World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraqi Communist Party joins Washington's puppet administration in Baghdad

பாக்தாதில் வாஷிங்டன் பொம்மை நிர்வாகத்தில் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்து கொள்கின்றது

By Peter Symonds
29 July 2003

Back to screen version

ஸ்ராலினிச வரலாற்றில் மிக மோசமான துரோகச் செயல்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் புஷ் நிர்வாகம் தனது நவகாலனித்துவம் மூலம் ஈராக்கை அடிமைப்படுத்தி, அதற்கு ஒரு முலாம் பூசுவதற்காக தேர்ந்தெடுத்துள்ள நிர்வாகத்தில் இணைந்துகொள்ள ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி (ICP) முடிவு செய்திருப்பது வரலாறு காணாத துரோகச் செயலாகும்.

பாக்தாத் பொம்மை நிர்வாகத்தில் சேர்ந்து கொள்ள ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியை வாஷிங்டன் அழைப்புவிடுத்ததுள்ளமை ஈராக்கில் எந்த அளவிற்கு அமெரிக்கா மிகுந்த ஆழமான நெருக்கடியை சந்தித்துக் கொண்டு வருகிறது என்பதற்கு சான்றாகும். அமெரிக்கா தலைமையில் துருப்புக்கள் ஈராக் மீது படையெடுத்து வந்து மூன்று மாதத்திற்கு பின்னரும், அந்நாட்டில் அமெரிக்க துருப்புக்கள் மீது தினசரி கெரில்லா தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன், உணவு, தூய்மையான குடி தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத எதிர்ப்பு உணர்வு கொண்டிருக்கும் மக்களிடம் இருந்து அதிகரித்துவரும் எதிர்ப்பை அமெரிக்க துருப்புக்கள் சந்திக்கின்றது.

அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பை கைவிட வேண்டும் என்று ஈராக் மக்கள் தெருக்களில் அணிவகுத்து வந்து கோரிக்கை விடுக்கின்ற நேரத்தில் காட்டிக் கொடுக்கும் நிர்வாகம் என்று பரவலாகக் கண்டிக்கப்பட்டு வரும் பொம்மை நிர்வாகத்தில் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்திருக்கின்றது. ஜூலை13ம் திகதி நடைபெற்ற அந்த பொம்மை நிர்வாகத்தின் முதலாவது கூட்டத்தில் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஹமீத் மஜீத் மூசா (Hamid Majid Mousa) கலந்து கொண்டார். வெளிநாட்டு ஈராக்கியர்கள், வர்த்தகர்கள், மத தலைவர்கள், மோசமான கிரிமினல்கள், அரசியல் ஏமாற்றுவாதிகள், அஹமத் சலாபியைப் போன்ற குற்றம்சாட்டப்பட்ட மோசடிப் பேர்வழிகளின் அருகில் மூசா அமர்ந்திருந்தார். இவர்கள்தான் ஆளும் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.

ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தனது முடிவை நியாயப்படுத்துவதற்கு முயன்றிருக்கின்றது. இத்தகைய ஆளும்குழு அமைக்கப்பட்டிருப்பதே ஈராக்கில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கும், ஈராக்கின் சுதந்திரத்திற்குமான ஒரு படி என ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இப்படி இந்த ஸ்ராலினிஸ்டுகள் செய்வதன்மூலம் வெள்ளை மாளிகை போக்கிரிக் கும்பல் ஈராக் மீது சட்ட விரோத படையெடுப்பு நடத்தியதற்கு கூறிவந்த சாக்கு போக்குகளை திரும்ப கூறுகின்றது. ஈராக் மக்களை விடுவிப்பது எப்போதுமே வாஷிங்டனின் நோக்கமாக இருந்ததில்லை. அந்த நாட்டை பிடித்துக்கொண்டு அதன் வளங்களை சூறையாடி, மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவதே அதன் நோக்கமாகும்.

ஆளும்குழுவில் இடம் பெற்றதன் மூலம் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோத போரை சட்டபூர்வமாக்கியுள்ளதுடன், ஈராக்கில் அமெரிக்காவின் ஆட்சிக்கு தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. எதிர்ப்பு எதுவும் தோன்றினால் அதை காட்டு மிராண்டித்தனமான ஒடுக்கு முறைகள் மூலம் அடக்குவது, மற்றும் அமெரிக்க நிறிவனங்கள் ஈராக்கின் பொருளாதாரத்தை கையகப்படுத்திக் கொண்டு சூறையாடுவது, இதற்கெல்லாம் மேலாக ஈராக்கின் பரவலான எண்ணெய் வளத்தை பிடித்துக் கொள்வது உட்பட, வாஷிங்டனின் கொள்கைகளுக்கு ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது முழு அரசியல் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது.

ஆளும் குழுவில் தான் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது ஈராக்கை பிடித்துக் கொண்டிருக்கின்ற அமெரிக்க படைகளிடமிருந்து ஒரு சலுகையை வலிய பெற்றுள்ள ஒரு வெற்றி என்பது போல் சித்தரிப்பதற்கு முட்டாள்த்தனமாக ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி முயல்கின்றது. ஹமீத் மஜீத் மூசா தனிப்பட்ட முறையில், புஷ் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள மிகத்தீவிரமான இராணுவவாத சக்திகளோடு நெருக்கமாக உறவு கொண்டிருக்கும் வாஷிங்டனின் நிர்வாகி பெளல் பிரேமரை (Paul Bremer III) சந்தித்துடன், தனது கட்சி நிர்வாகத்தில் இடம் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார். ''இந்த அரசியல் நடைமுறையில் எங்களது கட்சியை ஓரம்கட்டி விடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இறுதியில் அந்த முயற்சிகள் மிகவும் வருந்ததக்க வகையில் தோல்வி அடைந்தன.'' என்று ஹமீத் மஜீத் மூசா ஈரான் நாட்டு செய்திப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான தாரிக் அல் -சாப் (Tareeq Al-Shaab) தனது தலையங்கத்தில், ஆலோசனைக்குரிய ஒரு ''அரசியல் குழு'' விற்கு பதிலாக குறைந்த அதிகாரங்களை கொண்ட ''ஆளும் குழு'' உருவாக்கப்படவேண்டும் என பிரேமர் நிர்ப்பந்திக்கப்பட்டதாக அதிக அளவிற்கு விளக்கம் எழுதியுள்ளனர். ஆனால் எந்த அளவிற்கு வார்த்தை ஜாலங்கள் காட்டப்பட்டாலும், ஈராக்கில் அமெரிக்க ஆட்சிக்கு எதிராக உருவாகி வரும் எதிர்ப்பை ஒடுக்கவும், கட்டுப்படுத்துவதற்கும் காலனித்துவ பாணியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நிர்வாகக் குழுவுடன் இணைந்து கொள்வதற்கு ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி இணங்கியிருக்கின்றது என்ற ஓர் உண்மையை மறைத்துவிட முடியாது. நிர்வாகக் குழுவின் முடிவுகளை ரத்து செய்கின்ற அதிகாரம் உள்ளடங்கலான எல்லா அதிகாரங்களையும் பிரேமர் தனது கையில் வைத்திருக்கிறார். மேலும் இது நியமனம் செய்யப்பட்டிருக்கும் நிர்வாகக் குழு வாஷிங்டன் சொல்லுகிறபடி செயல்பட தவறுகின்ற எந்த உறுப்பினரையும், அல்லது எல்லா உறுப்பினர்களையும், அல்லது அவர்களது சேவைகள் இனி தேவையில்லை என்று கருதப்படும் வகையில் அந்த நிர்வாகக் குழுவையோ, உறுப்பினர்களையோ ஒட்டுமொத்தமாக அல்லது தனித்தனியாக வாஷிங்டன் பதவி நீக்கம் செய்துவிட முடியும்.

ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவிற்கு ஒரு ஆழ்ந்த ஆராய்வு தேவையில்லை. பல ஆண்டுகளாகவே வாஷிங்டன் தயவில் இயங்கிக் கொண்டிருக்கின்ற பல்வேறு ஈராக்கிய முதலாளித்துவக் குழுக்களின் ஒரு பகுதியாகத்தான் ஸ்ராலினிஸ்டுகள் செயல்பட்டு வருகிறார்கள். 1998ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஈராக் விடுதலை சட்டத்தின் (1998 Iraq Liberation Act) கீழ் நிதிபெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆறு அமைப்புக்களில் ஒன்றாக, ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி முறையாக அங்கீகரிக்கப்படவில்லையே தவிர, அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட குழுக்களோடு ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக குர்திஸ்தான் போராளி அமைப்புக்களான குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சி (Kurdish Democratic Party -KDP) மற்றும் குர்திஸ்தான் தேசபக்தி யூனியன் (Patriotic Union of Kurdistan -PUK) ஆகியவற்றுடன் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கமான உறவுகொண்டு செயல்பட்டு வந்திருக்கின்றது.

அமெரிக்கா படையெடுத்து வருவதற்கு முன்னர் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தனது பின்னடிப்பை தெரிவித்து, ஐக்கிய நாடுகள் சபையும் மற்றும் சர்வதேச சமூகமும் போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால் பாக்தாத் வீழ்ச்சியடைந்ததும் உடனடியாக தனது மெல்லிய எதிர்ப்பையும் கைவிட்டுவிட்டு பாத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததை தங்களுக்கு வெற்றி என்று கூறிக்கொண்டது. குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சி, குர்திஸ்தான் தேசபக்தி யூனியன் மற்றும் இதர அமெரிக்க ஆதரவு குழுக்களோடு இணைந்து கொண்டு அமெரிக்கப் படைகள் ஈராக்கை பிடித்துக் கொண்டதன் சில அம்சங்களை ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்ததுடன், ஐ.நா சபையின் தலையீட்டுடன் இடைக்கால நிர்வாகத்தை நிறுவுவதற்கு தேசிய அளவில் மாநாடு நடத்த வேண்டும் என்று ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் வாஷிங்டன் அத்தகைய மாநாடு எதையும் நடத்த முடியாது என்று அறிவித்து, ஐ.நா. சபையின் ஆதரவோடு ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்ததுடன், இந்த அமைப்புக்கள் எல்லாம் மிக வேகமாக வாஷிங்டனது நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டன. இந்த அமைப்புக்களை ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியும் பின்தொடர்ந்தது.

நிர்வாகக்குழு இன்னும் அதன் உறுப்பினர்களுக்கு அமைச்சக பொறுப்புக்களை பிரித்துக் கொடுக்கவில்லை. மெளசாவிற்கு எத்தகைய திட்டவட்டமான பொறுப்பு வழங்கப்பட்டாலும், அமெரிக்கப் படைகள் ஈராக்கை பிடித்துக்கொண்டதற்கு எதிராக உருவாகிக் கொண்டிருக்கும் எதிர்ப்பை ஒடுக்குவது என்பதில் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தனது உடன்பாட்டை உறுதி செய்திருக்கிறது. அண்மையில் ஈராக்கின் எண்ணெய் தொழிற்துறையை தனியாருக்கு அமெரிக்கா விற்றது தொடர்பாக ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் சலாம் அலியிடம் (Salam Ali) கேள்வி கேட்டபோது, அதற்கு பதில் அளிக்காமல் அவர் நழுவினார். இவ்வாறு தனியார் மயமாக்குவதை அவர் எதிர்க்கவில்லை. ஆனால் ''தங்களது இவ்வளங்களை வைத்திருக்கும் அதிகாரம்'' ஈராக் மக்களுக்கு இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

1958ம் ஆண்டு ஈராக்கில் மன்னர் ஆட்சி முடிவிற்கு கொண்டுவரப்பட்டதும் கொண்டாடப்படும் வகையில் ஜூலை 16ம் திகதி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தங்களது கட்சியின் கொள்கைகள் தொடர்பாக வெட்கப்படவில்லை. ஒரு மின்சாரப் பொறியாளரான பாலே காதிம் (Faleh Kadhin) நியூயோர்க் டைம்ஸ் நிருபரின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது வெளிப்படையாக ''நாங்கள் சந்தை பொருளாதாரத்தை விரும்புகிறோம்'' என குறிப்பிட்டார். ஏதாவது ஒரு வகையில் சமுக பாதுகாப்பு இருக்கவேண்டும். ஆனால், தொழிற்துறை சொத்துக்கள் அரசுவசம் இருக்கவேண்டும் என்ற பிரச்சனைக்கு இடம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இதர கட்சி உறுப்பினர்களும் அதற்கு உடன்பட்டனர். ''தனியார்துறைக்கு அதிகாரம் தருவதற்கு நாங்கள் விரும்புகிறோம்'' என்று மிகப்பெருமையாக அபு சலா என்ற ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தெரிவித்தார்.

ஒரு வரலாற்று காட்டிக்கொடுப்பு

ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகத்தால் ஈராக்கில் நிலவுகின்ற அரசியல் குழப்பம் மேலும் சிக்கலாகும் என்பதில் சந்தேகமில்லை. குறைந்தளவு காலத்திற்காவது அமெரிக்கா ஈராக்கை பிடித்துக் கொண்டதற்கு எதிராக வளர்ந்து வருகின்ற மக்களது எதிர்ப்பு உணர்வை பிற்போக்குவாத இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் உடனடியாக தமக்கு சாதகமாகபயன்படுத்திக் கொள்ளும். அமெரிக்காவின் ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்து ஈராக்கில் நிலவும் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு முற்போக்கான தீர்வுகாண விரும்புகின்ற ஈராக்கியர்கள் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை ஆழமாக, தீவிரமாக விமர்சனக் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்தாக வேண்டும்.

ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி, ஈராக்கை அமெரிக்கா பிடித்துக் கொண்டதில் நேரடியாக இணைந்து கொள்வது மார்க்சிசத்தால் உருவான விளைவு அல்ல, மாறாக அதற்கு நேர் எதிர்மாறான ஸ்ராலினிசத்தால் ஏற்பட்ட விளைவு ஆகும். ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தவறான அடிப்படையில் தன்னை ''சோசலிஸ்ட்'' என்றும் ''கம்யூனிஸ்ட்'' என்று கூறிக்கொண்டாலும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தை கொண்ட ஒரு போராட்டத்தை அடித்தளமாக கொண்டதில்லை. ஆனால் ஆரம்பத்திலிருந்து அது ஈராக் தொழிலாளர்கள் நலன்களை ஏதாவதொரு வகையில் முதலாளித்துவ குழுவிற்கு அடிமைபடுத்தவே முயன்று வந்திருக்கின்றது.

ஈராக்கில் 1934ம் ஆண்டு ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு கம்யூனிச அகிலத்தோடு இணைக்கப்பட்டபோதே மாஸ்கோவில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் மார்க்சிசத்தின் அடிப்படை முன்னோக்கான சோசலிச சர்வதேசியத்தை ட்ரொட்ஸ்கிசம் என்று நிராகரித்து, அதற்கு பதிலாக ''பிற்போக்குவாத தேசியவாத முன்னோக்கான ''தனி ஒரு நாட்டில் சோசலிசம்'' என்பதை தழுவிக்கொண்டது. அடுத்த நான்கு ஆண்டுகளில், 1936முதல் 1938வரை மோசமான மாஸ்கோ விசாரணைகள் என்பதன் கீழ் தங்களுக்கு தங்களது கொள்கைகளுக்கு எதிரானவர்களை ஒடுக்கும் நோக்கத்தோடு ஸ்ராலினும், அவரது கூட்டாளிகளும் ஒரு தலைமுறையைச் சார்ந்த புரட்சித் தலைவர்களினது முக்கிய பிரதிநிதிகளையும், தொழிலாளர்கள், மற்றும் அறிவு ஜீவிகளையும் சோவியத் யூனியனிலும் சர்வதேசியரீதியாகவும் கொன்று குவித்தார்கள்.

பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில் ''தனி ஒருநாட்டில் சோசலிசம்'' என்ற தத்துவத்தின் இணையான ஒரு அம்சமான இரண்டுகட்ட தத்துவம் என்ப்படுவதை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பிரகடனப்படுத்தினார்கள். இந்த தத்துவம் தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அரசியல் பங்கை நிராகரித்தது. ரஷ்ய புரட்சிக்கு முன்னர் லெனினும், ட்ரொட்ஸ்கியும் எதிர்த்த மென்ஷிவிக்குகளைப்போல், மிகவும் தாமதமாக முதலாளித்துவ வளர்ச்சி கண்டு வருகின்ற நாடுகளில் முதலாளித்துவப் புரட்சி, தேசிய சுதந்திரம், ஜனநாயக உரிமைகள், நிலச்சீர்திருத்தம் போன்றவை தேசிய முதலாளித்துவ வர்க்கத்தால் செயற்படுத்தப்படும் என்று ஸ்ராலினிஸ்டுக்கள் வலியுறுத்தி வந்தார்கள். சோசலிசம் ''இரண்டாவது கட்டத்திற்கு'' நீண்ட எதிர்காலத்திற்கு பின்தள்ளப்பட்டதுடன், தொழிலாள வர்க்கம் முற்போக்கான முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவிற்கு உதவியும், ஆதரவும் தருவதை தவிர வேறொன்றும் செய்யமுடியாது என இக்கொள்கையில் விளக்கப்பட்டது.

இந்த முன்னோக்கிற்கு நேர் எதிர்மாறாக ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட நிரந்தர புரட்சித் தத்துவம், ஏகாதிபத்திய யுகத்தில் முதலாளி வர்க்கம் அடிப்படையிலேயே எவ்விதமான முற்போக்கான பங்கையும் வகிக்க முடியாது என தெளிவுபடுத்தியது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடுகளில் தேசிய சுதந்திரத்திற்கும் மற்றும் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை விவசாயிகளுக்கு தலைமைதாங்கி நடத்திச் செல்லுகின்ற கடமை தொழிலாள வர்க்கத்திற்கே உண்டு. அத்துடன் அதிகாரத்தை கையில் எடுப்பதன் ஊடாக ஏகாதிபத்தியத்திற்கும் தேசிய முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தையும் அது நடாத்தவேண்டும். அதிகாரத்தை கைப்பற்றியதும், நிதியை தேசியமயமாக்கல் மற்றும் அடிப்படை தொழிற்துறையை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கொண்டுவருவதுபோன்ற சோசலிச கடமைகளை செய்வதற்கான பணிகளில் தொழிலாள வர்க்கம் விரைவாக ஈடுபடவேண்டியது அவசியம் என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார்.

1958 ஜூலை மாதம் இராணுவத்தில் ஒரு பிரிவினர் மன்னராட்சியை வெளியேற்றிய பின்னர் அதன் தொடர்ந்த நிகழ்வுகளில் ஸ்ராலினிஸ்ட்டுகளின் இரண்டு கட்ட தத்துவம் ஈராக்கில் பேரழிவை சந்திக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கு முந்தைய அரண்மனை ஆட்சி கவிழ்ப்புக்களை போன்று இல்லாமல் சுதந்திர அதிகாரிகள் குழுவால் செய்யப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு மத்திய கிழக்கு முழுவதிலும் வளர்ச்சியடைந்த காலனித்துவ எதிர்ப்பு போக்குகளாலும் மற்றும் எகிப்தில் நாசர் போன்ற தேசிய தலைவர்கள் உருவாகியதாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. ஈராக் மன்னராட்சி பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஒரு கருவி என்று மக்களால் வெறுக்கப்பட்டதுடன், 1940 களிலும் மற்றும் 1950 களிலும் பரந்த எதிர்ப்பு இயக்கத்தின் இலக்காக இருந்தது.

ஆனால் பிரிகேடியர் அப்துல் கரீம் காசிம் (Abdal-Karim Qasim) தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய அரசு, இதர மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அதன் மற்றைய அரச்களைப்போல் ஈராக் மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கைத்தரத்தையோ அல்லது ஜனநாயக உரிமைகளை தருவதற்கு வல்லமை இல்லாததாக இருந்தது. இத்தகைய கோரிக்கைகளுக்கு சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றி அமைப்பது தேவையாகும். முதலாளித்துவ தலைவர்களான காசிம் மற்றும் நாசர் போன்றவர்கள் சொத்து உரிமை நலன்களுடன் கட்டுப்பட்டுள்ளதுடன், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வல்லமை இல்லாதவர்கள். சில நேரங்களில் காசிமிடம் பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகள் காணப்பட்டாலும், இலாப நோக்கத்திற்கு எதிரான எவ்வித செயல்பாட்டிற்கும் எதிரான மிகக் கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

1958ற்கு பின்னர் ஈராக்கில் நடைபெற்ற சம்பவங்கள், இந்தோனேஷியாவில் அதற்குப்பின்னர் 1965-66ம் ஆண்டு CIA ஆதரவோடு நடைபெற்ற இராணுவ புரட்சியின் துயரமிக்க நிகழ்ச்சிகளை போன்று அமைந்திருக்கின்றது. இரண்டு நிகழ்வுகளிலும் ஸ்ராலினிச கட்சிகள் முற்போக்கு முதலாளித்துவ தலைவர்கள் என்று கூறிக்கொண்டவர்களிடம் தொழிலாள வர்க்கத்தை அடிமைப்படுத்தி, இந்த செயல் மூலம் தங்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவை பெருக்கிக் கொண்டனர். சுதந்திரமான போராட்டம் எதையும் நடத்துவதை கட்டுப்படுத்தி, மிகுந்த பிற்போக்கான சக்திகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கு ஸ்ராலினிச கட்சிகள் வழிவகுத்தன.

காசிம் இராணுவ ஆட்சிக்குழுவினர், மக்களது ஆதரவை கணிசமான அளவிற்கு பெற்றிருந்த ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியை பெருமளவில் சார்ந்திருந்தனர். மன்னராட்சி காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் அடக்கு முறைகள் மேற்கொள்ளப்பட்ட போது அவற்றை சமாளித்து நின்றதால் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுமக்களது கவனத்தை வெகுவாக கவர்ந்ததுடன், பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புக்கள் மிக வேகமாக உருவாக்கப்பட்டன. அறிவிஜீவிகள், மற்றும் இராணுவத்தில் சில பிரிவுகளைச் சார்ந்தவர்களால் ஆதரவளிக்கப்பட்ட ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் எதிர்ப்பு இயக்கத்தில் முக்கிய ஆளுமையை கொண்டிருந்தது. இந்த பரந்த போராளிகள் குழுவில் 10,000 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர்.

மறுபக்கத்தில், இராணுவ ஆட்சிக்குழுவின் தலைவர் காசிம், தனது சுதந்திர அதிகாரிகள் குழுவிலேயே பிளவுகளை சந்தித்தனர். அவருக்கு எதிரான இராணுவ தளபதி அப்துல் சலாம் ஆரிப் (Abdal-Salam Arif) தலைமையில் இயங்கி வந்த அதிகாரிகள் குழு ஈராக் நாசரின் ஐக்கிய அரபு குடியரசில் (United Arab Republic-UAR) சேரவேண்டும் என்று வலியுறுத்தியது. ஐக்கிய அரபு குடியரசு 1958ம் ஆண்டு எகிப்தும், சிரியாவும் இணைந்து உருவாக்கப்பட்டது. ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு ஜெனரல் அப்துல் சலாம் ஆரீப்பிற்கு எதிராக காசிம் செயல்பட்டார். ஆரீப் இராணுவத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். பல்வேறு வலதுசாரி தேசியவாதிகள் அரபு நாடுகள் ஐக்கிய மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கள் ஆகியவை ஆரிபை ஆதரித்தன. பாத் கட்சியும் காசிமிற்கும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு எந்த விதமான முயற்சியையும் அப்போது மேற்கொள்ளவில்லை. 1959ம் ஆண்டு பாத்தாத்தில் நடைபெற்ற மே தின பேரணியில் 300,000 மக்கள் கலந்து கொண்டனர். ஆட்சியில் தனது பிரதிநிதிகள் இடம் பெறவேண்டும் என்பதே அப்போது ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கோரிக்கையாக இருந்தது. அந்த நேரத்தில் காசிம் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தார். ஆனால் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு தொடர்ந்து ஆதரவு தருவதை உத்திரவாதம் செய்து தரும் முயற்சியாக காசிம் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நசிகா அல்- துல்யாமிக்கும் (Naziha al-Dulaymi) மற்றும் இரண்டு ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபிகளுக்கும் அமைச்சர் பதவிகளை வழங்கினார்.

ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஆட்சி அதிகாரத்தை தன்கையில் எடுத்துக் கொள்வது குறித்து விவாதித்திருக்கிறது. ஆனால் இது சம்மந்தமாக ஒரு ஆய்வு அறிக்கை கீழ்கண்டவாறு விளக்கியுள்ளது. ''பொலிட் பீரோவில் (அரசியல் குழுவில்) காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றன. அரசியல் ஆதிக்கத்திற்கு வரும் முயற்சியில் கட்சி வெற்றி பெறமுடியும் என்று அரசியல் குழு ஏற்றுக்கொண்டது எனவும் , புரட்சி ஒரு முதலாளித்துவ தன்மை கொண்டிருக்கும் என்ற அதனது ஆரம்ப ஆய்வு சரியானது. கட்சி தன்னை புதுப்பித்துக்கொள்ள முடிவெடுத்ததுடன், குறைந்த பட்சம் தனது கோரிக்கைகளை வலியுறுத்துவது இல்லை என்றும் மற்றும் பொதுவாக காசிமை ஏற்றுக்கொள்ளும் வகையில் செயல்பட்டது.'' [Iraq Since 1958, Marion Farouk-Sluggett and Peter Sluggett, p.69]"]

அதை தொடர்ந்த அரசியல் நடைமுறை ஒரு கசப்பான விளைவுகளை கொண்டிருந்தது. மக்களைத் திரட்டி ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்துவிட்டது. இதன் விளைவாக பிற்போக்கு சக்திகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவதில் ஊக்கிவிக்கப்பட்டன. காசிமிற்கு சுயாதீனமான சமூக அடித்தளம் எதுவும் இல்லாததால், பிற்போக்கு சக்திகளை தன்னோடு சேர்த்துக் கொண்டு ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால், அரசாங்கம் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன இயக்கங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து, ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகைக்கு தடைவிதித்து, 1960கள் முழுவதிலும் கட்சியின் தீவிர உறுப்பினர்களை கைது செய்தபோதும் கட்சி காசிமுடம் மிக நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வந்தது. துலாமி அமைச்சரவையில் நீடித்ததுடன், 1960 நவம்பரிலேயே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

காசிமை அவரது கட்டுப்பாட்டில் இருந்த இராணுவத்தின் சில பிரிவுகள்தான் ஆதரித்தன. எனவே அவர் மிகப்பெரும் அளவில் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பலவீனமானவராகவும் காணப்பட்டார். 1959 அக்டோபரில் பாத் கட்சி கும்பல் ஒன்று 23 வயது சதாம் ஹூசேனின் தலைமையில் காசிமை கொலைசெய்வதற்கு முயன்றது. அந்த முயற்சியில் இருந்து அவர் உயிர்தப்பினார். 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாத் கட்சி ஆதரவாளின் வலதுசாரி அதிகாரிகள் குழு ஒன்று இராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு ஏற்பாடு செய்த்து. காசிமோடு கூட்டிலிருந்த ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தை முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் விட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு வெளியில் திரண்டிருந்த கூட்டம் காசிமிடம் தங்களுக்கு ஆயுதங்களை தருமாறு மன்றாடிக்கேட்டுக் கொண்டபோதும் காசிம் ஆயுதங்களை வழங்குவதற்கு மறுத்துவிட்டார்.

அதற்குப்பின்னர் நடந்த இரத்தகளரியில், பாத் கட்சி முரடர்கள் முதலில் காசிமையும் அவருக்கு நெருக்கமாக ஒத்தழைப்பவர்களையும் கொன்றனர். அதற்குப்பின்னர் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி மீது தங்களது கவனத்தை திருப்பினர். பாத்கட்சி CIA உடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டதாகவும், இந்தோனேசியாவில் மூன்றாண்டு கழித்து நடந்த சம்பவத்தை போல் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை ஆதரித்ததாகவும், அதற்கு பின்னர் CIA ஈராக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் உடனடியாக தூக்கிலிடப்படவேண்டியவர்கள் பட்டியலை பாத் கட்சியிடம் வழங்கியதாக பல தனித்தனியான ஆதாரங்கள் தெரிவித்தன. இவற்றின் விளைவுகள் மிகக்கொடூரமானவை.

''கட்சியின் அடித்தள உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களது வீடுகளில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர் அல்லது ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் துண்டுப் பிரசுரங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது போல் ''புரட்சியை பாதுகாக்க'' பயனற்ற ஆனால் துணிச்சலான முயற்சிகளில் இறங்கி தெருக்களில் அணிவகுத்து வந்த குழுக்களோடு சேர்ந்து கொண்ட கட்சி உறுப்பினர்களும், அனுதாபிகளும் சுடப்பட்டனர். ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளரான ஹூசேன் அல்ராடி (Husayn al-Radi) மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் பலர் கைது செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டனர். எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதை துல்லியமாக முடிவு செய்வது இயலாதகாரியம் ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். வெள்ளம்போல் குவிந்துகொண்டிருந்த கைதிகளை அடைப்பதற்காக விளையாட்டு மைதானங்கள், தற்காலிக சிறைகளாக மாற்றப்பட்டன. தெருக்களில் மக்கள் கொல்லப்பட்டனர், சிறைகளில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர் அல்லது போலிவிசாரணை நடத்தி கொல்லப்பட்டனர். உயிர் தப்பிய பலர் நீண்டகாலம் மிகக்கொடூரமான நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்'' [அதே நூலில் பக்கம்:86]

மாண்டவர்கள் எண்ணிக்கை 3,000 இருக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவித்தன. ''1958-க்கு பிந்தைய ஈராக்'' என்ற நூலின் ஆசிரியர்கள் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியிடன் வேறுதிட்டங்கள் எதுவும் இல்லாததது குறித்து வியப்பு தெரிவித்துள்ளனர். ஆட்சி கவிழ்ப்பு புரட்சி நடத்தப்படுவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது அதற்கு சில காலத்திற்கு முன்னரே கட்சிக்கு தெரிந்திருந்தது. குறிப்பாக கட்சி தனது சொந்த தலைவர்களையும், உறுப்பினர்களையும், பாதுகாப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ''விளக்கம் தர முடியாததாக'' அமைந்திருப்பதாக நூலாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த இயலாமை தொடர்பாக மர்மம் எதுவும் இல்லை. ஏனெனில் நிபந்தனை எதுவும் இல்லாமல் காசிமிற்கு ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அடிபணிந்துவிட்டனர். ஈராக் தலைவர் தனக்கு விரோதமானது என்று கருதுகின்ற நிலைமையிலும் மற்றும் தங்களது கழுத்தே தூக்கு மேடைக்கு செல்லுகின்ற நிலையிலும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத்தயாராக இல்லை.

பாத்திஸ்டுகளுடன் கூட்டணி

1963ம் ஆண்டு நடைபெற்ற துயர சம்பவங்களில் இருந்து ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி எந்தப் படிப்பினையையும் பெற்றுக் கொள்ளவில்லை. உண்மையிலேயே ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்குரோத்தான இரண்டுகட்ட முன்னோக்கு அடுத்த 10-20 ஆண்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டது.

1963ல் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பில் பாத் கட்சியை சார்ந்தவர்கள் முக்கிய பங்கு வகித்தாலும், அவர்கள் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. மிக விரைவாக காசிமின் எதிரி ஆரிபினால் ஒதுக்கித் தள்ளப்பட்டனர். 1950களின் ஆரம்பத்தில் சிரியாவில் செயல்பட்டுவந்த பாத் அமைப்பின் பிரிவாகவே உருவாக்கப்பட்டது. காசிமை கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து நடைபெற்ற ஒடுக்கு முறைகளில் பாத் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. பாத் கட்சியின் சொந்த மதிப்பீடுகளின் படியே கூட அந்தக் கட்சிக்கு 1963ம் ஆண்டு 850 முழு நேர உறுப்பினர்களும், 15,000 அனுதாபிகளும் தான் இருந்தனர்.

முந்தைய இராணுவ ஆதரவு பெற்ற ஆட்சிகளில் நிலவிய உள் தகராறுகள் மற்றும் மதிப்பின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியும் 1968 வரை பாத் கட்சி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியவில்லை. தனது ஆட்சி அரசியல் தனிமையை உணர்ந்துகொண்ட பாத் தலைவர் ஹசான் அல்-பக்கர் (Hasan al-Bakr) ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை நாடினார். ஈராக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகளை வழங்க முன்வந்தார். இந்த நட்பு அப்போது மாஸ்கோவில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டதுதான். அந்த நேரத்தில் சோவியத் யூனியன்தான் ஈராக்கிற்கு ஆயுத தளவாடங்களையும், பொருளாதார உதவிகளுக்குமான பிரதான நாடாக இருந்தது.

பாத் தலைவர் விடுத்த அழைப்பை ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் அந்தக் கட்சிக்கு அந்த ஆலோசனைக்கு அடிப்படையான எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. மாஸ்கோவிலிருந்து ஈராக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிர்பந்தங்கள் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈராக் தலைமை முந்தைய இராணுவ ஆட்சிகளில் இடம் பெற்றிருந்த ''முற்போக்கு நாசரிச சக்திகளை'' ஏற்றுக்கொண்டிருந்தது. பாத் ஆட்சி சோவியத் யூனியன் ஆதரவை அதிக அளவிற்கு நாடத்துவங்கியது. மாஸ்கோவின் வற்புறுத்தலால் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது கட்சி உறுப்பினர்களை கொன்று குவித்த கட்சியோடு சேருவது பாரிய அரசியல் பாய்ச்சலாக ஈராக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கவில்லை. மேலும் பாத் கட்சியை முற்போக்கானது என பிரகடனப்படுத்தியது.

இப்படி ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி பாத் ஆட்சியை முற்போக்கானது என பிரகடனப்படுத்தியமை பாத் ஆட்சியை எண்ணெய் தொழிலை அரசுடைமையாக்க முடிவெடுக்க செய்தது. 1970 களின் ஆரம்பத்தில் எண்ணெய் விலைவாசி அதிகரிப்பினால் நன்மை அடைவதை நோக்கமாக கொண்டு செய்யப்பட்ட இந்நடவடிக்கைக்கு எண்ணெய்க்கு சந்தைகளையும் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்களை தந்த சோவியத் யூனியனுடன் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்பட்டது. சோவியத் யூனியன் இந்த உறவுகளை பயன்படுத்திக்கொண்டு ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி- பாத் கட்சி ஆட்சியை பகிரங்கமாக ஆதரிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தது. 1972 ஏப்ரலில் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு அறிக்கையில் ''இப்போதைய நிலைமை மக்களது கிளர்ச்சியில் ஒரு திருப்புமுனை'' எனக் குறிப்பிட்டதுடன், பாத் ஆதிக்கம் செலுத்திய தேசிய முற்போக்கு முன்னணியில் இணைந்துகொள்ள அந்த அறிக்கையில் கட்சி கோடிட்டு காட்டியது. மே மாதம் இரண்டு மூத்த ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பாத் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதுடன், அதற்கு இரண்டு வாரங்களுக்கு பின்னர் எண்ணெய் தொழிற்துறை அரசுடைமையாக்கப்பட்டது.

ஏழு ஆண்டுகள் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய முற்போக்கு முன்னணியில் இடம் பெற்றிருந்தது. எனவே தொழிலாள வர்க்கத்தின் எதிராக பாத் ஆட்சி புரிந்த எல்லாக் குற்றங்களுக்கும் மற்றும் குர்திஸ், ஷியா இனத்தவர்கள் மீது மேற்கொண்ட ஒடுக்கு முறைகளுக்கும், ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ரீதியில் பொறுப்பு ஏற்றாக வேண்டும். பாத் கட்சி ஆட்சி தனது மேலாதிக்கத்தை பயன்படுத்தி ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆட்சியின் கொள்கைகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் ஒருபோதுமே ஆதரவில்லாத பகுதிகளான தொழிற்சங்கங்களில் கட்சி தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டது. கசப்பான முடிவு ஏற்படும் வரை ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி பாத் கட்சியோடு இடைவிடாது இறுக்கமாக இணைந்தே செயல்பட்டு வந்த்து. 1978 ஏப்ரலில் பாத் ஆட்சி ஈராக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக புதிய அடக்கு முறைகளை கட்டவிழ்த்துவிட்ட நேரத்திலும் பாத் கட்சி பதவியில் ஒட்டிக் கொண்டேயிருந்தது. 1979ம் ஆண்டுதான் அக்கட்சி பதவியிலிருந்து விலகியது.

இப்படிப்பட்ட மிகமோசமான வரலாறு படைத்த ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி வாஷிங்டனில் பொம்மை நிர்வாகத்தில் சேர்ந்து கொள்ள முடிவு செய்திருப்பது இந்தக் கட்சியின் கடந்த செயல்களை பார்க்கும்போது அது தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாகும். ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு முழுவதிலும் ஏதாவதொரு ஈராக்கின் முதலாளித்துவ பிரிவோடு இணைந்தே செயல்பட்டு வந்திருக்கின்றது. மாஸ்கோவிற்கும், வாஷிங்டனுக்கும் இடையில் பனிப்போர் நிலவிய காலத்தில் அவர்களால் ''ஏகாதிபத்திய எதிர்ப்பு'' பாவனைகளை காட்டிக்கொள்ளக்கூடியதாக இருந்தது. 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் இல்லாதுபோனதுடன், அந்த ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஆவியாகிப்போய்விட்டது. 1990கள் முழுவதிலும், மத்திய கிழக்கில் இயங்கிவந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் (PLO) இருந்து தென் ஆப்பிரிக்காவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) வரை மிகத் தீவிரமான தேசிய விடுதலை இயக்கங்கள் கூட ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எவ்விதமான எதிர்ப்பையும் கைவிட்டுவிட்டு அவற்றின் கட்டளையின்படி இயங்க ஆரம்பித்துவிட்டன.

பாத் சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவு வழங்கியதாலும், நிரந்தரமாக ஒடுக்கு முறைகளுக்கு காரணமாக இருந்ததாலும் மக்களின் கண்களின் முன் மதிப்பிழந்துபோனதால் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு அவலம்மிக்க எஞ்சிய துண்டாகியுள்ளது. எனவே மிகவும் ஒதுக்கத்தக்க கும்பலாக ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி- மாறிவிட்டது. 1990களில் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ஒதுக்கப்பட்ட அரசியல் இருப்பை கொண்டுருந்தது. 1990-91 வளைகுடாப் போருக்கு பின்னர், அமெரிக்கா, மற்றும் பிரிட்டனின் போர் விமானங்கள் கண்காணித்து வரும் ஈராக்கின் வடக்கு பகுதியில் பறக்க முடியாத மண்டலமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியில் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது. குர்திஸ் இன போராளிகள் அனுமதியோடு குர்திஸ் இனத்தவர் வாழும் பகுதியில் தனது அலுவலகத்தை அமைத்துக்கொண்டு பல்வேறு குர்திஸ் தலைவர்களை ''முற்போக்கான முதலாளித்துவத்தின்'' இன்றைய மறு அவதாரங்கள் என ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி வர்ணித்தது.

வடக்கு பறக்கமுடியாத பகுதி ஏகாதிபத்திய சதி வேலைகளின் முக்கிய பகுதியாகும். இந்தப் பகுதியை தனது தளமாக் கொண்டுதான் சலாபியின் (Chalabi) ஈராக் தேசிய காங்கிரஸ் (INC) மற்றும் ஈராக் தேசிய உடன்பாடு (INA) ஆகியவை செயல்பட்டன. இந்த இரு அமைப்புக்களுமே CIA மற்றும் இதர மேலைநாட்டு புலனாய்வு ஏஜென்சிகள் ஆதரவோடு அமைக்கப்பட்டவை. இந்த அமைப்புக்கள் எல்லாவற்றோடும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி உறவுகளை நிலைநாட்டி வந்ததுடன் நேரடியாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வந்தது. இத்தகைய விலைக்கு வாங்கக்கூடிய அனைத்துக் குழுக்களும் பாத்தாத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆளும் குழுவில் சேர இணக்கம் தெரிவித்ததும், ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதனுடன் இணைந்துகொண்டு தனது உண்மையான உருவத்தைக் காட்டிக் கொண்டது.

வெடித்து சிதறும் ஏகாதிபத்தியப் போரையும், நவகாலனித்துவ ஒடுக்கு முறையையும் எதிர்த்து போரிட விரும்பும் ஈராக்கில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், அறிவு ஜீவிகள், இளைஞர்கள் ஆகியோர் அவசியமான அரசியல் படிப்பினைகளைப் பெற்றாக வேண்டும். சோவியத் யூனியன் உடைவால் சோசலிசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடவில்லை, மாறாக உற்பத்தி பூகோளமயமாக்கப்பட்டதனால் சகல தேசியவாதத்தை அடித்தளமாக கொண்ட கட்சிக்களுக்கும் வேலை திட்டங்களுக்கும் சமாதி கட்டப்பட்டுவிட்டதையே தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இதற்கெல்லாம் மேலாக ஈராக்கிலும், மத்திய கிழக்கிலும் உலக ட்ரொட்ஸ்கிச கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் வேலைத் திட்டத்தையும் மற்றும் முன்னோக்கையும் அடித்தளமாக கொண்ட கட்சிகளை உருவாக்குவதே அவசியாமாகும். உலக ட்ரொட்ஸ்கிச கட்சி மட்டுமே ஸ்ராலினிசத்தின் துரோகங்களுக்கு எதிராக சோசலிச சர்வதேசியத்தின் அடிப்படைக் கொள்கைகளை பாதுகாத்து நின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved