World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : பாகிஸ்தான்

Pakistan's Musharraf walks a fine line between war and internal revolt

போருக்கும் உள்நாட்டு கிளர்ச்சிக்கும் நடுவே பாக்கிஸ்தானில் முஷாரப்

By Peter Symonds
15 January 2002

Back to screen version

சனிக்கிழமையன்று பாகிஸ்தானிய ஜெனரல் பர்வெஸ் முஷாரப் ஆற்றிய உரை, இந்தியாவுடனான பதட்டம் மிக்க இராணுவ நிலையை தொலைவில் வைத்திருப்பதற்கு மத்தியில் அவருடைய ஆட்சியின் நிலையற்ற தன்மையை கோடிட்டுக் காட்டுகிறது. புதுதில்லியானது எல்லையில் என்றுமில்லாத பெரிய அளவில் போர் வீரர்களை குவித்துள்ளதோடு மற்றும் "எல்லை தாண்டிய பயங்கரவாத" டிசம்பர் 13ம் தேதி இந்திய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கு இதுதானென குறிப்பிடாத பதில் தாக்குதல்கள் பற்றி அச்சுறுத்தியும் வருகின்றது.

இந்தியாவிலும், அமெரிக்காவிலும் இருந்து வரும் அழுத்தத்தின் காரணமாக, முஷாரப் பாக்கிஸ்தானில் இருந்து செயல்படும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோருவதை எதிர்கொள்ளும் வகையில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை அறிவித்தார். இருப்பினும், அதே நேரத்தில், எதிராளி இந்தியாவிற்கு சலுகைகள் காட்டுவதாகத் தோன்றுவதால் தூண்டப்பட்டு வரும் உள்நாட்டு எதிர்ப்பை, குறிப்பாக இராணுவத்தின் மத்தியிலான எதிர்ப்பை எச்சரிக்கையுடன் தவிர்க்க முயல்கிறார். ஆப்கானிஸ்தானில், தலிபான் ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை நிறுத்த அமெரிக்காவிற்கு பணிந்து போனதால், இந்த இராணுவ பலசாலி, துரோகி என முஸ்லிம் அடிப்படை மதவாதிகளால் ஏற்கனவே கண்டனம் செய்யப்பட்டார்.

முஷாரப் "தேச நலனின் பேரில்" செயல்பட்டதாகவும் "எவருடைய அறிவுரையின் பேரிலேயோ அல்லது அழுத்தத்தின் பேரிலேயோ" தான் செயல்படவில்லை என்றும் வலியுறுத்திய அதேவேளை, அவரது பேச்சின் முக்கிய அம்சம் உண்மையில் வாஷிங்டனால் அறிவுறுத்தப்பட்டது. அமெரிக்க அரசுத்துறைப் பேச்சாளர் ரிச்சர்ட் பெளச்சர் வெள்ளி அன்று வெளிப்படையாக அறிவித்தவாறு, "செயலாளர் (கொலின் பாவெல்) அவர் எடுக்க விரும்பும் அடிகளைப்பற்றி... அவருடன் பேசிக்கொண்டிருந்தார். ஆம், ஆகையால் அவர் என்ன செய்யவிரும்புகிறார் மற்றும் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைப் பற்றி எமக்கு ஓரளவு தெரியும்".

அமெரிக்காவின் கோரிக்கைகளுள் பிரதானமானது, முஷாரப் காஷ்மீரில் போராடும் ஆயுதம் ஏந்திய இந்திய எதிர்ப்புக் குழுக்களை "பயங்கரவாதிகள்" எனக் கண்டிக்க வேண்டும் என்பதாகும். இந்த பிரச்சினை, காஷ்மீர் தொடர்பான நீண்டகால மோதலின் மையத்திற்குச் செல்கிறது. 1947- சுதந்திரத்திற்குப் பின் இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த மூன்று போர்களில் இரண்டைத் தூண்டிவிட்டுள்ளது. பாக்கிஸ்தான், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் மாநிலத்தின் மீது இந்திய ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளவேயில்லை. இஸ்லாமாபாத் எப்பொழுதுமே காஷ்மீர் போராளிகளை "சுதந்திர போராட்ட வீரர்கள்" என்றே கூறிவருகிறது.

தன்னுடைய உரையில், முஷாரப் காஷ்மீருக்கு "தார்மீக, அரசியல், இராஜதந்திர ஆதரவை" நல்குவதாக உறுதிபடக் கூறினார். "காஷ்மீர் எமது ரத்தத்திலே ஓடுகிறது" என்று கூறினார். சில குறைபாடுகள் இருந்தாலும், முஷாரப்பின் உரை கடந்தகால வாய்ச்சவடாலிலிருந்து முறித்துக் கொள்வதைக் குறித்தது. காஷ்மீரி "சுதந்திரப் போராளிகள்" குறித்து அவர் எதுவும் கூறவில்லை. "எந்த ஒரு நிறுவனமும் காஷ்மீர் பெயரால் தீவிரவாத, வன்முறை செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது... பயங்கரவாத நடவடிக்கையில் எவரும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அவர்.

தீவிரவாதத்திற்கும் வன்முறைக்கும் காரணமான தீவிரவாத சிறுபான்மை என்று அவர் அழைப்போரின் செல்வாக்குக்கு முடிவு கட்ட பலதரப்பட்ட நடவடிக்கைகளை பாக்கிஸ்தானிய ஜனாதிபதி அறிவித்தார். இது பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது:

* லஷ்கார்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முஹமது என்ற இரு தீவிரவாத அமைப்புகள், டிசம்பர் 13ந் தேதி இந்திய பாராளுமன்றத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தன என இந்தியாவினால் குற்றம்சாட்டப்பட்டவை மீது தடை, மற்றும் மூன்று தீவிரவாத இயக்கங்களான --சுன்னி பிரிவை அடிப்படையாகக் கொண்ட சிப்பா-இ-சஹாபா மற்றும் ஷைட் பிரிவு போட்டி அமைப்பான டெஹ்ரிக்-இ-ஜப்ரியா-- இவை பாக்கிஸ்தானுக்குள் நூற்றுக்கணக்கான குழுச்சண்டை படுகொலைகளுக்கு குற்றம் சாட்டப்பட்டிருந்தன மற்றும் தலிபானுடன் சேர்ந்து போராட பாக்கிஸ்தானியரை திரட்டிய இயக்கமான தெஹ்ரிக்-இ-நிபாஜ்-இ-ஷாரியத் மொகம்மதி (TNSM) ஆகியன கூட சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டன.

கடந்த மூன்று நாட்களாக, பாக்கிஸ்தான் போலீஸ் வலைவீச்சில் இறங்கியது அதன் விளைவாக, தடைசெய்யப்பட்ட குழுக்களைச் சார்ந்த சுமார் 1,500 தீவிரவாதிகளை கைது செய்துள்ளது மற்றும் 390 அலுவலகங்களை மூடியது. முஷாரப் இதற்கு முன்பே லஷ்கர்-இ-தொய்பா மற்றும் (ஜெய்ஷ்-இ முஹமது ஆகிய இயக்கங்களின் தலைவர்களை கைது செய்தது மட்டுமன்றி, இந்த அமைப்புகளின் வங்கி கணக்குகளையும் முடக்கி வைத்தார்.

* அரசு, மசூதிகளையும் மதரஸா எனப்படும் மதவாத பள்ளிகளையும் நெறிப்படுத்தியது. இவை முஸ்லீம் தீவிரவாதிகளின் கிளர்ச்சிக்கான மையங்களாக இருந்தன. பள்ளிகளில் ஒரே குறிப்பிட்ட பாடத்திட்டத்தை பயிற்றுவிக்கும்படி நிர்ப்பந்திக்கப்படும். மசூதிகளில் அரசியல் கிளர்ச்சிக்காக ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்படும். மேலும் முஷாரப் "பொறுப்பு தவறும்" இஸ்லாமிய மதத்தலைவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

சென்ற வாரம், புதுதில்லி இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 20 நபர்களின்களின் பெயர் பட்டியலை பாகிஸ்தானுக்கு அளித்து அவர்களை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது. முஷாரப் பாகிஸ்தானியர்களை இந்திய நீதிமன்றங்களிடம் ஒப்படைப்பதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டார், ஆனால் இந்தியா தனது நாட்டவர்களை ஒப்படைக்கக் கோரி மனுச்செய்ய கதவு திறந்தே விடப்பட்டிருந்தது. மேற்கூறிய பட்டியலில் பாதிப் பேர் இந்தியக் குடிமக்கள் என்று கூறப்படுகிறது.

முஷாரப் இஸ்லாமிய மதவாத தீவிரவாதிகளிலிருந்து எதிர்ப்பை சமாளிக்க, வாஷிங்டனிடமிருந்து இழப்பீட்டை நாடுகிறார். அவர் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதில் அமெரிக்கா தீவிரப் பங்காற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார் மற்றும் குறிப்பாக அவர் " அரச பயங்கரவாதத்தையும், மனித உரிமை மீறல்களையும் காஷ்மீரில் நிறுத்துமாறு" இந்தியாவைக் கேட்கும்படி கூறினார். அவர் "இந்திய ஆக்கிரமிப்புப் படைகளை" கண்காணிக்க மனித உரிமைக் கழகங்கள், சர்வதேச பத்திரிகைகள் மற்றும் ஐ.நா அமைதி காக்கும் படையினரை இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அனுமதிக்குமாறு கோரினார்.

இந்தியாவின் பதில்

புதுதில்லி மேற்கூறிய இந்தக் கோரிக்கைகளில் எதற்கும் இயல்பாக எளிதில் ஒத்துக் கொள்ளாது. உண்மையில் முஷாரப் பேச்சுக்கு பதிலிறுக்கும் முகமாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இந்திய-பாகிஸ்தான் நடுவே மூன்றாம் நாட்டு மத்தியஸ்தத்தை மீண்டும் நிராகரித்தார். காஷ்மீர் பாக்கிஸ்தானுடன் தீர்க்கப்பட வேண்டிய ஒரு உள்நாட்டு விவகாரம் என்றும் சர்வதேச பிரச்சனை அல்ல என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. மேலும் புதுதில்லியானது மக்களை அச்சுறுத்தவும் ஆத்திரமூட்டவும் சித்திரவதை, கற்பழிப்பு, சட்டவிரோத படுகொலைகள் உள்பட தன்னுடைய பாதுகாப்புப் படைகளால் அடுக்கடுக்கான முறைகேடுகளை கட்டவிழ்த்து விடப்படுவதை ஒருபோதும் உறுதிப்படுத்தாது இருந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை, உயர்மட்ட இந்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் ஜஸ்வந்த் சிங் ஒரு அறிக்கை விடுத்தார். அது முஷாரப் பேச்சை அக்கணமே நிராகரித்து உடனே நிறுத்தியது, இதில் பாகிஸ்தானுக்கு அவர் எந்த சலுகையும் காட்டவில்லை, இராணுவத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கவும் இல்லை. அமைச்சர் ஜனாதிபதியின் பேச்சை சம்பிரதாயப் பூர்வமாக வரவேற்றார், ஆனால் இந்தியா "எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு" எதிரான "உறுதியான நடவடிக்கையை" பார்க்க விரும்புகிறது என வலியுறுத்தினார். அவர் எந்த விதமான இராணுவ யுத்த வெடிப்பையும் நிராகரித்தார். "வெறுமனே உரையாற்றுவதுடன் எதிர்பார்ப்பது நடைமுறை ரீதியானதாக இருக்க முடியாது. "வார்த்தைகள் செயலுடன் பொருந்துகிறதா என நாம் கவனிக்க வேண்டும்" என்றார்.

சென்ற மாதம், இந்தியா முன் எப்பொழுதும் இருந்திராத அளவிற்கு இராணுவத்தை பலப்படுத்தி வைத்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளின் படி, இந்தியாவின் ஐந்து லட்சம் போர் வீரர்கள் பாகிஸ்தானுடனான எல்லையிலும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும் (LOC) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவிலிருந்தும் நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் இரயில் மூலமாக படைகள் கொண்டு வரப்பட்டு எல்லையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதேபோல வட கிழக்கில், சீனாவுடனான பதட்டமிக்க எல்லைகளிலிருந்தும் கொண்டுவரப்பட்டது.

இந்திய இராணுவம் இப்பொழுது பாகிஸ்தானுக்கு இலக்கு வைத்து மூன்று "Strike Corps" களை நிறுத்தி உள்ளதுடன் அதற்கு ஆதரவாக 1000 டாங்கிகளையும் ஆயுத வாகனங்களையும் நிறுத்தி உள்ளது. அதன் யுத்த விமானங்கள் குறுகிய தூர ஏவுகணைகளுடன் முன்னணி நிலைகளுக்கு நகர்ந்துள்ளன. அவை அணு ஆயுதங்களை கொண்டு செல்லக் கூடிய திறனைக் கொண்டுள்ளன. பாகிஸ்தானும் இதேமாதிரி எல்லைக்கு படைகளை அனுப்பியும், இந்திய டாங்கிகளின் தாக்குதலையும் தாமதப்படுத்த, சில பகுதிகளில் ஐந்து மைல் வரை, குழிகளைத் தோண்டியுள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையின் இருபுறமும் உள்ள கிராமவாசிகள் போர் மூளப்போகிறது என்று எதிர்பார்த்து ஊரைவிட்டே ஓடிவிட்டனர் அல்லது வெளியேறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்திய ஆளும் மேல்தட்டின் ஒரு பகுதி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க யுத்தத்தைப் பயன்படுத்தி பாக்கிஸ்தானுடனான இப்பிரச்சனையை ஒரேயடியாகத் தீர்த்துவிடலாம் என முயற்சி செய்கின்றது. சென்ற வெள்ளியன்று செய்தியாளர் மாநாட்டில், இந்தியாவின் இராணுவத்தளபதி ஜெனரல் எஸ்.பத்மநாபன் ஆத்திரமூட்டும் வகையில் பாக்கிஸ்தானுடன் பெரிய அளவில் போர் செய்ய இந்தியா "முழுவதும் ஆயத்தமாக" உள்ளது என அறிவித்தார். "நான் பயிற்சி செய்வதற்கு சென்றிருக்கவில்லை. நான் யுத்தத்துக்கு தயார் படுத்தவே சென்றிருந்தேன்" என்றார். அணு ஆயுதங்கள் பயன்படுத்தலைப் பற்றிக் கேட்டபோது, ஜெனரல் பத்மநாபன் இந்தியா எந்தவிதமான அணு ஆயுதத் தாக்குதலுக்கும் அதனை நடத்தியவரை "அதன்பிறகு அவர்களது தொடர்ச்சி எந்த வடிவத்திலும் மீளமுடியாத அளவுக்கு கடுமையாக" தண்டிக்கும் என்றார். பாகிஸ்தானை கடுமையாக தண்டிப்பதாகவும், பின்னாளில் பாகிஸ்தான் மீளவேமுடியாது என்றும் எச்சரித்தார். பத்நாபனின் கூற்றை இந்திய அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்டது அல்ல என்று கூறும் அதேவேளை, அவர் ஒழுங்குபடுத்தப்படவோ அல்லது கடிந்துரைக்கப்படவோ இல்லை. அது பெரும்பாலும் முஷாரப் பேச்சின் நிகழ்வின் பேரில் பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒருவகைத் தடையை வழங்குவதற்கான உத்தியோகப்பூர்வ தலையசைப்பாக இருந்தது.

உத்தியோகபூர்வ இந்திய பதிலானது ஒலிமந்தமாகிப்போகும் அதேவேளை, ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கம் (RSS) போன்ற இந்து தீவிரவாத அமைப்புகள் இந்திய- பாகிஸ்தான் போரை ஆதரிக்கின்றன. RSS தலைவர் கே.சி.சுதர்சன், முஷாரப் பேச்சை நிராகரித்து, இந்தியாவின் மீது பாகிஸ்தான் "வெறுப்பைக் காட்டும் தடாலடி" என்றும் இந்திய அரசு "அதனால் கவரப் பட்டுவிடக்கூடாது" என்றும் கூறினார். பிரதம மந்திரி அடல்பிகாரி வாஜ்பாயியும், உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானியும் RSS-ன் நெடுநாளைய உறுப்பினர்கள் ஆவர். இவர்களுடைய ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதான பகுதியாளர் பாரதீய ஜனதாக் கட்சியாகும். அது 1980 களின் பின்னர் காஷ்மீரில் வெடித்த வகுப்புவாத உணர்வுகளை ஆயுத மோதலாக எரியூட்டி வளர்த்ததில் முக்கிய பாத்திரம் ஆற்றியது. பாகிஸ்தானில் உள்ள அவர்களின் இஸ்லாமிய எதிரணியினர் போல், இந்து அடிப்படைவாத வெறியர்களும் காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைக்கப் பெறுவதற்கு குறைவான எதனையும் ஏற்கமாட்டார்கள். --அவர்களின் விஷயத்தில் அகன்ற இந்தியாவின் ஒரு பகுதியாக--

அமெரிக்கா அதன் பங்கிற்கு முஷாரப் பேச்சை வரவேற்கிறது. இந்திய, பாக்கிஸ்தான் நாடுகளை போர் விளிம்பிலிருந்து பின்னே அடி எடுத்து வைக்குமாறு வற்புறுத்துகிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பாவெல் முஷாரப்பின் உரை, "தைரியமானதும் கொள்கை பூர்வமானதும் ஆன நிலைப்பாடு" என்றும் கூறி, மேலும் "இந்திய பாக்கிஸ்தான் பிரச்சனைகளை அமைதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தீர்த்துக்கொள்ள" இது அடிப்படையை அமைத்துக் கொடுக்கும் என்றும் கூறினார். பாவெல் தனது இந்திய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் இந்த வாரம் பேச்சு நடத்த இஸ்லாமாபாத்திற்கும் புதுதில்லிக்கும் செல்ல இருக்கிறார்.

வாஷிங்டன், இந்திய துணைக் கண்டத்தில் மூளும் போர் பற்றி கவலைப்படுகிறது. பாக்கிஸ்தானை தனது ஆப்கான் போரில் தன்னை ஆதரிக்குமாறு அமெரிக்கா வற்புறுத்தியது. மேலும் அல்கொய்தா மற்றும் தலிபான் தலைவர்களை வேட்டையாட அமெரிக்கா பாக்கிஸ்தான் இராணுவத்தை நம்பியுள்ளது. ஒரு செய்தியின்படி, பாக்கிஸ்தான் குறைந்தது 60,000 துருப்புகளை ஆப்கான் எல்லையிலிருந்து இந்திய எல்லைக்கு அனுப்பியுள்ளது. மேலும் ஆப்கான் போரில் அமெரிக்கா தற்போது உபயோகப்படுத்திய நான்கு பாக்கிஸ்தான் விமானத் தளங்களை இந்தியா பாக்கிஸ்தானுடன் போர் மூண்டவுடன் முதலாவதாக தாக்கக்கூடும்.

பாவெல் இந்திய-பாகிஸ்தான் மோதலைத் தடுக்க முயற்சிக்கும் அதேவேளை, முஷாரப் இந்திய எதிர்ப்பு "பயங்கரவாதக் குழுக்களை" ஒழிக்க வேண்டும் என்ற வாஷிங்டனின் ஒருதலைப்பட்சமான வலியுறுத்தல் இந்திய ஆளும் மேல்தட்டில் உள்ள இந்து மேலாதிக்க சக்திகளுக்கு அது ஒரேயடியான யுத்தத்தை விளைவித்தாலும் கூட, உள்நாட்டை தங்களுக்கு சாதகமாக ஊக்கப்படுத்த மட்டுமே உதவி செய்திருக்கிறது. புஷ் நிர்வாகமானது, இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடனும் அதேபோல வலதுசாரி வாஜ்பாயி அரசாங்கத்துடனும் அமெரிக்க உறவை மிகப் பலப்படுத்தி வருகின்றது. கிளின்டன் நிர்வாகத்தின் கீழ் ஆரம்பித்த மூலோபாய சாய்வு நிலையையே அது பின்பற்றி வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனின் இராணுவ ஆக்கிரமிப்பானது, புதுதில்லி தானும் முழுநிறைக் காப்புறுதியுடன் அதே மாதிரி செய்யலாம் என்ற துணிவை மட்டும் ஊட்டியுள்ளது.

பாக்கிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதம்

ஆப்கானிஸ்தான் போலவே, பாக்கிஸ்தானின் இஸ்லாமிய மதவாதம் பற்றிய கண்டிப்பு முற்றமுழுதான பைத்தியக்காரத்தனமானதாகும். அமெரிக்கா பாக்கிஸ்தான், இராணுவ சர்வாதிகாரி ஜெனரல் ஜியா உல் ஹக்கை 1980-களில் ஆதரித்ததின் மூலம் பாக்கிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதம் வளர்ந்ததற்கு அமெரிக்கா நேரடிப் பொறுப்பை ஏற்கிறது. 1979- இறுதியில் ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் ஆக்கிரமிப்பின் பின்னர், ஆப்கானிஸ்தானுக்குள்ளே சோவியத் எதிர்ப்பு முஜாஹைதின் போராளிகளுக்கு, நிதி, பயிற்சி மற்றும் ஆயுத உதவி அளிப்பதற்கான பெரும் சி.ஐ.ஏ. நடவடிக்கையில் முதலில் கார்ட்டரும் பின் றேகனும் ஜியா ஆட்சியைப் பங்காளியாக ஆக்கினர்.

ஜியா1977-ல் பதவிக்கு வந்த பின்னர் சர்வதேச சமூகத்தால் தீண்டப்படாதவராகவே கருதப்பட்டார். ஆனால் திடீரென அமெரிக்க அரசியல் ஆதரவையும் 3.2 பில்லியன் டொலர்கள் நிதி நன்கொடையையும் பெற்றார். ஏனென்றால் அது சோவியத் ஆதரவு பெற்ற காபூல் அரசை எதிர்க்கும் ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய மதவெறியர்களை ஆதரித்தது. ஜியாவின் இஸ்லாமிய மயமாக்கலுக்கு அமெரிக்கா பாராமுகமாக இருந்தது. இதனால் அடுத்து இருபது வருடங்களில் பாக்கிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதமும் அடிப்படைவாதமும் வலுப்பெற்றது.

பாக்கிஸ்தான் ஆரம்பத்திலிருந்தே அரசியல் முரண்பாடுகளைக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து வகுப்புவாத அடிப்படையில் முஸ்லிம்களுக்கான தேசமாக பாக்கிஸ்தான் உருவாக்கப்பட்டாலும் அது ஒரு இஸ்லாமிய நாடாக அமையவில்லை. பாக்கிஸ்தான் ஸ்தாபகர் மொகம்மது அலி ஜின்னா துருக்கிய தேசிய தலைவர் கமால் ஆட்டாடர்க்கின் ஆதரவாளர் ஆவார். அவர் பாக்கிஸ்தான் அரசியலமைப்புக்கும் சட்டதிட்டங்களுக்கும் ஒரு மத சார்பற்ற திசைவழியை நிறுவ முயன்றார். குடிப் பொதுமைவாத சுபிகார் அலி பூட்டோவால் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி பெற்ற இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாமற்போனதன் பின்னரே ஜியாவின் வருகை திரும்பியது. ஆளும் மேல்தட்டின் கணிசமான பகுதி, அவரது இஸ்லாமிய மயமாதல் திட்டத்தை ஆதரித்தது. பொருளாதார மேம்பாட்டிற்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் போராடும் பாட்டாளி மக்களை திசைதிருப்பவே இந்த இஸ்லாமியமய நடவடிக்கை.

ஜியாவின் கீழ் இஸ்லாமிய அல்லது ஷரியத் சட்டம் திணிக்கப்பட்டது. அது மதவாதிகளின் கைகளை பலப்படுத்தப்பட்டது, இஸ்லாமிய மதவெறி தூண்டிவிடப்பட்டது; பெண்கள், முஸ்லிம் அல்லாதவர் மற்றும் மரபு இல்லா முஸ்லிம் குழுக்களின் ஜீவாதார உரிமைகள் பறிக்கப்பட்டன. சட்டமாற்றங்கள் முஸ்லிம்களை ஒன்றுபடுத்தவில்லை. அதற்கு மாறாக ஷைட் மற்றும் சுன்னி பிரிவுக் குழுக்களுக்கிடையில் வன்முறை அதிகரிப்பைத் திறந்துவிட்டது. இது அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது சொந்த இஸ்லாமிய சட்டங்களைத் திணிக்கவும் மற்றும் பல்வேறு இனக்குழு போட்டியாளர்களிடையே பகைமைகளை வளர்க்கவும் வழிவகுத்தது. நாட்டின் பொதுக் கல்வியில் மொத்த பற்றாக்குறையையும் நலன்புரி சேவைகளையும் சரி செய்யவும், மத சார்பற்ற, சோசலிச கொள்கைகள் பரவுதலை எதிர்க்கவும் ஜியாவும் மதரஸ்ஸா எனப்படும் மதவாத பள்ளிகளைக் கூட ஊட்டி வளர்த்தார்.

அவரது ஆட்சியைத் தக்கவைக்கும் முகமாக, ஜியா இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்குவதாக கூறிக்கொண்டு மக்கள் உரிமைகளின்மேல் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார். வரலாற்று ஆசிரியர் இயான் தல்போட் (Ian Talbot) கூறுவதாவது "உலெம்மாக்கள் (முஸ்லீம் மத அறிஞர்கள்) 1947-ல் மிகவும் அடிமட்டத்தில் இருந்தார்கள். பாக்கிஸ்தானின் உருவாக்கத்தில் இவர்களுக்கு இருந்த சிறுபாத்திரம் முன்னணிப்பாத்திரமாக நீடிக்கப்பட்டன." பாக்கிஸ்தானை பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிக்க அவர் "ஒரு மேலாளுமை மிக்க இஸ்லாமிய சித்தாந்தத்தை அரசின் தூண் ஆக்கினார்."

ஜியா மற்றும் ஆப்கானிஸ்தானில் சி.ஐ.ஏ ஆதரவுடன் நடைபெற்ற போரில் அவரது பாத்திரம் ஆகியவற்றின் சேர்க்கையானது, முஸ்லிம் அடிப்படை மதவாத குழுக்களுக்கும், இராணுவத்திற்கும், சக்திமிக்க ஐ.எஸ்.ஐ-க்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தியது. ஜியா 1988-ல் இறந்த பின்பும் இந்த மும்முனைத் தொடர்பு நீடித்தது. காஷ்மீரில் பாக்கிஸ்தானிய மேல் தட்டு, இந்தப் பிராந்தியத்தில் தங்களது குறுகிய நலன்களை முன்னெடுக்கும் பொருட்டு, இந்திய ஆட்சிக்கு குரோதமாக வெட்கங்கெட்ட சூழ்ச்சிகளை மேற்கொண்டு மிகப் பிற்போக்கான இஸ்லாமியக் குழுக்களை முன்னுக்குக் கொண்டு வந்தது. ஜியாவுக்குப் பின்னர் வந்தவர்களான பெனாசிர் பூட்டோவும் சரி நவாஸ் ஷெரிப்பும் சரி தாங்கள் இராணுவ அமைப்பிலிருந்து அந்நியப்பட்டுவிடுவோம் என அஞ்சி மத உரிமைகளுக்கு எதிராகச் செல்ல தயார் செய்யவில்லை.

முஷாரப் தன்னுடைய சமீபத்திய உரையில் தீவிரவாதிகளின், வெறி, வன்முறை, பயங்கரவாதம் முதலியவற்றை தாக்கிப் பேசினார். "இவர்கள் ஏகபோகமாக மற்றும் தங்களது சொந்த குறியிட்ட மதத்தைப் பிரச்சாரம் செய்ய முயல்கின்றனர்" என்றார். அவர் குடி பொதுமை பாணியை (populist) நாடும் விதமாகக் கூட, "அவர்கள் எவ்வாறு தங்களது பெஜிரோக்களையும் ஆடம்பரமான வாகனங்களையும் நியாயப்படுத்துகிறார்கள்?" என்று வினவினார். மேலும் "அறியாமை, ஏழ்மை, பிற்போக்கு, பசி இவற்றை எதிர்த்து ஜிஹாத் (புனிதப் போர்) நடத்த நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா? எனக்கேட்டார். பாக்கிஸ்தான் மதவாத இஸ்லாமிய நாட்டுக்கு மாற்றாக "முற்போக்கான மற்றும் ஆக்கமுடைய இஸ்லாமிய பொதுநல நாடாக ஆக வேண்டும்" என்றார்.

இஸ்லாமியமயமாதலுக்கு அவரது ஆதரவும் அவற்றை முன்னிலைப்படுத்தலும் ஒருபுறம் இருக்கட்டும், எப்படி இந்த தீவிரவாத சிறுபான்மையர் வந்தனர்? என்பதைப்பற்றி முஷாரப்பால் விளக்க முடியாதுதான். முன்பு இராணுவத் தளபதியாக இருந்தபோது தலிபான் மற்றும் காஷ்மீரி தீவிரவாதிகளை ஆதரித்தார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கில் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட இஸ்லாமிய போராளிகளுக்கு ஆதரவை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு நவாஸ் ஷெரிப் இணங்கினார் என்பதைத் தொடர்ந்து, இராணுவ அமைப்பினால் உணரப்பட்ட காட்டிக்கொடுப்பு உணர்வினால் இலக்கு கொண்டு இயங்கியதன் ஒரு பகுதியே 1999-ல் நடந்த முஷாரப்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதி ஆகும்.

முஷாரப்பால் முஸ்லீம் தீவிரவாதிகளின் ஆதாய இழப்புப் பொறுப்பில், ஒரு மக்களாதரவான கோரிக்கைவிடுக்க முடியுமெனில், இது இஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கான சமூக அடித்தளம் எவ்வளவு குறுகியது என்பதன் குறிகாட்டலாக இருக்கிறது. இருபது ஆண்டுகளாக முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு அரை-அரசு புரந்து ஆதரித்தலும் அதேபோல செளதி அரேபியா போன்ற எண்ணெய் வளம் கொழிக்கும் பணக்கார நாடுகளின் மேல்தட்டுக்களின் கணிசமான அளவு நிதி ஆதரவும் இருந்த போதிலும் அவர்களின் செல்வாக்கு இன்னும் மட்டுப்பட்டதாகவே இருக்கிறது.

முஷாரப் பதவி நிலையானதல்ல. தனது ஆதரவாளர்களுக்கு எதிராக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் இராணுவத்திலும் வலதுசாரி தீவிர மதவாதிகளின் மத்தியில் உள்ள அவரது கூட்டாளிகள் மத்தியிலும் உள்ள அவரது சொந்த ஆதரவு தளத்திற்கு எதிராக நகரும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் கொண்டிருக்கும் பிறர் சார்பை ஒட்டிய நடவடிக்கையானது, ஆளும் வர்க்கத்தின் பகுதிகளால் ஆதரிக்கப்படுகிறது, அவர்கள் முதலீட்டை ஈர்க்கவும் பாக்கிஸ்தானை பூகோள பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கவுமான தங்களின் குறிக்கோள்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தடையாக இருப்பதாகக் கண்டு வருகிறார்கள். ஆனால் பாக்கிஸ்தானிய ஜனாதிபதிக்கு தனக்கு முன்சென்ற அதிபர்களை விடவும் பாகிஸ்தானின் இன, மத பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியாததாக இருக்கிறது.

தலிபான் அரசுக்கு பாக்கிஸ்தான் ஆதரவை விலக்கிக்கொண்டதன் மூலம் வாஷிங்டன் பாக்கிஸ்தானின் பெரிய கடன் சுமையை குறைக்கவும் கால அட்டவணையை மாற்றி அமைக்கவும் வழிவகுத்தது. வரையறைக்குட்பட்ட உதவிப் பொதியை அளித்தது, ஆனால் பொருளாதார உதவியானது-- அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், கூடுதல் வரிவிதித்தல், அரசு செலவைக் குறைத்தல் ஆகிய சட்டத்திட்டங்களை அதற்கு விலையாக வைத்திருக்கிறது. இப்போது "பயங்கரவாத" இயக்கங்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் இனிவரப்போகும் காலங்களில் தொழிலாள வர்க்கத்தின் மீது அல்லது வேலைகளை இழத்தல், விலைவாசி ஏற்றம் மற்றும் குறைந்து வரும் வாழ்க்கைத்தரங்கள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் எவருக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும். ஏற்கனவே போலீசானது பல அமைதி ஆர்ப்பாட்டங்களை உடைக்கவும் அதில் பங்கேற்றவர்களைக் கடுமையாக தாக்கவும் கைது செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

முஷாரப்பும் அவரது இந்திய எதிரணியாளருமான வாஜ்பாயியும், தத்தம் நாடுகளில் ஒரே மாதிரியான பொருளாதார, அரசியல் மற்றும் சமுதாய பிரச்சனைகளை எதிர் நோக்கியுள்ளனர். இதற்கு இருவராலும் தீர்வு காண முடியாது. இவை அனைத்தும் கட்டுப்படுத்த முடியாதவை, அரசியல் சாகச வாதத்துக்குள், இராணுவ ஆத்திர மூட்டலுக்குள் மற்றும் இரு அணு ஆயுத அரசுகளுக்கு இடையிலான யுத்தத்துக்குள் வழுக்கிச் செல்வதற்கான ஆபத்தை அவை மேலும் சேர்க்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved