World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Twenty years since the fall of the Berlin Wall

பேர்லின் சுவர் வீழ்ச்சியின் 20 ஆண்டுகளுக்கு பின்னர்

By Peter Schwarz
10 December 2009

Back to screen version
 

நவம்பர் 29, 2009 அன்று லைப்சிக்கில் ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளர் பீட்டர் சுவார்ட்ஸ் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டம் ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க இடத்தில் நடக்கிறது. இங்கே, இந்த சன்னலுக்கு முன்னே செப்டம்பர் 4, 1989ல் முதல் "திங்கள் ஆர்ப்பாட்டம்" நடந்தது. நிக்கோலாய் தேவாலயத்தில் திருச்சபைக் கூட்டம் ஒன்றிற்குப் பின்னர் கிட்டத்தட்ட 1,200 மக்கள் தெருக்களுக்கு வந்து "சுதந்திர மக்களுக்காக ஒரு சுதந்திர நாடு", "கூட்டம் கூடுவதற்கும், ஒன்றிணைவதற்குமான சுதந்திரம்", "பாரிய மக்கள் வெளியேற்றத்திற்கு பதிலாக தடையற்ற பயணிக்கும் சுதந்திரம்", என்று எழுதப்பட்டிருந்த கோஷ அட்டைகளைத் தாங்கி நின்றனர்.

இந்த அட்டைகள் ஸ்ராலினிச ஸ்ராசியினால் (Stasi -அரசாங்கப் பாதுகாப்புப் பிரிவினால்) கைப்பற்றப்பட்டு அணிவகுப்பு போலீஸாரால் நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்த வாரங்களில் ஆர்ப்பாட்டங்கள் பெருகின. முதலில் ஒரு சில ஆயிரக்கணக்கானோர்தான் கலந்துகொண்டனர். பின்னர் அக்டோபர் நடுவில் இருந்து அவை நூறாயிரக்கணக்கான மக்கள் என்று டிரேஸ்டனுக்கும் மற்ற நகரங்களுக்கும் பரவின. நவம்பர் 4ம் திகதி ஒரு மில்லியன் மக்கள் பேர்லினின் Alexanderplatz வில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (GDR) வரலாற்றில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தில் கூடினர். இதற்கு ஐந்து நாட்களுக்குப் பின்னர் பேர்லின் சுவர் சரிந்த, 11 மாதங்களுக்குப் பின்னர் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு இருக்கவில்லை.

அப்பொழுது முதல் இந்த இயக்கம் ஒரு "அமைதியான புரட்சி" என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் 1989 நிகழ்வுகள் உண்மையிலேயே ஒரு புரட்சி என அழைக்கப்படும் தகுதி உடையவையா?

திங்கள் ஆர்ப்பாட்டங்கள் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் ஆட்சி விரைவில் சரிவதற்கு பங்களித்திருந்தாலும், அதற்கான பல காரணிகளில் ஒன்றுதான் அவை என்பதுமட்டுமல்லாது மிக முக்கியமானது என்று கூடக் கூற முடியாது. திங்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியபோது, கிழக்கு ஜேர்மனியின் சோசலிச ஐக்கிய கட்சியின் (SED) ஆட்சி ஏற்கனவே பதவியைக் கைவிடத் தயாராக இருந்தது.

ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு திவால்தன்மையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மேற்கு நாடுகளுக்கான நாட்டின் கடன் 1970ல் 2 பில்லியன் மார்க் என்பதில் இருந்து 49 பில்லியனாக உயர்ந்து விட்டது. மேற்கு ஜேர்மனிய அரசாங்கத்தின் உதவி இல்லாவிட்டால் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் ஆட்சி நீண்ட காலம் தப்பித்திருக்க முடியாது.

1989 அக்டோபரில் நாட்டின் திட்டக்குழுத் தலைவரான ஹெகார்ட் ஷ்யூரர் முன்வைத்த ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் இருந்த பொருளாதார நிலைமை பற்றிய பகுப்பாய்வு "கடன்கள் உயர்ந்துவிட்ட நிலை ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு திருப்பிக் கொடுக்கும் திறன் என்னும் வினாவை எழுப்பிவிட்டது" எனக் கூறியது. "இன்னும் கடனைக் கொடுத்தலை நிறுத்துதல் என்பது 1990க்குள் 25-30 சதவிகிதம் வாழ்க்கைத் தரங்களைக் குறைத்தல் என்பதுடன் ஜேர்மன் ஜனநாயக குடியரசு ஆட்சி செய்யப்பட முடியாத நிலையையும் ஏற்படுத்திவிடும்" என்று ஷ்யூரர் முடிவுரையாகக் கூறியிருந்தார்.

இதன் பொருள் என்ன என்பது தெளிவு. மேற்கு ஜேர்மனி மற்றும் உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் தொழிலாளர்களிடையே பெரும் ஆதரவை பெற்றிருக்கக்கூடிய, கட்டுப்படுத்தப்பட முடியாத ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், கலகங்கள் என்பவை வந்திருக்கும். மேற்கு ஜேர்மனியிலும் மற்ற முதலாளித்துவ நாடுகளிலும் ஆழ்ந்த நெருக்கடியின் அடையாளங்கள் அப்பொழுது இருந்தன என்பதையும் மறப்பதற்கில்லை.

மேற்கு ஐரோப்பாவில் 20 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வமாக வேலையின்றி இருந்தனர்; உண்மையில் அது 30 மில்லியனுக்கும் அதிகமாக இருந்திருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொழிலாள வர்க்கம் போராடிப் பெற்றிருந்த சமூக சீர்திருத்தங்கள் தொடர்ந்த தாக்குதலுக்கு உட்பட்டிருந்தன. நிதிய உறுதியற்ற தன்மையின் அடையாளங்கள் பெருகின. Dow Jones Industrial Average ஒரே நாளில் 20 சதவிகிதம் சரிந்தது; மீண்டும் அதன் பழைய நிலையை அடைவதற்கு 15 மாதங்கள் பிடித்தன.

இச்சூழ்நிலையில் SED மேற்கு ஜேர்மனிய அரசாங்கத்தின் தயவை நாட முடிவு செய்தது. SEP யின் கடைசிப் பிரதமர் Hans Modrow பின்னர் கூறியபடி, "என் கருத்தில், ஐக்கியத்துக்கான வழி தவிர்க்க முடியாதது, எனவே உறுதியாகப் பின்பற்றப்பட வேண்டியதாகும்." பரந்த கட்டுக்கதைக்கு மாறாக, ஒரு உண்மையான புரட்சியின்போது ஏற்பட்டிருக்கக்கூடியதுபோல் நிகழ்வுகள்மீது SED கட்டுப்பாட்டை இழக்கவில்லை.

மோட்ரோ அரசாங்கம் ஜேர்மனிய மறு ஐக்கியத்திற்கு ஏற்பாடு செய்து, மோட்ரோவின் சொற்களில், "நாட்டின் ஆளும் பொறுப்பு பாதுகாக்கப்பட்டு, பெரும் குழப்பம் தவிர்க்கப்படுவது" உறுதியாயிற்று. SED இவ்விதத்தில் கிழக்கு ஜேர்மனியில் ஒரு உண்மையான புரட்சிகர எழுச்சியை வரவிடமால் தடுத்தது மட்டும் இல்லாமல் 1991ல் மற்றொரு பாராளுமன்றத் தேர்தலில் இன்னொரு பதவிக்காலத்தைப் பெற அதிகவாய்ப்பு இல்லாதவர் எனக் கருதப்பட்டிருந்த கெல்முட் கோலின் மேற்கு ஜேர்மன் அரசாங்கத்தையும் காப்பாற்றியது. கோல் வேறு எந்த ஜேர்மனிய அதிபரும் ஆளாத அளவிற்கு 1998 வரை நீண்டகாலம் பதவியில் இருந்தார்.

1989 இலையுதிர் காலத்தில் ஜேர்மனிய நிகழ்வுகளுக்கு வழிவகுத்த முக்கிய முடிவுகள் மாஸ்கோவில் நான்கு ஆண்டுகள் முன்னதாகவே எடுக்கப்பட்டிருந்தன. மிகைல் கோர்பஷேவை பொதுச் செயலாளர் என நியமித்தபோது சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ மீட்பிற்கு ஒரு பாதையை ஏற்படுத்திவிட்டது. 1920 களில் அதிகாரத்தில் இருந்து மார்க்சிஸ்ட்டுக்களை விரட்டி, 1930 களில் உடல்ரீதியாகவும் அவர்களை அழித்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தன்மை, பங்கு ஆகியவை பற்றி அறியாமல், நாம் உண்மையில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் முடிவு பற்றி அறிந்து கொள்ள முடியாது. தோழர் வொல்ப்காங் வேபர் இப்பிரச்சினை பற்றி சிறப்பு விரிவுரை கொடுக்க இருக்கிறார். நான் என்னுடைய கருத்துக்களை ஜேர்மன் ஜனநாயகக் குடியரசுயுடன் நிறுத்திக் கொள்ளுகிறேன்.

SED எப்படி ஜேர்மனிய ஒற்றுமைக்கு உந்நுதல் கொடுத்தது

பேர்லின் சுவர் சரிந்த ஆறு வாரங்களுக்கு பின் கொடுக்கப்பட்ட தன்னுடைய ஆரம்ப உரையில், புதிய ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் பிரதம மந்திரி ஹென்ஸ் மோட்ரோ இரு ஜேர்மனிகளுக்கம் இடையே "அரசாங்க உடன்பாடு" ஒன்றை முன்வைத்தார். மேற்கு ஜேர்மனிய அரசாங்கத்தை பேர்லின் சுவர் சரிவு வியப்பில் ஆழ்த்தியிருந்தது. இப்பொழுதுதான் அது பல தசாப்தங்கள் முயற்சித்த, ஆனால் அடையப்படுவது கிட்டத்தட்ட கடினம் என்று இருந்த ஜேர்மன் மறுஐக்கியம் ஏற்பட்டு விடக்கூடிய வாய்ப்பு யதார்த்தத்தில் வந்துவிட்டது என்பதை அது உணர்ந்தது.

11 நாட்களுக்குப் பின்னர் நவம்பர் 28 அன்று கோல் ஒரு பத்து அம்சத் திட்டத்தின் மூலம் இதை எதிர்கொண்டார். அதில் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் ஐக்கியம் வந்துவிடும் என முற்கூறியிருந்தார். ஆனால் தன்னை SED-PDS (ஜனநாயக சோசலிசக் கட்சி) என்று மறு பெயரிட்டுக் கொண்ட SEDக்கு, அது விரைவானதாக இருக்கவில்லை. டிசம்பர் 19ம் தேதி மோட்ரோவும் கோலும் டிரேஸ்டனில் சந்தித்து சர்வதேச எதிர்ப்பிற்கு இடையே தங்கள் திட்டத்தை ஒருங்கிணைத்து இணைந்து செயல்படுத்துவதற்கு கூடினர்.

எல்லாவற்றிற்கும் மேலாக பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசாங்கங்கள் ஐக்கியத்திற்கு எதிராக இருந்தன. ஏனெனில் அவை ஒரு சக்தி வாய்ந்த பெரும் ஜேர்மனி வெளிப்பட்டுவிடும் என்று அஞ்சின. மறுபுறத்திலோ அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபுள்யூ புஷ் (ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தந்தையார்) கோலின் திட்டத்திற்கு இசைவு கொடுத்தார்.

சோவியத் புறத்தில் இருந்து வரச்சாத்தியமான தடைகளை அகற்றும் முயற்சியில் மோட்ரோ ஈடுபட்டார். ஜனவரி இறுதியில் அவர் ஜேர்மன் மறு ஐக்கியத்திற்கு கோர்ப்பஷேவின் அங்கீகாரத்தை பெற மாஸ்கோவிற்கு பயணித்தார். தன்னுடைய நினைவுக்குறிப்புக்களில் மோட்ரோ கோல் அல்ல, தான்தான் கோர்ப்பஷேவை ஐக்கியத்தின் பாதையில் தடைகள் ஏதும் வைக்காமல் இணங்கச் செய்ததாக வலியுறுத்தியுள்ளார்.

அவர் எழுதுவது: "ஐக்கியத்துக்கான அடிப்படை முடிவு ஜனவரி 30 அன்று கோர்ப்பஷேவாலும் என்னாலும் பரந்த விவாதத்திற்கு பின்னர் முடிவாயிற்று. பெப்ருவரி மாதம் அதிபர் [கோல்] விவாதித்து முடிவெடுத்தது ஜனவரி 30 அன்று எடுக்கப்பட்ட முடிவுகளை தளமாகக் கொண்டிருந்தது."

சோவியத் ஒன்றியத்தில் இருந்து திரும்பியதும் மோட்ரோ பெப்ருவரி 1ம் தேதி "ஜேர்மனி, ஒரே தந்தை நாடு" என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நாட்டில் வெள்ளமென ஏற்பட்டிருந்த தேசிய அலையின் முன்னணியில் தன்னை இருத்திக் கொண்டு, மார்ச் மாதத்தில் கிழக்கு ஜேர்மனிய பாராளுமன்றத் தேர்தல்களில் CDU (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்) வை வெற்றிக்கு இட்டுச் சென்றார். மோட்ரோ அரசாங்கமும் கோல் அரசாங்கத்துடன் நிதியத் துறை ஒருங்கிணைப்பு பற்றிப் பேச்சுவார்த்த்கைகள் நடத்தியது: இது ஐக்கியத்தை பின்வாங்கப்பட முடியாததாக்கி ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் தொழில்துறையின் முழுச்சரிவிற்கும் வழியைத் தோற்றுவித்தது.

கிழக்கு ஜேர்மனிய மக்களுக்கு பெரிதும் விரும்பப்பட்ட மேற்கு ஜேர்மனிய பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பைக் கொடுத்த Deutschmark அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு நச்சு பூசப்பட்ட பொருளாகும். இப்பொழுது Deutschmarks ல் விலை கொடுக்கப்பட்டதால், கிழக்கு ஜேர்மனியப் பொருட்கள் கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் வாங்க முடியாத நிலைக்குப் போயின. அவற்றுடனோ பொருளாதார அளிவில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு நெருக்கமாகப் பிணைந்திருந்தது. அதே நேரத்தில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் குறைந்த தொழிலாளர் உற்பத்தித்திறன் அதன் பொருட்களை மேலை சந்தைகளில் போட்டித்தன்மையை பெற முடியாத நிலையில் தள்ளியிருந்தது. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் பொருளாதாரச் சரிவு எளிதில் கணிக்கப்படலாம் என்று போயிற்று. மோட்ரோ அரசாங்கம் அதற்கு ஏற்பாடு செய்துவிட்டது. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் தொழில்துறையை அடுத்த மூன்று ஆண்டுகளில் விற்றுவிடும் அறக்கட்டளை அமைப்பான Treuhandanstaltஐ அது நிறுவியது.

இவ்வித தொழில்துறை சரிவின் சமூக விளைவுகள் பேரழிவு தந்தவையாக இருந்தன. மேற்கு ஜேர்மனிய பொருளாதாரத்தின் மூத்த அதிகாரிகள் தலைமையில் இயங்கிய Treuhand 14,000 அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை கலைத்தது அல்லது விற்றுவிட்டது. கிட்டத்தட்ட 95 சதவிகித தனியார்மய நிறுவனங்கள் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசுக்கு வெளியே இருந்து வந்தவர்களின் உடைமையாயின.

மூன்று ஆண்டுகளுக்குள் ஊழியர்களில் 71 சதவிகிதத்தினர் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர் அல்லது தங்கள் வேலைகளை இழந்துவிட்டனர். 1991 ஐ ஒட்டி 1.3 மில்லியன் வேலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. மற்றும் ஒரு மில்லியன் பணிகள் தொடர்ந்த ஆண்டுகளில் மறைந்துவிட்டன. உற்பத்தித் துறையில், ஊழியர்களின் எண்ணிக்கை என்று 1989ல் இருந்த எண்ணிக்கையில் கால் பகுதிதான் உள்ளது. கிழக்கு ஜேர்மனிய மக்களில் பெரும் பிரிவினர் வருங்காலத்தைப் பற்றி நம்பிக்கையை விரைவில் இழ்ந்தனர். இதற்கு பிறப்பு விகிதச் சரிவு தெளிவான அடையாளம் ஆகும். இது 1989ல் 199,000 என்பதில் இருந்து 1994ல் 79,000 புதிய பிறப்புக்கள்தான் எனச் சரிந்தது.

தொழில்துறை, சமூக விளைவுகள் இன்றளவும் தீர்க்கப்பட்டுவிடவில்லை. முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் இன்றைய 13 பில்லியன் தொகை பேர்லின் சுவர் சரிந்தபோது இருந்த 14.5 மில்லியனைவிட குறைவுதான். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நாள் ஒன்றிற்கு 140 கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கிற்கு செல்லுகின்றனர்.

பல ஆண்டுகளாக வேலையின்மை விகிதம் 20 சதவிகதத்திற்கும் அதிகமாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் அது தற்போதைய 12 சதவிகிதத்திற்கு வந்துள்ளது. இந்தச் சரிவு ஒன்றும் தக்க வேலைகள் தோற்றுவித்ததால் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக குறைவூதிய மற்றும் பகுதி நேரப் பணிகள் அதிகமானதால் வந்துள்ளது. கிழக்கு ஜேர்மனியில் இரு தொழிலாளர்களில் ஒருவர் 9.20 யூரோ மணிக்கு என்ற குறைந்தபட்ச ஊதியத்தைவிட மிகக்குறைவாகத்தான் சம்பாதிக்கின்றனர். சராசரி ஊதியமான 13.50 யூரோக்கள் என்பது மேற்கின் தரமான 17.20 யூரோக்கள் என்பதைவிட மிகக் குறைவாகும்

முதலாளித்துவ மீட்பு எப்படி வந்தது?

இக்கூட்டம் பற்றிய அறிவிப்பில் நாங்கள் எழுதினோம்: "பேர்லின் சுவர் சரிவு சர்வாதிகாரத்தின் முடிவிற்கு கட்டியம் கூறியது. அதன் இடத்தின் ஜனநாயகம் வரவில்லை, ஆனால் ஒரு புதிய சர்வாதிகாரம் வந்தது, அதுதான் முதலாளித்துவ சர்வாதிகாரம் என்பதாகும்."

இது எப்படி நடந்தது? 1989ல் கணிசமான தைரியத்தைக் காட்டி தெருக்களுக்கு வந்தவர்கள் ஏன் இத்தகைய கொடூரமான வளர்ச்சிகளைத் தடுத்து தங்கள் நலன்களை இன்னும் ஆக்கிரோஷமாக உறுதிபடுத்திக் கொள்ள முடியவில்லை? மக்களின் பெரும்பான்மையோராக இருந்த ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் தொழிலாள வர்க்கம் ஏன் அரசியலில் ஒரு சுயாதீன பாத்திரத்தை வகிக்கவில்லை?

இந்த வினாக்களுக்கு விடையளிக்க இரு பிரச்சினைகளை நாம் ஆராய வேண்டும்: ஸ்ராலினிசத்தினாலும், 1989ல் இயக்கத்திற்கு தலைமை வகித்த அரசியல் குழுக்களின் கொள்கைகளாலும் முறையாக சோசலிச மரபுகள் தகர்க்கப்பட்டிருந்தன.

முதல் பகுதியுடன் முதலில் தொடங்குவோம். வேறுவிதமாகக் கூறிவந்தாலும், SED ஒரு சோசலிச கட்சி அல்ல, ஒரு ஸ்ராலினிச கட்சியாகும். கோட்பாட்டுக் கருத்தாய்வுகள், சமூக அடித்தளம் என்ற விதத்தில் ஸ்ராலினிசம் மார்க்சிசத்திற்கு முற்றிலும் எதிரானது. வலதுசாரி சமூக ஜனநாயகவாதிகளை போவே இது ஒரு தேசிய வகை சோசலிசக் கருத்தாய்விற்கு வாதிடுகிறது; அல்லது ஸ்ராலினோ கூறியபடி "ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டமைப்பது" என்று கருத்தாய்வு உள்ளது. இதற்கு மாறாக சோசலிசம் ஒரு சர்வதேச அளவில்தான் அடையப்பட முடியும் என்று மார்க்சிசம் உறுதியாகக் கூறுகிறது.

சமூகரீதியாக ஸ்ராலினிசம் 1920களில் சோவியத் ஒன்றியம் கொண்டிருந்த பொருளாதாரப் பின்னடைவு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலை ஆகியவற்றில் இருந்து வெளிப்பட்ட ஒரு அதிகாரத்துவத்தின் நலன்களைத்தான் பிரதிபலிக்கிறது. இந்த அதிகாரத்துவம் ஒரு சலுகை பெற்ற சாதியாயிற்று. போல்ஷிவிக் கட்சியின் சில பிரிவுகளில் இது ஆதரவைக் கொண்டிருந்தது. ஸ்ராலினை அது தலைவராகக் கொண்டு இறுதியில் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இருந்த இடது எதிர்ப்பிற்கு எதிரான கடுமையான போராட்டத்தில் அதிகாரத்தை வென்று, இடது எதிர்ப்பை அடக்கி, உடல்ரீதியாக அழிக்கவும் செய்தது.

ஸ்ராலினிஸத்தின் மிகப் பெரிய குற்றம் தொழிலாள வர்க்கத்தின் சோசலி மரபுகளை திட்டமிட்டு அழித்ததுதான். ரூஸ்வெல்ட், சேர்ச்சில், ஏன் தற்காலிகமாக ஹிட்லர் என்று கூட ஏகாதிபத்தியத் தலைவர்களுடன் ஸ்ராலின் கூட்டுக்களை அமைத்தபோது, அவர் புரட்சியாளர்களுக்கு எந்தவிதக் கருணையையும் காட்டவில்லை. பாரிய வடிவங்களைக் எடுத்த அவருடைய அச்சுறுத்தும் பயங்கரம் தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் மார்க்சிச தலைமைக்கு எதிராக முக்கியமாக இயக்கப்பட்டது.

1937-38 ன் "பாரிய பயங்கரம்" 1917 அக்டோபர் புரட்சியை லெனின், ட்ரொட்ஸ்கி ஆகியோருடன் நின்று வெற்றிக்கு வழிவகுத்த போல்ஷிவிக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரையும் கிட்டத்தட்ட தனக்கு பலியாக்கியது. இதைத்தவிர நூறாயிரக்கணக்கான இளம் மார்க்சிச ஆலைத் தொழிலாளர்கள், பொறியியலாளர்கள், கல்விக்கூடத்தினர், கலைஞர்கள், செம்படை அதிகாரிகள் என்று சோசலிசத்திற்கு விசுவாசம் காட்டியவர்கள் கொலை செய்யப்பட்டனர். வரலாற்றில் எந்த ஒப்புமையும் இல்லாத பெரும் அரசியல் படுகொலையாகும் அது.

1917ல் ரஷ்ய அக்டோபர் புரட்சியில் தோற்றுவிக்கப்ட்ட சொத்து உறவுகளை ஸ்ராலினிச அதிகாரத்துவம் தன் ஆட்சிக்கு தளமாகக் கொண்டிருந்தது. ஆனால் தனக்கு விருந்து கொடுப்பவரை உறிஞ்சி, இறுதியில் அழித்துவிடும் ஒட்டுண்ணி போல் இதைச் செய்தது.

தொழிலாளர் ஜனநாயகத்தின் எந்த வடிவத்தையும் அடக்கிய முறையில், இது சமூகமயமாக்கப்பட்ட சொத்துக்களின் ஆக்கத்திறனை நெரித்துவிட்டது. இதன் சர்வதேச கொள்கைகளும் இவ்வகையில்தான் இருந்தன. இதை நம்பியிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொரு புரட்சி இயக்கத்தையும் நெரித்தன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இவை இருக்கும் நிலையைக் பாதுகாக்கும் முண்டுகொடுக்கும் தூணாயின. இதையொட்டி முதலாளித்துவம் உலகளவில் மறுஸ்திரமாவதை உறுதிப்படுத்தியது. மேற்கு நட்பு நாடுகளுடன் உடன்பட்ட நிலையில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் அதன் ஆட்சியை கிழக்கு ஐரோப்பாவிலும் விரிவாக்கியது. அங்கு அது 1953 ஜூன் 17 கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்கள் எழுச்சி உட்பட தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு சுயாதீன இயக்கத்தையும் நசுக்கியது.

1930 களின் "பாரிய பயங்கரம்" அக்டோபர் புரட்சித் தலைவர்களை மட்டும் உயிரிழக்கச் செய்தது இல்லாமல் நாஜிக்களிடம் இருந்து சோவியத் ஒன்றியத்திற்கு ஓடி வந்திருந்த பெரும்பாலான ஜேர்மனிய கம்யூனிஸ்ட்டுக்களின் உயிர்களையும் கவர்ந்தது. முகஸ்துதி பாடுபவர்கள் மட்டுமே தப்பித்தனர், ஸ்ராலினிச கொலைகாரர்களுக்கு தங்கள் தோழர்களைக் காட்டிக் கொடுத்த வால்டர் உல்ப்ரிட், எரிக் மில்கே போன்றவர்கள் மட்டுமே தப்பித்தனர். அவர்கள்தான் இப்பொழுது SED தலைமையில் இருந்தனர். போருக்குப் பின்னர் சமூக ஜனநாயகக் கட்சியில் (SPD) யில் பதவிவகித்த ஹெர்பர்ட் வேனரும் இவர்களுள் ஒருவராவார்.

ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் மார்க்சிசத்திற்கு எதிரான ஸ்ராலினின் சிலுவைப்போரை SED தொடர்ந்தது. நாஜிக்களால் இரு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு ஹிட்லரின் ஆட்சியில் இருந்தே தப்பிய ஒரு முக்கிய ட்ரொட்ஸ்கிசவாதியான ஒஸ்கார் ஹிப்ப 1948ல் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் கழித்தார். மேற்கு ஜேர்மனிய அரசியல்வாதிகளும் செய்தி ஊடகத்தினரும் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசை அணுகமுடிந்த நிலையில்,டரொட்ஸ்கிசவாதிகள் அங்கு வெளிப்படையாக பேர்லின் சுவர் சரியும் வரையில் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஆட்சியினால் அவர்கள் முதல்தர பொது விரோதியாகக் கருதப்பட்டனர். ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் படிக்கத்தக்கவை அல்ல என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது.

இதன் விளைவாக, 1989 இலையுதிர்கால ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்ற தொழிலாளர்கள் மார்க்சிச மரபில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டிருந்தவர்கள் ஆவர்; அவர்கள் அதைப்பற்றி மாற்றப்பட்ட ஸ்ராலினிச வெறுப்பை ஊட்டும் வகையில்தான் எதிர்கொண்டிருந்தனர், அறிந்திருந்தனர். தங்கள் தவிர்க்க முடியாமல் சோசலிச சொத்துரிமை வகைகளுடன் பிணைக்கப்பட்டிருந்த சமூக நலன்களைக் பாதுகாக்க அவர்களிடம் ஒரு சுயாதீனமான முன்னோக்கு இல்லை.

குடியுரிமைகள் இயக்கத்தின் தலைவர்கள் இந்த எதிர்ப்பியக்கத்தின் பேச்சாளராயினர். இந்த இயக்கம் திருச்சபையின் நிழலில் வளர்ந்து SED யினால் பொறுத்தக் கொள்ளப்பட்டது. அதன் உறுப்பினர்கள் பலரும்--ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் SPDயின் முதல் தலைவர் இப்ராஹிம் போம் போல், புதிய எழுச்சியின் (Neue Aufbruch) தலைவர் வொல்வ்காங் ஸ்நுவர் போல் பின்னர் Stasi இரகசியப் பிரிவில் வேலை பார்த்தவர்கள் என்று தெரிய வந்துள்ளனர். இயக்கத்தின் தலைவர்கள் சமய குருமார்கள், வக்கீல்கள், கலைஞர்கள் என்று இருந்தனர். அவர்களுடைய முன்னோக்கு இருக்கும் ஆட்சியில் சீர்திருத்தம், அதனுடன் உரையாடல் என்பதற்கு அப்பால் செல்லவில்லை.

இவ்விதமாக புதிய அரங்கின் (Neues Forum) நிறுவன அறிக்கை கீழ்க்கண்ட சொற்களுடன் தொடங்குகிறது: "எமது நாட்டில் அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் இடையே தொடர்பு அழிந்து விட்டது என்பது வெளிப்படை." உடனடியாக ஜனநாயகம் (Demokratie Jetzt) "ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு ஜனநாயக மாற்றத்திற்கான கருத்தாய்வை" கீழ்க்கண்ட சொற்றடருடன் அறிமுகப்படுத்துகிறது: "நம்முடைய திட்டங்களின் நோக்கம் நம் நாட்டின் உள் அமைதியை அடைவதற்கும் அதையொட்டி வெளி அமைதிக்கு பணிபுரிதல் என்பதும் ஆகும்."

இந்த அழைப்புக்கள் புரட்சிகரமானவை அல்ல. மாறாக பழைமைவாதம் என்றுதான் பொருளின் உள்ளடக்கத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இருக்கும் சமூக ஒழுங்கைத் தக்க வைத்துக் கொள்ளுதல். சீர்திருத்தத்திற்கான அழைப்புக்கள் புரட்சிகர விருப்புகளிடம் இருந்து வரவில்லை, அவற்றைக் கண்டு அஞ்சுவதால் வந்துள்ளன.

ஆட்சி அதன் முதல் விட்டுக்கொடுப்பை செய்தவுடன், எரிக் கொனேக்கருக்குப் பதில் ஈகொன் க்ரென்ஸ் மற்றும் ஹான்ஸ் மோட்ரோவை கொண்டுவந்தபின், குடி உரிமைகள் இயக்கத்தினர் ஆரம்பத்தில் "வட்ட மேசை" என்றும் பின்னர் அரசாங்க்துடனேயே SED உடன் நெருக்கமாக ஒத்துழைக்க தொடங்கி எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஹெல்முட் கோலின் அரசாங்கத்திடம் ஆரம்ப முயற்சியை ஒப்படைத்தனர்.

அவர்களின் நடவடிக்கைகளை பற்றி குறிப்பிட்ட ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் வீழ்ச்சி என்ற எமது புத்தகத்தில் "1989 இலையுதிர்காலத்தில் ஜனநாயகத்தினர், 1848 ஜனநாயகத்தினருக்கு உகந்த பின்வந்தவர்கள் என்று நிரூபித்த விதத்தில், பெளல் தேவாலய (Paulskirsche) பிரதிநிதிகளின் வழித்தோன்றல்கள் என்று நிரூபித்தனர். அவர்களைப் பற்றி ஏங்கெல்ஸ் ஒருமுறை மிகவும் பொருத்தமாகக் கூறினார்: "இந்த பழைய பெண்மணிகளின் கூட்டம், ஆரம்பத்தில் இருந்தே, அனைத்து ஜேர்மனிய அரசாங்கங்களின் பிற்போக்குச் சதித்திட்டத்தைவிட, குறைவான மக்கள் எதிர்ப்பைக் கூடக் கண்டு அஞ்சியது." இதே தீர்ப்பைத்தான் ஏங்கெல்ஸ் அவர்களுடைய வரலாற்று முன்னோடிகளுக்கும் புதிய ஜனநாயகவாதிகளைப் பற்றியும் கூறினார்: "ஜேர்மனிய குட்டி முதலாளித்துவம் எதைச் செய்யும் திறனுடையது என்பதற்கு அடையாளமாக இவர்கள் எடுத்துக் கொள்ளப்படலாம். அதாவது தங்கள் கைகளில் வரும் எந்த இயக்கத்தையும் அழிப்பைதைத்தவிர வேறு எதையும் அவர்கள் செய்ததில்லை."

முதலாளித்துவ மீட்பிற்கு எதிரான எச்சரிக்கை

இந்த வளர்ச்சி ஒன்றும் தவிர்க்க முடியாதது அல்ல. சோசலிச தொழிலாளர் கழகம் (Bund Sozialistscher Arbeiter-BSA) அதன் பின் தோன்றலான சோசலிச சமத்துவக் கட்சியை போல் அப்பொழுது மிகத்துல்லியமாக முதலாளித்துவ அறிமுகத்தின் விளைவுகளைக் கணித்து, அதற்கு எதிராக எச்சரிக்கையையும் விடுத்திருந்தது. பேர்லின் சுவர் சரிவுக் காலத்தில் இருந்து வெளிவந்த அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள் வாராந்திர Neue Arbeitrprese தோன்றியவை ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் முடிவு (The End of the GDR) என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் இருந்துதான் நான் இப்பொழுது மேற்கோளிட்டேன்.

நவம்பர் 4, 1989 அன்று BSA ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை எல்லையை கடத்தி பேர்லினின் Alexanderplatzவில் நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் வினியோகித்தது. SED ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புக்களுக்கு BSA ஆதரவைக் கொடுத்தது, ஆனால் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பொறி பற்றி எச்சரித்தது.

இந்த துண்டுப் பிரசுரத்தில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மாற்றீட்டை BSA சுருக்கிக் கூறியது. "சீர்திருத்தம், ஜனநாயகம் அல்லது முதலாளித்துவத்தின் சர்வாதிகாரம் ஒரு புறமும், புரட்சி, தொழிலாளர்களின் ஜனநாயகம் மற்றும் சோசலிசம் மறுபறுத்திலுமாக ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் ஆட்சியின் சமூகத்தன்மை மேற்கு ஜேர்மனியில் போல் கிழக்கு ஜேர்மனியின் தொழிலாள வர்க்கத்திற்கு இதே மாற்றீட்டை தவிர வேறு எந்தப் பாதையும் இல்லை என்பதை உறுதியாக உட்குறிப்பாகக் காட்டுகிறது."

குறிப்பாக BSA இன் அறிக்கை முதலாளித்துவ மீட்பின் ஆபத்துக்கள் பற்றி எச்சரித்தது. எரிக் ஹோனேக்கருக்குப் பதிலாக வந்த புதிய தலைமை "சமூக மயமாக்கப்பட்ட சொத்து உறவுகள், திட்டமிட்ட பொருளாதாரத்துடன் பிணைந்திருந்த தொழிலாள வர்க்கத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த மிகக் குறைந்த சீர்திருத்தங்கள், சலுகைகள் ஆகியவற்றையும் அகற்ற முற்பட்டு, முதலாளித்துவத்தை மீட்கவும், அதிகாரத்துவத்தை ஒரு முதலாளிகளின் புதிய வர்க்கமாக மாற்றவும் முயன்றது." என்று அது கூறியது.

ஜனவரி 5, 1990 ல் மேற்கு ஜேர்மனி மற்றும் கிழக்கு ஜேர்மனிக்கும் இடையே அரசாங்க உடன்பாடு பற்றிய அறிக்கை ஒன்றில் BSA எழுதியது: "கிரிகோர் ஹீசி, ஹென்ஸ் மோட்ரோவின் புதிய தலைமையின் கீழ் உள்ள SED ஆட்சியை, கோல் மற்றும் முதலாளித்துவத்தினருடன் இணைந்து ஹோனேக்கர் மீது பெற்ற வெற்றிகளின் பலன்களை அனுபவிக்க அனுமதிக்காதீர்! இரு அரசாங்கங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம், GDR ல் முதலாளித்துவத்தை மீட்கும் செயலை முடிப்பதற்கு என்பது ஜேர்மனியின் இரு புறங்களிலும் இருக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக இயக்கப்படுவது ஆகும்: ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் தொழிலாளர்கள் மேலை பெருநிறுவனங்கள், கூட்டு செயற்பாடுகள் இவற்றிற்கு குறைவூதிய அடிமைகளாக மாறுவர், மேற்கில் இந்த தொழிலாளர்களுக்கு இடையேயான பிளவு ஊதியக் குறைப்புக்கள் ஆலை மூடல்களுக்கு வழிவகுக்கும்."

Neue Arbeiterpresse வந்த பல கட்டுரைகள் வட்ட மேசை, புதிய அரங்கம், ஐக்கிய இடது ஆகியவற்றின் கொள்கைகளுக்கு எதிராக எச்சரித்தன. அவற்றில் ஏர்னெஸ்ட் மண்டெலின் ஆதரவாளர்கள் தீவிரமாக இருந்து மோட்ரோ அரசாங்கத்தில் பங்கு பெற்றிருந்தனர்.

கிழக்கு ஜேர்மனியில் வெளிப்படையாக சில வாரங்களுக்குத்தான் செயலாற்ற முடிந்தது என்றாலும், BSA போதிய ஆதவராளர்களை வென்று மார்ச் 19 கடைசி மக்களவை (Volkskammer) தேர்தல்களின் தன்னுடைய சொந்த வேட்பாளர்களுடன் பங்கு கொண்டது. அந்த நேரத்தில் எங்கள் தேர்தல் அறிக்கையில் இருந்து சில பத்திகளைப் படிக்க விரும்புகிறேன்; அவை வரவிருக்கும் வளர்ச்சிகளை முன்கூட்டிக் கணித்தன.

அது கூறுவது: "ஸ்ராலினிச சர்வாதிகாரத்திற்கு பதிலாக Deutsche Bank, அதாவது ஏகாதிபத்தியத்தின் சர்வாதிகாரத்தை கொண்டுவர உள்ள அனைத்து அரசியல் போக்குகளையும் தொழிலாள வர்க்கம் இழிவுடன் நிராகரிக்க வேண்டும். வட்ட மேசையில் இருந்து வரும் குட்டி முதலாளித்துவத்தினர் முதலாளித்துவத்தின் நலன்களைப் பற்றிப் பெரிதும் பாராட்டுகின்றனர்; அதுவும் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாள வர்ககத்தின் வாழ்க்கைத்தரங்கள் எல்லா நாடுகளிலும் கடந்த பத்து ஆண்டுகளிலும் மோசமாகயுள்ள நிலையில்; ஐரோப்பாவில் நான்கு இளைஞர்களில் ஒருவர்--தெற்கு ஐரோப்பாவில் இருவரில் ஒருவர்--வேலையின்றி உள்ளனர், அல்லது பயிற்சியாளராகத்தான் உள்ளார். நியூயோர்க் சேரிகளில் வாழ்நாள் எதிர்பார்ப்பு பங்களாதேசத்தைவிட குறைவாக உள்ளது உலகின் மிக வறிய நாடுகளில் நூறாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் ஏகாதிபத்தியக் கொள்ளையின் விளைவாக பட்டினியில் இறக்கின்றனர்...."

"தொழிலாள வர்க்கம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்....நான்காம் அகிலத்தின் ஜேர்மனிய பிரிவான BSA தான் தொழிலாள வர்க்கத்தை நேரடியாக அழைக்கும் ஒரே கட்சியாகும்; அவர்கள் தங்கள் சாதனைளை நிபந்தனையற்று காக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுகிறது. பெரும் தியாகத்தில் தொழிலாள வர்க்கத்தால் வளர்க்கப்பட்ட உற்பத்தி ஆலைகள் முதலாளித்துவத்தினருக்கு விற்றுவிட அனுமதிக்கப்படக்கூடாது. சமூகமயமான சொத்துக்கள் ஸ்ராலினிச ஒட்டுண்ணிகளிடம் இருந்து தூய்மைப்படுத்தப்பட்டு அவை தொழிலாள வர்க்கத்தின் பொறுப்பில் இருத்தப்பட வேண்டும். முதலாளித்துவ பெருநிறுவனங்கள், வங்கிகள் ஊடுருவி வருவதை நிறுத்துக! தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிசத்தின் தவறான நிர்வாகத்திற்கு பொறுப்பைக் கொண்டிருக்கவில்லை. அனைந்நு விலை உயர்வுகள், வாடகை உயர்வு, ஊதியக் குறைப்புக்கள் என்று மோட்ரோ ஆட்சி உதவித்தொகையை நிறுத்த செய்து கொண்டிருப்பதை நிறுத்துக!'

BSA எவ்வாறு முதலாளித்துவம் அறிமுகம் செய்யப்படுவதின் விளைவுகளை முன்கூட்டிக் காணமுடிந்தது?

வரலாற்றையும் முதலாளித்துவத்தின் நெருக்கடியையும் ஒரு மார்க்சிச முறையில் மதிப்பீடு செய்ததின்மூலம் எங்கள் மதிப்பீட்டை நிறுவினோம். ஒவ்வொரு விதத்திலும் ஸ்ராலினிசம் ஒரு புரட்சி எதிர் நடவடிக்கை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், இந்த உணர்வை பல தசாப்தங்கள் நான்காம் அகிலத்தில் சில சமயம் வெளிப்பட்டிருந்த ஒவ்வொரு சந்தர்ப்பவாத போக்குகளுக்கு எதிராகவும் காத்தோம்.

ஸ்ராலினிச ஆட்சிகளின் நெருக்கடி ஒரு தேசிய வேலைத்திட்டத்தை தளமாகக் கொண்ட அனைத்து அமைப்புக்களின் திவால்தன்மைக்கு கட்டியம் கூறுபவைதான் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். தற்கால உற்பத்தி வழிவகையின் உலகளாவிய தன்மை ஸ்ராலினிச ஆட்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதோடு மட்டும் இல்லாமல் முதலாளித்துவ சமூகத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய நாட்டிற்கும் இடையே உள்ள முரண்பாடுகள்--அவைதான் போர், மந்த நிலை என்று 1914க்கும் 1945க்கும் நடுவே வெடித்தன--தவிர்க்க முடியாமல் பொருளாதார நெருக்கடிகள், சர்வதேச அழுத்தங்கள் மற்றும் சமூக எழுச்சிகளுக்கு வழிவகுக்கும். ஸ்ராலினிசத்தின் சரிவு போர்கள், புரட்சிகள் என்ற புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்.

இந்த மதிப்பீடு பேர்லின் சுவர் சரிந்து இருபது ஆண்டுகளுக்கு பின்னர் உறுதியாகிறது. 2008ன் இலையுதிர்கால நிதிய நெருக்கடி முதலாளித்துவத்தின் அஸ்திவாரங்கள் எந்த அளவிற்கு அழுகியுள்ளது என்பதைக் காட்டியது. இந்த நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை.

அதன் சமீபத்திய பதிப்பில் செய்தி வாரந்திர ஏடு Der Spiegel முதலாளித்துவ சமூகத்தின் தற்போதைய நிலை பற்றி இழிந்த சித்திரத்தை கொடுத்துள்ளது. "இன்னும் நலிந்திருக்கும் உலகப் பொருளாதாரத்திற்கு நடுவில், நிதிய உயரடுக்கு மீண்டும் பில்லியன் கணக்கைக் குவிக்கிறது." ஏடு எழுதுவது: "பழைய பேராசை மீண்டும் வந்தவிட்டது, பழைய குப்பைகளும் கூடத்தான்." தற்கால பொருளாதார வரலாற்றில், "நிதியத் தொழில் அரசாங்க கருவூலத்திற்கு இதற்கு முன் இத்தகைய தடையற்ற பெறும் வாய்ப்பைப் பெற்றதில்லை."

ஒரு புதிய நிதியச் சரிவு தவிர்க்க முடியாது என்றும் ஏடு நம்புகிறது. தற்போதைய ஊகக் குமிழி வெடிக்குமா என்பது பிரச்சினை அல்ல எப்போது வெடிக்கும் என்பதுதான் பிரச்சினை ஆகும். குறிப்பாக "பெரும் பணவீக்க ஆபத்திற்கு எதிராக" ஏடு எச்சரிக்கிறது--"இது விரைவில் 1920 களின் ஆரம்பத்தில் ஜேர்மனியில் காணப்பட்டது போல் அதிக பண மதிப்புக் குறைவிற்கு வகை செய்யும், "அதே நேரத்தில் சர்வதேச அழுத்தங்களும் பெருகுகின்றன; ஆப்கானிஸ்தானில் போர் விரிவாக்கம் அடைகிறது. ஜேர்மனிய அரசாங்கம் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஜேர்மனிய படையினரால் நடத்தப்பட்ட மிகப் பெரிய படுகொலையான குண்டுஸ் படுகொலையை செய்ய தடையற்ற அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த நெருக்கடிக்கு ஒரே ஒரு விடையைத்தான் முதலாளித்துவம் அறிந்துள்ளது. அதாவது தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் மிருகத்தனமாக தாக்குதல்கள் என்பதே அது. இது சமூகப் மோதல்கள் தவிர்க்க முடியாதவை ஆக்குகிறது. இதன் பரப்பு 1989 இலையுதிர் காலத்திற்கும் அப்பால் செல்லுகிறது. இந்த நிகழ்வுகளில் இருந்து மிக முக்கியமான படிப்பினை இத்தகைய போராட்டங்கள் அரசியல் அளவிலும் கோட்பாட்டளவிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்பதாகும். இது சோசலிச சமத்துவக் கட்சி கட்டமைக்கப்படல், மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் வளர்ச்சி ஆகியவற்றை மிக அவசரப் பணியாக ஆக்குகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved