World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Milosevic and Sharon: when is a war criminal not a war criminal?

மிலோசிவிக்கும் ஷரோனும்: ஒரு போர்க்குற்றவாளி எப்பொழுது போர்க்குற்றவாளி இல்லாமல் போகிறார்?

By Chris Marsden
2 May 2002

Back to screen version

ஜெனின் படுகொலைக்குப் பிறகு, சில கேள்விகள் கேட்கப்பட வேண்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு பெரிய செய்தித்தாளும் உரிமை அடிப்படையில் கேட்க வேண்டிய கேள்வி, ஸ்லொபோடன் மிலோசிவிக் விசாரணை செய்யப்படும்போது ஏன் இஸ்ரேலிய பிரதமர் ஆரியல் ஷரோனை விசாரணை செய்யக் கூடாது? என்பதாகும்.

இந்த கேள்வி கேட்கப்படுவது, யூகோஸ்லாவிய மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்கு பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளும் தேசியவாதியும் முதலாளித்துவ அரசியல்வாதியுமான மிலோசெவிக்கிற்கு அரசியல் இரக்கம் காட்டுவதைக் குறிக்காது. இது ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற நீதிமன்றம் (Hague இல் உள்ளது) மற்றும் அதற்கு பின் வந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) ஆகிய இரண்டையும் கண்டிப்பதற்கு சேவை செய்கிறது. மிலோசிவிக் மற்றும் ஷரோன் இருவரையும் நடத்தும் முறையில் உள்ள இரட்டை அளவுகோல்கள் இந்த நீதிமன்றங்கள், ஏகாதிபத்திய வெளிநாட்டுக் கொள்கையின் கருவிகளாக இருக்கின்றன என்பதை விளக்கிக் காட்டுகின்றன.

யாரையாவது போர்க் குற்றங்களுக்காக தண்டிப்பதற்கான முடிவில் புறநிலை ரீதியான குற்ற அளவுகோல் ஏதாவது சம்பந்தப்பபட்டிருக்குமாயின், ஷரோன் குற்றம் சாட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த அளவுகோல் இல்லாதது ஹேக் நீதிமன்றம் ஒரு அரசியல் ஏமாற்று வித்தை என்பதையும், சேர்பியா மீது தொடுத்த போரை நியாயப்படுத்தவும் மற்றும் பால்கனில் இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் பொருட்டு, அது அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் சார்பில் நடத்தப்பட்டது என்பதையும் மெய்ப்பிக்கிறது.

ஹேக்கின் நீதிமன்ற முறைகளின் அந்தஸ்து ஏற்கனவே கீழறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஒரு சக்திமிக்கவகையில் பிரதிவாதத்தை நடத்தி இருக்கிறார், இவர் யூகோஸ்லாவியாவை ஸ்திரமற்ற நாடாக செய்வதற்கான அவர்களின் நடவடிக்கைகளின் காரணமாக, மேற்கத்திய நாடுகள் தாம் சமாதானத்திற்கு எதிராக குற்றங்கள் இழைத்திருக்கின்றன என எதிர்க்குற்றச் சாட்டுக்களை முன்வைக்கிறார். அவர் மீது சாட்டப்பட்ட சில முக்கிய குற்றங்களுக்கு நேர் எதிர்மாறாக வலுவான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. போர்ப் பத்திரங்கள் பற்றிய நெதர்லாந்து கழகம் (Netherlands Institute for War Documentation) ஒரு அறிக்கையை வெளியிட்டது. 1995ல் Srebrenica இல் 7,000 பொஸ்னியன் முஸ்லிம்களை படுகொலை செய்ததில் ``இந்த படுகொலையில் மிலோசிவிக்கோ அல்லது பெல்கிரேடில் உள்ள சேர்பிய ஆட்சியாளர்களோ நேரடிப் பங்கைக் கொண்டிருந்தனர்" என்பதற்கான ஆதாரத்தைக் கொண்டிருக்கவில்லை என அமைதி காப்பாளர்களுக்கும் ஐக்கியநாடுகளுக்கும் இந்த நெதர்லாந்து அறிக்கை சுட்டிகாட்டுகின்றது.

ஹேக் நீதிமன்றத்தை ஆதரிப்பவர்களும் ஏன் மிலோசெவிக்கை மட்டும் தண்டனைக்குட்படுத்த வேண்டும் எனக் கேட்க ஆரம்பித்துள்ளார்கள். பெப்ரவரியில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஷரோன் மீது வர இருந்த குற்றச்சாட்டுகளை முன்னரே தடை செய்துவிட்டது. 1993 சட்டப்படி பெல்ஜியம் போர்க் குற்றங்களை, யார், உலகத்தில் எங்கு இழைத்தாலும் அதைத் தண்டிக்கும் அதிகாரத்தை தனக்குத் தானே வழங்கிக்கொண்டது. பாலஸ்தீனியர் குழு ஒன்று 1982 செப்டம்பரில் பெய்ரூட்டில் அகதி முகாம்களான ஷப்ரா மற்றும் ஷட்டிலாவில் 2,000 பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யததற்காக ஷரோனை போர் குற்றங்களுக்காக தண்டிக்க மனு ஒன்றை அளித்தது. மேற்குறிப்பிட்ட மனு அது சம்பந்தப்பட்டது. ஆனால் சர்வதேச நீதிமன்றமானது முன்னாள், மற்றும் தற்போதைய அரசு அதிகாரி "குற்ற விசாரணைகளிலிருந்து முழு பாதுகாப்பு பெறுகிறார்" என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் அந்த அரசு அதிகாரியை வெளிநாட்டு நீதிமன்றத்திலும் விசாரணை செய்ய முடியாது.

இந்தத் தீர்ப்பு வந்த மாதங்களில், ஷரோன் மேற்குக் கரையை ஆக்கிரமித்தார் மற்றும் ஜெனின் படுகொலைகளை தனது போர் குற்றங்களின் பட்டியலில் சேர்த்துக்கொண்டார். இருந்தும் ஒரு ஜனாதிபதிக்குரிய முழு அந்தஸ்து அவருக்கு புஷ் நிர்வாகத்தாலும், அதன் மற்ற ஐரோப்பிய எதிரணியினராலும் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் நடுவே மிலோசிவிக்கோ சிறையில் ஒரு கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

ஷரோன், மிலோசிவிக் போல ஒரு கைதியாக விசாரிக்கப்படமாட்டார். ஹேக்கில் நீதிமன்ற விசாரணைகள் ஒருதலைப் பட்சமானவை. யூகோஸ்லாவிய போர்க் குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகளை சட்டப்படி தண்டனைக்குள்ளாக்குவதிலிருந்து விடுதலை அளித்துள்ளது. இஸ்ரேலோ அமெரிக்காவோ சர்வதேச நீதிமன்றத்தில் தங்கள் குடிமக்களை விசாரிக்கும் உரிமையைக் கூட தர மறுக்கிறது. மேலும் சரவதேச குற்றவியல் நீதிமன்ற சட்டதிட்டங்கள் வல்லரசுகள் தத்தம் அரசியல்வாதிகளையோ, இராணுவ அதிகாரிகளையோ விசாரிக்கும் உரிமையை ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் ஷரோனுக்கு எதிரான குற்றச்சாட்டு மிலோசிவிக்கிற்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விடவும் மிகத்தெளிவாக மட்டுமல்லாமல், ஷரோன்மீது குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகள் மிகவும் வலுவானவையாகவும் இருக்கின்றன.

மிலோசிவிக் மக்களைக் கொன்று குவித்ததாகவும் மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாகவும், 1991ல் குரோசியா, 1992-95ல் பொஸ்னியா மற்றும் 1999ல் கொசோவாவில் நடந்த போர் தொடர்பானதில் போர்க்கால சட்டங்களையும் போர் நடைமுறைகளையும் மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். குரோசியா மற்றும் பொஸ்னியா குறித்த குற்றச்சாட்டுகள் பின்னால் சேர்க்கப்பட்டவை. ஏனெனில் கொசோவா பற்றிய குற்றச்சாட்டு பலவீனமானதாக மிலோசெவிக்கிற்கு தண்டனை வாங்கித் தர போதுமானவை அல்ல என்பதால் அவை பின்னர் சேர்க்கப்பட்டன. கொசோவாவில் கொல்லப்பட்ட 346 பேருக்காக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. கொசோவாவில் கொல்லப்பட்ட 346 பேர் சேர்பிய இராணுவ வீரர்களால், போலீசாரால் அல்லது துணைநிலை இராணுவப் படையினரால் கொல்லப்பட்ட அல்பேனிய பலியாட்கள் என குற்றச்சாட்டில் குறிப்பிடப்படுகிறது. ஒரு இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றம் ஷப்ரா, ஷட்டிலா படுகொலைகளுக்காக ஷெரோன் மீது குற்றம் சாட்டியது. ஆனால் அது அவரை தண்டிக்கவில்லை ஒரு தட்டுதட்டி விட்டு, அது அவரை அரசியலில் தொடர்ந்து ஈடுபடவும் பின்னாளில் இஸ்ரேலின் உயர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூட அனுமதித்தது.

1999-ல் ரகாக் (Racak)என்ற கொசோவா கிராமத்தில் சேர்பிய இராணுவப்படைகள் 45 அல்பேனிய குடிமக்களை படுகொலை செய்தன என குற்றம் சாட்டப்பட்டது. இதை ஒரு காரணமாக காட்டி நேட்டோ, மிலோசிவிக் ஆட்சி மீது போர் தொடுத்தது. ஆனால் ரகாக் சர்ச்சைக்குள்ள பிரச்சனையாகவே எப்பொழுதும் இருந்து வருகிறது.

படுகொலை என கூறப்படும் இது 1999 ஜனவரி 15 "அன்று அல்லது அளவில்" நடந்ததாகக் கூறப்படுகிறது. எந்தவிதமான சுதந்திரமான சாட்சிகள் யாரும் இல்லாததன் காரணமாக குற்றச்சாட்டு தெளிவற்றதாக இருக்கிறது. சேர்பியாவானது இறந்த சடலங்கள் கொசோவா விடுதலைப் படையைச் (KLA) சார்ந்தவை என திரும்ப திரும்பக் கூறி வருகிறது. இந்தப் போர் வீரர்கள் முன்பு நடந்த போர்களில் இறந்தவர்கள் எனவும், பிரச்சாரத்திற்காக போர் வீரர்கள் ஒன்று சேர்க்கப்பட்டனர் என்கிறது. ஐரோப்பிய ஒன்றியமானது ஒரு அமெரிக்க அதிகாரி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அனுப்பியது. வாஷிங்டன் கொசோவா விடுதலை படை கூறியதை அப்படியே ஒப்புக்கொண்டது. இதை மிலோசிவிக் உத்தரவின் பேரில் நடந்த ``மக்களுக்கு எதிரான`` படுகொலை என அமெரிக்கா கூறிற்று. இரண்டு மாதங்களுக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையில் நேட்டோ விமானங்கள் பெல்கிரேடை குண்டு வீசித் தாக்கின.

இந்த ஆண்டு வழங்கப்பட்டு, பரவலாக பிரசுரிக்கப்பட்ட பின்லாந்து மருத்துவர் குழுவின் அறிக்கை ஒன்று ரகாக் தொடர்பானதில் சேர்பிய கூற்றை வலுப்படுத்துகிறது. ஜேர்மனியின் ARD தொலைக்காட்சி ஒரு பேட்டியை ஒளிப்பரப்பியது. இதில் டாக்டர் ஹெலினா ரண்டா (Dr. Helena Ranta) என்பவர் "இந்த சிறிய பள்ளதாக்கில் உள்ள எல்லாக் காட்சியும் ஒழுங்கமைக்கப்பட்டது என்பதை ஒருவர் கூறமுடியும் என்று நனவாக" கூறினார். இந்த முடிவு எங்களது முதலாவது புலனாய்வு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது, மற்றும் பின்னர் நடத்திய தடய அறிவியல் புலனாய்விலும் இது சேர்க்கப்பட்டுள்ளது. 1999 நவம்பரில், ரகாக்கில் நேரடியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் ஜெனின் என்ன? இங்கு இஸ்ரேல் படுகொலைகள் புரிந்தது என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு தொலைக்காட்சி செய்திச் சேவையும், எல்லா பெரிய பத்திரிகைகளும் இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் மக்கள் குடியிருப்புகளின்மேல் குண்டு மழை பொழிந்ததை மற்றும் டாங்குகள் கட்டடங்களை இடித்துத் தரைமட்டமாக்கியதைப் பற்றி பல புகைப்படங்களை வெளியிட்டன. இராணுவப் படைகள் ஒரு நீதிமன்ற உத்தரவின்படி இச்சடலங்களை அடையாளமற்ற பல கல்லறைகளில் அடக்கம் செய்வது தடை செய்யப்பட்டதால் எங்கும் இடிபாடுகளிலிருந்து பிண வாடை அடித்தது, சடலங்கள் வரிசை வரிசையாக தெருக்களில் கிடந்தன என்ற செய்திகள் வெளியாகின.

முதல் மதிப்பீட்டின்படி நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர். ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேல், ஐக்கிய நாடுகள் புலனாய்வு அதிகாரிகளை அனுமதிக்கவில்லை. இஸ்ரேல் இராணுவப்படை தொடர்ந்து நிலத்தைக் கிளறி பல சடலங்களைத் தள்ளிவிட்டது. கடைசியாக வெளிவந்த செய்திகள் 54 சடலங்களை அடையாளம் கண்டன. இவற்றுள் பலர் போரில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்க முடியாது, பெண்கள், குழந்தைகள், முதியோர், ஊனமுற்றோர் ஆகியோர் இவற்றில் அடங்குவர்.

ரகாக்கிற்கு நேர் எதிர்மறையாக, மேற்கத்திய அரசுகள் இஸ்ரேல் மீது எந்த குற்றச்சாட்டையும் சுமத்த மிகவும் தயங்குகின்றனர். பலரும் இஸ்ரேலுக்கு சாதகமாக உள்ளனர். புலனாய்வு ஒரு உண்மை அறியும் குழுவாக மட்டுமே இருக்கவேண்டும் மற்றும் இது எந்த தீர்ப்பும் வழங்காது, தண்டனையும் வழங்காது என்ற இஸ்ரேலின் கோரிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை வளைந்து போனது. வாஷிங்டன் அதன் பங்கிற்கு இஸ்ரேலை விமர்சித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை. அமெரிக்க அரசாங்க செயலாளர் கொலின் பெளல் கடந்த மாதம் இஸ்ரேலுக்கு ராஜ்ய விஜயம் செய்தபொழுது, ஜெனினுக்கு விஜயம் செய்யவில்லை. ஆனால் இவர் அமெரிக்க பாராளுமன்ற குழு முன்னர் சாட்சியம் அளித்தார். தான் ஜெனினில் படுகொலை நடந்ததற்கான எதையும் காணவில்லை என்றார். மேலும் முன்மொழியப்படும் ஐ.நா புலனாய்வு உண்மையை மறைக்கும் வழிமுறையாக "அங்கு என்ன நிகழ்ந்தது என்று அர்த்தமில்லாத ஊகங்களை, படுகொலை மற்றும் பலரை ஒன்றாய் போட்டு மூடிய புதைகுழிகள் என்ற வார்த்தைகளை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டு, இதுவரை எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை" என்றும் கூறினார்.

ஷரோன் அரசாங்கம், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நடத்திய ஜெனின் படுகொலைகளை உத்தியோகபூர்வமாய் நியாயப்படுத்துவதை ஒருவர் கவனிக்க வேண்டும். 40 பேர் மட்டும் இறந்தனர் அவர்களும் ஹிஸ்புல்லா, இஸ்லாமிய ஜிகாத் மற்றும் தீவிரவாதிகள் எனக் குறிப்பிடுவதன் மூலம் இப்படுகொலைகளை செய்யவில்லை என கூறுகின்றது. பலியானவர்கள் எண்ணிக்கை பற்றிய இஸ்ரேலிய கூற்று விமர்சனமற்று அப்படியே ஒத்துக்கொள்ளப்பட முடியாது. ஆனால் ஜெனினில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களும் ரகாக்கில் கொல்லப்பட்ட கொசவோ விடுதலை இயக்கப் போராளிகளும் எண்ணிக்கையில் ஒன்றாயிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

மேல்நாட்டு அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் ரகாக்கை படுகொலை எனக் குறிப்பிடத் தயங்குவதில்லை. அதேவேளையில் ஜெனினில் படுகொலை நடக்கவில்லை என்றும் இஸ்ரேல் அதன் நடவடிக்கைகளைப் பாதுகாப்பதை ஆதரிக்கும் பெரும் எண்ணிக்கையிலான கட்டுரைகள் காணப்படுகின்றன. ஏப்பிரல் 21ல் Observer பத்திரிகையில் Peter Beaumont, "இந் நண்பகலில் 30 சடலங்கள் தரையில் கிட்டத்தட்ட கிடத்தப்பட்டு இருந்தன, அவை வைக்கப்பட்டிருக்கும் நிலையானது அவர்கள் கூறிக்கொள்வதுபோல் படுகொலையின் பலியாட்கள் என தடுமாற்றத்தை எளிதில் விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது." என வாசகரை எச்சரிக்கிறார்.

அவ்வாறு இல்லை என பியூமான்ட் கூறுகையில், "படுகொலை -அந்த அர்த்தத்தில் வழக்கமாகப் புரிந்துகொள்ளப்பட்டது- ஜெனின் அகதி முகாமில் நடைபெறவில்லை. என்னென்ன குற்றங்கள் இங்கு இழைக்கப்பட்டாலும், மற்றும் அவை பல நடைபெற்றதாக காணப்படுகிறது. ஆனால் அவற்றுள் இராணுவத்தால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட, திட்டமிட்ட படுகொலை எதுவுமில்லை."

பியூமான்ட் மேலும், "இந்தப் பத்திரிக்கை மற்றும் பல பத்திரிகையாளர்கள் சேகரித்த தகவல்களின்படி இதுவரை மீட்டு எடுக்கப்பட்டவற்றுள் பெரும்பாலானவை இஸ்லாமிய ஜிஹாத், ஹமாஸ் மற்றும் அல்-அக்ஷா பிரிகேட் ஆகியவற்றிலிருந்து வந்த பாலஸ்தீனிய கெரில்லாக்களாக இருந்தனர்" என காணப்படா கூற்றைக் கூறினார்.

சர்வதேச மனித உரிமைக் கழகத்தின் பிரித்தானிய இராணுவ நிபுணர், எல்லைப்புற இராணுவத்தின் மேஜர் டேவிட் ஹோலி உடனான நேர்காணல் பற்றிய ஏப்பிரல் 29 அன்று பி.பி.சி செய்தி அறிவிப்பு 54 சடலங்களையே குறிப்பிட்டது. இதில் சாதாரண மக்களும் உள்ளடங்குவர், "சாத்தியமான அளவில் 20 அல்லது 30 பேர் இருக்கலாம் எனவும், மற்றும் ஓரிருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்". மற்றும் தெருக்களில் சினைப்பர்களால் தாக்கப்பட்டுக் கிடந்த மக்கள், போரிலிருந்து சாதாரண குடிமக்கள் விலகி ஓடியதற்கான தெளிவான வெளிப்பாடாகும்." என்றார்.

டேவிட் ஹோலி "இத்தகைய சந்தர்ப்பங்களில் படுகொலை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது சரியல்ல" என்று இன்னும் ஆதரிக்கிறார். புலனாய்வு குழுவில் யார் இடம் பெறுவார் என்பதை இஸ்ரேல் தீர்மானம் செய்வதற்கு முன்னரே இஸ்ரேலுக்கு ஆதரவை அவர் அறிவித்தார். பி.பி.சி படுகொலை என்பதை மேற்கோள் குறியிட்ட தலையங்கத்தின் கீழ் செய்தியை வெளியிட்டது.

பியூமான்ட் இன் கட்டுரை வெளியான ஏழு நாட்களுக்கு பின்னர் ஷரோன் ஜெனின் படுகொலை பற்றி விசாரிக்க அதிகாரமே இல்லாத ஐ.நா புலனாய்வுக் குழுவுக்குக் கூட அனுமதி வழங்க மறுத்தார்.

மேலும் பல முக்கிய தகவல்கள் பின்வருமாறு:

மிலோசிவிக்கிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டு, முக்கியமாக அல்பேனிய பிரிவினைவாத KLA "சேர்பிய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியையும் வன்முறை ரீதியான எதிர்ப்பை, சேர்பிய போலீஸ் மற்றும் யூகோஸ்லாவியாவையும் பிரதானமாக இலக்காக வைத்து தாக்குதலை நடத்தியது" என்பதன் மூலம் அல்பேனிய பிரிவினைவாத KLA கொசோவாவில் உள்நாட்டு போரை நடத்தியது என்பதை ஒப்புக்கொள்கின்றது. பாலஸ்தீன பிரதேசங்களில் உள்ளேறி இஸ்ரேல் தாக்கியது தீவிரவாதத்தை எதிர்த்து போரிடும் ஒரு வழிமுறை என்ற இஸ்ரேலின் வலியுறுத்தல் சரியானது என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் சொந்த எல்லையில் பயங்கரவாதத்தைத் தடுக்கும் சேர்பிய அரசின் முயற்சிகள் ஒரு போர்க் குற்றமாக கருதப்படுகிறது.

இதுநாள்வரை ஹேக் நீதிமன்றம் குறிப்பிடப்பட்ட எந்த கொடுமைகளிலும் மிலோசிவிக் தானாக முன்வந்து தானே அங்கீகாரம் வழங்கியதற்கோ அல்லது அனுமதி அளித்ததிற்கோ எந்தவிதமான ஆதாரமும் இல்லை. அவரது கட்டுப்பாட்டில் இல்லாத ஒழுங்கற்ற சேர்பிய தேசிய படைகள் அதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜெனினில் அவ்வாறல்ல. மேற்குக் கரையில் நடத்தப்பட்ட அழிவு இராணுவ உயர் அதிகாரிகளின் நேரடி ஆணைகளின் கீழ் மற்றும் அரசாங்கத்தின் தலைமையாக ஷரோனின் பொறுப்பின் கீழ் நடத்தப்பட்டது. ஆயுதப்படைகளால் நடத்தப்பட்டது.

முக்கியமானது என்னவென்றால், மிலோசெவிக் மீது சாத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படுகிறதோ இல்லையோ, இறுதி ஆய்வில் அவர் மீதான வழக்கு, இனச்சுத்திகரிப்புக்கு அவரின் ஆதரவு இத்தகைய கொடுமைகள் நடைபெறுவதற்கான சூழ்நிலையை உண்டு பண்ணியது என்பதில் தங்கி நிற்கிறது. அதே நேரத்தில் மேற்குக் கரையிலும் காஸா பகுதியிலும் நடப்பது தொடர்பான ஷரோனின் கொள்கைகள் இனச்சுத்திகரிப்பு தவிர வேறு என்ன என ஒருவர் கேட்கும்படி தள்ளப்படுவார்.

குடிமக்கள் கொல்லப்படுவதற்காக வேண்டுமென்றே இலக்கு வைக்கப்படாடார்களோ இல்லையோ, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை திட்டமிட்டபடி பாலஸ்தீனிய வீடுகள், வீதிகள், போக்குவரத்து மின்சாரம் தண்ணீர் வினியோகம், சாக்கடை முதலிய அத்தியாவசிய இன்றியமையாத வாழ்க்கை தேவைகளை அழித்துவிட்டது. இது அரபு இனக்குழுவினரை தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுதல், யூத இராணுவ தளங்களும் குடியிருப்புகளும் கட்ட ஏதுவாக இருக்கும் என்ற நோக்கம் கொண்டது. இந்த அடிப்படை உண்மை மட்டுமே மேலை நாட்டு அரசுகள் உபயோகப்படுத்தும் இரட்டை அளவுகோலை எடுத்துக்காட்டுகின்றது மற்றும் மனித நேயத்தால் இயக்கப்பட்டதாக கூறிக்கொள்ளும் இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குபவர்களின் அனைத்துவிதமான கூற்றுக்களின் அபத்தத்தையும் புலப்படுத்துகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved