World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Bush seeks UN bailout of Iraqi occupation

ஈராக்கிய ஆக்கிரமிப்பின் சுமையைக் குறைக்க ஐ.நா வின் உதவியை புஷ் நாடுகிறார்

By Bill Vann
4 September 2003

Back to screen version

ஈராக் போருக்கான படையெடுப்புகளில் ஈடுபட்டிருந்த நாட்களில் ஐ.நா தேவையற்றது என ஒதுக்கியும், இரு வாரங்களுக்கு முன்பு கூட அதன் ஆக்கிரமிப்பை "சர்வதேச நடவடிக்கையாக" செய்வதில் விருப்பமில்லை என்றும் அறிவித்த அமெரிக்க புஷ் நிர்வாகம், நிகழ்ச்சிகளின் விளைவால் அதை தான் செய்ய வேண்டியுள்ள கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்வி அடைந்து கொண்டிருக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உதவும் வகையில், கூடுதலான படைகளும், பண உதவியையும் உலக அமைப்பிலிருந்து பெறும் வகையில் புதிய தீர்மானத்தை வடிவமைப்பதற்கு, ஐ.நா பாதுகாப்பு உறுப்பு நாடுகளான ஜேர்மனியையும் மற்றவற்றையும், கடந்த புதனன்று அமெரிக்க அரசு செயலாளர் கொலின் பவலும், ஐ.நா விற்குத் தூதரான ஜோன் நீக்ரோபொன்ட் உம், ஆதரவு கோரும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

மரணம் விளைவித்த நான்கு கார் குண்டு தாக்குதல்கள் 120 உயிர்களைக் குடித்தது, அமெரிக்காவின் அரசியல் அளவிலான உற்ற நண்பரும் அதிர்ச்சியடைய வைக்கும் தன்மையில் ஷியைட் பிரிவைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டதும், ஐ.நா மற்ற உதவி நிறுவன அதிகாரிகள் நாட்டைவிட்டு ஓடியதும் என்று தொடர்ச்சியான சம்பவங்களும் 140,000 அமெரிக்கப் படைகள் அங்கு பாதுகாப்பு கொடுக்க இலாயக்கற்றவை என்ற உணர்வை அடுத்து, இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதே சமயம், அமெரிக்கப் படைகளின் மீதான தாக்குதல்களும் உயர்ந்து கொண்டிருக்கின்றன. வாஷிங்டன் போஸ்டின் செவ்வாய் கிழமைப் பதிப்பில் வந்துள்ள அறிவிப்பின்படி நாளொன்றுக்குச் சராசரியாக 10 படை வீரர்கள் "பணியில் காயமுற்றோர்" பட்டியலில் இடம் பெறுகின்றனர். இவர்களில் பலர் உறுப்புக்களை உடலிலிருந்து சிதைத்து அகற்றிவிடும் வெடி குண்டுகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள். பென்டகன் அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்று, இரண்டு அல்லது சற்று கூடுதலான எண்ணிக்கையில்தான் படைவீரர்கள் இறப்பதாக அறிவிக்கிறது என்று செய்தித்தாள் அறிவிக்கிறது. மே 1ம் தேதி, புஷ் பெரிய இராணுவத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு விட்டன என்று அறிவித்தபோதிலும், 574 வீரர்கள் காயமுற்றிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய காலகட்டத்தைவிட எண்ணிக்கையில் 24 கூடுதலாகும். "போருக்குப்பின்" இறப்பு எண்ணிக்கை இதேபோல் மே 1ம் தேதிக்கு முன் ஆக்கிரமிப்பின்பொழுது இறந்தோரை விட கூடுதலானதாகும்.

இதற்கிடையில், தற்போதைய படைச் சுழற்சி முறைகள் தொடரப்பட்டால், ஈராக்கில் உள்ள படைகள் பென்டகனால் பாதியாகக் குறைக்கப்படும் என்று, வாஷிங்டனில் வெளியாகியுள்ள அறிவிப்பு ஒன்று தெரிவிக்கிறது. இந்தப் போக்கை மீண்டும் மாற்றியமைக்க வேண்டுமென்றால், ஈராக்கியப் பணிக்கான அவகாசம் ஓராண்டிற்கும் மேலாக உயர்த்தப்படவேண்டும் என்பதுடன் National Guard, மற்றைய தயார் நிலைப்படைகளிலிருந்து வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். தற்போதைய போக்கின் தொடர்ச்சியைக் காணும்போது, ஓராண்டிற்குள் அங்கு வைக்கக்கூடிய படையினரின் எண்ணிக்கை 38,000க்கும் 64000க்கும் இடையில் வந்துவிடும் எனத் தோன்றுகிறது.

மேற்கு வர்ஜினியா ஜனநாயக கட்சியாளர் ராபர் பைர்டின் வேண்டுகோளுக்கு விடை கூறுவதற்கு தேசியச் சட்டமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தால் (Congressional Budget Office) அறிக்கை ஒன்று வழங்கப்பட்டது; அவர் "நீண்டகால ஆக்கிரமிப்பு நம்முடைய படைகளை முறிவு நிலைக்குக் இட்டுச் சென்றுவிடும் என்பதற்கு, எண்ணிக்கை ஆதாரமாக இது விளங்குகிறது" என விவரித்தார்.

நிர்வாகம், மாதம் ஒன்றுக்கு ஆக்கிரமிப்பினால் ஆகும் செலவு 3.9 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிட்டுள்ளது. இந்த தொகை, வாஷிங்டனின் பாக்தாத் ஆட்சியாளர் எல். போல் பிரேமர் சமீபத்தில் தெரிவித்த, போரினால் சீரழிந்துள்ள நாட்டைச் சீரமைக்க "பல பத்து பில்லியன் டொலர்கள்" தேவையென கூறிய செலவு அடங்காது.

கிடைக்கக் கூடிய வீரர்கள் குறையும் அளவிலும் பணம் விரைவில் கரைவதாலும் புஷ் நிர்வாகம் சர்வதேச அளவில் அரசியல் மற்றும் மனிதப் பேரழிவுப் பிரச்சனையிலிருந்து விடுபட, உதவி கோர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஐ.நா தீர்மானத்தின் நோக்கம், காலனி பாணியிலான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குப் போலிச் சட்ட நெறித் தன்மையை அளித்ததாகும். குறிப்பாக துருக்கி, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள், தங்கள் படைகளை ஈராக்கிற்கு அனுப்புவதற்கான திட்டமே இது. அத்தகைய தீர்மானம் விரும்பும் விளைவைத் தருமா என்பது வேறு விஷயம். மூன்று அரசாங்கங்களுமே தம் படைகளை ஆக்கிரமிப்பு அமெரிக்கப் படைகளோடு சேர்க்க உள்நாட்டில் கடும் எதிர்ப்பை நேர் கொண்டுள்ளன; ஐ.நா தீர்மானம் கட்டாயப்படுத்தாததைப் பயன்படுத்திக்கொண்டு, அவை படைகளை உதவிக்கு அனுப்புக எனும் வாஷிங்டன் அழைப்பை, எளிதாக மறுத்துள்ளன.

ஐ.நா வின் ஆணை மற்ற நாடுகளைக் கணிசமான அளவில், ஆக்கிமிப்பில் உள்ள ஈராக்கின் சீரமைப்பிற்கும் மற்ற செலவுகளுக்கும் நன்கொடையளிக்கத் தூண்டுதலாக இருக்கும் என்றும் கூட நம்பப்படுகிறது.

காங்கிரசிடம், ஆக்கிரமிப்புச் செலவிற்காக பன்மடங்கு பில்லியன் டாலர்களை ஒதுக்குமாறு கேட்க, நிர்வாகம் தயாராக உள்ள போதிலும், "கணிசமாக இருக்கும்" என்பதை தவிர போரின் செலவு மதிப்பீட்டைப் பற்றி தகவல் எதையும் இதுவரை வெளியிட மறுத்துள்ளது. அமெரிக்க கூட்டமைப்பு அரசாங்கம் அடுத்த ஆண்டு 488 பில்லியன் டாலர்கள் பற்றாக் குறையை வரவு செலவுத் திட்டத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலையில், வெள்ளை மாளிகை ஈராக்கியப் போருக்கான செலவு உயர்ந்து கொண்டே போவதைப் பற்றிய பொது விவாதத்தை ஒத்தி வைக்கவே விரும்புகிறது.

இராணுவ ஆக்கிரமிப்பைத் தக்கவைக்க செலவிற்குப் பணம்கேட்டு அமெரிக்கா கெஞ்சுகிறது

அடுத்த மாதம் மட்ரிட்டில் ஆக்கிரமிப்புக்கான நன்கொடைகளைப் பற்றி விவாதிக்க உள்ள கூட்டத்தில் சற்று மும்முரமாக செயல்படவேண்டும் என அமெரிக்கா கருதுகிறது. நன்கொடை அளிக்க திறனுடைய நாடுகளோ முதலிலேயே அமெரிக்காவால் ஒரு தலைப்பட்சமாக மேற்கொள்ளப்பட்டு, ஈராக்கிய மக்களிடையே வன்முறையான எதிர்ப்புப் போக்கு கொண்டுள்ள ஆக்கிரமிப்பிற்கு பண உதவி செய்வதில் தயக்கம் காட்டியுள்ளன.

"எந்த நன்கொடையாளரையும் கேளுங்கள். பாதுகாப்புத்தான் இப்பொழுது பெரிய பிரச்சனை. ஆக்கிரமிப்பு இருக்கும் வரை சீரமைப்பு முயற்சி தடைக்குள்ளாகும். நீங்கள் சுவரைக் கட்டலாம், வேலிகள் அமைக்கலாம், ஆயுதமேந்திய காவலாளிகளை வைத்திருக்கலாம். அவை பாதுகாப்பைக் கொண்டுவராது. ஆக்கிரமிப்பு தொடரும் வரை வன்முறையும் நீடிக்கும்" என ஒரு சர்வதேச உதவி நிறுவனத்தின் மூத்த அதிகாரி Finance Times க்குத் தெரிவித்தார்.

ஐ.நா வில் தூதரக முயற்சிகள் சர்வதேச ஆதரவைப் பெறுவதில் நோக்கங்கொண்டிருக்கையில், படையெடுப்பை எதிர்த்ததற்காகக் கடுமையாக தான் பேசிய நாடுகளுக்கு இப்பொழுது சலுகைகள் தரத்தயாரா என்பது பற்றி வாஷிங்டன் தெளிவாகக் கூறவில்லை; அவை அமெரிக்காவின் தடையற்ற ஆதிக்கம் ஈராக்கிலும் அப்பகுதியிலும் ஏற்படுத்தப்பட்டதால் பாதிப்பிற்குள்ளான நாடுகள் ஆகும்.

அமெரிக்க நிர்வாகத்திடமோ இராணுவ, அரசியல் கட்டுப்பாட்டைத் தானே தக்க வைத்துக் கொள்வதில் முரட்டுத்தனமான பிடிவாதம் காணப்படுகிறது. "இது முன்னரும் இப்பொழுதும் அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட நிகழ்வாகும்" என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் மக்கிலீலன் கூறியுள்ளார். பிரேமரும், அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள கூட்டணி இடைக்கால அதிகார அமைப்பும் "நம் முயற்சியைக் கண்காணிக்கின்றனர்; தொடர்ந்தும் ஈராக்கில் நம்முடைய முயற்சிகளை கண்காணித்தும் வருவர். மேலும் சில நாடுகளை பங்கு கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிக்கின்றோம்" என அவர் தொடர்ந்து கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பெரும் அவமதிப்பை, போருக்கு முன் செய்திருந்த பென்டகன் தலைமை அப்பொழுதும் சிறிதும் அசைந்து கொடுக்காத முறையில் ஈராக்கில் ஐ.நாவிற்கு பங்கு கொடுக்காததோடு அமெரிக்க படைகளின் நடவடிக்கைகளின் மீதான கட்டுப்பாட்டையும் தர மறுத்தது.

ஐ.நா வின் தலைமைச் செயலாளரான கோபி அன்னன் ஐ. நா வாஷிங்டனின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்பதற்குத் தயார் என அடையாளம் காட்டியுள்ளார்; குறைந்த பட்சம் இவை இராணுவ நடவடிக்கைகள் பற்றியதாகவாவது இருக்கும். அமெரிக்க அதிகாரிகளின் கூற்றின்படி, "சர்வதேசப் பங்கேற்பில் ஒருமித்துள்ள கட்டுப்பாட்டு அதிகாரம் இருக்க வேண்டும்; அந்த அதிகாரம் அமெரிக்காவிடம் இருக்கும்" என்று அவர் நீக்ரோபொன்ட் இடம் சமீபத்தில் தெரிவித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆயினும் கூட, பிரான்சு ஜேர்மனி போன்ற போரை எதிர்த்த நாடுகள், வாஷிங்டனின் சீரமைப்புத் திட்டத்தில் தன் பிடியைத் தளர்த்திக் கொள்ள வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக புதிய ஈராக்கிய ஆட்சி அமைப்பதிலும், ஈராக்கிய எண்ணைய் தொழிற்துறையில் மறு சீரமைப்பிலும் அதைக் காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது.

போர் தொடங்குவதற்கு முன், சற்றும் விட்டுக் கொடுக்காத அளவு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்நாடுகள் அதற்குப் பின்னர் வாஷிங்டனுடன் தங்கள் உறவைச் சீரமைத்துக்கொள்ள விழைந்தன. மே மாதம், ஐ.நாவில் ஈராக்கின் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வாக்களித்தன. அமெரிக்காவையும் பிரிட்டனையும் ஆக்கிரமிப்பு அரசுகளாக ஒப்புக் கொண்டன, ஈராக்கிய எண்ணெய் வளங்கள், மற்றைய ஆதாரங்கள் இவற்றை வாஷிங்டன் எடுத்து படையெடுப்பு செலவு செய்தலுக்கு ஒப்புதல் அளித்தன.

ஆரம்பத்திலிருந்தே, வாஷிங்டனின் ஒரு தலைப்பட்ச இராணுவ நடவடிக்கைக்கான இவற்றின் எதிர்ப்பானது, ஒரு பெரிய நாடு சிறிய, பலமற்ற, ஏழை நாட்டைத் தாக்கும் "உரிமை" பற்றிய கொள்கை அளவிலான வேறுபாடு அல்ல; மாறாக தங்களுடைய சொந்த தேசிய மூலோபாய நலனுக்கு எதிராக இருந்ததால் அவை எதிர்த்தன. பிரான்சும் ரஷ்யாவும் ஈராக்கிய ஆட்சிக்குக் கொடுத்திருந்த கடன் தொகை இழக்கும் ஆபத்தில் இருந்தவை. மேலும் தங்கள் அமெரிக்கப் போட்டியாளர்கள் பாதிப்பில் புதிய ஒப்பந்தங்களை செய்த்தில் ஈராக்கிய எண்ணெய் வளத்தைப் பயன்படுத்த முடியாமற்போன நிலையிலும் இருந்தவையாகும். மேலும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள அதன் பொருளாதாரப் போட்டியாளர்கள் சார்ந்துள்ள, எண்ணெய் குழாய்களின் மீது அமெரிக்கா தனது பிடியை இறுக்கிக் கொள்ளும் அச்சுறுத்தலை அறிந்த நாடுகள்தாம் அவை.

ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்தி தங்கள் நலன்களைப் பெருக்கிக்கொள்ள அவை முயலும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

பிரான்சின் வெளியுறவு அமைச்சர் டொமினிக் டு வில்ப்பன் பாதுகாப்பு சபையில் அமெரிக்க முயற்சிக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, புதிய தீர்மானம் தேவை எனக் கூறியிருந்தார்: "எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆக்கிரமிப்பு படைகள் பற்றிய அதிகரிப்போ, சமாளித்தலோ அல்ல. இது உண்மையாகவே ஒரு சர்வதேசப் படையை ஐ.நாவின் கட்டளையின் கீழ் அங்கு நிறுத்துவதாகும்."

ஐரோப்பிய சக்திகள் தங்கள் பக்கத்தை வலியுறுத்தாததன் ஒரு தடுப்புக் காரணம், ஈராக்கிய ஆக்கிரமிப்பை ஒட்டிய தற்பொழுது எழுந்துள்ள நெருக்கடி புஷ் நிர்வாகத்தின் சரிவையே அமெரிக்காவில் ஏற்படுத்தி அங்கு கட்டுக் கடங்காத அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதுதான். அத்தகைய நெருக்கடி உலக ஏகாதிபத்திய மையத்தில் தோன்றினால் தங்களுடைய ஆட்சிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்பதை அவை அறிந்துள்ளன.

புஷ்ஷின் பொய்கள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன

அமெரிக்க நிர்வாகத்தின்தன்மையை அது கூறுகிறபடியே ஏற்றுக்கொண்டாலும், ஈராக்கியப் படையெடுப்பு பெரும் பேரழிவுத் தோல்வி என்பதும் வெளிப்படையான திறமையின்மையின் பெரும் தோன்றல் என்பதும் தவிர்க்க முடியாமல் கொள்ள வேண்டிய முடிவுகளாகும். போர் ஆரம்பிக்க முன் புஷ், ஈராக் பயங்கரவாதிகளுக்கு "பாதுகாப்பான புகலிடமாக" மாறிவிட்டதாலும் தன்னுடைய அடர்ந்த "பேரழிவு ஆயுதங்களைப்" பயன்படுத்தி செப்டம்பர் 11,2001ல் நிகழ்ந்த தாக்குதல்களை விட தீய விளைவுகளைக் கொடுக்கும் தாக்குதல்கள் மேற்கொள்வதை நிறுத்தவும், அமெரிக்கத் தலையீடு தேவை என கூறியிருந்தார். இந்த ஆயுதக் குவிப்பினால் ஏற்படும் ஆபத்து தவிர்க்கப்பட்டு தீவிரவாதிகளின் புகலிடங்களும் அழிக்கப்பட ஆயுதங்களும் கைப்பற்றப்பட அமெரிக்கத் துருப்புக்கள் தலையிட வேண்டி இருந்தது எனக் கூறியிருந்தார்.

இப்பொழுது, படையெடுப்பு நடந்து 5 மாதங்களுக்குப் பின்னர், குவிக்கப்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்கு, அவை இருக்குமிடமே கண்டறியப்படவில்லை. வாஷிங்டனின் கருத்தின்படியே "பயங்கரவாதிகள்" பெருகிவிட்டனர், அமெரிக்கப் படைகள் மீதும், இவர்களோடு ஒத்துழைப்பு தருபவர்கள் மீதும் அன்றாடத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அமெரிக்க கூற்றுக்களை நல்ல நாணயம் என்று வைத்துக் கொண்டால், இந்த பயங்கரவாதிகளும் சதாம் ஹூசேனின் நன்கு மறைத்து வைக்கப்பட்ட இரசாயன, உயிரியல், அணுவாயுத ஆயுதக் குவியல்களும் அண்மையில் இணைந்து மாபெரும் அழிவைத் தரும் போர் தோன்றலாம் எனக் கூற முடியும்.

ஆனால் உண்மையிலேயே தொடக்கத்திலிருந்து பேரழிவு ஆயுதங்கள், பயங்கரவாதம் பற்றிய கருத்துக்கள் பொய் என்பதும், அமெரிக்க மக்களை அச்சுறுத்தி சட்ட விரோதமான கொள்ளையடிக்கும் போரைத் தொடக்க மக்களின் ஒப்புதல் பெறுவதற்காகக் கூறப்பட்டவை என்பதும் தெரிந்துவிட்டது. எந்த ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை; ஏனெனில் அவை இருந்ததில்லை; இதை பிரிட்டிஷ், அமெரிக்க அதிகாரிகள் நன்கறிவர். "பயங்கரவாதிகளைப்" பொறுத்தவரை, ஆயிரக்கணக்கான அரேபிய இளைஞர்கள் மத்தியக் கிழக்கு முழுவதிலும் இருந்து அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்க, ஈராக்கில் குழுமிய வண்ணம் உள்ளார்கள்; அன்றாடம் அமெரிக்க படைகளுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களுக்கு உந்துதல் ஈராக்கிய மக்களிடையே தங்கள் நாட்டின் மீது வெளிநாடு ஆக்கிரமிப்புச் செய்துள்ளதையடுத்து எழுந்து வளர்ந்து வரும் சீற்றம்தான்.

ஈராக்கிய பேரழிவிற்குக் காரணம், கொள்கையளவில் உந்துதல் பெற்று நிர்வாகம் தனக்குத்தானே கூறிக்கொண்ட பொய்கள்தாம்; ஈராக்கியர் அமெரிக்கப் படைகளை வரவேற்பர்; ஈராக்கின் பரந்த எண்ணெய் வளத்தை விரைவில் கைப்பற்றி படையெடுப்பு செலவை மீட்கலாம்; அமெரிக்க பெருநிறுவனங்கள் சீரமைப்பின் மூலம் பெரும் லாபம் அடையலாம், ஒருதலைப்பட்ச பலமான இராணுவ சக்தி மத்திய கிழக்கையே மாற்றலாம் ஏன் உலகையே அமெரிக்க மூலோபாய நன்களுக்கு சாதகமாக ஆக்கும் என்பன போன்றவைதான் அந்த நினைப்புக்கள்.

ஆனால் இவற்றில் எந்தக் கணிப்புக்களும் உண்மையாகவில்லை, இதன் விளைவாக ஈராக்கிய மக்களுக்கு மனிதாபிமான அளவில் பேரழிவுதான் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான தண்ணீர், மின் வசதிகள் இல்லை, கூடுதலான இளம் உயிர்கள் குழந்தைகளும் சிறுவர்களும் மடியக்கூடிய ஆபத்து. அமெரிக்க வீரர்களைப் பொறுத்த வரையில் விடுதலை செய்பவர்கள் என்ற பாராட்டைப் பெறுபவர்கள் எனக் கூறப்பட்டனர்; ஆனாலும் அன்றாடத் தாக்குதல்கள், அன்றாட உயிரிழப்புக்கள் என்று தீய கனவைத் தான் காண்கிறார்கள். இதற்கிடையில் மற்றைய அரேபிய உலகம், ஜனநாயக நெறியின்றி கைப்பொம்மை ஆட்சி ஒன்று ஏற்படுத்தப்படுவதையும் அதுவும் சிறிது கூட ஒழுங்கைப் பராமரிக்க முடியாத ஆக்கிரமிப்பையும் இகழ்ச்சியுடன் பார்க்கிறது.

எந்த ஐ.நா தீர்மானமும் இந்த அடிப்படை உண்மைகளை மாற்றப் போவதில்லை. பொய்களை அடிப்படையாக வைத்து ஆரம்பித்த போர் மற்றும் மூலோபாய நிலைகள் மற்றும் எண்ணெய் வளங்கள் இவற்றைப் படைபலத்தால் கைப்பற்றும் ஒரு குற்ற நோக்கத்தை, பாதுகாப்பு சபை தீர்மானத்தால், மனிதாபிமான திட்டமாக மாற்றிவிட முடியாது. இந்த நாட்டிற்கு அனுப்பப்படும் படை எதுவும், ஈராக்கியர்களால், அமெரிக்க ஆக்கிரமிப்பின் கூலிப் படைகளாகத்தான் கருதப்படும்.

ஈராக்கிய இராணுவ நடவடிக்கைகளில் தன்னுடைய தடையற்ற பிடியை அமெரிக்கா கொண்டிருப்பது, வரவுள்ள நிகழ்ச்சிகளுக்கு ஓர் எச்சரிக்கையாகும். ஈராக்கிய எதிர்ப்பை மூர்க்கத்தனமாக நசுக்குவதற்குப் பென்டகன் தயார் செய்து வருகிறது, ஐ.நா படை தங்கள் செயல்களைக் கட்டுப்படுத்த அது விரும்பவில்லை.

முடிவில், பல எதிர்ப்பு முயற்சிகள் விளக்கியுள்ளதுபோல், அத்தகைய கொடூரமான அடக்குமுறை இன்னமும் கூடுதலான எதிர்ப்புக்களை பரந்த அளவில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்த்து தோன்றும். இதன் விளைவாக கொடூரமான உயிரிழப்புக்கள் ஈராக்கியருக்கும், அமெரிக்கருக்கும் ஏற்படும்.

ஈராக்கில் அமெரிக்காவின் இந்த ஆழ்ந்த நெருக்கடிக்கு விடை ஐ.நாவில் நடத்தும் தூதரக குதிரை வியாபாரத்தில் காணக்கிடைப்பது அல்ல, அமெரிக்க உழைக்கும் மக்கள் சுயாதீனமாய் அரசியல் ரீதியாய் அணி திரண்டு, அப்பகுதியிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திரும்பப்பெற வேண்டும் என வற்புறுத்துவதேயாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved