World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The PSG and the German Left Party: An exchange of letters

சோசலிச சமத்துவக் கட்சியும் ஜேர்மன் இடது கட்சியும்: கடித பரிமாற்றம்

By Peter Schwarz
28 September 2009

Back to screen version

ஜேர்மன் இடது கட்சியையும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல மத்தியதர வர்க்க அமைப்புக்களையும் பற்றிய ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சியின் அணுகுமுறை குறித்து ஒரு வாசகர் எழுதியுள்ள கடிதமும் அதற்கு பீட்டர் சுவார்ட்ஸ் கொடுத்த பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அன்புடையீர்,

நான் சோசலிச சமத்துவக் கட்சியை மகிழ்வுடன் ஆதரிப்பவன். உண்மையில் நீங்கள் வெளியிடுவது அனைத்துடனும் உடன்படுகிறேன். ஆனால் எனக்கு இரு வினாக்கள் உள்ளன:

1) மற்றைய "ட்ரொட்ஸ்கிச" குழுக்கள் பற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் நிலைப்பாடு என்ன; குறிப்பாக SAV, முன்னாள் Linksruck போன்றவற்றுடன்? அவர்களோடு ஒத்துழைப்பது ஏன் சாத்தியமில்லை?

2) ஏன் ஐரோப்பிய தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி முடிவு பற்றி அதிகம் சாதகமாக கூறப்படுகின்றது? குறைந்த பட்ச வாக்காளர்களிடம் இருந்து சோசலிச சமத்துவக் கட்சி அதிக கவனத்தை ஈர்க்கவில்லை என்பது வெளிப்படையாக இல்லையா? அத்தகைய மோசமான முடிவை ஏன் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி மூலோபாயத்தை விமர்சனரீதியாக பார்க்கக்கூடாது? (கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் மூன்றில் இரு பங்கு இழப்புக்கள் என்ற நிலையில் இது ஒரு பேரழிவுதான்--குறிப்பாக இம்முறை முன்னைக் காட்டிலும் அதிகமான நேரத்தை செலவழித்திருக்கக் கூடும் என்ற நிலையில்.)

இந்தத் தேர்தல் ஏதேனும் ஒரு விதத்தில் முக்கியமானது என்று நான் கூற விரும்பவில்லை; ஆனால் இந்த முடிவில் இருந்து சாத்தியமானது ஏதேனும் உணர்ந்து எடுக்க முடியும் என்பது என்னைப் பொறுத்தவரையில் விருப்பமான சிந்தனையாக தோன்றுகிறது

சிறந்த வாழ்த்துக்களுடனும், ஒற்றுமையுடனும்,

F.S.

* * *

அன்புள்ள F.S.,

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியலுடன் உடன்பாடு இருப்பது பற்றி நாங்கள் மகிழ்ச்சி கொள்ளுவது இயல்புதான். ஆனால், உங்களைப் பொறுத்தவரையில், உண்மையிலேயே நாங்கள் வெளியிடும் "அனைத்துடனும்" உடன்படுகிறீர்களா என்பது பற்றி எங்களுக்குக் கணிசமான சந்தேகங்கள் உள்ளன. நீங்கள் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், உங்கள் கடிதம் எங்களை இடது கட்சியுடன் சேரவேண்டும் என்ற அழைப்புவிடுவதற்கு ஒப்பாகிறது. அல்லது குறைந்தபட்சம் அத்துடன் ஒத்துழைக்கவாவது வேண்டும் என்கிறது. இதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம்.

SAV யும் முன்னாள் Linkstruck ம் இடது கட்சிக்குள் இயங்குகின்றன என்பதை நீங்கள் உறுதியாக அறிந்திருப்பீர்கள். Militant tendency மற்றும் டோனி கிளிப் போக்கின் ஜேர்மனிய ஆதரவாளர்கள் ஒஸ்கார் லாபோன்டைன் மற்றும் கிரிகோர் கீஸியின் கட்சியின் உறுப்பினர்கள் ஆவர். அவர்களுடைய செய்தித் தொடர்பாளர் ஒருவரின் வாசகத்தில், "இக்கட்சி ஒரு புதிய சோசலிஸ்ட் தொழிலாளர்கள் கட்சி அபிவிருத்தியடைவதற்கான ஆரம்பம்." என்கிறது(1)

நீங்கள் கூறுவது போல் SAV, Linksruck உடன் நாங்கள் ஒத்துழைத்தால், நாங்கள் இடது கட்சியில் சேரவேண்டும், குறைந்த பட்சம் இக்கட்சிக்கு ஆதரவளிப்பது நியாயமானது என்றாவது கருத வேண்டும்.

இது எங்கள் நிலைப்பாடு அல்ல. எங்கள் வெளியீடுகளை பின்பற்றிப் படித்து வந்திருந்தால், இடது கட்சி மீது நாங்கள் கொண்டுள்ள அணுகுமுறை உங்கள் கவனத்தில் இருந்து தப்பியிருக்க முடியாது. உதாரணமாக எங்கள் 2009 ஐரோப்பிய தேர்தல்கள் பற்றிய அறிக்கையில் நாங்கள் இடது கட்சி பற்றி குறிப்பிட்டிருந்தோம்: "இக்கட்சிகளுடன் எந்தவித ஒத்துழைப்பிற்கும் இடமில்லை என்று சோசலிச சமத்துவக் கட்சி உறுதியாக நிராகரிக்கிறது. இதேதான் தொழிற்சங்கத்தின் மேலாதிக்கத்தை காக்கும் அனைத்து அமைப்புக்களுக்கும் பொருந்தும்; அவை அனைத்தும் இடது கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வாதிடுகின்றன அல்லது Communist Platform (கம்யூனிஸ்ட் அரங்கம்) SAV (சோசலிச மாற்றீடு) அல்லது Linksruck (இடது திருப்பம்) போன்றவற்றுடன் ஒத்துழைக்க வேண்டும் என்கின்றன." (2)

இடது கட்சி எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது?

இடது கட்சி பற்றி சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால், அதன் வேலைத்திட்டத்தை, அரசியல் நடைமுறையை, அதன் வரலாற்றை, அதன் சமூக கூட்டை ஆராயவேண்டும்; அதன் வெகுஜனத்திருப்தி தரும் சொற்றொடர்களால் மயங்கிவிடக் கூடாது. அத்தகைய பகுப்பாய்வு இடது கட்சி ஒரு அரசாங்கக் கட்சி, முதலாளித்துவ ஒழுங்கமப்பை பாதுகாக்கும் கட்சி என்பதைக் காட்டுகிறது. இதன் தலைமையில் சோசலிச ஐக்கிய கட்சி (SED- முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஆளும் கட்சி), சமூக ஜனநயாகக் கட்சி (SPD), தொழிலாள வர்க்கத்தை அடக்குவதில் பல தசாப்தங்களாக அனுபவம் கொண்ட தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் முன்னாள் மூத்த தலைவர்கள் உள்ளனர்.

இடது கட்சியின் வேலைத்திட்டம் முதலாளித்துவ தனியார் சொத்துரிமை மற்றும் முதலாளித்துவ அரசாங்கத்தைக் பாதுகாக்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து அது தெளிவாக வலதிற்கு நகர்ந்துள்ளது. அரசாங்கத்தின் வங்கிகள் மீட்புப் பொதி என்று அவற்றின் ஊகவழி இழப்புக்களை ஈடுசெய்ய பில்லியன் கணக்கில் பொது நிதிகளை வங்கிகளுக்கு உட்செலுத்தியதற்கு ஆதரவு கொடுத்துள்ளது. கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் காசாப் பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலியர் நடத்தும் போருக்கு தங்கள் ஒற்றுமையைக் காட்டியுள்ளனர். அவர்களுடைய கடைசி ஐரோப்பிய கட்சி மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

மத்திய பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் நடுவில், ஆப்கானிஸ்தான் போரில் தன் உண்மையான தன்மையை வெளிப்படுத்திய விதத்தில் 100 உயிர்களுக்கும் மேலாக காவுகொண்ட விதத்தில், குண்டுஸில் ஜேர்மனிய துருப்புக்கள் படுகொலை நடத்தியதற்கு இடையில், இடது கட்சி அனைத்து துருப்புக்களும் அங்கிருந்து உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டது. அப்பொழுது முதல் "நாளை மறுநாள்" ஒன்றும் துருப்புக்கள் திரும்பப் பெற வேண்டியதில்லை என்றும் "மூலோபாய வெளியேற்றத்திற்கான" அழைப்பையும் அது வலியுறுத்தியுள்ளது. சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவு மந்திரி ஸ்ரைன்மயரின் ஆப்கானிஸ்தான் பற்றிய திட்டத்தைத்தான் இக்கோரிக்கை ஒத்துள்ளது; அதில் அவர் இராணுவம் மற்றும் போலீஸ் பயிற்சியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறினார். அதேபோல் அமெரிக்க தளபதி மக்கிரிஸ்டல் அமெரிக்க துருப்புக்கள் பல்லாயிரக்கணக்கில் விரிவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளதையும் இது ஒத்துள்ளது. "வெளியேறும் மூலோபாயம்" என்பது முடிவை விரைவாகக் கொண்டுவருவதற்காக போரை விரிவாக்குவதற்கு மறு பெயர்தான்.

இடது கட்சி பின்பற்றும் கொள்கையில் இந்த வடிவமைப்புத்தான் உள்ளது. சமூகத் தாக்குதல்கள் அல்லது போருக்கு எதிராக மக்கள் திரட்டப்படுவதை அது திசை திருப்ப முற்படுவதுடன், அதற்கு வெகுஜனத்திருப்தி அளிக்கும் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தி இன்னும் சிறந்த விதத்தில் முக்கியமான நேரத்தில் ஜேர்மனிய ஏகாதிபத்தியத் தேவைகளுக்கு மக்கள் எதிர்ப்பை அடிபணியசெய்துவிடும். சமூக நெருக்கடி மோசமானால், தேசிய மட்டத்தில் அரசாங்கப் பொறுப்பை ஏற்கவும் அது தயாரிப்புக்களை நடத்துகிறது என்பது வெளிப்படை.

முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் பல மாநிலங்கள், மாநகரசபைகளில், இடது கட்சியும் அதன் முன்னோடியுமான ஜனநாயக சோசலிச கட்சியும் (Party of Democratic Socialism-PDS) ஆகியவை அரசாங்கத்தில் பங்கு பெற்று முதலாளித்துவ நலன்களுக்கு நம்பகமான உத்தரவாதங்களைக் கொடுத்தன. இடது கட்சி/PDS நகர அரசாங்கத்தில் எட்டு ஆண்டுகளாக சமூக ஜனநாயக கட்சியுடன் (SPD) கூட்டாக இருக்கும் தலைநகர் பேர்லினில் பொதுத்துறை மற்றும் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பிலும் கடுமையான சிக்கன நடவடிக்கைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உதவியுள்ளது.

இடது கட்சிக்கு தன்னுடைய ஆதரவை நியாயப்படுத்தும் விதத்தில், SAV "பல முரண்பாடுகள், பிழைகள் இருந்தபோதிலும், தற்போது இச்சக்திகளை ஒன்று சேர்க்க ஒரே ஆரம்பநிலையாக இது உள்ளது" மற்றும் ஒரு போராளித்தனமான தொழிலாளர்கள் கட்சியை உருவாக்கும் என்ற அறிக்கையை கொடுத்துள்ளது. "இதில் பல ஆயிரக்கணக்கான உறுப்பினர்களும் மில்லியன் கணக்கான வாக்காளர்களும் உள்ளனர்; அவர்கள் இக்கட்சியில் ஊதியம் ஈட்டுபவர்கள், சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் நலன்களை அரசியல்ரீதியாக எடுத்துரைக்க வாய்ப்புள்ள கட்சியாக இதை காண்கின்றனர்." மார்க்சிச மற்றும் புரட்சிகர சிந்தனைகளுக்கான போராட்டம் முக்கியமாக இடது கட்சிக்குள்ளும் அதைச் சுற்றியும்தான் நடக்கிறது. இடதுகட்சிக்குள் இயங்குவதை தவிர்ப்பவர்கள் "தீவிரவாத இடதுசாரி அலங்காரச் சொற்களின்" பொறிக்குள் இருப்பது போல் உள்ளனர் என்று SAV கூறுகிறது.

இது ஒரு கோரமான முறையில் இடது கட்சி பற்றித் தவறாகப் பிரதிபலிக்கப்படும் கருத்தாகும். அது ஒன்றும் ஒரு மத்தியவாத அமைப்புமல்ல மற்றும் மக்களின் அழுத்தத்தால் சோசலிசப் புறம் செல்லும் கட்சியும் அல்ல. இதில் எத்தகைய ஜனநாயக உள்மரபுகளும் இல்லை. இதன் தலைமை கீழிருந்து எந்த அழுத்தத்தையும் பொதுவாக பொருட்படுத்துவதில்லை. தன்னுடைய கொள்கைகளை உறுப்பினர்கள் விருப்பத்திற்கு அப்பால் இயற்றுவதுடன், அதன் உள்ளூர் கூட்டமைப்புக்களின் எவ்வித ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டதில்லை.

இடது கட்சியை போருக்குப் பிந்தைய சமூக ஜனநாயகக் கட்சிகளுடன்கூட ஒப்பிடப்பட முடியாதது. அவை பிரிட்டிஷ் தொழிற்கட்சி அல்லது ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சி (SPD) போல் முதலாளித்துவ வேலைத்திட்டத்திற்காக போராடியதுடன், ஆயினும் வாக்காளர்களிடையே பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தன. இடது கட்சி பெரும் செல்வாக்கை கொண்டிருக்கவில்லை. இது ஒரு வெகுஜனக் கட்சி அல்ல. இதன் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இயக்கமற்றவர்கள் அல்லது ஓய்வூதியம் பெறுபவர்கள். ஒரு சிறு பிரிவுதான் தொழிலாள வர்க்கத்தில் இருந்து வருகிறது.

இதற்கு வாக்களிப்பவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தினர் ஆவர். பொருளாதார ஆய்விற்கான ஜேர்மன் மையம் (German Institute for Economic Research-DIW) கடந்த ஆண்டு குறைந்த வருமானங்கள் உடையவர்கள் அல்லது கீழ்நோக்கி இருக்கும் அல்லது அதை நோக்கி நகரும் சமூக அடுக்குகள் இதன் ஆதரவாளர்களிடைய சராசரிக்கும் மேலாக பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கவில்லை என்று கண்டுள்ளது. குறிப்பாக, முன்னாள் கிழக்கு ஜேர்மனியில், இடது கட்சி முக்கியமாக நல்ல நிலையில் இருக்கும், கல்வி பயின்ற ஆதரவாளர்களைத்தான் நம்பியிருக்கிறது. இங்கு இடது கட்சிக்கான ஆதரவாளர்களின் விகிதம் மிக அதிகமாக "வசதியுடைய மத்தியதர வர்க்கக் கூறுபாடுகளில் இருந்துதான்" வருகிறது. இதன் செல்வாக்கு கணிசமாக வலுவற்று இருக்கும் மேற்கில் பெரும்பாலான ஆதரவாளர்கள் மத்தியதர வர்க்கக் கீழ்ப்பகுதியில் இருந்துதான் வருகின்றனர்.

இடது கட்சி என்பது இரு அதிகாரத்துவக் அமைப்புகள் இணைந்ததின் விளைவு ஆகும். அல்லது இன்னும் துல்லியமாக, நீண்ட காலமாக தொழிலாள வர்க்கதிற்கு எதிராக நின்ற இரு அதிகாரத்துவக் அமைப்புகளின் எலும்புக்கூடுகள் இணைந்ததின் விளைவு. PDS மற்றும் WASG (தேர்தல் மாற்றீடு) இரண்டும் 2005ல் பாராளுமன்ற தேர்தல்களுக்காக ஒன்றாக இணைந்தபோது (இடது கட்சி உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டது இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது), PDS ல் கிட்டத்தட்ட 60,000 உறுப்பினர்கள் இருந்தன; இவர்களுள் 90 சதவிகிதத்தினர் SED யில் பேர்லின் சுவர் சரிவதற்கு முன் இருந்தனர். இதில் 70 சதவிகிதத்தினர் 60 வயதிற்கும் அதிகமானவர்கள். WASG 11,500 உறுப்பினர்களைக் கொண்டுவந்தது; அதில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் மிகவும் தேர்ச்சிபெற்ற தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், சமூக ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் முன்னாள் குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகளின் கலவையாகும்.

முன்னாள் SED பொதுவாக கிழக்கு ஜேர்மனி என்று அறியப்பட்டிருந்த ஜேர்மனிய ஜனநாயகக் குடியரசின் (GDR) ஆளும் அதிகாரத்துவ குழுவின் உருவகமாக இருந்தது. ஜூன் 17, 1953ல் தொழிலாளர்கள் எழுச்சியை இரத்தம் தோய்ந்தமுறையில் தோற்கடித்தது போல் அது எப்பொழுதும் தொழிலாள வர்க்கத்திடம் சமரசத்திற்கு இடமின்றி விரோதப் போக்கைக் கொண்டிருந்தது.

ஜேர்மன் முதலாளித்துவம், தொழிலாள வர்க்கத்துடன் இருந்ததைவிட, இந்த அதிகாரத்துவத்துடன் கணிசமான நெருக்கத்தில் இருந்ததாக உணர்ந்தது. 1989ல் SED கிழக்கில் முதலாளித்துவ மறுசீரமைப்பில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தபோது இது தெளிவாகக் காட்டப்பட்டது. தன்னுடைய சுயசரிதையில் அப்பொழுது GDR ன் அரசாங்கத் தலைவராகவும் இன்றளவும் இடது கட்சியின் மூத்தோர் குழுவின் தலைவராகவும் இருக்கும் Hans Modrow ஜேர்மனிய ஒற்றுமைக்கான பாதையை தவிர்க்க முடியாதது என்று கண்டதாகவும உறுதியோடு அதைப் பின்பற்றியதாகவும் அறிவித்தார்.

WASG சமூக ஜனநாயகக் கட்சியின் செயலர்களால் தோற்றுவிக்கப்பட்டது. அவர்கள் ஷ்ரோடர் அரசாங்கத்தின்கீழ் சமூக ஜனநாயக கட்சியின் பெரும் சரிவு ஒரு அரசியல் வெற்றிடத்தைக் கொடுத்துவிடும் என்றும் புரட்சிகர போக்குகள் அதையொட்டி பலம்பெற்றுவிடும் என்றும் அஞ்சினர். WASG அதைத் தவிர்க்கும் ஒரு முயற்சி ஆகும்.

சமூக ஜனநாயகக் கட்சியினுள் நாற்பது ஆண்டுகள் கழித்த ஒஸ்கார் லாபோன்டைன் இடது கட்சியில் தலைவராக இருப்பது ஒன்றும் ஒரு தற்செயல் நிகழ்ச்சி அல்ல. இவர் ஜேர்மனியில் மிக அதிக அனுபவமுள்ள முதலாளித்துவ அரசியல்வாதிகளுள் ஒருவராவார். 11 ஆண்டுகள் அவர் சார்புரூக்கன் நகரசபை தலைவராகவும், 13 ஆண்டுகள் சார்லாந்தின் மாநில பிரதமராகவும், 4 ஆண்டுகள் சமூக ஜனநாயக கட்சியின் தேசிய தலைவராகவும் ஐந்து மாதங்களுக்கு மத்திய நிதிமந்திரியாகவும் இருந்துள்ளார். மற்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளைவிட ஒரு சமூக எழுச்சியால் முதலாளித்துவ ஒழுங்கிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி அவர் தீவிரமான முழு உணர்வுடையவர். அவருடைய ஜனரஞ்சகவாத வார்த்தை ஜாலங்கள் அத்தகைய இயக்கத்தை திசைதிருப்பி அதன் பாதையை மறைக்கும் நோக்கத்தைக் கொண்டவை. இடது கட்சி அரசாங்கத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டவுடன் அல்லது முக்கிய அரசியல் நிகழ்வுகளை எதிர்கொண்டவுடன், அது அதன் ஜனரஞ்சகவாத முகமூடியைக் கைவிட்டுவிடும்.

SAV ன் கூற்றுக்களுக்கு முற்றிலும் மாறாக, இடது கட்சி ஒன்றும் ஒரு போராளித்தன தொழிலாளர் கட்சி கட்டமைக்கப்படுவதற்கான ஆரம்பப்புள்ளி அல்ல. இது ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் முழு உணர்வுடன் எடுத்துக் கொண்ட ஒரு ஆரம்ப முயற்சியின் விளைவுதான். இது அரசியலில் இருப்பதின் நோக்கமே தொழிலாளர் வர்க்கத்திக் மத்தியில் எந்தவித சுயாதீன இயக்கம் வருவதையும் அடக்குவதுதான். இதன் உறுப்பினர்கள் பலரும் சிறிதும் தயக்கமின்றி சமூக ஜனநாயக கட்சியின் தலைவரும் வைமர் குடியரசின் தலைவருமான பிரெடெரிக் ஏபெர்ட் கூறிய "புரட்சியை ஒரு பாவம் போல் நான் வெறுக்கிறேன்" என்ற சொற்களுடன் தயக்கமின்றி உடன்படுவர்.

சமூக எதிர்ப்பை திணற அடிக்கும் விதத்தில், இடது கட்சி பிரச்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுவது மட்டும் இல்லாமல், அரசாங்கத்தின் அடக்குமுறைக் கருவியையும் பயன்படுத்தத் தயாராக உள்ளது; இதுதான் சமூக ஜனநாயக கட்சி-இடது கட்சியின் பேர்லின் நகர அரசாங்கம் பலமுறையும் நிரூபித்துள்ளது.

எங்களுடைய சர்வதேச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) "உட்புகுதல்வாதம்" (entrism) என்பதின் மூலம் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை தகர்க்க முற்படும் அரசியல் போக்குகளை ஐம்பது ஆண்டு காலம் எதிர்கொண்டுள்ள அனுபவத்தைப் பெற்றுள்ளது. 1953ம் ஆண்டு மிசேல் பப்லோ மற்றும் எர்னெஸ்ட் மண்டெல் நான்காம் அகிதலத்தை ஸ்ராலினிசக் கட்சிகளுடன் கரைத்துவிடும் முயற்சியை எதிர்த்த போராட்டத்திற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தோற்றுவிக்கப்பட்டது. ஸ்ராலினிசத்தின் இரட்டை தன்மைகள் என்று கூறப்படுவதை மேற்கோளிட்டு தங்கள் நிலையை பப்லோ மற்றும் மண்டெல் நியாயப்படுத்தினர். ஸ்ராலினிசத்தை தோற்கடிப்பது நான்காம் அகிலத்தைக் கட்டியமைப்பதின் மூலம் நடக்காது என்றும் "இருக்கும் நிலைமையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் அல்லது ஒரு படி பின்னே செல்லவேண்டும் என்று நினைக்கும் கூறுபாடுகளுக்கும், இன்னும் அதிக சக்தி வாய்ந்த மக்களின் அழுத்தத்தினால் உந்துபெற்ற பிரிவுகளுக்கம் இடையே நடக்கும் வன்முறையான உள் அதிகாரத்துவ போராட்டத்தின் மூலம்தான்" தோற்கடிக்கப்பட முடியும் என்று அவர்கள் நம்பினர்.

SAV யும் முன்னாள் Linksruck உம் பப்லோ மற்றும் மண்டெலின் வாதங்களைவிடப் புதிதான எதையும் கூறிவிடவில்லை. அதே விதத்தில்தான் அவர்கள் மக்களை இடது கட்சிக்கும் இருக்கும் முரண்பாடுகள் புதிய புரட்சிகரப் போக்கு ஒன்றில் வெளிப்படும் என்று ஏமாற்ற முயல்கின்றனர். எவ்வாறாயினும் இங்கு ஒரு வேறுபாடு உண்டு. பப்லோ தன்னுடைய கோட்பாடுகளை சோவியத் ஒன்றியத்திற்குள் இருந்த சொத்துடமை உறவுகள் கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்தப்பட்ட நேரத்திலும் மற்றும் பிரான்ஸ், இத்தாலி போன்ற சில நாடுகளில் தொழிலாள வர்க்கத்திடம் பெரும் செல்வாக்கு இருந்த ஸ்ராலினிசம் மிக உயர்ந்த அதிகார கட்டத்தில் இருந்தபோது அபிவிருத்திசெய்தார்.

பப்லோவின் உட்புகுதல்வாதம் என்பது ஸ்ராலினிச, சமூக ஜனநாயகவாத, தேசியவாத வெகுஜன அமைப்புக்களுக்குள் நுழைவதை குறித்தது. SAV, Linksruck ஆகியவற்றின் நுழைதல் வர்க்க உள்ளடக்கத்தை கொண்டிருக்கவில்லை. நான்காம் அகிலத்தை எவ்விதமான அமைப்பிலுள்ளும் கரைத்து விடுவதற்கான ஒரு சூத்திரமாகத்தான் உள்ளது. முந்தை கம்யூனிஸ்ட் வெகுஜனக் கட்சிகளின் நிழல் போல்கூட இல்லாத ஒரு கட்சியில் அவை சேர்ந்துள்ளன. அவர்களுடைய வாதங்கள் சமூக ஜனநாயக கட்சி அல்லது ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியில் சேருவதை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம்.

தேர்தல் முடிவுகளும் கட்சியின் வேலைத்திட்டமும்

இப்பொழுது உங்கள் இரண்டாம் வினாவிற்கு வருவோம்: நீங்கள் எங்களை ஐரோப்பிய தேர்தல்களில் PSG முடிவைப் பற்றி "அதிகம் சாதகமாக பேசுவதாகவும்", நாங்கள் "மூலோபாயம் பற்றி விமர்சனரீதியான பார்வை வேண்டும்" என்றும் குற்றம்சாட்டியுள்ளீர்கள். இது தேர்தல்கள் பற்றிய முழு சந்தர்ப்பவாத விளக்கத்தைத்தான் காட்டுகிறது. எங்கள் கட்சியை வளர்த்துக் கட்டமைப்பதற்காக நாங்கள் தேர்தல்களில் பங்கு பெறுகிறோம். அங்கு வேலைத்திட்டத்தைப் பற்றி தெளிவுபடுத்தல் எங்களுக்கு மத்திய பிரச்சினையாகும். இப்பொழுது குறிப்பிடத்தக்க வகையில் ஒரு புரட்சிகர, சோசலிச பிரிவுகள் மக்களிடையே இல்லை என்ற நிலையில் இது இன்னும் முக்கியமாகும்.

62 மில்லியன் பதிவான வாக்காளர்கள் பட்டியலோடு ஒப்பிடும்போது, எங்களுடைய குறைந்த தேர்தல் முடிவுகள் மக்கள் அரசியல் வளர்ச்சியின் ஒரு முக்கியமான குறியீடு ஆகும். ஆனால் இந்த குறியீடு எங்கள் வேலைத்திட்டம் மற்றும் தந்தரோபாயங்களின் ஆரம்ப புள்ளியல்ல. எங்கள் வேலைத்திட்டம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பிரதிபலிப்பை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்தைத் தளமாகக் கொண்டிருக்கவில்லை. அது புறநிலைப் பகுப்பாய்வைவில் தங்கியுள்ளதுடன், சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்று அனுபவங்களை தளமாகக் கொண்டுள்ளது. எங்கள் அளவுகோல் இந்த அல்லது அந்த உடனடி வெற்றி பற்றியதோ அல்லது வாக்குகள் எண்ணிக்கையோ அல்ல. மாறாக வினா எழுகிறது: எமது வேலைத்திட்டம் சரிதானா? புறநிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்களில் இருந்து விளையும் கடமைகளுடன் அது ஒத்திருக்கிறதா? தொழிலாள வர்க்கத்தை எதிர்வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு அது தயார் செய்கிறதா? தொழிலாளர்களின் முன்னெடுப்புகளையும் அரசியல் சுயாதீனத்தையும் அது வளர்க்கிறதா? தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களை அது எடுத்துக் கூறுகிறதா?

1938ல் நான்காம் அகிலத்தின் நிறுவன வேலைத்திட்டங்கள் பற்றி லியோன் ட்ரொட்ஸ்கி விவாதிக்கையில் அவர் இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்தினார். "நாம் நம்முடைய வேலைத்திட்டத்தை புறநிலைக்கு பொருந்துமாறு செய்யவேண்டுமா அல்லது தொழிலாளர்களின் சிந்தனைக்கு ஏற்ப செய்யவேண்டுமா?' என்ற வினாவை எழுப்பி, அவர் விடையிறுத்தார்: "இந்த வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தின் பிற்போக்குத்தனத்தை அல்லாது, தொழிலாள வர்க்கத்தின் புறநிலைப் பணிகளை வெளிப்படுத்த வேண்டும். இது பிற்போக்குத்தனத்தை தோற்கடித்து கடந்துவருவதற்கான ஒரு கருவியாகும்." (3)

இந்த ஆண்டு ஐரோப்பியத் தேர்தல்கள் 70 ஆண்டுகளில் இல்லாத பெரும் உலக முதலாளித்துவ நெருக்கடிக்கு நடுவே நடைபெற்றது. அதுதான் எங்கள் தேர்தல் வேலைத்திட்டத்தின் தொடக்க நிலையும் ஆகும். முதலாளித்துவம் தோற்றுவிட்டது, சமூகத்தை ஒரு சோசலிச மாற்றத்தின்கீழ் கொண்டுவருவதின் மூலம்தான் பெரும் சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும் என்று வெளிப்படையாகக் கூறிய ஒரே கட்சி எங்கள் கட்சிதான்.

முதலாளித்துவ நெருக்கடியில் இருந்து விளையும் அரசியல் பணிகள் பற்றி தேர்தல் அறிக்கை விளக்கி, வரவிருக்கும் வர்ககப் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பு செய்தது. இது கூறியது: "சாதாரணமாக காணும்போது மகத்தான சமூகப் புயல் உருவாகிக் கொண்டிருக்கிறது. எங்கள் பணி அத்தகைய புயலை அரசியல்ரீதியாக ஒரு முற்போக்கான பாதையில் செல்லத் தயாரித்து இயக்குவது என்று காண்கிறோம். முதலாளித்துவத்தின் சக்தியை உடைத்து தொழிலாளர் அரசாங்கங்களை நிறுவக்கூடிய ஒரு சோசலிச மக்கள் இயக்கத்திற்கான தளத்தை நாங்கள் நிறுவ விரும்புகிறோம்.

எங்கள் திட்டத்திற்கு நல்ல ஆதரவு இருந்தது; இது நல்ல முறையில் பங்கு பெற்ற கூட்டங்களிலும், புதிய தொடர்புகளிலும், உறுப்பினர்கள் மூலமும் வெளிப்பட்டது. ஆனால் 10,000 வாக்குகள் என்ற விதத்தில் இம்முடிவு கிட்டத்தட்ட PSG 2004இல் பெற்ற 26,000 வாக்குகளை விட குறைவுதான்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தில் நலன் குறைந்தவர்கள் வாக்குப்பதிவு முந்தைய தேர்தலைவிடக் கணிசமாக குறைவானது ஆகும். வாக்களித்தவர்கள் பெரும்பாலும் வசதியுடன் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் நகர்ப்புற மத்தியதர வர்க்க தட்டுக்களில் இருந்து வந்தவர்கள். இது சராசரியையும்விட அதிகமாக பசுமை வாதிகள், மற்ற கட்சிகள் என்று இந்த அடுக்குகளை நம்பியுள்ளவர்கள் பெற்ற வாக்குகளின் மூலம் பிரதிபலிப்பாகிறது. மேலும் பல எதிர்ப்புக் கட்சிகளின் பங்குபற்றலானது ஒரே ஒரு பிரச்சினையில் முக்கியத்துவத்தை காட்டியதும் ஒரு பங்கை வகித்தது. உதாரணமாக புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள இணையதள தணிக்கையை எதிர்க்கும் Pirate Party மாணவர்கள், இளைஞர்களிடையே கணிசமான ஆதரவைப் பெற்றது.

அரசியலில் இன்னும் முக்கியமானது ஒரு புரட்சிகரக் கட்சியின் வளர்ச்சி என்பது மக்கள் அரசியல் நிகழ்வுகளில் தீவிரமாக தலையிடுவதுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது. ஒரு போராடும் கட்சி, மக்களுடைய செயற்பாடுகளுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது என்று அறியப்பட்டால் அது செல்வாக்கைப் பெறும்.

2004 ஐரோப்பியத் தேர்தலில் PSG யின் ஒப்புமையின் நல்ல முடிவு அந்த நேரம் Harz தொழிலாளர், பொதுநல "சீர்திருத்தங்களுக்கு" எதிராக இருந்த மக்கள் எதிர்ப்புடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தது. நடைமுறைக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக வளர்ந்திருந்த இந்த எதிர்ப்புக்கள் பல தொழிலாளர்களிடையே தன்னம்பிக்கையை வளர்த்தது; அவர்கள் அப்பொழுது தேர்தலில் PSG க்கு ஆதரவு கொடுத்தனர். இந்த ஆண்டு ஐரோப்பியத் தேர்தல்களில் சமூக எதிர்ப்பு எல்லாவற்றிற்கும் மேலாக செயலற்ற முறையில் வாக்களிப்பதில்லை என்ற நிலையில் வெளிப்பட்டது. இதுவும் PSG தேர்தல் முடிவுகளை பாதித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து சமூக எதிர்ப்புக்களையும் நெரித்த இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள்தான் இதற்கு பொறுப்பு கொள்ள வேண்டும்.

பெரும் வர்க்கப் போராட்டங்களுக்கு முன்னதாக தேர்தல் முடிவுகளில் இத்தகைய ஏற்ற இறக்கங்கள் அசாதாராணமானவை அல்ல. மார்க்சிச அங்கத்தவர்களை திரட்ட முற்படும் அமைப்பான PSG போன்ற ஒரு புரட்சிகரகட்சியின் தேர்தல் முடிவுகள், தற்பொழுதைய தேர்தல் முடிவுகள் நான்கு அல்லது ஐந்து இலக்கங்களில்தான் உள்ளது என்பது முதலாளித்துவப் பாராளுமன்றத் தேர்தல் இயந்திரங்களின் அதே அளவுகோல் மூலம் அளக்கப்பட முடியாது. அவற்றின் செல்வாக்கு அவற்றின் அமைப்புகளுடைய அளவு, நிதிய வசதிகள், செய்தி ஊடகச் செல்வாக்கு ஆகியவற்றைப் பொறுத்தது.

ஒரு புரட்சிகரக் கட்சிக்கு போடப்படும் வாக்குகளின் எண்ணிக்கையில் இருந்து மட்டும் அதன் அரசியல் நிலைப்பாடு சரியா இல்லையா என்ற முடிவிற்கு வருவது முற்றிலும் தவறாகிவிடும். அத்தகைய விதத்தில் செல்பவர்கள் தவிர்க்க முடியாமல் சந்தர்ப்பவாத சகதியில் சிக்கிவிடுவர். அரசியல் கொள்கைகளை கைவிட்டு அதிக வாக்குகளைப் பெறும் முயற்சி முற்றிலும் இழிந்த தன்மைக்குத் தள்ளிவிடும். இது SPD இன் வரலாறு காட்டுவது போல் பெரிய கட்சிகளுக்கும் பொருந்தும்.

SPD யும் "Hottentot தேர்தலும்"

"Hottentot தேர்தல்" என்று அழைக்கப்படும் 1907 ல் ரைஸ்டாக் (தேசிய) தேர்தலில் SPD இன் பிரதிபலிப்பு கட்சியின் வலதுசாரிப் போக்கிற்கு கணிசமாக உதவியதுடன், இறுதியில் இது 1914ம் ஆண்டு போர்க் கடன்களுக்கு ஆதரவாக வாக்களித்த வரலாற்றுக் காட்டிக் கொடுப்பிற்கு பங்களித்தது.

1907 தேர்தல் காலனித்துவ கொள்கை பிரச்சினைகளின் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தது. SPD மற்றும் கத்தோலிக்க மத்திய கட்சியும் ஜேர்மனிய தென்மேற்கு ஆபிரிக்கா (இன்றைய நமீபியா) காலனித்துவப்போருக்கு துணை கடன்கள் அறிமுகப்படுத்தும் சட்டவரைவு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து குறுகிய முன்னறிவிப்பில் நடைபெற்றது. ஜேர்மனியத் துருப்புக்கள் Herero மக்களுக்கு எதிராக பெரும் இனப்படுகொலை செய்ததற்கு பொறுப்பு ஆகும்; இதன்பின் அதே மிருகத்தனத்தைத்தான் Hottentots என்று இழிவாக அவர்கள் குறிப்பிடப்பட்ட Nama விற்கு எதிராகக் காட்டியது.

அரசாங்கம், கடற்படை மற்றும் காலனித்துவ கூட்டமைப்புக்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் முகாம்களும் வெறித்தனமாக தேர்தல் பிரச்சாரத்தை SPDக்கு எதிராக நடத்தின. "இத்தகைய தேசியவாத, நாட்டுவெறி, இராணுவாத சிந்தனைப்போக்கு, அனைத்தும் ஏகபோக உரிமை மூலதனத்தால் நிதியுதவி பெற்று அளித்த தாக்குதலை கட்சி அதற்கு முன் ஒருபோதும் எதிர்கொண்டிருக்காததுடன், ஒரு அழிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலையை முன்னால் சந்திக்கவுமில்லை. ''காலனித்துவத்திற்கான பிரச்சாரம், இனவெறி சிந்தனைப் போக்கு மற்றும் போரைப் புகழ்தல் ஆகியவை ஓங்கியிருந்தன." என அப்பொழுது SPD தலைவராக இருந்த August Babel உடைய வாழ்க்கை நூல் ஒன்றில் அப்போதிருருந்த சூழ்நிலை விளக்கப்பட்டிருந்தது.

குட்டி முதலாளித்தவத்திடம் இப்பிரச்சாரம் ஒரு ஆதரவை கண்டது. SPD முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்டது. மொத்தம் பெற்ற வாக்குகளில் சிறிது அதிகமாக அது பெற்றாலும், பாராளுமன்ற இடங்களில் பாதிக்கும் மேலாக அது இழந்தது. ஏனெனில் முதலாளித்துவக் கட்சிகள் ஒன்று சேர்ந்து இரண்டாம் வாக்கில் அதை எதிர்த்துவிட்டன. அதுவரை, SPD ஒவ்வொரு தேர்தலிலும் தன்னுடைய பாராளுமன்ற இடங்களை அதிகரித்துக் கொண்டுதான் வந்திருந்தது.

SPD க்குள் இருந்த பல போக்குகள் முற்றிலும் முரண்பாடான விதத்தில் இந்தப் பின்னடைவை எதிர்கொண்டன. வலதுசாரி பிரிவினர் பாராளுமன்ற இடங்கள் இழப்பிற்குக் காரணம் கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துக்கள் என்று நினைத்து, கட்சி காலனித்துவ கொள்கை தொடர்பான இன்னும் சமரசப் போக்கை கடைப்பிடிக்கவேண்டும் என்றும் சீர்திருத்த பணியின் விவரங்களில் முக்கியத்துவத்தை காட்ட வேண்டும் என்றும் வாதிட்டது. இடதுசாரி பிரிவோ தேர்தல் முடிவை ஒரு அரசியல் திருப்புமுனை என்று விளக்கம் கண்டது. "எதிர்வரவிருக்கும் அரசியல் போக்குகள் உலக அரசியலினால் ஒழுங்கமைக்கப்படும் என்பதை இது எமக்கு காட்டியுள்ளது. உலக அரசியல் என்றால் இராணுவவாதம், காலனித்துவக் கொள்கை" என்று ரோசா லக்சம்பேர்க் எழுதினார்.

1905ம் ஆண்டு ரஷ்ய புரட்சிக்கும் SPD க்கு எதிரான போராட்டத்திற்கும் லக்சம்பேர்க் ஒரு நேரடித் தொடர்பைக்கண்டார். "ரஷ்யப் புரட்சி அசைக்க முடியாத முதலாளித்துவ சக்தியை அதிர்விற்கு உட்படுத்தியது" என்று அவர் அறிவித்தார். "இது மகத்தான சமூக போராட்டத்தை, அனைத்து சுரண்டப்படுபவர்களும் அனைத்து சுரண்டுபவர்களுக்கும் எதிராக நடக்க வழிநடத்தும்; இது தொழிலாள வர்க்கத்தின் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் சக்தியை புலப்படுத்துகிறது; இது போல் உலகம் இதுகாறும் கண்டதில்லை." இது ஜேர்மனிய முதலாளித்துவத்திடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்--இந்த அச்சம் ஜேர்மனிய தொழிலாள வர்க்கமும் அதே போல் வெகுஜன வேலைநிறுத்த வழிவகைக்கு மாறுமோ என்பதுதான்.

இதில் இருந்து SPD பெருகிய முறையில் புரட்சிகர ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கு லக்சம்பேர்க் வந்தார். கட்சியின் வலதுசாரியின் கருத்தான தேர்தல் SPD ஐ வலுவழிக்கச் செய்துள்ளது என்பதை அவர் கடுமையாக எதிர்த்தார். அவர் கூறினார்: "நம்முடைய இடங்களில் பாதிக்கும் மேலாக இழந்துவிட்டோம். நம்முடைய அரசியல் சக்தி இதையொட்டி குறைந்துவிட்டது என்று நம்புபவர்கள் பாராளுமன்ற முறையின் செல்வாக்கை மிகைப்படுத்துகின்றனர். நாம் ஒரு வெகுஜன புரட்சிக் கட்சி. நம்முடைய அரசியல் சக்தி எனவே பாராளுமன்ற இடங்களில் இல்லை, மக்களிடைய நாம் கொண்டுள்ள ஆதரவாளர்களிடம் உள்ளது." (5)

இடதுசாரிகளின் கருத்துக்களுக்கு ஆதரவைக் கொடுக்க SPD தலைவர் பெபெல் முற்பட்டார்; ஆனால் வலதுசாரிக்கு எதிராக செயல்பட மறுத்துவிட்டார். சந்தர்ப்பவாத பிரிவின் நன்கு அறியப்பட்ட பிரதிநிதியான Richard Calwer வெளிப்படையாக அரசாங்கத்தின் காலனித்துவ கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்துப் பேசியபோது, பெபல் பாராளுமன்றத்தில் அவருக்கு ஆதரவளித்தார். மாறாக Karl Liebknecht இன் "இராணுவவாதம் மற்றும் இராணுவவாத எதிர்ப்பு, குறிப்பாக சர்வதேச இளம் சோசலிச இயக்கத்தைப் பொறுத்த வரை" என்ற அறிக்கை தடைசெய்யப்பட்டு பெரும் நாட்டுத் துரோக நடவடிக்கைகள் அவர்மீது எடுக்கப்பட்டபோது, பெபல் Liebknecht அறிக்கையில் இருந்து தன்னை அந்நியப்படுத்திக்கொள்ள முற்பட்டார். 1907ல் சிறுபான்மையாக இருந்த வலதுசாரி தேசியவாதப் பிரிவு 1914ல் இருந்து SPD கொள்கையை நிர்ணயிப்பதாகவும் அதன் நாட்டுவெறி நச்சு பிரச்சாரத்தை தடையற்று செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்தப் பூசலில் உங்கள் நிலைப்பாடு எப்படி இருந்திருக்கும்? நீங்களும் இதேபோல் அநேகமாக கேட்டிருப்பீர்கள்: "அத்தகைய மோசமான முடிவு ஏன் மூலோபாயம் பற்றி விமர்சனரீதியான பார்வையை பெற ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளப்படக்கூடாது? அதன் பின் கட்சியின் வலதுசாரிப் போக்கிற்கு மாறவேண்டும் என்ற வாதம் வந்திருக்கும்.

இந்த வழியில் நாங்கள் செல்லத் தயாராக இல்லை என்பதில் நாங்கள் உறுதி என்பதை தெளிவாகக் காட்டியுள்ளதாக நான் நம்புகிறேன். நாங்கள் ரோசா லக்சம்பேர்க்கை பின்பற்றுகிறோம்; இடது கட்சியுடன் ஒட்டியிருக்கும் குட்டி முதலாளித்துவ முன்னாள் தீவிரவாதிகளின் வலதுபுற வளர்ச்சியை, சமூக மற்றும் அரசியல் நிலைமையில் தீவிரமடைந்துள்ளது என்பதற்கான அடையாளமாக விளக்கிக்கொள்கின்றோம். இது அரசியலில் அரைகுறை நடவடிக்கைகளுக்கு இடமில்லை, அனைத்து அரசியல் போக்குகளும் அவற்றின் உண்மை வண்ணத்தைக் காட்டுபவை. SAV ஐத் தொடர்ந்து இடது கட்சிக்கு ஏற்றவிதத்தில் நாங்கள் நடந்துகொண்டால், வரலாற்று பரிமாணங்கள் உடைய காட்டிக் கொடுப்பை நாங்கள் செய்துவிடுவோம். நான்காம் அகிலத்தித்தின் முன்னோக்கு ஸ்ராலினிச, மற்றும் சீர்திருத்தவாத அமைப்புக்கள் சரிவு மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடி ஆகியவை பற்றி வரலாற்று உறுதியைக் கண்டறிந்துள்ள நேரத்தில், இது அத்தகைய புரட்சி முன்னோக்கை கைவிட்டு, பெரும் வர்க்கப் போராட்டங்களுக்கு முன் தொழிலாள வர்க்கத்தை ஆயுதம் களையச் செய்வதை ஒத்திருக்கும்.

இதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம்.

PSG நிர்வாகக் குழு சார்பில்,

Peter Schwarz

* * *

(1) SAV spokesman Sascha Stanicic in an interview with Linke Zeitung

(2) A Socialist Answer to the Capitalist Crisis: Statement of the Socialist Equality Party (Germany)

(3) Leon Trotsky, quoted in The World Capitalist Crisis and the Tasks of the Fourth International, Labor Publications, 1988, p. 74

(4) August Bebel. Eine Biografie, Dietz Verlag, Berlin 1989, p 647

(5) Rosa Luxemburg, "Die Lehren der Letzten Reichstagwahl," in Gesammelte Werke, Volume 2, Berlin 1986, p191


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved