World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

Turkey: Power struggle between government and army

துருக்கியில் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையே அதிகாரப் போராட்டம்

By Justus Leicht and Sinan Inkinci
18 July 2003

Back to screen version

தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிதவாத இஸ்லாமிய நீதி மற்றும் மேம்பாட்டு கட்சியின் (AKP) ரிசப் தாயிப் எர்டோகன் (Recep Tayip Erdogan) தலைமையில் அமைந்துள்ள துருக்கி அரசாங்கத்திற்கும், துருக்கியின் இராணுவ தலைமைக்கும் இடையில் உருவாகியுள்ள கொந்தளிப்புகள் தற்போது பகிரங்கமாக அரசியல் ஆதிக்க கிளர்ச்சியாக முற்றிவிட்டது. இந்த நிலைமையில், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுமாறு அமெரிக்கா, துருக்கியின் இராணுவ ஜெனரல்களை தூண்டிக் கொண்டிருக்கின்றது.

சென்ற நவம்பர் மாதம் துருக்கி நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் AKP அறுதிப் பெரும்பான்மைக்குமேல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஏப்ரல் 23 ந் தேதி ''தேசிய இறையாண்மை'' தினம் நடத்தப்பட்டபோது ஆட்சியை பகிரங்கமாக மட்டம் தட்டும் நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக நடைபெற்றுவரும் வரவேற்பை துருக்கி ஜனாதிபதி (Ahmet Necdet Sezer) அஹமத் நீதத் சிசரும் மற்றும் முழு இராணுவத் தலைவர்களும் புறக்கணித்தனர். இந்த புறக்கணிப்பிற்கு அவர்கள் கூறிய காரணம் AKP க் கட்சியைச் சேர்ந்த துருக்கி நாடாளுமன்றத் தலைவரான (சபா நாயகர்) புலன்ட் ஆரின், இந்த வரவேற்பிற்கு தலையில் முன்டாசு அணிந்த தனது மனைவியை அழைத்து வருகிறார் என்பதுதான் ஆகும். அரசாங்க விழாக்களில் இப்படி முன்டாசு அணிந்து வருவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அரசியல் சின்னம் என்று கருதப்படுகிறது.

இந்த புறக்கணிப்பு நிகழ்ச்சி நடந்து ஒரு வாரத்திற்கு பின்னர், இராணுவத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்திவரும் தேசிய பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துருக்கியின் ''மதச்சார்பற்ற நிலையை பாதுகாக்கும் விழிப்புணர்வு மிகப்பெரும் அளவிற்கு நிலைநாட்டப்பட வேண்டும்'' என தீர்மானம் கேட்டுக்கொண்டது. இதற்கு முன்னர் 1997 ம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று இதேபோன்று ஒரு மோசமான ஒரு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் பிரதமர் (Necemettin Erbakan) நசீமுதீன் இர்பாக்கனுக்கு இதேபோன்றதொரு இறுதி எச்சரிக்கையை அப்போது இராணுவம் விடுத்தது. அதற்கு சில மாதங்களுக்கு பின்னர் இர்பாக்கின் ரத்தம் சிந்தா ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்டார்.

இந்த சம்பவங்கள் நடைபெற்று சில வாரங்களுக்கு பின்னர் அமெரிக்க பாதுகாப்பு துணை அமைச்சர் வொல்போவிட்ஸ் துருக்கித் தலைநகர் அங்காரவிற்கு வந்திருந்தார். அவர், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிகளுக்கு எதிராக செயல்படுமாறு பகிரங்கமாக இராணுவத்தை தூண்டி, துருக்கி நாடாளுமன்றம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மார்ச் முதல் தேதியன்று, ஈராக் போரில் கலந்துகொள்ளும் எந்த அமெரிக்கத் துருப்பும் துருக்கியில் இருக்கக்கூடாது என்று துருக்கி நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ''ஏதாவதொரு காரணத்தினால் இந்தப் பிரச்சனையில் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு துருக்கி முன்னணி பங்கு வகிக்கவில்லை'' என்று குறிப்பிட்ட அவர் மேலும் ஒருபடி சென்று ''எனது கருத்துப்படி, குறிப்பாக அவர்களது நிர்வாக முறைப்படி அமெரிக்காவின் முயற்சிகளை ஆதரிப்பது துருக்கியின் நலன்களுக்கு ஏற்றது என்று துருக்கி இராணுவம் கருதுகின்றது'' என்றும் அமெரிக்க அமைச்சர் குறிப்பிட்டர். கடந்த 40 ஆண்டுகளில் துருக்கி இராணுவம் நான்கு முறை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் இறங்கியிருக்கின்றது.

இத்தகைய கடுமையான நிர்பந்தங்களுக்கிடையே AKP யானது, இராணுவத்தோடு முழுமையான ஒற்றுமை உணர்வோடு இயங்கி வருவதாக தொடர்ந்தும் ஒரு கருத்தை வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில் இராணுவத் தளபதிகள் பெற்றிருக்கின்ற வலுவான நிலைபாட்டை கட்டுப்படுத்துவதற்கும் முயன்று வருகிறது. 1982 ம் ஆண்டு இராணுவ ஆட்சியை உருவாக்கிய அரசியல் சட்டத்தில் இராணுவத் தளபதிகள் வலுவான நிலைப்பாட்டை பெற்றுள்ளனர். இந்த மோதலில் AKP யானது ஐரோப்பிய யூனியனின் ஆதரவை நம்பியிருக்கிறதுடன், ஐரோப்பிய யூனியனின் உறுப்பினராக ஆவதற்கு தற்போது பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றது. துருக்கியில் பெரும்பாலான தொழிலதிபர்கள் சம்மேளனமான TUSIAD யானது துருக்கி அரசாங்கத்தின் முயற்சியை ஆதரிக்கின்றது என்பதை அரசாங்கம் அறிந்திருக்கின்றது. ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் ஆவதற்கான பேச்சுவார்த்தைகளை துவங்குவதற்கு அவசியமான நிபந்தனையாக ஐரோப்பிய யூனியன் அறிவித்திருப்பது, இராணுவத்திற்கு துருக்கியில் இருக்கின்ற ''பொறுத்தமற்ற பெரும் அதிகாரத்தை'' மட்டுப்படுத்த வேண்டும் என்பதாகும்.

இந்தோனேசியாவில் முன்னாள் சுகார்ட்டோ ஆட்சியை போன்று துருக்கி இராணுவம் சமுதாயத்தின் மிகப்பெரிய ஓட்டுண்ணியாக தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இராணுவ உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் துருக்கி பாதுகாப்பு படைகளை வலுப்படுத்துவதற்கான அறக்கட்டளை (TSKGV) ஆகிய இரண்டும் பொதுமக்களுக்கு நலன் பயப்பது என்று அறிவிக்கப்பட்டிருப்பதுடன், அந்த அமைப்புகளுக்கும் வரிவிலக்கும் அளிக்கப்பட்டிருக்கின்றது. உண்மையிலேயே இந்த இரண்டு அமைப்புகளும் மிகப்பெரிய கம்பெனிகளாக வளர்ந்திருப்பதுடன், அவற்றிற்கு பல கிளைகளும் செயல்படுகின்றன. பல அமெரிக்க, ஐரோப்பிய கம்பெனிகளின் பங்குகளை இராணுவ அமைப்புக்கள் வாங்கியிருக்கின்றன. குட்இயர், மோபில், செல், ரெனால்ட் (Goodyear, Mobil, Shell, Renault) போன்ற நிறுவனங்களிலும், துருக்கி தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு நிறுவனத்துடனும் துருக்கி இராணுவ அமைப்புகளுக்கு பங்குகள் இருக்கின்றன. அத்துடன் இராணுவ பட்ஜெட்டை முடிவு செய்வது இராணுவமாக இருப்பதுடன், இராணுவ அமைச்சர் வெறும் கையெழுத்து மட்டும் போடுபவராக உள்ளார். இதர முக்கியமான அரசியல் விவகாரங்களில் முடிவு எடுக்கும் போது அதில் கலந்துகொள்ளுகின்ற உரிமையும், அரசாங்க முடிவுகளை ரத்து செய்கின்ற அதிகாரமும் இராணுவத்திற்கு உண்டு.

நிலைபெற்றுவிட்ட ஊடகங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றன. லிபரல் பத்திரிகையான ரேடிகல்`(Radikal) தீவிரமான பத்திரிகையும் அல்ல, இஸ்லாமிய ஆதரவு பத்திரிகையும் அல்ல. மாறாக அந்தப் பத்திரிகை சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறும், இராணுவத்திலிருந்து வரும் நிர்பந்தங்களை புறக்கணிக்குமாறும் AKP க்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. செல்வாக்குமிக்க ஊடக நிறுவனமான டோகான் கம்பெனிக்கு சொந்தமான ரேடிகல் அண்மையில் மிகுந்த பரபரப்புமிக்க பேட்டி ஒன்றை பிரசுரித்திருக்கின்றது. அந்த பேட்டியானது இராணுவத்திற்கு எதிரானது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகத் தெரிகின்றது. அந்தப் பேட்டியில் குர்து இனத்தைச் சேர்ந்த ஒருவர், தான் அரசியல் சார்பில்லாதவர் என்றும், 1980 ம் ஆண்டு நடைபெற்ற இராணுவ சதிப் புரட்சியைத் தொடர்ந்து எந்தவிதமான காரணமும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டது பற்றி விவரித்திருக்கிறார். அதற்குப் பின்னர், அந்த பேட்டியில் தனது சக கைதிகள் பிறரை துன்புறுத்தி இன்பம் காணும் முறையில் (சாடிசம்) சித்திரவதை செய்யப்பட்டது குறித்து விவரித்திருக்கிறார்.

இப்படி சித்திரவதை செய்யப்பட்டவர்களில் மிகப்பெரும்பாலோர் முதலில் அரசியல் சார்பற்றவர்களாக இருந்தனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னர், குர்து இன தேசிய கொரில்லா இயக்கமான குர்து உழைப்பாளர் கட்சியில் (PKK - Kurdish Workers Party) சேர்ந்தனர். இந்த பேட்டி முதலாளித்துவ செய்திப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருப்பது குர்து இனத்தவர் வாழும் பிராந்தியங்களில் உள்நாட்டுப்போர் நடப்பதற்கு இராணுவத்தின் கொடுங்கோன்மையும் பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்வதாக ஆகின்றது. கடந்த 15 ஆண்டுகளில் இந்த உள்நாட்டுப்போரில் சுமார் 35,000 பேர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். துருக்கி நிர்வாகத்திற்குள்ளே எந்த அளவிற்கு மோதல்கள் தீவிரமாக நடைபெறுகின்றன என்பதை அந்தக் கட்டுரை எடுத்துக் காட்டுகின்றது.

தற்போது இராணுவத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டங்களும், அரசியல் சட்ட மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, முன்கூட்டியே பரிசீலனை செய்வதற்கு தேசிய பாதுகாப்பு குழுவில் இவை தாக்கல் செய்யப்படவில்லை. அத்தோடு ''ஐரோப்பிய யூனியனுடன் சமரசம் செய்துகொள்ளும் ஆறாவது திட்டம்'' ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இத்தகைய திருத்தங்கள் குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டவை என்றாலும், ஊடகங்களில் குர்து மொழியை அறிமுகப்படுத்தவதற்கு அந்த திருத்தங்கள் அனுமதிக்கின்றன. எதிர்காலத்தில் இராணுவப் பிரதிநிதி எவரும் ஊடக கண்காணிப்பு ஆணையத்தில் இடம்பெறமாட்டார்கள் (RTUK) என்று திருத்தத்தில் கூறப்பட்டிருக்கின்றது. ''தேசிய ஒற்றுமைக்கு எதிராக பிரச்சாரம்'' செய்வதற்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிப்பதற்கு வகை செய்யும் படுபயங்கரமான எட்டாவது பாரா நீக்கப்படவிருக்கிறது. இராணுவத் தலைமை உடனடியாக இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மே இறுதியில் இராணுவ தலைமைத் தளபதி ஹில்மே ஒஸ்காக் (Hilmi Özkök) 1997 ல் நடைபெற்றது போன்று மற்றொரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதிப் புரட்சி நடப்பதை திட்டவட்டமாக மறுத்துவிடவில்லை. இதற்கிடையில் ஜனாதிபதி சீசர் தனக்கு இருக்கின்ற ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி எட்டாவது பாரா நீக்கப்படுவதை ரத்து செய்துவிட முடியும். இராணுவ ஜெனரல்களைப் போன்றே தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். துருக்கி நாடு நிலைபெற்றுயிருப்பதற்கே ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இராணுவத்தின் அதிகாரத்தை குறைப்பதற்கான மற்றொரு சீர்திருத்த நடவடிக்கை விரைவில் வர இருக்கின்றது. அந்த திட்டத்தில் தேசிய பாதுகாப்புக் குழுவை சீர்திருத்தவும், இராணுவத்தின் நடுநாயகமான அரசியல் அதிகாரத்தை சீர்திருத்தவும், திட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஜனாதிபதியும் அரசாங்கப் பிரதிநிதிகளும் தேசிய பாதுகாப்புக் குழுவில் இடம்பெறுவர். இராணுவத்தின் பிரதிநிதியாக தலைமை தளபதி மட்டுமே இடம்பெறுவர். இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போல், ஆயுதப்படைகளின் எல்லா ஜெனரல்களும் தேசிய பாதுகாப்புக் குழுவில் இடம்பெறமாட்டார்கள். மேலும், பாதுகாப்புக் குழுவின் செயலாளராக ஒரு சிவிலியன் இருப்பார். பாதுகாப்புக் குழு பட்ஜெட் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வரும். அரசாங்க பாதுகாப்பு நீதிமன்றங்கள் ஒழித்துக்கட்டப்படும். எனவேதான், ஜூன் 26 ந் தேதி நடைபெற்ற கடைசி தேசிய பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் அரசாங்கத்திற்கும், இராணுவத் தளபதிகளுக்கும் இடையே எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை. இதில் வியப்படைவதற்கு எதுவும் இல்லை.

ஐரோப்பிய யூனியனுடன் சமரசம் செய்து கொள்வதற்கு இணையாக AKP அரசாங்கம், அமெரிக்காவுடன் தனது உறவுகளை மேம்படுத்தவும் முயன்று வருகின்றது. இந்தக் காரணத்திற்காகவே துருக்கியின் வெளிவிவகார துணை அமைச்சர் உகூர் சியால் (Ugur Ziyal) ஜூன் மாதம் மத்தியில் வாஷிங்டனுக்குச் சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தினார். அங்கு அவர் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக எடுத்திருக்கும் அச்சுறுத்தல்களுக்கு ஆதரவு தெரிவித்தார். சில நாட்களுக்கு பின்னர் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா குல் எல்லா துருக்கி துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும் ''மனித நேய உதவி நடவடிக்கைகளுக்காக'' திறந்துவிடப்படும் என்று அறிவித்தார். இதில் வெளிநாட்டு துருப்புக்களும் அடங்கும்.

இருந்தபோதிலும், இராணுவத்தின் ஆதரவை பெறுவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் பயனற்றவை என்பது தெளிவாக தெரிகின்றது. ஜூன் 30 ந் தேதி புஷ் நிர்வாகம் நேரடியாக துருக்கி இராணுவ அலுவலகத்திற்கு குறிப்பு ஒன்றை அனுப்பியிருப்பதாக துருக்கி டெய்லி நியூஸ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்தக் குறிப்பில் அமெரிக்க அரசாங்கம் ஈராக் போரின்போது துருக்கி இராணுவம் தந்திருக்கும் பங்களிப்பை பாராட்டியுள்ளதுடன் மேலும், துருக்கி ஆயுதப் படைகளின் சிறப்பையும் சுட்டிக்காட்டியுள்ளது. அதே நேரம் சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரியுள்ள ''பொருளாதார கட்டமைப்பு சீர்த்திருத்தங்களை'' செயல்படுத்தி உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதலை தொடுக்குமாறு AKP அரசாங்கத்திற்கு பொருளாதார நிர்பந்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

ஜூன் மாத இறுதியில் புஷ் நிர்வாக வட்டாரங்களை மேற்கோள் காட்டி NTV-MSNBC தொலைக்காட்சி அலைவரிசை தந்திருக்கும் செய்தியின்படி, AKP அரசாங்கம் ''IMF திட்டத்தில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் இருந்து விலகிச் செல்வதாக'' தெரிவித்துள்ளது. AKP யின் பொதுமக்களை கவருகின்ற கொள்கைகள் அமெரிக்காவிற்கு கவலை அளிப்பதற்கான ஒரு காரணம் என்றும், IMF ன் கண்டிப்பான நிதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மீறுவதாக தோன்றுவதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 4 ந் தேதி ஈராக்கின் வடக்குப் பகுதியிலுள்ள சுலைமானியா நகருக்கு அமெரிக்க துருப்புக்கள் விரைந்து வந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டபோது, துருக்கி - அமெரிக்க உறவுகள் மிக நெருக்கடியான கட்டத்திற்கு வந்தன. சுலைமானியா நகரில் துருக்கி இராணுவ அலுவலகத்தை அமெரிக்க துருப்புக்கள் பிடித்துக்கொண்டபோது அங்கிருந்த 11 துருக்கி அதிகாரிகளையும், உள்ளூர் பணியாளர்கள் அனைவரையும் சிறைபிடித்ததுடன் அலுவலக சாதனங்களையும் உடைத்து நொறுக்கினர். சுமார் 100 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிர்குக் நகரில் இருக்கும் குர்து இன உயர் அதிகார பிரதிநிதியை கொலை செய்வதற்கு சதி செய்ததாக அமெரிக்க துருப்புக்கள் இவர்கள் மீது குற்றம் சாட்டின. துருக்கி அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானது என்றும் வர்ணித்தது. கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், அமெரிக்கா மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் துருக்கி அரசாங்கம் கோரியது. எதிர் நடவடிக்கையாக துருக்கி தனது எல்லைப் பகுதியில் உள்ள ஹார்பூட் சோதனைச் சாவடியை மூடியது. வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்கத் துருப்புக்களுக்கு ஆயுதங்களையும், எரிபொருள்களையும் இந்த வழியாகத்தான் அனுப்பவேண்டும்.

AKP அரசாங்கத்துடன் இராணுவம் நடத்தி வரும் மோதலில் இராணுவத்திற்கு தொழிற்சங்க அதிகாரத்துவமான டுர்கிஸ் (Türk Is - trade union umbrella organisation) ஆதரவு காட்டி வருகின்றது. டுர்கிஸ் என்பது துருக்கியில் தொழிற்சங்கங்களின் ஒட்டுமொத்த சம்மேளன அமைப்பாகும். துருக்கி ''இடதுசாரிகள்'' ஒரு பகுதியினரும் இராணுவத்தை ஆதரிக்கின்றனர். தொழிலாளர்கள் தங்களை ''ஆயுதம் ஏந்தாத துருப்புக்கள்'' என்று கருதிக் கொள்ளவேண்டும் என்று டுர்கிஸ் சம்மேளனம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையில் 1997 பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியை நினைவுபடுத்தி பார்க்கவேண்டும். அப்போது இஸ்லாமிய வளக்கட்சி ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சியை இராணுவம் அப்புறப்படுத்தும் வகையில் தலையிட்டதை டுர்கீஸ் தொழிற்சங்க சம்மேளனம் ஆதரித்தது. இப்போது தொழிற்சங்கத் தலைமை ஒரு படி மேலே சென்று இராணுவம் ''ஆயுதம் ஏந்தாத துருப்புக்களுக்கு'' வேண்டுகோள் விடுக்கும் முன்னரே கூட தனது ஆதரவை தொழிற்சங்கம் தெரிவித்திருக்கின்றது. வெட்கக்கேடான முறையில் தொழிற்சங்கத்தினர் இடைக்கால ஆட்சி தேவையா அல்லது இராணுவ சதிப் புரட்சி அவசியமா என்பது குறித்து பகிரங்கமாக விவாதம் செய்துகொண்டு வருகின்றனர்.

மிகுந்த மலிவான முறையில் டுர்கிஸ் தொழிற்சங்கம் தனது விசுவாசத்தை இராணுவத்திற்கு காட்டிக் கொண்டிருக்கின்றது. பல ஆண்டுகளாக தனியார்மயமாதல் மற்றும் ஊதிய விகிதங்கள் தொடர்பான பிரச்சனைகளை தவிர்த்து வந்த தொழிற்சங்கம், மே 17 ந் தேதி புதிய தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் தனக்கு தொழிலாளர்களிடையே செல்வாக்கை பெருக்கிக் கொள்வதற்காக இதே பிரச்சனையை பயன்படுத்திக்கொண்டது. தொழிலாளர்களின் தேசிய உணர்வுகளை எழுப்புகின்ற வகையில் வேண்டுகோளை விடுத்து, நாட்டைக் காப்பாற்றவேண்டும் என்ற முழுக்கங்களை எழுப்பினார்கள். ஆட்சிக்கு எதிரான அமெரிக்க ஆதரவு குழுவினரோடு தன்னையும் இணைத்துக்கொள்ள டுர்கிஸ் தொழிற்சங்கம் முயன்று வருகிறது. இந்த அமைப்பின் காப்பாளர் என்று கருதப்படும் எல்டிரிங் கோக் (Yildirim Koc) ஆத்திரமூட்டும் வகையில் அனைத்து கட்சிகளும் தங்களது கொடிகளையும், பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தின்போது நீக்கிவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ''துருக்கியின் தேசிய கொடி தவிர வேறு எந்த கொடியையும், பதாகைகளையும் பார்க்க நாங்கள் விரும்பவில்லை'' என்று அவர் கூச்சலிட்டார்.

டூர்கிஸ் தொழிற்சங்க இயக்கம் மட்டுமே இத்தகைய நிலைப்பாடுகளை கொண்டுள்ள அமைப்பு அல்ல. தேசியவாத ஸ்டாலினிச ''இடதுசாரிகள்'' தங்களது வாரப் பத்திரிகையான (Aydinlik) அய்டின்லீக் கில் தொழிலாளர்களும், துருக்கி இராணுவப் படைகளும் ஓரணியில் திரண்டு நிற்பதாக பிரகடனப்படுத்தியது. செல்வாக்குமிக்க இடதுசாரி செய்தி பத்திரிகையான Cumhurriyet பத்திரிகையும் இராணுவத்தை ஆதரித்துள்ளது.

AKP அரசாங்கத்தைப் பொறுத்தவரை இராணுவம் தந்துவரும் நிர்பந்தங்களை எதிர்பதற்கு பரவலான பொதுமக்களின் ஆதரவை கோருகின்ற வல்லமை அதற்கு இல்லாததாக உள்ளது. துருக்கியின் சந்தைகளை சர்வதேச முதலீட்டிற்கு திறந்துவிடுவது மற்றும் IMF, ஐரோப்பிய ஒன்றியம் கோரி வருகின்ற இதுபோன்ற புதிய தாராளவாத சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதில் மிகுந்த பரபரப்போடு ஈடுபட்டிருப்பதுடன், அத்தகைய நடவடிக்கைகளில் மட்டுமே நேரத்தையும், முனைப்பையும் அரசாங்கம் செலவிட்டு வருகிறது.

அரசிற்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் டூப்ராஸ் புகையிலை மற்றும் குடிபானங்களுக்கான ஏகபோக நிறுவனம் டெக்கல் மற்றும் பெட்கிம் பெட்ரோகினியா ஆகிய அரசு நிறுவனங்கள் தனியார் உடைமையாக்கப்பட இருக்கின்றன. மின்சாரம் வழங்கும் 33 நிறுவனங்களில் 19 நிறுவனங்களை தனியார் உடைமையாகயிருக்கின்றன. துருக்கி முதலீட்டாளர்களுக்குள்ள சுதந்திரமும், அடிப்படை உரிமைகளும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சரிசமமாக கிடைக்கும் என்று தற்போது பொதுச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும், கம்பெனிகளும் நிலத்தை கையகப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அரசுத்துறை நிறுவனங்களில் ஊதிய உயர்வு இல்லை மற்றும் 100,000 வேலை வாய்ப்புக்களை வெட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியுள்ளதால், இராணுவத்தை போன்று பொதுமக்களும் அணி திரண்டு எழுந்துவிடுவார்களோ என்று அரசாங்கம் பயந்து கொண்டிருக்கின்றது. பொதுமக்கள் சமூகக் கேள்விகளை எழுப்பி கிளர்ச்சியை துவக்கினால் அந்தக் கிளர்ச்சி மிக எளிதாக கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடும்.

இந்தப் பின்னணியில் தான் எர்டோகன் சைபிரஸ் தொடர்பாக தனது நிலையை தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கிறார். என்றாலும், ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக ஆவதற்கு மனுச் செய்திருக்கிற விவகாரத்தில் சைப்பிரஸ் பிரச்சனை முக்கியமான ஒன்று தான்.

ஆரம்பத்தில் எர்டோகன் அரசாங்கம் சைபிரஸில் ஐ.நா. திட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது. சைப்பிரஸ் ஒன்றுபட்ட நாடாக ஆக்கப்பட்டு கிரேக்க மற்றும் துருக்கி பகுதிகள் தன்னாட்சி உரிமை கொண்டவையாக ஆக்கப்பட்டு, இராணுவம் சைப்பிரஸில் நிலைகொண்டிருப்பதை குறைத்துக் கொள்ளவேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது. சைப்பிரஸ்சைச் சேர்ந்த மிகப்பெரும்பாலான துருக்கி - சைப்பிரஸ் மக்கள் மிகப் பெருமளவிற்கு திரண்டு பேரணி நடத்தி சைப்பிரஸ் மீண்டும் ஒன்றுபடும் திட்டத்தை ஆதரித்தன. மற்றொரு பக்கம் இந்தத் திட்டத்தை இராணுவத்தினரும், துருக்கி இராணுவ உதவியோடு சைப்பிரஸின் வடக்குப் பகுதியை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வலதுசாரி தேசியவாத ராப்டெங்கடாஸ் ''Rauf Denktasch" ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதற்கிடையில் எர்டோகன் அரசாங்கம் டெங்கடாஸ் நிலைப்பாட்டை ஆதரித்ததுடன் ''அதிகாரத்திற்கு உத்திரவாதம்'' செய்து தரும் வகையில் இராணுவம் பணியாற்றி வருவதாக சுட்டிக்காட்டியது.

துருக்கி நிர்வாகத்திற்குள்ளேயே தனக்கு உருவாகியுள்ள அடிப்படை ஆபத்தை சந்திக்கிற எர்டோகன், துருக்கிக்கு உள்ளேயே பாரம்பரிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார். கெம் ஹூசான் என்பவர் தலைமையில் இயங்கி வருகின்ற தேசியவாத இளைஞர் கட்சி, AKP க்கு மிகப்பெரிய போட்டியாக உருவாகி வருவதாக மக்கள் கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. அந்தக் கட்சியையும், அதன் தலைவர் ஹுசானை ஒடுக்குகின்ற வகையிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயகமயமாக்குகிறோம் என்ற அனைத்து பேச்சுக்களையும் எள்ளி நகையாடுகின்ற வகையில் அமைந்திருக்கின்றன.

ஹுசான் துருக்கியின் மிகப்பெரும் கோடீஸ்வரரான தொழில் அதிபர். அவர் சந்தேகத்திற்குரிய வர்த்தக நடைமுறைகளை கையாண்டு வருவதாலும் அவரது ஸ்டார் ஊடக குழுவை அரசியல் காரணங்களுக்காக மிகக்கொடூரமான முறையில் பயன்படுத்தி வருவதாலும், அவர் அடிக்கடி ''துருக்கியின் பெர்லிஸ்கோனி`` என்று வர்ணிக்கப்படுகிறார். சமூக நெருக்கடியை தனது சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள முயலுகிறார். துருக்கியில் நிலவுகின்ற மிகக் கடுமையான சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியமும், ஐரோப்பிய ஒன்றியமும் தான் பொறுப்பு என்று பழிபோடுகிறார். வரிக்குறைப்பு, ஏழைகளுக்கு நிலத்தை விநியோகிப்பது, நூற்றுக்கணக்கான புதிய பல்கலைக்கழகங்களை அமைப்பது போன்ற உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததற்கும் காரணம் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகள் தான் என்று அவர் குறை கூறி வருகிறார். இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவாக அவரது இரண்டு மின்சாரக் கம்பெனிகளையும், ஒரு வங்கியையும் அரசாங்கம் கையகப்படுத்திக் கொண்டுவிட்டதுடன், அவரது குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்யப்போவதாகவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. ஹுசான் தன்னை கரிபூசல் செய்து வருவதாக எர்டோகன் குற்றம்சாட்டி வருவதால், ஒரு மாதம் வரை அவரது தொலைக்காட்சி நிலையங்கள் ஒளிபரப்ப முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved