World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பால்கன்

German parliament votes to send troops to Macedonia

ஜேர்மன் பாராளுமன்றம் மசடோனியாவிற்கு இராணுவத்தை அனுப்ப வாக்களித்துள்ளது

By Peter Schwarz
31 August 2001

Back to screen version

புதன்கிழமை ஒரு விஷேட கூட்டத்தில் மசடோனியாவில் நேட்டோவின் நடவடிக்கையான ''முக்கிய அறுவடை'' [Essential Harvest] இல் ஜேர்மன் இராணுவத்தை கலந்துகொள்ள ஜேர்மன் பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது.

ஜேர்மன் அரசாங்கம், நேட்டோவின் நடவடிக்கையில் கலந்துகொள்ளும் பிரான்சினால் தலைமை தாங்கப்படும் படைப்பிரிவினருடன் 500 படையினரை இணைத்துக்கொள்ள கடந்த வியாழக்கிழமை முடிவெடுத்தது. ஆனால் இம்முடிவிற்கு 1994 இன் ஜேர்மன் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி பாராளுமன்றத்தின் அங்கீகாரம் தேவை.

ஆளும் சமூக ஜனநாயக் கட்சியினது ஒரு பிரிவினரும், கூட்டரசாங்கத்திலுள்ள பசுமைக் கட்சியினரில் சிலரும் இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக இருந்தாலும் இத்தீர்மானத்திற்கான பெரும்பான்மை கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. தாராளவாதக் கட்சியினர் கடந்த வாரமே இதற்கு ஆதரவான சமிக்கை காட்டிவிட்டனர். ஒரு பிரிவு உறுப்பினர்கள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்போதாக தெரிந்த பின்னர் எதிர்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக் கட்சியும் எதிர்க்கும் தனது முடிவை மாற்றி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

பால்கனில் பொஸ்னியாவிற்கும் கொஸவோவிற்கும் அடுத்ததாக இது ஜேர்மன் இராணுவத்தின் மூன்றாவது தலையீடு மட்டுமல்லாது அபாயகரமானதும் ஆகும். உத்தியோகபூர்வமாக இத்தலையீடு 30 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதன் நோக்கம் அல்பானிய தேசிய விடுதலை இராணுவம் சுயமாக திருப்பி கொடுக்கும் ஆயுதங்களை சேகரிப்பது என கூறப்படுகின்றது. ஆனால் நன்கு விபரம் தெரிந்த ஒரு இராணுவ அல்லது அரசியல் அவதானியும் இது அத்துடன் முடிவடைந்துவிடுமென நம்பவில்லை. ஆனால் இவ் ''அவசியமான அறுவடை'', பொஸ்னியாவிற்கும் கொஸவோவிற்கும் பின்னர் பால்க்கனில் நேட்டோவால் அமைக்கப்படும் மூன்றாவது ஆளுமைக்குரிய பிரதேசம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பிரதிநிதியான ஜேவியர் சோலானாவாலும், நேட்டோவின் பொதுச்செயலாளரான ஜோர்ஜ் றொபேட்சனாலும் தயாரிக்கப்பட்ட சமாதானத் திட்டமானது மசடோனிய பாராளுமன்றம் ஒன்றுகூடி அல்பானிய சிறுபான்மையினருக்கான உரிமைகளை வழங்கும் பட்சத்தில், அல்பானிய தேசிய விடுதலை இராணுவம் மூன்றில் ஒரு பகுதி ஆயுதங்களை கையளிக்கவேண்டும் என கூறுகின்றது. ஆனால் இது அல்பானிய தேசிய விடுதலை இராணுவத்திடம் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கை தொடர்பான முரண்பாடான தகவல்களாலேயே தோல்வியடைவதற்கான அபாயத்தை கொண்டுள்ளது. மசடோனிய அரசாங்கம் அவர்கள் 85.000 ஆயுதங்களை வைத்திருப்பதாக தெரிவிக்கையில், அல்பானிய தேசிய விடுதலை இராணுவம் தம்மிடம் 2000 உள்ளதாக தெரிவிக்கின்றது. நேட்டோ, அல்பானிய தேசிய விடுதலை இராணுவத்தின் தகவலுக்கு அண்மித்ததான 3.300 ஆயுதங்கள் உள்ளதாக வரையறுத்துள்ளது.

முன்னாள் நேட்டோவின் அதிகாரிகளே இத்தகவல் யதார்த்தமானதாக இல்லை என தெரிவித்ததுடன், அல்பானிய தேசிய விடுதலை இராணுவம் ஒரு சில நாட்களுக்குள் பிரச்சனை ஏதுமின்றி புதிய ஆயுதங்களை பெற்றுக்கொள்ளலாம். கடந்த சில நாட்களாக ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட கொஸவோவிற்குள் ஆயுதங்கள் திரும்ப கொண்டு செல்லப்பட்டுள்ளன. எனவே இவ் ஆயுதம் களையும் நடவடிக்கையானது தனது அர்த்தத்தை இழந்துள்ளது. அது ஒரு ''நம்பிக்கைக்குரிய நடவடிக்கையாகவும்'', ''அந்நாட்டின் அரசியல் வழிக்கு உதவவேண்டும்'' எனவும் நேட்டோவின் பேச்சாளரான Yves Brodeur தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில், நேட்டோவின் தலையீடானது எதிரான விளைவுகளை உருவாக்கி, மசடோனியாவின் உள்நாட்டு யுத்தத்தை தீவிரமயாக்குவதற்கான சாத்தியங்களே காணப்படுகின்றன.

அல்பானிய தேசிய விடுதலை இராணுவத்தின் இரட்டை வேடம்

அல்பானிய தேசிய விடுதலை இராணுவம் இரட்டை விளையாட்டில் ஈடுபட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக ''சமாதானத்திட்டத்திற்கு'' ஆதரவளிக்கையில், அதேவேளையில் முக்கியமான கலாச்சார, பொருளாராத நிலையங்களை நோக்கிய தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அண்மையில் Lesok நகரிலுள்ள தேவாலயத்தின் மீதும், Tetovo நகரத்தில் உள்ள வாகன அனுமதிபத்திரம் வழங்கும் அலுவலகத்தின் மீதும், Celopek நகரத்தில் உள்ள விடுதி ஒன்றினையும் தகர்த்துள்ளனர். இறுதித் தாக்குதலில் அவர்கள் மிகவும் மூர்க்கத்தனமாக ஈடுபட்டிருந்தனர். இரண்டு மசடோனிய விடுதி ஊழியர்கள் உயிருடன் குண்டுகள் இணைக்கப்பட்டு தூண்களில் சேர்த்துக்கட்டப்பட்டு வெடிக்கச்செய்யப்பட்டனர்.

அண்மையில் அல்பானிய தேசிய விடுதலை இராணுவத்திலிருந்து பிரிந்த ஒரு மாயமான அல்பானிய தேசிய இராணுவம் என்ற பெயரில் வெளிப்பட்டுள்ளது. இது சமாதான உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக எதிர்க்கின்றது. ஆனால் அல்பானிய தேசிய விடுதலை இராணுவம் இரண்டாக பிரிந்துள்ளதா அல்லது தங்களுக்கிடையில் தொழிற்பங்கீடு செய்துகொண்டுள்ளார்களா என்பது தெளிவாகவில்லை. எவ்வாறிருந்தபோதிலும் நேட்டோவோடு பகிரங்கமாக இணைந்து இயங்குகையில் பயங்கரவாத தாக்குதலை நடாத்துவதற்கு அல்பானிய தேசிய விடுதலை இராணுவத்தின் நிலைப்பாட்டிலிருந்து நோக்கும்போது இது அவர்களுக்கு இலாபமானது. ஆரம்பத்திலிருந்தே அவர்களின் தந்திரோபாயம் பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் ஸ்லாவிய, அல்பானிய மக்களிடையே உள்ள உறவை சீர்குலைப்பதும், அதன் மூலமாக நேட்டோவை நாட்டினுள் வரவழைப்பதாகவுமே இருந்தது.

கொஸவோவில் இப்படியான தந்திரோபாயம் அவர்களின் அமைப்பான Kosovo Liberation Army [KLA] இற்கு வெற்றியை கொடுத்தது. ஆரம்பத்தில் நேட்டோவால் பயங்கரவாதக்குழுவாக அழைக்கப்பட்டவர்கள் பின்னர் பேச்சுவார்த்தைக்கானவர்களாக உருவாக்கப்பட்டு இராணுவ ரீதியாக ஆயுதமயமாக்கப்பட்டனர். கொஸவோ தற்போது சேர்பியாவின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றாக விலக்கப்பட்டு நேட்டோவின் பாதுகாப்பினுள் இருப்பதுடன், அல்பானிய தேசிய விடுதலை இராணுவம் முன்னாள் சேர்பிய மாநிலத்தில் முக்கிய அதிகாரத்தை தன் கைகளில் பெற்றுக்கொண்டுள்ளது. இவ் இலக்கை அடைவதற்கு அது நேட்டோவின் உதவியில் பெருமளவில் தங்கியிருக்கவேண்டியிருந்தது.

இதேமாதிரியான நிலைமை மசடோனியாவிலும் அபிவிருத்தியடைந்துள்ளது. ஆரம்பத்தில் கூடியளவு கொஸவோவில் இருந்து அனுப்பப்பட்ட தனியான கெரில்லாக்குழுக்கள் தாக்குதலை நடாத்தின. தற்போது இந்நாடு ஒரு உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பிலுள்ளது. கொஸவோவில் போல், அல்பானிய மக்கள் மசடோனிய அரசாங்கத்திடம் அனுபவிக்கும் துன்பங்களை அல்பானிய தேசிய விடுதலை இராணுவம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. அல்பானிய தேசிய விடுதலை இராணுவத்தின் நடவடிக்கைகள் நிலைமையை மோசமடையச்செய்துள்ளதுடன், இது மசடோனியப் பகுதிகளில் தீவிர தேசியவாதிகளின் எழுச்சிக்கும் காரணமானது.

நேட்டோ இருபிரிவினருக்கும் இடையில் நிற்கின்றபோதும் நாடு உள்ளநாட்டு யுத்தத்தை நோக்கி இட்டுச்செல்லப்படுகின்றது. இப்போது அவமானகரமான பின்வாங்கல் அல்லது ஒரு பாரிய இராணுவத் தலையீடு என்ற இரு தீர்வுகளுக்கு இடையில் நேட்டோ அகப்பட்டுள்ளது. இறுதியில் மசடோனியா, அல்பானிய, மசடோனிய பகுதிகளாக பிரிவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. இது அல்பானிய தேசிய விடுதலை இராணுவத்தினது நோக்கங்களுக்கு சாதகமானதாகும்.

அல்பானிய தேசிய விடுதலை இராணுவம் நேட்டோவின் நேரடி விளைபொருளாகும். கொஸவோவில் உள்ள அல்பானிய தேசியவாதிகளுக்கான ஆயுதம் வழங்கியதன் மூலமும், ஆதரவின் மூலமும் மசடோனியாவில் கொஸவோ விடுதலை இராணுவத்தின் ஆதரவான அல்பானிய தேசிய விடுதலை இராணுவத்தினது நடவடிக்கைகளுக்கான நிலைமைகளை உருவாக்கியது. மிகவும் முக்கியமாக அல்பானிய தேசிய விடுதலை இராணுவத்துடன் இணைந்து இயங்குவதற்காக அமெரிக்கா மீது திரும்ப திரும்ப குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மசடோனிய மக்களால், நேட்டோ தமது சுதந்திரத்தை பறித்து நாட்டை இரண்டாக்க விரும்பும் அல்பானிய தேசியவாதிகளின் ஆதரவாளனாக நோக்கப்படுவதற்கு காரணமில்லாமலில்லை. இதனால்த்தான் கொஸவோவின் எல்லையில் நேட்டோவிற்கு எதிரான தடைகளும், ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன. ''அவசியமான அறுவடையின்'' முதல் பலி பிரித்தானிய இராணுவ வீரராவார். இவர் மசடோனிய இளைஞர்களால் இராணுவ வாகனத்தின் மீது எறியப்பட்ட கல்லினால் தாக்கப்பட்டு மரணமானார்.

நேட்டோவின் நோக்கம்

''அவசியமான அறுவடை'' நடவடிக்கையை பரந்த வரலாற்று உள்ளடக்கத்தில் நோக்கினால், அதன் உண்மையான நோக்கம் இப்பிராந்தியத்தில் சமாதானத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவதை விட வேறு என்பது தெளிவாகும்.

முன்னாள் யூகோஸ்லாவியாவின் உடைவின் பின்னர், மேற்குநாடுகள் திட்டவட்டமான நோக்கத்தின் அடிப்படையில் பால்கனில் வழமையாக தலையீடு செய்ததை காணக்கூடியதாக உள்ளது. முதலில் பிரிவினைவாத, தேசியவாத முரண்பாடுகளை தூண்டிவிட்டு பின்னர் அவை இரத்தம் தோய்ந்த மோதல்களாக உருவெடுக்கையில் இராணுவரீதியாக தலையீடு செய்தன. இத்தலையீடுகளின் மத்தியில் இருப்பது அவர்களின் பொருளாதார, மூலோபாய நலன்களாகும்.

விஷேடமாக, முன்னாள் யூகோஸ்லாவியாவுடன் நெருங்கிய உறவுகளை வைத்திருந்த ஜேர்மனி பால்கனை தனது வீட்டின் பின்புறமாக பார்க்கின்றது. கூடுதலான பால்கன் நாடுகளில் முக்கிய இரண்டாவது நாணயமாக ஜேர்மன் மார்க் [DM] புழக்கத்தில் இருப்பது தற்செயலானதல்ல.

1991 ஆம் ஆண்டில் குரோசியாவையும், சுலோவேனியாவையும் அவசரமாக அங்கீகரித்ததன் மூலம் பால்கன் பிரதேசத்தை சூறையாடிவரும் இரத்தம் தோய்ந்த மோதல்களை ஆரம்பித்து வைத்தது. முன்னாள் யூகோஸ்லாவியாவின் கீழ் இக்குடியரசுகளில் வசித்த சிறுபான்மையினர் ஒரளவிற்கு பாதுகாப்பை கொண்டிருந்தனர். இக்குடியரசின் உடைவுடன் அதனுள் இருந்த சிறுபான்மையினரின் உரிமைகள் இல்லாதுபோயின.

ஜேர்மனியின் கொள்கைகளின் விளைவு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் யூகோஸ்லாவியாவிற்கான பிரதிநிதியான Lord Carrington ஆலும், ஐக்கிய நாடுகளின் செயலாளரான Perez de Cuellar ஆலும், அமெரிக்க வெளிவிவகார செயலாளரான Cyrus Vance ஆலும் ஜேர்மன் வெளிநாட்டமைச்சரான Hans Dietrich Genscher இற்கு கடிதங்கள் எழுதப்பட்டு எச்சரிக்கப்பட்டபோதும் அவை வெற்றியளிக்கவில்லை. அன்றிலிருந்து பேர்லின் Ljubljana [சிலோவேனியா] விலும் Zagreb [குரோசியா] இலும் உள்ள அரசாங்கங்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மன் அரசாங்கத்தின் நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்கா, பொஸ்னியா-ஹேர்ஸகோவினாவின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. இது ஆயிரக்கணக்கானோரின் இறப்புக்கும், பத்தாயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேறக்காரணமானது. பொஸ்னிய உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக அச்சிறிய நாடு சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு மேற்கின் ஆக்கிரமிப்புப்படையினரின் காவலுக்குள்ளானது. மேற்கின் கவனத்திற்குள் வந்த அடுத்த நாடு சேர்பியாவாகும். பொஸ்னிய யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த டேய்ரன் உடன்படிக்கை நடைமுறைப்படுத்த உதவியளிக்க அதனிடம் கேட்கப்பட்டது. ஆனால் இப்பிராந்தியத்தை மேலும் துண்டாக்குவதற்கு அப்பிராந்தியத்தை கட்டுப்படுத்தும் சக்தியான சேர்பியா ஒரு தடையாக நோக்கப்பட்டது.

யூகோஸ்லாவியாவின் தலைவரான மிலோசிவிக் மேற்கின் முக்கிய எதிரியாக்கப்பட்டார். கொஸவோவில் அல்பானிய தேசியவாதத்திற்கு ஆதரவளிக்கப்பட்டது. சேர்பியா மேற்கின் கட்டுப்பாடுகளை ஏற்கமறுத்தபோது, நான்கு மாதம் குண்டுவீச்சுக்குள்ளானதுடன், மிலோசிவிக் இன் அரசாங்கம் தமக்கு சார்பான ஒரு அரசாங்கத்தால் மாற்றீடு செய்யப்பட்டது.

சுலோவேனியா, குரோசியா, கொஸவோவை போல் பல எச்சரிக்கைகள் செய்யப்பட்டன. முக்கியமாக 1991 இன் சுதந்திரத்திற்கு பின்னர் மசடோனிய, அல்பானிய மக்களுக்கு இடையிலான உறவின் ஸ்திரமற்ற நிலைமை தொடர்பாகவும், அல்பானிய தேசியவாதத்தை ஊக்குவிப்பது மசடோனியாவின் ஸ்திரமற்ற தன்மைக்கு வழியமைக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இன்றைய மசடோனியாவின் மோதல்கள் அண்மை நாடான அல்பானியாவிற்குள்ளும், பல்கேரியாவிற்குள்ளும், நேட்டோவின் அங்கத்தவ நாடுகளான கிறீஸ், துருக்கிக்குள்ளும் பரவுவதற்கான அபாயம் காணப்படுகின்றது.

மசடோனியாவின் மோதல்கள் ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும், முக்கியமாக ஜேர்மனியுடனுமான உறவுகளை முரண்பாட்டுக்கு இட்டுச்சென்றுள்ளது. ஐரோப்பிய பத்திரிகைகளில் அமெரிக்கா அல்பானிய தேசிய விடுதலை இராணுவத்திற்கு இரகசியமாக ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டியுள்ளதன் மூலம் இம்முரண்பாடுகள் வெளிப்பாடாகும்.

ஆரம்பத்தில் ''அவசியமான அறுவடை'' நடவடிக்கை மசடோனியாவை மேலும் ஸ்திரமற்றதாக செய்வதை தடுப்பதற்காக முதலில் நேட்டோவின் ஐரோப்பிய நாடுகளால் தான் முன்வைக்கப்பட்டது. நேட்டோவின் பாரிய நடவடிக்கை ஒன்றில் முதல்முறையாக அமெரிக்கா இராணுவரீதியாக முக்கிய பங்கு வகிக்கவில்லை. படைப்பிரிவின் முக்கிய தொகையானது பிரித்தானியாவாலும் அதைத்தொடர்ந்து பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஜேர்மனியாலும் அனுப்பப்படுகின்றது. அதிஉயர் கட்டளையிடும் அதிகாரியாக டென்மார்க்கை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா தன்னை ஆலோசனை வழங்குதலுடன் கட்டுப்படுத்திக்கொண்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக கலந்தகொள்பவர்களின் வழமைக்கு மாறான தன்மையும், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான முரண்பாடுகளும் ''அவசியமான அறுவடை'' நடவடிக்கையை ஒரு அதி உயர் அபாயத்திற்குரியதாக ஆக்கியுள்ளது. திங்கட்கிழமை பிரித்தானிய படைவீரர் கொல்லப்பட்டதானது உத்தியோகபூர்வமாக கூறப்படுவதை விட இராணுவத்தினது நிலைமையை மிகவும் அபாயத்திற்குள்ளாக்கியிருப்பதை காட்டுகின்றது.

ஜேர்மன் பாராளுமன்றத்தின் விவாதம்

பாராளுமன்ற விவாதத்தில் இக்கேள்விகள் ஒரு சிறிய பங்கு வகிக்கலாம் அல்லது இது தொடர்பாக ஒருவித கவனமும் செலுத்தப்படாது போகலாம். சகல கட்சிகளினது தலைமைகள் இதற்கான ஆதரவை தெரிவித்தபின்னர், ஒரு உண்மையான எதிர்ப்பு இருக்கப்போவதில்லை. ஜனநாயக சோசலிச கட்சி (முன்னாள் ஸ்ராலினிச கட்சி) மட்டுமே எதிராக வாக்களிக்கவுள்ளது. தமது ஸ்ராலினிச பாரம்பரியத்தின் படி இவர்கள் ஜேர்மன் இராணுவத்தின் இப்படியான தலையீட்டை பொதுவாக நிராகரிப்பர். எவ்வாறிருந்தபோதும் சில காலத்திற்கு முன்னதாக ஜேர்மன் அரசியலில் முக்கிய அரசியல் முக்கிய பங்குவகிப்பதற்காக தமது நிலைப்பாட்டை மாற்றத்தயாராக உள்ளதாக குறிப்பிட்டது.

ஆனால் சகல கட்சிகளும் ஜேர்மனின் தலையீடு ''தேசிய அரசியல் முக்கியத்துவம்'' உடையாதாக அல்லது ஜேர்மன் பிரதமர் குறிப்பிட்டபடி ''ஜேர்மனின் தேசிய அரசியலுக்கு ஒரு முக்கிய விடயம்'' என்பதில் ஒத்தகருத்துடையதாக இருக்கின்றன.

1990 ஜேர்மன் மறு இணைப்பிற்கு முன்னர், நேட்டோ எல்லைகளுக்கு வெளியே அதன் இராணுவத்தலையீடானது ஒரு பேசப்படகூடாத விடயமாக இருந்தது. ஆனால் மறு இணைப்பின் பின்னர் தனது உலக பொருளாதார நலன்களை பாதுகாப்பதற்கு தனது வெளிநாட்டு கொள்கைகளை இராணுவ ரீதியான நடைமுறைப்படுத்துவது அவசியம் என்ற கருத்து உருவாகியுள்ளது.

முன்னாள் பிரதமாரான கெல்முட் கோலின் கீழும், பின்னர் தற்போதைய பிரதமரான ஷரோடரின் கீழும் ஜேர்மனின் இராணுவ பலத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக அமெரிக்காவிற்கு எதிராக ஐரோப்பாவின் இராணுவத்தின் பலத்தை அதிகரிக்கவேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டது. இதனோடு தொடர்புடையதாகவே பால்கனில் நேட்டோவின் தலையீட்டில் கலந்துகொள்வது தவிர்க்கமுடியானதானது. இதற்கான முடிவுகள் ஜேர்மன் முதலாளித்துவ கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மட்டத்திலான கூட்டின் அடித்தளத்தில் எடுக்கப்பட்டன.

மசடோனியாவில் தலையீட்டுடன் தொடர்ப்பட்ட அபாயங்கள் கடந்தவாரத்தின் விவாதத்தின் போது பாரிய முரண்பாடுகளை உருவாக்கிவிட்டிருந்தன. சில தலைவர்கள் மசடோனியாவில் ஏற்படும் தாக்கமானது இராணுவத்தை கட்டும் திட்டங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும், வேறு சிலர் இராணுவத்திற்கான போதுமான ஆயுத, நிதி உதவு போதாது எனக்குறிப்பிட்டனர். குறிப்பிட்டளவிலானோர் இறக்க நேரிட்டால் அது மக்கள் மத்தியில் எதிர்மாறான விளைவுகளை உருவாக்கிவிடும் என்பதும் பாராளுமன்ற உறுப்பினரிடையே இராணுவாதம் குறைந்த ஆதரவைப் பெற்றிருந்தது.

முன்னர் ஜேர்மனின் இராணுவத்தலையீட்டுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த பசுமைக் கட்சியினரிடத்திலிருந்து மிகக்குறைந்த எதிர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. கட்சித் தலைமையின் கூட்டத்தில் 10 இற்கு 1 என்ற விகிதத்தில் தமது உறுப்பினர்களை இராணுவத் தலையீட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டது. கொஸவோ யுத்தத்தில் ஜேர்மன் இராணுவம் கலந்தகொண்டபோது உள்முரண்பாடுகளால் ஆட்டம் கண்ட இக்கட்சி தற்போது ஜேர்மனியின் புதிய இராணுவ பாத்திரத்துடன் தன்னை ஒற்றுமைப்படுத்திக்கொண்டது.

வாக்களிப்புக்கு முன்னதாக ஆளும்கட்சியான சமூக ஜனநாயக்கட்சியின் 30 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்கப்போவதாக கூறினர். ''விளைவுகளை முற்கூட்டி கூறமுடியாத பால்க்கனில் நேட்டோவினது புதிய, பாரிய இராணுவத் தலையீடானது அப்பிராந்தியத்தை மேலும் ஸ்திரமற்ற நிலைக்கு இட்டுச்செல்லும்'' எனவும் இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு காணலாம் என யாராவது நினைத்தால் அது தவறானது எனவும் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை குறிப்பிட்டது.

வாக்களிப்பிற்கு முன்னர், முன்னாள் எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக்கட்சியினது தலைவரான Angela Merkel, பாராளுமன்ற குழுத்தலைவரான Friedrich Merz, முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான Volker Rühe ஆகியோர் தமது கட்சியை எதிராக வாக்களிக்க தூண்ட முயற்சித்தனர். அவர்கள் தமது ஆதரவு தேவை என்றால் 50 இலட்சம் மார்க்கை இராணுவ செலவிற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதன் மூலம் கூட்டரசாங்கத்தை அழுத்தத்திற்கு உள்ளாக்கலாம் என நினைத்திருந்தனர். ஆனால் அக்கருத்து கட்சியினுள் எதிர்ப்பை எதிர்நோக்கியது. கட்சியின் முன்னாள் தலைவரான Wolfgang Schäuble உம், கட்சியின் வெளிநாட்டு கொள்கைக்கு பொறுப்பானவரான Karl Lamers உம் இப்படியான அடிப்படையான கொள்கையை கட்சியின் தந்திரோபாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை எதிர்த்தனர். கட்சித்தலைமை நேட்டோவின் தலையீட்டுக்கு எதிராக வாக்களிக்க கோருகையில் Wolfgang Schäuble உம், Karl Lamers உம் இப்படியான இராணுவ நடவடிக்கைகளுக்கு பாராளுமன்ற ஆதரவு இல்லாமல் அரசாங்கமே முடிவெடுக்கலாம் என்ற கருத்தை பகிரங்கமாக மக்களிடத்தில் முன்வைத்தனர்.

தாராளவாதக் கட்சியினதும், கிறிஸ்தவ ஜனநாயக்கட்சினதும் உறுப்பினர்கள் ஷரோடரின் அரசாங்கத்திற்கு பெரும்பான்மையாக ஆதரவளிக்கப் போகின்றார்கள் என தெரியவந்ததும், Angela Merkel உம், Friedrich Merz உம் ஆச்சரியப்படத்தக்கவகையில் பின்வாங்கிக்கொண்டனர்.

ஆரம்பத்தில் தாராளவாதக் கட்சி எதிர்ப்பை தெரிவித்திருந்தபோதும், அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதன் மூலம் எதிர்வரும் தேர்தலில் கிடைக்கும் வாக்குகளை கவனத்திற்கு எடுத்து, அதில் தாம் தற்போதைய கூட்டரசாங்கத்தில் உள்ள பசுமைக் கட்சியின் இடத்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற அடித்தளத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.

எதிர்பார்த்தது போலவே பாராளுமன்றம் பெரும்பான்மையுடன் ஆதரவாக வாக்களித்தது. ஆனால் இது ஒருபோதும் மக்களின் மனநிலையுடன் தொடர்புபட்டதல்ல. பரந்துபட்ட மக்கள் ஜேர்மனியின் வெளிநாட்டு, இராணுவக்கொள்கை தொடர்பாக அதிருப்தி கொண்டுள்ளனர். ஒரு உண்மையான எதிர்ப்பு இல்லாமையால் மசடோனியாவின் நடவடிக்கை தொடர்பான உண்மையான, நோக்கம் இருட்டில் மறைந்துள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved