ள பார்வையாளர்களிடமும் திரைப்பட திறனாய்வாளர்களிடமும் எனது படம் மிக நன்றாக வரவேற்பு பெற்றதாக எனக்கு அறிவிக்கப் பட்டிருந்தது. இருப்பினும் நியூயார்க்கில் எனது மகிழ்வற்ற அனுபவத்தைப் பற்றி உலக பத்திரிக்கை சாதனங்களுக்கு அறிவிப்பேன் மற்றும் தேசிய ஆய்வு வாரியத்தின் உறுப்பினர்களாகிய நீங்கள், கருத்துரிமையைக் கெளரவித்த நீங்கள், இக்கொள்கைகளைக் கண்டனம் செய்வதில் என்னுடன் இணைவீர்கள் என்று நம்புகிறேன்.

***

ஏப்ரல் 15ல், நான் ஹாங்காங் திரைப்படவிழாவை விட்டு, (Monte video and Buenos Aires Festivals) மோண்ந் வீடியோ மற்றும் புவனஸ் எயர்ஸ் திரைப்பட விழாக்களுக்காக யுனைட்டெட் ஏர்லைன்சின் 820 விமானத்தில் புறப்பட்டேன். இந்த முப்பது மணி நேர பயணம் நியூயோர்க்கின் ஜோன் கென்னடி விமான நிலையம் வழியாக இருந்தது, அங்கு நான் இரண்டு மணி நேரம் தங்கி இருந்து மோண்ந் வீடியோக்கு விமானம் எடுக்க வேண்டும். மேலும் எனது வேண்டுகோளுக்கு, மேற்கூறப்பட்ட திரைப்பட விழாவின் அனைத்து பணியாளர்களும் முன்னரே மாறுதல் (Transit) விசா தேவைப்படுமா என்பதை சரிபார்த்திருந்தனர், மற்றும் அவர்கள் அத்தகைய விசா எதுவும் தேவை இல்லை என்று எனக்கு உறுதி அளித்திருந்தனர். மேலும் விமான நிறுவனம் நியூயோர்க் வழியாக செல்ல எனக்கு பயணச்சீட்டு வழங்கியது. இருப்பினும் நானும்கூட ஹாங்காங் விமான நிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன பணியாளர்களிடம் மாறுதல் விசாவுக்கான தேவை பற்றி கேட்டறிந்தேன், அங்கும் நான் இதே பதிலைத்தான் பெற்றேன். ஆனால் நான் ஜோன் கென்னடி விமான நிலையம் வந்தடைந்ததும், அங்கு அமெரிக்க பொலீசார் ஒரு அலுவலகத்துக்கு என்னைக் கொண்டு சென்று, எனது கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் படம் எடுக்கப்பட வேண்டும் என்றனர், ஏன் எனில் எனது தேசிய இனம் காரணமாக. அப்படி செய்வதற்கு நான் மறுத்தேன், மற்றும் அவர்களிடம் திரைப்பட விழாவிலிருந்து வந்த அழைப்பிதழ்களைக் காட்டினேன். நான் கைவிரல் ரேகையைப் பதிவு எடுக்க உடன்படவில்லை என்றால் , என்னை சிறையில் அடைக்கப் போவதாக அவர்கள் மிரட்டினர். நான் ஒரு மொழி பெயர்ப்பாளரை தரும்படியும், தொலை பேசியில் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு கேட்டேன். அவர்கள் மறுத்தனர். பிறகு, என்னை அவர்கள் மத்திய காலத்து சிறைக் கைதி போல சங்கிலியினால் பிணைத்து பொலீசார் கண்காணிப்பில் வைத்ததோடு, விமான நிலையத்தின் மறுபகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பல வேறு நாடுகளிலும் இருந்து வந்த ஆண்களும் பெண்களுமாய் பலர் இருந்தனர். அழைத்து வந்த பொலீசார் என்னை புதிய பொலீசார்களிடம் ஒப்படைத்தனர். அவர்களோ எனது காலில் சங்கிலியால் பிணைத்து, எனது சங்கிலியை ஏனையோரது சங்கிலியுடன் சேர்த்துப் பூட்டி வைத்தனர். அனைவரையும் மிக அழுக்கடைந்த பெஞ்சுடன் பூட்டுப் போட்டு பூட்டினர். 10 மணி நேரங்களாக கேள்வி கேட்பாடு எதுவும் இன்றி, மற்றவர்களுடன் நெருக்கிக் கொண்டு நான் அந்த பெஞ்சில் உட்காரும்படி நிர்ப்பந்திக்கப்பட்டேன், என்னால் நகர முடியவில்லை. நான் பழைய நோயால் பாதிக்கப்பட்டிருந்தேன். இருப்பினும் ஒருவரும் கவனிக்கவில்லை. மறுபடியும் நியூயோர்க்கில் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள அனுமதிக்கும்படி வேண்டினேன், ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். எனது வேண்டுகோளை மட்டும் மறுக்கவில்லை, சிறீலங்காவிலிருந்து வந்த ஒரு சிறுவன் தனது தாயுடன் பேச விரும்பியதும் மறுக்கப்பட்டது. சிறுவனின் அழு குரலால் ஒவ்வொருவரும் நகர்ந்தனர், மெக்சிகோ, பெரு, கிழக்கு ஐரோப்பா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என.... மற்றும் ஒவ்வொரு நாடும் தனது சொந்த சட்டத்தை வைத்திருக்கிறது என நான் நினைத்தேன், ஆனால் அந்த மனிதத்தன்மை அற்ற நடவடிக்கைகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இறுதியில், நான் அடுத்தநாள் காலையைக் கண்டேன். மற்றொரு போலீஸ்காரர் வந்து என்னை நிழற்படம் எடுக்கப்போவதாகக் கூறினார். ஒருபோதும் மாட்டேன் என்றேன். நான் வைத்திருந்த நிழற்படத்தை அவர்களுக்கு கொடுக்க முன்வந்தேன். அதை அவர்கள் வாங்க மறுத்தனர், அவர்கள் எனது நிழற்படத்தை குற்றவாளிகளை எடுக்கும் வகையில் எடுக்கவும் கைரேகையைப் பதிவு செய்ய இருப்பதாகவும் கூறினர். நான் மறுத்தேன். ஒரு மணி நேரம் கழித்து வேறு இரு பேர்வழிகள் என்னிடம் வந்து, கணினியில் கைரேகையையும் நிழற்படத்தையும் பதிவு செய்யப் போவதாக அச்சுறுத்தினர். அதற்கு மீண்டும் நான் மறுத்து, தொலைபேசி செய்ய அனுமதி கேட்டேன். இறுதியில் அவர்கள் அதனை ஏற்க, நான் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உள்ள ஈரானிய திரைப்பட பேராசிரியரான டாக்டர் ஜாம்ஷீத் அக்ரமியை அழைக்க முடிந்தது மற்றும் அவரிடம் முழுக் கதையையும் கூறினேன். அவருக்கு என்னை நன்றாகத் தெரியும் ஆதலால், அவர்கள் யாரோ எதையோ செய்யப்போவதாக தேடிக் கொண்டிருக்கும் பேர்வழி நான் அல்ல என்று அவர்களுக்கு புரிய வைக்கும்படி கூறினேன். இரண்டு மணி நேரம் கழித்து ஒரு பொலீஸ்காரர் வந்து, எனது சொந்த நிழற்படத்தை வாங்கிச் சென்றார். அவர்கள் என்னை மீண்டும் சங்கிலியால் பிணத்து, ஹாங்காங் செல்லும் விமானத்திற்கு கொண்டு சென்றனர்.

விமானத்தின் ஜன்னல் கரையால் நியூயார்க் நகரைப் பார்க்க முடிந்தது. எனது படம் வட்டம், இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது, மற்றும் அப்படம் நன்றாக வரவேற்கப்பட்டது எனபதையும் நான் அறிவேன். அதேவேளை பார்வையாளர்கள் படத்தின் இயக்குநர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்தார் என்பதை அறியமுடியுமானால், எனது படத்தை அவர்கள் நன்றாகப் புரிந்திருக்க முடியும். மனித எல்லைகளின் வட்டங்கள் இவ்வுலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கிறது, ஆனால் வேறுபட்ட விகிதங்களில் என்ற எனது நம்பிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். நீரில் சுதந்திர தேவியின் சிலையைப் பார்த்தேன், என்னை அறியாமலே சிரித்துக் கொண்டேன். திரைச்சீலையை இழுக்க முயற்சித்தேன் மற்றும் எனது கையில் சங்கிலியின் வடுக்கள் கிடந்தன. என்னையே பார்த்துக் கொண்டிருந்த மற்ற பயணிகளுடன் இருக்க முடியவில்லை, எழுந்து நின்று நான் திருடன் அல்லன்! நான் கொலைகாரன் அல்லன்! நான் போதைப் பொருள் கடத்துபவன் அல்லன்! நான்...நான் ஒரு ஈரானியன், திரைப்படத் தயாரிப்பாளன் என்று கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் இதனை எப்படி செய்வது? எந்த மொழியில்? சீனத்திலா, ஜப்பானிலா அல்லது அந்த சிறுவன் இருந்து வந்திருந்த சிறீலங்கா மொழியிலா? உண்மையிலே, எந்த மொழியில் சொல்லுவது? நான் 16 மணி நேரங்கள் உறங்கவில்லை மற்றும் நான் இன்னும் 15 மணி நேரத்தை ஹாங்காங் திரும்புவதற்கு செலவிட வேண்டி இருந்தது. அது பார்த்துக் கொண்டிருந்த கண்களின் மத்தியில் சித்திரவதையாக இருந்தது. நான் எனது கண்களை மூடி உறங்க முயற்சித்தேன்; என்னால் முடியவில்லை. இன்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த, உறக்கம் அற்ற அந்த ஆண்கள் மற்றும் பெண்களின் பிம்பங்களை என்னால் பார்க்க முடிந்தது.

ஜாஃபர் பனாஹி (யிணீயீணீக்ஷீ றிணீஸீணீலீவீ)


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved