World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

UN vote on Iraq: Paris, Berlin and Moscow bow before Bush

ஈராக்கின் மீதான ஐ.நா வாக்கெடுப்பு: புஷ்ஷிற்கு முன், பாரிஸ், பேர்லின், மொஸ்கோ பணிந்து நிற்கின்றன

By Chris Marsden
18 October 2003

Back to screen version

வியாழக்கிழமை அன்று, அமெரிக்கா தயாரித்த தீர்மானம் 1511 க்கு, ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் பெற்ற ஒருமனதான வாக்கு, ஐரோப்பிய அரசாங்கங்கள், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை, வாஷிங்டனின் தொடர்ந்த அழுத்தத்தின்முன், அருவருக்கத்தக்க பணிவைக் காட்டியதைப் பிரதிபலிக்கிறது. முழு மத்திய கிழக்குப் பகுதியிலும், அமெரிக்க இராணுவம் தன்னுடைய மேலாதிக்கத்தை கொள்ளும் உந்துதலுக்குமுன், அரபு முதலாளித்துவம் செயலிழந்து நிற்கும் தன்மையை, சிரியா இந்தத்-தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தமை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது. அப்பட்டமான, சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டதற்கு ஆதராவாக கொடுக்கப்பட்டுள்ள 15 வாக்குகளில் ஒவ்வொன்றும், தங்கள் புவிசார் அரசியல் நலன்களுக்காக, சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் ஐ.நா.நெறிகளை முற்றிலும் மீறியமுறையில் நடந்து கொண்டுள்ளதைத்தான் புலப்படுத்துகிறது. ஒவ்வொரு, விவாதமும், அமெரிக்காவின் குற்றஞ்சார்ந்த போரை ஆதரிப்பதா இல்லையா என்பது, அது உறுதியளித்த வர்த்கச்சிறப்புச் சலுகைகள், உதவி, போன்ற வெகுமதியின் அடிப்படையிலோ அல்லது பொருளாதாரத் தடைகள், நேரடி இராணுவத் தாக்குதல்கள் போன்ற அச்சுறுத்தப்படும் தண்டனையாலோ, அளித்து தீர்க்கும் (quid pro quo) வகையில்தான் முடிவு செய்யப்பட்டது.

அக்டோபர் 15 புதன் கடைசி நேரத்தில் பாதுகாப்புக்குழு வாக்கெடுப்பில் தீர்மான வரைவை ஏற்க, பிரான்சையும், ஜேர்மனியையும் வற்புறுத்த ரஷ்ய பிரதம மந்திரி, விளாடிமீர் புடினுக்கு, கால அவகாசம் கொடுக்க, வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. பெல்ஜியத்தில் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பங்குகொண்டிருந்த, ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர், பிரான்ஸின் ஜனாதிபதி ஜாக் சிராக், இருவரோடும் 45 நிமிடமேயான வீடியோ அளவிலான பேச்சுவார்த்தைகளை அடுத்து, இம்முடிவு வந்தது; ஈராக்கின் மீதான அமெரிக்கப் போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் முன்பு ஆட்சேபம் தெரிவித்திருந்தாலும், இவ் ஒப்புதல் கொள்கையற்ற தன்மை கொண்ட நடவடிக்கை ஆகும்.

இம் மூன்றும் முன்மொழிந்த திருத்தங்களுமே, அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகள், ஈராக்கில் நேரடிக் காலனிய முறையில் ஆட்சி செலுத்துவதை, ஐ.நா. படைகள் மூலம் செலுத்த மாற்றி அமைக்கும் வகைக்கும், இறுதியில் ஈராக்கில் ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவவதற்கும் கவனத்தை குவிக்கின்றன. ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மனி மூன்றுமே, இந்த ராஜதந்திர சூழ்ச்சி முறைகளின் முயற்சிகளின் வழியாக, வாஷிங்டனின் பிடியைத் தளர்த்தி, ஈராக்கிய எண்ணெய் வளத்தைத் தாங்கள் பெற வகை செய்யலாம் எனக் கருதுவதோடு, ஈராக், மத்திய கிழக்கு, ஐரோப்பாவிலும், போருக்கும் அதன் பின்னர் ஆக்கிரமிப்பிற்கும் எழுந்துள்ள எதிர்ப்பு அலையின் கடுமையை குறைக்கலாம் என்றும் நினைக்கின்றன.

ஈராக்கில், அன்றாடம் அமெரிக்க, பிரிட்டிஷ், மற்ற ஆக்கிரமிப்புப் படைகளின் வீரர்கள் தாக்கப்படுவதையும், அரபு நாடுகள் முழுவதும் சீற்றம் இருப்பதையும், நாளுக்கு நாள் மோசமாகிவரும் நிலை தெரிவிக்கிறது என்பதை, புடின், ஷ்ரோடர், சிராக் மூவரும் வேதனையுடன்தான் உணர்கின்றனர். ரஷ்ய தூதர், செர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov), ஈராக்கின் வருங்காலம் ஒரு தேசியப்பாதுகாப்பு பற்றிய விஷயம் எனக்கூறியுள்ளார். "ஈராக்கிற்கு உகந்ததை அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில், நாம் ஏற்க வழிசெய்யவில்லை என்றால், அப்பகுதி கஷ்டத்திற்குள்ளாகும்" என அவர் எச்சரித்தார். "சர்வதேச உறுதித்தன்மை பாதிக்கப்படும். நம் பாதுகாப்பு நலன்கள் அனைத்தும் சிரமத்திற்குள்ளாகும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற மிகப்பெரிய போரெதிர்ப்பு சீற்றங்களிலிருந்து, குறிப்பாக ஷ்ரோடரும், சிராக்கும் தப்பிய காரணமே, பிரிட்டனின் டொனி பிளேயர், ஸ்பெயினின் ஜோஸ் மரிய அஸ்நார் போல், அவர்கள் வாஷிங்டனை முழுமையாக ஆதரிக்காததால்தான். அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பில் கலந்து கொண்டு இருந்தால், ஈராக்கிய புதைசேற்றில் அவர்கள் சிக்கி, உள்நாட்டிற்குள்ளும் அரசியல் தாக்குதல் சூட்டினை சந்தித்திருப்பர்.

புஷ் நிர்வாகத்தின் கோபத்தை கிளறாமல் இருக்க அஞ்சியும், ஏதாவது செயலில் ஈடுபட்டு அது, அரசியலளவில் போர் எதிர்ப்பை, மீண்டும் எரியவிட்டு தங்கள் அரசாங்கங்களின் உறுதிக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடுமாதலால், பல ஐரோப்பிய அரசுகளும் வாஷிங்டனுடன் வெளிப்படையாக எதிர்ப்பு போக்கைக் காண்பிப்பதில்லை. மாறாக, அமெரிக்கா கோரிய இராணுவப் படைகள், ஈராக்கின் சீரமைப்பிற்கான கூடுதல் செலவுத்தொகைகள் இவற்றை மறுக்கின்ற அதேவேளை, சில பூச்சு மாறுதல்கள் செய்த பின்னர், அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவுதர முன்வந்துள்ளன.

கூட்டணி இடைக்கால நிர்வாகம், ஈராக்கில் மேம்பட்ட அதிகாரத்திலேயே தொடரும் என்றும், அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்தால் பொறுக்கி எடுக்கப்பட்டுள்ள ஈராக்கிய

ஆட்சிக்குழு, "ஈராக் அரசின் இறையாண்மையை பொதிந்திருக்கிறது" என தீர்மானம் அமெரிக்காவின் மேலாதிக்க பாத்திரத்தைப் பாதுகாத்துள்ளது. அரசியல், பொருளாதார சீரமைப்புக்களில், சூழ்நிலையை பொறுத்து, குறிப்பாக பாதுகாப்பு நலன்களைக் கருத்திற்கொண்டு, ஐ.நா. வலிமையான பங்கைக்கொள்ளும் என உறுதி கூறி இருக்கிறது. இதேபோல், டிசம்பர் 15ம் தேதிக்குள், புதிய அரசியல் அமைப்பை வரையவும், தேர்தல்கள் நடத்தவும் கால அட்டவணை ஒன்றைத் தயாரித்து அளிக்குமாறு, ஈராக்கிய ஐந்தாம் படை இடைக்கால குழுவை, தீர்மானம் அழைத்துள்ளது. இதுவும் கூட "சூழ்நிலைகள் அனுமதித்தால்" மேற்கொள்ளப்படலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில வர்ணனையாளர்கள், ஐ.நா.தீர்மானம் வாஷிங்டனுக்கு ராஜீய முறையில் ஒரு வெற்றி எனக் கூறுகின்றர்; ஆனாலும் இது ஓரளவு அடையாளத் தன்மையைக் கொண்டுள்ளதுதான் என்கின்றனர். உடனடியாக, அமெரிக்கருக்கு கூடுதல் நிறைந்த படைகளும், நிதியும் ஆக்கிரமிப்பிற்கு உதவியாக வராததால், இக்கருத்து நிச்சயமாக உண்மைதான்.

ஆனால், பேர்லின், பாரிஸ், மற்றும் மொஸ்கோவுடைய முடிவின் தாக்கத்தையும் கூட இங்கு எளிதில் தள்ளிவிட முடியாது. இதுவரை அமெரிக்கா, ஈராக்கிய சீரமைப்பிற்காக 20 பில்லியன் டாலர்களை முறையாக ஒதுக்கியுள்ளது, ஜப்பான் 1.9 பில்லியன் டாலர்களை, பிரிட்டன் 919 மில்லியன் டாலர்களை, ஏனைய ஐரோப்பிய நாடுகள் 232 மில்லியன் டாலர்களை மட்டும்தான் ஒதுக்கி உள்ளன. மாட்ரிட்டில் அக்டோபர் 23, 24 தேதிகளில் நடக்கவுள்ள 75 நாடுகள் கலந்து கொள்ளும் நன்கொடை அளிப்பாளர் மாநாட்டில், ஐ.நா. பாதுகாப்புக்குழு வாக்கு, கூடுலான நிதி கிடைக்க வழிவகை செய்ய அழுத்தம் கொடுக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெளிவாக கருதுகின்றனர். அமெரிக்காவின் கூட்டாளிகளான, ஆஸ்திரேலிய ஜோன் ஹாவர்டும், ஜப்பானின் ஜூனிஷிரோ கோய்சுமியும், பிரான்சும் ஜேர்மனியும் கூடுதலான பங்கை கொள்ளவேண்டுமென்று வற்புறுத்தியுள்ளனர்; இத்தாலிய வெளியுறவுஅமைச்சர் பிராங்கோ பிராட்டினி, "இத்தீர்மானம் ஏற்கப்படுவதற்கு முன்பு காணப்பட்டதைக் காட்டிலும், கூடுதலான அளவு தாராள மனப்பான்மையையும், விருப்பத்தையும் இப்பொழுது எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இத்தீர்மானம் அழுத்தத்திற்குட்பட்டுள்ள புஷ் நிர்வாகத்திற்கு, அமெரிக்காவிற்குள் போர் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் எதிர்ப்பு அதிகம் உள்ளபோது, புஷ்ஷின் செல்வாக்கு மிகக்குறைந்த அளவில் இருக்கும் நிலையில், அரசியல் நெறிமுறையில் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இந்த வாரம் வெளிவந்த கணக்கீட்டின்படி, புஷ்ஷின் செல்வாக்கு ஜூலையில் 58 சதவீதத்திலிருந்து ஆகஸ்டில் 53சதவீதத்திற்கு குறைந்துள்ளது; 57 சதவீதம் பேர் பயங்கரவாதத்தின்மீதான போரைவிட நாட்டின் பொருளாதாரத்தை பற்றி கவனம் செலுத்துமாறு விரும்புகின்றனர். ஒப்பிட்டுப்பார்த்தால், செப்டம்பர் 11, 2001க்குப் பின்னர் அவருடைய செல்வாக்கு 86சதவீதம் ஆகவும், போர் தொடக்கத்தில் 74 சதவீதம் ஆகவும் இருந்தது. ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை என்ன தடைகள் போடவேண்டும் என்றிருந்தாலும், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு அவை இசைவு தருவதோடு, ஐ.நா. ஆதரவு என்ற மூடிமறைப்பையும் கொடுத்துள்ளன.

அப்பட்டமான அமெரிக்க இராணுவவெறி, தங்கள்மீது அளித்திருக்கும் அச்சுறுத்தல்களுக்கு, டமாஸ்கஸ் ஆட்சி விடையிறுக்கும் வகைதான், சிரியா தீர்மானத்தை ஆதரித்திருப்பது ஆகும். ஈராக்கிலும் இஸ்ரேலில் ஆக்கிரமிப்பு பகுதிகளிலும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதாகவும், பேரழிவிற்கான ஆயுத தயாரிப்புக்களில் ஈடுபடுவதாகவும், புஷ் நிர்வாகம் டமாஸ்கஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. டமாஸ்கஸிற்கு அருகே, ஒரு பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதற்கு, புஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்; ஐ.நா.கூட்டத்திற்கு ஒரு நாள் முன்புதான், அமெரிக்க பிரதிநிதிகள் சபை 398க்கு 4 என்ற கணக்கில், பயங்கரவாத அமைப்புக்களோடு அது கொண்டுள்ளதாக கூறப்படும் தொடர்பிற்காகவும், அணுவாயுத, உயிரியல், இராசாயன ஆயுதங்களை பெறும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டி, சிரியாவின்மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்கு வாக்களித்தது.

சிரியா பொறுப்புத்தன்மை, மற்றும் லெபனான் இறைமைச் சட்டத்தின்படியும், டமாஸ்கஸ் லெபனான் "ஆக்கிரமிப்பைக்" கைவிடுமாறு கேட்டுள்ளது. சிரியாவின் மீதான பலவகைத் தடைகளைக் கொடுக்க வெள்ளை மாளிகைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்றாலும், அமெரிக்கா அல்லது இஸ்ரேல், நேரடி இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்க அதிகாரிகள், இஸ்ரேல் அணுவாயுத நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தும் திறனை கொண்டுள்ளது என வெளியிட்ட தகவல், இஸ்ரேலுடைய இராணுவத்தூண்டுதல்களுக்கு, சிரியா எப்படியேனும் பதில் கொடுக்க நினைத்தால், அது முழு அழிவைத்தான் காணும் என்ற அச்சுறுத்தலை கொண்டுள்ளது.

ஐ.நா.வில் வாக்கெடுப்பிற்கு, சிலமணி நேரம் முன்பு, (Organization of the Islamic Conference) இஸ்லாமிய அமைப்புக்கள் மாநாட்டின், மலேசியா உச்சிமாநாட்டில், சிரிய ஜனாதிபதி, பஷர் அசாத் கூறினார்: "ஈராக்கில் நடத்தப்பட்ட "விடுதலை" போர், ஈராக்கிய குடிமகனை, அரசு அமைப்புக்கள், நிறுவனங்கள், இறையாண்மை, கெளரவம், உணவு, தண்ணீர் மற்றும் மின்வசதி இவற்றிடமிருந்து விடுதலை செய்து விட்டது.... ஈராக்கிய குடிமகன், வாழ்க்கை என்ற வெகுமதியிலிருந்து விடுவிக்கப்பட்டான், விதிவிலக்கு இன்றி, ஒவ்வொன்றிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டான் என்று உலகம் கண்டுபிடித்து இருக்கிறது. போர் ஏற்படுவதற்கான காரணங்கள் நம்பிக்கையற்ற தன்மையை கொண்டிருந்தன என கண்டுபிடித்துள்ளது."

இந்த தேசிய சொல்லாடல் ஒருபுறமிருக்க, மற்ற அரபு நாடுகளைப் போலவே, சிரியாவும் வாஷிங்டனுடன் மோதத் தயாராக இல்லை. உறுதியில்லாமல் ஒருவர் ஐயப்படும் வகையில், டமாஸ்கஸ், அமெரிக்கவிடம் தாழ்ந்து நின்றால், ஈராக்கின் கதியை, தான் தவிர்க்கலாம் என நம்புகிறது.

ஐரோப்பியர்களின் பார்வையில், ஐ.நா. ஆதரவானது, அரசு செயலாளர் கொலின் பவலுடைய கரங்களை, துணை ஜனாதிபதி டிக் செனி, பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் தலைமையில் பென்டகனின் "பருந்துகள்" எனப்படும் குழுவிற்கு எதிராக, வலுப்படுத்தும் என்ற காரணி உள்ளது. ஐரோப்பாவில் தனக்கு ஒத்த நிலையில் உள்ளவரிடம், பிளேயர், வாஷிங்டனுடன் ஒத்துப்போய் செயல்படுவதுதான், கூடுதலான ஆக்கிரமிப்பு வெளியுறவு கொள்கைகளை செய்யக்கூடிய பென்டகனுக்குள்ளே உள்ள ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுப்போரை தடுக்கும் வழியாகும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

புஷ் நிர்வாகத்தில், ரம்ஸ்பெல்ட் சற்றுக்குறைவான மதிப்பிற்கு உட்படுத்தப்பட்டாலும், படாவிட்டாலும், வாஷிங்டனுடைய இராணுவ பேரவாக்கள், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் கோழைத்தனத்தால், ஊக்குவிக்கத்தான் படும். புஷ்ஷினால் "தீமைகளின் அச்சாணி" எனப்பட்ட சிரியா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக கிளம்பியுள்ள அச்சுறுத்தல்கள், இன்னமும் கூடுதலான இறுமாப்புடன் வெளிப்பட்டு, அமெரிக்காவின் போர்க்கல ஓசைகளுக்கு, பெரிய நாடுகளும் விதிவிலக்கு ஆக்கப்படமாட்டா.

பாதுகாப்புக்குழுவில் வாக்கெடுப்பு நடந்த அன்றே, வாஷிங்டன், அச்சுறுத்தும் திறனுடையது எனக் கருதும் எந்த நாட்டின்மீதும் தூண்டுதலின்றிப் போரை தொடக்கும் அதிகாரத்தை தனக்குத்தானே வழங்கிக் கொள்ளும், தன்னுடைய "தடுப்புப் போர்" கோட்பாட்டை, கலிஃபோர்னியாவில் புஷ் மீண்டும் வலியுறுத்திப் பேசினார். "அமெரிக்கா ஒரு புதிய மூலோபாயத்தைப் பின்பற்றி வருகிறது. தாக்குதல்கள் வரும்வரை இனி காத்திருக்க மாட்டோம். நம்முடைய விரோதிகள் நம்மை தாக்க வருமுன்னரே, நாம் அவர்களைத் தாக்கிவிடுவோம்." என உரைத்தார். ஆசியப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, கலிஃபோர்னியாவின் கவர்னராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள, ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நிகருடன் ஒரே மேடையில் இருந்தபொழுது இவ்வரையை நிகழ்த்தினார். இந்தப் பேச்சைப்பற்றி குறிப்புக் கொடுத்த நியூயோர்க் டைம்ஸ், பிந்தையவருடைய "'Terminator' திரைப்படங்கள், உலகெங்கிலும் அமெரிக்காவை பற்றிக் குறிக்கும் தோற்றம் வெள்ளை மாளிகை அறிக்கைகளைவிடக் கூடுதலான தெளிவுடன் உள்ளதாகக் கூறுகிறது.

ஐ.நா.வாக்கெடுப்பு நடந்த அன்றே, NATO விற்கு அமெரிக்க தூதரான, நிக்கலஸ் பர்ன்ஸ், அட்லான்டிக் கடந்த இராணுவக் கூட்டு உடன்படிக்கை உறுப்பினர்களின் கூட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய இராணுவ மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு சவால்விடும் வகையில் அழைத்தார். ஐரோப்பிய ஒன்றியம், புதிய அரசியலமைப்பு உடன்படிக்கையில், கூடுதலான பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதிக்க இருக்கையில், இவ்வழைப்பு கொடுக்கப்பட்டது.

அத்தகைய திட்டங்கள், "அட்லான்டிக் கடல் கடந்த உறவுகளிடையே பெரும் ஆபத்துக்களில் ஒன்றை" பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று பர்ன்ஸ் தாக்கிப்பேசினார். பிளேயரின் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவ முன்முயற்சிக்கான ஆதரவும், ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான ஆர்வமும், வாஷிங்டனை கோபமடையச் செய்துள்ளதுடன், பிளவு ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கைகளையும் விடச்செய்தது. ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் "பாலம்" போல் செயல்பட நினைக்கும், பிளேயர் அரசாங்கத்தின் முயற்சிகளையும், வாஷிங்டனுக்கு கப்பம் செலுத்தும் சிற்றரசுதான் தன்னுடையநாடு என்பதை பிளேயர் ஒரு கணமேனும் மறந்தால்கூட புஷ் நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது.

ஐரோப்பிய நாடுகளும், ஐ.நா.வும் ஒருவேளை அமெரிக்க ஆக்கிரமிப்பு வெறிக்கு தடையாகவோ, சமன்செய்யும் மாற்றாகவோ இருக்கலாம் என்று கருதிய சக்திகளுக்கு, பாதுகாப்புக் குழுவில் சமீபத்திய நெருக்கடி, அழிவுதரும் எதிர் பதிலாகப்போய் விட்டது. மீண்டும் ஒருமுறை ஐ.நா. ஏகாதிபத்திய நாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின் வளைந்து கொடுக்கும் கருவி என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

போருக்கும், காலனித்துவத்திற்கும் எதிர்ப்பு, வாஷிங்டன், லண்டன், பாரிஸ், பேர்லின், மொஸ்கோ ஆகியவற்றுடனான மோதலில்தான் வளர்க்கப்படமுடியுமே ஒழிய, அவற்றோடு ஒத்துழைப்பு கொடுத்து அல்ல, அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தாலும் ஏதேனும் ஒன்றுடன் சேர்ந்துக்கொண்டாலும் அல்ல. அதன் அர்த்தமாவது உழைக்கும் மக்களின் சர்வதேச இயக்கத்தை, போருக்கு வகைசெய்யும் பொருளாதார மற்றும் சமுதாய அமைப்புக்கு காரணமாக உள்ள முதலாளித்துவத்தை எதிர்க்கும் மற்றும் பொருளாதார வாழ்வின் மையமாக, மக்களுடைய இன்றியமையாத தேவைகளான வேலைகள், கெளரவமான ஊதியங்கள், வீட்டுவசதிகள், சுகாதார மையங்கள், கல்வி இவற்றை வைக்கும் புதிய சமூக ஒழுங்கை உருவாக்கும், வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதுடன் ஒன்றிணைக்க வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved