World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

WSWS holds New York meeting on the US drive to war

அமெரிக்காவின் போருக்கான உந்தல் பற்றிய உலக சோசலிச வலைத் தளத்தின் நியூயோர்க் கூட்டம்.
By Bill Vann
17 December 2002

Back to screen version

உலக சோசலிச வலைத்தள ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் ஈராக்கிற்கு எதிரான ஒரு போரை நடத்துவதற்கு ''வெகுஜன அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள்'' பற்றிய பிரச்சனையை, புஷ் நிர்வாகம் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார். அது பூகோளரீதியாகவும் அதேபோல் அமெரிக்காவின் உள்ளேயும் கூட சமூக உறவுகளில் தொலை வீச்சுடைய பிரதிவிளைவுகளைக் கொண்டுள்ளது என்றார்.

டிசம்பர், 15ல் நியூயோர்க் நகரத்தில் கணிசமானோர் பங்கெடுத்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், போரானது தவிர்க்க முடியாததாக அதிகரித்து வருவது பற்றி லட்சக்கணக்கானோர் மிகவும் கரிசனையுடன் பார்ப்பது அதிகமாகி வருகிறது என்று நோர்த் குறிப்பிட்டார். "இரயில் வண்டி மெதுவான இயக்கத்தில் உடைந்து நொருங்கும் என்ற பழமொழியைப் போல, எமது கண்கள் முன்னே போரானது அவிழ்ந்து வருகிறது."

அமெரிக்க அரசாங்கத்தின் முழக்கங்கள் மக்களை நம்பவைப்பதைக் குறியாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர்களை முட்டாள் ஆக்குவதைத்தான் குறியாகக் கொண்டிருக்கின்றது. புஷ் நிர்வாகம் முன்னெடுத்த வாதங்களில் எதுவுமே விமர்சன ரீதியான ஆய்வுக்கு தாக்குப்பிடிக்காது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஈராக் ஒரு மிகப்பெரும் மற்றும் உடனடியான அச்சுறுத்தலாக உள்ளது என்ற போருக்கான பிரதான சாக்கு, ஒரு மிக பிரம்மாண்டமான மற்றும் தெளிவான ஏமாற்றாகும். ஈராக்கின் 'வெகுஜன அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை' அழிப்பதற்கும் போர் அவசியமானது என்று புஷ் நிர்வாகம் வலியுறுத்துகின்றது. அவ்வாறான ஆயுதங்கள் இருப்பதற்கான ஆதாரம் எதையுமே அதனால் காட்ட முடியாமல் இருக்கின்றது.

''வரலாற்றில் எந்த நாடுமே ஈராக்கைப் போன்று அவ்வாறான மிகப்பெருமளவிலான மற்றும் அத்துமீறிய ரோந்துக்கு உட்படுத்தப்பட்டது இல்லை. அது அதன் தேசிய இறையாண்மைக்கான அதற்கே உரித்தான உரிமைகளில் பெரும்பாலானவற்றை இழந்துள்ளது. ஒரு பத்தாண்டுக்கு மேலாக அமெரிக்காவின் மற்றும் பிரிட்டனின் தொடர்ச்சியான குண்டு வீச்சுகளுக்கு அது உள்ளானது. அமெரிக்க செயற்கைக்கோள்கள், நாள்தோறும் இராணுவ மற்றும் புலனாய்வுத் துறை ஏஜென்டுகளுக்கு, ஒரு பாதுகாப்பு கண்ணோட்டத்தில் சந்தேகத்திற்குரியது எனக் கருதப்படும், ஈராக்கின் எந்த ஒரு சதுர அடியின், கணினியால் விரிவாக்கப்பட்ட காட்சிகளை ஆயிரக்கணக்கில் அனுப்புகிறது. இப்போது அங்கே எண்ணற்ற 'ஆயுத பரிசோதகர்கள்' மிகவும் உணர்வுள்ள கருவிகளுடன் அந்நாட்டை சுற்றி சுற்றிவருகின்றனர். எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.''

எவ்வாறாயினும், ஈராக்கின் வெகுஜன அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை கண்டுபிடிக்க தவறியது ''அங்கே அவ்வாறான ஆயுதங்கள் இருப்பதற்கான ஆதாரமாக உள்ளது'' என்று புஷ் நிர்வாகம் பிரகடனம் செய்திருப்பதை நோர்த் குறிப்பிட்டார்.

''அதன் தற்போதைய கோரிக்கை என்னவென்றால், ஈராக்கின் விஞ்ஞானிகள் விசாரிப்பதற்காக ஈராக்கிலிருந்து அகற்றப்பட வேண்டும்'' என்பதாகும் என்று அவர் கூறினார். ''இந்த முன்னொருபோதும் இல்லாத கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பரிசோதக இயக்குனரான ஹான்ஸ் பிளிக்ஸ் கடத்தல் என்று விவரித்தார். இது ஈராக்குடன் ஒரு மோதலைத் தூண்டுவதற்கான நோக்கத்துடன் அமெரிக்காவினால் செய்யப்பட்டது. அமெரிக்கா கோரும் தனிநபர் யாரையாவது ஈராக் கையளிக்க மறுக்குமாயின் அது பாதுகாப்பு சபை தீர்மானத்தை 'சட ரீதியான மீறல்' என்று பிரகடனம் செய்யப்படும். ஈராக் ஏனைய ஒவ்வொன்றையும் இந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளுமாயின், அமெரிக்கா ஒரு இராணுவ தாக்குதலுக்கு சாக்காக அமையக்கூடிய நிகழ்வுப் போக்குக்காக தில்லு முல்லு செய்துள்ளது. வாஷிங்டன் போஸ்டின் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் 'பொய்சொல்லும் அல்லது பேசமறுக்கும்' ஈராக்கிய விஞ்ஞானிகள் ஈராக்குக்கு திருப்பி அனுப்படுவார்கள் - அது ஒரு சந்தேகவாதியான சதாம் ஹூசேனால் கொல்லப்படுவதற்கு என்று யூகிக்கலாம். மறுபுறம் அமெரிக்கா கேட்க விரும்புவதை கூறுபவர்களுக்கு மிகுந்த சன்மானம் வழங்கப்படும். வேறுவார்த்தைகளில் கூறினால், அமெரிக்கா ஆதரவற்ற தனிநபர்களுக்கு அவர்கள் மறுக்க முடியாததை வழங்குவதன் மூலம் அவர்களிடமிருந்து தகவலை அபகரித்துக்கொள்ளும்''.

ஈராக்கில் பரிசோதகர்கள் ஆயுதங்களைத் தேடும் 'துப்பறியும் நிபுணர்களாக' செயல்படவில்லை என்று வாதிடும் ஒரு சிடுமூஞ்சித்தனமான ஆசிரியர் குறிப்பு ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் போஸ்டில் வெளிவந்ததை நோர்த் காண்பித்தார், இப்படியான ஒரு பணி ''கலிபோர்னியா அளவுள்ள ஒரு விரோதமான பிரதேசத்தில்'' பலனற்றது என்று அந்த பத்திரிகை கூறியது. இந்த வாதம்- அதாவது ஆயுதங்களை கண்டுபிடிப்பது சாத்தியமற்றது என்பது-கடந்த ஐந்து வருடங்களாக வாஷிங்டன் கூறிவந்த மாதிரியான ஆயுதத்திட்டங்கள் எதுவுமே ஈராக்கிடம் இல்லை என்பது தெளிவானவுடன் விருத்தி செய்யப்பட்டதாகும், என்று நோர்த் கூறினார்.

''இப்போது இதுதான் உண்மையான விஷயமாகும்- அதாவது பரிசோதகர்கள் எதையாவது கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படியாயின் ஏன் 1997ல் ஆயுதப் பரிசோதகர்கள் திரும்ப அழைக்கப்பட்டது பற்றி பெரிய விஷயமாக்கியது?'' என்று அவர் கேட்டார். ''அந்த சமயத்தில் ஆயுதபரிசோதகர்கள் பயன்படுத்திய கண்டறியும் நிகழ்வுப்போக்கை தடுக்க ஈராக்கின் அரசாங்கம் முயற்சிப்பதாக அமெரிக்கா வலியுறுத்தியது. ஆயுதப்பரிசோதகர்கள் திரும்ப அனுப்பப்பட்டதை ஒரு சாக்காகப் பயன்படுத்தி ஒரு பிரம்மாண்டமான குண்டு வீச்சு தாக்குதல் ஈராக்கிற்கு எதிராக நடத்தப்பட்டது, அது 1998ல் ஆரம்பத்தில் தொடங்கியது. மேலும் கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்கா வலியுறுத்தி வந்தது என்னவென்றால் பரிசோதகர்கள் சுதந்திரமாக ஜனாதிபதி மாளிகைகளில் தேடுவதற்கு விடப்படவேண்டும், அவை மறைக்கப்பட்ட ஆயுத கிடங்கு மற்றும் உற்பத்தி தளங்களாக அநேகமாக இருக்கலாம் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் இப்போது இந்த எல்லாதளங்களும் ஈராக்கின் ஒவ்வொரு சதுர அங்குல பரப்பும் தடையற்ற பரிசோதனைக்கு திறந்து விடப்பட்டது. ஆனால் முக்கியமான எதுவுமே காணக்கிடைக்கவில்லை என்பது மிகவும் தெளிவானது. எனவே புஷ் நிர்வாகமும் செய்தி ஊடகங்களில் உள்ள அதன் உடந்தையாளர்களும் ஒரு துடிப்பைக் கூட தவறவிடாமல் பிகடனம் செய்தனர். அதாவது பரிசோதகர்கள் கலிபோர்னியா அளவுள்ள ஒரு விரோதமான பிரதேசத்தில் மறைக்கப்பட்ட பொருட்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என எதிர்பார்க்க முடியாது என்று''.

''ஏன் கலிபோர்னியா அளவுள்ள ஈராக்கிலுள்ள WMD வசதிகளை சக்திவாய்ந்த முறையில் கண்டுபிடிப்பதும், கண்கணிப்பதும் சாத்தியமற்றது ஏன் என்று கேட்க நம்மை அனுமதியுங்கள்? ஈராக்கைவிட சுமார் ஐம்பது மடங்கு பெரிதான சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பெரும் ஆயுத ஒப்பந்தங்களில் முழு அடித்தளமாக இருந்தது என்னவென்றால், முன்னேறிய தொழில்நுட்பங்கள் பகைவர்களின் ஆயுத உற்பத்தி திறன்களையும் நடவடிக்கைகளையும் நுட்பமாக கண்டறிவதையும், கண்காணிப்பதையும் சாத்தியமாக்கியது. 1980களின் பிற்பகுதியில், செய்தி ஊடகம், ரொனால்ட் றேகன் ஒரு ரஷ்ய குறிக்கோளை கண்டுபிடித்ததை மிகவும் பாராட்டியது - அதாவது 'நம்பு ஆனால் சரி பார்'- அப்போது அவர் சோவியத் யூனியனுடன் பரஸ்பர ஆயுத ஒழிப்பு திட்டங்களில் கையெழுத்திட்டார். சோவியத்துக்களினால் வெற்றிகரமான முறையில் அதிகாரபூர்வமான கண்டறியும் நிகழ்வுப்போக்குகளிலிருந்து தப்பிக்கக்கூடிய அணு குண்டு கருவிகளைத் தயாரிக்கும் திறனுள்ளது என்ற கோரிக்கையை, நிர்வாக செய்திஊடகம் தீவிர வலதுசாரிகளின் ஒரு சித்தப்பிரம்மை பிடித்த கற்பனை என்று நிராகரித்தது. இப்போது அவ்வாறான ஒரு கற்பனை போருக்கான நியாயப்படுத்தலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது''.

ஈராக்கிற்கு எதிரான போர்ச்செலவு ''மிகவும் பெரிதாக இருக்கலாம்'' என்று எச்சரிக்கும் போஸ்டின் ஆசிரியர் குறிப்பை, நோர்த் மேலும் மேற்கோள் காட்டினார். ஆனால் புஷ் "அவரது அரசாங்கத்தின் முழு செல்வாக்கையும் ஈராக் வெகுஜன அழிவை ஏற்படுத்தும் ஆய்வைக் கொண்டுள்ளது என்ற ஆணித்தனமான கூற்றுக்குப் பின்னால்'' போட்ட பிறகு அவரது அச்சுறுத்தல்களை முன்னெடுத்துச் செல்ல்லைத் தவறமுடியாது.

''வேறுவார்த்தைகளில் கூறினால், புஷ் நிர்வாகம் போருக்கான அதன் உந்தலை திரும்பப் பெறமுடியாது ஏனென்றால் அது அரசியல் ரீதியாக அழிவுகரமாக செல்வாக்கை இழக்கச் செய்வதை அர்த்தப்படுத்தும்''

''அங்கே ஒரு போர் ஏற்படவேண்டும் ஏனென்றால் அது ஒரு அரசியல் அவசியமாகும்'' என்று நோர்த் கூறினார்.

ஏன் அமெரிக்கா ஒரு பத்தாண்டுக்கு சற்று அதிகமான காலத்தில் அதன் நாலாவது பெரும் போரையும் மற்றும் ஒரு வருடதிற்குள்ளேயே அதன் இரண்டாவது போரையும் நடத்தும் விளிம்பில் உள்ளது என்று நோர்த் கேட்டார்?

'' 'வெகுஜன அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள்' என்ற பிரச்சாரத்தின் போலியான தன்மையை ஒரு கணம் ஒதுக்கி வைப்போம், இந்த வகையான மோசமான செய்தி ஊடகப் பிரச்சாரம் போர் போன்ற மிக அடிப்படையான ஒரு சமூக அரசியல் இயல் காட்சியை ஆய்வு செய்வதற்கு எந்த முக்கியமான அடித்தளத்தையும் வழங்கவில்லை'' என்று அவர் கூறினார். ''இருபதாம் நூற்றாண்டின் வரலாறு எதையாவது நிரூபிக்குமாயின் போருக்கான காரணங்களை ஆராய்ந்து அறிவதற்கு ஒருவர் முயற்சிப்பாராயின், அவர் பார்க்கவேண்டிய கடைசி இடம் அந்த விரோதங்களை தொடக்கிவைத்த அரசாங்கங்களின் உத்தியோகப் பூர்வ அறிக்கைகளாகத்தான் இருக்க வேண்டும்.

''போருக்கான காரணங்களை கருதிப் பார்க்கையில் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையைத் தூண்டிவிடும் பரந்த சர்வதேச புவியியல், அரசியல் நலன்களை ஆய்வு செய்வது அவசியமானதாகும். தடையற்ற வழிமூலம் பெட்ரோலியம் மற்றும் இயற்கைவாயுவை எடுத்துப் கொள்வது அமெரிக்காவில் இன்றிமையாத மற்றும் முக்கிய மூலோபாய குறிக்கோளாக இருக்கிறது என்பது சர்ச்சைக்கிடமற்ற உண்மையாகும். கடந்த மூன்று பத்து ஆண்டுகள் பாரசீக வளைகுடாவில் இடைவிடாத அமெரிக்க இராணுவ படைகளின் அதிகரிப்பைக் காட்டியது.

''சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது காஸ்பியன் பிராந்தியத்திலுள்ள இதுவரை எடுக்கப்படாத பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு சேமிப்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியது. இந்த முக்கியமான இயற்கை வளத்தின் வரம்புக்குட்பட்ட விநியோகம் உள்ள நிலைமையில், அமெரிக்கா எண்ணெய் உற்பத்தியாகும் பிராந்தியங்களில் அதன் ஆதிக்கத்தை நிலை நாட்டுவது, அதன் உள்நாட்டு பொருளாதாரத்தின் செயற்பாட்டுக்கும் மற்றும் உலக அளவில் முதலாளித்துவ அமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான அதன் திறனுக்காகவும் முக்கியமானதாக கருதுகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய வல்லுநர்கள், எண்ணெய் விநியோகங்களின் மீதான ஆதிக்கம், அமெரிக்க ஆளும் மேல் தட்டுக்கு அதன் அனைத்து தற்போதைய சாதகமான மற்றும் எதிர்கால பகையாளிகளுக்கு மேலாக சாதகமான ஒரு பிரம்மாண்டமான போட்டித்திறனைத் தரும் என்று நம்புகின்றனர்.''

பூகோள மேலாதிக்க நிலைப்பாடு ஒன்றினை நிலை நாட்டுவதற்கு, அமெரிக்கா அதன் மிகவும் சக்தி வாய்ந்த இராணுவ பலத்தைப் பயன்படுத்த முனைவதன் தொலை வீச்சு பிரதிவிளைவுகளை, நோர்த் சுட்டிக்காட்டினார். ''ஈராக்கிற்கு எதிரான போரின் உடனடியான பின் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அமெரிக்காவிற்கும் அதன் தற்போதைய மற்றும் எதிர்கால போட்டியாளர்களுக்கும் இடையில் பெருமளவில் ஆழமடையும் பகைமைக்கான ஒரு நிகழ்வுப்போக்கின் இயக்கத்தை தூண்டிவிடும்'' என்று அவர் கூறினார். ''முதலாளித்துவ தேசிய அரசு அமைப்பு என்ற கட்டமைப்பினுள் இந்த நாடுகளுக்கிடையிலான மற்றும் ஏகாதிபத்திய பகைமைகளின் நிகழ்வுப் போக்கானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டினால் நிறுத்தப்படவில்லை என்றால், என்றும் காணாத கொடூரமான மற்றும் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய போர்களுக்கான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்''.

''அமெரிக்காவில் அனைத்தையும் பிடிக்கக்கூடிய பூகோள பேராவல்களுக்கும் அதனிடத்தே இருக்கும் உண்மையான பொருளாதார வளங்களுக்குமிடையில் ஒரு பெரும் ஏற்றத்தாழ்வு இருக்கின்றது. இந்த முரண்பாடு பற்றி பத்திரிகைகளில் அரிதாகத்தான் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறாயினும் பூகோள மேலாதிக்கத்தை அடைவதற்காக அமெரிக்கா அதிகப்படியான அதன் இராணுவ பலத்தில் சார்ந்திருப்பது ஒரு நீடித்த மற்றும் நிறுத்தமுடியாத பொருளாதார வீழ்ச்சி நிலைமைகளின் கீழ் அல்லது அதிலிருந்துதான் எழுகின்றது என ஒருவர் கூறலாம்.

''வரலாற்று ரீதியாக ஆய்வு செய்தால் பொருளாதாரத்தில் அமெரிக்காவில் புறநிலையான நிலைப்பாடு 57 வருடங்களுக்கு முன்னர் 2ம் உலகப்போரின் இறுதியில் இருந்ததைவிட மிகவும் பலவீனமானதாக உள்ளது என்பது தெரிகிறது. அந்தச் சமயத்தில் அமெரிக்கா அதன் முதலாளித்துவ பகையாளிகளாக கருதப்பட்டவற்றிற்கு மேலாக மிகப்பெரும் இராணுவ மேலாண்மையை கொண்டிருந்தது. ஆனால் அதன் இராணுவ பலம் உலக முதலாளித்துவத்தில் அதன் ஆதிக்க பொருளாதார நிலைப்பாட்டைவிட குறைந்த அளவு முக்கியத்துவம் உடையதாகும். முதலாளித்துவ உலகின் உற்பத்தித்திறனின் சுமார் 75 சதவீதம் அமெரிக்க எல்லைகளுக்குள் நிலை கொண்டிருந்தது.

''இன்றுள்ள நிலைமை, அதன் இராணுவ பலம் இருந்த போதிலும் கூட, பெரிதும் வேறுபட்டதாக உள்ளது; ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற பகையாளிகளினால் கடந்து செல்லப்பட்டுள்ளது என்ற இந்த அச்சம்தான் அமெரிக்காவின் வெறித்தனமான மிகவும் கர்வமான கொள்கைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. அதன் நடவடிக்கைகள் எல்லா வகையானவற்றிலும் மிகவும் அபாயகரமான ஒன்றை ஒத்ததாக இருக்கிறது- மிக அவசரத்தில் ஒரு வயோதிபரைப்போன்று. பொருளாதார வீழ்ச்சியின் பின் விளைவுகளை, புஷ் நிர்வாகம் இராணுவ பலத்தை பயன்படுத்துவதன் மூலமாக எதிர்கொள்ள முயற்சிக்கின்றது.''

போருக்கான உந்தலுக்கு அடிப்படயாக இருக்கும் மிகவும் தீர்க்கமான காரணி வளர்ச்சி அடைந்துவரும் உள்நாட்டு பொருளாதார நெருக்கடியும் அமெரிக்க சமூகத்தினுள் அதிகரித்து வரும் பிரம்மாண்டமான வர்க்க பதட்டங்களுமாகும் என்று நோர்த் வலியுறுத்தினார்.

''வோல்ட்ஸ்ட்ரீட் நீர்க்குமிழி உடைந்ததானது, 1990களில் அமெரிக்க முதலாளித்துவத்தின் உற்பத்திக்கான பலம் ஒரு பிரம்மாண்டமான அளவில் மறுமலர்ச்சி பெற்றதைக் காட்டியது என்ற சுய பாராட்டு கூற்றுக்களை பொய்யெனக் காட்டியது'' என்று அவர் கூறினார். ''கடந்த பத்தாண்டு அசாதாரணமான நிதி தேட்டங்கள் சுரண்டப்பட்டதை எடுத்துக்காட்டியது என்பது இப்போது தெளிவாகிறது: உற்பத்தி ஆற்றல் அல்லாத ஆனால் பெரும்பாலான விஷயங்களில் முற்றிலும் வீணான யூக நிறுவனங்களுக்குள் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வாரி இறைக்கப்பட்டது. உற்பத்தி நிகழ்வுப் போக்குகளிலிருந்து சுதந்திரமாக ஊக வாணிப நடவடிக்கைகளின் மூலமாக மதிப்பின் காணல்நீர் தோற்றத்தை ஏற்படுத்த எடுத்த முயற்சியானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் குணத்திலும் அதன் ஆளும் மேல் தட்டின் சமூக உடல் கூறிலும் ஒரு மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

''நிறுவனங்களின் நடவடிக்கை ஒரு அதிகப்படியான கிரிமினல் தன்மையைப் பெற்றது. ஆளும் மேல் தட்டின் தினசரி நடவடிக்கைகள் மேலும் மேலும் வெறித்தனமாக அதன் சுயசெல்வத்தை பெருக்குதலில் அதிக கவனம் செலுத்தியது, அது மேலும் மேலும் அப்பட்டமாக சமூக சொத்துக்களை சூறையாடும் வடிவத்தைப் பெற்றது. அதன் சுய செல்வப் பெருக்கலின் வியக்க வைக்கும் அளவானது, அதன் கண்ணாடி போன்ற பிரதிபலிப்பை, உழைக்கும் மக்கள் தொகையின் பரந்த தட்டினரின் சமூக நிலைப்பாட்டின் தேக்க நிலையிலும் வீழ்ச்சியிலும் கண்டது. புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா அனைத்து முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் மிகவும் சமூக சமனற்றதாக மாறியது. அமெரிக்காவினுள் இருக்கும் கடுமையான சமூக துருவமுனைப்பினை ஒரு புள்ளி விவரம் சுருக்கிக்கூறும்: நாட்டிலுள்ள 13,000 மிகவும் செல்வம் படைத்த குடும்பங்களின் வருடாந்த வருமானம் நாட்டிலுள்ள இரண்டு கோடி மிகவும் ஏழ்மையான குடும்பங்களின் ஒட்டு மொத்த வருடாந்த வருமானத்தை விட மிகவும் அதிகமானதாகும்.

''மக்கள் தொகையின் மிகவும் சிறிய விகிதாசாரத்தினுள் செல்வம் பெருமளவில் அதிகரித்தும் குவிந்து போயும் இருப்பது ஒரு சமுதாயத்தை உருவாக்கியுள்ளது. அதனை சிலருடைய என்று சிறப்பாக விவரிக்கலாம். அரசியல் நிறுவனத்தின் நடவடிக்கைகள் இந்த சிலருக்கு முழுமையான சேவகம் செய்வதாக இருக்கிறது.

அது இந்த மேல் தட்டின் செல்வத்தையும் சலுகைகளையும் பாதுகாப்பதில் முழுமையாக கவனம் செலுத்துகிறது. புஷ் நிர்வாகத்தினால் ஜனநாயக உரிமைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது செப்டம்பர், 11, 2001 சம்பவங்களுக்கு ஒரு மேலோட்டமான பதிலாக மட்டும் தான் இருக்கிறது. அது மிகவும் அடிப்படையில் அமெரிக்காவின் சமூக துருவ முனைப்பின் வெளிப்பாடாகும்.''

பேச்சாளர் நியூயோர்க் நகர போக்குவரத்து தொழிலாளர்களின் ஒப்பந்த போராட்டம் பற்றி குறிப்பிட்டார். தொழிலாளர்களுக்கு அபராதம் மற்றும் சிறை போன்ற அரசாங்க அச்சுறுத்தல்கள் மற்றும் உள்ளூர் பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பு, போக்குவரத்து சங்கத்தின் மிதமான சீர்த்திருத்தவாத தலைவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளது பற்றி குறிப்பிட்டார். அவ்வாறான ஒரு சம்பவம் ''தினசரி வாழ்வின்'' மேற்பரப்பின் அடியில் கொதித்துக் கொண்டிருக்கும் வர்க்கப் போரின் நிலையை வெளிப்படுத்துகின்றது என்றார்.''

போரின் பொருளாதார வளமான - முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் ஒரு வேலைத்திட்டத்தின் மீது போருக்கு எதிரான போராட்டத்தை அடித்தளமாகக் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை நோர்த் குறிப்பிட்டார். போருக்கு எதிரான ஒரு கொள்கை முதலாவதாகவும் எல்லாவற்றிற்கும் முதன்மையாவும் அதுவாகவே உழைக்கும் மக்களின் பரந்த தட்டினரின் சமூக நலன்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்றார்.

இதுதான் வியட்நாமின் போருக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தின் காலத்தில் கிடைத்த முக்கியமான படிப்பினை என்றார் அவர். இந்த இயக்கத்தின் தலைமையில் இருந்தவர்கள் தொழிலாள வர்க்கத்தின் அக்கறைகள் பற்றி பாராமுகமாக இருந்தனர். அதேவேளை தொழிலாளர்கள் அவர்களாகவே போர் முயற்சிக்கு தியாகம் செய்யபெரும் எண்ணிக்கையில் மறுத்தனர். தொழிலாளர்களின் போர்க்குணம் மிக்க போராட்டங்கள் போர் உந்தலுக்கு புறநிலையாக எதிர்ப்பாக இருந்த அதே சமயத்தில் இந்தப் போராட்டமானது நனவு பூர்வமாக ஏகாதிபத்தியத்திற்கும் எதிரானதாக மாற வேண்டும் என்று நோர்த் வலியுறுத்தினார்.

''மனித இனத்தின் பிரச்சனைகள் போர்க்குணம் மிக்க தொழிற்சங்க வாதத்திற்குள் தீர்க்க முடியாது'' என்றார் அவர்.

நோர்த் 2003ல் வரவிருக்கும் அரசியல் வளர்ச்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வருகின்ற வருடம் போர் விஷயத்தை ஒரு அரசியல் போக்காக நிலை நாட்டிய ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சியின்1903ல் மாநாட்டின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த வளர்ச்சியானது என்ன செய்ய வேண்டும் ? என்ற லெனினது புகழ் பெற்ற சிறு நூலினால் அரசியல் ரீதியாக தயார் செய்யப்பட்டது என்றார் அவர்.

அந்த வேலையின் முக்கியமான உள்ளடக்கம் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிக் கட்சியை கட்டுவதற்கான அமைப்பு ரீதியான வழிகாட்டலாக அல்ல. பதிலாக ''தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச நனவை அறிமுகப்படுத்துவதற்கான ஊடகம் புரட்சிக் கட்சிதான்'' என்ற கருத்துருவாகவே இருந்தது.

இது தான் ஐந்து வருடக்களுக்கு முன்னர் உலக சோசலிச வலைத்தளம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து அது வகித்த முக்கியமான பாத்திரமாகும் என்று அவர் கூறினார்.

''முதலாளித்துவ பிற்போக்கு மற்றும் ஸ்ராலினிசம் இரண்டிலிருந்தும் 20ம் நூற்றாண்டில் அவ்வாறான பயங்கரமான தாக்குதல்களை அனுபவித்த தொழிலாள வர்க்கத்தின் சோசலிச நனவை மீண்டும் கட்டியெழுப்புவதுதான் நமது பணியாகும்'' என்று பேச்சாளர் கூறினார். வருகின்ற வருடத்தின் மிகவும் முக்கியமான பணி உலக சோசலிச வலைத்தளத்திற்கு இருக்கும் உலகளாவிய பிரம்மாண்டமான ஆதரவை சோசலிச சமத்துவக் கட்சியின் தலைமையின் கீழ் ஒரு வெகுஜன அரசியல் இயக்கமாக மாற்றும் அரசியல் ஏற்பாடுதான் என்று அவர் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் பங்கெடுத்தவர்களில் வருடக்கணக்காக வலைத்தளத்தை படித்து வந்த தொழிலாளர்கள் மாணவர்கள் மற்றும் தேர்ச்சிபெற்றவர்களும் அடங்குவர். ஆனால் அவர்கள் wsws மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது நிகழ்ச்சிக்கு ஒரு போதும் வந்ததில்லை. சொற்பொழிவை கேட்டதற்காக மேயினிலிருந்து காரோட்டி வந்தனர். ஏனையோர் நியூ ஜேர்ஸி, அட்சன் பள்ளத்தாக்கு (Hudson Valley), மற்றும் நகருக்கு வெளியே உள்ள இதர பகுதிகளிலிருந்து வந்தனர். பெரும்பான்மையானவர்கள் சொற்பொழிவு பற்றி வலைத்தளத்தில் போடப்பட்ட ஒரு அறிவிப்பின் மூலமாக அல்லது அனைத்து wsws சந்தாதாரர்களுக்கும் E-mail மூலமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து தெரிந்து கொண்டார்கள்.

மேயினிலிருந்து கூட்டத்திற்கு வந்த தொழிலாளர்களில் ஒருவர் ''நான் இந்த வலைத் தளத்தை கிளிண்டன் பதவி நீக்கத்திலிருந்து படித்து வருகிறேன்'' என்றார். ''நாங்கள் இந்தக் கட்டுரைகளை வலைத் தளத்திலிருந்து கீழிறக்கம் செய்து (down load) அச்சிட்டு ஊர்வலங்களிலும் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் கூட்டங்களிலும் விநியோகித்து வருகின்றோம்.''

நியூ ஜேர்ஸியிலிருந்து வந்த ஒரு மாணவர் இந்தச் கூட்டத்தில் பங்கெடுத்து அது பற்றி அவருக்கு கூறும்படி தாய்லாந்திலிருந்து அவருக்கு மின்மடல் (E-mail) -மூலமாக தனது நண்பர் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

இந்தச் சொற்பொழிவிற்கு மிகவும் பலமான ஆதரவு கிடைத்தது. சொற்பொழிவை அடுத்து ஒரு உயிரோட்டமான கலந்துரையாடல் நடைபெற்றது. ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க இராணுவ தயாரிப்பு பற்றிய சமீபத்திய வளர்ச்சிகளின் முக்கியத்துவத்திலிருந்து இனவாத அரசியல் பற்றிய விசயம் மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவின் வளர்ச்சி பற்றிய பிரச்சனைகள் வரையிலான தலைப்புகளில் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதில் பங்கெடுத்தவர்களில் பலர் சோசலிச சமத்துவ கட்சியில் சேர்வதில் அக்கறை காட்டினர். உலக சோசலிச வலைத் தள வளர்ச்சிக்கான ஒரு நிதி திரட்டலில் பணமாக 1800 டாலர்களும் வாக்குறுதிகளாக 3000 டாலர்களுக்கும் அதிகமாக கிடைத்தது. அதே சமயம் அதில் பங்கெடுத்தவர்கள் சுமார் 200 டாலர்களுக்கு இலக்கியங்களை வாங்கினார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved