World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

With murder of Palestinian leader, Israel escalates provocations and violence

பாலஸ்தீனிய தலைவரின் படுகொலையுடன், இஸ்ரேல் ஆத்திரமூட்டல்களையும் வன்முறையையும் அதிகரித்து வருகின்றது

By Jerry White
28 August 2001

Back to screen version

பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னனி (PFLP) யின் தலைவர் அபு அலி முஸ்தபா மேற்குக்கரையில் உள்ள ரமல்லா நகரத்தில் திங்கட்கிழமை காலை இஸ்ரேலிய துருப்புக்களால் படுகொலை செய்யப்பட்டார். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) ஐந்து உயர் அலுவலர்களில் ஒருவரான முஸ்தபா, இஸ்ரேலிய கொள்கையின் கீழ் கொல்லப்பட இருந்த அரபு தலைவர்களில் மிக உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர் ஆவார்.

இப்படுகொலையானது--கடந்த செப்டம்பரில் பாலஸ்தீனிய எழுச்சி ஆரம்பமான பின்னர் நடைபெற்ற, செயலாற்றுபவர்களைக் "குறிவைத்த கொலைகள்" ஐம்பதில், இது மிக அண்மையதாகும். இது பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஆத்திரமூட்டல்களின் அதிகரிப்பை குறிக்கிறது. இருப்பினும், இது முன்னனி பாலஸ்தீனியரை தீர்த்துக்கட்டுவதற்கான இஸ்ரேலிய பொறுப்பாளர்களினால் செய்யப்படும் முதலாவது முயற்சி என எந்த வகையிலும் அர்த்தப்படுத்தாது.

1998ல், அல்பத்தா (Al Fatah) வை அரபாத் உடன் சேர்ந்து நிறுவியவரும், மிக நெருங்கிய தோழரும், அபு ஜிஹாத் என்று அறியப்பட்டவருமான இலில் அல் வாஜிர், அவரது துனிஸ் (Tunis) இல்லத்தின் மீது தாக்குதல் நடந்தபோது இஸ்ரேலிய அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1995ல் இஸ்லாமிய புனிதப்போர் அமைப்பின் தலைவரான பத்தி ஷகாக்கி, மால்டா விடுதிக்கு வெளியே, இஸ்ரேல்தான் செய்தது என்று பரவலாகக் கூறப்படும் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அண்மையில் பாலஸ்தீனிய செய்திப் பத்திரிகையான அல் ஹயத் அல் ஜதிதா வின் ஆசிரியர் பர்கெளட்டி கொலை முயற்சி தோல்வியை அடைந்தது.

முஸ்தபா படுகொலையை நேரில் பார்த்தவர்கள், இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் லேசர் கதிரால் வழிநடத்தப்படும் இரு ஏவுகணைகளை அவரது அலலுவலக ஜன்னல்களுக்குள் செலுத்தி 64 வயது நிரம்பிய பாலஸ்தீனிய தலைவரைக் கொன்றதாகவும், தலை துண்டிக்கப்பட்ட மற்றும் தீய்ந்து போன உடல் அவரது மேசைக்கு அடியில் கிடந்தது என்றும் கூறினர்.

இந்த வெடிப்பானது, முஸ்தபாவின் மெய்க்காப்பாளர்கள் இருவர் உட்பட மூன்று அடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள ஏனையோரையும் காயப்படுத்தி உள்ளது, அதே போல அந்த தெருவில் உள்ள தொழிலாளி ஒருவரும் தெறி குண்டால் காயம்பட்டார். PFLP ன் அலுவலகங்கள், பாலஸ்தீனிய பொறுப்பாளர் தலைவர் யாசிர் அரபாத்தின் சொந்த அலுவலகங்கள் உள்ள இடத்திலிருந்து வெறுமனே 200 யார்கள் கூட இருக்காத தொலைவில் அமைந்துள்ள ஒரு தெருவில்தான் அமைந்துள்ளது.

இப்படுகொலைக்குப் பின்னர் சினத்தைக் கக்கும் வகையில், மேற்குக் கரையில் உள்ள நகர்களின் வீதிகளில் பாலஸ்தீனியர்கள் அணிவகுத்தார்கள். வடக்கு மேற்குக் கரையில் உள்ள முஸ்தபாவின் இல்லம் இருக்கும் சிற்றூரான அராபேயில் படுகொலையைக் கண்டித்து 5000 பேர் திரண்டனர். முஸ்தபாவுக்காக மூன்று நாட்கள் நினைவு அஞ்சலி கடைப்பிடிக்குமாறு அரபாத் அறிவித்தார். பல்வேறு பாலஸ்தீனிய அமைப்புக்களும் PFLP தலைவரின் படுகொலைக்கு தாங்கள் பழிக்குப்பழி வாங்கப் போவதாகக் கூறின.

இந்தப் படுகொலையைத் தொடர்ந்து, பாலஸ்தீனிய நிர்வாகிகள் (Palestinian Authority. PA) ஒரு அறிக்கையை வெளியிட்டனர், அது "இந்த ஆக்கிரமிப்பின் மூலம் இஸ்ரேலிய அரசாங்கமானது எந்த தடைகளும் இன்றி அல்லது பகுதிக் கோட்டைத் தாண்டக்கூடாது என்று கூட இல்லாமல் முழுத் தாக்குதலுக்கான கதவையும் திறந்துவிட்டுள்ளது" என்றது. PA தகவல் துறை அமைச்சர் யாசிர் அபெட் ராப்பொ இத்தாக்குதலை, "இஸ்ரேலிய அரசாங்கம் இழைத்துள்ள மிகக் கோரமான குற்றங்களில் இதுவும் ஒன்றாகும்" என அழைத்ததுடன், இஸ்ரேலிய அரசாங்கமானது ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளை "கோபத்தில் வெடிக்கக்கூடிய கண்ணிவெடி வயலாக்கி" உள்ளது என்றும் கூறினார்.

இஸ்ரேலிய இராணுவமானது PFLP அலுவலகம் மீதான தாக்குதலை உடனடியாக உறுதிப்படுத்தியது. முந்தைய கொலைகளுக்குப் பின்னர் செய்தது போலவே, அரசாங்க பேச்சாளர் ஒருவர் இஸ்ரேல் தற்பாதுகாப்பிற்காக செயல்பட்டது என்றும், அண்மைய பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களுக்கு முஸ்தபா பொறுப்பாவார் என்றும் கூறினார். ரா அனன் ஜிசின் என்ற இஸ்ரேலிய அரசாங்கப் பேச்சாளர், முஸ்தபா "அகற்றப்பட்டது" கடந்த கால நடவடிக்கைகளுக்காக அல்ல மாறாக "எதிர்காலத் தாக்குதல்களை அவரது அலுவலகத்தில் திட்டமிட்டுக் கொண்டிருந்ததற்காகவே" எனக் கூறினார். வழக்கம்போலவே, இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான ஆதாரத்தை வழங்கவில்லை.

இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷெரான் ஞாயிறு பின் இரவில் கூட்டிய உள் வட்ட அமைச்சரவைக் கூட்டத்தில், வெளி உறவு அமைச்சர் ஷிமோன் பெரஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பின்யாமின் பென் எலியஜார் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் குறிவைத்துக் கொல்லுதல் மற்றும் பாலஸ்தீனியர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு ஊடுருவல் செய்தல் பற்றிய கொள்கைகளை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்திய பின்னர் கொஞ்ச நேரத்தில் இப்படுகொலை நிறைவேற்றப்பட்டது.

ஞாயிறு முன்கூட்டியே, விடிவதற்கு முன்னர், மேற்குக் கரையிலும் காசா பாலைவனப் பகுதியிலும் உள்ள பாலஸ்தீனிய பாதுகாப்பு கருவி கலங்களின் அமைவுகள் மீது இஸ்ரேலிய எப்-- 16 மற்றும் எப்-- 15 போர் விமானங்கள் தாக்குதலை நடத்தின, டாங்குகளும் மற்றும் கவச வண்டி புல்டோசர்களும் தெற்கு காசாவில் உள்ள ரபாஹ் நகரை இடித்துத்தள்ளி உழுது, பாதுகாப்பு படை கட்டிடங்களை அழித்தன மற்றும் பாலஸ்தீனிய போலீசாரை கொன்றன. வார இறுதிப் பகுதியில்--ஏழு இஸ்ரேலியர்கள் மற்றும் நான்கு பாலஸ்தீனியர்கள்-- மொத்தம் 11 பேர்கள் சண்டையில் கொல்லப்பட்டனர்.

முஸ்தபா படுகொலையானது, சனிக்கிழமை அன்று தெற்கு காசாவில் இஸ்ரேலிய குடியேற்றப்பகுதியில் உள்ள நன்கு பலப்படுத்தப்பட்ட மார்கனைட் இராணுவ தளத்தில், இரு ஆயுதம் தாங்கிய பாலஸ்தீனியர் ஊடுருவி தாங்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் மூன்று படைவீரர்களைக் கொன்ற அதிரடிப்படைத் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது. அந்தத் தாக்குதலுக்கு பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னனி (DFLP) உரிமை கோரியது. அத்தாக்குதல் இஸ்ரேலிய அரசியல் மற்றும் இராணுவ அமைப்புக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

பி. எல். ஓ வை அமைத்திருக்கும் முன்று பிரிவுகளில் மிகச்சிறியது DFLP ஆகும். மற்றைய இரண்டு அமைப்புக்கள் PFLP யும் அரபாத்தின் அல் பத்தா இயக்கமும் (Al Fatah) ஆகும். அரபாத்தாலும் இஸ்ரேலிய அதிகாரிகளாலும் கையெழுத்திடப்பட்ட ஒஸ்லோ உடன்பாட்டை, முஸ்தபாவின் அமைப்பைப் போலவே DFLP யும் எதிர்த்து வந்தது. PFLP மற்றும் DFLP ஆகியன --மதச்சார்பற்றவை மற்றும் ஒருசமயம் மார்க்சிஸ்ட் என்று தங்களைக் கூறிக்கொண்டவை. இவை ஹமாஸ் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் வளர்ந்துவரும் செல்வாக்கால் தாண்டிச் செல்லப்பட்டன. இருப்பினும், அண்மைய நாட்களில், அராபாத்தின் சமரசக்கொள்கையாலும் இஸ்ரேலிய வன்முறையினை எதிர்கொள்வதாலும் செல்வாக்கைப் பெறத் தொடங்கி உள்ளன.

மார்கனைட் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலிய நாளிதழ் ஹாரீட்ஜ் இத்தாக்குதலுக்கு முஸ்தபாவின் PFLP பொறுப்பாக இருக்க வேண்டும் என ஊகித்தது. ஆனால் இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள், உண்மையில் இந்த தாக்குதலுக்குப் பின்னர், இருக்கும் அரபாத்தின் பிரிவினை பாதுகாக்கும் பொருட்டு PFLP உரிமை கோரிக்கொண்டதாக குறிப்பிட்டனர். ஞாயிறு அன்று இஸ்ரேலிய தொழிற்கட்சி மாநாட்டில் பேசுகையில், பாதுகாப்பு அமைச்சர் எலியசார், இந்த தாக்குதலுக்கு அரபாத்தே பொறுப்பு என்ற ஷெரோன் அரசாங்கத்தின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தினார், மற்றும் PA தலைவரை "காட்டுமிராண்டி பகைவன்" என்று அழைத்தார்.

பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய படுகொலைக் கொள்கைக்கு புஷ் நிர்வாகத்தால் பச்சை விளக்கு காட்டப்பட்டிருக்கிறது என்று சரியாக கூறினார்கள். முஸ்தபாவை இஸ்ரேலியர்கள் படுகொலை செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், வெள்ளிக் கிழமை அன்று, வன்முறைக்கான பொறுப்பை புஷ், அரபாத்தின் மேல் வைத்தார், பயங்கரவாத நடவடிக்கையை நிறுத்துவதற்கு போதுமானதை செய்யாததற்காக அவரைக் கண்டித்தார். "இஸ்ரேலியர்கள் பயங்கரவாத மிரட்டலின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தமாட்டார்கள். அவ்வளவுதான்" என்று அவர் கூறினார்.

படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்க ராஜாங்கத்துறையானது, இந்நடவடிக்கை மேலும் பதட்டங்களை பற்றி எரியச்செய்யும் மற்றும் அமைதியை மீளக் கொண்டுவருதலை மிகக் கடினமானதாக்கும் என்று இதமான விமர்சனத்தைச் செய்தது. இருப்பினும், அறிக்கையானது அரபாத்தும் பாலஸ்தீனிய பொறுப்பாளர்களும் வன்முறையினை முதலில் தூண்டிவிட்டவர்கள் என்று திரும்பக் கூறியதுடன், அவர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்த அதிகம் செய்யவேண்டும் என்றும் அதற்குப் பொறுப்பானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரியது.

இஸ்ரேலிய படுகொலைகளுக்கு நடைமுறையில் ஆதரவு இல்லை என்றால், அதற்கு அமெரிக்கா சகித்துக் கொண்டு இருப்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையையின் பாசாங்கை கீழறுக்கிறது. தனது அரசியல் எதிராளிகளை திட்டமிட்ட ரீதியில் கொன்றழிப்பதும் அவ்வாறு செய்வதற்கு அதனது உரிமையை பகிரங்கமாக அறிவிப்பதுமான ஒரே ஒரு நாடு உலகிலேயே இஸ்ரேல்தான். இருப்பினும் அமெரிக்கா, ஈராக்கை போக்கிரி நாடு என்று முத்திரை குத்திக்கொண்டு அதன் மக்களை இராணுவத் தாக்குதலுக்கும் பொருளாதார சூறையாடலுக்கும் கீழ்ப்படுத்துகின்ற அதேவேளையில், இஸ்ரேலுக்கு முழுநிறை படைக்கலமும் பூட்டி அதனை ஜனநாயகம் மற்றும் நாகரிகத்தின் அடித்தளம் என்று பாதுகாக்கிறது. இந்த இரட்டை அணுகுமுறையானது ஜனநாயகம் மற்றும் சமாதானம் பற்றிய கருத்தியல் குறிப்புரைகளால் விளக்கப்படமுடியாது, இன்னும் சொல்லப்போனால், அது எண்ணெய் வளம்மிக்க மத்தியகிழக்கு, பாரசீக வளைகுடா மற்றும் மத்திய ஆசியா ஆகியவற்றில் அமெரிக்க மூலோபாய, பொருளாதார மற்றும் நிலவியல் சார்ந்த அரசியல் நலன்களினால்தான் விளக்கப்பட முடியும்.

பாலஸ்தீனிய தலைவர்களை, அரபாத்தை அல்லது அதே காரணத்திற்காக பாலஸ்தீனியருக்கு ஆதரவளிக்கும் எந்த மத்திய கிழக்கு தலைவர்களையும் படுகொலை செய்யும் அதனது கொள்கையை நியாயப்படுத்துதற்காக இஸ்ரேலிய அரசாங்கத்தால் வழங்கப்படும் கொள்கைப்படியான தேற்ற விளக்கம், யாரும் எதுவும் செய்யலாம் என்பதாகும். இஸ்ரேலிய ஆட்சியானது தன்னைத்தானே நீதிபதி, முறை காண் ஆயம் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றுபவராய் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கான அதிகாரம் பெற்ற பிரதிநிதி கிடியான் எஜ்ரா (Gideon Ezra), அண்மையில், மேலும் ஒருபடி சென்று, இஸ்ரேலியர்களைக் கொல்பவர்களின் உறவினர்களைக் கொல்லும் கொள்கையை கருத்துரைத்தார்.

முஸ்தபாவின் படுகொலை மற்றும் இஸ்ரேலிய படுகொலைக் கொள்கையானது, ஒட்டு மொத்தமாக சியோனிச ஆட்சியின் அப்பட்டமான குழப்பத்தையும் ஆற்றொணா நிலையையும் பிரதிபலிக்கின்றது. இந்த பிராந்தியத்தில் ஏற்கனவே உள்ள பதட்ட நிலைகளை ஷெரோன் அரசாங்கம் தினமும் எரியூட்டி வளர்த்து வருகின்றது. இஸ்ரேலுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்ட இரண்டே நாடுகளான எகிப்து மற்றும் ஜோர்டான் அரசாங்கங்களின் பேச்சாளர்கள், அதைப்போலவே வளைகுடாவில் உள்ள அமெரிக்க ஆதரவு அரபு சுல்த்தான்களின் ஆட்சிகளும் படுகொலைகளானது தங்களின் ஆட்சிகளின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் சமூக அதிருப்தியையும் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன என்று எச்சரித்துள்ளனர்.

சியோனிச ஆட்சியின் சினமூட்டும் கொள்கைகள் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்திற்கும் அதேபோல அரபு மக்களுக்குமான பயங்கரமான விளைபயன்களுடன், இந்தப் பிராந்தியத்தை அச்சுறுத்தி மூழ்கடிக்கும் பேரளவிலான துயரத்திற்கு தயார் செய்து கொண்டிருக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved