World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள் : நான்காம் அகிலம்

Ernest Mandel, 1923-1995

A critical assessment of his role in the history of the Fourth International

ஏர்னஸ்ட் மண்டேல் 1923-1995

நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவரது பாத்திரம் பற்றிய ஒரு விமர்சன ரீதியான மதிப்பீடு

23 October 1995
By David North

Back to screen version

Part 1 | Part 2 | Part 3 | Part 4

ஒரு புறநிலையான கருதுதலில் முக்கியத்துவம்

The importance of an objective consideration

ஐக்கிய செயலகத்தின் நீண்டகாலத் தலைவரான ஏர்னஸ்ட் மண்டேல் யூலை 20, 1995ல் மரணமடைந்தார் அவரது மரணம், யுத்தத்துக்குப் பிந்திய நான்காம் அகிலத்தின் வரலாற்றில் பிரபல்யமாகக் குறிப்பிடப்பட்ட ஒரு மனிதரை அரங்கிலிருந்து அகற்றியுள்ளது. எந்த புறநிலையானதும் உண்மையானதுமான (Credible) நான்காம் அகிலத்தின் வரலாற்றில், அவரது வாழ்கையும், வேலையும் கவனமான ஆய்விற்கும் விமர்சன ரீதியான மதிப்பீட்டிற்கும் உரிய விடயங்களாகும்.

மண்டேலினது அரசியல் கருத்துப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் பற்றிய அதனது மதிப்பிட்டினை வழங்க வேண்டிய ஒரு திட்டவட்டமான பொறுப்பு அனைத்துலகக் குழுவின் மேல் விழுந்துள்ளது. எப்படி இருந்தபோதும், நான்காம் அகிலத்தின் வரலாற்றுடன் அறிமுகமான எவரும் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, அனைத்துலகக் குழு ஏர்னஸ்ட் மன்டேலினது மிகவும் உறுதியானதும் விட்டுக் கொடுப்பற்றதுமான அரசியல் எதிராளிகள் என்பதை அறிவர். மண்டேலை பிரதான தலைவராகக் கொண்ட, ஒரு அரசியல் போக்கிற்கு எதிரான, கசப்பான போராட்டத்தின் மத்தியிலேயே 42 வருடங்களுக்கு முன்னர் அனைத்துலகக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

மண்டேலினது வாழ்கை பற்றிய இந்த ஆய்வினது நோக்கம், 1953ல் அனைத்துலகக் குழுவை ஸ்தாபித்தவர்கள் மேற்கொண்ட விவாதங்களையும், முன்னெடுத்த நடவடிக்கைகளையும் தனியே நிபிப்பதற்காக அல்ல. நிட்சயமாய் வரலாறு அதனது உறுதிப்படுத்தல்களைக் கொண்டுள்ளது. ஆனால் நாங்கள் இன்று பயன்படுத்தக்கூடிய விதத்திலான பாடங்களை எங்களுக்கு எவ்வளவு தூரத்திற்கு வழங்குகின்றதோ அவ்வளவுக்கு கடந்தகாலம் பற்றிய ஆய்வு அதனது மகத்தான வளங்களைக் கொண்டுள்ளது. ஆகவே எங்களது நோக்கம் ஏர்னஸ்ட்் மண்டேலுக்கு எதிரான சில இறுதி குழுவாத முடிவுகளை அட்டவணைப்படுத்துவதல்ல, அவரது சோசலிச அர்ப்பணிப்பினது விசுவாதத்தினை கேள்விக்கு உள்ளாக்குவது பற்றிக் கூறவும் தேவையில்லை. பதிலாக அவரது வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வினூடாக நான்காம் அகிலத்தினுள் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் தொடர்ச்சியாக நிலைத்திருக்கின்ற அரசியல் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள முயற்சிக்கின்றோம்.

இந்தப் புள்ளியை இன்னும் அழுத்தமாக தெளிவுபடுத்தப்படவேண்டும். சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ''தொடர்ச்சியாக நிலைத்திருக்கின்ற'' (Enduring) அரசியல் முக்கியத்துவம் நான்காம் அகிலத்துக்குள் சம்பந்தப்பட்டிருந்த அரசியல் பிரச்சினைகளின் உடனடியான தீர்விற்குப் பொருத்தமாக உதவவில்லை. பிலிஸ்த்தின்களுக்கு நான்காம் அகிலத்துக்குள்ளான போராட்டம், விவாதத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்த ஒரு சிலரை தவிர, மற்ற எவருக்கும் எந்தவித முக்கியத்துவமும் இல்லாத குறுங்குழுவாத மோதல்களே அன்றி வேறொன்றுமில்லை.

பூர்சுவா கொள்கை வகுப்பிற்கு பொறுப்பானவர்களின் புத்திஜீவி வங்குரோத்தினை வெளிப்படுத்திய, இந்த நிராகரிப்புவாத அணுகுமுறையினால் நாங்கள் சிறிதளவேனும் தொந்தரவுக்கு உட்படவில்லை. கடந்த 10 வருடங்களில் வந்த சகல எழுச்சிகளும், முக்கிய முதலாளித்துவ நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கு பாரிய ஆச்சரியமாக இருந்தது என்பதை ஒவ்வொருவரும் கவனிக்கவேண்டும். இவர்களில் ஒருவர் கூட கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச அரசுகளின் வீழ்ச்சி தொடர்பாகவும், சோவியத்யூனியனின் உடைவு தொடர்பாக எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஒவ்வொரு பாரிய நிகழ்வுகளும் சர்வதேச முதலாளித்துவம் அறியாமலே நிகழ்கின்றது. ஏன் இன்று கூட கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களுக்கு அடித்தளமாக இருந்த வரலாற்று போக்கிற்கான தெளிவான முற்றான கருத்தை முதலாளித்துவத்தால் கொடுக்க முடியாதுள்ளது. முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியலில் நாளுக்கு நாள் உருவாக்கலில் முட்டாள்தனமும் அறிவீனமும் சிறிதளவு பங்கை வகிக்கவில்லை.

நான்காம் அகிலம், அதன் உருவாக்கத்திலிருந்தே இந்த முழு வரலாற்றுக் காலகட்டத்தின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளால் ஆளுமை செய்யப்பட்டிருந்தது. மீண்டும் பிலிஸ்த்தீயர்களுக்கு நாம் இவ்வாறு கூறுவது, அகந்தையுள்ளதாக கண்ணியமில்லாததாக ஏன் சிரிப்புக்குரியதாகவும் இருக்கும் என நாம் ஊகிக்கலாம். ''அடிப்படையான அரசியல் பிரச்சனைகள்'' உள்ளன என்பதும், இவை ''முழு வரலாற்று காலகட்டத்துடனும்'' தொடர்புடையது என்பதும் நடைமுறைச் சாத்தியமானதை மட்டும் அடித்தளத்தை நினைவில் கொண்டவர்களுக்கு முற்றும் நூதனமாகத் தெரியும். முதலாளித்துவவாதிகள் ''வரலாற்றுக் காலகட்டம்'' என்ற பதங்களை சிந்திப்பதில்லை. அவர்கள் சிந்திப்பது வர்த்தக வட்டங்களையும் அதன் வீழ்ச்சி எழுச்சிகளையும் மட்டுமேயாகும். ஆனால் மார்க்சிசவாதிகளுக்கு வரலாற்றுக் காலகட்டம் என்பது உலக சோசலிசப் புரட்சியாகும், இதற்கான் புறநிலையான முன்நிபந்தனைகள் உலக முதலாளித்துவ அமைப்பினுள் உள்ள தீர்க்கமுடியாத பொருளாதார, சமூக முரண்பாடுகளுள் வேர்கொண்டுள்ளன. இக்காலகட்டத்திற்கான அடிப்படை அரசியல் பிரச்சினைகள் என்பது, தொழிலாள வர்கத்தின் மத்தியில் உள்ள தலைமை நெருக்கடியை தீர்ப்பதுடன் தொடர்பு உடையதுடன், உலக சோசலிசப்புரட்சி முன்னோக்கை முன்னெடுத்து அபிவிருத்தி செய்வதுடன் தொடர்புடையதாகும்.

இந்த நிலைப்பாட்டில் இருந்து, முக்கியமாக பல்கலைக்கழகங்களில் இருக்கும் முதலாளித்துவ புத்திஜீவிகள் கூறுவதற்கு எதிராக 1917 அக்டோபர் புரட்சி வழமைக்கு மாறாக நிகழ்ந்ததொன்றல்ல, அதற்குமாறாக இது சாதாரணமான அதாவது முதலாளித்துவ சமூக வளர்ச்சி போக்கில் ஒன்றும், ஆனால் உலக வராற்றின் அடிப்படையான திருப்புமுனையுமாகும். இந்தப் புரட்சியை செய்த நாட்டின் தலைவிதி தொடர்பாகவோ -இது தொடர்பாக ஸ்ராலினிசம் சோவியத்யூனியனை சீரழிவிற்கு இட்டு செல்லும் என நீண்ட காலத்திற்கு முன்னரேயே ட்ரொட்ஸ்கிச இயக்கம் கூறியுள்ளது என்பது ஒரு வரலாற்று ஆவணம் ஆகும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்திற்கான மிக முக்கியமான தன்மை என்னவெனில், இது இரண்டு முரண்பாடான உலக வர்க்கங்களான முதலாளித்துவ, தொழிலாள வர்க்கத்திற்கு இடையிலான முரண்பாடுகளை இன்னும் கொண்டிருக்கின்றது என்பதாகும்.

1917ன் பின்னர் பாரிய அளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது என்பதை ஒருவரும் மறுக்கமுடியாது. ஆனால் இந்த மாற்றங்களானது சமூகத்தின் பொருளாதார அடித்தளத்திலும் வர்க்கக் கட்டமைப்பிலும் எந்தவித அடிப்படை மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக சமுதாயத்தின் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முக்கியமானது. நகர குடிவாசிகளின் பாரிய பெருக்கமும், விவசாயிகளின் அளவில் குறைவும், அவர்களது பொருளாதார முக்கியத்துவ இழப்பும் சமூகத்தின் வர்க்கத்துருவப்படுத்தலை தீவிரமாக்கியுள்ளது. ஆனால் நாங்கள் தனிச்சொத்துடமையையும் முதலாளித்துவ உற்பத்தி முறையையும், உபரி மதிப்பு தொழிலாள வர்க்கத்தின் உழைப்பில் இருந்து பிழிந்தெடுக்கப்படுகின்ற முதலாளித்துவ அமைப்பினுள் தான் தொடர்ந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நாங்கள் சகல பக்கங்களில் இருந்தும் மார்க்சிசத்தின் வீழ்ச்சியை கேட்கின்றோம். சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது, அவர்கள் எண்ணிக்கொண்டதன் அதி உயர் நிகழ்வாகும். பொதுவாக இந்த வலியுறுத்தலானது தத்துவார்த்த ரீதியில் பிழையானதும், மார்க்சிசத்தை ஸ்ராலினிசத்துடன் அடையாளம் கண்டுகொண்ட அடித்தளமில்லாததுமாகும். மார்க்சிசத்தின் தோல்வி தொடர்பாகக் கூறுபவர்கள், ஸ்ராலினிசத்துக்கும் மார்க்சிசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை சிறிதளவு தெரிந்துள்ளார்கள் என்றும் நாம் அறிகிறோம். ஆனால் இவர்கள் வெளிப்படையான வெற்றிகரமான எதிர் நிகழ்வுகளுள் நம்பிக்கையின்மையுடன் கைகளை வீசிக்கொண்டு நிகழ்வுகளைப் பற்றி கவனமாக சிந்திக்காது சோசலிசம் என்பது சாத்தியமற்ற கற்பனை என்று கூறுகின்றனர்.

அக்டோபர் புரட்சியின் சோசலிசக் குறிக்கோள்கள் காட்டிகொடுக்கப்பட்டதும், போல்ஷிவிக்கட்சி அழிக்கப்பட்டதும், ஒரு குறிப்பிட்ட வருடங்களில் நிகழ்ந்த அரசியல் சமூக சீரழிவின் விளைவின் பின்னர் சோவியத்யூனியன் கலைக்கப்பட்டதும் உண்மைதான். தொழிலாள வர்க்கம் பாரிய தோல்விகளை அனுபவிக்க வேண்டியிருந்தது, முதலாளித்துவம் அசாதாரணமான நீண்ட வாழ்கையை கொண்டதென எடுத்துக்காட்டப்பட்டது. ஆனால் இந்த நூற்றண்டின் நிகழ்வுகள் 1971ன் பின்னர் புரட்சிகர போராட்டங்கள் நிரந்தர தன்மையை கொண்டிருந்ததை எடுத்துக்காட்டின. ஒரு சில வருடங்களின் பின்னர் முதலாளித்துவத்தின் உயிர்வாழ்வு, அதன் மிகத்தீவிர பாதுகாவலர்களுக்கே பிரச்சினைக்குரியதாக இருந்தது. இந்த நூற்றாண்டை விளங்கிகொள்வதற்கு ஒன்றும் செய்யப்படவில்லை, மாறாக மார்க்சிசத்தின் தோல்வியைக் காட்ட, விரோதம் காரணமாகவோ மனவிரக்தி காரணமாகவோ முயற்சி செய்யப்பட்டது. ஆனால் 20ம் நூற்றாண்டின் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றை அறிவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் பின்னடைவிற்கும் தோல்விகளுக்குமான உண்மையான காரணங்களை அறியவும் விபரமாக ஆராய வேண்டியுள்ளது.

இப்படியான ஆய்விற்கு, நான்காம் அகிலத்தின் வரலாறு தொடர்பான கடினமான ஆய்வு தேவையாக உள்ளது. இவ் இயக்கத்தினுள் வர்க்கப் போராட்டத்தின் புறநிலை நிகழ்வுகள் பிரதிபலித்ததுடன், அது தத்துவார்த்த ஆய்வாக செய்யப்பட்டும் உள்ளது. நான்காம் அகிலத்தினுள்ளான போராட்டங்களும் விவாதங்களும், இந்த நுற்றாண்டின் துன்பகரமான தீர்க்கமான நிகழ்வுகளால் உருவாக்கப்பட்டவையும், இவ்விசேட நிகழ்வுகள் மூலோபாய அனுபவத்தின் மட்டத்தை உயர்த்தியும் உள்ளது.

தொழிலாள வர்க்கத்தை பயிற்றுவிப்பதென்பது ஒரு நீண்ட கடினமான போக்காகும். தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியென்பது அது சடத்துவ ரீதியாக என்ன அடைந்திருக்கிறது என்பதிலிருந்து அளவிடப்படுவதில்லை அதற்கு மாறாக அது தத்துவார்த்த ரீதியாக எவ்வளவு படித்திருக்கின்றது என்பதிலாகும். தொழிலாள வர்க்கம் இரண்டாம் உலகயுத்த காலப்பகுதி முழுவதிலுமான மூலோபாய அனுபவங்களிலிருந்து எதைப் பெற்றுக்கொள்கிறது என்பதில்தான், புதிய புரட்சிகர காலகட்டத்தினை அது எவ்வாறு எதிர்நோக்கப் போகிறது என்பது தங்கியுள்ளது. எனவேதான் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஏர்னஸ்ட் மண்டேலின் பங்கு என்னவென்பதை ஆராய வேண்டியதன் முக்கியத்துவம் தங்கியுள்ளது.

ட்ரொட்ஸ்கி ஏன் நான்காம் அகிலத்தை நிறுவினார்

Why Trotsky founded the Fourth International

1938ம் ஆண்டு நான்காம் அகிலம் நிறுவப்பட்டபோது, அதன் போராட்டங்களில் நேரடியாக கலந்துகொண்ட தலைமுறையினரை சேர்ந்தவரல்ல ஏர்னஸ்ட் மண்டேல், மண்டேலின் அரசியல் செயற்பாடுகள் 2ம் உலக யுத்தத்தின் பின்னரும் ட்ரொட்ஸ்கியின் படுகொலையின் பின்னருமே ஆரம்பித்தது. எப்படியிருந்தபோதும், மண்டேலின் வாழ்வில் முக்கியபங்கு வகித்த விவாதங்களை விளங்கிக்கொள்வதென்றால், நான்காம் அகிலம் உருவானதற்கு காரணமான நிகழ்வுகளை மீளாய்வு செய்வது முக்கியமானது.

நான்காம் அகிலத்தின் வரலாறு 1938ம் ஆண்டு செப்டம்பர் அதன் நிறுவன மாநாட்டுடன் ஆரம்பமாகவில்லை, அதற்கு மாறாக 1923ம் ஆண்டு இலையுதிர்காலத்திலிருந்து ரஷ்ய கம்யூனிச கட்சியினுள் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழான இடது எதிர்ப்பாளர்களின் உருவாக்கத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. இடது எதிர்ப்பாளர்களின் முதலாவது ஆவணம், கட்சியினுள் அதிகாரத்துவ மயமாக்கங்களுக்கும், உட்கட்சி ஜனநாயகத்தை ஒடுக்குதலுக்கும் எதிரானதாகும். இந்த விவாதம் 1924ம் ஆண்டு ஸ்ராலின் சோவியத் அதிகாரத்துவத்தின் அரசியல் தலைமையாகியதுடன், தனது கொள்கையான தனிநாட்டில் சோசலிசம் என்பதை அறிமுகப்படுத்தியதுடன், ஆழமடைந்ததுடன் சர்வதேச முக்கியத்துவத்தையும் பெற்றது. இக் கொள்கை, சோசலிசத்தை நோக்கி சோவியத்யூனியன் செல்லும் போக்கை, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களில் இருந்து பிளவுபடுத்தியது. இது சோவியத் யூனியனுக்கும் கம்யூனிச அகிலத்திற்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. இக் கொள்கை அகிலத்திற்குள் ஏற்படுத்திய அரசியல் சீரழிவு, முக்கியாமான 1927ல் சீனாவிலும் 1933ல் ஜேர்மனியிலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தொடர் பாரதூரமான விளைவுகள் ஏற்பட காரணமாக இருந்தது.

சோவியத் யூனியனுள் இடது எதிர்ப்பாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சியை சீர்திருத்தம் செய்யலாம் என நினைத்தனர். ஒரு சர்வதேசப் போக்காகவே இடது எதிர்ப்பாளர்கள் கம்யூனிச அகிலத்தை திருத்தலாம் என நினைத்தனர். இப் போராட்டத்தின் உயர்கட்டமாக ஜேர்மனியில் சர்வதேச இடது எதிர்ப்பாளர்கள், மொஸ்கோவால் கட்டுபடுத்தப்பட்டிருந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மீது சுமத்தப்பட்ட அதிதீவிர இடதுசாரி கொள்கையின் விளைவாக, ஹிட்லரின் வெற்றிக்கு பாதையை திறந்து விட்டமைக்கு எதிரான போராட்டமாக இருந்தது.

துருக்கியின் கரையில் இருந்த பிரின்கிப்போவில் நாடுகடத்தப்பட்டு இருந்த ட்ரொட்ஸ்கி கம்யூனிச அகிலத்திற்கும், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாசிச அபாயத்துக்கு எதிரான ஒன்றிணைந்த பொதுப்போராட்டத்திற்காக ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியுடன் ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்கும்படி கோரிக்கை விடுத்தார். சமூக ஜனநாயகத்திற்கும் பாசிசத்துக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை எனவும், ஹிட்லரின் வெற்றியைத்தொடர்ந்து ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறுமெனவும் கூறிய ஸ்ராலினின் கொள்கைகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி ஈவிரக்கமற்ற விமர்சனத்தை முன்வைத்தார். ட்ரொட்ஸ்கி இக் கொள்கையை அரசியல் முட்டாள்தனம் என கூறியதுடன், ஹிட்லரின் வெற்றி பாரிய விளைவுகளை உருவாக்கும் எனவும் இது ஜேர்மன், ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு வீழ்ச்சியாக இருக்கும் எனவும் எச்சரித்தார். இந்த எச்சரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டதுடன், ட்ரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் சமூக பாசிஸ்ட்டுகள் என குற்றஞ்சாட்டப்பட்டனர். 1933ம் ஆண்டு தை மாதம் தொழிளாள வர்க்கத்தின் எவ்வித ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பும் இல்லாமல் நாசிகள் ஆட்சிக்கு வந்தனர். ஒரு சில கிழமைக்குள்ளேயே ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டதுடன், அதன் அங்கத்தவர்கள் நாசிகளால் தமது அரசியல் எதிரிகளுக்காக டாகோ (Dachau) என்ற கிராமத்தில் உருவாக்கப்பட்ட சித்திரவதை முகாமிற்கு அனுப்பப்பட்டனர். சில காலத்தின் பின்னர் ஜேர்மன் சமுக ஜனநாயகக் கட்சி சட்டபூர்வமற்றதென அறிவிக்கப்பட்டு, பாரிய தொழிற்சங்கங்கள் கலைக்கப்பட்டன.

கம்யூனிச அகிலம் ஜேர்மன் சீரழிவிற்கு காரணமான கொள்கைகள் மீதான எவ்வித விமர்சனத்தையும் முன்வைக்க மறுத்து விட்டது. இதன் பின்பு நடந்த அகிலத்தின் கூட்டங்களில், தமது கொள்கைகள் சரியானவை எனவும், இவை தோல்விக்கு காரணமானவையல்ல எனவும் கூறப்பட்டது.

ட்ரொட்ஸ்கி இந்த வெட்கங்கெட்ட, கைவிட்ட அரசியல் குணாதிசய தன்மைக்கு எதிராக 3ம் அகிலம் ஒரு புரட்சிகர இயக்கம் அல்ல என பதிலளித்தார். 2ம் அகிலத்தின் முடிவிற்கு 1ம் உலக யுத்தம் காரணமனதோ, அதேபோல் 3ம் அகிலத்தின் முடிவிற்கு ஹிட்லரின் வெற்றி காரணமாகியது. ஒரு புதிய உலகப் புரட்சிகர இயக்கத்தை கட்டுவது அவசியம் அதுதான் நான்காம் அகிலம்.

விமர்சனத்திற்கு உரிய விடயம்: ஸ்ராலினிசத்தின் தன்மை

Critical issues: The nature of Stalinism

நான்காம் அகிலத்தை நிறுவுவதற்கு விட்ட அழைப்பில் அரசியல் அகநிலை வாதத்திற்கான எந்தவித அடிச்சுவடியும் இருக்கவில்லை. ட்ரொட்ஸ்கி பல வருடங்களாக 3ம் அகிலத்தில் இருந்து உடைந்து போவதற்கான கோரிக்கையை நிறுத்தி வைத்திருந்தார். ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் தலைவிதி அந்தரத்தில் இருக்கும் வரை கம்யூனிச அகிலத்தை சீர்திருத்துவதற்கான போராட்டத்தை கைவிடுதல் காலத்திற்கு முந்தியதாக இருக்கும் என அவர் கருதினார். நாசிகளின் வெற்றியை அடுத்தும் உடனடியாக புதிய அகிலத்தைக் கட்டுவதற்கான கோரிக்கையை தாமதமாக்கினார். அவர் ஜேர்மன் நிகழ்வுகள் தொடர்பாக 3ம் அகிலத்திலுள்ள எந்தவொரு பகுதியாவது விவாதத்திற்கு அழைப்பு விடுக்கின்றதா அல்லது கிரெம்ளின் கொள்கை தொடர்பாக தங்களது விமர்சனத்தை தெரிவிக்கின்றதா என பொறுத்திருந்து பார்த்தார். பின்னர் அவர் விபரித்தவாறு, ஏதாவது ஒரு பிரிவினது சிறு விமர்சனம் கூட, கம்யூனிச அகிலத்திற்குள் மார்க்சிச கொள்கையினை புனரமைக்கலாம் என்ற நம்பிக்கை அற்றுப் போகவில்லை என்பதை எடுத்துகாட்டியிருக்கும். ஆனால் எந்தவித விமர்சனத்திற்கான அடையாளமும் இல்லாமல் போனமை, சர்வதேச இடது எதிர்ப்பாளர்களுக்கு எந்தவித மாற்று வழியையும் வழங்கவில்லை. புறநிலையான அரசியற் சொற்களில் கூறுவதென்றால், உதாரணம் காட்ட முடியாத முக்கியத்துவம் வாய்ந்த சீரழிவிற்க்கு காரணமான கொள்கைகளுக்கு அகிலத்தின் சிடுமூஞ்சித்தனமான அடிபணிவானது வேறுவார்த்தைகளில் கூறுவதெனில் தொழிலாள வர்க்கத்திற்கு பதிலளிக்க தேவையில்லையென இந்த இயக்கம் கருதுகின்றது. அதன் கொள்கைகள், இன்னுமொரு சமூக சக்தியின் அதாவது சோவியத் அதிகாரத்துவத்தின் நலன்களையும் தேவைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

அடுத்து வந்த வருடங்களில் ட்ரொட்ஸ்கி சோவியத் அரசு பற்றிய ஆய்வுகளை ஆழமாக்கியதுடன் இவ் ஆய்வுகளில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை ஆக்கிரமித்து கொண்டுள்ள அதிகாரத்துவத்தின் சடத்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியதன் வெளிப்பாடே ஸ்ராலினின் குற்றங்களும், காட்டிக்கொடுப்புகளும் என எடுத்துக்காட்டினார். சோவியத் அதிகாரத்துவத்தின் பங்கு எதிர்ப்புரட்சிகரமானது என ட்ரொட்ஸ்கி உறுதிப்படுத்தினார். சோவியத் யூனியனுள் சகலவித பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை ஒடுக்கியதும், தனது சொத்துக்களை பாதுகாத்து கொண்டமையும் தனது நலன்களை அதிகரித்து கொண்டதன் மூலம் அதிகாரத்துவம் தேசியமயமாக்கப்பட்ட உற்பத்தி சக்தி உண்மையான திட்டமிட்ட பொருளாதாரத்தின் அடித்தளத்தில் வளர்ச்சி அடைவதற்கு பாரிய தடையாக இருத்தது. சர்வதேச ரீதியாக தொழிலாள வர்க்கத்தின் நலன்களை, அது ஏகாதிபத்திய சக்திகளுடன் செய்துகொண்ட உடன்பாடுகளின் சிறிய அளவிற்குக் கூட கவனமெடுக்கவில்லை ஆனால் சோவியத் யூனியன் மிகவும் சீரழிந்து போய்க்கொண்டிருந்த போதும் அதனை ஒரு தொழிலாளர் அரசு என ட்ரொட்ஸ்கி தொடர்ச்சியாக வரையறுத்தார். அதேவேளை அதன் நீண்ட வாழ்வுக்காலம் அது சோசலிசப் பாதையில் என்றால், அரசியல் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்துவத்தை தூக்கி வீசுவதில் தான் தங்கியுள்ளது என எச்சரித்தார்.

ஸ்ராலினின் அதிகாரத்துவம் ஒரு புதிய சமூக வர்க்கம் என்ற கருத்துகளை எல்லாம் ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். அது அரசியல் அதிகாரத்தை பிரத்தியேகமாக வைத்துகொண்டுள்ளதன் மூலம், தனது சடத்துவ நலன்களை பாதுகாத்து கொள்ளும் ஒரு சமூகத்தட்டில் (A Social Caste) அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கப் புரட்சி மூலம் உருவாக்கிய சொத்துடமையின் மீது தன்னை அடித்தளமாக கொண்டு, தனது பிரத்தியேகமான ஒட்டுண்ணி வாழ்க்கையை பாதுகாத்து கொள்ள தனது அதிகாரத்தை பயன்படுத்துகின்றது. வரலாற்று அர்த்தத்தில் கூறினால், அதிகாரத்துவத்திற்கு சுயாதீனமான வளர்ச்சிப்பாதை இல்லை, எவ்வளவிற்கு அதிகாரத்துவம் தனது அரசியல் அதிகாரத்துவத்தை நெருக்கி பிடித்துள்ளதோ அந்தளவிற்கு சோவியத் சமூகத்தின் சீரழிவு நீடிக்கும். அதாவது பாரிய அபாயம் என்னவெனில் முதலாளித்துவ மறுசீரமைப்பாகும். ட்ரொட்ஸ்கி, அதிகாரத்துவம் ஒரு நீண்டகாலத்தின் பின்னர் புதிய முதலாளித்துவ தட்டொன்று உருவாகுவதற்கான சமூக அடித்தளத்தை உருவாக்கக்கூடிய சக்திகளை உருவாக்கும் என குறிப்பிட்டார்.

இது தொடர்பாக காட்டி கொடுக்கப்பட்ட புரட்சி என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகின்றார். முக்கிய உற்பத்தி முறைகள் எல்லாம் அரசின் கைகளில் குவிந்திருக்கும் நாடு ஒன்றில், அரசியல் அதிகாரம் தனது ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கும் யதார்த்தநிலை, அதிகாரத்துவத்திற்கும் நாட்டின் செல்வத்திற்கும் இடையே புதியதும் இதுவரை தெரியாததுமான ஒரு உறவை உருவாக்குகின்றது. உற்பத்தி முறைகள் அரசிற்கு சொந்தமாகவுள்ளது. ஆனால் அரசு அதிகாரத்துவத்திற்கு 'உடமையாகியுள்ளது', என கூறமுடியும். இப்புதியவடிவம் உறுதியாக்கப்பட்டு, இப்புதிய உறவுகள் சட்டபூர்வமாக்கப்படுமானால், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புடனோ அல்லது எதிர்ப்பில்லாமலோ அவை ஒரு நீண்டகாலப் போக்கில் தொழிலாள வர்க்கப் புரட்சியின் சமூக வெற்றிகள் முற்றுமுழுதாக இல்லாது ஒழிக்கப்படும் நிலைக்கு இட்டுச்செல்லும். (Leon Trotsky, The Revolution Betrayed [Detroit: Labor Publications, 1991], p. 211).

நான்காம் அகிலத்தின் அவசியம்

The necessity of the Fourth International

ட்ரொட்ஸ்கியின் சோவியத் அரசு தொடர்பான ஆய்வும், அதிகாரத்துவத்தின் அரசியல் தன்மை தொடர்பான ஆய்வுகளுமே 4ம் அகிலத்தை அமைப்பதற்கான போராட்டத்திற்கான விஞ்ஞானபூர்வமான அடித்தளமாகியது. சோவியத் அதிகாரத்துவம் பாதுகாத்த சடத்துவ நலன்களுக்கும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ரீதியான நலன்களுக்கும் இடையேயான உடன்பாடுகாணமுடியாத முரண்பாடுகளை எடுத்துகாட்டிய ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தை அமைப்பதற்கான அழைப்பு ஒரு வரலாற்றுத் தேவையே அன்றி தந்திரோபாய நடவடிக்கை அல்ல என வற்புறுத்தினார்.

1930களின் மத்தியில் ஐரோப்பிய இடது சாரிகளில் பெரும்பாலானோருடன் இந்தப் புள்ளியில் ட்ரொட்ஸ்கி தீவிர முரண்பாடு கொண்டிருந்தார். இவர்களில் பெரும்பாலானோர் ட்ரொட்ஸ்கியுடனும், ஸ்ராலினிசம் தொடர்பான அவரின் ஆய்வுகளுடனும் பொதுவான உடன்பாடு கொண்டுள்ளதாக தெரிவித்தனர். ஸ்ராலினிசம் சோவியத் யூனியனுள் கொடுங்கோலான ஆட்சி புரிகின்றது எனவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களைகாட்டி கொடுக்கின்றது என்பதிலும் உடன்பாடு தெரிவித்தனர். எப்படியிருந்தபோதும் புதிய அகிலம் ஒன்றை அமைப்பதற்கான நடைமுறையான முன் ஆலோசனைகளை அதிதீவிரம் எனவும், சாதகமற்றது எனவும் கருதி பின்னடித்தனர். இப்படியான பிரிவினரில் பிரித்தானிய சுதந்திர தொழிற் கட்சி (BILP) யின் லண்டன் பிரிவினர் இவர்களுள் முக்கிய பிரதிநிதிகளாவர். இவர்கள் நான்காம் அகிலத்திற்கான அழைப்பு காலத்திற்கு முந்தியது என்றனர்.

அவர்கள் புதிய அகிலம் ஒன்று செயற்கையாக அமைக்கப்பட முடியாது என கூறியதுடன் புதிய அகிலம் இயற்கையாகவே (பாரிய நிகழ்வுகளூடாக) உருவாக்கப்பட வேண்டும் என்றனர். அதாவது ஒரு வெற்றிகரமான புரட்சியூடாகவே என்றனர். இதற்கு உதாரணமாக 3ம் அகிலத்தை காட்டியதுடன், 1917ம் ஆண்டு போல்ஷிவிக் வெற்றி இதற்கு அடித்தளமாக இருந்தது என்றனர்.

ஓர் ஆழ்ந்த ஐயுறவுவாதமும், அமைதிவாதமும் இவ் விவாதங்களுக்கு பின்னால் இருந்தது. அடிபடையாக ILP, ஜேர்மன் SAP, ஸ்பெயின் Poum, Henricus Snievliet இன் குழுவினர் போன்றவர்கள் பெயர் குறிப்பிடக் கூடியவர்கள், மக்கள் மத்தியில் போதிய ஆதரவு இல்லாமல் புதிய அகிலத்தினை உருவாக்குவது ஒரு அரசியல் சாகசம் என்றனர். 2ம் அகிலத்தின் மிகுதியாக உள்ளவர்களும், 3ம் அகிலமும் இப்போதும் சோசலிச தொழிலாளர்களின் பரந்துபட்ட இயக்கத்தை நடாத்தி செல்கின்றனர். நான்காம் அகிலத்தின் ஆதரவாளர்கள் மிகக் குறைவானவர்களே என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.

நான்காம் அகிலத்தினை உருவாக்குவது காலத்திற்கு முந்தியது என்ற விவாதங்கள் நேரடியான நடைமுறை சம்பந்தமானவை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். பொதுவாக இந்த இயக்கங்கள் நான்காம் அகிலத்தை உருவாக்குவது காலத்திற்கு முந்தியது என்றவர்கள் நடைமுறையில் ஸ்ராலினிசத்துடன் இரட்டைத் தன்மை உடன்பாட்டிற்கு போகக்கூடிய அணுகுமுறையை கொண்டிருத்தனர். இக்காரணத்திற்காகத்தான் ட்ரொட்ஸ்கி இவ் இயக்கங்கள் தொடர்பாக -மத்தியவாதிகள்- எனக் குறிப்பிட்டார். அவர்கள் மார்க்சிசத்திற்கும், ஸ்ராலினிசத்திற்கும் சமூக ஜனநாயகத்திற்கும் இடையில் ஒரு மத்திய வழியைக் கண்டுகொண்டனர். இப்படியான முயற்சியின் பாரதூரமான விளைவுதான் ஸ்பெயினில் அந்திரே நின்னால் தலைமை தாங்கப்பட்ட பூம் கட்சியின் இரட்டைத் தன்மையான கொள்கை, ஸ்பானிய புரட்சியில் ஸ்ராலினிஸ்ட்டுக்களால் அவர்கள் அழிக்கப்பட காரணமாகியது.

மத்தியவாதிகளுக்கு ட்ரொட்ஸ்கி எழுதிய பதிலில் பல கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் அழுத்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையை, முழு உண்மையை, உண்மையைத் தவிர வேறொன்றையும் கூறாத ஒரு கட்சியினால் தான் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்கள் பிரதிநிதித்ததுவப்படுத்த முடியும். தொழிலாள வர்க்கம் தொடர்ந்தும் ஸ்ராலினிசத்தினதும், சமூக ஜனநாயகத்தினதும் ஆதிக்கத்திற்குள் இருக்கும்வரை அது தோல்விகளையும் சீரழிவுகளையுமே சந்திக்கவேண்டியிருக்கும். ஸ்ராலினிஸ்டுக்கள் பலமாக இருக்கிறார்கள் எனக்கூறி, நான்காம் அகிலத்தை உருவாக்குவதை நிராகரிப்பவர்கள், அரசியல் குரல்வளையை நசிப்பதற்கு தொடர்ந்து வழி சமைப்பதுடன், இதுதான் மத்திய வாதிகள் கூறுவதுபோல் புதிய அகிலம் ஒன்று அமைப்பதற்கு ஒரு பாரிய தடையாக இருக்கின்றது. வேறுவார்த்தைகளில் கூறுவதென்றால் மத்தியவாதிகளின் அரசியலானது தொழிலாள வர்க்கம் தப்பமுடியாத சிக்கலான பாதையென்றில் தொழிலாள வர்க்கத்தை கைவிடுதலாகும். SAP தனது கொள்கையை பின்வருமாறு வரையறுத்தது. "புதிய அகிலத்திற்கான பொது அறிவிப்பிற்கான புறநிலையான தேவை அதற்கு இருந்தும், இந்நேரத்தில் அகநிலையான காரணங்களால் சாத்தியமற்றதாக்கப்படுகின்றது". (Quoted in Writings of Leon Trotsky 1934-35 [New York: Pathfinder Press, 1974], p. 262).

இந்த ''அகநிலையான காரணங்கள்'' என மத்தியவாதிகள் புலம்புவது இது இவர்களது ஆழமான பிரச்சினையாகவுள்ளது. தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய புரட்சிகரத் தலைமை தேவை என்பதை விளங்கிகொள்ள முடியாததும், அப்போதிருந்த பாரிய கட்சிகள் மீது தொழிலாள வர்க்கத்திற்கு இருந்த கற்பனைகளை திரைபோட்டு மூடுவதுமாகும்.

ட்ரொட்ஸ்கி இப்படியான நியாயப்படுத்தல்களுக்கு தாக்கம் ஏற்படக்கூடிய வகையில் பதிலாளித்தார். "இலகுவாகக் கூறுவதென்றால் ஒரு புதிய அகிலம் இல்லாமல் தொழிலாள வர்க்கம் நசுக்கப்பட்டுவிடும். ஆனால் மக்கள் இதுவரை இதனை விளங்கிக்கொள்ளவில்லை. ஆனால் மார்க்சிஸ்ட்டுகளின் கடமை என்ன? அகநிலையான காரணியை புறநிலையின் மட்டத்திற்கு உயர்த்துவதும், மக்களின் உணர்மையை, அவர்கள் வரலாற்று தேவையை விளங்கிகொள்ள கூடிய அளவிற்கு உயர்த்துவதுமாகும். இலகுவாகக் கூறுவதென்றால் அவர்கள் இதுவரை விளங்கிகொள்ளாத அவர்களின் நலன்களை விளங்கப்படுத்துவது. மத்தியவாதிகளின் "ஆழமான பிரச்சனைகள்" என்னவெனில் தாமதப்படுத்த முடியாததும் முக்கியமானதும். நோக்கத்தின் முன்னே அவர்களின் ஆழமான கபடத்தனமாகும். SAP இன் தலைவர்களுக்கு வரலாற்றில் வர்க்க உணர்மையுள்ள புரட்சிகர செயற்பாட்டின் முக்கியத்துவம் விளங்கவில்லை. "பிரச்சினை இன்று மக்கள் என்ன நினைகிறார்கள் என்பதல்ல, தலைவர்களும் பாதுகாவலர்களும் எந்த உத்வேகத்துடன் எந்த வழியில் மக்களை தயார் செய்வதற்காக முயற்சி செய்கிறார்கள் என்பதுதான்"

அத்துடன் 1917 போல்ஷிவிக் புரட்சியைப்போல் ஒரு எழுச்சிகரமான பாரிய நிகழ்வு ஒன்றின் ஆதரவில்லாமல் புதிய அகிலம் ஒன்றை நிறுவ முடியாது என்ற கருத்தை நிராகரித்தார். முதலாவதாக போல்ஷிவிக் புரட்சி, மூன்றாம் அகிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவியது. ஆனால் 1930 களின் மத்திய வாதிகள் அக்டோபர் புரட்சியின் மூன்று வருடங்களுக்கு முன்னரேயே (1914ம் ஆண்டு முதலாம் உலகயுத்தம் ஆரம்பத்துடன் இரண்டாம் அகிலத்தின் காட்டிகொடுப்புடன்) லெனின் புதிய அகிலத்திற்கான அழைப்பு விட்டதை எளிதாக மறந்துவிட்டார்கள். அந்நேரம் லெனின் பிரிவினர் இரண்டாம் அகிலத்தினை சேர்ந்தவர்களின் மத்தியில் மட்டுமல்லாது, மிகக்குறைந்த அளவினரான யுத்தத்திற்கு எதிரான சர்வதேசப் புரட்சியாளர்களின் மத்தியிலும் மிகச் சிறுபான்மையினராக இருந்தனர்.

எப்படியிருந்தபோதும் நான்காம் அகிலம் "பாரிய நிகழ்வுகளின்" அதாவது இத்தாலி, சீனா, ஜேர்மனி, அவுஸ்திரியா, செக்கோசிலாவாக்கியா, பிரான்சில் சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் பாரிய தோல்விகளின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் சீரழிவும், அடுத்தடுத்த பாசிசத்தின் வெற்றியும், சோவியத் யூனியனில் சோசலிஸ்டுக்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டதும், பழைய தொழிலாள வர்க்க இயக்கத்தின் வங்குரோத்தினை மட்டுமல்லாது அவற்றின் குற்றத்தன்மையையும் காட்டியதுடன் மனித சமுதாயத்தை ஆதாள பாதாளத்தின் விளிம்பிற்கு இட்டு சென்றது. தொழிலாள வர்க்கம் வரலாற்றுப் போக்கின் எந்த உதவியற்ற பலிக்கடா ஆகாது இருக்கவேண்டுமானால், அது புதிய முன்னேக்கினாலும், வேலைத்திட்டத்தினாலும் ஆயுதபாணியாக்கப்படவேண்டும்.

இங்குதான் மத்தியவாதிகளுக்கு எதிரான வாதத்தின் மிக முக்கிய புள்ளியான "வரலாற்றில் வர்க்க நனவுள்ள புரட்சிகர செயற்பாட்டின்" முக்கியத்துவம் அதாவது புரட்சிகர தலைமையின் பங்கு தொடர்பாக ட்ரொட்ஸ்கியின் விவாதத்திற்கு வருகின்றோம். ட்ரொட்ஸ்கிக்கு, மார்க்சிசத்தின் முக்கிய பொய்மைப்படுத்தலாக இருந்தது என்னவெனில், "வரலாற்றுபோக்கு" என்பது மனிதனின் சிந்தனைகளுக்கும் நடைமுறைக்கும் அப்பாற்பட்ட சுதந்திரமானது என்பதும், அரசியல் நிகழ்வுகள் "புறநிலைமை" களின் விளைவான தவிர்க்க முடியாதும், முன்னரே தீர்மானிக்கப்பட்டது என்பது தான். இந்த அமைதிவாத இயலாமை, வரலாற்றின் உணர்மையின் பங்கையிட்டு கவனம் எடுக்காதோடு, இவ்வுணர்மை வரலாற்று வளர்ச்சிப் போக்கின் புறநிலைப்போக்கின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியதும், அதனை மாற்றகூடியதும் என்பதை நிராகரிக்கின்றது. வரலாறு என்பது தன்னியல்பானபோக்கு என்பதனை ட்ரொட்ஸ்கி நிராகரிக்கின்றார். 1917 புரட்சியில் லெனின் பங்கை, ட்ரொட்ஸ்கி உதாரணமாகக் காட்டுகையில், லெனின் இல்லாமல் அக்டோபர் புரட்சி நடந்திருக்கமுடியாது என்கிறார்.

"லெனின் வரலாற்றுப் போக்கில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். அவர் தொழிலாள வர்க்கத்தின் முக்கிய சத்திவாய்ந்த பிரிவினரின் பகுத்துணரக்கூடிய தன்மையையும் அனுபவத்தினையும் பிரதிநித்துவப்படுத்துகிறார். புரட்சியின் சரியான காலகட்டத்தில், அவரின் பங்கெடுப்பு உறுதியான தலைமையினை தயார் செய்வதற்கும் அதன் மூலம் தொழிலாள வர்க்கத்தினையும் விவசாயிகளையும் ஒன்றினைத்து போராடுவதற்கான நிலைமைகளையும் உருவாக்கியது. வரலாற்றுத் திருப்பு முனைகளின் முக்கிய காலகட்டங்களில் அரசியல் தலைமைகளின் பங்கு, யுத்த நிலைமைகளில் தீர்க்கரலமான நிலைமையில் கட்டளையிடும் தலைமை அதிகாரியின் பங்கைபோன்றது. (Leon Trotsky, The Spanish Revolution 1931-39, [New York: Pathfinder Press, 1973], pp. 361-62).

மத்தியவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் மார்க்சிச வழிமுறைகள் தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகள் எழுந்தன. அகநிலை, புறநிலை தொடர்பான இயக்கவியல் தான் சகல தத்துவஞான பிரச்சனைகளுள் மிகவும் சிக்கலானது. இது புறநிலைக்காரணிகளுள் அகநிலையான சத்திகளின் இயக்கம் தொடர்பாக ஏற்றுக்கொள்வதுடன் சடத்துவவியலை வேறுபடுத்தி பார்க்க முடியாது. தத்துவார்த்த ஆய்வுகளுக்காக நாங்கள் புறநிலைக்காரணிகளை வேறுபடுத்திப் பார்க்க முடிவதோடு (உதாரணமான, முதலாளித்துவ அமைப்பினுள்ள பொருளாதார முரண்பாடுகள்) மற்றவற்றிலிருந்து சுயாதீனமாக கருதலாம். இப்படியான வேறுபடுத்தல் கட்சி தனது அடித்தளத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள தேவையானது. ஆனால் ஆழமான ஆய்வுகளின் வளர்ச்சிக்கு அகநிலைக் காரணகளின் சிக்கலான ஒழுங்கமைப்பின் ஆய்வு எமக்கு அவசியம். இவ் ஆய்வு எமக்கு இல்லாவிடின் புறநிலைமைகள் தொடர்பான எமது விளக்கம் வேறுபட்ட ஒன்றாகவே இருக்கும்.

மார்க்சிசத்தினை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அளவு புறநிலைமைகளின் ஆய்வின் அளவு அதனுள் அகநிலைக் காரணிகளினதும் அகநிலை சக்தியினதும் சாதகமான விளைவுககளை முக்கியமாக தொழிலாள வர்க்கத்தினதும் புரட்சிகர தலைமையினதும் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.

மத்தியவாதிகள் மத்தியில் விமர்சிக்கப்பட்டதற்கு மாறாக அரசியல் சாத்தியக் கூறுகள் தொடர்பாக ட்ரொட்ஸ்கியின் மதிப்பீடுகள் பூரண உயிர்வாழும் தன்மைகளைக் கொண்டிருந்தன. சர்வதேச தொழிலாள வர்க்கமும் அதனது அரசியல் முற்போக்கான பிரிவினரும் எதிர் நோக்கிய பிரச்சனைகள், சிக்கல்கள் தொடர்பாக அக்காலத்தில் இருந்த அனைவரையும் விட ட்ரொட்ஸ்கி விளங்கி கொண்டிருந்தார். இந்தப் பிரச்சினைகள் வெறும் வார்த்தை சாகசங்களினால் வெற்றிகொள்ள முடியாது என்பதை நன்கு தெரிந்திருந்தார். அதேவேளை நான்காம் அகிலத்தை பெயரளவில் நிறுவுவதால், சோசலிசப் புரட்சிக்கான வெற்றிக்கு உறுதியளிக்க முடியாது என்பதையும் அவர் ஏற்றுகொண்டார். ஆனால் தரப்பட்ட புறநிலைமைகளுள் ஆதிக்கத்தை செலுத்துவதற்கான சாத்தியப்பாட்டிற்கு கட்சியின் இருப்பு தேவையாகிறது. புரட்சி காலத்தின் மத்தியில், தொழிலாள வர்க்கத்தை கட்சிக்கு வென்று கொள்ளக்கூடிய தன்மை, கட்சி முன் சென்ற காலங்களில் என்ன அடைந்தது என்பதிலேயே தங்கியிருக்கிறது. கட்சியின் வேலைத்திட்டத்தின் விரிவாக்கம், அரசியல் முன்னோக்கின் வளர்ச்சி, கட்சித் தோழர்களின் தத்துவார்த்த நடைமுறைப் படிப்பினைகள், வர்க்க உணர்வு படைத்த தொழிலாளர்களின் மத்தியிலான ஆளுமையின் வளர்ச்சி, இவையனைத்தும் புரட்சியின் ஆரம்பத்தில் சாதகமானவை.

ட்ரொட்ஸ்கி மேலும் எழுதுகையில், "புரட்சிகரக் காலகட்டத்தின் நிகழ்வுகள் வேகமாக நடக்கையில் வார்த்தைகளில் மதிமயங்காத, பிரச்சினைகளால் பயமுறுத்தப்படாத போராளிகளைக் கொண்ட ஒரு கட்சி புரட்சியின் போக்கினை தெளிவாக விளங்கி கொள்ளுமானால், அது ஒரு சிறிய கட்சியாக இருந்த போதிலும், பாரிய கட்சியாக வளரமுடியும். ஆனால் அப்படியான ஒரு கட்சி, புரட்சிக்கு முன்னைய காலத்தில் தோழர்களை பயிற்றுவிப்பதில் தேவையான காலத்தினை பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் புரட்சி இப்படியான காலத்தினை வழங்காது"

சோசலிசப் புரட்சிக்கான முன்னோக்கு தொடர்பான கலந்துரையாடல்களில், வர்க்கப் போராட்டத்தில் மார்க்சிசக் கட்சியின் சுயாதீன தத்துவார்த்த அரசியல் கடமைகள் முக்கியமான காரணிகள் என்பதற்கு எதிரான சகல போக்குகளும் பாதகமானவை என்பதை வலியுறுத்தினார் ட்ரொட்ஸ்கி இந்தப் புள்ளிக்கு மீண்டும் மீண்டும் திரும்பி வந்தார். புறநிலைமைகள் எவ்வளவிற்கு சாதகமாக இருந்தாலும், தொழிலாள வர்க்கம் ஆட்சியதிகாரத்தை பிடிப்பதற்கான சூழ்நிலையை தவிர வேறொன்றையும் வழங்கப்போவதில்லை. தொழிலாள வர்க்கத்தின் வெற்றியோ அல்லது தோல்வியோ முன்தீர்மானிக்க கூடிய எவ்வித பாரிய வரலாற்று இயக்கவியலும் இல்லை. அக்டோபர் புரட்சியின் 19 வருடங்களின் பின்னர் இதனை ட்ரொட்ஸ்கி மத்தியவாதிகளுக்கு ஞாபகப்படுத்துகின்றார்.

1917ம் ஆண்டு ரஷ்யா பாரிய சமூக நெருக்கடிகளை கடந்து கொண்டிருந்தது. வரலாற்று அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட போல்ஷிவிக் கட்சியை போன்ற கட்சி இல்லாவிடின் மக்களின் அளவிட முடியாத புரட்சிகர சக்தி, எவ்வித பயனற்ற வெற்று வெடியாக போயிருப்பது மட்டுமல்லாமல், இந்த பாரிய எழுச்சி எதிர்ப்புரட்சி சர்வாதிகாரத்தில் முடிந்திருக்கும், வரலாற்றில் வர்க்கப் போராட்டம் முக்கிய இயங்கு சக்தியாகும். இதற்கு சரியான முன்னோக்கும், உறுதியான கட்சியும், நம்பத்தக்க சத்திவாய்ந்த தலைமையும் தேவையேயன்றி பாராளுமன்ற வார்த்தை ஜாலங்களை பேசுபவர்களல்ல, இறுதியான முடிவுவரை போராடக்கூடிய புரட்சியாளர்கள் தேவை. இதுதான் அக்டோபர் புரட்சியின் முக்கிய பாடங்களாகும். (Writings of Leon Trotsky 1935-36, [New York: Pathfinder Press, 1977], p. 166).

தொடரும்.......


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved