World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Rwandan crisis deepens as Kagame begins seven-year term

ககாமி ஏழாண்டு பதவியை துவக்கினார் ருவண்டாவில் நெருக்கடி முற்றுகின்றது

By Alex Lefebvre
13 September 200
3

Back to screen version

வெள்ளிக்கிழமை அன்று பதவியேற்றுக் கொண்ட ருவண்டாவின் ஜனாதிபதி போல் ககாமி (Paul Kagame) ஏழாண்டுகளுக்கு பதவி வகிக்கவுள்ளார். ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற அவர், அந்த நாட்டில் எதிர்கட்சிகள் மீது தடையை விதித்துள்ளார். மேலும், இத்தேர்தலின்போது மோசடிகள் நடைபெற்றதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக சர்வதேச அளவில் பத்திரிகைகள் இந்த தேர்தல்களைப் பற்றி பொதுப்படையாக எழுதியுள்ளன. 1994 ம் ஆண்டு ருவண்டாவில் பெரும்பான்மையினரான ஹூட்டு இனத்தவருக்கும், சிறுபான்மையினரான டுட்சி இனத்தவருக்கும் இடையில் நடைபெற்ற மோதல்கள் இன ஒழிப்பாக மாறிய பின்னர் தற்போது முதல் தடவையாக ஜனநாயக அடிப்படையில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அந்த இன ஒழிப்புக்கு காரணமாகயிருந்த சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் எதையும் ககாமியின் அரசாங்கம் தீர்த்துவைக்க இலாயக்கில்லை என்பது தேர்தலின்போது நடைபெற்ற அடக்கு முறைகள் மற்றும் சமூக நிலைப்பாடுகள் தெளிவாகத் தெரிய வருகின்றது.

வாக்குப்பதிவு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஆதரவுடன் போட்டியிட்ட ககாமி 95.1 வீதம் வாக்குகளை பெற்றுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட பிரான்ஸ் மற்றும் பெல்ஜிய ஆதரவு பெற்ற ஹூட்டு இன மிதவாதியான பாஸ்டின் வசிரமங்கோ (Faustin Twagiramungu) 3.6 வீத வாக்குகளையும், மூன்றாவது வேட்பாளரான ஜோன் நெப்போமிசின் நாயின்சீரா (Jean Nepomuscene Nayinzira) 1.3 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். சில பத்திரிகைத் தகவல்களின்படி மூன்றாவது வேட்பாளர், இறைவனது உந்துதல் பெற்று தேர்தலில் போட்டியிட்டார் என்று விளக்கம் தரப்பட்டிருக்கின்றது.

தேர்தல் முடிவுகளில் எப்போதுமே சந்தேகம் ஏற்பட்டதில்லை என்று பார்வையாளர்கள் கோடிட்டு காட்டியுள்ளபோதும், ககாமி தனது எதிரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி வந்துள்ளார். 1994 க்கு பிந்தைய ருவண்டாவில் இனப் பாகுபாடுகளை தூண்டிவிடுவது மிக கடுமையான குற்றமாகும். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் ககாமி தனது எதிரியான வசிரமங்கோ ஆதரவாளர்களை கைது செய்தார். அவர்களுக்கு பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டது. மற்றும் தேர்தல் இயக்கத்தில் அவர்கள் பயன்படுத்திய துண்டுப் பிரசரங்களை பறிமுதல் செய்யப்பட்டன. ருவண்டா அரசாங்கம் வசிரமங்கோவின் தேர்தல் பிரச்சார சாதனங்களை மிகப்பெரும் அளவிற்கு பறிமுதல் செய்துவிட்டதால் அவரிடம் ஒரு சில கார்கள் மட்டுமே இருந்தன. தேர்தல் இரவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட வசிரமங்கோ தான் சிறைக்குச் செல்வதற்கு தயாராகயிருப்பதாக அறிவித்தார்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மனித நேய அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு ககாமியின் ருவண்டா தேசபக்த முன்னணியை (RPF) கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒற்றுமையின் பெயரால் கட்டுப்பாட்டை RPF இறுக்கிக்கொண்டு வருவதாக அந்த அறிக்கை குற்றம்சாட்டியது. ககாமியின் உரையை அந்த அறிக்கை மேற்கோள் காட்டியிருக்கின்றது. ''இந்த தேர்தல்களின் முடிவுகள் எனக்குத் தெரியும் என்று நான் இப்போது சொல்லிவிட முடியும். தேர்ந்தெடுக்கப்பவர்கள் நடப்பு அரசியல் செயல்திட்டமான நாட்டை உருவாக்கும் நோக்கத்தில் 100 சதவீதம் ஒன்றுபட்டு நிற்பவர்கள். ஆனால் நாட்டை பிளவுபடுத்த விரும்புபவர்கள், அந்த பிளவுபடுத்தும் நடவடிக்கையின் அடிப்படையிலேயே பதவிக்கு வர கருதுகின்றனர். அவர்களது கருத்துக்கள் எனக்குத் தெரியும். அவர்கள் தேர்ந்தெடுக்கப் படமாட்டார்கள்'' என்று ககாமி பேசியிருப்பதை மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பிரெஞ்சு மொழி தினசரியான Le Monde பத்திரிகையில் ஐரோப்பிய யூனியன் வாக்குப்பதிவு பார்வையாளராக பணியாற்றிவரும் Colette Flesch என்பவர் ருவண்ருடா தேர்தல்கள் ஜனநாயகத்தை நோக்கி எடுக்கப்பட்டுள்ள முக்கியமான நடவடிக்கை என்று பாராட்டியுள்ளார். அப்படியிருந்தும், அவர் பல வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப் பெட்டிகளில் வாக்குகள் வலிய திணிக்கப்பட்டிருப்பதை கண்டதாகவும் கூறியுள்ளார். எல்லா வாக்குச் சாவடிகளிலும் மிரட்டல்கள் நடந்ததால் போட்டி வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பவில்லை. அதற்கான காரணத்தையும் அவர்களுக்கு அனுப்பவில்லை. அத்துடன் மறு தேர்தல் இயக்கத்தில் ககாமி பொதுப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தினார் என்பதற்கு பரவலான சான்றுகள் இருப்பதாக Flesch குறிப்பிட்டுள்ளார்.

ருவண்டா தேர்தல்கள் குறித்து நியூயோர்க் டைம்ஸ் எழுதியுள்ள குறிப்பில் ''ஜனநாயகத்தின் எல்லாவிதமான அடையாளங்களும் இந்தத் தேர்தலில் காணப்படுகின்றன. நாடு முழுவதிலும் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பிற்காக அனுப்பப்பட்டவர்கள் திங்களன்று சில புகார்களை'' மட்டுமே கூறியதாக இப்பத்திரிகை எழுதியுள்ளது. ககாமிக்கான உண்மையான ஆதரவு அவரது டுட்சி சமுதாயத்தைச் சேர்ந்த வர்த்தகர்களும், அரசாங்க அதிகாரிகளும் தான் என்பதை நியூயோர்க் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் கூறிவந்த ஆலோசனைகளுக்கு ஏற்ப ருவண்டா அரசாங்கம் ககாமி தலைமையில் சர்வதேச முதலீட்டிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க முயன்று வந்தது. கம்பெனி வரிகள் குறைக்கப்பட்டன. ஏற்றுமதிகள் மீது வரிகள் நீக்கப்பட்டன. 2004 ம் ஆண்டில் தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கான சுதந்திர வர்த்தக மண்டலத்தில் ருவண்டா சேருவதற்கு திட்டமிடப் பட்டிருக்கின்றது. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை டுட்சி இனத்தவரின் தொடர்புகளை வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு அமைந்திருக்கின்றது. ருவண்டாவில் தொழில்துறை மற்றும் உற்பத்தி கட்டமைப்பு வசதிகள் இல்லை. அந்தக் குறைபாட்டை சரி செய்கின்ற வகையில் நகர்ப்புறங்களில் நன்றாக கல்வி கற்றுவிட்டு பணியில் அமர்ந்துள்ள தொழிலாளர்களை பயன்படுத்துகின்ற வகையில் முதலீடுகளை ஈர்க்கவேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் கொள்கையாகும்.

ருவண்டாவில் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் சீரழிந்து கிடக்கின்றன. ஐ.நா.வின் அதிகாரப்பூர்வமான வறுமைக்கோட்டு வரம்பான தினசரி ஒரு டொலர் வருமானத்திற்கும் குறைவாக 65 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் வாழும் காலம் 49 ஆண்டுகள் ஆகும். 9 சதவீத மக்களுக்கு எய்ட்ஸ் நோய் கண்டிருக்கின்றது. CIA உருவாக்கியுள்ள, உலக தகவல் திரட்டின்படி, எய்ட்ஸ் நோய் கண்டவர்கள் இறப்பு விகிதம் மிக அதிகமாகயிருக்கும் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, ருவண்டாவில் சராசரியாக மக்கள் வாழுகின்ற வயது 40 ஆண்டுகள் ஆகும். ஆப்பிரிக்காவிலேயே மக்கள் தொகை அதிக நெருக்கமாக உள்ள நாடு ருவண்டா. 85 சதவீதம் மக்கள் வேளாண்மையை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 1990 களின் துவக்கத்தில் சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைகளின் அடிப்படையில் கோப்பி மற்றும் தேயிலை பயிரிடப்பட்டதைத் தொடர்ந்து ருவண்டாவில் மிகக் கடுமையான மண் அரிப்பு ஏற்பட்டது. அந்நாட்டின் ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதம் கோப்பி மற்றும் தேயிலை ஏற்றுமதி மூலம் கிடைக்கின்றது. 1994 ம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலையின் நீண்டகால தாக்கங்கள் இன்னமும் மக்களுக்கு துன்பத்தை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அப்போது ருவண்டாவில் இருந்து அந்த நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் அல்லது பக்கத்து நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இன்னும் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். இந்தச் சூழ்நிலைகளில் நாட்டில் சிக்கலான பொருளாதாரம் வெளியார் செல்வாக்கை நம்பியே உள்ளது.

அருகாமையில் உள்ள கொங்கோ நாட்டில் இருந்து ருவண்டா இராணுவத்தோடு தொடர்புள்ள மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட கிளர்ச்சிக்காரர்கள் கொள்ளையடித்துக் கொண்டுவரும் கோல்டான் (coltan) மற்றும் இதர மதிப்புமிக்க கனிமம் பொருட்களை விற்பதால் ருவண்டா அரசாங்கத்திற்கு கனிசமான வருவாய் கிடைக்கின்றது. சர்வதேச நிதி நிறுவனங்கள் தற்காலிகமாக உதவுவதற்கு முன் வந்திருப்பதையும், ருவண்டா நம்பியிருக்கின்றது. ருவண்டாவின் நிதி மற்றும் பொருளாதார திட்ட அமைச்சர் டேனால்ட் கபுரேக்கா (Donald Kaberuka) ''அதிஷ்டவசமாக நமது பட்ஜெட் பற்றாக்குறை 9 சதவீதம் ருவண்டாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) உள்ளது. இந்த பற்றாக்குறையை ஆப்பிரிக்க அபிவிருத்தி வங்கியும், உலக வங்கியும், நிதி உதவி மூலம் ஈடுகட்டி தருகின்றன. இந்த பற்றாக்குறை ஆரோக்கியமானதுதான் என்பது நமக்கு கடன் கொடுப்பவர்களுக்குத் தெரியும். இந்த பற்றாக்குறை பொருளாதாரத்தின் வலுவான நிலையை காட்டுகின்றது. ஏனெனில் பற்றாக்குறை மூலம் சமூக முதலீடுகள்தான் செய்யப்படுகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% அளவிற்கு பட்ஜெட் பற்றாக்குறையை மட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் நீண்டகால குறிக்கோளாகும்'' என்று கூறினார்.

இதர ஆப்பிரிக்க நாடுகளில் சமூக செலவினங்களை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்ற இதுபோன்ற நிதி உதவி நிறுவனங்கள் ருவண்டாவிற்கு மட்டும் சகிப்புத்தன்மையோடு நடந்துகொள்வதற்கு காரணம் அமெரிக்காவிற்கும், ககாமி ஆட்சிக்கும் இடையே நிலவுகின்ற சலுகை பெற்ற உறவுகள் தான், அந்த மண்டலத்தில் பிரான்ஸ் மற்றம் பெல்ஜிய செல்வாக்கை சீர்குலைப்பதற்கு பிரதானமாக அமெரிக்கா ககாமி ஆட்சியை தனது வாடிக்கையாளனாக பயன்படுத்திக்கொண்டு வருகின்றது.

ககாமி, குழந்தைப் பருவத்திலேயே டுட்சி இனத்தைச் சார்ந்தவர் என்ற முறையில் ருவாண்டாவிலிருந்து உகாண்டாவிற்கு நாடு கடத்தப்பட்டவர். உகாண்டாவில் கிளர்ச்சி போர் சிப்பாயாக, இராணுவ புலனாய்வு அதிகாரியாக பணியாற்றி அனுபவம் பெற்றவர். டுட்சி இனத்தவர் ஆதிக்கம் செலுத்துகின்ற ருவண்டா தேசபக்தி முன்னணி (RPF) உகாண்டாவில் செயல்பட்டு வந்தது. அதில் உறுப்பினர் என்ற முறையில் அரசியலில் அவர் பிரபலம் அடைந்தார். 1990 ம் ஆண்டு அமெரிக்காவின் கான்சாஸ் பகுதியில் உள்ள போர்ட் லீவன்ஓர்த் (Fort Leavensworth) பகுதியில் இராணுவ மற்றும் மூலோபாய பயிற்சிகளை பெற்றார். பயிற்சி மற்றும் அமெரிக்கா பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆதரவு உகாண்டா படைகளின் தீவிரமான மூலோபாய ஆதரவோடு அவரது முன்னணி (RPF) 1994 இன ஒழிப்பு போதும், அதற்கு பின்னரும் ருவண்டாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அந்த இன ஒழிப்பு பிரான்சின் ஆதரவுபெற்ற ''ஹுட்டு பவர்'' ருவாண்டா அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. டுட்சி இனத்தவர்களையும், மிதவாத ஹுட்டுக்களையும் குறிவைத்து இன ஒழிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான ஹுட்டுக்கள் நாட்டிலிருந்து தப்பி ஓடினர். அவர்களில் பலரை RPF படைகள் விரட்டிச் சென்று கொன்று குவித்தன. அப்போது RPF படைகள் நடத்திய கொலைகளில் மாண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து இன்றைக்கும் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 30,000 முதல் 200,000 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் ககாமி, ''RPF அதிகாரிகள் சர்வதேச மனிதநேய சட்டங்களை'' மீறி நடந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பதவிக்கு வந்த பின்னர் RPF, அமெரிக்க சிறப்பு படைகள் கொடுத்த போர் மற்றும் எதிர்ப் புரட்சி நடவடிக்கை பயிற்சிகளை பெரிதும் பயன்படுத்தியது. பென்டகன் அதிகாரிகள் இது பற்றி கருத்து தெரிவிக்கும்போது இந்த பயிற்சிகள் சாதாரண வகுப்பறை பயிற்சிகள் தான் என்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பவை என்றும் குறிப்பிட்டார். வாஷிங்டன் போஸ்ட் நிருபர் லினே டியூக் வெளியிட்டுள்ள ஆவணம் அமெரிக்காவானது ருவண்டா படைகளுக்கு அளித்துவந்த பயிற்சி விரிவானது என்றும் அதில் போர்ப் பயிற்சியும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது சம்மந்தமாக 1997 ஆகஸ்ட் 16 அன்று டியூக் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

1996-97 ஆம் ஆண்டில் ருவாண்டா ஆதரவு பெற்ற இராணுவ நடவடிக்கையானது, பக்கத்து நாடான சைர் (Zaire) நாட்டு சர்வாதிகாரியான மெபுட்டு சேசி சிகோவை ஆட்சியிலிருந்து விரட்டுவதற்காக நடத்தப்பட்டது. அவருக்கு பிரான்சுடனும், பெல்ஜியத்துடனும் நெருக்கமான உறவுகள் நிலவின. ககாமி வாஷிங்டனுக்கு தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பின்னர் சில வாரங்களில் Zaire நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ருவாண்டாவின் தலைநகரான கிக்காலியில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அடிக்கடி ஒருங்கிணைப்பு பயணங்களை மேற்கொண்டதால், இந்த இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பயனடைந்தார்கள் என்று வாஷிங்டன் போஸ்ட் நிருபர் டியூக் எழுதியுள்ளார். மொபுட்டுவை பதவியிலிருந்து விரட்டிய சில போர்ப் படையினருக்கு அமெரிக்கா பயிற்சி அளித்திருக்க கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்ட் நிருபரிடம் தெரிவித்தனர். தற்போது கொங்கோ ஜனநாயக குடியரசு என்று அழைக்கப்படும் அன்றைய கிழக்கு சைர் பகுதியிலிருந்து விலைமதிப்பு மிக்க கனிம வளங்களை ருவாண்டா படைகள் தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளன.

2001 பிப்ரவரியில், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி புஷ் பதவியேற்றுக் கொண்ட பின்னர், ககாமி வாஷிங்டன் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். கிளின்டன் நிர்வாகத்தில் இடம்பெற்ற இராணுவ ஆதரவை நீட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அங்கு சென்றார். அமெரிக்காவின் காபந்து ஆட்சியாக, ககாமி ஆட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகின்றதுடன், புஷ் நிர்வாகத்தின் பல்வேறு பட்ட சர்வதேச கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு, ராஜ்ஜியத்துறை முக மூடியை இந்த ஆட்சி வழங்கி வருகின்றது.

மார்ச் 5 வாஷிங்டனுக்கு ககாமி பயணம் செய்தபோது, அவர் அமெரிக்க முதலீட்டாளர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். மத்திய ஆப்பிரிக்காவில் அரசியல் நிலவரம் குறித்து, ஜனாதிபதி புஷ்ஷிற்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹோண்டலிசா ரைசிற்கும் விளக்கம் அளித்தார். வெளிநாடுகளில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள கிரிமினல் நடவடிக்கைகளை மூடிமறைக்கும் முகமூடியாக செயல்பட்ட ககாமி, தான் பெற்ற கடனை திரும்ப செலுத்தினார். ருவாண்டாவில், இன அழிப்பு நடைபெற்றது தொடர்பாக, அவற்றில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பான விவரங்கள் அம்பலத்திற்கு வரத் துவங்கியதும், மூன்றாவது நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அமெரிக்க மற்றும் ருவண்டா நாட்டு குடிமக்கள் மீது, வழக்கு தொடர்வதற்கு இயலாதவாறு, விதிவிலக்கு அளிக்கின்ற உடன்படிக்கை ஒன்றில் புஷ்ஷுடன் ககாமி கையெழுத்திட்டார். இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும். 2003 மார்ச் மத்தியில் ஈராக் மீது, புஷ் நிர்வாகம் ஆக்கிரமிப்பதற்கு செய்து வந்த ஆயத்தங்களை ககாமி ஆதரிப்பதாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்.

RPF ருவண்டாவில் புரிந்த அட்டூழியங்களை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் புலன் விசாரணை செய்வதிலிருந்து தனது அரசாங்கத்தை காப்பதற்காக, ஐ.நா வில் அமெரிக்கா ஆதரவை ககாமி சார்ந்திருக்கிறார். சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற வழக்கறிஞர் கார்லா டெல் பாண்டே (Carla del Ponte) ருவண்டாவில் தலைமை அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். ருவண்டா அரசாங்கம், இன அழப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அப்போது புகார் கூறப்பட்டது. அந்த தலைமை அரசு வழக்கறிஞர், RPF ன் போர்க் குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை செய்வதை ருவண்டா அரசு தடுத்து நிறுத்தியது. அவருக்கு சாட்சிகளை விசாரிக்கவோ, ஆவணங்களை ஆராயவோ, அனுமதி அளிக்கவில்லை. ஐ.நா பாதுகாப்பு சபை, சர்வதேச கிரிமினல் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ககாமி அரசாங்கம் கட்டுப்பட வேண்டும் என்று மேற்கொள்ளும் முயற்சிகளை இதுவரை அமெரிக்கா தடுத்துக் கொண்டே வருகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved