World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

West African military force enters Liberia

மேற்கு ஆபிரிக்க இராணுவப்படை லைபீரியாவில் நுழைகிறது

By Christ Talbot
7 August 2003

Back to screen version

சுற்றியுள்ள கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து லைபீரிய அரசாங்கப் படைகளைப் பிரிக்க வைக்கும் நோக்கத்துடன், லைபீரியாவின் தலைநகரான மன்ரோவியாவிற்குச் சியராலியோனிலிருந்து மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார அமைப்பின் (ECOWAS) முதல் பிரிவான நைஜீரியப் படைகள் ஆகாய வழியில் அனுப்பப்பட்டன.

இந்த வாரம் கூடுதலான அளவு நைஜீரியப் படைகள் அனுப்பப்படும்; இதையொட்டித் தொடக்கத்தில் இருக்கும் படைகள் எண்ணிக்கை 1500ஐ எட்டும். கடந்த வார இறுதியில் கானாவில் கூடிய ECOWAS தலைவர்கள், நைஜீரியாவிலிருந்தும் மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் மொத்தம் 3250 வீரர்களை அடுத்த மூன்று வாரத்தில் அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்கா வலியுறுத்துவதின் விளைவாக, லைபீரிய ஜனாதிபதி சார்ல்ஸ் டெய்லர் பதவியிலிருந்து விலகி, அடுத்து சில நாட்களுக்குள் நைஜீரியாவில் புகலிடம் கோரி வசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் சார்பாக இந்த ECOWAS -ன் தலையீடு செயலாற்றப்படுகிறது. லைபீரியக் கடற்பகுதியையொட்டி 3 கப்பல்களில் ஐக்கிய அமெரிக்க அரசுகள் 3200 கடற்படையின் நிலப்படை வீரர்களைக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ.புஷ் அமெரிக்கப் படைகளைப் பயன்படுத்துவது பற்றி உறுதியளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த இரண்டு வாரங்களில் அண்மை நாடான கிய்னியாவின் ஆதரவுடன் Liberians United for Reconciliation and Democracy (LURD) என்னும் கிளர்ச்சிக் குழு, மன்ரோவியாவின் மீது தாக்குதலை அதிகரித்துள்ளது, அது நூற்றுக்கணக்கான குடிமக்களின் இறப்பையும், ஆழ்ந்த மனிதப் பேரழிவையும் விளைவித்துள்ளது.

10 லட்சம் மக்களுக்கு மேல், உணவு, நீர் இருப்புக்கள் குறைந்துகொண்டே போகும் அளவில், நகரத்திற்குள் அகப்பட்டுக்கொண்டுள்ளனர். அன்றாடம் தொலைக்காட்சிச் செய்திகளில், பல்லாயிரக்கணக்கான மக்கள், காலிக் கட்டிடங்களைத் தேடியும், தற்காலிகக் குடியிருப்புக்களிலிருந்தும் முறைசாரா குடிப்படைக் குழுக்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சண்டையில் இருந்து தப்பியோடிச் செல்லும் காட்சிகள் வந்துகொண்டு இருக்கின்றன.

லைபீரிய அரசாங்கத்தோடு சண்டையிடும் மற்றொரு கிளர்ச்சிக்குழுவான லைபீரியாவின் ஜனநாயகத்திற்கான இயக்கம் (MODEL) ஐவரிகோஸ்ட் பூசலில் அரசாங்கத்தின் ஆதரவிற்கு உட்பட்டிருந்தது, இப்பொழுது லைபீரியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான புக்கனனைக் கைப்பற்றியுள்ளது. LURD, MODEL ஆகிய இரண்டும் தமக்கிடையே மன்ரோவியாவிற்கு வெளியே பெரும்பாலான லைபீரியப் பகுதிகளைக் கைவசப்படுத்தியுள்ளன.

லைபீரியாவில் அமெரிக்க ஆதரவு தலையீடு பல காலம் நீடிக்கும் தன்மை உடையதாகத் தெரிகிறது; புஷ் நிர்வாகத்திற்குள்ளே பிரிவுகள் இருப்பது பகுதி அளவில் ஒரு காரணம், அமெரிக்காவிற்கும் ECOWAS நாடுகளுக்கும் போரை நடத்தும் செலவு பற்றிய பேரங்கள் பகுதி அளவில் மற்றொரு காரணம் ஆகும். ஜூன் மாதம் வீரர்கள் தளத்திலிருக்க அமெரிக்கக் கப்பல் ஒன்று லைபீரியாவிற்கு அனுப்பப்பட்டு, பின்னர் அது திரும்பப்பெறப்பட்டு விட்டது. ECOWAS தன் படைகளை ஜூலை 4 அனுப்புவதாகக் கூறியது, ஆனால் அவையும் வரத்தவறிவிட்டன.

ஜூலை மாதத் தொடக்கத்தில் புஷ் ஐந்து நாட்கள் ஆப்பிரிக்க வருகை புரிந்த்தில், மேற்கு ஆபிரிக்க தலையீட்டில் அமெரிக்க ஆதரவு பற்றிய அறிவிப்பு வருமென்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் புஷ் ஒரு சிறிய ஆய்வுக்குழு ஒன்றை மட்டுமே அனுப்பி வைத்திருந்தார். கிளர்ச்சிப் படைகள் இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜூன் 17ல் அறிவிக்கப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டை முறித்துக் கொண்டு, கடந்த இரு வாரங்களாகத் தங்கள் தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளனர்.

ECOWASம் 10 பேர் அடங்கிய குழு ஒன்றை மன்ரோவியாவிற்கு அனுப்பிவைத்தது, நிலைமையை ஆராய எனக் கூறப்படுகிறது. அமெரிக்கப் படைகள் அந்நாட்டை நோக்கி வருகின்றன என்ற புஷ்ஷின் அறிவிப்பைத் தொடர்ந்து, மற்றொரு போர் நிறுத்த ஒப்பந்தம் வந்தது. மேற்கு ஆபிரிக்க மந்திரிகள் டெய்லரைச் சந்தித்து உண்மையிலேயே அவர் பதவி விலகுவாரா என்று அறிய முற்பட்ட அளவில், டெய்லருடைய படைகள் ECOWAS படைகள் வருவதற்கு முன்பே கிளர்ச்சிக்குழுப் படைகளை விரட்டும் தாக்குதலில் ஈடுபட்டன.

கடந்த வாரம் அமெரிக்கா, ஐ.நா. பாதுகாப்புக்குழுவில் மேற்கு ஆபிரிக்க தலையீட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவரச் சிறப்பு இரகசியக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது; இதில் ஐ.நா. முழு அளவிலான படைகளை அக்டோபரில் அனுப்புவதற்கும் வழிவகையிருந்தது. ஆனால் இத்தீர்மானத்தில் ``பங்களிக்கும் நாடுகள்`` லைபீரிய அமைதி காக்கும் நடவடிக்கைகளில் விலக்கு அளிக்கப்படவேண்டும் என்ற விதியை அமெரிக்கா வலியுறுத்தியது (அதாவது அமெரிக்க அதிகாரிகளும், அமெரிக்க இராணுவத்தினரும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு என்று). இந்த விதிக்கு பிரான்ஸ், ஜேர்மனி, மெக்சிகோவால் பெயரளவு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அவை வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நிலையில், தீர்மானம் நிறைவேற வகை செய்யப்பட்டது.

ஐ.நா.வின் ராஜதந்திர முறையை அமெரிக்கா ஆதரிப்பதில்லை என்றாலும், ஐ.நா. தீர்மானம் நைஜீரியாவையும் மேற்கு ஆபிரிக்க நாடுகளையும் பேச்சுவார்த்தைகளில் கொண்டுவருவதற்குத் தேவைப்பட்டது. புஷ் நிர்வாகத்தின் புதிய பழமைவாதிகள், அதிக கனிம வளம் இல்லாத மற்றும் மூலோபாய ரீதியில் குறைந்த முக்கியத்துவம் பெற்ற லைபீரியா நாட்டின் பிரச்சினையில் அமெரிக்கச் செலவு குறைவாக இருந்தால் போதும் என விரும்பியதோடு, மற்ற மேற்கத்திய நாடுகள் ஐ.நா. மூலம் செலவில் பங்கு பெறட்டும் என்று கருதியதாகவும் தெரிகிறது.

அமெரிக்கா நூறாண்டுகளுக்கு மேல் கொள்ளையடித்தும், சுரண்டல் செய்தும் இருந்த ஒரு நாட்டின் மீது நம்பிக்கையற்றுச் சற்று மனிதாபிமான அக்கறையை புஷ் காட்ட முன்வந்தாலும், பென்டகன், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் இராணுவம் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கும் அதிகமாகப் படைகளைப் பயன்படுத்துவது கடினம் என்று தெளிவாக்கிவிட்டது. எண்ணெய்வளம் இல்லாத சர்வாதிகார நாட்டிலும் மக்களை ``விடுவிக்கப்`` படைகள் அனுப்புவதில், அமெரிக்காவிற்குச் சில நன்மைகள் உண்டு என்று அரசுத் துறை விரும்பியது. இப்பொழுதுள்ள மிகச் சிறிய அமெரிக்கப் படையை அனுப்புவதன் மூலம் நிர்வாகத்தின் பல பிரிவுகளிடையே சமரசம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அது போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படப்படாது.

ஜூலை 31, வியாழனன்று, பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில், எந்தப் பண உதவியும் இல்லாமல் மேற்கு ஆபிரிக்க நாடுகள் அமெரிக்க சார்பில் நைஜீரியாவைக் கண்கானிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதில் அதிருப்தி தெரிவிக்கும் வகையில் நைஜீரிய ஜனாதிபதி ஓபசஞ்சோ பேசினார்.

வழக்கத்திற்கு விரோதமான முறையில் அவர் தொலைவில் நிற்கும் அமெரிக்கப் படை வீரர்களை கட்டிய வீடு பற்றி எரியும் நிலையோடு ஒப்பிட்டு வெளிப்படையான கோபத்துடன் அவர் கூறியது: ``சிலர் குறிப்பிடுகின்றனர், `நான் இங்குள்ளேன், என்னிடம் தண்ணீர், தீயணைக்கும் இயந்திரம் எல்லாம் உள்ளது. நீ உன் வீட்டில் தீயை அணைத்து முடித்தவுடன் நான் வருவேன் என்று.` எப்படிப்பட்ட உதவி இது என்று நான் வியக்க வேண்டியுள்ளது, அனைவருக்கும் மரியாதையுடன்தான் இதைக் கூறுகிறேன்.``

ECOWASன் அமைதிப்படைகளின் நடவடிக்கைக்கு கடந்த 12 ஆண்டுகளில் $12 பில்லியன் டாலர்கள் செலவு ஆனது மட்டுமின்றி 1000க்கும் மேற்பட்ட நைஜீரிய வீரர்கள் கொலையுண்டுள்ளனர் என்றும் ஓபசஞ்ஜோ சுட்டிக்காட்டினார். ``உலகம் அதைக் கவனித்து மதிக்கவும் இல்லை; நாங்கள் ஆற்றிய பணிக்கு கடன் உதவியில் நிவாரணம் கூடத் தரவில்லை`` என்றார் அவர். மேற்கத்திய நாடுகள் ஆதரவில் நைஜீரியப் படைகள் மிகவும் மதிப்பிழந்ததுடன், சம்பளமில்லாத வீரர்களாகச் செயல்பட்டதால் மக்களைக் கொள்ளையடிப்பதில் ஈடுபட்டுப்போன முறையில் லைபீரிய உள்நாட்டுப் போரில் மற்றொரு குழுவாக மாறியது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இதுவரை அமெரிக்கா கொடுத்ததெல்லாம் வெறும் 10 மில்லியன் டாலர்கள்தான், அதுவும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு ECOWASபடைகளுக்குச் சில தொழில்நுட்ப உதவி அளிப்பதற்காக. ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அளவில், ஐ.நா. தலைமைச் செயலாளர் கோபி அன்னன் கொஞ்சம் பணம் உதவுவதாக ஒப்புக்கொண்ட அளவில் ECOWAS தலையீட்டுச் செயல்பாடு தொடங்கிவிட்டது.

இராணுவ, நிதி அக்கறைகள் ஒருபுறமிருக்க, சார்ல்ஸ் டெய்லர் பதவி விலகினால்தான் அமைதி காக்கும் பணியில் உதவமுடியும் என்றும் அமெரிக்கா வற்புறுத்தியுள்ளது சிக்கலை உருவாக்கியுள்ளது. சியராலியோனில் அமெரிக்க ஆதரவிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் டெய்லர் மீது பல போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

டெய்லர் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு மிருகத்தனமான சர்வாதிகாரிதான்; ஆனால் அரசாங்கம், எதிர்த்தரப்பு இரண்டிலும் முழுமையாக உள்ள குற்றஞ்சார்ந்த அடுக்கு போரில் கொள்ளை, கற்பழிப்பு, பகுதி மக்களைக் கொலை செய்தல், சிறுவர்களை இராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துதல், சில சமயம் அவர்களுக்கு ஊக்கப் போதை மருந்து கொடுத்துப் போரில் ஈடுபடுத்துதல் போன்றவற்றில் மற்றவர்கள் போல்தான் அவரும் செயல்பட்டார். பதவியிலிருந்து விலகி, அயல்நாட்டிற்கு தஞ்சம் கோரி, குற்றச்சாட்டுக்களைச் சந்திக்க நேரிடும் நிலையை அவர் எதிர்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

லைபீரியாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு செய்தி ஊடகங்களில், மனிதநேய முறையில் மக்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற அமெரிக்கத் தலையீடு தேவை என்று வற்புறுத்திய கோரிக்கைகளாக வந்துள்ளன. லைபீரியாவில் தன்னுடைய ``வரலாற்றுப் பொறுப்பை" சரிவர ஏற்கவில்லை என்று அமெரிக்கா மீது பலமுறை புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன. ``ஐ.நா.வின் அவசர நிலைக் கோரிக்கையான அமெரிக்கத் தலையீடு தேவை என்பதற்கு இணங்குவதுபோல தோற்றம் கொடுத்து நடைமுறையில் ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான் இப்பொழுது புஷ்ஷின் தந்திர அணுகுமுறையாகும்`` என்ற வாஷிங்டன் போஸ்ட் ஒரு தலையங்கத்தில் குறையுடன் கூறியுள்ளது. பிரிட்டனின் கார்டியன் மறுநாள் ஒரு கட்டுரையில், பிரிட்டன் சியராலியோனிடம் கொண்டதைப் போன்ற சிறப்பு உறவை அமெரிக்கா லைபீரியாவிடம் கொண்டிருந்தாலும், பிரிட்டன் போலன்றி, அமெரிக்கா ``அந்த உறவில் தொடர்ந்து செய்ய வேண்டிய கடமைகளைத் தவிர்த்துள்ளது`` என்று அறிவுரை கூறியது.

கடுமையான துன்ப நிலையிலுள்ள லைபீரியர்கள் அமெரிக்காவிடம் உதவிகோரி அழைப்பு விடுத்துள்ளது புரிந்துகொள்ளக் கூடியது என்றாலும், அமெரிக்க இராணுவத் தலையீடோ, அமெரிக்க ஆதரவுபெற்ற மேற்கு ஆபிரிக்க படைகளின் தலையீடோ அந்தப் பகுதியில் பாதுகாப்பிற்கான அடிப்படையை ஏற்படுத்தவோ, முன்னேற்றத்தைக் கொண்டுவரவோ செய்யாது. தயக்கத்துடன் அது செயல்படுத்தப்பட்டாலும், ஈராக்கியப் போரோடு ஒப்பிடும்போது, லைபீரியா மிகச்சிறிய நாடாக இயற்கை வளங்கள் குறைவாகக் கொண்டுள்ள அளவில், முடிவு புதிய குடியேற்ற முறையின் விரிவாகத்தான் இருக்க முடியும்.

சியராலியோன் வெற்றிகரமானது என்று பிரிட்டிஷ் அரசாங்கமும் மற்றும் அதனுடைய ஆதரவு கார்டியனின் தற்புகழ்ச்சி உரைகள் ஒருபுறமிருக்க, பிரிட்டிஷ் படைகள் மூன்று ஆண்டுகள் போருக்குப்பின் லைபீரிய ஆதரவு கிளர்ச்சிக் குழுக்களை வெற்றிகண்டபின், அங்குள்ள நிலைமையை ஆராய்ந்தால் வேறுவித நிலை தெரிகிறது என்பதோடு லைபீரியாவை எது எதிர்நோக்கியுள்ளது என்பதையும் புலப்படுத்துகிறது.

சியராலியோனிலேயே, பிரிட்டிஷ் படைகளும் ஐ.நா. ஆதரவுப் படைகளும் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது சண்டைகளை நிறுத்திவிட்டது என்பது உண்மைதான். ஆனால் இந்தச் சண்டைகள் அதே எதிர்ப்புக் குழுக்களால், ஐவரிகோஸ்ட், கினியா, மற்றும் லைபீரியாவில் உள்நாட்டு மக்களைத் தாக்கும். ஐவரிகோஸ்டில், பிரெஞ்சுக்காரர் இப்பொழுது 4000 இராணுவ படையைக் கொண்டு சண்டையை அடக்கி வருகின்றனர். அமெரிக்க ஆதரவிலான, லைபீரியாவைப் பாதுகாக்கும் பணி கினியாவிற்கோ, மற்ற நாடுகளுக்கோ சண்டையை எடுத்துச் செல்லும். இப்பொழுது லைபீரியாவில் சண்டைகள் காரணமாக சியராலியோனில் ஆயிரக்கணக்கில் அகதிகள் குவிந்துள்ள நிலை, அந்நாட்டைச் சுமைக்கு உட்படுத்தியுள்ளது.

சியராலியோனில், சமுதாயப் பொருளாதார நிலைகள் எழுப்பியுள்ள பத்து ஆண்டுகளாக நிலவும் மோதல் இன்னமும் நீடிக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் புத்துயிர்ப்பு ஏதும் இல்லை. மேலும் ஐ.நா. தயாரித்துள்ள வளர்ச்சி பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் அது கடைசியில் தான் உள்ளது. இந்தப் பிராந்தியத்தின் இயற்கை வளங்களை மேற்கத்திய நாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் கொள்ளையடித்தது அதன் தற்பொழுதைய அவலத்திற்குக் காரணம் இல்லை என்பது போல், வைரம், (ரூடைல்) டைட்டானியம் சுரங்கதொழிலில் அயல்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பிரிட்டிஷ் அதிகாரிகள் பரிந்துரை செய்ய முடியும்.

பல அரசாங்கம் சாரா அமைப்புக்கள் (NGO's) செயல்பட்டுவந்தாலும், இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த குறைந்த அளவிலான அடிப்படை உள்கட்டுமானம் மற்றும் பொதுப்பணிகளை மீளமைப்பதற்காகத் தேவைப்படும் பில்லியன்கள் கணக்கிலான டாலர்களுக்குப் பதிலாக, இப்பொழுது மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் உதவி சொற்பமே ஆகும்.

ஐ.நா.வின் மே 2003ம் ஆண்டு நடுப்பகுதி ஆய்வு பல ``முன்னேற்றங்களைக்`` குறிப்பிடுகிறதேயொழிய, உண்மையான அவல முறையைத் தெரிவிக்கவில்லை. நம்பிக்கைக்கு உகந்த புள்வி விவரங்கள் குறைவாகவே உள்ள நிலையில் அறிக்கை, ``வேலையின்மை அதிக அளவில், குறிப்பாக இளைஞர் பிரிவினரிடையே`` என்று மட்டுமே குறிக்கிறது. 2003ம் ஆண்டிற்கு ஐ.நா. கோரிய சிறு தொகையான 109 மில்லியன் டாலர்கள் உதவித்தொகைக்கு, கிடைத்த பணம் அதில் 50 சதவிகிதம்தான். அதிர்ச்சியடைய வைக்கும் வகையில், மக்கட்தொகையில் 6.6 சதவிகிதத்தினரே பாதுகாப்பான தண்ணீரைப் பெறும் நிலையில் உள்ளனர்; குடியிருப்புத் தேவைகளில், தொடர்ந்து அகதிகள் வரும் நிலையில், 80 சதவிகிதத்திற்கும் மேல் எதுவும் செய்ய முடியாத நிலைமைதான் உள்ளது. ஆபிரிக்க கண்டம் பெரிய அளவு HIV/AIDS நெருக்கடியை எதிர் கொள்வது இருப்பினும், ஐ.நா.விற்கு, இங்கு தேவையான கண்டுபிடிப்பு மையங்கள், அல்லது AIDSஆல் இறக்கும் நோயாளிகளுக்குப் புகலிடங்கள் போன்ற திட்டங்களுக்கு நிதி வழங்க ஐ.நா போதுமான நிதி வசதியைப் பெறவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, மனித உரிமைகள் கலாச்சாரத்தை வளர்ப்பது பற்றிய பேச்சுக்கள் இருந்தபோதிலும், நாடு உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு இருந்த அதே சிறிய ஊழல் மிகுந்த சிறு தட்டினரைக் கொண்டுதான் பிரிட்டிஷ் அதிகாரிகளால் திறமையுடன் நடத்தப்படுகிறது என்பதும், நாட்டில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்து இல்லையென்றால், அது மீண்டும் குருதி தோய்ந்த பூசலுக்குள் இறங்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved