World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்

Release Daniel Pearl!

டானியல் பேர்லை விடுதலை செய்!

Statement of the WSWS editorial board
31 January 2002

Back to screen version

உலக சோசலிச வலைத் தளம், (WSWS) வோல் ஸ்ரீற் ஜேர்னல் (Wall Street Journal) பத்திரிகையின் நிருபரான டானியல் பேர்லை இம்சைப்படுத்தாமல் உடன் விடுதலை செய்யுமாறு, அவரை தடுத்து வைத்திருப்பவர்களிடம் கோருகின்றது.

உலக சோசலிச வலைத் தளம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதலை சமரசமற்று எதிர்த்து வந்ததை முழு உலகமும் அறியும். எனவே டானியல் பேர்லை தடுத்து வைத்திருப்பவர்களுடன் வெளிப்படையாக பேசுவதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது: இந்த நிருபரை கடத்தும் நடவடிக்கை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிகொடுப்பதற்கு பதிலாக, புஷ் நிர்வாகத்திற்கு நேரடியாக உதவி செய்வதாகும். டானியல் பேர்லுக்கு எதிரான கொலைப் பயமுறுத்தல் நடைமுறைப்படுத்தப்படுமாயின் அது ஒரு கொடூரமான கொலையாக இருக்கும். தொடர்ந்து வரவிருக்கும் பிரதிக்கிரியைகள் அமெரிக்க அரசாங்கத்துக்கு மத்திய ஆசியவிலும் உலகம் பூராகவும் தனது ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் எனும் பெயரில் முன்னெடுத்துச் செல்வதற்காக மேலும் ஒரு சாதகமான சந்தர்ப்பத்தை வழங்கும்.

நீண்ட அரசியல் அனுபவங்கள், ஆள் கடத்தல், கொலை, மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் வங்குரோத்தானதும் அடிப்படையில் பிற்போக்கானதுமாகும் என்பதை எடுத்துக் காட்டுகின்றன. கடந்த 25 வருட காலத்தில் ஏகாதிபத்தியத்தின் எதிரிகள் எனக் கூறிக்கொள்ளும் பல குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான நடவடிக்கைகளுக்கு குறைவே இருக்கவில்லை. செப்டம்பர் 11ம் திகதி சம்பவங்கள் உட்பட்ட இவ்வாறான நடவடிக்கைகளின் மொத்த விளைவுகளும், உலகம் பூராவும் பெருந்தொகையான உழைக்கும் மக்களை அரசியல் ரீதியில் கீழறுக்கும் அதேவேளை அமெரிக்க இராணுவ வாதம் மீதான நனவான எதிர்ப்புக்கும் குழிபறித்து வருகின்றன.

டானியல் பேர்லை தடுத்து வைத்திருப்பவர்களிடம் சொல்ல வேண்டிய இன்னுமொரு விடயம் உள்ளது. பிரான்ஸ் பிரஜையும் கற்பிணியுமான மனைவியை கொண்ட ஒரு நிருபரின் உயிருக்கு அச்சுறுத்தல் செய்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்ற முடியும் என அவர்கள் உண்மையில் நம்புவார்களாயின், அது ஏகாதிபத்தியத்தின் உண்மையான சொரூபத்தையும் அதற்கெதிரான போராட்டத்துக்கு உண்மையில் தேவைப்படுவது என்ன என்பதையிட்டும் அவர்கள் எந்தளவில் புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதை அம்பலப்படுத்த மட்டுமே உதவும். மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் உள்ள எண்ணெய் வளங்கள் மீது சவால் செய்யமுடியாத மேலாதிக்க கட்டுப்பாட்டை ஸ்தாபிதம் செய்துகொள்வதற்கான அமெரிக்க ஆளும் கும்பலின் தாக்குதல் இன்னுமொரு பயங்கரவாத நடவடிக்கையால் நிறுத்தப்பட முடியாது. இது அமெரிக்கா உட்பட தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு உயர்ந்த அனைத்துலக இயக்கத்தினால் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட முடியும்.

சமூக விடுதலைக்கான போராட்டமானது, பழிவாங்கும் பயங்கரவாதத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் போஷிக்கப்படுவதல்ல. ஆகவே நாம் மீண்டும் கூறுகிறோம்: டேனியல் பேர்லை விடுதலை செய்!


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved