World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆபிரிக்கா

Cholera epidemic spreads in Nigeria

நைஜீரியாவில் கொலரா தொற்றுநோய் பரவுகின்றது
By Trevor Johnstone
11 December 2001

Back to screen version

நைஜீரியாவில் கொலரா தொற்றுநோயினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்நோயானது கனோவிலிருந்து (Kano) அடுத்த மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. கூட்டரசாங்கத்திலிருந்து இது தொடர்பான பதில் ஏதும் கிடைக்காத நிலையில், இத்தொற்றுநோய்க்கு எதிரான மந்தமான திறமையற்ற செயற்பாடுகளினால் மாநில அரசுகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.
நைஜீரியாவின் நீர்வள அமைச்சர் முக்தாரி சாகரி (Muktari Shagari) இது தொடர்பாகக் கூறுகையில் ''பெரும்பான்மையான வறிய மக்கள், பண பிரச்சனை காரணமாக சிறிய அளவிலான நீரை வாங்குவதால் மீண்டும் மீண்டும் அதிகமாக அவர்கள் பலியாக வேண்டியுள்ளதுடன், தமது சக்தியை பாவித்து தூரமான இடங்களிலிருந்து குடிநீரைக் கொண்டு வருவதோடு சுகாதாரக் கேட்டினால் உயிரிழப்பதுடன் அவர்களது வாழ்க்கைக் காலமும் குறைந்து போயுள்ளது'' என்றார்.
நைஜீரியாவின் வடக்குப் பகுதி மக்கள் ஒவ்வொரு வருடமும் கொலாரா, தட்டம்மை மற்றும் மூளைக்காச்சல் போன்ற தொற்று நோய்களினால் பெரும் அவஸ்தைப்படுகின்றனர். நாட்டில் கடந்த ஐந்து வருடங்களுக்குள் மட்டும் 1,342 மக்கள் கொலரா தொற்று நோயினால் கொல்லப்பட்டுள்ளனர்.
கனோவிலுள்ள அதிகாரிகளின்படி, அதிக ஜனத்தொகையைக் கொண்ட நைஜீரியாவின் வடக்குப் பிராந்தியத்திலுள்ள இம் மாநிலத்தில் மட்டும் தற்போதைய கொலரா தொற்றுநோய்க்கு இதுவரை 700 பேர்கள் பலியாகியதுடன் ஆயிரக்கணக்கானோர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல வாரங்களாக நோய் பரவிவந்த முக்கியத்துவத்தை மறுத்தபின்னர், அக்டோபரில் ஆரம்பித்த இத் தொற்றுநோய் காட்டுத்தீபோல் பழைய நகரிலுள்ள மிகக் குறுகலான வீதிகளில் பரவத்தொடங்கியதுடன் கனோ மாநில அரசு இறுதியாக தான் நெருக்கடிக்கு முகம் கொடுப்பதை ஏற்றுக் கொண்டது. ''நாங்கள் எதிர்பார்த்ததைவிட தொற்றுநோய் மோசமாகியுள்ளது'' என கனோ மாநில அரசாங்க சுகாதார அதிகாரி மன்சூர் கபீர் ஒரு பேட்டியில் தெரிவித்தார். அசுத்தமாக தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், மாநில அரசாங்கத்தின் பொறுப்பிலிருக்கும் பொது குடிநீர் வழங்கும் முறைகள் மாசுபட்டிருத்தல், போன்ற மூலங்கள் அழுத்தமான முறையில் வெளிவந்த பின்பு கபீர் இதனை எற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டார்.
நீண்ட வருடங்களாக கற்களாலும் மண்களாலும் கட்டப்பட்ட வீடுகளைக் கொண்டுள்ள பண்டைய வர்த்தக நகரான கனோவில், வறுமையான சுகாதார வசதிகளினாலும் மற்றும் மாசடைந்த குடிநீரினாலும் மக்கள் தொடர்ச்சியான தொற்றுநோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். 1997ல் மட்டும்தான் கனோ தொற்றுநோயின்றி சுதந்திரமாக இருந்தது. ஆனால் அவ்வருடத்திற்கு முன்பு மும்மடங்கு தொற்றுநோய் அங்கு தாண்டவமாடியதுடன், மூளைக்காச்சல், அழற்சி நோயினால் கிட்டத்தட்ட 15.000 மக்கள் பலியாகினர். இந்த நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது தினமும் 240 மேற்பட்டவர்கள் இறந்தார்கள். அச்சமயத்தில், 1.390 நோயாளிகள் கொலராவுக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் தட்டம்மை நோய்க்கும் சிகிச்சை பெற்றனர்.
நவம்பர் இறுதியில் கனோவுக்கு வடகிழக்கிலுள்ள பக்கத்து மாநிலமான ஜிகாவாவுக்கும் ( Jigawa) கொலரா பரவியது. நைஜீரியாவின் வட பகுதியிலிருக்கும் ஜிகாவா ஒரு உச்சளவு பிரச்சனையுள்ள இடமாகவிருப்பதுடன், வெப்பமான காலங்களில் இங்கு கொலராவும் மூளைக்காச்சலும் பொதுவாகவுள்ளது. சுகாதாரக்கேடு மற்றும் குறைந்த காற்றோட்டமுள்ள கட்டிடங்களில் அதிகமான மக்கள் வசிப்பதால் தொற்றுநோய்கள் பரவுகின்றன என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொலராவினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் பிரேடம், கக்காவு, பீர்னின், குடு, குமாவ் மற்றும் சுல் தங்கார்க்கா (Bredum, Kakawe, Birnin, Kudu, Kumawe and Sule Tankarka) ஆகிய இடங்களிலுள்ள உள்ளூர் அரசினர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் நிரந்தர செயலாளரான Ladi Ibrahim என்பவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அவர் இறந்தவர்களின் எண்ணிக்கையை கூறியபோதிலும், நவம்பர் இறுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மடிந்துள்ளனர். Kazaure வைத்தியசாலையில் கடமையாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சிரேஸ்ட மருத்துவ அதிகாரி ''குறைந்தது பத்துப் பேர்கள், அவர்களில் அதிகமானவர்கள் குழைந்தைகள், ஒரு மணித்தியாலத்துக்குள் அல்லது நீங்கள் இங்கிருந்த நேரத்திற்குள் மடிந்தனர்'' என ரொயிட்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மிக வேகமாக தொற்றுநோய்கள் பரவியதால் Kazaure பகுதி மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தார்கள். தனது ஒரு பிள்ளையை இத் தொற்றுநோய்க்கு பலி கொடுத்த Usman Bello என்பவர், ''கொலரா தொற்றுநோய் இந்த பகுதிகளில் பரவுவதற்கான பொறுப்பு அரசாங்கத்தினுடைய அக்கறையின்மைப் போக்கேயாகும்'' எனச் சாடினார்.

Kwara மாநிலத்தில் கொலரா தொற்றுநோய்க்கு ஐந்து நாட்களில் 40 பேர்கள் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 22 பேர்கள் அபாயகட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். Moro மாநில அரசாங்கத்தினுடைய பகுதிகளிலுள்ள ஆரம்ப மற்றும் உயர்தர பள்ளி மாணவர்களில் 7 பேர்கள் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர். மேலும் தொற்றுநோய் பரவுவதை தவிர்ப்பதற்காக சகல ஆரம்ப மற்றும் உயர்தரப்பள்ளிகள் யாவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொலராவானது, குடல்பகுதியில் அபாயகரமான கிருமிகள் தொற்றித் தாக்குவதால் மோசமான வாந்தியும் வயிற்றுப் போக்கையும் உருவாக்குகிறது. இதற்கு சரியான வைத்தியம் இல்லாதுபோனால் வயிற்றுப்போக்கு அதிகமாக உயிராபத்தையும் ஏற்படுத்தும். எப்படி இருந்தபோதிலும் இதன் நோய்க்குறி தோன்றியவுடன் பாதிக்கப்பட்டவருக்கு சரியான முறையில் சிகிச்சையளித்தால் அவரை முழுமையாக குணமாக்கமுடியும். சர்க்கரை (சீனி) கலவையுடன் சில இன்றயமையாத உப்பையும் சுத்தமான நீரினால் கலந்து நோயாளிக்கு வழங்கும்போது அவர் தனது உடலிலிருந்து இழந்த பெரும்பகுதியை மீண்டும் பெற்றுவிடுவார். நோயாளிக்கு வயிற்றுப்போக்கு சாத்தியமாக இருக்கும் பட்சத்திலும் இதன்மூலம் மரணவீதத்தை ஒரு வீதத்துக்கும் குறைவாக ஆக்க முடியும்.

எளிதாக குணப்படுத்தக்கூடிய இந்த நோய் சம்பந்தமாக நைஜீரிய அரசாங்கத்தின் மீதும் அதன் மேற்கத்தைய கூட்டாளிகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதுடன், நைஜீரியாவில் இத்தொற்று நோய்களினால் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான சில சமயம் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். 61 வீதமான நைஜீரிய மக்களுக்கு மனிதனின் அடிப்படை தேவையான சுத்தமான குடிநீர் கிடைப்பது மறுக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தில் (GDP) இருந்து 0.2 வீதம்தான் சுகாதார சேவைக்கு செலவு செய்யப்படுகின்றது. தினமும் ஒரு டொலருக்கும் குறைவான வருமானத்துடன் வாழத்தள்ளப்பட்டுள்ள மக்களின் தொகை 71 வீதத்துக்கும் மேலாகவுள்ளதுடன், மொத்தமாக 90.8 வீதமான மக்கள் இரண்டு டொலருக்கும் குறைவான தின வருமானத்தையே கொண்டுள்ளார்கள். நைஜீரியாவில் ஐந்துக்கு இரண்டு வீதமான (2/5%) குழைந்தைகள் போதிய உணவின்றி வாடுகின்றனர்.

1999ல் மக்கள் நிர்வாகத்தின் தலைமைக்கு ஜனாதியதி Obasanjo தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் அமெரிக்காவினதும் மற்றைய வல்லரசுகளினதும் ஆதரவைப் பெற்றுக் கொண்டார். வெளிப்படையான ஜனநாயகம் என்ற வாய்ச்சவடால்கள் இருந்தபோதிலும், அவருடைய முன்னுரிமையானது மேற்கினுடைய வங்கிகளுக்கு கடனை திருப்பி செலுத்த உத்தரவாதமளித்ததாகும். நைஜீரியா பாரிய எண்ணெய் சேமிப்பைக் கொண்டுள்ளதுடன் தினமும் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் வருமானத்தை இது உருவாக்குகின்றது. இவற்றில் பெருந்தொகையான பணம், செல் (Shell) மற்றும் நாடுகடந்த எண்ணெய்க் கூட்டுத்தாபனங்களின் கருவூலப் பெட்டிக்குள் சென்றுவிடுகின்றன. 30 பில்லியனுக்கு மேலான டொலர்களை நைஜீரியா பாரிஸ் கிளப்பிடம் (Paris Club) கடனாகப் பெற்றுள்ளது. இது பெரும்பாலும் மொத்த தேசிய உற்பத்தியில் 100 வீதமாகும். ஒவ்வொரு வருடமும் 1.5 பில்லியன் டொலர்கள் இக்கடன்களை வழங்கியவர்களுக்கு திருப்பிச் செலுத்த நைஜீரியா நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இது சுகாதார சேவைகளுக்கு செலவு செய்யப்படும் மொத்த செலவிலும் பார்க்க 17 மடங்குக்கு அதிகமாகவிருப்பதுடன், கல்விக்கு செலவு செய்யப்படும் தொகையிலும் பார்க்க ஐந்து மடங்காகும். இந்த நாட்டுக்கு மூன்றுக்கு இரண்டு வீதமான பாரிய கடன் தொகைகளை பாரிஸ் கிளப்பும் பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் வழங்கியுள்ளன.



Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved