World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US seizes Iraqi UN documents to further war drive

தனது போர் முயற்சியை, துரிதப்படுத்துவதற்கு அமெரிக்கா, ßராக்கின் ஐ.நா. தஸ்தாவேஜிகளை பறிமுதல் செய்தது.

By Bill Vann
12 December 2002

Back to screen version

ஐக்கிய நாடுகள் சபைக்கு, ஈராக் சமர்ப்பித்த 12,000-பக்கங்களைக் கொண்ட, ஆயுதங்கள் தொடர்பான பிரகடனத்தை புஷ் நிர்வாகம், சென்ற சனிக்கிழமையன்று பறிமுதல் செய்திருக்கிறது. இது தனது போர் முயற்சிகளைத் துரிதப்படுத்தும் விரக்தி நடவடிக்கையாகும்.

வழிப்பறிக் கொள்ளையைப்போன்று, ஐ.நா. தலைமை ஆயுதங்கள் ஆய்வாளர் ஹான்ஸ் பிலிக்ஸ் (Hans Blix) இன் அலுவலகத்துள் அமெரிக்க ராஜீயத்துறை அதிகாரிகள் நுழைந்து, அறிக்கை நியூயோர்க் நகருக்கு வந்து சேர்ந்த சில மணி நேரங்களுக்குள்ளேயே அதனை கைப்பற்றினர். இந்த வாரக் இறுதியில் ஐ.நா. பந்தோபஸ்து கவுன்சில் (Security Council) உறுப்பினர் ஒவ்வொருவருக்கும், பிரதிகளைத் தருவதற்காக, ஐ.நா. அதிகாரிகள் ஈராக் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளை ஆராய்வார்கள் என, பிலிக்ஸ் அறிவித்திருந்தார்.

ஐ.நா. பந்தோபஸ்து கவுன்சிலின் ஆண்டு நிரந்தர உறுப்பினர்களான பிரிட்டன், பிரான்ஸ் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு வாஷிங்டன் பிரதிகளை கொடுத்திருக்கின்றது. உயிரியியல் இரசாயன அடிப்படைகளில் போர் ஆயுதங்களை தயாரிக்கும் தொழில்நுட்பங்களும் அணு ஆயுதம் தயாரிக்கும் முறையும், தற்காலிக உறுப்பினர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக தற்காலிக உறுப்பினர்களான பத்து நாடுகளுக்கும் திருத்தியமைக்கப்பட்ட பிரதிகளை கொடுப்பதற்கு அமெரிக்கா விரும்புகின்றது.

இப்படி பகிரங்கமாக ஈராக்கின் பிரகடனங்களை திருடியிருப்பதன்மூலம், வாஷிங்டன் ஈராக் ஆட்சிக்கு எதிராக தனது தரப்பை ஜோடனை செய்வதற்கு கணிசமான அளவிற்கு வழிவகை கிடைத்திருக்கின்றது. தங்களது ஒரே கவலை, அந்த அறிக்கை பாதுகாப்பான சூழ்நிலையில் பிரதி எடுப்பதற்கு உத்தரவாதம் செய்து தருவதுதான் என்று, அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர். "இந்த அறிக்கையை, அமெரிக்காவின் கிங்கோஷ் பிரதி எடுக்கும் நிறுவனத்திற்கு அனுப்ப முடியாது" என ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். இப்படி தன்னிச்சையாக, தன் பொறுப்பிலேயே ஈராக்கின் அறிக்கைகளை வைத்திருப்பது அமெரிக்காவிற்கு எதிராக சான்றுகளை மறைமுகமாக சேர்ப்பதற்கும், அல்லது அமெரிக்கா மீது குற்றம் சுமத்தும் தகவல்களை அப்புறப்படுத்தவும் அமெரிக்காவிற்கு வழிவகை கிடைத்திருக்கிறது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வாஷிங்டன் பந்தோபஸ்து கவுன்சிலின் அவசரக் கூட்டத்திற்கு வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது, சென்ற மாதம் ஐ.நா. ஆயுதங்கள் சோதனை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி ஈராக் செயல்பட்டதாக பிரகடனப்படுத்த இந்த அவசரக் கூட்டத்தை நடத்தவேண்டுமென்று அமெரிக்கா கோரியிருக்கின்றது. இதன் மூலம், போர் தொடங்குவதற்கு போலியான சட்டப்பூர்வ நிலையை உருவாக்கிக்கொள்ள முடியும்.

இப்படி போலியாக உண்மைக்கு புறம்பான, அறிக்கைகளை வாஷிங்டன் தயாரித்து போருக்கு தன்னை ஆயத்தம் செய்துகொள்ளாது, அந்த அளவிற்கு அமெரிக்கா தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளாது என்று கருதுபவர்கள், அமெரிக்காவின் வரலாற்றை அறியாதவர்களாவர். சென்றமுறை வளைகுடாப்போர் தொடங்கியபோது, புஷ் சீனியரது நிர்வாகம் சவுதி அரேபிய எல்லையில் 2 1/2-லட்சம் ஈராக் படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக, ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. உண்மையில் அந்த புகைப்படத்தை கவனமாகக் பார்த்தால், அது ஈராக் படைகள் குவைத்திலிருந்து, ஏற்கனவே வெளியேறிக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரியும். வியட்நாம் போரில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டதற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தவறான காரணம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். டொங்கின் (Tonkin) வளைகுடாவில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி வியட்நாம் போர்ப்படகுகள் அமெரிக்க கப்பற்படை கப்பல்களை தாக்கியதாக தவறான தகவலை அப்போது கொடுத்தனர்.

தற்போது, அமெரிக்கா மோசடியாக ஈராக் மீது குற்றம்சாட்டும் ஒன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறது. ஈராக் மக்களை கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்களை தயாரித்து வருகின்றது என்பதே அந்த அறிக்கையின் சாராம்சம். இதன் மூலம் ஈராக்குடன் போர் தொடுத்து, ஈராக்கின் மீது அமெரிக்க பாதுகாப்பில் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள எண்ணெய்க் கிணறுகளை பாதுகாப்பாக, அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கு, அது திட்டமிடுகின்றது.

குறிப்பாக, அமெரிக்க மற்றும் பிரிட்டனின் புலனாய்வு அதிகாரிகள் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் எதுவும் ஈராக்கில் கூறிவிட்டார்கள். தீவிரமான சோதனைகள் நடத்தப்பட்டன அதிலும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஈராக் பிரகடனத்தைக் கைப்பற்றியிருப்பது, புஷ் நிர்வாகத்திற்கு திட்டவட்டமான சாதக சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

ஈராக் பிரகடனத்தை அமெரிக்கா கைப்பற்றியாருப்பது, ஐ.நா.வின் தனித்த செயல்பாட்டுத் திறன் இல்லாததை அம்பலப்படுத்திவிட்டது. ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு எதிரான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்களை ஏற்பாடு செய்யும் அரங்குதான், அந்த அவசியப் பணியைத்தான் ஐ.நா. மேற்க்கொண்டிருக்கின்றது என்ற உண்மை அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. பி.பி.சி.கிகு ஐ.நா-பொதுச் செயலாளர் கோபி அன்னான் அளித்துள்ள பேட்டியில் அமெரிக்காவின் செயல் "துரதிருஷ்டவசமானது" என வர்ணித்துள்ளார். அமெரிக்க நலன்களை காக்கும் வகையில், பொம்மை அமைப்பாக ஐ.நா. இயங்கி வருகின்றது என்ற குற்றச்சாட்டுக்களை மிகவும் பலவீனமான முறையில் மறுத்துள்ளார்.

இந்த மாதம் ஐ.நா. பந்தோபஸ்து கவுன்சிலுக்கு, கொலம்பியா நாட்டுத் தூதர் தலைவராகயிருக்கின்றார். அமெரிக்க அதிகாரிகள் அவருக்கு நிர்பந்தம் கொடுத்து ஈராக் பிரகடன பிரதிகளை தருமாறு செய்திருக்கின்றனர். வாஷிங்டனது கோரிக்கையை, கொலம்பியா ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா மிரட்டல் மூலமும், லஞ்சம் கொடுத்தும் இணங்க வைத்திருக்கிறது.

ஈராக் பிரகடனம் வெளியிட்ட நேரத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் கொலம்பியா தலைநகர் பக்கோட்டாவிற்கு பயணம் மேற்க்கொண்டார். அந்நாட்டு வலதுசாரி ஆட்சி தலைவரான அல்வாரோ உறிப் இற்கு அடுத்த ஆண்டு அமெரிக்கா வழங்குவதாக உத்தேசித்திருக்கும் 53.7 மில்லியன் டாலருக்கு மேல் கணிசமான அளவிற்கு கூடுதலாக உதவி வழங்குவதாக அறிவித்தார். பவல் பலமுறை கொலம்பியா தலைநகர் பயணத்தை தள்ளி வைத்திருந்தார். கொலம்பியா தூதர் ஐ.நா. பந்தோபஸ்து கவுன்சில் தலைவரானதும் பவல் அந்த பயணத்தை மேற்கொண்டார்.

ஐ.நா. பந்தோபஸ்து கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நிரந்தரமல்லாத நாடுகளான சிரியா, மெக்சிக்கோ, மற்றம் நோர்வே உட்பட பல நாடுகள் அரைகுறை அறிக்கைகளை தங்களுக்கு தருகின்ற அமெரிக்காவின் செயல்களுக்கு கண்டனம், தெரிவித்துள்ளார்.

கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை ஐ.நா.-பந்தோபஸ்து கவுன்சில் 10-தற்காலிக உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது. அந்த அறிக்கைகள் மீது கருத்து தெரிவிக்குமாறு அந்த நாடுகள் கோரப்படுகின்றன. ஐ.நா.-பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி "துல்லியமான முழு விபரங்களையும்" ஈராக் தாக்கல் செய்திருக்கிறதா? என்பது குறித்து பத்து தற்காலிக உறுப்பினர்களும், கருத்து தெரிவிக்கவேண்டும்.

இந்தப் பிரகடனத்தில் ஈராக் ஈடுபட்டிருப்பதாக, கூறப்படும், ஆயுதங்கள் தயாரிப்பு திட்டங்கள் மட்டும் இடம்பெற்றிருக்கவில்லை. பல்வேறு வகையான, இரசாய, உயிரியல் அல்லது அணு பொருட்கள் போன்ற வகைகளில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிவிலியன் தொழிற்சாலைகளும் அடங்கும். இதுபோன்ற பொருட்களை ஆயுதங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஈராக்கிற்கு எதிரான, குற்றச்சாட்டுக்களை கற்பனையாக உருவாக்கும்போது அமெரிக்கா இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் என்று கூறப்படும், அணுவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ளும். இரசாயன மற்றும் உயிரியியல் ஆய்வுகளும், நடைமுறைகளும் பல்வேறு தொழில்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றை இரகசியமாக அணு ஆயுதங்களாக மாற்றிக்கொள்ள முடியும். இந்த அடிப்படையில்தான், அமெரிக்கா, ஈராக் மீது தனது கற்பனையான குற்றச்சாட்டை கூறயிருக்கின்றது.

ஐ.நா. பந்தோபஸ்து கவுன்சில் தற்காலிக உறுப்பினர்களுக்கு வழங்கப்படும், திருத்தியமைக்கப்பட்ட அறிக்கையில், பாக்தாத் ஆட்சிக்கு அணு பொருட்கள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் வழங்கிய ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பட்டியல்களும், ஆயுத பேரத்தில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகளின் பெயர்களும் நீக்கப்படும். 1980களின் தொடக்கத்தில், இரசாயன மற்றும் உயிரியல் தொடர்பான போர் ஆயுதங்கள் ஈராக் - தயாரிக்கும் திட்டத்திற்கு உதவிய மற்றும் ஒத்துழைப்பு தந்த அமெரிக்க மற்றும் பிரிட்டனின், பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் பெயர்கள், அம்பலத்திற்கு வரும், அந்த உண்மைகள் இன்று ஈராக்கில் அத்தகைய திட்டங்கள் இருப்பதாக குற்றம்சாட்டி போர் ஆவேசத்தை கிளப்புவதற்கான முயற்சியை முனைமழுங்கச் செய்கின்ற அளவிற்கு அமைந்துவிடும்.

"தேசிய பாதுகாப்பு எனக்கூறி அத்தகைய தணிக்கைமுறையை நியாயப்படுத்த முடியாது. தேசிய அளவில் பரபரப்பை குறைப்பதற்காக அவ்வாறு நியாயப்படுத்தலாம் என்று, நான் கருதுகிறேன்" இவ்வாறு முன்னாள் ஐ.நா. ஆயுத ஆய்வாளர் டேவிட் அல்பிரைட் கூறியிருக்கிறார்.

ஆயுதங்கள் சோதனை, ராஜ்ஜிய தொடர்பு நடைமுறைகள் அல்லது சர்வதேச சட்டங்கள் போன்ற காரணங்களால், வாஷிங்டன், ஈராக் மீது குண்டர்கள் பாணியில் போர் தொடுக்க திட்டமிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் தாமதம் எதுவும் ஏற்படுவதை புஷ் நிர்வாகம் அனுமதிக்க விரும்பவில்லை.

ஈராக் எல்லைகளுக்கு அருகில், ஏற்கனவே, 60,000-க்கு மேற்பட்ட அமெரிக்க துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. நான்கு விமானந்தாங்கி கப்பல்கள் போர் புரியும், ஆயத்த நிலையில் கடலில் நின்று கொண்டிருக்கின்றன. ஜனவரி, மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்கள் போர் புரிவதற்கு ஏற்ற மாதங்கள் என, பென்டகன் திட்டமிடுவோர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த இரண்டு மாதங்களிலும், பருவ நிலை குளிர்ச்சியாகவும், நீண்ட இரவாகவும் இருக்கும். இரவில் இலக்குகளை தெளிவாக கண்டுபிடித்து தாக்குகின்ற கருவிகள் அமெரிக்க படைகளிடம் உள்ளன.

அமெரிக்க மத்திய படைப்பிரிவின் தலைமை அதிகாரி ஜெனரல் ரொமி பிராங்ஸ், கட்டார் (Qatar) வந்து சேர்ந்திருக்கிறார். அவருடன் சுமார் 1,000-அமெரிக்க மற்றும் பிரிட்டன் கமாண்டர்களும் தலைமையகங்களின் இராணுவ அதிகாரிகளும் வந்திருக்கின்றனர். "இன்டேர்னல் லுக்" - என்று அழைக்கப்படும் போர் பயிற்சியை நடத்துவதற்காக அவர்கள் வந்திருக்கின்றனர். ஈராக் மீது படை எடுப்பதற்கு பயன்படுத்த வேண்டிய போர் ஆயத்த பயிற்சிகளை அவர்கள் மேற்க்கொள்வார்கள், 10-ஆண்டுகளுக்கு, முன்னர் "பாரசீக வளைகுடாவில்" போர் துவங்கப்படுவதற்கு முன்னர் இதே போன்ற, இதே பெயர் கொண்ட போர் பயிற்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன் காட்டுமிராண்டித்தனமான போருக்கு தயாராகி வருகின்றது என்பதை விவரிக்கின்ற வகையில் வெள்ளை மாளிகை, இந்த வாரம் அமெரிக்க காங்கிரசில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருக்கின்றது. ஈராக், படையெடுக்கும் அமெரிக்க துருப்புகளுக்கு எதிராக இரசாயன அல்லது உயிரியியல் ஆயுதங்களை பயன்படுத்துமானால், அமெரிக்க படைகள் அணு ஆயுதங்கள் உட்பட ஈராக்கை அடக்கி ஒடுக்குகின்ற வலிமையை பயன்படுத்தும் என, அந்த அறிக்கையில் புஷ் நிர்வாகம் எச்சரிக்கை செய்திருக்கின்றது. அந்த அறிக்கைக்கு, "மக்களை கொன்று குவிக்கும், ஆயுதங்களுக்கு எதிரான, போர் புரியும் தேசிய உத்தி" - என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கை மத்திய கிழக்கு நாடுகளில் பீதியை அதிகரித்திருக்கின்றது. 1945-ம் ஆண்டு, ஹிரோஷிமா, மற்றும் நாகசாஹியில் அமெரிக்கா அணு குண்டு வீசி தாக்கியதற்கு பின்னர் இந்த படை எடுப்பு முதல் அணு ஆயுதப்போரை துவக்கிவிடுமோ என்ற அச்த்தை உருவாக்கியுள்ளது.

அதே நேரத்தில் ஈராக்கின் மீது படை எடுக்கும்போது, கண்ணி வெடிகளை பயன்படுத்த தனக்கு உரிமை உண்டு என அமெரிக்க இராணுவ, தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. பஹ்ரைன், கட்டார், ஓமன், குவைத், சவூதி அரேபியா, இந்து மகா சமுத்திரத்திலுள்ள பிரித்தானிய காலனி தீவான டியாகோ ஷிகா (Diego Garcia), ஆகியவற்றில் அமெரிக்கப் படைகள் கண்ணி வெடிகளை குவித்திருப்பதாக, யூ.எஸ்.ஏ. டுடே என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

2003-வாக்கில் கொரியத்தீவு தவிர உலகம் முழுவதிலும் கண்ணி வெடிகள் பயன்படுத்துவதை அமெரிக்க இராணுவம் நிறுத்திவிடும் என ஏற்கனவே வாஷிங்டன் உறுதியளித்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும், கண்ணி வெடிகளுக்கு, 20,000-மக்கள் பலியாகிறார்கள். அவர்களில் 80-சதவிகிதம் பேர் சிவிலியன்கள், அவர்களில் 3-ல் 1-பகுதியினர் குழந்தைகள். இராணுவ நடவடிக்கைகள் முடிந்து நீண்ட நாட்களுக்குப் பின்னரும், கண்ணி வெடிகளுக்கு மக்கள் பலியாகிறார்கள்.

கண்ணி வெடிகள் மிக "அவசியமானதும் முக்கியமானதுமான பங்கை" வகிக்கின்றன. எனவே, அமெரிக்க தளபதிகள் ஈராக் போரில் கண்ணி வெடிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என, பென்டகன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved