World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Lessons of the Hutton Inquiry

பிரிட்டன்: ஹட்டன் விசாரணையின் படிப்பினைகள்

By Chris Marsden
24 September 2003

Back to screen version

ஊதிக்கெடுத்த டாக்டர் கெல்லியின் மரணத்தைப் பற்றிய ஹட்டன் விசாரணை, வருந்தத்தக்க ஆனால் முற்றிலும் கணிக்கக்கூடிய முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

உயர்மட்ட அதிகாரிகள், ஆட்சிப்பணித்துறையினர், பாதுகாப்புத்துறை உறுப்பினர்கள் ஆகியோர் அளித்த சாட்சியங்களைக் கவனித்து வந்தவர்கள் எவரும், பிரதம மந்திரி டோனி பிளேயர், அரசாங்கத்தினர், இருவருமே நாட்டை ஈராக்கிற்கெதிரான சட்ட விரோதப்போரில் தள்ள, மக்களிடம் பொய்கூறினர் என்ற குற்றச்சாட்டு சந்தேகத்தின் நிழலுக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக முடிவு கொள்வர். விசாரணையின் குறுகிய வரம்பின்படி கூட, செப்டம்பர் 22 கோப்புத் தொகுப்பு, ஏற்கனவே பிளேயரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷும் உடன்பட்டிருந்த போருக்குச் செல்வதற்கான முடிவை நியாயப்படுத்தும் வகையில், தயார் செய்யப்பட்டிருந்தது என்பதை நிரூபிக்க நிறைய சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன; கோப்பின் உள்ளடக்கங்கள் உண்மையிலேயே அரசாங்கத்தால் "பாலியல் வகையில் குழப்பப்பட்டு", ஈராக் 45 நிமிடத்திற்குள் பேரழிவு ஆயுதங்களை ஏவமுடியும் என்பது போன்ற பொய்கள் சேர்க்கப்பட்டன; இப்பொய்களை ஆதாரப்படுத்த முடியாது என்று தெரிந்தவுடன், பிபிசி மற்றும் அதன் நிருபர் ஜில்லிகன் மீது திசை திருப்பும் தாக்குதல்கள் குவிந்து, இறுதியில் டாக்டர் கெல்லியின் மரணத்திற்கு இட்டுச்சென்றது.

ஆனால், இந்த அடிப்படைக் கேள்விகள், யார் முதலில் "பாலியல் வகையில் குழப்பம்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியது, ஜில்லிகனா அல்லது கெல்லியா பற்றியும், மற்றைய விளைவற்ற விடயங்களைப் பற்றியும், முக்கியப் பிரச்சினைபோல், கனம் மிகுந்த சொல்லாட்சித் திறமையில் புதைக்கும் முயற்சிதான் மேலோங்கி நிற்கிறது. ஜில்லிகன், பாதுகாப்புத்துறையில் கெல்லியும் மற்ற அதிகாரிகளும் அரசாங்கத்தின் போர் பற்றிய பலவீனமான வாதம் மீதாக கொண்டிருந்த கவலைகளை பற்றிச் சரியாகவே அறிவித்துள்ளார் என்னும் உண்மை சிறு விடயங்களாக நடத்தப்படுகின்றன.

பாதுகாப்பு மந்திரி ஜெப் ஹூன் அரசாங்கத்தின் குற்றங்களுக்குக் காரணம் என்று பலிக்கடாவாக ஆக்கப்படலாம்; இது பிளேயரைப் பாதுகாக்க உதவும் என்றாலும் கூட, பிளேயர் தன்னுடைய சாட்சியத்தில் தொடர்ந்து கூறிய பொய்கள், அரை உண்மைகள், தவிர்க்கும் முறைகளை கையாண்டது, ஆகியவற்றிற்கு பதில் கூறுவதற்காக விசாரணைக்கு பழையபடி கூப்பிடப்படவில்லை.

ஈராக்கிய போருக்குப்பின்னர், ஆளும் செல்வந்த தட்டின் பெருகிய பிளவுகள், ஹட்டன் விசாரணை அமையக் காரணமாயிற்று. பிளேயரை பின்னால் விமர்சித்த அனைவருமே, முதலில் அமெரிக்காவுடன் இணைந்து, ஐரோப்பிய போட்டியாளருக்கு எதிராக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தவும், ஈராக்கிய எண்ணெய் வளத்தில் ஒரு பங்கைப்பெறவும், கொண்ட மூலோபாயத்தை ஏற்றுத்தானிருந்தனர். ஆனால், அழிவிற்கான விளைவுகளை தந்துள்ள படையெடுப்பு, பிரிட்டன் வியட்நாம் முறை புதைசேற்றில் ஆழ்ந்துவிடக்கூடும் என்ற கவலைகளை அதிகப்படுத்தியதாலும், உளவுத்துறை அறிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி MI6-ஐ மதிப்புக்குறைவிற்கு உட்படுத்தியதும், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு உயர்ந்த அளவு அடைந்ததும், முழு அரசாங்க இயந்திரத்தையே செல்வாக்கிழக்க வைக்கும் அச்சுறுத்தலுக்கு தள்ளியது. இதன் விளைவாக, பிளேயர் தன்னுடைய அமெரிக்காவுடனான நட்பைச் சமன்செய்யுமாறும், ஐரோப்பிய வல்லரசுகளுடனும், ஐநாவுடனும் கூடுதலாக இணைந்து செயலாற்றி அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச பேரவாக்களைத்தடுக்கவும் கோரிக்கைகள் வளர்ந்தன.

இந்தக் கேள்விகளை ஒருபுறமாக ஒதுக்கிக் கொள்ள பல முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஈராக்கியப்போர் தயாரிப்பு பற்றிய நீதி விசாரணை தேவை எனக்கேட்டவர்கள் திருப்தி பெறாவகையில், அயலுறவுச் சிறப்புக்குழு, உளவுத்துறைப் பாதுகாப்புக்குழு இவற்றின் விசாரணைகள், எச்சரிக்கையுடன் நடத்தப்பட்டன. எனவே, கெல்லியின் மரணம் பற்றிய விசாரணை, அத்தகைய விசாரணைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டது, ஏனெனில், அது அரசாங்கம் போருக்குச் செல்லவேண்டும் என்ற அழிவை தந்த முடிவின் அரசியல் பின்விளைவுகளின் பாதிப்பை குறைக்கும் வகையில் நம்பிக்கையுடன் செயல்பட அதற்கு இயலக் கூடியதாக இருந்தது.

ஆளும் வர்க்கத்தின் பலபிரிவுகளுள், எது பிரிட்டனுடைய இராணுவ மற்றும் காலனித்துவ பேரவாக்களை எவ்வாறு அதிக அளவில் உறுதிப்படுத்த முடிவெடுக்கும் என்பதைக்காணும் களத்திற்கும் சற்று அதிகமாக, நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அரங்கம் அமைந்துவிட்டது. அரசாங்கத்தின் ஜனநாயக பொறுப்புக் கூறுதலை உத்திரவாதம் செய்வதற்காக எடுக்கப்பட்ட முன்முயற்சி வெற்றுச்செயலாகப் போய்விட்டது.

அரசாங்கம் எவ்வாறு பிரிட்டிஷ் மக்களை இல்லாத ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய அச்சுறுத்தல் பற்றித் தவறாகத் திசை திருப்பியது என்ற அடிப்படைப் பிரச்சினை, வேண்டுமென்றே புதைக்கப்பட்டுவிட்டது. விசாரணையில் இது எழுப்பப்பட்டபோது, இருக்கும் உளவுத்துறை ஆவணங்களின் துணைகொண்டு, சிறந்த முடிவு நல்லநோக்கத்துடன் எடுக்கப்பட்டது என்பதற்கு பதிலாக, இவ்வாறு வேண்டுமென்றே பொய்கூறப்பட்டதை, இருப்பதாகக் கொண்டு அதற்கான ஆவணச்சான்றை கொடுக்கவேண்டும் என்ற முடியாத கோரிக்கையை அரசாங்கம் கேட்டது.

ஆனால் விசாரணை இறுதிநாட்களை நோக்கிச்செல்லும்போதே, உலகநிகழ்ச்சிகள், சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கம் பொய்கூறியது, அதுவும் பெரிய பொய்யையே கூறியது என்பதை நிரூபித்துவிட்டன.

இந்த வாரம், ஐ.நா.வின் தலைமை ஆயுத ஆய்வாளர் ஹான்ஸ் பிளிக்ஸ், ஈராக் தன்னுடைய இராசயன, உயிரியல் ஆயுதங்களை 10 ஆண்டுகளுக்கு முன்பே அழித்துவிட்டதாக தான் இப்பொழுது கருதுவதாகவும், அமெரிக்க, பிரிட்டிஷ் அரசாங்கங்கங்களை சூனிய-வேட்டையாளர்கள்போல் கருதுவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, செப்டம்பர் கோப்பு தொகுப்பை "புனைந்துரை பண்பாடு, மிகைப்படுத்தப்பட்டது" என்றும் கண்டித்தார். அதே நாளன்றுதான், சதாம் ஹுசேன் செப்டம்பர் 11 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலோடு தொடர்பு கொண்டிருந்தார் என்பதற்கு சான்றுகள் இல்லை என ஒத்துக்கொள்ளுமாறு புஷ் கட்டாயப்படுத்தப்பட்டார். இம்மாத தொடக்கத்தில், பிளேயருடைய பழைய காபினெட் மந்திரி மைக்கேல் மீச்சர் (Michael Meacher), மத்திய கிழக்கு எண்ணெய் அளிப்புக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் அமெரிக்க பூகோள மேலாதிக்கத்தை உத்திரவாதப்படுத்தும் திட்டத்திற்கு செப்டம்பர் 11 நிகழ்ச்சிகள், ஒரு காரணமாகப் பயன்படுத்தப்பட்டது என்ற விரிவான வாதத்தை அளித்தார்.

இந்த விசாரணை பெரும்பாலான உழைக்கும் மக்களுடைய நலன்கள் எவ்வாறு ஆளும் செல்வந்த தட்டின் நலன்களோடு தனியாகப் பிளவுபட்டு நிற்கிறது என்பதை விளக்கிக் காட்டுவதில் தான் வெற்றிபெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான பக்கங்களை படித்தாலும், "அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பது வெளிப்படவில்லை", அடிப்படை பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதாக அமைகின்றன. ஈராக்கியப்போர், அதன் துன்பம் நிறைந்த பின்விளைவுகள் அனைத்தும் உண்மைக்குள் வராமல் முத்திரையிடப்பட்டதுபோல், அன்றாடம் நூற்றுக்கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கில் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டோ, காயமடைந்தோதான் ஆக்கிரமிப்பு படைகளுடனான மோதலில் நேரும் நிலை தொடர்கிறது.

பிரிட்டனில் பெரும்பாலான உழைக்கும் மக்கள், அரசாங்கம் மற்றும் அதனுடைய பொய்கள் பற்றி, ஏற்கனவே தங்களுடைய தீர்ப்பைக் கூறிவிட்டனர். செப்டம்பர் 18ம் தேதி நடைபெற்ற பிரெண்ட் ஈஸ்ட் (Brent East) இடைத்தேர்தலில் தொழிற் கட்சி ஆதரவு முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டது. போரை எதிர்த்திருந்த ஒரே எதிர்க்கட்சி என்ற முறையில் தாராளவாத ஜனநாயகவாதிகளுக்கு 30 சதவீதம் கூடுதலான ஆதரவு வாக்கு கிடைத்தது 64 சதவீதம் வாக்காளர்கள் முன்பு பாதுகாப்பான தொழிற் கட்சி தொகுதியான இதில், அரசாங்கத்தின் மீது தங்கள் வெறுப்பைக் காட்டும் வகையில், வாக்களிக்கவே வரவில்லை.

அரசாங்கத்திற்கெதிரான மக்கள் விரோதத்தன்மை, போருக்குச் செல்ல முடிவெடுத்ததால் அதற்கு ஏற்பட்ட இழப்பு, இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அரசாங்கம் தன்னை பதவியில் தக்க வைத்துக்கொண்டிருப்பது, அரசியலில் முன்னோடி இல்லாத விடயமாகும்.

இதை எவ்வாறு விளக்க முடியும்? மக்களுடைய விருப்பத்தை அரசியலில் வழிகாட்டும் கொள்கையாக ஏற்க மறுத்த முதல் பிரதம மந்திரி பிளேயர் ஆவார். இரண்டு மில்லியன் மக்கள் போரை எதிர்த்து தெருவிற்கு வந்து லண்டன் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது, தான் எது சரியென கருதுகிறாரோ, அதைத்தான் வழிகாட்டியாகக் கொள்வேன் என்று அதற்கு விடையிறுத்தார். அதைத் தொடர்ந்து, தேசிய பொது சுகாதார வசதி, கல்வி ஆகியவை தனியார் மயமாக்கப்படுதலின் அவருடைய கொள்கைளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பிற்கு பலமுறை விடையளிக்கையில், இத்தகைய கொள்கைகள் இன்னும் தீவிரமாகச் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். இவருடைய ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்களை குறை கூறியோரை, அவை விரைவிலோ, தாமதமாகவோ கண்டுபிடிக்கப்படும் என்று இகழ்ச்சியான விடையுடன் உதறித்தள்ளினார்.

பெரும்பாலான மக்களின் நேரடி இழப்பில், ஏற்கனவே அருஞ்செல்வம் கொண்டுள்ள தங்கள் தன்மையில், இன்னும் கூடுதலான செல்வத்தைச் சேர்க்க விழையும் மிக் குறுகிய செல்வந்த தட்டின், சர்வதேச நிதி ஆதிக்க ஒருசிலவராட்சியின் அரசியல் பிரதிநிதியாகச் செயல்படும் புதிய தொழிற் கட்சி அரசாங்கத்தின் அடிப்படைத் தன்மையைத்தான், இந்தப் பொதுமக்கள் கருத்தை அசட்டைப்படுத்துதல் சுட்டிக்காட்டுகிறது.

பிளேயரை பொறுத்தவரையில், இவர்களுடைய கருத்துக்கள் தான் முக்கியமாகக் கொள்ளப்பட்டு, விருப்பமில்லா மக்களிடையே, ஆதரவற்ற நடவடிக்கைகளை சுமத்த தயாராயிருத்தல், அவர்களுடைய தொடர்ந்த அரசாங்க ஆதரவிற்கு நிபந்தனையாகிறது. இது உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகள் இரண்டிற்கும் பொருந்தும்; இரண்டிலுமே மக்களுடைய எதிர்ப்பு, விரோதிகளை எதிர்கொள்ளும் விருப்பம் இவற்றால் அரசாங்கம் புகழை ஈட்டியது. இத்தகைய போக்கை போதுமான இரக்கமின்மையுடன் செய்தால், பெருவர்த்தகம் மற்றும் அதன் செய்தி ஊடகம் இவற்றின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று பிளேயர் மனத்தில் பதிவாகிவிட்டிருக்கிறது.

தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து அரிக்கப்படுதலுக்கு, இந்த அரசியல் செயல்பட்டியல்தான் காரணமாகும். பழைய டோரி அரசாங்கத்திலிருந்ததை விட மோசமான அளவு சமூக துருவமுனைப்படல் ஏழை-பணக்காரர்களிடம் வளர இந்த அரசாங்கம் செயல்பட்டுள்ளது. ஜனநாயக வகையில் பொறுப்புடையதாக இருக்கும் உண்மையான அரசாங்கத்தில் இத்தகைய சமூக சமத்துவமற்ற நிலையின் அளவு பொருத்தமுடையது அல்ல. மில்லியன் கணக்கிலான மக்களை ஏழ்மைப்படுத்துதல், பல்லாயிரக்கணக்கில் உயிர்களைப்பலி கொள்ளும், காலனித்துவ முறையிலான போர்களை நடத்த பில்லியன்கள் செலவழித்தல் என்ற சமுக கொள்கைகளுக்கு மக்களிடத்தில் ஒருவர் ஆதரவான வாக்கைப்பெற முடியாது.

முன்பு மக்கள் விருப்பத்தை வெளிப்படுத்திய இயங்குமுறை இப்பொழுது வேண்டுமென்றே மூடப்படுகிறது அல்லது செயலிழந்து விடுகிறது. பெரிய கட்சிகள் உறுப்பினர் எண்ணிக்கை அதிகமின்றி உள்ளன, தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது, வரலாறு காணாத அளவு தேர்தலில் வாக்குப்போடுவோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அரசாங்கம் கூடுதலான முறையில் வல்லாட்சி போக்கை காட்டி வருவதுடன், மில்லியன் கணக்கான மக்களை கூடுதலான தாழ்ந்த நிலையில் தள்ளும் கொள்கைகளை செயல்ப்படுத்த அடக்குமுறை நடவடிக்கைகளை நம்பியுள்ளது.

இது ஒரு மிகுந்த நச்சுத்தன்மை நிறைந்த, வெடிக்கும் தன்மையுடைய அரசியல் சூழ்நிலைலையை தவிர்க்கமுடியாமல் தோற்றுவிக்கிறது. தன்னுடைய ஆதரவாளர்கள் திருப்தியடைந்துள்ளவரை தான் அதிகாரத்தில் இருக்கமுடியும் என்று பிளேயர் கருதலாம்; ஆனால் குறிப்பிடத்தக்க அளவு சமுதாய ஆதரவு இல்லாமல் அரசாங்கம் எத்தனை காலம் ஆட்சி செய்யமுடியும் என்பது ஒரு வரம்பிற்கு உட்பட்டதுதான். இந்த வரம்பு இப்பொழுது வந்துவிட்டது. முழு அளவிலான அரசியல் நெருக்கடியின் பிடியில் இப்பொழுது புதிய தொழிற் கட்சி உள்ளது; அது அமெரிக்காவில் புஷ் நிர்வாகத்தின் தலைவிதியிலும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல அரசாங்கங்களிலும் இந்நிலைதான் எதிரொலிக்கப்படுகின்றது.

ஆனால் அரசாங்கத்தற்கெதிரான கோபமும் வெறுப்பும் மட்டும் இருந்து பயனில்லை. பிளேயர் பிரதம மந்திரியாக தொடர்ந்திருப்பாரா என்பதைவிடக் கூடுதலான விடயங்கள் ஆபத்திலுள்ளன. ஹட்டன் விசாரணை வரை நடந்த நிகழ்ச்சிகளுடைய தன்மையை காணும்போது, தொழிலாள வர்க்கம் அரசியலில் வாக்கு இல்லாத நிலையும், முறையாக ஜனநாயக உரிமைகள் இழத்தலுக்கு உட்பட்டதும்தான் தெளிவாகிறது. அரசில் செயல்பட்டியல் ஆளும் செல்வந்த தட்டிற்குள்ளேயான உட்பூசல்களுக்கு உட்பட்டு நிர்ணயிக்கப்படும் வரை, அதன் விளைவு இன்னும் கூடுதலான அளவிற்கு, உழைக்கும் மக்களின் இழப்பில், வலதுபுறம்தான் சாயும்.

பெருநிறுவனங்களின் அரசியல் பிரதிநிதிகளாகச்செயல்படும் அனைத்து அமைப்புக்களிடம் இருந்தும் விலகி, ஒரு புதிய, உண்மையான சோசலிச கட்சியை அமைத்து, சுதந்திரமாக தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள தொழிலாள வர்க்கம் தயாராக வேண்டும். ஹட்டன் பிரபுவால் தலைமை தாங்கப்பட்ட கேலிக்கூத்துக்கு எதிராக, ஈராக்கிலிருந்து உடனடியாக, நிபந்தனையற்ற முறையில் பிரிட்டிஷ், அமெரிக்கப்படைகள் திரும்பப்பெற வேண்டும் என்றும், போர் தயாரிக்கப்பட்ட விதத்தை பற்றியும் சுயாதீனமான விசாரணை ஒன்றை நடத்தவுமான கோரிக்கையை அது கையில் எடுத்தாக வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved