World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Bush accuses Europe of starving Africa

ஆபிரிக்காவைப் பட்டினி போடுவதாக ஐரோப்பா மீது புஷ் குற்றஞ்சாட்டுகிறார்

By Chris Talbot
2 July 2003

Back to screen version

ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், மரபணுவழி மாற்றப்பட்ட (Gentetically modified [GM]) உணவைப்பற்றிய பிரச்சனையில், ஐரோப்பா ஆபிரிக்காவிலிருந்து GM உணவு வகைகளை இறக்குமதி செய்ய மறுக்கும் அளவில், அதைப் பட்டினி போடுவதாக ஐரோப்பாவின் மீது கடந்த வாரம் தாக்கிப் பேசினார்.

"உணவுப் பஞ்சத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ள ஒரு கண்டத்தின் நலனுக்காக, ஐரோப்பிய நாடுகள், உயிரித் தொழில் நுட்பத்திற்கு (biotechnology) தங்களின் எதிர்ப்பை நிறுத்த வேண்டுகிறேன்" என்று வாஷிங்டனில் Bio technology Industry Organisation (Bio) ஏற்பாடு செய்திருந்த மாநாடு ஒன்றில் அவர் கூறினார். ஐரோப்பிய அரசாங்கங்கள், "ஆதாரமற்ற, அறிவியலுக்கு பொருந்தாத அச்சங்களின்" அடிப்படையில் GM பயிர்களின் இறக்குமதியைத் தடை செய்வதாகக் குற்றஞ்சாட்டினார்.

"புஷ் தன்னுடைய உயிரித் தொழில் நுட்பம் மற்றும் மரபணு மாற்றுதல் பற்றிய தனது சிறப்பு அறிவைப் பற்றி மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார் போலும். இதே பிரச்சனையை சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க - ஆபிரிக்க வணிக உச்சி மாநாட்டிலும் அவர் பேச எடுத்துக் கொண்டார்; அங்கிருந்த ஆபிரிக்க அமைச்சர்களிடம் "சில அரசாங்கங்கள் உயிரித் தொழில் நுட்பத்தில் விளைந்த உணவிற்கு இறக்குமதித் தடை விதித்திருக்கின்றன; இதையொட்டி ஆபிரிக்க நாடுகள் இத்தகைய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதையும், ஏற்றுமதி செய்வதையும் மேற்கொள்ள முடியாமல் ஊக்கத்தை இழக்க நேரிடுகிறது. இந்த நாடுகளின் மீதான தடை ஆதாரமற்றது; இது அறிவியலுக்குப் பொருந்தாது; ஆபிரிக்காவின் வேளாண்மைக்கு உள்ள எதிர்காலத்தை வேரறுக்கிறது" என்று உரையாற்றினார்.

உலக வர்த்தக அமைப்பில் (WTO), மரபணு வழி உற்பத்திப் பொருட்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையைப் பற்றி அமெரிக்கா கடந்த வாரம் ஒரு முறையான புகாரை அளித்தது. அமெரிக்க அதிகாரிகள் பட்டினியால் வாடும் ஆபிரிக்கர்கள் மரபணு வழி உற்பத்தி செய்யப்படும் உணவை உண்ணமுடியும் என்ற அவர்களின் நலன்களைத் தாங்கள் பாதுகாக்கின்றதாக கூறிக் கொண்டனர்.

USAIDயின் தலைமை நிர்வாகியான ஆன்ட்ரூ நாட்சியோஸ், சாம்பியா, மொசாம்பிக், ஷிம்பாவே ஆகிய நாடுகள் மரபணுவழி உணவு உதவியை, அவற்றின் விதைகள் முளைக்க முடியாமல் அரைக்கப்பட்டால்தான் அவற்றை வாங்குவோம் என்று கூறுவதையொட்டி அவற்றைத் தாக்கிப் பேசினார். ஒரு பாராளுமன்ற குழு விவாதத்தில் பங்குகொண்ட நாட்சியோஸ், GM ``உயிரித் தொழில்நுட்பத்தின் பெரிய நன்மைகளை உணரக்கூடிய வகையில் மிக உயர்ந்த திறனைக் கொண்டுள்ளது`` என்று கூறினார். நைஜீரியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்த புதிய தொழில்நுட்பத்தை "ஏற்றதற்காகவும்" "ஐரோப்பிய ஒன்றியத்தின் உயிரி தொழில்நுட்பத்தின் மீதான பகுத்தறிவிற்குப் பொருந்தாத அச்சத்தை" எதிர்த்ததற்காகவும் பாராட்டினார்.

அமெரிக்க அரசாங்கத்தின் மரபணுவழி அறிவியல் பற்றிய உற்சாகமும், பல மில்லியன் கணக்கில் ஆபிரிக்கர்கள் எதிர்கொண்டிருக்கும் பட்டினியைப் பற்றி தெரிவிக்கப்படும் அக்கறைக்கும் பின்னணி என்ன? புஷ்ஷினுடைய மரபணு அறிவியலுக்கான ஆதரவு, அனைத்திற்கும் மேலாக இவருடைய நிர்வாகத்திற்கு நெருக்கமான ஆதரவாளர்களான பெரும் வேளாண்மை வேதியியல் (agrochemical) நிறுவனங்களின் சிதைந்துகொண்டிருக்கும் லாபத்திற்கு ஓர் உந்துதல் கொடுக்கும் அக்கறைதான்; மேலும் ஆபிரிக்க மக்கள் மில்லியன் கணக்கில் பட்டினியிருப்பது பற்றி கவனம் செலுத்துதல் பெரும் வணிக நலன்களுக்கு ஒரு புகைத் திரையாக உள்ளது.

மரபணு வழி பயிர்களின் வளர்ச்சி பெரிய வேளாண்மை வேதியியல் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. 2000ல் -Monsanto, Syngenta, Bayer, Dupont, BASF மற்றும் DOW ஆறு நிறுவனங்கள்- உலகத்தின் 98 சதவீத மரபணு வழி பயிர்களின் சந்தைகளையும், 70 சதவீத பூச்சிக்கொல்லி மருந்துகள் சந்தைகளையும் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தன. இந்த நாடு கடந்த நிறுவனங்கள் அவற்றின் இரசாயனப் பொருட்களை விதைகளுடன் இணைப்பதன் மூலம் தம்முடைய மூலிகைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் இவற்றில் தங்களின் சந்தைகளைப் பாதுகாப்பதற்கு மரபணுவழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மரபணுவழி பயிர்களில் நான்கில் மூன்று பங்கு மூலிகைக்கொல்லிகளை எதிர்த்து நிற்கும் வகையில் தயார் செய்யப்பட்டவை, எனவே களைகள் பயிரை நாசம் செய்யாமல் கொல்லப்பட்டுவிட முடியும்.

மரபணுவழி உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் ஒவ்வொரு பருவகாலத்திலும் வாங்கப்படவேண்டும்; அவை ஓர் அறுவடையிலிருந்து அடுத்ததிற்கு சேமித்துவைக்கப்பட்டால் அதற்கான உரிமை ஊதியம் கொடுக்கப்படவேண்டும். எனவே இது பெருநிறுவனங்களுக்கு விதைச் சந்தைகள் மீது கட்டுப்பாட்டை செலுத்துவதற்கு திறனைக் கொடுக்கிறது. உதாரணமாக, 2001ல் வந்த மரபணுவழி தயாரிக்கப்பட்ட விதைகளில் 91 சதவீதம் Monsanto நிறுவனத்திலிருந்து வந்தவை. பூகோள விவசாய உற்பத்தி இந்த வகையில் ஒரு சில பெரிய நிறுவனங்களால் ஆதிக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவது அதிகரித்துவருகின்றது.

20 ஆண்டுகளுக்கு முன்பு விதைச் சந்தைகளில் இருந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது பூகோள விதை சந்தையில் 33 சதவீதம் 10 பெரிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன என்பதிலிருந்து இந்த ஏகபோக உரிமையின் வளர்ச்சி பற்றி அறிய முடிகிறது. உலகில் வளர்ந்துவரும் நாடுகளில் அரசாங்கங்கள் மரபணுவழி தயாரிக்கப்பட்ட (GM) பயிர்களை வாங்குமாறு எளிதில் மிரட்டப்படுகின்றனர்; அங்குள்ள சிறு நிறுவனங்கள் எளிதில் மசிந்துவிடுகின்றன. ஆபிரிக்காவில் முறையான விதைகள் பிரிவு இப்பொழுது Monsanto, Syngenta, Dupont ஆகிய 3 நிறுவனங்களினால் மேலாதிக்கம் செய்யப்படுகின்றன. தென்னாப்பிரிக்காவில் மோன்ஸன்டோ GM விதைகள் தேசியச் சந்தையை முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது; கலப்பினச் சோள விதைச் சந்தையில் 60 சதவீதத்தையும், கோதுமை சந்தையில் 90 சதவீதத்தையும் கொண்டுள்ளது.

புஷ் நிர்வாகம் அமெரிக்க விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியைப் பற்றியும் அக்கறை கொண்டுள்ளது. அமெரிக்கா உலகில் மூன்றில் இரு பகுதி GM பயிர்களை உற்பத்தி செய்கிறது; 70 சதவீதத்திற்கும் மேலான அமெரிக்கப் பண்ணைகள் மரபணுவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

ஆபிரிக்காவின் பட்டினி நிலைமையை GM பயிர் வகைகளை அதிக அளிவில் விற்பதன் மூலம் சமாளித்துவிட முடியும் என்பது ஒரு பச்சைப்புளுகு. GM பயிர்கள் பெரிய அளவு வணிக முறை உற்பத்திக்குத்தான் ஏற்றவை; ஆபிரிக்காவில் சிறிய விவசாயிகள்தான் மிகுந்த அளவில் இருக்கிறார்கள்; அவர்களால் உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை வாங்க இயலாது; மற்றும் இப்பயிர்களுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளும் கிடையாது.

வளர்ந்துவரும் கடன் தொல்லை, வணிகத்தில் மோசமான விதிகள், வறுமை, சமத்துவமற்ற நிலை இவற்றின் மிகப்பெரிய அளவு, ஆகியவை மூன்றாம் உலகத்தில் வேளாண்மையை மிகப்பெரிய அளவில் அழித்துள்ளன. மிகப்பெரிய அளவில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நீர்ப்பாசன வசதிகளும், போக்குவரத்து வசதியுமாகும்; இதைத்தவிர உற்பத்திக்குத் தேவையான இடுபொருட்களை வாங்குவதற்கு குறைந்த வட்டிவிகிதக் கடனும் அவர்களுக்குத் தேவையாகும்.

வேளாண்மை - இரசாயன நிறுவனங்கள் ஆபிரிக்க நிலைமைக்கு சிறந்த மாற்றுபோல் மரபணு வழி பயிர்களைப் பற்றிப் பேசுகின்றன; உண்மையில் அவற்றின் சிறந்த உற்பத்தித் திறனைப் பற்றி ஐயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. விளைச்சல் எப்பொழுதுமே அதிகமாக இருந்ததில்லை, அப்படியே இருந்தாலும் கூட அதிகரிக்கும் உற்பத்திச் செலவை சமாளிப்பது கடினம் என்றும் தனிப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையும்விடக் கடுமையான விஷயம், நீண்ட காலம் இது பயன்படுத்தப்படும்பொழுது களைகளோ, பூச்சிகளோ இரசாயனப் பொருட்களுக்கு எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுகின்றன; எனவே, கூடுதலான பொருட்களோ அல்லது வேறு வகைப்பட்ட களைகொல்லியோ பயன்படுத்தப்படவேண்டிய நிலை ஏற்படுகிறது.

பிரிட்டனின் Independent எனும் செய்தித்தாள், Iowa மாநிலப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Bob Hartzler மேற்கொண்ட ஆராய்ச்சி, கடந்த 7 ஆண்டுகளில், மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் தாவரக்கொல்லியான Glyphosateக்கு எதிரான தடுப்புச் சக்தியை 5 களை இனங்கள் பெற்றுவிட்டன என்பதை மேற்கோள்காட்டுகிறது.

இவை மரபணு வழி பயிர்களிலிருந்து களைகளுக்கு மரபணுக்கள் மாறுவதால் ஏற்படவில்லை; இயற்கை வளர்ச்சியை ஒட்டியே நிகழ்ந்துள்ளன. அப்படிப்பட்ட களைகளில் நடக்கும் நிகழ்ச்சியானது கார்ப்பொரேஷன்கள் தங்களின் GM பயிர்களின் உயர்வைப் பற்றிக் கூறும் கூற்றுக்களைக் கீழறுக்கின்றது.

அமெரிக்க நிர்வாகம் GM àற்பத்திப் பொருட்களை உலகத்தின் மீது சுமத்துவதற்குக் கூடுதலான, ஆக்ரோஷ வழிவகைகளைக் கடைப்பிடிக்கும் நிலையில், ஐரோப்பிய அரசாங்கங்கள் GM பயிர்கள் மீது தாங்கள் முன்னர் கொண்டுவந்திருந்த தடையிலிருந்து பின்வாங்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் வேளாண்மைத்துறை ஆளுனர் Franz Fischler, ஐரோப்பா முழுவதும் மரபணு பயிர்களுக்கு எதிரான சட்டங்கள் திணிக்கப்படமாட்டா என்று சமீபத்தில் முன்மொழிந்தார். மாறாக, GM விவசாயிகளுக்கும் உயிர் வகை(organic) மற்றும் GM அல்லாத முறையை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கும் "சகவாழ்வு வாழ்வது" உறுப்பு நாடுகளில் அனுமதிக்கப்படும்; ஆனால் இதையொட்டி ஏற்படக்கூடிய மரபணுத் தொற்றுதல் எவ்வாறு தவிர்க்கப்படும், அல்லது தடுப்புமுறைக்கான நிதியம் ஒதுக்கப்படுமா என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை`.

GM முறை பயிர்களுக்கு ஐரோப்பிய எதிர்ப்பு "FrankenFoods" பற்றிய பயமுறுத்தும் வகையிலான கதைகள் வடிவெடுத்து சமீபத்தில் தோன்றிய Mad Cow வியாதியின் தொற்றுதல் பயத்தையும் நுகர்வோரிடையே ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதன் உண்மை நோக்கம் ஐரோப்பிய வேளாண்மை வியாபாரத்தைக் காப்பாற்றுவதும், அதிலும் குறிப்பாக உயிர் வகைப் பிரிவை அதிக அளவில் அமெரிக்கப் போட்டிக்கு எதிராகக் காப்பாற்றுவதுமாகும். பசுமை, மற்றும் சுற்றுப்புறச்சூழல் வாதங்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்க நிர்வாகம், மற்றும் நாடுகடந்த நிறுவனங்களின் அழுத்தத்தின் காரணமாக சிறிய அளவிலான வேளாண்மைப் பகுதி உள்ள நாடுகள் இப்பொழுது GM பண்ணை முறையை ஏற்கின்றன. பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேர், GM தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது பற்றி கவலை தெரிவித்துப் பேசியதற்காக நீண்ட காலமாகப் பதவியிலிருந்த சுற்றுச் சூழல் அமைச்சர் மைக்கேல் மீச்சர் ஐ விலக்கிவிட்டார்.

GM தொழில்நுட்பத் துறையை ஒட்டி, சுகாதார, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உருவாகக்கூடும். இதையொட்டிய ஆராய்ச்சியை மீச்சர் சுட்டிக்காட்டியபோது, பிரிட்டிஷ் அரசாங்கம் அதை அசட்டை செய்துவிட்டது; அந்த ஆராய்ச்சியில் GM உணவிலுள்ள DNA மனிதக் குடலில் பாக்டீரியாவாக மாறக்கூடியது என்பது தெரியவந்துள்ளது. ஆனால் பெரிய நிறுவனங்களும் அரசாங்கங்களும் தங்கள் வேளாண்மையின் மீதான ஆதிக்கத்தை எப்படியும் லாபம் கருதி நிலைநிறுத்த விருப்பம் கொண்டுள்ள நிலையில் போதுமான, நீண்டகால -விஞ்ஞான சோதனைகள்- நடத்தப்படமாட்டா, நடத்தப்படவிடமாட்டா.

இலாப நோக்கு ஆதிக்கத்தினால் பாதிக்கப்படாத முறையின் கீழ் அறிவியல் வளர்ச்சியானது வளர்ந்து வரும் உலகில் விவசாயத்திற்கு உதவியாக இருக்க முடியும். ஆனால் ஒரு GM பயிர் முறையை வளர்க்க 300 மில்லியன் டாலர்கள் செலவாகும் மற்றும் அதற்கு 12 ஆண்டுகள் தேவைப்படலாம். அந்தக் காரணம் கருதியே, ஏழை நாடுகளில் எளிய விவசாயிகளுக்கு உதவக்கூடிய, மொத்த GM ஆராய்ச்சியில் 1 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும், பயிர்களின் மீதான ஆராய்ச்சி, லாபம் குறைவு என்ற காரணத்தினால் நடைமுறைப்படுத்தப்ப்படுவதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved