World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Was whistleblower Kelly's death suicide?

பிரிட்டன்: டாக்டர் கெல்லி மரணம் தற்கொலையா?

By Chris Marsden
25 July 2003

Back to screen version

டாக்டர் டேவிட் கெல்லியின் உடல் ஜூலை 18 ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டபோது அவரது இடது மணிக்கட்டு வெட்டப்பட்டிருந்தது.

பிரதமர் டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம், ஈராக்கிடம் மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக, முறைகேடான புலனாய்வு தகவல்களைப் பயன்படுத்தி வருவது குறித்து மே மாத இறுதியில் டாக்டர் கெல்லி பி.பி.சி நிருபர் ஆன்ட்ரூ கில்லிகன் மற்றும் இதர பத்திரிகையாளரிடம் தனது கவலையை தெரிவித்தார். இவர், பாதுகாப்புத் துறையின் முன்னணி நுண் உயிர் ஆய்வாளர் மற்றும் ஐ.நா ஆயுத சோதனையாளர்கள் குழுவில் ஈராக்கில் பணியாற்றிய மூத்த அதிகாரி ஆவார். அரசாங்கமும், செய்தி ஊடகங்களும் இவரை இனங்காண குறிவைத்து அம்பலப்படுத்துவதற்கு தொடர்ந்து பிரச்சாரம் நடத்தி வந்தன. இவரது பெயர் குறிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர் 2002 லும் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திலும் அரசாங்கம் வெளியிட்ட புலனாய்வு ஆவணங்களில், அவர் பொய்யான தகவல்களைத் தந்தாரா என்று இரண்டு நாடாளுமன்ற விசாரணைக் குழுக்களில் சாட்சியம் அளிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டார்.

ஜூலை 15 அன்று, வெளிவிவகாரங்கள் குழு விசாரணையில் பகிரங்கமாகவும், ஜூலை 16 அன்று, புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழுவில் ரகசியமாகவும் அவர் சாட்சியம் அளித்தார். அதற்குப் பின்னர் அவர் தனது வீட்டிலிருந்து காணாமல் போய் விட்டதுடன், ஜூலை 17 அன்று அவர் இறந்து காணப்பட்டார்.

அவருக்கு மிகப் பெருமளவில் நிர்பந்தம் கொடுக்கப்பட்டு வந்ததால், அவர் தனது மணிக்கட்டை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து விட்டார் என்ற அனுமானத்தின் அடிப்படையில், போலீஸ், அரசாங்கம் மற்றும் ஊடகங்கள் செயல்பட்டன. ஜூலை 19 அன்று தேம்ஸ் பள்ளத்தாக்கு போலீசார், தனது மணிக்கட்டை அவர் வெட்டிக் கொண்டதால் இரத்தம் வெளியேறி இறந்தார் என்று அறிவித்தனர். போலீஸ் கண்காணிப்பாளர் டேவிட் பர்னல், ஒரு கத்தியும் மற்றும் பாராசிட்டமோல் அடங்கிய வலி நிவாரணி கொப்ரோக்ஸ்மோல் (Coproxamol) மாத்திரைகள் பாக்கட்டும் அவர் இறந்துகிடந்த இடத்தில் காணப்பட்டதாக தெரிவித்தார். அந்த மாத்திரை பாக்கட் திறந்து இருந்தது.

அரசாங்கத் தரப்பில் மிக உயர்ந்த பணியில் ஈடுபட்டிருந்த அவருடைய மரண விசாரணை அறிக்கை முடிவு வருவதற்கு முன்னர் இவ்வளவு வேகமாக ஒரு முடிவிற்கு வருவது அனுமதிக்க முடியாதது. அத்துடன் அவர் அரசாங்கத்திற்கும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கும், மற்றவர்களுக்கும் அரசியல் ரீதியில் சங்கடங்களைக் கொடுத்து வந்தார்.

கெல்லி தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பக் கூடியதுதான். ஆனால், அவரது மரணம் தொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும் முன்னர், அவர் கொலை செய்யப்படவில்லை என்பது திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அவரது மரணத்திற்கு முந்திய சம்பவங்களை கடுமையாக விசாரித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் முன்னர், அவர் மரணத்திற்கு முந்திய சம்பவங்களில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவை பகிரங்கமாகவும் வெளிவந்திருக்கின்றன. அவற்றை தீவிரமாக விசாரித்து விளக்கம் தந்தாக வேண்டும்.

கெல்லி பிற்பகல் 3.00 மணிக்கு அவரது வீட்டிலிருந்து நடந்து சென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இரவு 11.45 வரை அவர் வீடு திரும்பவில்லை. எனவே, அவரது குடும்பத்தினர் போலீசுக்கு தொலைபேசி மூலம் தகவல் தந்தனர்.

அதற்கு பின்னர்தான், போலீசார் டாக்டர் கெல்லியை தேடுகின்ற வேட்டையை துவக்கினர். அந்த தேடுதல் வேட்டையில் ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மறுநாள் காலை, 8.20 மணிக்குத்தான் போலீசார் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவரது புகைப்படத்தை வெளியிட்டு அறிவிப்புக் கொடுத்தனர். அவரது உடல் காலை 9.20 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, பலமணி நேரம் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஊடகங்கள் அதற்கிடையில் அந்த உடல் கெல்லியினது என தகவல்களை தந்து கொண்டிருந்தன. இருந்த போதிலும் உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரியான அவரைக் கண்டுபிடிப்பதில் எந்த சங்கடமும் இருந்திருக்க நியாயம் இல்லை.

ஜூலை 19 ம் தேதி, சனிக்கிழமை அன்றுதான் மரண விசாரணை அதிகாரி, டாக்டர் கெல்லியின் மனைவி ஜானிஸ் இடம் அவரது உடலை அடையாளம் காட்டி உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இந்த சம்பவங்கள் பல்வேறு காரணங்களால், தனித்தன்மை கொண்டவையாக காணப்படுகின்றன. இரண்டு நாட்கள் முழுவதிலும் மிக மந்தமாக அதிகாரிகள் இதில் செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கெல்லி ஆரம்பத்தில் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவாக தெரிகின்றது. அதற்கு பின்னர் அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்படியிருந்தும், அவரது வீட்டிற்கு வெளியில் போலீசார் அல்லது M I5 - M I6 உளவாளிகள் எவரும் இல்லை. அவர் அரசாங்க ரகசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறியிருக்கக் கூடும் மற்றும் அவரால் மிகப்பெரும் அளவிற்கு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டவரது நடமாட்டத்தை கண்காணிக்க அவரது வீட்டிற்கு வெளியில், உளவாளிகளோ அல்லது போலீசாரோ நடமாடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஜூலை 17 ந் தேதி காலை, டாக்டர் கெல்லி தெற்கு ஆக்ஸ்போர்டு சயர் பகுதியில் உள்ள சவுத் மூர் கிராமத்தில் இருக்கும் தனது பண்ணை இல்லத்திலிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேல், பண்படுத்தப்பட்ட வயல்களுக்கு குறுக்கே நடந்து சென்று, அதற்கு பின்னர் தனது இடது மணிக்கட்டை வெட்டிக் கொண்டு ரத்தம் சிந்தி மாண்டார் என்று கூறப்படுவற்கு முன்னரே அவரது நடத்தைகள் குறித்தும் கூட தீவிரமாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

டாக்டர் கெல்லியின் மனைவி ஜானிஸ் நியுயார்க் டைம்ஸ் நிருபருக்கு பேட்டியளித்தபோது, வெளியுறவுத்துறைக்கு தர வேண்டிய ஒரு அறிக்கையை அவர் தயாரித்துக் கொண்டிருந்தார் என்றும், சில நண்பர்களுக்கு சில மின்மடல்களை அனுப்பினார் என்றும் கூறினார். இந்த மின்மடல்கள் எதுவும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறவர் என்று கோடிட்டுக் காட்டுவதாக இல்லை.

நியுயார்க் டைம்ஸ் நிருபர் யூடித் மில்லருக்கு டாக்டர் கெல்லி அனுப்பிய மின்மடலில், "பல இருட்டு நடிகர்கள் தன்னோடு விளையாடிக் கொண்டிருப்பதாக'' குறிப்பிட்டுள்ளார். வார இறுதிவரை காத்திருந்துவிட்டு, நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவில் தான் அளித்த சாட்சியம் பற்றி குறிப்பிடப் போவதாகவும் டாக்டர் கெல்லி, அந்த மடலில் குறிப்பிட்டிருந்தார். தனது நண்பர் ஒருவருக்கு அவர் அனுப்பியிருந்த எலக்ட்ரானிக் மெயில் மிகுந்த "போர்க்குணம்" கொண்டதாக அமைந்திருந்தது. தன்னை சுற்றிவரும் அவதூறுகளைத் தான் சமாளித்து ஈராக்கிற்கு மீண்டும் ஆயுத ஆய்வாளராக செல்லக்கூடும் என்று மிகுந்த உற்சாகத்தோடு அந்த மடலில் டாக்டர் கெல்லி குறிப்பிட்டிருந்தார்.

அவரது தற்கொலைக் குறிப்பு எதையும் விட்டுச் செல்லவில்லை. அவர், பல சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர்களுடன் உரையாடுவதற்கு தயாராக இருந்தார். அப்படிப்பட்டவர் தனது முடிவு குறித்து, தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எந்தவிதமான விளக்கமும் தராமல் மாண்டிருக்கிறார்.

அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த காரணத்தினால், கெல்லியின் நடவடிக்கை அந்த நேரத்தில் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாமல் முரண்பட்டதாக இருக்கக்கூடும் என்பது விவாதத்திற்குரியது. ஆனால், அத்தகைய விளக்கத்தை தருவதற்கு முன்னர், முன் கூட்டியே அனுமானித்து முடிவு கூறிவிடாமல் உண்மைகளை மிகக் கடுமையாக ஆராய்ந்தாக வேண்டும்.

அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் உளவியல் பற்றி ஆராயும்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், டாக்டர் கெல்லி பகாய் (Baha'i) மதத்தை தழுவியிருந்தார். இந்த மதமானது, சமாதானம் மற்றும் அமைதியை அடிப்படையாகக் கொண்டதுடன், தற்கொலையை கடுமையாக கண்டிக்கின்றது. "பகாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கை என்னவென்றால் மனிதனது ஆன்மா அவனது இயல்பான மரணத்திற்குப் பின்னர் இறைவனை நெருங்கி வருகிறது. அப்படி இறைவனுக்கு நெருக்கமாக வருகின்ற ஆன்மாவிற்கு பாதகம் ஏற்படுத்துகின்ற வகையில் தற்கொலை செய்துகொள்பவர்கள் செயல்படுவதாக பஹாய் மத நம்பிக்கை வலியுறுத்துகிறது'' என்பதாக இந்த மத பிரதிநிதி ஒருவர் கார்டியன் பத்திரிகைக்கு கூறினார். பத்திரிகையாளர் ரொம் மன்கோல்ட் போன்ற அவரது நண்பர்கள் டாக்டர் கெல்லி உறுதிமிக்கவர், எந்த நெருக்கடியையும் சமாளிக்கக்கூடியவர், அழுத்தத்திற்கு அப்பாற்பட்ட மனிதர், ஈராக்கில் ஆயுத ஆய்வாளர்கள் சந்தித்த மிகவும் ஆபத்தான, நெருக்கடியான நிலைகளில் எல்லாம் பணியாற்றியவர் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்கொட்லாந்து யார்டு போலீஸ் குற்றப்புலனாய்வு குழுவினர் ஒய்ட் ஹாலில் உள்ள டாக்டர் கெல்லியின் அலவலகத்தை மூடி சீலிட்டுள்ளனர். "பாதுகாப்பு அமைச்சகத்தின் விஞ்ஞானியான அவர் இறந்தது குறித்து விரிவான அடிப்படையில் விசாரணை நடத்துவதன் ஒரு பகுதியாகத்தான் அவரது அலுவலகம் மூடி சீலிடப்பட்டதாக" டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது. |''வெள்ளிக்கிழமை மாலையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள கெல்லியின் அலுவலகத்தில் நுழைந்து வெளியாட்கள் தலையீடு இல்லாமல் பாதுகாப்பாக வைத்தனர்'' என்று மேலும் இப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

எந்த ''வெளியாட்கள் தலையீடு'' பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள்?

ஜூலை 21 அன்று டாக்டர் கெல்லியின் மரண விசாரணை துவங்கிய ஐந்து நிமிடங்களில், இந்த மரண விசாரணை பின்னர் தேதி அறிவிக்கப்படும் வரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட்ஷயர் மரண விசாரணை அதிகாரி நிக்கோலஸ் கார்டனர் கருத்து தெரிவிக்கும்போது, அவரது இடது மணிக்கட்டில் "ஆழமான காயம்" இருந்ததால் 59 வயதான கெல்லி இறந்துள்ளார் என்று கூறினார். ''ஜூலை 17 அன்று அவரைக் காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜூலை 18 வெள்ளிக்கிழமையன்று அவரது உடல் ஹாரோ டவுன் குன்றில் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது" என்று அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை இவர் தந்தார்.

மேலும், "சனிக்கிழமையன்றுதான் அவரது மனைவி தனது கணவரின் உடலை அடையாளம் காட்டினார் என்று நான் நினைக்கிறேன். எப்படி என்றாலும் சந்தர்ப்ப சூழ்நிலையில் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது" என்று இந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அவரது உடலை இறுதிச்சடங்கிற்கு தருவதற்கு முன்னர் இரசாயன (toxicology) சோதனைகளின் முடிவை, தான் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக மரண விசாரணை அதிகாரி கார்டினர் தெரிவித்தார். இந்த இரசாயன சோதனை முடிவுகள் இன்னும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved