World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

Chemical explosion in Toulouse, France leaves at least 29 dead

பிரான்சிலுள்ள துலூஸ் நகரின் இரசாயன தொழிற்சாலையின் நிகழ்ந்த வெடிப்பு குறைந்தது 29 பேரின் மரணத்திற்கு இட்டுச்சென்றது.

By Marianne Arens and François Thull
25 September 2001

Back to screen version

செப்டம்பர் 21, வெள்ளி அன்று காலை 10:18 மணிக்கு பிரெஞ்சு நகரமான துலூஸ் ஒரு அழிவுகரமான இரசாயன தொழிற்சாலை வெடிப்பினால் அதிர்ச்சியடைந்தது. அதில் AZF உர உற்பத்தி தொழிற்சாலைக் கட்டிடத்தின் இரண்டு உற்பத்தி பகுதிகளும் AtoFina இன் ஒரு கிளையும் மிகப்பெரும் எரிபொருள் நிறுவனமான Total Fina Elf இன் பகுதியும் ஆகாயத்தில் பறந்து காற்றுள் கலந்தது. ஆரம்ப அறிக்கையின்படி இதில் 29 பேர் மரணம் அடைந்தனர், 34 பேர் படுகாயமடைந்தனர். மொத்தமாக 2,400 பேர் காயமடைந்தனர்.இவர்களில் பலர் வெடிப்பிலிருந்து நொருங்கி மேலெழுந்து பறந்த கண்ணாடித் துண்டுகளினால் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகினர். ஞாயிறு பிற்பகல் 5 மணியளவில் 5 இரசாயன தொழிலாளர்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதில் இறந்தவர்களுள் 15 வயதுடைய பையனும் உள்ளடங்குவான்.

இத் தொழிற்சாலையில் 460 தொழிலாளர்கள் வரை பல சுழற்சி-வேலை முறையில் வேலைசெய்துவந்தனர். அங்கு சமூகமளித்திருந்த தொழிலாளர்கள் இப்பெரும் வெடிப்பினால் தப்பித்துச் செல்ல சந்தர்ப்பமேதும் இன்றி அடைபட்டுப் போயினர். இரண்டு புகைபோக்கிகள் உடைந்து நொருங்கின, அவ்விரு தொழிற்கூடங்களின் மத்திய வெடிப்பு பகுதி 10 மீற்றர் ஆழமானதும் 50 மீற்றர் அகலமானதுமான குழியினை ஏற்படுத்தியிருந்தது. இவ்வெடிப்பு உருவாக்கிய அமுக்கமானது வாகனங்களை ஆகாயத்தில் தூக்கியெறியும் அளவுக்கு போதுமானதாக இருந்தது, இதன் காரணமாக அருகாமையில் இருந்த ஒரு வியாபார மையம் இடிந்து நொருங்கியதுடன் சுற்று வட்டாரத்ததில் இருந்த எல்லாக் கட்டிடங்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியது.

5 கிலோ மீற்றர் சுற்றுவட்டாரத்திலுள்ள யன்னல்கள் உடைந்து நொருங்கியதுடன் அயலில் இருந்த ஒரு உயர்நிலைப் பாடசாலையின் பல மாணவர்களும் காயமடைந்தனர். நகரின் தெற்கு நோக்கிச் செல்லும் வாகனசாலை செங்கல் மற்றும் தூசு மழையினால் மூழ்கியழிந்தது, இதனால் பல எண்ணிக்ககையில் வாகனங்கள் சேதமடைந்ததுடன் அவற்றின் சாரதிகளும் காயமுற்றனர்.

இவ் வெடிப்பானது அது நடந்த இடத்ததிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள நகர மையத்தில் பீதியை உருவாக்கியது. நகரத்தினை நோக்கி பரவிய அமோனியா நாற்றமுடைய மிகப் பெரிய செந்நிற வாயு மண்டலத்தினால் தொலைத்தொடர்பு இணைப்புக்கள் முற்றிலும் சேதமடைந்தது. நகர மையத்தில் வாயு முகமூடி வினியோகிக்கப்பட்டதுடன் வாயு (Gas) பரவியதன் காரணமாக சுரங்க ரயில்வேகளிலிருந்து (Metro System) மக்கள் வெளியாற்றப்பட்டனர். நகர சபை, கதவுகளையும் யன்னல்களையும் பூட்டியபடி வீட்டிற்குள் இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது-- ஆனால் இதில் பிரச்சனைக்கு உள்ளாகியவர்கள் ஏற்கனவே நொருங்கிப்போயிருந்த யன்னல்கள் கொண்ட வீட்டுச் சொந்தக்காரர்களே.

Toulouse-Blagnac விமான நிலையமும் மத்திய ரயில் நிலையமும் மூடப்பட்டதுடன், 90 பாடசாலைகளில் இருந்தோர் வெளியேற்றப்பட்டனர். குழாய் குடிநீரை குடிப்பதைத் தவிர்க்குமாறும், சாத்தியமான அளவுக்கு குறைவாக நீரைப் பாவிக்கும் படியும் மக்களுக்கு வானொலி மூலமாக அறிவுறுத்தப்பட்டது. அங்கு வசிக்கும் பலர் அவர்களது கார்களில் வெளியேற முயன்றபோது, தெற்கு பகுதிக்குசெல்லும் பிரதான வீதியிலும் மத்தியநகர சுற்றுப் பாதையிலும் திடீரென பொலிசாரின் சாலை மறியலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இவ்வெடிப்பினாலும் இதனைத் தொடர்ந்து வந்த உயரமுக்க அலையினாலும் ஏற்பட்ட பாதிப்பு பல நூறுகோடி பிராங்குகளை தாண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வெடிப்பானது 80 கிலோமீற்றருக்கு அப்பால் உணரப்பட்டது. புவி அதிர்வின் விளைவுகள் Strasbourg நகரில் உள்ள புவியியல் ஆய்வு நிலையத்தினால் அளவிடப்பட்டது. இவ்வெடிப்பு 3.4 பாகையாக [3.4. Richter scale] பதிவு செய்யப்பட்டது. துலூசில் நடந்த வெடிப்பானது நவீன தொழிற்துறை வரலாற்றில் நடந்த மிகப் பெரிய வெடிப்புகளில் ஒன்றாகும். இது 1921 இல் ஜேர்மனியில் Oppau Nitrogen தொழிற்துறையில் நடந்த 500 பேரினை காவுகொண்ட வெடிப்புடனும், 1984 இல் இந்தியாவிலுள்ள போபாலில் Union Carbide இல் ஏற்பட்ட ஆயிரக்கணக்கானோரை மரணமடையச் செய்த இரசாயனக் கசிவு விபத்துடனும் ஒப்பிடத்தக்கதாகும்.

உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீது தாக்குதல் நடந்த 10 நாட்க்களின் பின்னர், அரசியல் வாதிகளாலும் பத்திரிகைகளாலும் பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரம் ஊக்கப்படுத்தப்படும் இவ் வேளையில்; இதையிட்ட உள்ளூர் மக்களின் ஆரம்பப் பிரதிபலிப்பானது ஒரு பயங்கரவாத தாக்குதல் பீதியாக இருந்ததையிட்டு ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப் பேரழிவு நடந்த இடத்திற்கு விரைந்த பிரான்சின் பிரதமர் லியொனல் ஜொஸ்ப்பன், அங்கு கருத்துக்கூறுகையில், இவ் வெடிப்பு "ஒருவேளை ஒரு விபத்தின் விளைவில்லாததாக இருக்கலாம்" என்பதற்கான சாத்தியங்களை மறுக்கமுடியாது என குறிப்பிட்டார்.

இன்று முதலாளித்துவத்தின் கீழ், பயங்கரவாத தாக்குதல்களை கருத்திற்கொள்ளாது பார்க்குமிடத்தும், பயங்கர பேரழிவுகளுக்கான சாத்தியங்கள் உள்ளடங்கியிருப்பதற்கு இந்த துலூஸ் தொழிற்சாலையின் நிலைமையானது ஒரு சிறந்த உதாரணமாகும். கடந்த வெள்ளியன்று நடந்த வெடிப்பு அவ்விடத்திற்கு அருகில் அமைந்துள்ள மற்றைய ஆபத்தான இரசாயன தொழிற்சாலைகளுக்கு, உதாரணமாக, உயர் எரிபற்று நிலை கொண்ட Ariane ஏவுகணைகளுக்கான எரிபொருளை உற்பத்தி செய்யும் SNPE (National Society for Powder and Explosives) இற்கு சொந்தமான வெடிமருந்துத் தொழிற்சாலைக்கு பரவியிருக்குமாயின், உண்மையில் நூற்றுக்கணக்கானோர் இறந்திருப்பார்கள். ஏனெனில் துலூஸ் பிரான்சின் வான்வெளி மற்றும் விண்வெளி தொழிற்துறை நகரமாகும்.

பல வருடங்களாக பெற்ரோலிய இரசாயன தொழிற்சாலையான AZF ஒரு வெடிக்ககூடிய நேர-வெடிகுண்டாக கருதப்பட்டு வந்துள்ளது. இத் தொழிற்சாலையின் ஆபத்தான நிலமை நன்றாக அறியப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக அடிப்படையான கவலை இருந்ததுடன் இதையிட்ட விவாதங்களும் ஒவ்வொரு உள்ளூர் தேர்தல் நேரங்களிலும் நடைபெற்று வந்துள்ளன. இத் தொழிற்சாலை 1,250 தொழிலாளர் பட்டியலைக் கொண்டதாகவும் பிரான்சில் இணைப்புத் தொழிற்சாலையாகவும் உள்ளதுடன் "Seveso-II" வகையினதாக மதிப்பிடப்பட்டிருந்தது, இதைவிட இன்னும் 400 தொழிற்சாலைகள் ஒரு விபத்து நடைபெறும் பட்சத்தில் சுற்றுச்சூழலுக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது.

கடந்த வருடம், அரச தொலைக்காட்சி இத் தொழிற்சாலையின் பிரச்சனைகள் பற்றிய, பாதுகாப்பு அதிகாரிகளினது அறிக்கை இத்தொழிற்சாலை ஆபத்தை உள்ளடக்கியிருப்பதாக குறிப்பிட்டது. அவ் அறிக்கை ஒரு வெடிப்பு நிகழக்கூடிய ஆபத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. NZZ-Online என்னும் செய்தி ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, தொழிற்சாலைப் பாதுகாப்பு நிபுணர்களுக்கு தொழிற்சாலையில் கசிவு ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரமே எச்சரிக்கைத் தகவல் கிடைத்திருந்தது. இதனூடாக ஊடக திரவ அமோனியா வாயு வெளியேறியிருக்க முடிந்திருக்கும்.

பிரெஞ்சு இரசாயனத் தொழிலாளர் தொழிற்சங்கமான FCE-CFDT இவ் இரசாயனத் தொழிற்சாலையின் விபத்து "பரந்த அளவிலான செலவு வெட்டினை உருவாக்குமா" என்பது பற்றி ஒரு விசாரணையை நடாத்தி முடிப்பதற்கு அழைப்புவிடுத்திருந்தது. கடந்த வருடங்களில் இத் தொழிற்சாலையில் பல வேலை வெட்டுகள் இடம்பெற்றன அத்துடன் ஒருபகுதி பாதுகாப்பு விசாரணைகள் ஒரு தனியார் நிறுவனத்திடம் கைமாற்றப்பட்டது. எப்படியிருந்தபோதிலும் இதுவரை தொழிற்சங்கங்கள் தொழிற்சாலையின் வசதி நிலைமைகள் சம்பந்தமான எந்தவொரு பிரச்சனைகளுக்கும் கவனம் செலுத்துவதற்கு அழைப்பு விடுக்கவில்லை.

மூவாயிரம் தொன் அளவிலான அமோனியம் நைதிரேற்று தொழிற்சாலையில் சேமிக்கப்பட்டிருந்தது. இவ் வெடிப்பிற்கான காரணத்தையிட்டு தெளிவற்ற நிலை பேணப்பட்டுவரும் இவ்வேளையில் வெடிக்கும் தன்மை வாய்ந்த அமோனியம் நைதிரேற்று எண்ணெய் அல்லது நிலக்கரி போன்ற இரசாயனப் பொருட்களுடன் வழிந்து பரவும்போது அல்லது அருகில் கொண்டுவரப்படும்போது வெடிப்பு நிகழும் என்பது யாவரும் நன்றாக அறிந்தவிடையமாகும்.

இக்காரணத்தினால், உள்ளூர் வாசிகள் மீண்டும் மீண்டும் உள்ளூரிலேயே பெரிய உரத் தொழிற்சாலையான AZF இனை இப்பிராந்தியத்திலிருந்தே வெளியேற்றக் கோரிக்கை விடுக்கினறனர். 1924ல் இந்த தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டபோது இப்பகுதி மிகவும் ஒரு ஒதுக்குப்புற பிரதேசமாக இருந்தது. ஆயினும் இனறு தொழிற்சாலையானது தடையற்ற வீதிகளிற்கு அருகில் அமைந்துள்ளதாயும், அடர்த்தியான சனத்தொகையுடைய புறநகர் பகுதியாகவும் அத்தோடு ஏழைக் குடும்பங்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு நீண்ட வரிசையிலமைந்த கட்டிட வீடுகளும் பாடசாலைகளும் அமைந்துள்ள நகராக Le Mirail உள்ளது. துலூசில் உள்ள தொழிற்சாலையை முற்றாக மூடிவிடப்போவதாகவும் அதை போலந்திற்கு மாற்றிவிடப் போவதாகவும் மிரட்டுவதன் மூலம் Total Fina Elf குடியிருப்போரின் அழுத்தத்திற்கு பதிலளித்தது. வெள்ளியன்று, பிரான்சின் பிரதம மந்திரி லியொனல் ஜொஸ்பன் மேற்கூறியகருத்தை தனிப்பட்ட முறையில் விளக்குகையில், இரசாயன தொழிற்சாலை அவரவர் விருப்பத்திற்கு இடம் மாற்றுவதற்கு அது ஒரு நடமாடும் விரைவு உணவகம் (fast food ) அல்ல எனக் குறிப்பிட்டார்.

பெரிய எரிசக்தி நிறுவனங்களைக் குறித்த அரசின் மனோபாவம் புதியதல்ல. அரசு எப்போதுமே Total Fina Elf மிகவும் அன்புடனேயே நடாத்தி வந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர், எண்ணைக் கொள்கலன் கப்பலான Erika மூழ்கிச் சிதைந்து போனபோது, இதன் உரிமையாளரான Total Fina Elf சுற்றுச்சூழல் அழிவு விளைவின் நஸ்ட ஈட்டுத் தொகையை செலுத்த மறுத்தபோது அதனை ஜொஸ்பனது அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

சனிக்கிழமையன்று Le Mirail புறகர் பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் அவர்களது வீடுகளுக்கு செல்ல மறுத்தார்கள். அவர்கள் சேதமடைந்த அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிந்துகொட்டுமென பயந்தனர். இறுதியில் உள்ளூர் நிர்வாகங்கள் குடியிருப்பாளர்களின் எதிர்ப்பிற்கு பணிந்து உடனடி மாற்று இருப்பிட வசதி அளிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved