World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Washington talks provide cover for Israeli repression

வாஷிங்டன் பேச்சுக்கள் இஸ்ரேலிய ஒடுக்குமுறைக்கு மறைப்பைக் கொடுக்கின்றன

By Jean Shaoul and Julie Hyland
6 August 2003

Back to screen version

ஜூலை 29ம் தேதி, இஸ்ரேலியப் பிரதம மந்திரி ஏரியல் ஷரோன், ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷுடன், வாஷிங்டனில் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்ட அளவிலேயே, அவருடைய ஆட்சி, பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையையும் கூடுதலாக முடுக்கிவிட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்குப்பின், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியக் குடிமக்களை மணந்தால் இஸ்ரேலியக் குடியுரிமை மறுக்கப்படுவதோடு அவர்கள் இஸ்ரேலில் வாழவும் முடியாது என்ற அப்பட்டமான இனப்பாகுபாட்டு சட்டத்தை இஸ்ரேலியப் பாராளுமன்றம் இயற்றியது. இந்தச் சட்டம் பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், இத்தகைய திருமணம் செய்துகொண்டவர்கள் தனித்தனியே வாழவேண்டும் அல்லது இஸ்ரேலியக் குடிமகன் பாலஸ்தீனத்திற்குச் சென்று, அங்கு வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளும் கூட தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. மேற்குக் கரையை மூடிவிடுவதற்காக 600 கி.மீ. நீள ``பாதுகாப்புச் சுவரை`` இஸ்ரேல் கட்டத் தொடங்கியுள்ளதை எதிர்த்து Qalqilya-வில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது, அவர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் இரப்பர் தோட்டாக்களைப் பொழிந்தன. காசா கரைக்கு சற்று வடக்கே Ashkelon என்ற இடத்திலுள்ள உயர்பாதுகாப்பு மிகுந்த ஷிக்மா சிறையில் 650 கைதிகள், பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் இருக்கின்றனர். சிறையறைகளில் புகுந்து சோதனை நடத்தியதற்காக, கைதிகளால் நடத்தப்பட்ட கலகத்தை அடக்க அவர்கள் மீது கண்ணீர்ப்புகை வீச்சை போலீசார் நடத்தினர். இதில் 22 கைதிகள் காயமுற்றனர்.

கடந்த சில நாட்களில், உடன்பாடுகளில் புதிய குடியிருப்புக்கள் கட்டப்படக்கூடாது என்றுள்ள விதிகளை மீறி காசாவில் ஒரு யூதர் குடியிருப்பில் Neve Dekalim என்ற இடத்தில் 22 புதிய வீடுகளைக் கட்ட, ஷரோன் ஒப்பந்தப்புள்ளி அறிக்கையை விடுத்துள்ளார்.

இவை தெரியாமல் செய்யப்பட்ட மனச்சிதைவு வேலைகள் அல்ல; ஷரோனின் புஷ்ஷுடனான பேச்சுக்களில் உட்குறிப்பாக இருந்தவற்றின் செயலாக்கம்தான். 2005ல் பாலஸ்தீனிய நாடு தோற்றுவிக்கப்படும் என்று உறுதியளிக்கும் ``அமைதிக்கு சாலை வரைபடம்`` என்று அழைக்கப்படுவதை செயலாக்குவதில் பாலஸ்தீனிய அமைப்பிற்குச் சலுகைகள் வழங்க அமெரிக்கா பெருமளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் தரும் என்று அரசியல் வர்ணனையாளர்கள் வாஷிங்டன் பேச்சுக்களைப் பற்றிக் கூறியிருக்கையில், உண்மையில் நடப்பது ஒப்பந்தப்படி பாலஸ்தீனிய மக்களுக்கு அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதுதான்.

அமெரிக்கா, ரஷ்ய, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள், ஆகிய நான்குமே விதிகளை இயற்றி, இஸ்ரேலியப் பாலஸ்தீனியப் பூசல்களை முடித்துவைக்க ஒரு கருவியாகக் கொண்டுவரப்பட்டுள்ள சாலை வரைபடம், அமெரிக்க ஏகாதிபத்தியம், இஸ்ரேலின் ஆளும் மேல்தட்டு, இவற்றின் நலன்களுக்காக மத்திய கிழக்குப் பகுதியைத் திருத்தி அமைக்கும் முயற்சியின் சமீபத்திய போலி நாடகமாகும்.

ஈராக்கிற்கெதிரான போரில் பல அராபிய நாடுகள் ஆதரவு தருவதற்காகத் தயாரிக்கப்பட்ட சாலை வரைபடம், தோல்வியடைந்துவிட்ட ஆஸ்லோ உடன்பாடுகளில் இருந்ததைவிடக் கடுமையான நிபந்தனைகளைப் பாலஸ்தீனியர்கள் மீது சுமத்துகிறது.

இப்பொழுது கிட்டத்தட்ட சிறைவாசத்தில் இருப்பதுபோல் தன்னுடைய ரமல்லா தலைமை அலுவலகத்தில் உள்ள பிஎல்ஓ தலைவர் யாசிர் அரஃபாத்தைத் தனிமைப்படுத்தி, ஓரங்கட்டியதை பண்பேற்றிக் கூறும் உடன்பாடு, வாஷிங்டனால் நன்கு வளைந்துகொடுக்கும் தன்மையுடையவர் என்று கருதப்படும் வணிகர் மஹ்மூத் அப்பாஸைப் பிரதம மந்திரியாக நிறுவியுள்ளது.

இவருடைய தலைமையில் பாலஸ்தீனிய நிர்வாகம், மேற்குக் கரை, காசா கரை ஆகிய பகுதிகளில் இஸ்ரேலியர் நடத்திக்கொண்டிருக்கும் சட்ட விரோதமான ஆக்கிரமிப்பிற்கு காட்டப்படும் எதிர்ப்புக்கள் அனைத்தையும் முதலில் முடிக்கவேண்டும் என பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்த பின்னர்தான், வாஷிங்டனும் முடிந்துவிட்டது என்று ஏற்ற பின்னர்தான், செப்டம்பர் 2000லிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

முதலில் கூறப்பட்ட நான்கு அமைப்புக்களும் இஸ்ரேல், சிரியா, லெபனான் உட்பட்ட மத்திய கிழக்கு பற்றிய விரிவான அமைதி உடன்பாட்டை மேற்கொண்டவுடன்தான் பாலஸ்தீனிய நாட்டின் வருங்கால விதி நிர்ணயிக்கப்படும். மேலும் 2005ல் இறுதி உடன்பாடு கையெழுத்து ஆவதற்கு எல்லைப் பகுதிகள், கீழை ஜெருசலேம் பகுதிகளின் மீதான இறைமை, 1948லிருந்து 1967வரை வெளியே விரட்டியடிக்கப்பட்ட நான்கு மில்லியன் பாலஸ்தீனியர்கள், தாயகம் திரும்பும் உரிமை ஆகிய பெரும் சிக்கல் வாய்ந்த பிரச்சினைகள் சூழ இருக்கின்றன.

இவ்வளவு நிபந்தனைகளும் செயல்படுத்தப்பட்டாலும் இறுதியில் வர இருக்கும் பாலஸ்தீனம், நிறவெறி ஒதுக்கல் பாணியிலான பன்டுஸ்தான்போல், வலிமை குறைந்த, சுருக்கப்பட்ட தன்மையுடையதாக இருக்கும். இதுகூட ஷரோனிற்கு ஏற்க இயலாததாக உள்ளது. சாலை வரைபடம் வெளியிட்ட உடனேயே இஸ்ரேலிய அரசாங்கம் 100க்கும் மேலான ஆட்சேபனைக் குறிப்புக்களை பரிசீலனைக்கு வைத்தது.

அமெரிக்க ஜனாதிபதி புஷ், அமெரிக்க சார்புடைய அரபு நாடுகளின் தலைவர்களை எகிப்தில் சந்தித்தபின், அவருடன் ஜூன் 4ம் தேதி கடைசியாய் நடைபெற்ற பேச்சில் ஷரோன் சில சலுகைகளையாவது கொடுத்து சாலை வரைபடம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டார். ஆயினும்கூட, சில சட்ட விரோதமான குடியிருப்புப் புறக்காவல் சாவடிகளை அகற்றியதைவிட வேறு எதையும் இவர் அதிகமான அளவு செய்துவிடவில்லை. அப்பொழுதிலிருந்து பாலஸ்தீனியருக்கும் இஸ்ரேலிய ஆயுதப்படைகளுக்கும் கணக்கிலடங்காச் சிறுபூசல்கள் நிகழ்ந்ததுடன் பாலஸ்தீனியப் போராளிகளைக் கொலை செய்யும் முயற்சிகளும் இஸ்ரேலியரால் மேற்கொள்ளப்பட்டன.

ஷரோனுடைய நோக்கமே பாலஸ்தீனியர் பதிலடி கொடுக்கத்தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகச் செயல்கள் புரிவதுதான்; அதையொட்டி இஸ்ரேல், பாலஸ்தீனிய நிர்வாகத்தையும், பிஎல்ஓ தலைவர் யாசிர் அரஃபாத்தைத் தனிமைப்படுத்தி ஒதுக்குவதற்காக வாஷிங்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய பாலஸ்தீனியப் பிரதம மந்திரி மஹ்மத் அப்பாஸ் மீதும், எதிர்ப்புக்களை அடக்காததற்காக குறைகாணமுடியும்.

அத்தகைய இலக்கு அடைய முடியாததொன்று என்பது இஸ்ரேலுக்கு நன்றாகவே தெரியும். ஆயினும்கூட பாலஸ்தீனிய நிர்வாகத்தின் தோல்வி, இஸ்ரேல் மேற்குக் கரையில் கூடுதலான பகுதிகளை இணைத்துக்கொள்ள ஒரு சாக்குப்போக்கைக் கொடுக்கும்; மேலும் அப்பகுதியிலுள்ள மக்களைக் குறுகிய பாலஸ்தீனிய நிலப்பரப்பிற்கு விரட்டிவிட்டு, காசா கரை போல் இப்பகுதி முழுவதையும் எவரும் வராமல் தடுத்து, ஓர் இறைமை பெற்ற நாடு போலன்றி உயர் பாதுகாப்புச் சிறை போல அமைத்துவிடும்.

ஜூலை 25ம் தேதி, இஸ்ரேலிய நடவடிக்கையான மேற்குக் கரையில் சுவரெழுப்புதல் எவ்வாறு பாலஸ்தீனியப் பகுதியில் ஊடுருவிச்சென்று வீடுகளையும், பண்ணைகளையும் அழித்து சட்ட விரோதமான குடியேற்றங்களையும் சுற்றிவளைத்துள்ளது என்று அப்பாஸ், புஷ்ஷிடம் குறை கூறினார். தன்னுடைய பங்கிற்கு புஷ், அப்பாசை ``தேர்ந்த கண்ணோட்டமும் வீரமும்`` உள்ள தலைவர் என்று புகழ்ந்ததோடு, சுவரெழுப்பப்படுவது ஒரு ``சிக்கல்தான்`` என்றும் அறிவித்தார்.

ஆனால் பின்னர் ஷரோனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில், 342 பாலஸ்தீனியக் கைதிகள் விடுவிக்கப்பட்டது உட்பட, மூன்று சாலைத் தடைகள் அகற்றப்பட்டன, சில "முறையற்ற எல்லைக் காவல் நிலையங்கள்`` தகர்க்கப்பட்டது ஆகிய நடவடிக்கைகள் பெருமளவில் எவ்வாறு ஜூன் மாதம் ஒப்புக்கொண்டபடி இஸ்ரேலினால் செய்யப்பட்டன என்று பெரிதும் புகழப்பட்டன (ஆகஸ்டு 5ம் தேதி, இஸ்ரேல், பாலஸ்தீனிய நகரங்களிலிருந்து இராணுவம் திரும்பப்பெறுதலை நிறுத்தி வைத்ததுடன், இனி ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டதைவிட கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள் என்றும், இரண்டு நாட்களுக்கு முன்பு பெத்தலஹேமில் ஒரு யூதக் குடியேறி காயமடைந்ததைக் காரணமாகச் சுட்டிக்காட்டி, அறிவித்துவிட்டது).

ஆயினும், புஷ்ஷோ இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புக்களும், ஈவிரக்கமின்றி நடந்துகொண்டு பாலஸ்தீனிய நிர்வாகத்தால் அடக்கப்பட்டால்தான், அடுத்து பாலஸ்தீனிய நிர்வாகத்திற்கான சலுகைகள் தொடரும் என்று ஷரோனின் வலியுறுத்தலைத் தான் ஆதரிப்பதை தெளிவுபடுத்தி விட்டார்.

``பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடல் என்ற உறுதிப்பாடு.... உடன்பாட்டுப் பிரச்சனை உட்பட பல சிக்கலான பிரச்சினைகளை எளிதாக்கும். பிரதம மந்திரி அப்பாஸ் நாம் ஒன்றிணைந்து பயங்கரவாத அமைப்புக்களைக் களைந்துவிடப் பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்; அதுதான் நிச்சயமாக நடக்கப்போகிறது`` என்றார் புஷ்.

ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத், அல்அக்சா பிரிகேட் ஆகியவை எளிதில் குலைந்து விடக்கூடிய மூன்றுமாத போர் நிறுத்தத்தை ஜூன் 29ல் அறிவித்ததைத் தொடர்ந்து, அவற்றோடு மோதக் கூடுதல் கால அவகாசம் கேட்ட அப்பாஸ் மற்றும் அவருடைய தலைமைப் பாதுகாப்பு அதிகாரி முகம்மது தஹ்லான் கோரிக்கையை புஷ் ஏற்க மறுத்துவிட்டார். பாலஸ்தீன நிர்வாகமானது ``தொடர்ச்சியான, இலக்குடன்கூடிய நடவடிக்கைகளுடன் அச்சுறுத்தலில் ஈடுபடுவோரைச் சந்திக்க வேண்டும் என்றும், பயங்கரவாதிகளின் தாக்கும் திறன்களும் அடிப்படை உள்கட்டுமானங்களும் தகர்க்கப்பட வேண்டும்`` என்று ஷரோன் பார்வையிலேயே, புஷ் வலியுறுத்தினார்.

மேற்குக் கரை சுவர்ப் பிரச்சினை ``உணர்ச்சிவசப் படுத்தக்கூடியதொன்று`` என விவரித்த புஷ், இஸ்ரேலின் பாதுகாப்பிற்குச் சிறந்த வழி, இஸ்ரேலை அச்சுறுத்தும் பயங்கரவாதக் குழுக்களைத் தகர்த்துவிடுதலே என்றும் நீண்டகால அளவில் சுவர்ப்பிரச்சினை பொருளற்றதாகப் போய்விடும் என்றும் குறிப்பிட்டார்.

``இந்த வழிவகை உடனே கையாளப்படவேண்டும், அது எவ்வளவு விரைவிலோ அவ்வளவு விரைவில் செயல்படுத்தி முடிக்கப்பட்டுவிட்டால் நன்மை பயக்கும். அபு மஜெனுக்கு (அப்பாஸ் அவ்வாறும் அறியப்படுகிறார்). ஒவ்வொருவரும் உதவி செய்யக் காத்திருக்கின்றனர்; ஆனால் முக்கியமான உதவியை அவர் தனக்குத்தானே செய்துகொள்ள வேண்டும்`` என்று புஷ் கூறியதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறினார்.

தன்னுடைய பங்கிற்கு, ஷரோன், புஷ்ஷின் பயங்கரவாதத்தின் மீதான தாக்குதலுக்குப் பாராட்டியதோடு, அமெரிக்கா போன்றே இஸ்ரேலும் ``பயங்கரவாதம், தீமை`` இவற்றுடன் ஒருபொழுதும் சமரசம் செய்துகொள்ளாது என்று குறிப்பிட்டார். இஸ்ரேலைப் பொறுத்தவரை, ஹமாசையும் மற்ற எதிர்ப்புக் குழுக்களையும் நடவடிக்கைக்குட்படுத்தும் அவரது உறுதிமொழியை அப்பாஸ் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாலஸ்தீன தலைமை பயங்கரவாதிகளின் அமைப்புக்களை ``தகர்த்திடவோ, அழித்திடவோ எதையும் செய்யவில்லை" என்று தொடர்ந்த ஷரோன், பாலஸ்தீனிய நிர்வாகத்தை ஹிட்லரின் ஜேர்மனிக்கு ஒப்பிட்டுப் பேசும் அளவிற்குச் சென்றார். "30களில் ஐரோப்பாவில் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக நாஜி ஜேர்மனி மீறியபொழுது பேசாமலிருந்தது மிகப் பெரிய தவறாகும்" என்று குறிப்பிட்டார் ஷரோன்; இஸ்ரேல்தான் பல பன்னாட்டு ஒப்பந்தங்களையும் மீறி அதனுடைய சட்ட விரோதமான பாலஸ்தீனிய பகுதிகளில் ஆக்கிரமிப்பை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது என்பதை சிடுசிடுப்புடன், புறக்கணித்துப் பேசினார் ஷரோன்.

புஷ்ஷுடனான பேச்சுக்களைப் பற்றி, ஷரோன் திருப்தியே அடைந்திருந்தார். வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ விருந்தாளிகள் புத்தகத்தில் கையெழுத்திட்டு அவர் எழுதியது அனைத்தையும் தெரிவிக்கிறது: "நண்பர்களிடையே நிலவும் உண்மையான நட்புறவு, அனைத்து தடைகளையும் மீறி நிலைத்திருக்கும்."

இஸ்ரேலை கண்டிக்காத புஷ்ஷின் மறுப்புப் போக்கு, அமைதி என்ற போர்வையின் கீழ் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக, குறிப்பாக அதிகரித்த அளவில் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆளும்மேல்தட்டின் நலன்கள் பலவந்தமாக முன்னுக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன என்ற கருத்தைத்தான் சித்தரிப்பதாக உள்ளது.

இஸ்ரேலுக்குள்ளேயே, பொருளாதார, சமுதாய நிலமைகளின் மோசமாகிக் கொண்டிருக்கும் நிலை ஷரோனுடைய கணக்கீட்டில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. உலகப் பொருளாதாரப் பின்னடைவு, சுற்றுலாத்துறையில் இன்டிபடாவின் தாக்குதலால் வீழ்ச்சியுற்ற 50 சதவிகித வருகை இஸ்ரேலின் உயிர்ப்பையே பாதிக்கக்கூடியது மற்றும் ஈராக்கிற்கு எதிரான போர் பேரழிவையே இஸ்ரேலின் பொருளாதாரத்திற்கு கொண்டுவந்தது, ஆகியவை குறிப்பிடத்தகுந்தவையாகும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சிக்கனத் திட்டம், நெருக்கடியின் அனைத்துச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தினரிடமும், சமுதாயத்தின் எளிதில் தாக்குதலுக்குட்படும் அடுக்களின் மீதும் இறக்கப்பட்ட அளவில், சமுதாய நெருக்கடிகள் அதிகரித்து வெடிக்கும் நிலையை தூண்டிவிட்டுள்ளன.

ஷரோனுடைய பாதுகாப்பு என்ற அலங்காரச் சொற்றொடர் ஆளும் மேல்தட்டால் இந்த நெருக்கடிகளைத் திசை திருப்பும் வகையில் -அதன் உண்மை ஆதாரமாகிய சர்வதேச மூலதனத்திற்காகத் தேவைப்படும் பொருளாதாரக் கொள்கையிலிருந்து- பாலஸ்தீனியருக்கு எதிரான போரின் பால் செலுத்தும் முறையில், பாலஸ்தீனிய, இஸ்ரேலிய தொழிலாள வர்க்கங்கள் இரண்டுமே அடக்கப்படுவதற்காகத் தோற்றுவிக்கப்படும் போர்க்கோட்டை போன்ற அரசியல் நிறுவனத்தை ஏற்படுத்துதலை நியாயப்படுத்த முயற்சி செய்யப்படுகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், ``பயங்கரவாதத்திற்கெதிரான போரில்`` ஈராக்கின் மீதான தாக்குதல் முதல்படி என்று ஷரோன் புகழ்ந்திருப்பது, புஷ்ஷின் அயலுறவுக் கொள்கைத் திரித்தல்களில் சாலை வரைபடமானது, வெள்ளை மாளிகை மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தும் திட்டத்தை உறுதியாக்கும் முயற்சி, என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த இலக்கில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திருப்திப்படுத்தும் பாலஸ்தீனம் அதன் மக்களைப் பொறுத்தவரையில் சிறையாகவும், அதன் அரசியல்வாதிகள் அமெரிக்கருக்காகச் செயல்படுபவராகவோ அல்லது அவர்களால் எளிதில் வசப்படுத்திக்கொள்ளப்படுவோராகவேதான் இருக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved