World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Colorado woman faces charges by military

Interview with US soldier who refused to abandon children and return to Iraq

இராணுவத்தினால் கொலராடொ பெண்மணி குற்றவிசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகளை துறந்துவிட்டு ஈராக் திரும்ப மறுத்த அமெரிக்க சிப்பாயுடன் ஒரு பேட்டி

By Joanne Laurier
7 November 2003

Back to screen version

30 வயதான அமெரிக்க பெண் சிப்பாய் ஒருவர் தனது குழந்தைகளைப் பராமரிப்பதற்காக, ஈராக்கில் இராணுவ கடமையாற்றச் செல்ல மறுத்து கொலராடோ பகுதியில் தங்கிவிட்டதற்காக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். ஏழு குழந்தைகளின் பெற்றோர்களான சிமோன் மற்றும் வேகன் ஹால்காம்பின் (Simone and Vaughn Holcomb) ஆகிய இருவரும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் ஆவர். அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவசர விடுப்பில் கொலராடொ ஸ்பிரிங்கிற்கு அருகிலுள்ள Fort Carson ற்கு வீடு திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அவர்கள் ஈராக்கில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், அவர்களது நான்கு முதல் 12 வயது வரை ஆன குழந்தைகளை கணவர் வேகன் ஹால்காம்பின் தாயார் கவனித்து வந்தார். இந்தக் கட்டத்தில் ஹால்காம்பின் முன்னாள் மனைவி, தனது இரண்டு குழந்தைகளுக்கான ஆதரவு தேடி நீதிமன்றத்தில் மனுச் செய்தார். தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் தனது முழுப்பொறுப்பில் வைத்துக்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியை அவர் கோரியபோது, நீதிமன்றமும் அந்தக் குழந்தைகள் பாட்டியோடு சேர்ந்து தற்காலிக பொறுப்பில் இருப்பதற்கு அனுமதி வழங்கியது.

இந்த நீதிமன்ற நடவடிக்கைகளால் செப்டம்பர் மாதம் ஹால்காம் அவரது மனைவி இருவரும் ஈராக்கிலிருந்து அமெரிக்காவிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குழந்தைகள் யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது பெற்றோரில் யாராவது ஒருவர் தங்களது வீட்டில் தங்கியிருந்தால் தான் இரண்டு குழந்தைகளின் பராமரிப்பு உரிமையை கோர முடியும் என்று நீதிபதி கட்டளையிட்டார்.

ஈராக்கில் மூன்றாவது ஆயுதம் தாங்கிய காலாட் படைப்பிரிவின் டாங்கி அணியில் சார்ஜன்ட்டாக பணியாற்றும் 40 வயதான வாஹன் ஹால்காம் மீண்டும் ஈராக் சென்று விட்டார். ஆனால் இராணுவத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் அவரது மனைவியான சிமோன் இராணுவத்தின் அனுமதியில்லாமல் அமெரிக்காவில் தங்கிவிட்டார்.

தன்னை இராணுவப் பணியில் இருந்து விடுவித்துவிட வேண்டும், அல்லது தனது நகருக்கு அருகில் உள்ள முகாமில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று இராணுவத்திற்கு சிமோன் வேண்டுகோள் விடுத்தபோது, அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள இராணுவ அதிகாரிகள் மறுத்துவிட்டதுடன் இராணுவ சேவையிலிருந்து அவரை பதவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஆறு ஆண்டுகளாக இராணுவத்தில் பணியாற்றுகின்ற அவருக்கு இப்போது சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என்று நம்பப்படுகின்றது. ஆனால் அவரது குடும்ப வழக்கில் நீதிபதி பிறப்பித்த கட்டளையை இராணுவம் பொருட்படுத்தவில்லை. அவர் இராணுவச் சட்டத்தை மீறிவிட்டதாக இராணுவ அதிகாரிகள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிமோன் தனது துயரமானது, கெட்ட கனவைவிட மோசமாக இருக்கிறது என்று உலக சோசலிச வலைத் தளத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

''நான் தேசிய காவலர் அணியில் இடம் பெற்றிருக்கிறேன். எனவே நானாகவே முன் வந்து ஜனவரியில் ஈராக்கில் பணியாற்ற சென்றேன். 20 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி வரும் எனது கணவர் கடந்த ஏப்ரலில் ஈராக்கிற்கு பணியாற்றச் சென்றார். நான் இப்போதே விமானம் ஏறி ஈராக்கிற்கு திரும்பிவிட்டால் எனது குழந்தைகளை கைவிட்டது போலாகிவிடும். மேலும் எனது குழந்தைகளான டஸ்கின் மற்றும் டெய்லர் பராமரிப்பு பொறுப்பையும் நாங்கள் இழந்துவிடுவோம்'' என்று அவர் கூறி மேலும் தொடர்ந்தார்.

''குழந்தைகளின் வாழ்வில் ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகள் ஏற்பட்டுள்ளன. நான் முதலில் ஈராக்கிலிருந்து திரும்பினேன். பின்னர் அவர்களது தந்தை வந்தார். எங்களது குழந்தைகள் எங்களுக்கு எழுதிய கடிதங்களில் ''தயவு செய்து மாண்டு விடாதீர்கள்'' என்று எழுதிக் கொண்டேயிருந்தனர். எங்களது மூத்த மகன் பாடசாலையில் மதிப்பெண்களை குறைவாக பெற்றான். நாங்கள் இருவரும் அவசர விடுப்பில் அமெரிக்கா திரும்பினோம். தந்தை மீண்டும் ஈராக் செல்ல வேண்டும் என்பதை குழந்தைகள் அறிந்தபோது, நான் அவர்களைவிட்டு பிரியமாட்டேன் என்று அவர்களுக்கு ஒரு உறுதி மொழி தந்தேன். சென்ற ஆண்டு அவர்களது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. எனவே அவர்கள் இன்னமும் அதே அதிர்ச்சியில் உள்ளனர். ஆதலால் நான் தங்களைவிட்டு பிரியமாட்டேன் என்பதை அவர்கள் நம்பவில்லை.

''எனக்கு அற்புதமான ஏழு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று தனித் தன்மையும், ஆளுமையும் கொண்டவர்கள். அவர்கள் அனைவரும் ஏதாவதொரு வகையில் செயல்படத் தொடங்கினார்கள். அதில் ஒரு குழந்தை எதிர்மறைப் போக்கில் திரும்பியது. அவன் நிலைகுலைந்து என் மீது பழிபோட ஆரம்பித்தான். பள்ளிக்கூடத்தில் தாறுமாறாக நடந்து கொண்ட எனது 11 வயது மகன் பாராஸ்ட் இந்த உலகத்தையே தனது தோளில் தூக்கி சுமந்து கொண்டிருப்பதாக நம்புகிறான். மக்கள் அனைவரும் தாம் சொல்வதைக் கேட்டால் உலகில் எதையுமே தன்னால் மாற்றவிட முடியும் என்று நம்புகிறான். எனது 12 வயது மகன், வயதான பெற்றோரைப் போல் நடந்து கொள்ளுகின்ற மனப்போக்குடன் இருக்கிறான். அவன் குழந்தை பருவத்து நிலைக்கு திரும்ப வேண்டியது அவசியம். எனவே இது போன்ற சிந்தனைகள் அவனுக்கு நல்லதல்ல. இவை பற்றி எனக்கு மிகுந்த குற்ற உணர்வு ஏற்பட்டு வருகின்றது.

''நான் இராணுவ சேவையை தேர்ந்தெடுத்தேன். அந்த நேரத்தில் இராணுவ ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திடும்போது நான் செய்வது சரியென்றே நம்பினேன். இந்தப் போர் தொடர்பாக நடைபெறுகின்ற எல்லாக் காரியங்களிலும் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் இந்த நாட்டை ஆதரிப்பது என்று நான் முடிவு செய்தேன். எனது கணவர் அவசர விடுவிப்பிற்குப் பின் மீண்டும் ஈராக் திரும்பியவுடன், இராணுவத்திடம் முதலில் என்னை இராணுவ பணியிலிருந்து விடுவித்து விடுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அது அவர்களால் மறுக்கப்பட்டது. இரண்டாவதாக கருணை அடிப்படையில் எனது நகருக்கு அருகில் இராணுவ பணியில் சேர அனுமதிக்குமாறு கோரினேன். அதுவும் மறுக்கப்பட்டது. எனது கணவர் நவம்பர் மாதம் இராணுவ பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதற்கு ஏற்கெனவே இராணுவத்தில் ஒப்புதல் கிடைத்துவிட்டது. எனவே நவம்பர் மாதம் வரை என்னை ஈராக்கிற்கு அனுப்பவேண்டாம் என்று மூன்றாவதாக கோரிக்கையும் விடுத்தேன். அதுவும் மறுக்கப்பட்டது.

''என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக இராணுவத்தின் அடுத்த நடவடிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எலெக்ட்ரானிக் மெயில் மூலமாகத்தான் இராணுவத்தினர் எந்த தகவலையும் ஏற்றுக் கொள்வார்கள். என் மீது இராணுவச் சட்டப்படி, நான் இராணுவத்தை புறக்கணித்துவிட்டு தப்பி ஓடி வந்துவிட்டதாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு, அவற்றின் மூலம் நான் சிறை செல்லவேண்டி வரலாம். அத்துடன் எனது சம்பளத்தையும் நிறுத்தி விட்டார்கள். அக்டோபர் 10 ந் தேதி முதல் எனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வசூலிப்பதற்கும் அவர்கள் விரும்புகிறார்கள்.

''எனது கணவர் முன்னாள் மனைவி மூலம் பெற்ற இரண்டு குழந்தைகளையும் எங்கள் பராமரிப்பில் வைத்துக் கொள்வதற்காக நானும் எனது கணவரும் மூன்றாண்டுகளாக நீதி மன்றங்களில் போராடி வருகிறோம். எங்களது இராணுவ அணியிலேயே எங்களைப் போன்று இரண்டு குடும்பங்கள் இதே நிலையில் குழந்தைகளை பராமரிப்பில் வைத்துக்கொள்ளும் தகராறில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் இராணுவத்திற்கு ஒன்றும் புதுமையானதல்ல. இராணுவத்தில் பணியாற்றவேண்டும் என்று நாங்கள் மனுச்செய்து கொண்டு அந்த மனுவை இராணுவம் ஏற்றுக்கொண்டபோது, அவர்களுக்கும் எங்களுக்கும் இந்த பிரச்சனை தெரிந்திருக்க வேண்டும். தாய் என்கிற முறையில் எனக்குள்ள வலிமை முழுவதையும் பயன்படுத்தி நான் எனது குழந்தைகளுக்காக போராடுவேன். நானும் எனது கணவரும் இப்போது ஈராக்கில் இருந்திருப்போமானால் இந்தக் குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்திருப்பர். ஈராக்கில் நானும் எனது கணவரும், போர்க் களத்தில் இருந்த நேரத்தில் என்னைப்பற்றி எனது கணவர் கவலைப்பட்டார். அவருக்கு ஏதாவது நேர்ந்திருக்குமானால் அது என்னுடைய தவறுதான் என்று நான் நினைத்திருப்பேன்.

''நான் ஈராக்கிற்கு புறப்பட்ட நேரத்தில் எல்லாமே சிறப்பாக அமையும் என்று நினைத்தேன். எனது குழந்தைகள் சிறப்பாக பராமரிக்கப்படுவார்கள் என்று கருதினேன். சென்ற முறை எனது கணவர் போருக்குச் சென்றார். அவரது படைப்பிரிவில் சிறப்பான சார்ஜென்ட்டாக போரில் கலந்து கொண்டு ஆறுமாதங்கள் போர்க்களத்தில் இருந்தார். எனவேதான் அந்த ஆறுமாத காலக்கெடுவை கணக்கிட்டு நான் எனது இராணுவப் பணிகளை தொடக்கினேன்.

''நாங்கள் தாய்நாடு திரும்பிய பின்னர் தான் மீண்டும் போர்க்களத்திற்கு செல்வது மிகவும் சிக்கலானது என்பதை தெரிந்து கொண்டேன். அமெரிக்காவிற்குளேயும் ஈராக்கிலும் நிலவரம் மிகவும் சிக்கலாகி விட்டது. இராணுவத்தினர் தினசரி மடிந்து கொண்டிருப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் இராணுவத்திற்கு அளித்த உறுதிமொழியை மதிப்பதாக பிரம்மான வாக்குமூலம் கொடுத்தேன். இப்போது எனது விருப்பத்திற்கு விடப்பட்ட நான் ஈராக்கிற்கு மீண்டும் செல்லமாட்டேன். நான் எனது குழந்தைகளை இழந்துவிட விரும்பவில்லை. எனது தாய்க்கும் எனது மாமியாருக்கும், அவர்களுக்கு என்று சொந்த பொறுப்புக்கள் இருப்பதால் அவர்கள் இருவரும் நீண்ட காலத்திற்கு எங்களது குழந்தைகளை பராமரித்துக் கொண்டிருக்க முடியாது. ஒன்பது மாதங்களுக்கு பகல் நேர குழந்தை பராமரிப்பாளர் எவரது பொறுப்பிலும் குழந்தைகளை விட முடியாது. இறுதியாக நடப்பதற்கு இராணுவம்தான் முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஆகவே இந்த நிலை நியாயமற்றதுடன் கடும் துயரத்தை எனக்கு ஏற்படுத்துகின்றது.

''பல நாட்களாக ஈராக் சென்ற எனது கணவரிடம் இருந்து எந்தவிதமான தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. எனவே அவர் ஏதாவதொரு இராணுவப் பணியில் ஈடுபட்டிருக்கக்கூடும். அவருக்கு ஏதாவது நிகழ்ந்திருக்கவும் கூடும். எனவே இந்த நிலவரம் முழுவதும் எனது உள்ளத்தை வருத்துவதாக உள்ளது.

''ஈராக்கில் நான் கண்டவற்றைப் பற்றி அளவிற்கு அதிகமாக விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் எனது அந்தஸ்து அதற்கு இடம் தரவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நான் சொல்ல முடியும். ஈராக் நிலவரம் மிகவும் பயங்கரமானது. துக்கம் தருவது. இந்தப் போருக்கு ஈராக்கிலும் மதிப்பில்லை. அமெரிக்காவிலும் மதிப்பில்லை உலகில் வேறு எந்த நாட்டிலும் மதிப்பில்லை'' என்று உலக சோசலிச வலைத் தளத்திற்கு அளித்த பேட்டியில் சிமோன் கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved