World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The German Left Party and Berlin's austerity budget

ஜேர்மன் இடது கட்சியும் பேர்லின் கடுஞ்சிக்கன வரவு-செலவுத் திட்டமும்

By Andy Niklaus
16 October 2009

Back to screen version

தன்னுடைய கட்சிப் பிரச்சாரத்தில் இடது கட்சி தொடர்ந்து பொருளாதார, வணிக நலன்களை விட "அரசியலின் முக்கியத்துவத்தை" வலியுறுத்துகிறது. இதையொட்டி அது ஜேர்மனியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சீர்திருத்தவாத மற்றும் அரசியல் அவநம்பிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்க முற்படுகிறது. பேர்லினில் இடது கட்சி நகர நிர்வாகத்தில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக தீவிரமாக உள்ளது. பல முறையும் மற்ற முதலாளித்துவ கட்சிகளைவிட பெருவணிகத்தின் மேன்மைக்கு, இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அதன் கட்டளைகளுக்கு பணிந்து செயல்படத் தயார் என்று நிரூபித்துள்ளது.

சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் இடது கட்சிக் கூட்டணியைக் கொண்ட பேர்லின் செனட் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் விதத்தில் அதன் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை 2009ல் இரு தனிச்சமயங்களில் திருத்தியும், பின்னர் நகரத்தின் பெருகிய கடனைச் சமாளிக்கும் வகையில் துணை வரவுசெலவுத்திட்டங்களையும் செயல்படுத்தியது.

சமூக ஜனநாயகக் கட்சியும் இடது கட்சியும் ஜூலை மாதம் 2010/2011 ஆண்டுகளுக்கு ஒரு வரவுசெலவுத்திட்டத்திற்கு உடன்பட்டன. அதில் பல பில்லியன் யூரோக்களுக்கு நகரத்தின் சமூக செலவினக் குறைப்புக்கள் அடங்கியிருந்தன. நகரவையின் முன்னாள் சமூக ஜனநாயக நிதி மந்திரி செனட்டர் திலோ சாராசின் (தற்பொழுது அவருடைய சமீபத்திய இனவெறிக் கூக்கூரலால் அவதூறின் மையத்தில் உள்ளார்) இயற்றிய வரவுசெலவுத்திட்டத்தின் மொத்தம் 21.32 பில்லியனைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் நகரவையின் வருமானமோ 19.2 பில்லியன் ஆகும். இரண்டு தொகைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு நகரத்தின் சமூகப் சேவைகளின் செலவுகளைப் பெரிதும் குறைப்பதின் மூலம்தான் அகற்றப்பட முடியும்.

இந்த திட்டமிட்டுள்ள குறைப்புக்கள் பேர்லின் நகர சிறுவர்களையும் இளைஞர்களையும் குறிப்பாக கடுமையான முறையில் பாதிக்கும். சமீபத்திய வரவுசெலவுத்திட்டம் புதிய நிதி செனட்டர் உல்ரிக் நுஸ்பவுமினால் (சுயேச்சை) முன்வைக்கப்பட்டது. நுஸ்பவும் அவருடைய பதவிக்கு நகர மேயர் கிளவுஸ் வோவரைட்டினால் (SPD) மே மாதம் நியமிக்கப்பட்டார். இந்த வக்கீல் மற்றும் தொழில்வழங்குனரின் நியமனம் இடது கட்சியால் ஆதரிக்கப்பட்டது. 2003, 2007 ஆண்டுகளில் நுஸ்பவும் பிரேமன் நகரில் SPD தலைமையிலான நிர்வாகத்தில் நிதி செனட்டராக செயல்பட்டுள்ளார். இப்பொழுது பேர்லின் வரவுசெலவுத்திட்டத்தை மறுகட்டமைக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவியை எடுத்துக் கொண்டவுடன் நுஸ்பவும் நகரத்தின் பொதுப் போக்குவரத்து முறையின் (BVG) போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்கும் தன் விருப்பத்தை அறிவித்து, BVG அலுவலக ஊழியர்களுக்கு ஒப்புக் கொள்ளப்ப்பட்ட ஊதிய உயர்வை கொடுக்க மாட்டேன் என்றும் கூறினார். வக்கீல்கள், டாக்டர்கள், வரி ஆலோசகர்களுக்கு வணிக வரி விதிக்கப்பட வேணடும் என்றும் தெரிவித்துள்ளார். இடது கட்சியிடம் இருந்த ஒரே உண்மையான குறைகூறல் அவருடைய ஆலோசனைகளில் இருந்து தாங்கள் விலக்கப்பட்டுள்ளோம் என்பதுதான்.

நுஸ்பவுமின் திருத்தி அமைக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தில் கிட்டத்தட்ட 6 பில்லியன் யூரோக்கள் புதுக் கடன்களாக உள்ளன. அதேசமயம், பேர்ளினில் கடன் 60 பில்லியன் மலையளவாக உயர்ந்துள்ளது. பல மில்லியன் மக்களைகொண்ட நகரத்தின் சமூக அமைப்பில் வெட்டுக்களை ஏற்படுத்துவதன் மூலம் சேமிக்கப்படுகின்றன என்றாலும், வங்கிகள் பேர்லினின் வருடாந்த கடனான 2.8 பில்லியன் யூரோக்களுக்கான வட்டித் தொகையில் பெரும் இலாபம் ஈட்டுகின்றன.

பேர்லின் தொழில், வணிக பேரவை (IHK) யில் வணிகர்களிடையே பேசிய நுஸ்பவும் 2013 வரை பொதுச்செலவில் பூஜ்ய அதிகரிப்பு மற்றும் ஆண்டுஒன்றிற்கு 250 மில்லியன் என நீண்டகால சேமிப்பு என்பதுடன் இணைந்து 2013 வரை வரவுசெலவுத்திட்டத்தை செயல்படுத்தத் தான் தயார் என்று கூறினார். நகரத்தின் நிதித்துறை கணக்குகளின் படி, இதே காலத்தில் பேர்லினின் கடன் அளவு 70 பில்லியன் யூரோக்களுக்கு அதிகரிக்கும்.

இவை அனைத்தும் இடது கட்சியின் முந்தைய வழக்கத்தை ஒட்டித்தான் உள்ளது. பொருளாதார செனட்டர் ஹரால்ட் வொல்ப் (இடது கட்சி) அலுவலகம் உயர்ந்த தர திட்ட அட்டவணையைத் தயாரித்துள்ளது. அது கூறுவதாவது: "நகர நாடுகள் பலவற்றுள்ளும் பேர்லின் ஒன்றுதான் வரவுசெலவுத்திட்டத்தை உறுதிப்படுத்துவதை 2001இல் இருந்து சீராக வைத்துள்ளது. ஒரு நகரவைதான் அதன் அடிப்படை செலவுகளைக்கூட இரட்டை இலக்கக் குறைப்பிற்கு உட்படுத்தியுள்ளது. மேற்கு பகுதி நகரவைகளின் அடிப்படைச் செலவுகளுடன் ஒப்பிடுகையில் அவற்றின் செலவு சராசரி 5.4 சதவிகிதத்தினால் உயர்ந்துள்ளது.

பேர்லினின் மத்திய பிரிவில் வெட்டுக்கள்

பேர்லின் வரவுசெலவுத்திட்டத்தில் நகரத்தின் பிரிவுகளில் பாரிய வெட்டுக்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இது பேர்லின் நிதிய மற்றும் இளைஞர் பிரிவு மன்ற உறுப்பினர் Rainer Maria Fritsche (இடது கட்சி)யால் தெளிவாக்கப்பட்டது. அவர் தன்னுடைய முக்கிய பணி செனட் இயற்றும் கடும் சிக்கன திட்டங்களைச் செயல்படுத்துவதுதான் என்று கருதுகிறார். 42 மில்லியன் யூரோக்களை Fritsche சேமிக்க முற்பட்டு, தொடர்ச்சியாக தான் கடும் சிக்கன வரவுசெலவுத்திட்டத்தை "இயன்ற அளவிற்கு நிறைவிற்கு" கொண்டுவரப் போவதாக வலியுறுத்தியுள்ளார். இடது கட்சி இழிந்த முறையில் இந்த வெட்டுக்களை "இறுக்கிப்பிடித்தல், வலுப்படுத்துதல்" என்று விளக்கியுள்ளது.

நகரத்தின் மூன்றாம் பெரிய பிரிவான 330,00 மக்கள் வசிக்கும் மத்திய பேர்லினில் ஒரு பிரிவு நிர்வாகத்தால் பழைமைவாத CDU, SPD, பசுமை கட்சியினர் மற்றும் இடது கட்சி உறுப்பினர்கள் ஆளப்படுகிறது. இந்தப் பிரிவிற்குத் திட்டமிடப்பட்டுள்ள சேமிப்புக்கள் நேரடியாக இளைஞர்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தை பாதிக்கும். இளைஞர் குழுக்கள் மற்ற அமைப்புக்ளுக்கான வசதிகள் குறையும். அரசாங்கப் பொறுப்பில் இருக்கும் கட்டிடங்களின் பராமரிப்புச் செலவை 20 சதவிகிதம் குறைக்கும் வகையில் பல மில்லியன் யூரோக்களை சேமிக்கவும் Fritsche விரும்புகிறார். ஊழியர்களின் குறைப்பில் நேரடியாக ஐந்து மில்லியன் யூரோக்கள் சேமிக்கப்படும். இப்பிரிவின் நிர்வாகத்தில் 125 வேலைகள் குறைக்கப்பட்டுவிடும்.

இன்னும் அதிக வெட்டுக்கள் சமூக உள்கட்டுமானத்தில் செய்யப்படும். இதில் முதியவர்களுக்கான பொழுதுபோக்கு நிலைங்கள் மூன்று மூடப்படும். இதையொட்டி மூத்த குடிமக்களுக்கு கலாச்சார வசதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதே நேரத்தில் மனச்சிதைவு நோயினால் அவதியுறும் நோயாளிகளுக்கான ஆதரவு குறைக்கப்பட்டுவிடும். வரவுசெலவுத்திட்டங்களில் நகரத்தின் Karl Marx சாலையில் உள்ள Berthold Brecht நூலகத்தையும் மற்ற புகழ்பெற்ற கலாச்சார நிலையங்களையும் மூடும் திட்டமும் உள்ளது.

நகர மையத்தில் இருக்கும் முக்கிய சர்வதேசப் பள்ளி மூடப்படவுள்ளது. இளைஞர்களுக்காக சமூகப்பணியில் தொடர்புடைய துணை மருத்துவ ஊழியர்களின் (Therapists) எண்ணிக்கையும் பெரிதும் குறைக்கப்படும். உள்ளூர் அஞ்சல் பணி தனியார்மயமாக்கப்படும். இதே நிலைதான் நகரத்தின் மற்ற பிரிவுகளிலும் ஏற்படும்.

பேர்லினில் சமூக வீழ்ச்சி

நகரத்தின் பொதுப் போக்குவரத்து முறையும் சரிவை எதிர்நோக்கியுள்ளது. BVG மற்றும் பிற போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதியங்களும் நலன்களும் குறைக்கப்பட்டுவிட்டன. நகரத்தின் போக்குவரத்து முறையின் பட்டறைகளும் தனியார் நிறுவனங்களைப் போல் செயல்படுத்தும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளன. மின்வசதி மற்றும் குடிதண்ணீர் ஆகியவற்றிற்கு நகரத்தில் கட்டணம் 50 சதவிகிதம் அதிகமாகியிருப்பதுடன், தீயணைப்புத் துறை, அவசரப் பணிகளின் அமைப்புக்களிலும் குறைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ன. தீயணைப்பிற்குத் தேவையான புதிய, தேவையான கருவிகள் வாங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகரத்தின் பள்ளிகளும், மழலையில் பள்ளிகளும் நிதி உதவி பெறாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய குறைப்புக்கள் சமீபத்திய கூட்டாட்சி தேர்தலில் இடதுகட்சி பயன்படுத்திய பிரச்சாரத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளன. அதில் இடதுகட்சியின் பாராளுமன்றப் பிரிவின் தலைவர் கிரிகோர் கீஸி தேர்தல் சுவரொட்டிகளில் சிரித்தவண்ணம் "அனைவருக்கும் செல்வம்" என்ற கோஷத்துடன் காணப்படுகிறார். உண்மையில் கீஸி, பேர்லின் சமூகச் சரிவின் பொறுப்பில் பங்கு கொள்ள வேண்டும். அவருடைய பொருளாதார செனட் என்று 2001 பதவிக்காலத்தின் முதல் வாரங்களில் அவர் பேர்லின் வங்கி நிறுவனத்தை (Berlin Bank Company) 23 பில்லியன் உத்தரவாதம் கொடுத்து மீட்டார். இதன் பின் அவர் இளஞர்களுக்கான பொதுநல வரவுசெலவுத்திட்ட செலவுகளை 400 மில்லியன் யூரோக்களில் இருந்து 230 மில்லியன் யூரோக்களாக குறைக்கச் செயல்பட்டார். இந்த நடவடிக்கைகள் ஊதியங்கள், நலன்கள, சமூக நலன்கள் என்று நகரவையில் குறைப்புக்களுக்கு களியாட்டம் நடத்த துவக்கச் செயல்களாகும். இவை அனைத்தும் பேர்லின் வஙுகி நிறுவனத்தை பிணை எடுக்கும் நோக்கத்தைக் கொண்டவை.

செனட் வீடற்ற, ஊனமுற்றவர்களுக்கான உதவித் தொகைகளை குறைத்துவிட்டது. கல்வித்துறையில் பயிற்சிக்கு உதவும் கருவிகளை இலவசமாக கொடுத்து வந்ததை அகற்றியதில் ஜேர்மனி முழுவதற்கும் இது முன்னோடியாக நின்றது. 2003 ல் பேர்லின் அரசாங்க ஒப்பந்த முறையை கைவிட்டு, பொதுப்பணி தொழிலாளர்களுக்கு 12 சதவிகிதம் வரை ஊதிய வெட்டுக்களை செயல்படுத்தியது. 2004ல் இடது கட்சியும் SPDயும் அதன் பின் வேலையற்றோருக்கான போக்குவரத்து வசதிகளுக்கு கிடைத்த குறைந்த கட்டண அனுமதிப்பத்திர முறையை அகற்றியது. பொதுமக்களின் பலத்த எதிர்ப்பை ஒட்டி சலுகைக் கட்டண முறை முன்பு இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகம் என்ற நிலையில் மீட்கப்பட்டது. பேர்லின் சேனட் கண்பார்வை அற்றவர்களுக்கு கொடுத்த உதவித் தொகைகளையும் அகற்றியது. ஊனமுற்றவர்கள் பேருந்துகளின் அனைத்து ஓட்டுனர்களையும் பதவியை விட்டு அகற்றியது. அந்த பதவிகள் ஒரு யூரோ பணியாளர்கள் என்பவர்களால் நிரப்பப்பட்டது. இப்பொழுது பேர்லின் நகரவையில் உள்ள 37,000 தொழிலாளர்கள் மணிக்கு ஒரு யூரோ என்ற விகிதத்தில் உள்ள வேலையில்தான் உள்ளனர். பல்லாயிரக்கணக்கான மற்ற தொழிலாளர்கள் வேறுவித குறைவூதிய வேலைகளில் உள்ளனர்.

உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டை ஒட்டிய வருமானத்தைத்தான் 110,000 தொழிலாளர்கள் பெறுகின்றனர். நகரவையின் தொழிலாளர் பிரிவில் கால் பகுதியினர் பகுதி நேரம், ஒப்பந்த நிறுவன அமைப்பின் மூலம் வேலை, சிறு வேலைகள் என்று ஒரே சீரற்ற பணிகளில் உள்ளனர். இவர்களுடைய வருமானம் Hartz IV பொதுநலப் பணங்களில் பெறுவதைவிட குறைவாகும். இதன் விளைவாக பேர்லினில் மூன்று குழந்தைகளில் ஒன்று வறுமையில் வளர்கிறது.

ஒட்டுண்ணி முதலாளித்துவம்

வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய வட்டிக் கட்டணங்களைக் கொடுப்பதற்காக SPD மற்றும் இடது கட்சி நிதிய முதலீட்டாளர்களுக்கு பொதுச் சொத்துக்களை விற்றுக் கொண்டிருக்கின்றன. 2004ல் இடது கட்சி அரசவீடுகள் கட்டும் நிறுவனத்தின் பங்குகளின் பெரும் பிரிவுகளை தனியார் மயமாக்குவதற்கு ஆதரவு கொடுத்தது. GSW எனப்படும் வீடுகள் அமைப்பு சர்வதேச முதலீட்டு நிறுவனங்களான Whitehall (Goldman Sachs) மற்றும் Cerberus க்கு 405 மில்லியனுக்கு விற்கப்பட்டது. WBM வீட்டுச் சங்கம் முதலீட்டு நிறுவனம் Puma Brandenburg Limited க்கு விற்கப்பட்டது; அது பகிரங்கமாக அதிக வாடகைகளுக்கு முயற்சி எடுத்துள்ளது. 2007/2008 வரவு செலவுத்திட்டத்தில் செனட் 272 மில்லியன் யூரோக்களை அடுக்கு வீடுகளை விற்பதின் மூலம் பெற்றது. இடது கட்சி பேர்லின் அதிகாரத்தில் பங்கு கொண்ட காலத்தில் 120,000 அடுக்கு வீடுகள் விற்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வாடகை ஆலோசனையும், வாடகை ஆலோசனைப் பணிகளுக்கான உதவித் தொகைகளும் குறைக்கப்பட்டன.

முன்னோடியில்லாத அளவிற்கு நகரத்தின் சுகாதாரப் பணிகளையும் பேர்லின் செனட் தாக்கியுள்ளது. நகரவையின் பெரும்பாலான மருத்துவமனைகள் இப்பொழுது தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. புதிய தனியார்மய உரிமையாளர் சர்வதேச நிறுவனமான Viovents ஆகும். இதற்கு சுகாதாரப் பணி, பாதுகாப்பு என்று முதியோர்களின் ஒவ்வொரு பிரிவிலும் தனது செயலை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2003-2004 வரவுசெலவுத் திட்டத்தை தொடர்ந்து 39மில்லியன் யூரோக்கள் சுகாதாரப் பணியில் குறைக்கப்பட்டன. நகரத்தின் பெரும்பாலான நகரவை மருத்துவமனைகள் இப்பொழுது தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலான சேமிப்புக்கள் ஊதிய நல வெட்டுக்கள் என்று 13,000 சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏற்படுத்தியதால் வந்துள்ளன. அவர்கள் தங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை ஊதியக் குறைப்புக்களை ஏற்க மறுத்தால், வேலை நீக்கம் செய்யப்படுவர் என்ற அச்சுறுத்தலுக்கு உட்பட்டனர். Vivantes நிர்வாகத்தின்கீழ் 4,000 வேலைகள் மற்றும் 1,000 பயிற்சி நிலையங்கள் அகற்றப்பட்டுவிட்டன. இந்தக் குறைப்பினால் தற்போதைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நோயாளிகளுக்கு சுகாதாரப் பாதுகாப்பு காப்பீட்டின் மூலம் சிகிச்சை கொடுக்க முடியாமல் போய்விட்டது.

உலக முதலாளித்துவத்தின் தன்மையில் கடந்த இரு தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பொதுக் கருவூலங்கள் பெருகிய முறையில் நிதிய காசினோவில் ஊகச் செயல்களுக்கு திறந்துவிடப்படுகின்றன. ஜேர்மனிய நகரம் மற்றும் மாநில நிர்வாகங்கள் சூதாட்டக்காரர்கள் போல் உலக எஞ்சிய சந்தைகளில் ஈடுபட்டு, மிக ஆபத்தான நிதிய நடவடிக்கைகளை பெருகிய முறையில் எடுத்துக் கொள்ளுகின்றன.

CBL எனப்படும் எல்லை கடந்த குத்தகை உடன்பாடுகளை பயன்படுத்தி, மற்ற பல நகரசபைகளைப் போல் பேர்லினும் பொதுப் போக்குவரத்துப் பிரிவு, வணிகம், கூட்ட அரங்குகள், குப்பை எரிக்கும் நிலையங்கள், எரிசக்தி ஆலைகள், சொத்துக்கள் ஆகியவற்றை நிதிய முதலீட்டாளர்களுக்கு விற்றுவிட்டது. இவற்றில் இருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு வங்கிகளுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் தனியார்மயமாக்கப்பட்ட நிலச் சொத்துக்கள் பெரும் முதலீட்டாளர்களுக்கு சாதாகமான முறையில் வாடகைக்கு விடப்படுகின்றன. நிதிய நெருக்கடியைத் தொடர்ந்து இந்த முறையின் தாக்கங்கள் இன்னும் தெளிவாகியுள்ளன. இத்தகைய ஊக நடவடிக்கைகளுக்கு மிகப் பெரியளவு பணம் காப்புறுதிக்கும், உடன்பாடுகளைப் பெறவும் செலவழிக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட நகரவைகள் அழிவுகளில் இருந்தும் ஏனைய வகையிலான மதிப்பிழப்பிலிருந்தும் அவற்றை பாதுகாக்கும் வகையில் சொத்துக்களை காப்புறுதி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மதிப்புக் குறையும் மற்ற வகை நிலைப்பாடுகளும் அதே கட்டாயத்திற்கு உட்படும். ஜேர்மனிய ஒப்பந்த அமைப்புக்கள் இத்தகைய பெரும்பாலான காப்பீடுகளை AIG அமெரிக்க சர்வதேச குழுவிடம் செய்துள்ளன. அது அமெரிக்க அடைமானச் சந்தையின் சரிவை அடுத்து பெரும் நஷ்டத்தை அடைந்து தரம் பிரிக்கும் அமைப்புக்களால் குறைமதிப்பு செய்யப்பட்டுவிட்டது. இப்பொழுது நகரவைகளும் மாநகர சபைகளும் தங்கள் காப்புறுதி உடன்பாடுகளுக்கு மற்றொரு (இன்னும் அதிக செலவாகும்) காப்பீட்டாளரை நாட வேண்டியுள்ளது அல்லது அமெரிக்க அரசாங்கக் கடன்களை தங்கள் முதலீட்டிற்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு வாங்க வேண்டியுள்ளது.

இப்பொழுது நன்கு அறியப்பட்ட நிதியப் அபாயங்கள் இருந்தபோதிலும், பேர்லின் செனட் கடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள், கடன் கடமைப்பாடுகள் (CDO) என்பவற்றை தொடர்ந்து மேற்கொண்டு, கடன் கொடுத்தலில் ஏற்படுவதை இழப்புகளை சமாளிக்கும் திட்டத்தையும் (Credit default swaps- CDS) ஏற்பாடு செய்கிறது.

சர்வதேச நிதிய திமிங்கலங்களும் தரம் பிரிக்கும் அமைப்புக்களும் பதிலுக்கு SPD- இடது கட்சி செனட்டின் பணியைப் பாராட்டியுள்ளன. லண்டன், நியூ யோர்க், பிராங்பேர்ட் ஆகிய இடங்களில் அலுவலங்களைக் கொண்ட Fitch தரம் பிரிக்கும் அமைப்பின் கருத்துப்படி, "ஆளும் கூட்டணியின் முக்கிய நோக்கம் செலவினங்களை இன்னும் குறைத்தல், பேர்லின் வரவு செலவுத்திட்டத்தை பலப்படுத்துதல் என்பவற்றைச் செயல்படுத்துவதாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved