WSWS :Tamil

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த் (David North), நவம்பர் 14, 2004 அன்று மிச்சிகன் அன் ஆர்பரில் டெட்ராயிட் மெட்ரோ பகுதி உறுப்பினர் கூட்டத்தில் உரையாற்றியதின் அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2004 தேர்தல் முடிவுகளைப் பற்றி ஆராய்ந்து, புஷ்ஷின் இரண்டாம் நிர்வாகத்தின் முதலாண்டில் அடியெடுத்துவைக்கும் நேரத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டிய முன்னோக்கை அடிக்கோடிட்டுக் காட்டுவதுதான் இன்றைய கூட்டத்தின் நோக்கமாகும். தேர்தலின் முடிவுகளினால் அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் ஆழ்ந்த முறையில் அரசியல் நிலைமையில் பாதிப்பு உள்ளது என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது. மக்களில் பரந்த தட்டினருக்கு ஜோர்ஜ் புஷ்ஷின் மறுதேர்தல் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவிற்குள்ளும், உலகெங்கிலும், ஒரு இழிவான, விரும்பத்தகாத, ஆபத்தான விஷயம் நடந்துள்ளது என்ற உணர்வு உள்ளது.

தேர்தல் நாளுக்கு முன் 2000 தேர்தலின் முடிவு புஷ்ஷிற்கு அதிருஷ்ட வசமாக இருந்தது என்றும், நெறிபிறழ்ந்த அம்முடிவு ஒருவகை இயற்கையான தூய்மைப்படுத்தல் போக்கினூடாக 2004 தேர்தலில் தானே சரிசெய்யப்பட்டுவிடும் என்றும் பரந்த முறையில் நம்பிக்கை இருந்தது. 2000ல் திருடப்பட்ட தேர்தலுக்குப் பின் நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் புஷ் மீண்டும் வெற்றி பெறுவார் என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது என்ற நம்பிக்கையைத்தான் ஊக்குவித்தது. போருக்கான புஷ்ஷின் காரணங்களும் பொய்கள் என்று அம்பலப்படுத்தப்பட்டது, படையெடுப்பினுடைய பேரழிவு விளைவுகள், வேலையின்மை உயர்ந்த தன்மை, வாழ்க்கைத் தரங்களில் பெருகிய சரிவு, அமெரிக்கா தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று (தேர்தல் பற்றிய முன்கணிப்புக்களில்) பரந்து காணப்பட்டிருந்த உணர்வு, இவை அனைத்தும், இன்னும் தொடர்புடைய சூழ்நிலைகளும், தேர்தல் தினத்தன்று தேசிய வாக்காளர் குழு புஷ் நிர்வாகம் தவறானது எனக் கண்டிக்கும் வகையில் முடிவுகளைக் கொடுக்கும் என்று பலரையும் நம்பிக்கை கொள்ள வைத்தது. இந்த நல்லவித முன் ஊக உணர்வு, ஜனாதிபதி வேட்பாளர்களுடைய மூன்று விவாதங்களிலும் வலுப்பட்டது; அவ்விவாதங்கள் புஷ்ஷின் புத்திஜீவித மட்டுப்படுத்தல்களை கடுமையாகவும், மன்னிக்க இயலாத வகையிலும் நன்கு புலப்படுத்திய முடிவுகளைத்தான் கொண்டிருந்தன.

தேர்தலுக்கு முன்பு ஊட்டம் பெற்ற இத்தகைய பெரிய வகையிலான தங்கள் நினைப்புக்கள் நிறைவேறும், மற்றும் தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் கருத்துக்கள், நவம்பர் 2, 2004 அன்று நொருங்கிப் போயின. 1974ம் ஆண்டு வாட்டர்கேட் ஊழல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது ரிச்சார்ட் நிக்சனுடைய ராஜிநாமாவிற்கு பின்னர், நியூ யோர்க் கட்டுரையாளர் ஜிம்மி பிரெஸ்லின், "எவ்வாறு நல்லவர்கள் இறுதியில் வெற்றியடையந்தனர்" (How the Good Guys Finally Won) என்ற புத்தகத்தை எழுதினார். குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியுடைய சட்டவிரோதமான, அரசியலமைப்பு நெறியில் இருந்து பிறழ்ந்த நடவடிக்கைளினால் ஏற்பட்டிருந்த நெருக்கடிக்கு பின்பு அமெரிக்க தாராளவாதிகள் கொண்டிருந்த அலட்சியமான பெரும்போக்கைத்தான் இந்தத் தலைப்பு பிரதிபலித்தது. தவறு செய்தவர் ராஜிநாமா செய்துவிட்டார்; நடைமுறை எவ்வாறு மீண்டும் இயல்பாக தன் நிலைக்கு வந்துவிட முடியம் என்பதைக் காட்டியதாக தோன்றிவிட்டது. அமெரிக்க ஜனநாயகத்திற்கு மூன்று பாராட்டுக் கைதட்டுதல்கள். ஆனால் இப்பொழுதோ, 30 ஆண்டுகளுக்கு பின்னர், "நல்லவர்கள்", ஜனநாயகக் கட்சியிலுள்ள திறமையற்ற, திறனற்ற கோழைகளுக்கு, அத்தகைய விருது என்பது பொருந்துமா என்பது ஐயப்பாடுதான், வெற்றி பெறவில்லை. மாறாக, அரசியல் குற்றவாளிகள் நிறைந்துள்ள, இடுப்பளவும் இரத்தத்திலும் ஊழலிலும் தோய்ந்து நிற்கும் ஒரு நிர்வாகம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இதை எவ்வாறு விளக்குவது? எளிதில் விடை காணக்கூடிய கேள்வி ஒன்றுமில்லை இது என்பது உண்மையே. ஆனால், ஜோர்ஜ் புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது அமெரிக்க ஜனநாயகம் மற்றும் அமெரிக்க சமூகத்திலுள்ள ஆழ்ந்த நெருக்கடியை அப்பட்டமாகக் காட்டியுள்ளது என்பதும், இதற்கு முழுமையாக எளிதான அல்லது வழமையான வழியிலான தீர்வுகள் இல்லை என்பதும் முதலில் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.

ஜனநாயகக் கட்சி தலைவர்களை பொறுத்தவரையில், அவர்களுடைய தோல்விக்கு காரணம் தெளிவானது. அதாவது அவர்களது பிரச்சார முறையும் மற்றும் அவர்களுடைய வேட்பாளர் அமெரிக்க பொதுவான அரசியல்போக்கிலிருந்து அதிகமாக இடதுபுறம் சாய்ந்துள்ளார்கள் என்பதாகும். பெருநிறுவனச் செய்தி ஊடகத்தின் சொற்ஜாலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்ட முறையில், ஜனநாயகக் கட்சியினர் தங்களுடைய அழிவின் வேர்களை, இதுகாறும் அமெரிக்க வாக்காளர்கள் போற்றியிருந்த "அறநெறிப் பிரச்சினைகளுக்குப்" போதுமான கவனத்தைச் செலுத்தவில்லை. நவம்பர் 11ம் தேதி வோல் ஸ்ட்ரீட் இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் செனட்டர் ஜோசப் லிபர்மன்னுடைய முன்னாள் ஆலோசகரான டான் ஜெர்ஸ்டைன் எழுதுகிறார்: "இத்தப் பிரச்சினைகளில், நாம் அவர்களுடைய மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறோம் என அவர்கள் நினைக்கவில்லை எனில், அவர்கள் வாக்குகளை எம்முடன் பகிர்ந்துகொள்வது ஒரு புறம் இருக்க, முடிவெடுக்காத வாக்களாளர்கள் நாம் பேசுவதை கேட்கக் கூட தயாராக இல்லை."

குடியரசுக் கட்சி மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் "மதிப்பீடுகள்" என்று கூறப்படுபவை எவை? 1950 களின் மக்கார்திய (McCarthyite) சுரம் தணிந்து, தேர்தல்-வெல்லும் மூலோபாயத்திற்காக கம்யூனிச-எதிர்ப்பு சற்றுக் குறைந்த வலிமையைக் கொண்டு, குடியரசுக் கட்சி குறிப்பாக தெற்கில் அரசியல் பிரதிபலிப்பை பயன்படுத்திக் கொண்டு வலதுசாரி பொருளாதார, சமூக கொள்கைகளுக்கு ஒரு புதிய மக்கள் தளத்தை வளர்க்க முற்பட்டது; இதன் நோக்கம் குடியுரிமைகளுக்கான ஆபிரிக்க அமெரிக்கர்களின் பரந்த இயக்கத்தை எதிர்ப்பதாகும். தெற்கு குடியரசுக் கட்சியின் கோட்டையாக மாறியது 1964ம் ஆண்டு கோல்ட் வாட்டர் பிரச்சாரக் காலத்திலேயே ஏற்பட்டது; அப்பொழுது குடியரசுக் கட்சி வேட்பாளர் குடியுரிமைச் சட்டங்களை இயற்றுவதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். கோல்ட்வாட்டர் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவருடைய பிரச்சாரம்தான் "தெற்கத்திய மூலோபாயம்" என அழைக்கப்படும் கருத்திற்கு, 1968ல் அடுத்த குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ரிச்சர்ட் நிக்சன் காலத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது; நிக்சன்தான் தெற்கில் ஒரு புதிய அரசியல் தளத்தை வளர்ப்பதற்கு குடியுரிமை இயக்கத்திற்கு எதிராகத் தோன்றியுள்ள பின்விளைவுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்.

"மதிப்பீடுகள் பிரச்சினையில்" சமயப் பிரச்சினை மற்றொரு முக்கியமான கூறுபாடு என்று ஜனநாயகவாதிகள் வலியுறுத்துகிறார்கள். அவர்கள் இப்பிரச்சினையிலும் கடவுளுக்கு பயப்படும் அமெரிக்கர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவேண்டும் என்பதை அவர்களே ஒத்துக் கொள்ளுகின்றனர். இதைப்பற்றி ஜெர்ஸ்டைன் எழுதுகிறார்: "ஒரு வெற்றிடத்தில் பேசிக் கொண்டிருந்த புஷ் கூட பல வாக்காளர்களையும் கடவுள் தன் பக்கத்தில்தான் இருப்பதாக நம்பவைக்க முடிந்தது -- திரு கெர்ரியோ, கடைசி நாட்கள் வரை சமயத்தை பற்றி பேசவில்லை; ஒரு கத்தோலிக்க வேட்பாளர் எவ்வாறு கத்தோலிக்க வாக்குகளை இழந்தார் என்பதை இது விளக்க உதவுகிறது." சமய நம்பிக்கைகளை பொறுத்தவரையில் போதிய அக்கறையின்மையே ஜனநாயக வாதிகளின் கப்பல் மூழ்கிப்போனதற்கு காரணம் என்பது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் (அது அவ்வாறு இல்லை), ஏன் அமெரிக்க அரசியலில், சமயம் அதன் மிகப்பிற்போக்குத்தனமான, அடிப்படைவாத வடிவமைப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை விளக்குவது அவசியமாகிறது. 1960ம் ஆண்டு ஜனநாயகக் கட்சி ஜோன் எப். கென்னடியை தன்னுடைய ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியபோதிருந்த அரசியல் சூழ்நிலையில் இருந்து எத்தகைய ஆழ்ந்த மாற்றம் வந்துள்ளது என்பதைக் குறிப்பாகக் காணும்போது இது ஒரு தீவிரமான பிரச்சினையாகும். ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்திற்குப் பரிந்துரையான இரண்டாவது கத்தோலிக்கர் ஆவார் அவர். அதற்கு முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூ யோர்க்கின் கவர்னர் ஆல்பிரட் இ. ஸ்மித் முதன் முதலில் கத்தோலிக்க வேட்பாளருக்காக பரிந்துரை செயயப்பட்டிருந்தவர், கடுமையான சமய எதிர்ப்புணர்வுகள் நிறைந்திருந்த பிரச்சாரத்தை தொடர்ந்து பெரும் அழிவைக் கொடுத்த தோல்வியை சந்தித்தார். இந்த வரலாற்றுப் பின்னணியில், சமயப் பிரச்சினை பற்றி வெளிப்படையாக கருத்துத்தெரிவிக்க வேண்டி கட்டாயம் கென்னடிக்கு ஏற்பட்டது; செப்டம்பர் 12, 1960 அன்று டெக்சாஸ், ஹூஸ்டனில் தெற்குப் பாப்டிஸ்டிச தலைவர்கள் நூற்றுக்கணக்கில் குழுமியிருந்த கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார்.

1960களின் அமெரிக்காவில் கூட, "நான் வெஸ்ட் வேர்ஜீனியாவில் பசியுடன் இருந்த குழந்தைகளைப் பார்த்தது, தங்களுடைய மருத்துவச் செலவுகளுக்குப் பணம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்கள், தங்கள் பண்ணைகளை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குடும்பங்கள், கூடுதலான சேரிகள் நிறைந்து, குறைந்த அளவு பள்ளிகள் மட்டும் இருக்கும் நிலை, அதேநேரத்தில் விண்வெளிக்கும் சந்திரனுக்கும் தாமதமாக முயற்சியெடுப்பது போன்ற ஏனைய பல முக்கிய நெருக்கடிகளை அமெரிக்கா எதிர்நோக்கையிலும், சமயப் பிரச்சினை பற்றியும் விவாதிக்க வேண்டியுள்ளது என்பதைப் பற்றித் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்து கென்னடி உரையை ஆரம்பித்தார். "இந்த முக்கியமான, உண்மையான பிரச்சினைகள்தாம் இந்தப் பிரச்சாரத்திற்கு தீர்வு காணவேண்டும். இவை சமயப் பிரச்சினைகள் அல்ல -- போரும், பட்டினியும், அறியாமையும், பெருந்திகைப்பும் எந்த சமயத் தடைகளையும் காண்பதில்லை." என்று அவர் அறிவித்தார். ஆனால் அவருடைய கத்தோலிக்க பின்னணியால் சமயத்தை பிரச்சாரத்தின் ஒரு விடயமாக்கியதுடன், "நான் மீண்டும் தெளிவாகக் கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது; எவ்விதமான திருச்சபையை நான் விரும்புகிறேன் என்பது எனக்குத்தான் முக்கியமே அன்றி, எத்தகைய அமெரிக்கா இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேனோ அதற்கு அது முக்கியம் இல்லை" என்றும் அவர் பிரகடனப்படுத்தினார். "திருச்சபையும், அரசாங்கமும் முற்றிலும் பிரிந்துள்ள ஒரு அமெரிக்காவை தான் நான் நம்புகிறேன்; எந்தக் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவரும் ஜனாதிபதிக்கு (அவர் கத்தோலிக்கராக இருக்க நேர்ந்தால்) அவர் எப்படிச் செயலாற்றவேண்டும் எனக் கூறக்கூடாது, எந்த புரட்டெஸ்டான்ட் மதகுருவும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் குடிமக்களுக்கு எவருக்கு வாக்களிக்கவேண்டும் என்றும் கூறக்கூடாது" என்றும் அவர் கூறினார்.

"எந்தப் பொது அதிகாரியும், அரசாங்கக் கொள்கை பற்றி உத்தரவுகளை போப்பிடம் இருந்தோ, திருச்சபைகளின் தேசியக் குழுவில் இருந்தோ, மற்ற சமய சார்புடைய ஆதாரங்கள் எவற்றிடம் இருந்தும் கேட்கவும், ஏற்கவும் கூடாது; எந்த சமய அமைப்பும் தன்னுடைய விருப்பத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பொது மக்களிடம் சுமத்தக் கூடாது; அல்லது அதிகாரிகளுடைய பொதுச் செயல்களிலும் சுமத்தக் கூடாது. ஒரு ஜனாதிபதியின் சமயம் பற்றிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட விஷயம் என நான் நம்புகிறேன்..." என்றும் கென்னடி எடுத்துக் கூறினார்.

திருச்சபை-அரசாங்க உறவுகள் பற்றி அரசியல் நடைமுறையில் 1960ல் ஏற்பட்டிருந்த ஒருமித்த கருத்தின் மரபு சிறந்த முறையில் கென்னடியால் வெளியிடப்பட்டிருந்தது, இன்றைய நிலையில் சமயநெறியை மீறியிருப்பதுபோல் தோன்றும். ஜனநாயகக் கட்சியில் எந்த முக்கியமான புள்ளியோ, குடியரசுக் கட்சியைப் பற்றிக் கூறத்தேவையே இல்லை, அரசியல் வாழ்வில் சமயம் குட்டை குழப்புதல் பற்றி இவ்வளவு நேர்மையாக இப்பொழுது கூறமுடியும் என்று நினைத்தும் பார்க்கமுடியாது. உண்மையில், விவாதங்கள் ஒன்றில் கத்தோலிக்க பிஷப்புக்கள் தங்களுடைய திருச்சபை மன்றப்பகுதிகளுக்குள் இருக்கும் மக்களுக்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினருக்கு வாக்களிக்கக் கூடாது, ஏனெனில் அவர் செனட்டில் தன்னுடைய வாக்குகளை மகளிர் கருக்கலைப்புரிமைக்கு ஆதரவு கொடுத்துப் போட்டுள்ளார்கள் என்று அறிவுரை வழங்கியது பற்றிய கேள்விக்கு விடையிறுக்கையில், கெர்ரி தான் அவர்களுடைய "கருத்துக்களை மதிப்பதாகக்" கூறினார். அரசியல் சூழ்நிலை ஏன் இவ்வாறு வியத்தகு அளவில் மாறிவிட்டது? சமீபத்திய தசாப்தங்களில் அமெரிக்காவில் சமூக-பொருளாதார மாறுதல்களுக்கும், சமய முறையில் பிற்போக்குத்தனம் மீண்டும் தலைதூக்கி இருப்பதற்கும் என்ன உறவு இருக்கிறது? மிகக் கடுமையான பொருளாதாரம், மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் நிலையற்ற தன்மைக்கும் சமயச் செல்வாக்கு தொடர்ந்து பெருகி வருவதற்கும் இடையே ஏதேனும் உறவு உள்ளதா?

இத்தகைய வினாக்கள் எழுப்பக்கூடப்படவில்லை. இன்றைய அமெரிக்கச் சமுதாயத்தின் தற்போதைய நிலைமைகளில், பகுத்தறிவிற்கு ஒவ்வாத முறை பரவி வருவதைப் பற்றி ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் அதன் பகுத்தறிவு ஆதாரத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், சமயப் புத்துயிர்ப்பு என்பது எத்தகைய பிற்போக்குத் தன்மை கொண்டிருந்தாலும், அமெரிக்க வாழ்வின் மாற்ற இயலாத உண்மையாகக் கொள்ளப்படவேண்டும். சமயம் ஒரு பிரயோசனமான தோற்றத்தை வழங்குகின்றது என்ற அரசியல் பிற்போக்குத்தன்மைக்கு இவ்வாறு நிபந்தனையற்று சரணடைந்தமை, திரு ஜெர்ஸ்டைனுடைய கீழ்க்கண்ட அறிக்கையில் மிகச் சிறந்த வெளிப்பாட்டைக் காண்கிறது: "கலாச்சாரமும், குணநலன்களும், வாக்களர்களிடம் ஆதரவு திரட்டுவதற்கு கொள்கைகளையும், வேலைத்திட்டங்களையும் விட மிக முக்கியமானதாகும் என்பதை இந்தத் தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளது."

ஜனநாயகக் கட்சியின் ஒரு முக்கிய பிரிவிற்கு வழிகாட்டியாக இருக்கும் தத்துவத்தைச் சுருக்கிக் கூறும் வகையில், அதன் அரசியலில் சரண்டைவு மற்றும் அதன் திவாலாகிப்போன தன்மை இரண்டையும் முழுமையாக ஒத்துக்கொள்ளும் கருத்தாக இது உள்ளது. "கலாச்சாரமும், குணநலனும்", "கொள்கைகளையும், வேலைத்திட்டங்களையும்" விட மிக முக்கியமானது என்றால், ஓர் அரசியல் கட்சியின் நோக்கம்தான் என்ன? அமெரிக்க வரலாற்றைப் பற்றிய மிகச் சாதாரணச் சிந்தனை கூட ஜெர்ஸ்டைனின் வருங்காலம் பற்றிய ஊகத்தின் அபத்தத்தை அம்பலப்படுத்துகிறது. 1776ன் காலனிகள் "கொள்கைகள், வேலைத்திட்டங்கள்" பற்றித்தான் முழுமையான சிந்தனையில் இருந்து, புதிய அமெரிக்க குடியரசை தோற்றுவித்தவர்கள் மிகப்பெரும் ஆர்வத்துடன் சிறிய விஷயங்களில் கூட ஈடுபட்டிருந்தனர். அடிமைமுறை, அதை அகற்றுதல் என்பவற்றை மையமாகக் கொண்ட "கொள்கைகள், வேலைத்திட்டங்கள்" பற்றிய உலக வரலாற்றுப் புகழ்வாய்ந்த மோதல் இல்லையென்றால் அமெரிக்க உள்நாட்டுப் போரின் தன்மைதான் என்ன? 1890 களின் நடுப்பகுதிகளில், தேசியப் பொருளாதாரத்தின்மீது வோல் ஸ்ரீட் கொண்ட வளர்ந்து வந்த ஆதிக்கத்திற்கும் மக்களிடையே தோன்றிய எதிர்ப்பு, வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாணய முறை வேண்டும் என்ற நடைமுறை வெளிப்பாடாக வந்தது. புதிய நூற்றாண்டு வந்தவுடன் முதலாளித்துவக் கட்சிக்குள் இருந்த சீர்திருத்தப் பிரிவுகள், அந்நிலையில் அவை புதிய சோசலிசப் போக்குக்களின் அழுத்தத்திற்குப் பெருகிய முறையில் உட்பட்டிருந்தன, "முற்போக்கான" வேலைத்திட்டம் என்று பல்வகையான கொள்கை முயற்சிகளை முன்வைத்திருந்தன.

குடியரசுக் கட்சிக்குள்ளேயேகூட, கொள்கையைப் பற்றிய கருத்து வேறுபாடுகள், 1912ம் ஆண்டு கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தக்கூடிய வகையில் பெரிதாக இருந்தன; இதையொட்டி முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் (ஐக்கிய அமெரிக்க அரசுகளின் 26வது ஜனாதிபதி -1901-09), ஜனாதிபதி டாஃப் இடம் இருந்து பிரிந்து "Bull-Moose" கட்சி என்று அழைக்கப்பட்ட ஒரு தனிப்பிரிவை அமைத்திருந்தார். மிகுந்த பரபரப்பு நிறைந்த அந்தத் தேர்தல் ஆண்டில் டாஃப், ரூஸ்வெல்ட், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் உட்ரோ வில்சன், சோசலிசக் கட்சி வேட்பாளர் யூஜென் வி. டெப்ஸ் என்ற நான்கு வேட்பாளர்களை கொண்ட போட்டியாக இருந்தது. கொள்கை, வேலைத்திட்டங்கள்தான் அரசியல் விவதாங்களில் ஆதிக்கம் செலுத்தின. இடதுபக்கத்தில் இருந்து அழுத்தம் வந்ததை அடுத்து, ஜனநாயகக் கட்சி தன்னுடைய தேசிய மாநாட்டில் "குடியரசுக் கட்சியின் உயர்ந்த வரிவிகிதத்தை", "செல்வம் சமமற்ற வகையில் பங்கீடு செய்யப்படுவதற்கு முக்கிய காரணம்" என்று கண்டனத்திற்கு உட்படுத்தி, அதை "செல்வந்தரைக் கூடுதலான செல்வந்தராக்கவும், ஏழைகளை இன்னும் வறியவராக்கவும் செய்யும் வரிவிதிப்பு முறை" என்று முத்திரையிட்டது. "தனியார் ஏகபோக உரிமையை", "காப்பதும், பொறுத்துக் கொள்ளுவதும் இயலாது" எனத் தாக்கி, டாஃப் நிர்வாகத்தை "ஸ்டான்டர்ட் ஆயில் நிறுவனம், மற்றும் புகையிலை நிறுவனத்துடன் சமரசம் செய்து கொண்டுள்ளதற்காகவும், இந்த நிறுவனங்களின் பெரிய அதிகாரிகளுக்கு எதிராக நிறுவன-எதிர்ப்புச் சட்டங்களைக் கொண்டு குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படாததற்காவும்" தாக்கியது. அந்த அரங்கு ஒரு தேசிய வருமான வரிவிதிப்பு முறை, செனட்டர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுதல், ஜனாதிபதிக்கு ஒரு முறைதான் பதவிக்காலம், இன்று புரட்சித்தன்மையைவிடக் குறைந்தது அல்ல எனத் தோன்றக்கூடிய, "எந்த நிறுவனமும் பிரச்சார நிதிக்கு பணம் கொடுத்தலோ அல்லது எந்த தனிநபரும் குறிப்பிட்ட நியாயமான தொகைக்கு மேல் கொடுக்கக்கூடாது என்ற தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படவேண்டும்" என்பதற்கும் ஒப்புதல் அளித்தது.

1930களில் ஜனநாயகக் கட்சி, புதிய நடவடிக்கை (New Deal- ஐக்கிய அமெரிக்க அரசுகளின் 32வது ஜனாதிபதியாக இருந்த பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டால் பொருளாதார முன்னேற்றத்திற்காக 1933ல் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள், 1933-45) என்ற வேலைத்திட்டத்தை முன்வைத்தது; தன்னுடைய சமூகசீர்திருத்த செயற்பட்டியலில் கடைசி முயற்சியாகப் பின்னர் இறுதியில் ஜோன்சன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பெரிய சமுதாயம் (Great Society) என்ற திட்டத்தையும் முன்வைத்தது. நான் இந்த அனுபவங்களை, ஜனநாயகக் கட்சியின் வரலாற்றை பெருமைப்படுத்துவதற்காக குறிப்பிடவில்லை என்பது தெளிவு என அறிவீர்கள் என நினைக்கிறேன்; ஏனெனில் இக்கட்சி எப்பொழுதுமே ஒரு முதலாளித்துவக் கட்சியாக இருந்து, இறுதிஆய்வில் முதலாளித்துவ நலன்களுக்குத்தான் பற்றுடன் செயல்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் சோசலிச இயக்கம் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய அறிவார்ந்த முயற்சிகளை ஜனநாயகக் கட்சியுடன் அடிப்படை முதலாளித்துவத்தன்மை பற்றிய, அதன் தேவையைவிடக் குறைவான, குறைந்த வரம்புடைய சீர்திருந்தச்சோதனைகள் பற்றியும், உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை அது பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற பொய்க் கூற்றுக்களையும் திறனாய்ந்து வெளியிட்டு வந்துள்ளது. ஆனால் ஜனநாயகக் கட்சியின் அரசியலில் அழுகிப்போயிருக்கும் தன்மை, மிகப் பெரிய அளவில் இருப்பது அதை வரலாற்றுப் பின்னணியில் காணும்போதுதான் நன்கு உணரப்படும். ஜெர்ஸ்டைன் இழிவுடன் "கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும்" உதறித் தள்ளியிருப்பது ஜனநாயகக் கட்சி எவ்வாறு அதன் தாராள, சீர்திருத்தவாத கடந்தகாலத்தையும் நிராகரித்துள்ளது என்பதையும், அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் நலன்களுக்கும் தேவைகளுக்கும் எத்தகைய பொருள்பொதிந்த வகையிலும் பங்கேற்று உதவ இயலாத நிலையிலும் உள்ளது என்பதின் சுருக்கமான வெளிப்பாடு ஆகும். உண்மையில் ஜனநாயகக் கட்சி அத்தகைய முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அதன் தன்மை அவ்விதக் கருத்துக்களையும் பெற்றிருக்கவில்லை.

கன்சாசில் என்ன நிகழ்கிறது? (What's the Matter with Kansas?) என்னும் தன்னுடைய தற்காலத்திய அரசியலைப் பற்றிய விறுவிறுப்பான, சுவையான ஆய்வில், தோமஸ் பிராங்க் ஜனநாயகக் கட்சியின் சமூகப் பார்வை மற்றும் செயற்பட்டியல் பற்றி கீழ்க்கண்ட தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்:

"பில் கிளின்டன், அல் கோர், ஜோ லிபர்மன், டெரி மக் ஆலிப் போன்ற முக்கிய பிரமுகர்களை தோற்றுவித்த ஜனநாயகக் கட்சியின் தலைவர் குழு (Democratic Leadership Council -DLC), நீண்டகாலமாக கட்சியை சாதாரண தொழிலாள வாக்காளர்களை மறந்து விட்டு, சமுதாய பிரச்சினைகளில் தாராளக் கொள்கையுடைய வசதியுடைய உய்ர்மட்டத்தில் வேலை பார்ப்பவர்களிடம் அதற்குப் பதிலாகக் கவனத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்திக் கொண்டு வருகிறது. DLC மிகப் பெரிய அவசரத்துடன் விரும்பும் விரிவான நலன்கள், முறையாக அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் நிறுவனங்களுக்குப் பதிலாக பிரச்சாரத்திற்குப் பெரும் நிதி அளிப்பதற்கு திறனுடைய பெருநிறுவனங்களின் ஆதரவை நாடுதல் என்று வலியுறுத்தப்பட்டது. இத்தகைய உயர்வுடைய தளத்தின் வாக்குகளை சேகரிப்பதற்கான வழி, இன்னும் முக்கியமாக அவற்றிலிருந்து நிதியைச் சேகரிக்கும் வழி, விருப்பப்படி உள்ள நிலைப்பாடு என்று குன்று போல் உறுதியாக இருந்து, அதேநேரத்தில் முடிவில்லா சலுகைகளை பொருளாதார வகைகளில், சமூக நலன்கள், NAFTA, தொழிலாளர் சட்டம், தனியார் மயமாக்குதல், கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், இன்னும் அதேபோல் பலவற்றையும் செய்தல்தாம் என்று "புதிய ஜனநாயகக்கட்சியினர்" நினைக்கின்றனர். அத்தகைய ஜனநாயகக் கட்சியினர் அவர்கள் "வர்க்கப் போராட்டத்தை" ஏளனமாகக் கருதுவதாக வெளிப்படையாகவே கூறுவதோடு வணிக நலன்களுக்குத் தாங்கள் எவ்வளவு நட்புச்சிறப்பைக் காட்டுகிறோம் என்பதையும் வலியுறுத்துகின்றனர். பழமைவாதிகளைப் போலவே அவர்கள் விவாத மேசையில் இருந்து, பொருளாதாரப் பிரச்சினைகளை அகற்றிவிடுகின்றனர். சமீப காலம் வரையில் கட்சியின் முதுகெலும்பு போல் இருந்த தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை என்ற கருத்துத்தான் DLC யிடம் உள்ளது. ஜனநாயகக் கட்சியினர் எப்பொழுதுமே பொருளாரதாரப் பிரச்சினைகளில் குடியரசுக் கட்சியினரைவிடச் சற்றே நல்ல முறையில்தான் இருப்பர். மேலும் வெற்றியை வழிபாடு செய்து கொண்டிருக்கும் இந்த நாட்டில், உண்மையில் ஏழைகளின் குரலாக ஒலிக்க வேண்டும் என்ற ஆர்வம் எவருக்கு உள்ளது? அதில் எங்கே சுலபமான பணம் கிடைத்துவிடும்?"

இதைச் சற்றே வேறுவிதமாகக் கூறினால், ஜனநாயகக் கட்சியினரால் சிறந்த கட்சி ஆதரவாளர் எனப்படுபவர், சமூக உணர்மை கொண்டு நடுநிலையில் நின்று தீர்ப்புக் கூறுபவராவார்.

கெர்ரியினுடைய பிரச்சினை நிறைய திட்டங்களும், கொள்கைகளும் என்பது அல்ல; மாறாக, பரந்த தொழிலாள வர்க்க அமெரிக்கர்களை எதிர்கொண்டுள்ள பெரிய பிரச்சினைகளைப் பற்றித் தீவிரமாகக் கவனிக்க வேண்டும் என்ற நினைப்பே இல்லாததுதான். அவருடைய பிரச்சாரம் முழுவதும் நீடித்த, உள்ளத்திற்கு வலியைத் தருகின்ற முறையில் கையாளப்பட்ட தவிர்த்தல்வகை, தெளிவற்ற தன்மை, பல கருத்துக்களையும் கூறும் தன்மை மற்றும் பாசாங்குத்தனம் ஆகியவை ஆகும். ஜனநாயகக்கட்சியின் சாதாரண மக்கள் தளத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சலுகைக்கும், அவருடைய பெருநிறுவன ஆதரவாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவாதங்கள் சமன்படுத்தும் வகையில்தான் இருந்தன. ஈராக் போரைப் பற்றிய காலம் கடந்த கெர்ரியின் குறைகூறல், "பயங்கரவாதத்திற்கெதிரான போருக்கு" அவருடைய அசையா ஆதரவை அளிக்கும் உணர்வுபூர்வ அறிக்கைகளினால் தொடரப்பட்டன. ஆம், அவர் மிகப் பெருஞ்செல்வந்தர்களுடைய வரிகளை அதிகரிக்கவேண்டும் என்ற கருத்தைத்தான் கொண்டிருந்தார் ... ஆனால் மிக அதிகமாக அல்ல. ஆம், முக்கியமான சமுதாயநலத் திட்டங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினார்; ஆனால் அது நியாயமான செலவினங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் "பணத்தைக் கொடுத்துப் பயனடைக" என்ற முறையில் இருக்கவேண்டும் என்றார். கெர்ரியின் பிரச்சாரத்திற்கு ஓர் அரிய அடையாள இலக்கு இருந்திக்குமேயானால், அது "ஆம் முழுமையாக, ஆனால் உண்மையாக அல்ல" என்று இருந்திருக்கும். எதிராளியின் பலவீனங்களைப் பற்றிப் பிழையின்றி உணரும் ஆற்றல் மற்றும் அதைத் தாக்கும் திறனையும் கொண்டுள்ள குடியரசுக் கட்சியினருக்கு, அவர்களை கெர்ரியை "தோல்வியடைபவர்" ("Flip-Flopper") என்று கேலி செய்தபோது, தாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். ஆனால் கெர்ரியின் இயலாத்தன்மை எனக் கருதப்பட்ட தோற்றம், எதைப்பற்றியும் தெளிவாக எதையும் சொல்லமுடியாத தன்மை அவருடைய முடிவெடுக்கும் தன்மை இல்லாததை வெளிப்படுத்தியது மட்டும் இல்லாமல், "மக்கள் கட்சி" என்று தன்னைக் கூறிக்கொண்டு, பெருநிறுவன எஜமானர்களின் நலன்களை விசுவாசத்துடன் செய்யும் ஓர் அமைப்பான ஜனநாயகக் கட்சியில் அடிப்படை எதிர்மறைகளைத்தான் வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசியல் வாழ்வில் மிக வினோதமான உண்மைகளில் ஒன்றைப்பற்றிச் சமீப காலத்தில் கணிசமான விவாதம் ஒன்று நடைபெற்று வருகிறது: குடியரசுக் கட்சிக்கு வாக்கு அளித்த மாநிலங்கள் பல, அதில் குறிப்பாக தெற்கு மற்றும் மரபுவழியில் எல்லை மாநிலங்கள் (கன்சாஸ், மிசெளரி, கென்டக்கி, டென்னெசி, மேற்கு வர்ஜீனியா ஆகியவை) அடங்கியுள்ளன, இவை அமெரிக்காவிலேயே வறிய மாநிலங்கள் என்ற பட்டியலில் உள்ளவையாகும். குடியரசுக் கட்சியில் பொருளாதாரக் கொள்கைகள் இந்த மாநில மக்களுடைய மீதான தாக்கத்தைப் பேரழிவுதரக்கூடிய முறையில் இருந்துள்ளன. புள்ளிவிவரங்கள் இதைத் தெளிவாக்குகின்றன: மிக உயர்ந்த வறுமை விகிதம், குற்றங்கள் விகிதம், விவாகரத்து விகிதம் (சமயச் செல்வாக்கு எங்கும் படர்ந்துள்ள நிலை இருப்பினும் எனக் கூறலாமா அல்லது அதனால்தான் எனக் கூறலாமா, தெரியவில்லை), மற்றும் பிற சமுதாயத் துயரங்களுக்கான, இழிநிலைக்கான குறியீடுகள் புஷ்ஷிற்கு வாக்களித்த இம்மாநிலங்களில் காணப்படுகின்றன. இந்த வாக்காளர்கள் குடியரசுக் கட்சியினருக்கு, தங்கள் உண்மையான பொருள்சார் நலன்களைவிடக் கூடுதலாக அவர்கள் போற்றும் "மதிப்பீடுகளைக்" கருத்திற்கொண்டு வாக்களித்தனர் என்று கூறுவது அறிவியல் பூர்வமான சமூக-அரசியல் ஆய்விற்குப் பதிலாக கடவுள் நம்பிக்கையை ஏற்பது போலாகும்.

"மதிப்பீடுகள்" பற்றிய கருப்பொருள் குறிப்புக்கள், இதன் பொருள் எவருக்கும் விளங்கவில்லை என்றாலும்கூட, தொழிலாளர்கள் ஏன் குடியரசுக் கட்சி, மற்றும் அதன் சமய உரைகள் குழு, அறவுரை நல்கும் ஏமாற்றுமனிதர்கள் என்ற பரிவாரத்தின் செல்வாக்கிற்கு உட்படுகின்றனர் என்பதற்கு விளக்கம் இல்லை. முன்பு போர்க்குணமிக்க தொழிற்சங்கங்களின் கோட்டைகளாக விளங்கிய மாநிங்களில்கூடப் பழைய தொழிலாளர் இயக்கத்தின் சரிவு மில்லியன் கணக்கான மக்களை சமுதாயப் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவதற்கும், தங்களுடைய நலன்களை ஒரு வர்க்கம் என்ற முறையில் காத்துக் கொள்ளுவதற்கும் இயலாத தன்மையில் இருப்பது சற்று நம்பத்தகுந்த விளக்கமாகும். அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பிரிவின் சமுதாய அனுபவத்தை மட்டும் ஆராய்வோம். இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியில், UMWA விற்குள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளரகளில் போராட்டங்கள் வெஸ்ட் வர்ஜினியா, கென்டக்கி மற்றும் வேர்ஜினியா, டென்னசி, அர்கன்சாஸ், ஓகியோ, இண்டியானாப் பகுதிகளில்கூட மிகப்பெரிய வகையில் சீற்றத்துடன் பரவியிருந்தன. வாதத்திற்கிடமுள்ளது எனினும், நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திடையே மிக அதிகமான வர்க்க முழு உணர்வு பெற்றிருந்த தொகுப்பினர் ஆவர். அவர்கள் ஜோன் எல். லீவிஸ் தெரிவித்திருக்கக் கூடிய முறையில் "நேர்த்தியான நடுநிலையில் இருந்து" மிகப்பெரிய நிலக்கரி நிறுவனங்களுக்கு எதிராகப் போராடியதோடு, கணக்கிலடங்கா சமயங்களில் வெள்ளை மாளிகையின் உத்தரவுகளையும் மீறி நின்றிருந்தனர். ஆனால் 1980 களில் பேரழிவு தரக்கூடிய தோல்விகளைத் தொடர்ச்சியாகச் சுரங்கத் தொழிலாளர்கள் சந்தித்தனர்; இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் காட்டிக் கொடுப்பாகும்; அது UMWA ஐ ஒரு பொருளற்ற, வெற்றுத்தன்மை கொண்ட, முக்கியத்துவம் அற்ற ஒரு கூடாக மாற்றிவிட்டது. ஆயிரக்கணக்கான நிலக்கரிச் சுரங்க வேலைகள் துடைத்துக்கட்டப்பட்டு விட்டன.

2004 தேர்தலுக்குப் பின்னர்: சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகளும் பணிகளும்

வேலைகள் ஏதும் இன்றி, பல தலைமுறைகள் முழு நனவை தக்க வைத்திருந்த ஆழ்ந்த சமூக உணர்வுகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டு, அவர்களை கைவிட்டுவிட்ட தொழிற்சங்கத்தில் இருந்தும் அந்நியப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், நேற்றைய போர்க்குணமுடைய தொழிலாளர்கள், நன்கு பயிற்சி பெற்று, உரத்த குரலில் கூவக்கூடிய நற்செய்தி வழங்கும் எவங்கலிச தொழிற்பிரிவின் செய்திகளுக்கு செவிமடுக்க ஆர்வம் கொண்டதில் வியப்பில்லை. ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த தொழிலாளர் இயக்கத்தின் திரட்டிற்கு முற்றிலும் புறத்தே வளர்ந்தும், வர்க்கப் போராட்டத்தின் மரபுகளைப் பற்றிய உணர்வே தெரியாமலும் வளர்ந்துள்ள, இத்தகைய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வர்க்க நனவை வளர்த்துக்கொள்ளுவதில் தடைகள் நிறையவே உள்ளன. இந்த உலகிலும், அவர்களுடைய வாழ்க்கைக் காலத்திலும் ஒரு கூடுதலான சிறந்த முறையிலும், மனிதாபிமானத்துடனும் கூடிய சமுதாயத்தை வளர்ப்பதற்கு தேவையான திறனாயும் போக்கு, தற்போதைய சமுதாயத்தின் நிலை ஆகியவை பற்றி எந்த ஆதாரத்தில் இருந்து தேவையான தகவல்களையும் உட்காட்சிகளையும் அவர்கள் பெறுவது இயலும்? இப்பொழுதுள்ள அரசியல் கட்சிகளிடம் இருந்தோ, குட்டைபோல் கலங்கியுள்ள செய்தி ஊடகங்களில் இருந்தோ, நிச்சயமாக அதைப் பெற இயலாது.

ஒரு சராசரி அமெரிக்கத் தொழிலாளி, செய்தி ஊடகத்தாலும், குடியரசுக் கட்சியின் அரசியல் இயந்திரத்தாலும் இடைவிடாது நடாத்தப்படும் பிரச்சாரத்தை ஏற்றுவிடுகிறார் என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. மிகக் குறைவான வாய்ப்புக்களில்கூட அவ்வாறு நடைபெறுவதில்லை. வாழ்க்கையைப் பற்றி போதுமான அளவு அவர்கள் கண்டுள்ளனர்; உலகிலுள்ளவை தோற்றமளிப்பதுபோல் உண்மையில் இல்லை என்பதை அவர்கள் நன்கு தெரிந்துகொண்டுள்ளனர். ஒரு தொழிலாளி "மதிப்பீடுகள்" பற்றி பேசும்பொழுது, என்ரோனுடைய கென்னெத் லே அல்லது ஜோர்ஜ் புஷ்ஷிற்கு அது என்ன பொருள் தருமோ, அதைவிட வேறுபொருளைத்தான் அவருக்கு அது தரும்.

2004 தேர்தலில் "மதிப்பீடுகள்" பிரச்சினையின் முக்கியத்துவத்தைப் பற்றி கேள்விக்கு உட்படுத்தி, ஏற்கனவே பல அறிக்கைகள் வந்துள்ளன. ஆரம்பத்தில் தேர்தலுக்குப் பின் இவ்வாறு இருக்கும் என்று வந்திருந்த கருத்துக் கணிப்புக்களான ஆதார இருப்புக்கள், பிழையாக வழிநடத்தப்பட்டிருந்தன அல்லது தவறான முறையில் விளங்கிக் கொள்ளப்பட்டன என இப்பொழுது தோன்றுகிறது. இது சரியாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் கூறப்பட்டாக வேண்டிய முக்கியமான கருத்து என்னவென்றால், உழைக்கும் அமெரிக்கர்களின் பெரும்பான்மையான மக்களின் உண்மையான சமூக, பொருளாதார, அரசியல் நலன்கள் பற்றி இரு கட்சிகளில் ஒன்று கூட அதைப்பற்றி உரைக்காத தன்மையால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் வெற்றிடத்தில் "மதிப்புக்கள்" எழுந்துள்ளன என்பதாகும். ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர், செய்தி ஊடகங்கள் என்று அனைத்துமே, அமெரிக்க முதலாளித்துவத்தின் பெருமைகளுக்கு துதிபாடும் ஒரே கூட்டுப் பாடலைத்தான் வெவ்வேறு வித ஒலி வடிவமைப்பு கொடுத்து பலகுரலிசையில் ஆனந்தமாகப் பாடும் பகுதிகளாக இருந்தன.

உயரதிகாரிகளை மாற்றி வேலைகள் கொடுப்பதன் மூலமோ, வேறு சிறந்த வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதன் மூலமோ திருத்திவிடக்கூடிய தற்காலிகப் பலவீனம் அல்ல இது. அமெரிக்க முதலாளித்துவத்தின் வளர்ச்சி, ஒப்புமையில் ஒருசிலரிடம் மட்டும் குவிந்துள்ள மிக மிக அதிகமான செல்வம், சமூக சமத்துவமின்மையின் மிக அதிஉயர் மட்டங்கள், ஒருகாலத்தில் முதலாளித்துவ வாதிகளுக்கும் தொழிலாளருக்கும் இடையே வர்க்கப்போராட்டத்தில் பொதுநிலையில் நின்று சமரசம் செய்வித்திருந்த சமூக சீர்திருத்தத்திற்கான கணிசமான தளமாக இயங்கி வந்திருந்த மரபு முறையில் இருந்த "மத்தியதர வர்க்க" தட்டின் விரைவான சரிவு, இறுதியாக, மரபுமுறையிலான முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி வடிவைப் பராமரிப்பதற்கு தீவிரமாய் அர்ப்பணித்திருந்த ஆளும் செல்வந்தத்தட்டிற்குள்ளேயான எந்ததவிதமான முகாமும் மறைந்துவிட்டமை ஆகியவற்றின் விளைவுதான் இது.

முதலாளித்துவ ஜனநாயக முறையில் மிக உச்சக் கட்டத்தில் இருக்கும் இந்த உறுதியற்ற நிலைமை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பன்முக வளர்ச்சியுடன் தவிர்க்க முடியாமல் பிணைந்துள்ளது; அது வெளிநாடுகளில் வன்முறை நிறைந்த கொள்ளை முறையைக் கொண்டிருப்பதோடு மட்டும் இல்லாமல், அமெரிக்காவில் உள்நாட்டிலும் அனைத்து மரபுவகை முதலாளித்துவமுறை ஜனநாயக வகையிலான நிறுவன அமைப்புக்களின் தன்மையையும் இல்லாதொழித்துவிடும் இயல்பை கொண்டுள்ளது. ஏதேனும் ஒருவிதத்தில் ஆட்சி செல்வந்தத்தட்டினரின் சொந்தச் சொத்துக்கள் மற்றும் சடரீதியான நலன்களும், அதைச்சூழ்ந்துள்ள கணிசமான உயர் செல்வந்த வகுப்பின் நலன்களும் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் நிறைந்திருக்கவேண்டும் என்பதை நம்பியுள்ளது. இதுதான் ஆளும் செல்வந்தத்தட்டின் பரந்த பிரிவுகளுக்குகள் ஒருமித்த உணர்வு ஏற்படுவதற்கு அடிப்படையாக நின்று, அமெரிக்காவில் உலகந்தழுவிய மூலோபாய இலக்குகளை இராணுவத்தை மூர்க்கமாய் பயன்படுத்தி அடைவதற்கு ஆதரவைக் கொடுக்க வைத்துள்ளது.

ஜனநாயகக் கட்சியின் முக்கிய மூலோபாய வல்லுநர்களைப் பொறுத்தவரை இயலக்கூடியதாக இருந்தது, தேர்தல் பிரச்சாரத்தின்போது ஈராக் பிரச்சினை ஒருபோதும் எழுப்பப்படாது என்பதுதான். ஹோவார்ட் டீன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிற்கும் முயற்சியில் தோல்வியடைந்த பின், ஈராக்கே வரைபடத்தில் இல்லை என்பது போன்ற பாசாங்குத்தனம்தான் கெர்ரி, மற்றும் அவருடைய ஆதரவளர்கள் இடையே காணப்பட்டது. "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பது ஒரு புறம் இருக்க, ஈராக் படையெடுப்பை பற்றிக்கூட குறைகூறல் இருக்கக் கூடாது என்ற கருத்துத்தான் நிலவி வந்தது. ஜனநாயகக் கட்சி மாநாடு நடைபெற்ற பின், கெர்ரி படையெடுப்பிற்கெதிராக பேச மறுத்ததை ஒட்டி ஜனநாயக வாக்காளர்களிடையே எழுந்த ஏமாற்றத் திகைப்பின் பிரதிபலிப்பாக, கெர்ரியை பற்றிய கருத்துக் கணிப்பு சரிவைக் காட்டியபோதிலும், வேட்பாளர் மெளனமாகத்தான் இருந்தார்.

செப்டம்பர் மாத நடுப்பகுதியில் ஈராக்கிய குழப்பம் முக்கியமான குடியரசுக் கட்சியினரைக்கூட, போரை புஷ் நடத்தும் விதத்தைப்பற்றிக் குறைகூற வைத்த பின்னர்தான், ஆளும் செல்வந்தத்தட்டின் நிலைப்பாட்டில் இருந்து ஜனாதிபதித் தேர்தலில் போரை ஒரு பிரச்சினையாக கொண்டு வருவது அப்பொழுது அரசியல்முறையில் நெறியானதுதான் என்ற முடிவிற்கு வந்தார். அப்படியும் கூட, புஷ் "உரிய காலத்திற்கு முன்பே" ஈராக்கின் மீது படையெடுத்தது பற்றியோ, தான் அதை ஆதரிக்கிறாரா என்பது பற்றியோ, தேர்ந்தெடுக்கப்பட்டால் ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவதற்கு உத்தரவு இடுவாரா என்பது பற்றி வேறுபடுத்திக் கூறுவதில் மிகவும் கவனத்துடன் இருந்தார். கெர்ரி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், கடந்த வாரத்தில் வெளிவந்திருந்த கொடூரமான தலைப்புச் செய்திகள் எந்தவித மாற்றத்தையும் காட்டியிருக்காது. பல்லுஜாவின் மீதான தாக்குதலைப்பற்றி எந்தவிதக் குறையும் கூறாமல் அவர் ஒப்புதல் கொடுத்திருப்பார். ஐரோப்பிய அரசாங்கங்களிடம் ஈராக்கிய ஆக்கிரமிப்பு பற்றி சற்று ஆதரவு பெறுவதற்காக சில நுட்பவகை மாற்றங்கள் வந்திருக்கக் கூடுமே அன்றி, அமெரிக்காவின் சர்வதேச கொள்கை, கெர்ரியின் நிர்வாகத்திலும் எத்தகைய முக்கியமான மாற்றத்தையும் கொண்டிருக்காது.

தேர்தல் முடிந்த பின்பு, வருங்காலத்தைப் பற்றிய கவலையும் எதிர்பார்ப்பும் இருந்த சூழ்நிலையில், ஒரு திருப்புமுனை வந்துவிட்டது என்ற பரந்த உணர்வு காணப்படுகிறது; இப்பொழுது இருப்பதுபோல் அரசியல் வாழ்வு தொடர்ந்து இருக்க முடியாது என்பதேயாகும் அது. அமெரிக்க ஜனநாயகத்தின் வரலாற்று நெருக்கடியின் அடையாளங்கள் மிக அதிக அளவிலும் படர்ந்தும் இருப்பது மறுப்பதற்கில்லை; மறைத்து மூடும் வகையிலும் இல்லை; இப்பொழுது இந்த முறை தன்னைத் தானே திருத்திக் கொள்ளமுடியும் என்ற நிலையும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி, ஒரு புதிய, உண்மையான, முன்போக்கான, ஜனநாய அடிப்படையில், அதாவது ஒரு சோசலிச வேலைத் திட்ட அடிப்படையில் அமெரிக்காவின் உழைக்கும் மக்களின் பரந்த தலையீட்டினால் தீர்வு காணப்படவிட்டால், அது முழு உலகையும் பேரழிவில் ஆழ்த்திவிடும் என்ற அச்சுறுத்தலைத்தான் கொண்டுள்ளது.

2004 தேர்தலின் பேரிடரிலிருந்து சில அரசியல் முடிவுகள் பெறப்பட்டாக வேண்டும். சிதைந்து, அழுகி நாற்றமெடுக்கும் பிணமான பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் இருக்கும் இரு-கட்சிமுறை, அதிலும் குறிப்பாக ஜனநாயகக் கட்சியுடன், அமெரிக்க உழைக்கும் மக்களுடைய விதி பிணைந்து இருப்பது இந்த தேர்தலில்தான் கடைசி முறை என்பது முதலாவது படிப்பினையாகும். அமெரிக்க உழைக்கும் மக்களைப் பொறுத்தவரையில் அரசியல் அறிவுடைமையானது, தங்களுடைய வர்க்க நலன்களை அடைவதற்கு பெருநிறுவன நலன்களுக்கு தாழ்ந்து நிற்கும் மற்றும் அதனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒரு கட்சியின் மூலம் இயலாது என்பதைப் புரிந்து கொள்ளுவதில் தொடங்கவேண்டும்; மேலும் உழைக்கும் மக்களை எதிர்கொண்டுள்ள மிக அவசரமான பணி, தங்களுடைய தேவைகளையும், விருப்புகளையும் தெளிவாக வெளிப்படுத்தும் ஒரு அரங்குடனும் வேலைத்திட்டத்துடனும் ஆயுதபாணியாக்கப்பட்ட, அரசியல் ரீதியாக ஒரு சுயாதீனமான, தங்களின் சொந்தக் கட்சியை ஒழுங்கமைப்பதாகும்.

வரலாற்று அடிப்படையில் அமெரிக்கத் தொழிலாளர்கள் இயக்கத்தின் மிகப்பெரிய பலவீனமானது, அது ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிந்து நின்று கொண்டிருப்பதுதான். பலவிதமான வண்ணங்கள் உடைய அரசியல் சந்தர்ப்பவாதிகள் --தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவங்களுக்குள் இருப்பவர்கள், தாராளவாதிகள், கணக்கிலடங்கா தீவிரப் போக்குகள் என-- தாங்கள்தான் ஜனநாயகக் கட்சியில் "தொழிலாளர்களுடைய நண்பர்கள்" என்று கூறிக்கொண்டு, அவர்களுடைய சமூக சீர்திருத்தத்திற்கான அர்ப்பணிப்பு உழைக்கும் மக்களுடைய ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாக்கும் என்றும் கூறிக்கொண்டு வருகின்றனர்.

ஒரு முந்தைய வரலாற்று காலகட்டத்தில், இத்தகைய கூற்றுக்கள் பல தொழிலாளர்களிடையேயும் நம்பிக்கைத் தன்மையைத் தூண்டியிருந்தது. 1929 பெருமந்த நிலைமைக்குப் பின் வாழ்ந்திருந்த ஒரு தலைமுறையின் தொழிலாளர்கள், மத்தியதர வகுப்பின் பரந்த பிரிவினருக்கு ஹெர்பர்ட் ஹூவரிடம் (ஐக்கிய அமெரிக்க அரசுகளின் 31வது ஜனாதிபதி 1929-33) இருந்து பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு அதிகாரம் மாறியது ஒரு குறிப்பிடத்தக்க மாறுதலாக இருந்தது. தாராளவாத வரலாற்றாசியரான, ஜூனியர் ஆர்தர் ஷ்லெசிங்கரின் சொற்றொடரான "புதிய நடவடிக்கையின் வருகை" என்பதை கடன் வாங்கிக் கொண்டோமானால், அது பல மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுடைய வாழ்க்கைத் தரத்தில் கணிசமான முன்னேற்றம் படர்ந்திருந்த ஒரு காலத்திற்குள் சமூக சீர்திருத்தவாதத்தின் ஆரம்ப காலமாக இருந்தது. 1933ம் ஆண்டுக்கு முன் "தடையற்ற" முதலாளித்துவத்துடன் இயைந்து செயல்படாது என்று கருதப்பட்ட பற்றாக்குறை வகைக்குட்பட்ட செலவினங்கள், விவசாயத்திற்கு விலை ஆதரவு, தொழிற்சங்கங்களை அமைக்கும் மற்றும் அதில் சேரும் தொழிலாளர்களது உரிமைகளை உத்தியோகரீதியில் அரசாங்கம் அங்கீகரித்தல், சமூக பாதுகாப்பு அறிமுகம், பெருவணிக நிறுவனங்களின் நடவடிக்கைகளில் சில சட்டபூர்வமான கட்டுப்பாடுகளை விதிக்க உரிமை படைத்த, ஏராளமான கட்டுப்பாட்டுத் துறைகளை தோற்றுவித்தல் போன்ற நடவடிக்கைகள், அமெரிக்காவின் சமுதாயச் சூழலில் ஆழ்ந்த மாறுதலைக் குறித்தன. ஆனால் ரூஸ்வெல்ட் ஒரு புரட்சியாளரோ அல்லது சோசலிஸ்டோ அல்ல. மாறாக முதலாளித்துவ அமைப்பில் மகத்தான திறமை படைத்த, தொலை நோக்குடைய அரசியல் தலைவராக, சீர்திருத்ததிற்குட்படவில்லை என்றால் 1930களின் நெருக்கடியை முதலாளித்துவம் கடக்க இயலாது என்பதை அறிந்திருந்த முதலாளித்துவ அரசியல்வாதிதான் அவர்.

ரூஸ்வெல்ட்டின் "புதிய நடவடிக்கை" சோதனைகள் அமெரிக்கா இன்னமும் மகத்தான பொருளாதார இருப்புக்களை கொண்டிருக்கவில்லை என்றிருந்தால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க முடியாதவையாகும். அப்பொழுது அத்தகைய வர்க்க சமரசம், நல்ல உறவுகளை ஏற்றல் ஆகிய வேலைத்திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளுவதற்கு போதுமான நிதிய இருப்புக்கள் இருந்தன. அப்பொழுதும் கூட மேலும் நீதியான சமுதாயத்தை நிறுவவேண்டும் என்றிருந்த ரூஸ்வெல்ட்டின் உண்மையான விருப்பம்கூட முதலாளித்துவத்தின் யாதர்த்தங்களுக்கு எதிராகப் போயின. 1944 ஜனவரியில் நாட்டிற்கு ஆற்றிய உரையில் ரூஸ்வெல்ட், "வாழ்வுநிலை, இனம், மற்றய பிரிவுகள் என்று ஏதும் இல்லாமல் பாதுகாப்பு, செழிப்பு இவற்றைக் கொண்ட ஒரு புதிய சமுதாயத்தை ஏற்படுத்த" ஒரு இரண்டாம் உரிமைகள் மசோதாவை உருவாக்க அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவினால் அதன் குடிமக்கள் அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்படவிருந்த சமூக பொருளாதார உரிமைகளுள், கீழ்க்கண்டவையும் அடங்கியிருந்தன: "பயன்பாடு, நல்ல ஊதியமுடையை வேலைக்கான உரிமை", "போதுமான உணவு, உடை, மனமகிழ்ச்சி செயல்கள் இவற்றிற்கான ஊதியத்தைச் சம்பாதிக்கும் உரிமை", "ஒவ்வொரு குடும்பத்திற்கும் கெளரவமான ஒரு வீடு", "போதுமான மருத்துவ பாதுகாப்பு, நல்ல உடல்நலத்தை அடைந்து பாதுகாப்பதற்கான வாய்ப்பு இவற்றைப் பெறும் உரிமை", "முதுமைக் காலத்தில் உள்ள பயங்கள், நோய்வாய்ப்ட்டுள்ள கால அச்சங்கள், விபத்துக்கள், வேலையின்மைக் காலத்தின் பயங்கள் இவற்றில் இருந்து தக்க முறையில் பாதுகாக்கும் உரிமைகள்" மற்றும் "சிறந்த கல்விக்கான உரிமைகள்" ஆகியவை. "இந்தப் பொருளாதார உரிமைகள் மசோதாவை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை ஆராயுமாறும், இதற்கான பொறுப்பு உறுதியாக அதைச் சேர்ந்ததுதான் என்றும்" ரூஸ்வெல்ட் காங்கிரசை கேட்டுக் கொண்டார்.

ரூஸ்வெல்ட்டின் இரண்டாம் உரிமைகள் மசோதா சட்டமாக்கப்படவில்லை; அனைத்து குடிமக்களுக்கும் இன்றியமையாத உரிமைகள் என அவர் அளிக்கவிருந்த திட்டங்கள் எவையுமே அடையப்படவும் இல்லை. ஏப்ரல் 1945ல் ரூஸ்வெல்ட் காலமான பின்னர் தொடர்ந்த மூன்று பத்தாண்டுகள் அமெரிக்க முதலாளித்துவத்தின் மிகப்பெரும் விரிவாக்கத்தை கண்ணுற்றன; அது இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலகத்திலேயே மிகப் பெரிய பொருளாதார சக்தியாகவும், செல்வம் நிறைந்த நாடாகவும் வெளிப்பட்டது. அத்தகைய மிகவும் அனுகூலமான நிலைமையில்கூட, அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதாரக் கட்டாயங்களுடன் ரூஸ்வெல்ட்டின் கனவு சமரசப்படுத்த முடியாமல் இருந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பின் 1964 மே மாதம், சமூக சீர்திருத்த செயற்பட்டியலை முன்வைத்திருந்த கடைசி ஜனாதிபதியான லிண்டன் ஜோன்சன் (ஐக்கிய அமெரிக்க அரசுகளின் 36வது ஜனாதிபதியாக இருந்தவர் -1963-69) "பெரிய சமுதாயம்" அடையப்படுவதற்கான தன்னுடைய திட்டங்களை முன்வைத்தார். ஆனால் அந்த கால கட்டத்திற்குள், அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகந்தழுவிய நிலை ஏற்கனவே சரியத் தலைப்பட்டு விட்டிருந்தது; அதனுடைய வர்த்தக சமச்சீர்நிலை சரியத் தொடங்கிவிட்டிருந்தது, அதனுடைய நாணயம் வலுவிழக்கத் தலைப்பட்டது. வியட்நாம் போரைத் தொடர்ந்திருந்ததால் ஏற்பட்ட கூடுதலான கூட்டரசு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்த நெருக்கடி, சமூக சீர்திருத்தம் பற்றிய பேரவா நிறைந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி அடிப்படையை இல்லாதொழித்துவிட்டது. "பெரிய சமுதாயம்" அதனுடைய குழந்தைப் பருவத்திலேயே மடிந்து விட்டது.

ஜோன்சன் தன்னுடைய "பெரிய சமுதாயம்" வருகிறது என்ற அறிவிப்புக் கொடுத்து 40 ஆண்டுகளில் தொடர்ச்சியான ஜனாதிபதிகளின் நிர்வாகங்கள், குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவையாயினும், புதிய நடவடிக்கையின் தன்மை மற்றும் அதன் மரபுரிமைச் செல்வமாக என்னென்ன இருந்தனவோ அவற்றை இல்லாதொழிக்க முயன்று வந்தன. இத்தகைய சமூக, அரசியல் பிற்போக்கின் செயல்முறைகள் ஏதேனும் ஒரு ஜனாதிபதி அல்லது மற்றவருடைய தீய நோக்கங்களின் விளைவாக ஏற்பட்டது என்று கூறுவது தக்க விளக்கமாக அமையாது. அதன் உண்மைக் காரணமானது, முதலாளித்துவ புறநிலை முரண்பாடுகளில் உள்ளது.

உலக முதலாளித்துவத்தின் மையத்தானமாகிய, அமெரிக்காவிற்குள் வளர்ந்து வரும் அரசியல் பதட்டங்கள், உற்பத்தி சாதனங்களில் தனி உடைமையையும், ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் ஆனால் பரஸ்பரம் குரோதம் நிறைந்த தேசிய அரசுகள் கட்மைப்பிற்குள்ளே சர்வதேசரீதியாக ஒழுங்கு படுத்தப்படுவதன் அடிப்படையிலான ஒரு சமூக பொருளாதார அமைப்பின் உண்மையான நிலைமுறிவின் அறிகுறிகள் ஆகும். தொழில்துறை, மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மகத்தான வளர்ச்சி உலகந்தழுவிய பெரும் மக்கட்தொகுப்பு நிறைந்த சமுதாயத்தை தோற்றுவித்துள்ளது; இதன் சிக்கல் வாய்ந்த தன்மை முதலாளித்துவத்தின் கீழ் சாத்தியப்படாத, மிக உயர்ந்த மட்டத்திலான சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் முழு நனவுடன் மேற்கொள்ளப்படும் சமூகத் திட்டமிடல்கள் ஆகியவற்றைக் கோருகின்றன. அடிப்படையில் உலகப் பிரச்சினைகளாக இருப்பவற்றை போட்டியிடும் தேசிய அரசுகளாகப் பிளவுற்றிருக்கும் உலகம் எவ்வாறு தீர்க்க முடியும்? சத்துணவு, கல்வி, வீட்டு வசதி, சுகாதாரப் பாதுகாப்பு இன்னும் பலவித சமூகத் தேவைகளை கொண்டுள்ள பில்லியன்கள் கணக்கான மனிதர்களுடைய தேவைகளை, பெருநிறுவன இலாபமுறை, தனியார் சொத்துக் குவிப்பு இவற்றிற்காக முக்கிய நிதிய இருப்புக்களை செலவழிப்பதைத் தீர்மானிக்கும் ஒரு பொருளாதார வடிவமைப்பிற்குள் எவ்வாறு பூர்த்தி செய்ய இயலும்? இந்தப் பிரச்சினைகள் முதலாளித்துவ அடிப்படையில் தீர்த்துவைக்க முடியாதவை ஆகும். சர்வதேச நிதியமைப்புக்களின் சர்வாதிகாரம், அவை நிதி செல்வந்த தன்னலக் குழுக்களால் ஆளப்படும் தன்மை இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாக வேண்டும். ஒரு புதிய கூட்டான, உண்மையான ஜனநாயக வழிமுறையில் சமுதாயத் தேவைகளுக்கு வளங்களை பங்கீடுசெய்யும் வழி தேவைப்படுகிறது.

இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டமானது, ஒரு சோசலிச சர்வதேச வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய அரசியல் கட்சியை கட்டி அமைக்கப்படவேண்டும் என்பதை முன்தேவையாகக் கொண்டுள்ளது. இந்தப் பணிதான் சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்கப்பட்டுள்ளது; இதன் வெளிப்பாடுதான் 2004 தேர்தல்களில் நாங்கள் தலையீடு செய்ததற்கான காரணம். ஓர் அமைப்பு என்ற நிலைப்பாட்டில், ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் செயற்பாட்டு அளவு எங்கள் கட்சியிடம் உள்ள இருப்புக்களின் தன்மையைக் கொண்டு மிகக் குறைந்த வரம்பில்தான் இருந்தது. அமெரிக்கா ஒரு மிகப் பரந்த நாடாகும்; ஜனாதிபதிப் பதவிக்கு மூன்றாம் கட்சி வேட்பாளர்களாக நிற்பதற்கிடையே உள்ள பாதையில் ஜனநாயக, குடியரசுக் கட்சிகளின் சார்பில் வேலைபார்க்கும் தேர்தல் அதிகாரிகள் வைத்துள்ள தடைகள் மிகப் பெரியவை ஆகும். இல்லினோயிலும், ஓகியோவிலும் மாநில அதிகாரிகள் எங்கள் வேட்பாளர்களை வாக்குச்சீட்டில் இடம்பெறவிடாமற் செய்த முயற்சிகளுக்கு எதிராக நாங்கள் பெரும் செலவுடன் கூடிய கடுமையான போராட்டங்களைச் சந்திக்கவேண்டியிருந்தது. இல்லினோயில் ரொம் மக்கமனை வாக்குச் சீட்டில் இடம்பெறாமல் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாங்கள் முறியடித்தோம். ஓகியோவில் தேர்தல் நாள் வந்து சென்றுவிட்ட பின்னரும் கூட எங்களுடைய முறையீடு கூட்டரசு நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்தக் கடினமான செயல்கள், வரம்புகள் ஆகியவை இருந்தபோதிலும்கூட, எங்கள் வேட்பாளர்கள் மிகச் சிறந்தமுறையில் செயலாற்றியிருந்தனர்; சில இடங்களில், குறிப்பாக மைன், இல்லினோய் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க வாக்குகளையும் பெற்றனர். ஆனால் இந்த உடனடியான நடைமுறை விளைவுகளைவிட முக்கியமானது சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் தலையீட்டின் நீடித்திருக்கக் கூடிய அரசியல் விளைவுகள் ஆகும்.

சோசலிஸ்டுகளை பொறுத்தவரையில், தங்கள் அரசியல் நடவடிக்கைகளை அவர்கள் அளந்து, மதிப்பீடு செய்வதற்கு ஒரு விமர்சனரீதியான அளவுகோலைத்தான் கொண்டுள்ளனர். எந்த அளவிற்கு, அவர்கள் தங்கள் நடைமுறை அரசியல் பணி மூலம் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை நலன்களை வெளிப்படுத்தினர், அந்த வர்க்கத்தின் அரசியல் கல்விக்கு எத்தகைய பங்கை அளித்துள்ளனர், வருங்காலப் போராட்டங்களுக்கு தளம் அமைப்பதில் எந்த அளவு தயாரிப்பைக் காட்டியுள்ளனர்? என்பவைதான் அவை. இந்தப் பார்வையில், 2004 தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் சாதனையைப் பற்றி நாங்கள் பெருமைப்படுவதற்கு உரிய காரணங்கள் இருக்கின்றன. எங்கள் பிரச்சாரத்திற்குத் தளமாக நாங்கள் கொண்டிருந்த அரங்கு, தொழிலாளர்களுக்கு அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியைப் பற்றிய தெளிவான ஆய்வைக் கொடுத்தது; மேலும் அது முன்னெடுத்த சர்வதேச சோசலிச மூலோபாயம் இந்தப் பிரச்சாரத்திற்கு அப்பாலும் வருங்காலப் போராட்டங்களுக்கு அரசியல் வழிகாட்டியாக இருக்கும் வகையில், நிலைத்து நிற்கும்.

சோசலிச சமத்துவக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னோக்கானது, குறைந்த அல்லது அதிக அளவில், இருகட்சி முறையை பற்றிய எவ்விதமான விமர்சனம் இருந்தபோதிலும், தங்கள் அரசியல் தலையீடு 2004ல் ஜனநாயகக் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இருக்கவேண்டும் என்ற கருத்தில் இடது புறம் அதை நகர்த்தவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட, எண்ணற்ற தீவிரப் போக்கினரிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. நாடெர் மற்றும் ஏனைய அதிகாரபூர்வமான பசுமைக் கட்சியின் வேட்பாளர்கள் அத்தகைய நோக்கத்தைத்தான் கொண்டிருந்தனர். இத்தகைய முன்னோக்கு தன்னுடைய மிகத் திவாலான தன்மையையும், ழிணீtவீஷீஸீ எடுத்திருந்த அரசியல் முறையான, தன்னைப் பற்றிய போலிப் பெருமித உயர் உணர்வு ஆகியவற்றில்தான் வெளிப்பட்டிருந்தது; தேர்தலுக்கு முன் இது ஜோன் கெர்ரி பற்றிய பெரும் ஆரவார ஒப்புதலை வழங்கியது. இவர்கள் அனைவரும் அவரை "மிக உயர்ந்த அறிவு படைத்தவர், ஆழ்ந்த விவேகமும், பெரிய தீர்மானம் கொள்ளும் தன்மையும் உடையவர்" என்று புகழ்ந்திருந்தனர். இத்தகைய தனிப்பட்ட குணநலன்களைத் தவிர, கெர்ரி தேர்ந்தெடுக்கப்படுவதுதான் அமெரிக்காவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு ஒரே வழி என்றும் Nation (தாராளவாத முன்னோக்கில் அரசியலுக்கு ஈடுபடுத்திக்கொண்ட ஒரு அமெரிக்க இதழ்) வாதிட்டது. புஷ்ஷின் மறுதேர்தல் அமெரிக்காவில் அடிப்படை அரசியலமைப்பு ஆட்சிக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அத்தகைய ஆபத்து கெர்ரியைத் தேர்ந்தெடுப்பதின் மூலம்தான் தவிர்க்கப்படும் என்றது.

Nation உடைய நிலைப்பாட்டைப்பற்றி விரிவான ஆய்வை நடத்த நேரம் அனுமதிக்கவில்லை. Nation, இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்துள்ள பல துன்பியல்களின் படிப்பினைகளை நிராகரித்துள்ளது என்பதை மட்டும் சுட்டிக்காட்டி நிறுத்திக் கொள்ளுகிறேன். 1930களில் ஐரோப்பிய பாசிசம் நிரூபித்திருப்பது போல், தொழிலாள வர்க்கம் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒர் சுயாதீனமான அரசியல் அணிதிரளலுக்கான தேவையைக் கொண்டுள்ளனர். ஆளும் செல்வந்தத்தட்டினருக்கு தாழ்ந்து அரசியலில் நிற்கும் வரை சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலை அது எதிர்த்துப் போரிட முடியாது. தொழிலாளர்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் உரிமையை ஜனநாயகக் கட்சியிடம் ஒப்படைக்கவேண்டும் என்று ஆலோசனை கூறுவதானது, Nation இதைத்தான் தன்னுடைய தலையங்கத்தில் "தயக்கம் காட்டும் ஏகாதிபத்தியவாதிகள்" என்று விளக்கியுள்ளது, தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறுவது போல் உள்ளது.

புஷ் மறுபடி தேர்வு செய்யப்பட்டதை, Nation ஏற்றுக் கொண்ட விதம், பீதியையும் திகைப்பையும் கொண்டுள்ள நிலை என்பதில் வியப்பு இல்லை. அமெரிக்க மக்களை அனைவருக்குமே கத்தா பொலிட் (Katha Pollitt) சொல்லினால் இடிபோன்ற தன்மையுடைய திட்டுக்களை வீசி "துயரப்படுங்கள்" என்று கூறியுள்ளார். அவர் "ஜோன் கெர்ரி ஒரு சிறந்த வேட்பாளர். வாக்காளர்கள் தாங்கள் எதை விரும்புகின்றனரோ அதைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்: தேசியவாதம், முன்கூட்டி தாக்கித் தனதாக்கும் போர், நீதியல்ல ஆணை, சித்திரவதை மூலமாக "பாதுகாப்பு", மகளிர் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது பிற்போக்கு தாக்குதல்கள், செல்வம் பெற்றிருப்போர், இல்லாதவர் இவர்களுக்கிடையே மிகப்பெரிய இடைவெளியை கொண்டிருத்தல், தங்கள் திருச்சபைகளுக்கு அரசாங்கத்தின் பாரிய பங்களிப்புகள், என்னுடைய வழி அல்லது நெடுஞ்சாலை ஜனாதிபதி, ஆகியவற்றைத்தான் மக்கள் விரும்புகின்றனர்." என எழுதுகிறார்.

அமெரிக்க மக்கள் ஜோன் கெர்ரியின் முயற்சிகளுக்கு தகுந்த முறையில் நடந்து கொள்ளவில்லை என்று பொலிட் கண்டனம் செய்கையில், Nation உடைய ஆசிரியர்கள் மற்றொரு பக்கத்தில் புலம்புவதாவது: "பிரச்சாரத்தின் எந்த நேரத்திலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நேர்மையான முறையில் நாட்டை எதிர்கொண்டுள்ள பிரச்சினை எதையும் விவாதிக்கவில்லை: ஈராக் போரில் இருந்து எவ்வாறு நாட்டை விடுவித்துக் கொள்ளுவது என்பதே அது." மேலும் கெர்ரி தொழிலாளர்களின் உண்மையான நலன்கள் பற்றியும் அக்கறை காட்டவில்லை. "அவர் அவர்களுடைய வேதனைக்கு, வலிக்கு எந்த நிவாரணத்தையும் அளிக்கவில்லை." இத்தகைய தோல்விகளுக்குப் பின்பும் கூட Nation உடைய ஆசிரியர்கள் தங்களுடைய ஜனநாயகக் கட்சிக்கு துணையாக நிற்கும் தன்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். "வரலாற்றுரீதியாக கட்சியின் மிகச் சிறந்த காலகட்டமானது, அது மக்கள் இயக்கங்களினால், அதாவது தொழிலாளர் இயங்கங்களில் இருந்து குடியுரிமை இயக்கம், பெண்கள் இயக்கம் மற்றும் ஓரினச் சேர்க்கை உரிமை இயக்கம் வரை வெளியில் இருந்து வரும் இயக்கங்களால் நடவடிக்கை எடுக்கத் தூண்டப்படும்போதுதான் வந்துள்ளது" என்று Nation எழுதுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி இத்தகைய ஆய்வையும் முன்னோக்கையும் முற்றிலும் நிராகரிக்கிறது. ஜனநாயகக் கட்சியுடன் ஐயத்திற்கிடமின்றி மற்றும் மாற்ற இயலாத வகையில் முறித்துக் கொண்டாலன்றி, தொழிலாள வர்க்கம் முன்னேற முடியாது. அத்தகைய முறிவு அமைப்பு ரீதியான இணைப்பில் மாறுதல்கள் வேண்டும் என்பதை மட்டும் அல்லாமல், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் முன்னோக்கு மற்றும் உலகப் பார்வை ஆகியவற்றிலும் முழுமையான மாறுதல்கள் வேண்டும் என்ற உட்குறிப்பைக் கொண்டுள்ளது. தேசியத்தில் இருந்து சர்வதேசியம் என்ற கண்ணோட்டதிற்கு நகருவதை அது தன்மையாகக் கொண்டுள்ளது; முதலாளித்துவம் செயல்படுவதை வேறு வழியின்றி ஏற்றல் என்ற நிலையில் இருந்து, சோசலிசத்தின் தேவை என்பதை உணரவேண்டும்: அனைத்தும் ஏதாவது ஒரு காலத்தில் நல்ல முறைக்கு மாறும் என்ற வெறும் நம்பிக்கைக்கு பதிலாக ஒரு புரட்சிகரமான முறையில் அமெரிக்க சமுதாயத்தை ஆர்வத்துடன் மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்தை வாதிட வேண்டும்.

அத்தகைய மாற்றத்திற்கு ஆதரவாக இரு காரணிகள் செயல்பட்டு வருகின்றன. முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடியே முதல் காரணமாகும்: இது தொழிலாள வர்க்கத்திற்கு அதிர்ச்சிகளில் இருந்தும் பெரும் குழப்பங்களில் இருந்தும் சிறிதும் தற்காலிக நிவாரணத்தைக் கொடுக்காது. போர் அப்படியே சென்று விடாது; அது ஒன்றும் எங்கோ தொடுவானத்தில் இருக்கும் சிறு கலக்கம் என்று மட்டும் இருந்துவிடாது. எப்பொழுதும் போலவே, போரின் பயங்கரங்கள் தங்கள் நிழலை இன்னும் கூடுதலான முறையில் விரிவடையும் பகுதிக்குள் கொண்டு வரும்; இன்னும் கூடுதலான மனிதப்பலிகளை வற்புறுத்திக் கேட்கும், உள்நாட்டில் தீவிரமான முறையில் உரிமைகள் இல்லாதொழித்தலை கோரும். முதலாளித்துவ அமைப்பில் பெருகும் உலகளாவிய முரண்பாடுகள் இப்பொழுது நடந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல்களிலிருந்து சிறு ஓய்வையும் கூட அனுமதிக்காது. தேர்தலுக்குப் பின் அமெரிக்க டொலர் மிக மோசமான முறையில் மதிப்பில் குறைவது வரவிருக்கக்கூடிய பொருளாதார உறுதியற்ற தன்மைக்கு கட்டியம் கூறுவதாகும். மோசமாகிக் கொண்டு வரும் நெருக்கடியினால் விளையும் குழப்பம் தொழிலாளர்களை தங்களின் மிக அடிப்படையான சமூக நலன்களை பாதுகாக்கும் தேவையை எதிர்கொள்ள வைக்கும்.

இரண்டாவது காரணி அகநிலைத் தன்மையுடையது: அதாவது, சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள சகசிந்தனையாளர்களுடன் இணைந்து, ஒரு புதிய தலைமுறை தொழிலாள வர்க்கம் மற்றும் மாணவர்களுக்கு சோசலிசத்தின் கொள்கைகளைப் பற்றி பயிற்றுவிப்பதற்கும், தொழிலாள வர்க்கம் ஒட்டுமொத்தத்திற்கும் அதன் வரலாற்றுத் தன்மையின் போராட்டங்களுக்குள் செல்லுகையில் ஒரு தெளிவான அரசியல் திசைவழியை வழங்கவும் செய்யும். தேர்தல் முடிந்துவிட்ட நாட்களில், நாங்கள் உலக சோசலிச வலைத் தளத்தின் நூற்றுக்கணக்கான வாசகர்களிடம் இருந்து பலதரப்பட்ட போக்குகள், உணர்வுகள் இவற்றின் வெளிப்பாட்டைக் கொண்ட கடிதங்கள் வரப்பெற்றோம்; அவற்றில்... சீற்றம், இகழ்வுணர்வு, குழப்பம், கடுமையான தன்மை, துக்கம் ஆகியவற்றைக் காணலாம். சில கடிதங்களில் இவை அனைத்தின் திரட்டையும் காணலாம். ஆனால் பெரும்பாலான கடிதங்கள் மீண்டும் போராட்டத்திற்குத் தயாராகும் விருப்பத்தை வெளியிடுகின்றன; மறு ஆய்வின் தேவையை வலியுறுத்துகின்றன; அவர்களுடைய சொந்த அரசியல் கருத்துக்களே மாற்றத்திற்கு உட்படக்கூடும். தேர்தல் முடிவுகள் விடயங்களை உலுப்பிவிட்டுள்ளது.

இது சோசலிச சமத்துவக் கட்சிக்கு ஒரு வாய்ப்பையும், சவாலையும் கொடுத்துள்ளது. அதன் செயற்பாடுகளை விரிவாக்குதல், இன்னும் கூடுதலான ஆக்கிரோஷமான முறையில் பலரையும் அணுகுதல், தங்களுடைய ஆதரவாளர்கள் பலரையும் இடையறாமல் தொடர்பு கொள்ளுதல், உலக சோசலிச வலைத் தளத்தின் அன்றாட வாசகர் வட்டத்தை பெருக்குதல், வாசகர்கள், ஆதரவாளர்கள் பலரையும் கட்சியின் தீவிர உறுப்பினர்களாக ஆக்குதல் போன்ற பெரும் பொறுப்புக்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் தோள்களில் விழுந்துள்ளன.

அமெரிக்காவில் சோசலிசத்திற்கான போராட்டத்தில் வரக்கூடிய இடர்பாடுகளை நாங்கள் மறுக்கவும் இல்லை, குறைக்கவும் இல்லை. கம்யூனிச-எதிர்ப்புப் பிரச்சாரத்தில் பல தசாப்தங்களின் தாக்கம், சூனியத்தனமான வேட்டை, ஊழல்கள், தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுக்கும் தன்மை, புத்திஜீவிகளின் அரசியல் ஈடுபாடு ஒப்பீட்டளவில் குறைந்திருக்கும் தன்மை, தாழ்ந்த ஜனரஞ்சக கலாச்சாரதரம், செய்தி ஊடகத்தின் இழிந்த செல்வாக்கு, தேசிய தனித்தன்மைகளின் மரபுகள், "கடுமையான தனிமனித சுதந்திரத்தை" புகழ்ந்துரைத்தல், வரலாறு மற்றும் தத்துவார்த்த பொதுக் கருத்துக்கள் மீதான செயல்முறைவாத இகழ்வு, இவை அனைத்தும் சோசலிச நனவிற்கான போராட்டத்தை சிக்கல் மிகுந்தவையாக மாற்றுகின்றன. ஆனால் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி பற்றிய புறநிலை உட்குறிப்புக்களை ஆரம்பப்புள்ளியாக எடுத்துக் கொள்கின்றோம். மேலும் வழிவகை எப்படிச் சிக்கலாக இருந்தபோதிலும், சமூக இருப்பானது இறுதி ஆய்வில் சமூக நனவைத் தீர்மானிக்கிறது. லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளது போல், வரலாறு நீண்ட காலத்தில், உழைக்கும் வர்க்கத்திற்கு உணர்மை உருவாவதற்கான பாதை ஒன்றை அமைக்கும். முதலாளித்துவத்தின் நெருக்கடியில் இருந்து வரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சோசலிசம், சர்வதேசியம் இவற்றைத்தவிர வேறு வழியில்லை என்பதை அமெரிக்கத் தொழிலாளர்கள் அறிந்து கொள்ளுவர். ஏனைய பாதைகள் அனைத்தும் பேரழிவிற்குத்தான் இட்டுச் செல்லும். அத்தகைய மாற்றுத்தான் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியினதும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தினதும் பொறுப்பு தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டு, எங்களால் முடிந்த வரை இந்த மாற்றை தெளிவுடனும், விளக்கமாகவும் எடுத்துரைக்க வேண்டும். நாங்கள் அதை செய்கையில், எந்த மாற்றீடு அவர்களுக்கு விருப்பமானது என்பதை தீர்மானிப்பதை நாங்கள் தொழிலாள வர்க்கத்திடம் விட்டு விடுவோம்.


Copyright 1998-2004
World Socialist Web Site
All rights reserved

சோசலிச சமத்துவக் கட்சியின் 2004 பிரச்சாரம்: எதிர்வரும் போராட்டங்களுக்கான ஒரு தயாரிப்பு

2004 அமெரிக்கத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்

சோசலிச சமத்துவ கட்சியுடைய ஜனாதிபதி வேட்பாளரின் அறிக்கை
2004, ஜூலை நான்கு: அமெரிக்கப் புரட்சியின் 228-வது வருடம்

போருக்கு எதிரான போராட்டமும் 2004 அமெரிக்க தேர்தல்களும்

சோசலிச சமத்துவக் கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜிம் லோரன்ஸ், WSWS-SEP மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்

2004 அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான குரல்

அமெரிக்க இராணுவ வாதத்தின் அரசியல் பொருளாதாரம்

அமெரிக்கா பெருமளவில் இராணுவ நடவடிக்கை எடுக்க கொலம்பியா ஜனாதிபதி கோரிக்கை

கிஸிங்கரும் ஆர்ஜென்டினாவும்: அரசபயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஆதரவு பற்றிய ஓர் ஆய்வு

அமெரிக்க அரசாங்கம் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டதா?

வரலாற்றிலிருந்து படிப்பினைகள்: 2000 தேர்தல்களும் புதிய "கட்டுப்படுத்த முடியாத முரண்பாடுகளும்"

காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்

முஷாரஃப் சிட்டி வங்கி முன்னாள் அதிகாரியை பாக்கிஸ்தான் பிரதமராக அமர்த்தினார்

இந்திய பொதுத் தேர்தல் ஆரம்பிக்கிறது
வாக்குப் பதிவுகள் போட்டி கடுமையடைந்து வருவதாய் சுட்டிக்காட்டுகின்றன

இந்தியாவில் அரசியல் பூகம்பம்
இந்து மேலாதிக்கவாத பிஜேபி பதவியை இழந்தது

இந்தியா: காங்கிரஸ் ஆட்சிக்கு வர ஸ்ராலினிஸ்டுகள் ஊக்குவிப்பு

இந்திய துணைக்கண்டத்தில் போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்