World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

The political significance of Israel's assassination policy

இஸ்ரேலின் படுகொலை கொள்கையின் அரசியல் முக்கியத்துவம்

By the WSWS editorial board
7 September 2001

Back to screen version

விடயங்களை சரியான பெயரால் அழைப்பதற்கும் மேற்கு கரையிலும் காஸா கரையிலும் என்ன இடம்பெறுகின்றது என்பதை அம்பலப்படுத்துவதற்கும் தருணம் இதுவே. இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவுடன் ஒரு படுகொலைக் கொள்கையை அமுல் செய்து கொண்டுள்ளது. பாலஸ்தீன தேசிய இயக்கத்தின் அடிக்கட்டுமானத்தை உடைத்து எறிவதை அது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழித்துக்கட்டுவதற்காக பாலஸ்தீனத் தலைவர்கள் பின்தொடரப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றார்கள் என்ற கூற்று ஒரு பெரிதும் பரந்த இலக்குகள் கொண்ட ஒரு கொள்கையின் மூடு திரையேயன்றி வேறொன்றும் அல்ல. இஸ்ரேலிய அரசு தலைமையை சிரச்சேதம் செய்யவும் முழு பாலஸ்தீனிய சனத்தொகையை பயமுறுத்தவும் பெரிதும் நவீனமயமான இராணுவ, தொழில் நுட்ப சாதனங்களை கையாள்கின்றது. எதுவிதத்திலும் ஒரு சுயாதீனமான பாலஸ்தீன அரசின் தோற்றத்தை தடுப்பதே அடிப்படை நோக்கமாக உள்ளது.

சாத்தியமான பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராகவே இஸ்ரேல் இலக்கு வைத்த கொலைகளை தற்காப்பு உபாயமாக பயன்படுத்துகின்றது என்ற கோரிக்கை பெரிதும் பொய்யானது என்பதை புஷ் நிர்வாகம் நன்கு அறியும். அமெரிக்க அரசாங்கமும் அமெரிக்க தொடர்புச் சாதனங்களும் ஏனைய எண்ணற்ற லிபரல் அமைப்புக்களும் அரச படுகொலை கொள்கையின் பங்காளர்களாக உள்ளனர்.

கடந்த இரண்டு வாரச் சம்பவங்கள், கடந்த ஓராண்டு காலமாக இஸ்ரேலினால் அமுல் செய்யப்பட்ட ஒரு தொகை கொலைகளின் பின்னணியில் உள்ள நிச நோக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஆகஸ்ட் 27ம் திகதி இஸ்ரேலிய ஹெலிகொப்டர்கள் லேசரால் (Laser) நெறிப்படுத்தப்பட்ட இரண்டு ஏவுகணைகளை பாலஸ்தீன மக்கள் விடுதலை இயக்கத்தின் (Popular Front for the Liberation of Palestine) தலைவரான அபு அலி முஸ்தபாவின் மேற்கு கரை அலுவலகத்தினுள் வெடிக்க வைத்தது. பீ.எல்.ஓ. இயக்கத்தின் ஐந்து உயர் அதிகாரிகளில் ஒருவரான முஸ்தபா சமீபத்தில இஸ்ரேலிய படுகொலை அலைவீச்சினால் ஒழித்துக்கட்டப்பட்ட உயர்தர பாலஸ்தீனியர் ஆவார்.

நான்கு நாட்களின் பின்னர் இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனிய விடுதலை இயக்க ஜனநாயக முன்னணியின் (DFLP) தலைவரான காயிஸ் அபு லீலாவை கொலை செய்ய முயன்றனர். டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மேற்கு கரையில் உள்ள ரமல்லா நகர் பாலஸ்தீன விடுதலை இயக்க ஜனநாயக முன்னணியின் (DFLP) தலைவரின் வீட்டுக்குள் சிதறி வெடித்தது. ஆனால் லீலா அச்சமயத்தில் வீட்டில் இருக்கவில்லை.

இஸ்ரேலிய முதலாளி வர்க்கம் நிஜ அரசியலை அதன் பெரிதும் தீவிரமானதும் காட்டுமிராண்டித் தனமானதுமான வடிவில் கடைப்பிடிக்கும் அயோக்கியன் ஆகும். உலகில் உள்ள வேறு எந்த ஒரு அரசும் கொலையையும் அடக்குமுறையையும் ஆட்சிக்கான சட்டரீதியான கருவிகளாக அப்பட்டமாக பேணிப் பாதுகாத்தது கிடையாது. இஸ்ரேல் மிகவும் முன்னேறிய தொழில்நுட்ப சாதனங்களை -செயற்கை கோளை அடிப்படையாகக் கொண்ட செய்திப் போக்குவரத்து, உளவுத் தகவல் சேர்ப்பு, இலக்கு வைப்பு, ஸ்மாட் ஏவுகணைகள், தாக்குதல் கலை ஹெலிகொப்டர்கள்- கொண்டு பாலஸ்தீனியர்களிடையேயான முன்னணி அரசியல் எதிரிகளை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்கிறது. முழு அரசியல் தரங்களில் உள்ளவர்களையும் ஒழித்துக் கட்டுவதற்காக முன்னர் ஒரு போதும் தொழில்நுட்பம் இந்த விதத்தில் அப்பட்டமாகவும் வீரியம் மிக்க முறையிலும் பயன்படுத்தப்பட்டது இல்லை.

அத்தகைய வழிமுறைகள் மூலம் இஸ்ரேல் பாலஸ்தீனிய நிலத்திலான அதனது ஆக்கிரமிப்புக்கு எதிராக எந்த ஒரு ஒருங்கமைக்கப்பட்டதும் அரசியல் ரீதியிலானதுமான போராட்டத்தை முடியாததாக்கிவிட முயற்சிக்கின்றது. பாலஸ்தீனிய தலைவர்கள் ஒழித்துக் கட்டப்படுவதை தவிர்ப்பதற்காக நாளாந்தம் பாதுகாப்பான இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாறிச் செல்ல நெருக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கூட்டங்களை நடாத்த முடியாதுள்ளது. அவர்களது போக்குவரத்து தொடர்புகள் -தொலைபேசி, ஈ-மெயில், பக்ஸ்- இடைமறிக்கப்பட்டு சிதறடிக்கப்படுகின்றது. அவர்கள் ஒரு அரை-தலைமறைவு வாழ்க்கையையே நடாத்துகின்றனர். இந்நிலைமைகளின் கீழ் எதிரி பிரமாண்டமான இராணுவ, பொருளாதார சக்தியை அனுபவிக்கின்றான்.

இந்த விதத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் முழு அரபு உலகிலும் உள்ள சகல சியோனிச எதிர்ப்பு இயக்கங்களையும் கலைக்கவும் இறுதியில் அவற்றின் தலைவர்களைத் துடைத்துக் கட்டவும் முயற்சிக்கின்றது. இஸ்ரேலிய அதிகாரிகளின் செய்தி தெளிவானது: இஸ்ரேலிய அரசின் அங்கீகாரம் பெறாத எவரும் உயிர் பிழைத்து இருக்க முடியாது.

முதலிடத்தில் அரச கொலையின் உதவியை நாடுதலானது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையிலும் காஸா கரையிலும் பரந்த எதிர்ப்பு போராட்டங்கள் வெடிப்பதன் பேரில் இஸ்ரேலிய அமைப்பு கொண்டுள்ள அக்கறையை காட்டுகின்றது. இரண்டாவது இன்ரிபாடா (Intefada) கடந்த செப்டம்பரில் காம்ப் டேவிட் இஸ்ரேலிய-பாலஸ்தீன உச்சி மாநாட்டு வீழ்ச்சியையும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற இஸ்ரேலிய ஆத்திரமூட்டல்களின் பின்னரும் ஆரம்பமாகியது.

இன்றைய கொள்கை ஒரு திட்டவட்டமான பாணியை கொண்டுள்ளது. 1988 ஏப்பிரலில்-ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் முதலாவது இன்ரிபாடா வெடித்து ஒரு நான்கு மாதங்களின் பின்னர் ஒரு இஸ்ரேலிய கொலைகாரப் படை துனிசிய தலைநகரான துனீஸில் (TUNIS) உள்ள அபு ஜிகாத்தின் வீட்டினுள் நுழைந்து பாலஸ்தீனிய இயக்கத்தின் இராணுவ, அரசியல் தலைவரை சுட்டு வீழ்த்தியது. கலீல் அல் வாசீர் என்ற இயற்பெயர் கொண்ட அபு ஜிகாத் அல்பாத்தாவின் (Alfatah) ஸ்தாபகரும் யசீர் அரபாத்தின் நெருங்கிய அரசியல் சகாவுமாவார்.

அபு ஜிகாத் துனீசில் உள்ள பீ.எல்.ஓ.வின் நாடுகடந்த தலைமையகத்தில் இருந்து இன்ரிபாடாவை அணிதிரட்டுவதிலும் நெறிப்படுத்துவதிலும் ஒரு மையப் பாத்திரம் வகித்தவர். அவர் இஸ்ரேலிய இராணுவத்தினதும் மொசாட் உளவுப் பொலிஸ் படையாலும் கொலை செய்யப்பட்டமை, மக்கள் கிளர்ச்சியின் உச்சக் கட்டத்தில் இடம்பெற்றது.

1997ல் இஸ்ரேலிய புதினப் பத்திரிகையான மாரீவ் (Maariv) இதை அம்பலமாக்கியது. அன்றைய பிரதி இராணுவத் தளபதியாக விளங்கிய இகுட் பராக் இந்த படுகொலை நடவடிக்கையை துனிஸ் கரையோரமாக நிறுத்தப்பட்டு இருந்த ஒரு கடற்படை ஏவுகணைக் கப்பலில் இருந்த ஒரு கட்டளைத் தலைமை நிலையத்தில் இருந்து நடாத்தினார். பராக் 1999 மேயில் பிரதமர் ஆகினார். தொழிற் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு லிகுட் கட்சி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடித்தார். கடந்த பெப்பிரவரியில் இவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு லிகுட் கட்சியின் கடும் போக்காளரான ஏரியல் ஷரோனினால் பதிலீடு செய்யப்பட்டார்.

அபு ஜிகாத்தின் படுகொலையில் பராக்கின் பங்கு இஸ்ரேலிய சியோனிச அமைப்பின் சகல கன்னைகளும் -சமாதானப் புறாக்கள் எனப்படுவோரும் அத்தோடு இஸ்ரேலிய விஸ்தரிப்பு வாதத்தின் அப்பட்டமான ஆதரவாளர்களும் அரச கொலைகள், பரந்தளவிலான பயங்கரங்களின் கொள்கைகளுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டிருந்தனர் என்பதை தெளிவுபடுத்துகின்றது. இது அரசியல் படுகொலைகளுக்கான இன்றைய பயணப்பாதை தொழிற் கட்சியினதும் அத்தோடு லிகுட் கட்சியினதும் ஆதரவைக் கொண்டுள்ள பாலஸ்தீனிய தேசிய இயக்கத்தை (PNM) ஒழித்துக் கட்டும் மூலோபாயத்தின் ஒரு பாகமாகும் என்ற உண்மையை நிரூபிக்கின்றது.

பீ.எல்.ஓ. தலைவர் யசீர் அரபாத்தின் சகல சகாக்களையும் ஒழித்துக்கட்டுவதன் மூலம் அவரைத் தனிமைப்படுத்துவது இக்கொள்கையின் ஒரு நிலையான பண்பாக விளங்கியது.

ஊடுருவலிலும் கொலைகளிலும் பராக்கின் சொந்த சாதனைகள் இஸ்ரேலிய இராணுவத்தின் ஆரம்ப காலங்கள் வரை செல்கிறது. 1973ல் அவர் ஒரு பெண்ணாக மாறுவேடம் பூண்டு வெடிபொருள் நிரப்பிய பேர்சையும் (Purse) கொண்டிருந்ததோடு அவர் மூன்று முன்னணி பீ.எல்.ஓ. அதிகாரிகளை கொலை செய்த படுகொலை பிரிவை வழிநடாத்தியும் சென்றார்.

அரசியல் கொலைகள் -1995ல் மால்டாவில் இஸ்லாமிய ஜிகாத் தலைவர் பத்தி சகாகியை கொலை செய்தது உட்பட- இஸ்ரேலிய கொள்கையின் நிரந்தர அம்சமாக இருந்து வந்துள்ளது. அத்தகைய விதிமுறைகள் ஏகாதிபத்திய சக்திகளால் பல தசாப்தங்களாக நடாத்தப்பட்டு வந்த ஆயுதக் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளால் ஒரு பாகமாக விளங்கியது. தென்கிழக்கு ஆசியாவிலும் வேறு இடங்களிலும் அமெரிக்கா உட்பட இதைச் செய்துள்ளது. அவை உபாயம் என்ற வகையறாவினுள்- ஊடுருவல், ஆத்திரமமூட்டல், படுகொலை, பயங்கரம்- அடங்கும். இது இந்தக் கணத்தில் உள்ள நிபுணர்கள் அழைக்கும் "ஆழம் குறைவான போர்முறைகள்" என்ற வகையைச் சேர்ந்தது.

முன்னொரு போதும் இல்லாதது என்னவெனில் இந்த விதிமுறைகள் இஸ்ரேலும் அதனது அமெரிக்க ஆதரவாளர்களாலும் வெளிவெளியாக பேணிக் காக்கப்படும் விதமேயாகும்.

13 மாதங்களின் முன்னர் காம்ப் டேவிட் ஒப்பந்தம் வீழ்ச்சி கண்டதில் இருந்து இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனியர்களின் பதில் நடவடிக்கையை தூண்டும் வகையிலான இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் ஆத்திரமூட்டல்களையும் கடைப்பிடித்தது. அப்போது அது இவற்றை படுகொலைகளுக்கும் பாலஸ்தீன ஆட்சி மீதான மேலாய தாக்குதல்களுக்குமான நியாயப்படுத்தலாக பயன்படுத்தியது. 2000ம் ஆண்டு செப்டம்பரில் ஜெருசலேம் பழைய நகரிலுள்ள டெம்பில் மவுன்டுக்கு (Temple Mount) ஷரோன் தூண்டிவிடும் விஷயத்தை மேற்கொண்டதை பேணிய போது பராக் இக்கொள்கைக்கு தனது ஆதரவை வழங்கினார்.

ஷரோன் பொலிஸ், படையாட்கள் சகிதம் சென்றபோது அதற்கு எதிராக தன்னியல்பான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இஸ்ரேலிய பொலிஸ், அல் அகுசா பள்ளிவாசலை (Al Aqsa mosque) முற்றுகையிட்டது. கல்வீச்சில் ஈடுபட்ட தொழுகை செய்தவர்கள் மீது நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரத்தம் தோய்ந்த ஆத்திரமூட்டல் வேறு ஒரு தொகை ஆர்ப்பாட்டங்களை வெடிக்கச் செய்தது. இதற்கு இஸ்ரேல் டாங்கிகளையும் தாக்குதல் ஹெலிகொப்டர்களையும் உயிர் ஆயுதங்களையும் பாவித்தது. இன்ரிபாடாவின் முதல் வாரத்தினுள் இஸ்ரேல் குறைந்தது 60 பாலஸ்தீனியர்களை கொன்றதோடு 1500க்கும் அதிகமானோரை காயப்படுத்தியது.

ஷரோன் உலகின் முன்னணி "புதிய உண்மைகளை" சிருஷ்டிக்கும் கொள்கையை விளக்குபவர்களில் ஒருவர். அவர் முன்னணியில் நின்றுவந்த தீர்வு கொள்கையின் நோக்கம் இதுவேதான். நீண்ட காலமாக பாலஸ்தீனம் எனக் கருதப்பட்டுவந்த ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒரு பெருமளவிலான இஸ்ரேலின் பிரசன்னத்தை சிருஷ்டிப்பதே இலக்காக விளங்கியது. இப்போது அவர் ஒரு புதிய தொகையான உண்மைகளை -ஒரு சுயாதீனமான பாலஸ்தீன தலைமையின்மையை- சிருஷ்டிக்கப் பார்க்கிறார்.

பாலஸ்தீன தலைமையை துடைத்துக் கட்டும் தமது இயக்கத்தைப் பேணும் பொருட்டு இஸ்ரேலிய அதிகாரிகள் குறைகாண்கின்றதனதும் மோசடியினதும் கலவையாக கையாள்கின்றனர். ஒரு உபாயம் "பெரிய பொய்யின்" ஒரு மாறியாகும். அதாவது, நீங்கள் பொறுப்பான குற்றத்துக்காக உங்கள் எதிரியை குற்றம்சாட்டுவதாகும்.

இதன் மூலம் இஸ்ரேல் தனது கோரிக்கைகள் அமெரிக்கப் பத்திரிகைகள் மூலம் கிளிப்பிள்ளை ஆட்டமாக எடுத்துக் கூறப்படும் என்ற அறிவைக் கொண்டுள்ளது. பாலஸ்தீனியர்களை வன்முறைகளை ஆரம்பித்து வைப்பதாக குற்றம்சாட்டுகிறது. சகல விமர்சகர்களையும் யூத எதிர்ப்பு விதிமுறைகளாக பெயர்சூட்டுகின்றது. சமீப நாட்களில் இஸ்ரேலியத் தலைவர்கள் பாலஸ்தீனியர்களை "இனச் சுத்திகரிப்பாளர்கள்" ஆக குற்றம் சாட்டும் அளவுக்கும் சென்றுள்ளனர்.

அரசியல் படுகொலைக் கொள்கைக்கான இஸ்ரேலிய நியாயப்படுத்தல் இறுதியான "கச்-22" (Catch-22) வாதமாகும். தாம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தயார் செய்பவர்களை மட்டுமே கொலை செய்வதாக அவர்கள் கூறிக் கொள்கின்றனர். தாக்குதல்களுக்கு இலக்கான பேர்வழிகள் குற்றம் சாட்டப்பட்டது போலவே குற்றவாளிகள் என்பதற்கு என்ன ஆதாரம்? இஸ்ரேலிய அரசு அவர்களைக் கொலை செய்ய தீர்மானம் செய்து கொண்டுள்ளது என்பதே உண்மை.

படுகொலைக்காக குறிவைக்கப்பட்டவர்களுக்கு எதிராக முன்வைக்கப்ட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு சுயாதீனமானதும் பரீட்சிக்கக் கூடியதுமான சாட்சிகள் எதுவுமே ஒருபோதும் முன்வைக்கப்பட்டது கிடையாது. இஸ்ரேலிய அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய முயன்றது கிடையாது. அவர்களை வழக்கு விசாரணைக்கு நிறுத்தி, அவர்களை ஒழித்துக் கட்டுவதற்கான நியாயங்களை முன்வைத்தது இல்லை. அதற்குப் பதிலாக இஸ்ரேலிய தாக்குதல் படைகளும் மொசாட்டும் (Mossad) நீதிபதிகளாகவும் யூரார்களாகவும், கொலையாளிகளாகவும் செயற்படுகின்றன.

இஸ்ரேல் அமெரிக்க இராணுவத்தினதும் உளவுக் கருவிகளதும் ஆதரவு இல்லாமலும் அமெரிக்க அரசியல், தொடர்பு சாதன அமைப்பின் அரசியல் ஆதரவு இன்றியும் அத்தகைய ஒரு இரத்த வெறிகொண்ட பாதையில் பயணம் செய்ய முடியாது. அமெரிக்கத் தொடர்பு சாதனங்களின் பெரும் பகுதியினர் இஸ்ரேலின் பாதுகாப்புக்காக துள்ளிக் குதிப்பதாக உள்ளது. வெறிபிடித்த பாலஸ்தீனிய எதிர்ப்பு கூச்சல்களை கையாள்கின்றனர். பாலஸ்தீனம் உயிர்வாழ்வதை ஒழித்துக் கட்ட முழு அளவிலான யுத்தம் கோரி அழைப்பு விடுக்கின்றனர்.

ஆகஸ்ட் நடுப்பகுதியில் அமெரிக்கப் பத்திரிகைகளில் இஸ்ரேலின் படுகொலை கொள்கையை பேணும் விதத்தில் வேறுபட்ட பிரச்சாரங்கள் வெடித்தன. ஒரு தொடர்ச்சியான மூன்று நாட்களில் வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) பாலஸ்தீனியர்களை நிலையான பயங்கரவாதிகளாக பட்டை தீட்டியதோடு இஸ்ரேலை பாலஸ்தீன ஆட்சியை ஒழித்துக் கட்டும் படியும் அரபு சனத்தொகையை நிலையாக கீழ்ப்படுத்தி வைக்கும் பொருட்டு பேர்லின் சுவர் பாணியில் ஒரு மதிலை கட்டும்படியும் நெருக்கியது.

ஆகஸ்ட் 15ம் திகதி வெளியான ஒரு கட்டுரையில் மைக்கேல் கெல்லி (Michael Kelly) எழுதியதாவது: "(இஸ்ரேல்) தனது நிபந்தனைகளின் கீழ் யுத்தத்தை நடாத்துவதன் மூலம் இஸ்ரேல் மீது யுத்தப் பிரகடனம் செய்து கொண்டுள்ள ஆயுதம் தாங்கிய பாலஸ்தீனிய படைகளை அழிக்கவும், கொல்லவும், பிடிக்கவும், வெளியேற்றவும் அளவு கடந்த சக்தியை (பவல் சித்தாந்தத்தில் கோஸ் (Gosh) என அழைக்கப்படுவது) வெளிப்படுத்தப்படுவதன் மூலமே வெற்றி கொள்ள முடியும்."

மறுநாள் சார்ள்ஸ் கிரத்தமர் (Charles Krauthammer) "ஒரு மின்னல் -பிரமாண்டமான தாக்குதலை அரபாத்தின் ஒவ்வொரு பொலிஸ் அரசு அமைப்பின் மீது நடாத்தும் படி உத்தரவிட்டார்! எட்டு பாதுகாப்பு சேவை தலைமை அலுவலகங்கள்; தளபதிகள் அலுவலகங்கள் அவரின் பொலிஸ் நிலையங்கள், ஆயுதக் களஞ்சியங்கள், பயிற்சி முகாம்கள், போக்குவரத்து, பிரச்சார வசதிகள் (வானொலி, தொலைக்காட்சி, அரசாங்க கட்டுப்பாட்டிலான புதினப் பத்திரிகைகள்) என்பவற்றுடன் சேர்த்து அரபாத்தின் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் கூட்டு தலைமை அலுவலகங்களும் சமகாலத்தில் தாக்கப்பட்டன." பாலஸ்தீன சனத்தொகையை இனச்சுத்திகரிப்பு செய்யும்படி கிரோத்தமர் அப்பட்டமாக அழைப்பு விடுத்தார். அவரது சுலோகத்தை தொகுத்துக் கூறுகையில்: "தாக்கி வெளியேற்று" (Strike and expel) என்றார்.

ஆகஸ்ட் 16ம் திகதி ஜோர்ஜ் வில் (George Will) இத்தகைய தீவிர குற்றச்சாட்டை முன்வைத்தார். அது பின்வரும் மருந்து சிட்டையை உள்ளடக்கிக் கொண்டு இருந்தது: "இஸ்ரேலுக்கு ஒரு சிறிய யுத்தமும் ஒரு பெரிய சுவரும்" அவசியமாகியுள்ளது.

இவர்களும் இன்னும் பல விமர்சகர்களும் பத்திரிகைகளிலும் சீ.என்.என். பொக்ஸ் தொலைக்காட்சி (Fox TV) சேவைகளிலும் உள்ளவர்கள் அமெரிக்காவில் உள்ள "நாம்" இஸ்ரேலை போன்ற ஒரு நிலைமைக்கு முகம் கொடுத்தால் இதையே செய்வோம் எனப் பிரகடனம் செய்து கொண்டிருந்தனர். இஸ்ரேலிய படுகொலைகளை பகிரங்கமாகப் பேணியவர் ஜனாதிபதி நிக்சனின் கீழ் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையின் வியட்னாமிய பிரதம சிற்பியாக விளங்கிய ஹென்றி கீசிங்கர் ஆவார்.

அமெரிக்க வெகுஜனத் தொடர்புச் சாதனங்களால் அரங்கேற்றப்பட்ட அனைத்துலக கூச்சலின் தன்மையை ஒருவர் கற்பனை செய்தே பார்க்க முடியும். பாலஸ்தீனத் தலைவர்கள் தாம் இரக்கமாகப் பதிலிறுக்க விரும்புவதாக அறிவித்தனர். படுகொலைகளையும் ஏனைய பயங்கரவாத நடவடிக்கைகளையும் திட்டமிடுவதிலும் அமுல் செய்வதிலும் ஈடுபட்டுள்ள இஸ்ரேலியர்களை இனங்கண்டு இலக்கு வைக்க வேண்டியுள்ளது என்றனர்.

அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலிய படுகொலைப் பிரச்சாரத்தை கடமைக்குச் செய்கின்ற வெளியான விமர்சனங்களோடு சந்தித்தது. இவை இடைநிலை இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளால் வெளியிடப்பட்டன. இத்துடன் புஷ் நிர்வாகத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் அமெரிக்க ஆதரவு வழங்குவது சம்பந்தமாக தனிப்பட்ட வாக்குறுதிகளை வழங்கி இருந்தனர். பாசாங்கு சொட்டும் விதத்திலான அமெரிக்க காட்டாப்பு கொலையை வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் அதனது சொந்த நடைமுறையை வாஷிங்டன் புத்துயிர் பெறச் செய்வதை சமிக்கை செய்கின்றது.

அதனது அரசியல் எதிரிகளை "வெளியே எடுப்பது" இஸ்ரேலுக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் அது அமெரிக்காவுக்கும் பிரயோகம் ஆகின்றது. ஷரொனின் கொலைக்கான வாஷிங்டனின் ஆதரவு 1961ல் கொங்கோவின் -சுதந்திரத் தலைவர் பட்ரிஸ் லுமும்பா சீ.ஐ.ஏ.யினால் படுகொலை செய்யப்பட்டமை, பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திரும்பத் திரும்ப முயற்சித்தமை, 1986ல் லிபியன் தலைவர் முவாமார் கடாபி (Muammar Gadhaffi) யின் வீட்டின் மீது குண்டு வீசியமை போன்ற அட்டூழியங்களுக்கு இட்டுச் சென்ற விதிமுறைகளை தள்ளிவைப்பதை உள்ளடக்கிக் கொண்டதற்கான சமிக்கையாகும்.

சீ.ஐ.ஏ. நடவடிக்கைகள் சம்பந்தமாக செனட்டர் பிராங் சேர்ச்சின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் விசாரணையைத் தொடர்ந்து 1970பதுகளில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் அரசியல் படுகொலைகள் வழக்கமாக தடை செய்யப்பட்டு இருந்தன. இன்று றீகன் நிர்வாகத்தைக் காட்டிலும் மிதமிஞ்சிய விதத்தில் மத்திய கிழக்கில் உள்ள தனது முக்கிய வாடிக்கை ஆட்சியாளர்களுக்கு (Client regime) ஆதரவளிக்கும் விதத்தில் அமெரிக்க அரசாங்கம் அதனது சொந்த சட்டங்களையே மீறுகின்றது. வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைக்கும் வறுமைக்கும் எதிரான பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை நசுக்குகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved