World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தியா

India: Ayodhya campaign heightens the danger of communal conflict and war

இந்தியா: அயோத்தி பிரச்சாரம் வகுப்புவாத மோதல் மற்றும் யுத்த மோதல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது

By Sarath Kumara
12 February 2002

Back to screen version

ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி (BJP) யுடன் தொடர்புடைய தீவிரவாதக் குழுவான உலக இந்து பேரவை (VHP) வட இந்திய நகரமான அயோத்தியில் இந்துக் கடவுள் ராமனுக்கு கோயில் கட்டுவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 1992-ல் இந்து வெறியர்களால் இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் (மசூதி) இருந்த இடத்தில் கோவில் கட்டப் போவதாய் விஸ்வ இந்து பரிஷத் (வி.இ.ப) வலியுறுத்தி வருகிறது. இந்தியாவும் பாக்கிஸ்தானும் பதட்டம் மிக்க வகையில் இராணுவத்தைத் தூர வைத்திருக்கும் நிலையில் இந்தப் பிரச்சாரமானது மத வகுப்புவாத அச்சுறுத்தலைத் தூண்டி வருகிறது.
விஸ்வ இந்து பரிஷத் ஆனது பிஜேபி தலைமையிலான அரசாங்கம் கட்டுமானப் பணிகளை அனுமதிக்க நிலத்தை ஒப்படைப்பதற்கு மார்ச் 12 ஐ காலக்கெடுவாக விதித்திருக்கிறது. அவ் இயக்கமானது தனது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் அயோத்தியிலிருந்து புதுதில்லிக்கு நடைப் பயணம் மேற்கொண்டது. ஆனால் அது பல ஆயிரம் ஆதரவாளர்களை மட்டுமே ஈர்த்தது. 1992ல் விஸ்வ இந்து பரிஷத் அதனுடைய சகோதரக் குழுக்களான ராஷ்ட்ரிய சுயசேவக் சங்க் (ஆர்.எஸ்.எஸ்) போன்றவற்றுடன் சேர்ந்து பாதுகாப்பு வளையத்தை உடைப்பதற்கு ஆயிரக்கணக்கானோரை அணிதிரட்டி மசூதியை இடித்து அழித்தது.
மசூதி இருந்த இடம், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டரீதியான சண்டைகளுக்கு ஆளாகி உள்ளது. அதனை உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தின் கைகளில் அளித்திருக்கிறது. வி.இ.ப, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏனைய இந்து பேரினவாத அமைப்புக்கள் சட்ட ரீதியான வழக்கின் விளைவை கிடப்பில் போட்டு, மசூதி இருந்த இடத்தைச்சுற்றி கோவில் கட்ட தங்களை அனுமதிக்குமாறு கோரின. அரசாங்கத்தினதோ அல்லது நீதிமன்றத்தினதோ முடிவைப் பொருட்படுத்தாமல், மார்ச் 15 அளவில், சிற்பக் கற்களையும் தூண்களையும் அப்பகுதிக்கு கொண்டு செல்லப்போவதாக வார முடிவில் வி.இ.ப பேச்சாளர் ஒருவர் அறிவித்தார்.
இப்பிரச்சினையானது மிகவும் பற்றி எரியக் கூடியதாக இருக்கிறது. டிசம்பர் 1992ல் பாபர் மசூதி இடிப்பானது இப்பிராந்தியம் முழுவதும் கலவரத்தைத் தூண்டி விட்டது.1947ல் துணைக் கண்டம் பிரிவினை செய்யப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட மோசமான வகுப்புவாதக் கலவரத்தில் 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர். பம்பாயில், முஸ்லிம் கடைகளும் வீடுகளும் கொள்ளையிடப்பட்டு சூறையாடப்பட்டன, தீ வைத்துக் கொளுத்தலும் இனப்படுகொலைகளும் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்றன. பதிலுக்கு பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானில் முஸ்லீம் தீவிரவாதிகள் இந்துக்களைத் தாக்கினர்.
மொகலாயப் பேரரசர் பாபரின் படைத்தளபதிகளுள் ஒருவரான மீர்பாக்கி 16 ம் நூற்றாண்டில் இந்துக் கோவிலை இடித்துத் தரைமட்டமாக்கி, அங்கு மசூதியைக் கட்டியதாக இந்து அடிப்படைவாதிகள் கூறுகின்றனர். நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மசூதி அழிப்பானது, இந்தியாவில் இந்துத்துவம் மற்றும் இந்துக் கலாச்சாரத்தை நிலைநாட்டவும் "முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களின்" மரபுரிமைச் செல்வங்களை அழிக்கவுமான அவர்களின் பரந்த, முற்றிலும் பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலின் பகுதியாகும். ஆர்.எஸ்.எஸ் தலைவர் எஸ். சுதர்சனின்படி, இந்தியாவில் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள முஸ்லிம்கள், "பெரும்பான்மை சமூகத்தின் 'கலாச்சாரத்தை' கட்டாயம் ஏற்க வேண்டும்" என்பதாம்.
பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயி மற்றும் உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி உட்பட பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் நீண்டகால உறுப்பினர்கள் ஆவர். அனைவருமே ஆர்.எஸ்.எஸ் உறுதிமொழியை எடுத்திருக்கின்றனர்: "புனிதமான எனது இந்து மதம், இந்து கலாச்சாரம், இந்து சமுதாயம் இவற்றின் மேம்பாட்டின் பொருட்டு, எனது புனிதமான தாயகத்தின் முன்னேற்றத்திற்காக என்னையே அர்ப்பணிப்பேன்."
பாபர் மசூதியை இடித்ததில் அத்வானிக்கும் மற்றைய பி.ஜே.பி தலைவர்களுக்கும் உள்ள அவர்களின் நேரடி சம்பந்தத்தின் காரணமாக வழக்குகளை எதிர் கொண்டனர் ஆனால் ஒருவரும் குற்றவாளியாகத் தீர்மானிக்கப்படவில்லை. கடந்த அக்டோபரில் பி.ஜே.பி இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள் ஒரு படி மேலே சென்று, மொகலாயப் பேரரசர் ஷாஜஹானால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹாலில் மேற்கவிவாக உள்ளே பதிக்கப்பெற்றிருக்கும் சலவைக் கல்லினை உருச் சிதைத்தனர்.
வாஜ்பாயி அரசாங்கமானது இப்பிரச்சினை தொடர்பாக மிதித்துத் தள்ளி நடையிடுகிறது. பி.ஜே.பி தலைவர்களில் ஒருவர் கூட பாபர் மசூதி அழிப்பில் தங்கள் பங்களிப்பிலிருந்து பின்வாங்கவில்லை. கடந்த ஜூலையில் அத்வானி, மசூதி வளாகத்தைச்சுற்றி இருந்த போலீஸ் அரணை இந்து வெறியர்கள் கும்பல் உடைத்து உள்ளே நுழைந்ததை விவரிக்கும்போது தனது வாழ்வின் "மிக மகிழ்ச்சியான தருணம்" அது என்றார். கடந்த ஆண்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சட்ட நுட்பம் என்ற அடிப்படையில் அவருக்கு சாதகமான முறையில் கைவிடப்பட்டன.
மேலும் அடுத்த இருவாரங்களில், பி.ஜே.பியானது அதன் கோட்டையான அயோத்தி நகர் அமைந்துள்ள உத்திரப்பிரதேசம் உள்ளடங்கலாக வரிசையாக மாநிலத் தேர்தல்களை எதிர் கொள்ளப் போகிறது. இக்கட்சியானது கடந்த ஆண்டு ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் துடைத்துக் கட்டப்பட்டது, அது மேலும் இழப்பைத் தாங்க முடியாததாக இருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிக ஏழ்மையான மாநிலங்களுள் ஒன்றான இம்மாநிலத்தில் ஆழமாகி வரும் சமூகப் பிளவினை இருட்டடிப்புச் செய்வதற்கு, இராமர் கோவில் கட்டுவதற்கான விஸ்வ இந்து பரிஷத்தின் பிரச்சாரத்தை உத்திரப் பிரதேசத்தில் உள்ள பி.ஜே.பி தலைவர்கள் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்வதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
அரசாங்க எதிர்ப்பு
ஆயினும், அதேநேரத்தில், வாஜ்பாயி விஸ்வ இந்து பரிஷத்தின் கோரிக்கைகளுக்கு இதுவரை உடன்படவில்லை. அவர்களின் மார்ச் 12 இறுதிக்கெடுவுக்கு முன்னர் "தீர்வு" காணப்படும் என்று வி.இ.ப தலைவர்களுக்கு உறுதி அளிக்கவில்லை என்று மறுத்தார். அவர் அவர்களை சட்ட விதியை மதிக்குமாறும் நீதிமன்றங்களை அவமதிக்கும் எந்த முயற்சியும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உண்டு பண்ணும் என்றும் எச்சரித்தார். அவர் கடும் போக்கினரான அத்வானியால் ஆதரிக்கப்பட்டார். அத்வானி வி.இ.ப.வை பிரதமரின் அறிவுரையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
அயோத்திப் பிரச்சினையை வெளிப்படையாகத் திணிப்பதற்கு பி.ஜே.பி-ன் வெளிப்படையான தயக்கத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பாராளுமன்றத்தில் கட்சி பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அது 1998ல் பல சிறிய, பிராந்திய அடிப்படையிலான கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) அமைப்பதற்கு, அதன் கூட்டணிக் கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை இழப்பது பற்றி கவலைப்படுவதால், பி.ஜே.பி ராமர் கோவிலைக் கட்டுவது உட்பட அதன் இந்து வகுப்புவாத நிகழ்ச்சி நிரலைத் தள்ளி வைக்க வேண்டி வந்தது.
மிகவும் அடிப்படையில் இந்திய ஆளும் வர்க்கத்தின் பகுதிகள் 1990களில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தால் உண்டு பண்ணப்பட்ட வளர்ந்து வரும் சமூக துருவமுனைப்படுத்தலில் இருந்து திசை திருப்புவதற்கான சாதனங்களாக பி.ஜே.பி மற்றும் அதன் இந்து அடிப்படைவாத நிகழ்ச்சிநிரலை ஆதரிக்கின்றது. இருந்தும் பரந்த அளவில் வெடித்து எழும் எந்த வகுப்புவாத வன்முறையும் தனியார்மயமாக்கல் மற்றும் சமூக செலவினங்களை வெட்டல் ஆகியவற்றை கீழறுக்கக்கூடும் மற்றும் அந்நிய மூலதனப் பாய்வைத் தடுத்துவிடும் .
அதன் விளைவாக, பிரதான இந்திய செய்தித்தாள்களில் உள்ள தலையங்கங்கள் வி.இ.பவுக்கு எதிராக வாஜ்பாயி கடும் நிலைப்பாட்டை மேற்கொள்ளுமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டன. எடுத்துக் காட்டாக, இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டது: "முழு இந்து சமுதாயத்திற்குமாக பேசுவதாக தவறாகக் கூறிக் கொள்ளும் ஒரு இயக்கம் அதன் ஆத்திரமூட்டும் நிலைகளால் நாட்டைப் பணயம் வைப்பதற்கு அனுமதிப்பது வருந்தத்தக்க விஷயமாகும். அவர்களது தலைவர்கள் பேசிய சில பேச்சுக்கள், குறிப்பிட்ட மதக் குழுவை இழிவுபடுத்துகிறது என்பதற்காக என்று கூட குறிப்பிடத் தேவையில்லை, சாதாரண நாகரிக விதிமுறைகளை மீறுகிறது என்பதற்காக அவர்களை நேராக சிறைக்கு அறுப்பி இருக்க வேண்டும்."
இந்தியன் எக்ஸ்பிரஸ் கூட வி.இ.ப மீது கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியது: "அடிப்படையில், அயோத்தி சர்ச்சை தொடர்பான தீர்வு சம்பந்தமான நிகழ்ச்சிப்போக்கு, ஏற்கனவே நடைமுறையில் இயங்கிக் கொண்டு இருக்குமானால், அதன் சொந்த நடைவேகத்தில் செல்லட்டும். அது ஒரு குண்டர்கள் கும்பலின், வேகமாகத் தரங்கெடுக்கும், சமுதாயத்திற்கு கேடுபயக்கும் விஷயத்தால் இடையூறுக்கு ஆளாகுவதை அதுவே அனுமதிக்காது."
செப்டம்பர் 11க்குப் பிறகு, வாஜ்பாயியின் கணக்கீடுகளில் இன்னொரு காரணியும் நுழைந்திருக்கிறது. ஆயுதம் ஏந்திய காஷ்மீரி பிரிவினைவாதக் குழுக்களை பாக்கிஸ்தான் கடிவாளமிட்டு அடக்க வேண்டும் என்ற இந்தியக் கோரிக்கைகளை கடுமையாய் அழுத்தம் கொடுப்பதற்கு அவர் புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்பதை சுரண்டிக் கொண்டார். டிசம்பர் 13 பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, புதுதில்லி இஸ்லாமாபாத் மீது வரிசையாய் கோரிக்கைகளை வைத்தது மற்றும் அவை நிறைவேற்றப்படாவிட்டால் விவரிக்காத இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தியது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காததற்காக பாக்கிஸ்தானைக் கண்டிக்கும் வாஜ்பாயியின் திறனானது, எவ்வாறாயினும், அவரது அரசாங்கம் வி.இ.பவுடனும் அதன் ஆத்திரமூட்டும் வகுப்புவாதப் பிரச்சாரத்துடனும் மிக நெருக்கமாக இனங்காணப்படுமானால் சமரசப்படுத்தப்பட்டு விடும். மேலும், பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கமானது இந்து தீவிரவாத நலனை வெளிப்படையாக முன்னெடுத்தால், அது அமெரிக்காவுடனான இந்தியாவின் அபிவிருத்தி அடைந்துவரும் பிணைப்பை சீர்குலைத்து விடும். புஷ் நிர்வாகமானது அதன் இந்தியக் கூட்டாளிகளின் அடிப்படைவாத நிகழ்ச்சிநிரல் மீது தான் கடைப்பிடிக்கும் அமைதியை உடைப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படும்.
காங்கிரஸ் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சி.பி.ஐ (எம்) ) உள்ளடங்கலான பிரதான இந்திய எதிர்க்கட்சிகள் வி.இ.ப பிரச்சாரம் தொடர்பாக பயந்து ஒதுங்கும் சிறு எதிர்ப்புக்களை செய்துள்ளன. காங்கிரஸ் தலைவர் முன்சிங் "வி.இ.ப நெருப்போடு விளையாடுகிறது" என்று எச்சரித்தார். சி.பி.ஐ (எம்) அரசியற் குழு கடந்த மாதம் பின்வருமாறு கூறியது: "அயோத்தி, லக்னெள மற்றும் கான்பூரில் பேசிய பேச்சுக்கள் சிறுபான்மையினருக்கு எதிராக உணர்ச்சியைக் கிளறிவிடக்கூடிய வெற்று ஆரவாரப் பேச்சாக இருந்தன." சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் வி.இ.ப வைத் தடை செய்யுமாறு கோரினார்.
மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதாக அவர்களது எல்லாவிதமான கூற்றுக்ளையும் பொறுத்த மட்டில், இக்கட்சிகள் வகுப்புவாத உணர்வுடன் சாகசம் புரிய, அதற்கு வேண்டுகோள் விடுக்க மற்றும் நேரத்தில் அதனைத் தட்டி எழுப்ப தயங்குவதில்லை. ஒரு ஆண்டுக்கு முன்னர்தான், படுகொலை செய்யப்பட்ட பிரதமர் ராஜிவ் காந்தியின் விதவையும் தற்போதைய காங்கிரஸ் தலைவருமான இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி, கும்பமேளா மதவிழாவின்போது கங்கையில் குளித்ததன் மூலம் தனது இந்து நற்சான்றுகளை நிரூபித்தார். முன்னாள் சி.பி.ஐ (எம்) தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசு காங்கிரஸ் எதிர்ப்பு கூட்டு பிரச்சாரத்தில் வாஜ்பாயியுடன் மேடையைப் பகிர்ந்திருக்கிறார்.

விஸ்வ இந்து பரிஷத்தைப் பொறுத்தவரை, அதன் பிரச்சாரம் வகுப்புவாதப் பதட்டங்களைக் கிளறி விடும் மற்றும் பாக்கிஸ்தானுடனான யுத்த அபாயத்தைக் கூட்டும் உள்ளுறையைக் கொண்டிருக்கிறது என்பதை நன்கு அறிந்துள்ளது. அதன் தலைவர்கள் வாஜ்பாயியை இன்னும் கூடிய கடும் நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டும் என்று ஆரவாரித்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். இராமர் கோவிலைக் கட்டுவதை நிறுத்துமாறு கேட்கத் தயாராக இருக்கும் ஒரே சூழ்நிலை இந்திய இராணுவம், பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரைத்தாக்கினால்தான் என்பதை அவர்கள் குறி காட்டி இருக்கின்றனர். அந்நடவடிக்கை பெரும்பாலும் நிச்சயமாக இரு ஆணு ஆயுத அரசுகளுக்கு இடையில் யுத்தத்தைத் தூண்டிவிடும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved